இம்மென்கீரனார்

முனைவர்.இரா.குணசீலன்

ன்பம், துன்பம் இரண்டும் கலந்ததே மனித வாழ்வியல், இன்பத்தை அன்பானவர்களிடம் பங்கிட்டுக்கொண்டால் இரண்டுமடங்காகும், துன்பத்தைப் பங்கிட்டுக் கொண்டால் பாதியாகக் குறையும்.

இன்பம் வந்தபோது பங்கிட்டுக்கொள்ள நண்பர்களைத் தேடும் மனது, துன்பம் வந்த போது யாருக்காகவும் காத்திருப்பதில்லை 'அழுகை, புலம்பல்' இவ்விரண்டில் ஒன்றாக வெளிப்படுகிறது...

இவ்விரண்டும் ஒரு வகையில் துன்பம் என்னும் மன அழுத்தத்தை நீக்கும் வாயில்கள் தான்..
மன அழுத்தம் அதிகமானால், நீடித்தால் மனப்பிறழ்வாகிவிடும் என்பது உளவியல்.

இங்கு ஒரு தலைவியின் அழகான புலம்பல்...

களவொழுக்கம் (காதல்) காரணமாக அலர் எழுந்தது. அதனால் தலைவன் சில காலம் தலைவியைக் காணவராமல் இருந்தான். அவனது பிரிவாற்றாமையால் வருந்திய தலைவி தலைவனின் மலையிலிருந்து ஓடிவரும் ஆற்றிடம் புலம்புவதாக இப்பாடல் அமைகிறது.

(காமம் மிக்க கழிபடர் கிளவியால் வரைவிடத்துக்கண், தலைமகள் தலைமகன் வரையினின்றும் போந்த ஆற்றொடு புலந்து சொல்லியது.)

அஃறிணை உயிர்களிடம் பேசுவது அறிவுடைமை ஆகாது. ஆயினும் துன்பத்தில் வாடிய மனது இதை அறியாது. தலைவன் மீது கொண்ட அன்பு மிகுந்த தலைவி அதனை எப்படி வெளிப்படுத்துவது என்பதை அறியாள். தலைவன் தன்னைக் காணவராததால் அவன் மீது மிகுந்த வருத்தம் கொண்டாள். தன் வருத்தத்தை அவன் நாட்டிலிருந்து வரும் ஆற்றிடம் இவ்வாறு வெளிப்படுத்துகிறாள்.

'பெரிய ஆண் புலியால் தாக்கப் பெற்று புண்பட்டு, பெண்யானையால் தழுவப் படும் வலிமை குன்றிய ஆண்யானை மூங்கிலால் செய்யப்பட்ட தூம்பு போல ஒலித்தற்கு இடனான எம் தலைவரது மலைநாட்டிலிருந்து வரும் ஆறே....

எம் அணிகலன்கள் நெகிழுமாறு துன்பம் மிகுந்தது!
மெல்லிய தோளும் மெலிந்து போயிற்று!
உடல் பாழ்பட பசலையும் படந்தது!
உடலைப் பார்த்து நெற்றியும் பசலை கொண்டது!
இந்நிலையில் என் நிலையை எண்ணிப் பார்காதவனாக நின் தலைவனும் எனக்குக் கொடுமை செய்தான்.

கலங்கும் குளிந்த கண்களிலிருந்து நீர்பெருகுமாறு அறத்தினைக் கைவிட்டு நீங்குதல் நின் தலைவனுக்குப் பொருந்துவதாகுமா..?

நான் இப்படியெல்லாம் உன்னைக் கேட்பேன் என்று எனக்கு அஞ்சி, அவர் மலையில் மலர்கின்ற மலர்களால் நீ உன் உடலை முழுதும் மறைத்துப் போர்த்துக்கொண்டு நாணத்தால் மிகவும் வெட்கிச் செல்கிறாய்!

உன்னை மட்டும் ஊர்வழியே அனுப்பிவிட்டு அன்பும் அருளும் இன்றி என்னைத் துறந்து செல்லும் வன்மையுடையோரை என் தலைவன் என்பேனா?
அவரை என் அயலார் என்று கூறுதல் எவ்விதத்தில் தவறாகும்?

நீயோ நெடுந்தொலைவு வந்துள்ளாய்!
நின் ஓட்டத்தைத் தடுத்து தீயினைப் போன்ற மலர்களைப் பூத்து நிழல்தரும் வேங்கை நிழலிலே தங்கிச் செல்வாயாக!

ஆரியரின் பொன்கொழிக்கும் இமயமலையைப் போன்ற பூக்கள் பூத்துக் குலுங்கும் எம் தந்தையது காடான இங்கு இன்றைய பொழுது நீ தங்கிச் செல்லலாமே..!
இன்று நீ இங்கு தங்கிச் செல்வதால் உனக்கு ஏதும் தீங்கு நேர்வதுண்டோ..?

என வினவுகிறாள்..

பாடல் இதோ...


'இழை நிலை நெகிழ்ந்த எவ்வம் கூர,
படர் மலி வருத்தமொடு பல புலந்து அசைஇ,
மென் தோள் நெகிழச் சாஅய், கொன்றை
ஊழுறு மலரின் பாழ் பட முற்றிய
5 பசலை மேனி நோக்கி, நுதல் பசந்து,
இன்னேம் ஆகிய எம் இவண் அருளான்,
நும்மோன் செய்த கொடுமைக்கு, இம்மென்று,
அலமரல் மழைக் கண் தெண் பனி மல்க,
நன்று புறமாறி அகறல், யாழ நின்
10 குன்று கெழு நாடற்கு என் எனப்படுமோ?
கரை பொரு நீத்தம்! உரை' எனக் கழறி,
நின்னொடு புலத்தல் அஞ்சி, அவர் மலைப்
பல் மலர் போர்த்து, நாணு மிக ஒடுங்கி,
மறைந்தனை கழியும் நிற் தந்து செலுத்தி,
15 நயன் அறத் துறத்தல் வல்லியோரே,
நொதுமலாளர்; அது கண்ணோடாது,
அழல் சினை வேங்கை நிழல் தவிர்ந்து அசைஇ,
தமிழில் மின்னூல்களைப் புதிதாக
அறிமுகப்படுத்துகிறோம்.
படித்துப் பயன்பெறவும்.
மாரி புறந்தர நந்தி, ஆரியர்
பொன் படு நெடு வரை புரையும் எந்தை
20 பல் பூங் கானத்து அல்கி, இன்று, இவண்
சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ?
குய வரி இரும் போத்துப் பொருத புண் கூர்ந்து,
உயங்கு பிடி தழீஇய மதன் அழி யானை
வாங்கு அமைக் கழையின் நரலும், அவர்
25 ஓங்கு மலை நாட்டின் வரூஉவோயே!

இம்மென்கீரனார் (அகநானூறு-
398)

இப்பாடல் வழி அறியலாகும் உண்மைகள்..

1.இப்பாடல் பாடிய புலவரின் பெயர் தெரியாத சூழலில் இப்பாடலில் இடம்பெறும்...

'நும்மோன் செய்த கொடுமைக்கு, இம்மென்று'

என்னும் அடியில் இடம்பெற்ற 'இம்' என்னும் சொல் இம்மென் கீரனார் என்று இப்புலவர் பெயர் பெறக் காரணமானது.

2. தலைவன் மீது கொண்ட மிகுந்த அன்பு காரணமாக ஆற்றாது புலம்பும் தலைவியின் நிலை காமம் மிக்க கழிபடர் கிளவி என்னும் அகத்துறையை விளக்குவதாக அமைகிறது.

3. தலைவனின் பிரிவை ஆற்றாத தலைவி தன் ஆற்றாமையை ஆற்றிடம் வெளிப்படுத்துகிறாள். இயல்பாக மலர் செறிந்து செல்லும் ஆற்றிடம் எனக்கு அஞ்சித் தான் நீ உன் உடலில் மலர் போர்த்திச் செல்கிறாய் என்கிறாள்.

4. தலைவனுடன் சேர்ந்திருக்க இயலாத வருத்தத்தில் இருக்கும் தலைவி, அவன் நாட்டிலிருந்து வரும் ஆற்றுடனாவது சில காலம் தங்கியிருக்கலாம் என்று கருதி ஆற்றிடம் தன் ஊரில் தங்கிச்செல்லவேண்டும் என வேண்டுதல்

gunathamizh@gmail.com