'சமகாலக் கவிஞனின் சங்கநாதம்'

கவிஞர். மா.உலகநாதன், முனைவர் பட்ட ஆய்வாளர்

முன்னுரை :

பாரதியின் பாடல்களில் அறிவின் ஆதிக்கம்
பாரதிதாசன் பாடல்களில் அழகின் சிரிப்பு
கவிமணியின் பாடல்களில் குழைவின் குதூகலம்
கவியரசரின் பாடல்களில் இலக்கியம், இனிமை, எளிமை, ஆதிக்கம்


மானுடத்தின் குரலாகக் கவிதைகள் ஒலிக்கவேண்டும் என்பதற்காகவே, வாழ்க்கையில் மனிதனுக்கு ஏற்படக்கூடிய இன்ப துன்பங்கள், ஏற்ற இறக்கங்கள், பிறப்பு தொடங்கி இறப்பு ஈறாக இவரது பாடல்கள் இன்றளவும் இசைத்துக்கொண்ழருக்கின்றன.

5000 திரைப்படங்களுக்கு மேல் எழுதிய கவியரசரின் பாடல்களின் ஒரு சிலவற்றை மட்டும் என் ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிறேன். பாற்கடல் முழுவதையும் நக்கிக் குடிக்க ஆசைப்படும் பூனையைப் போல

அழகே வா!

ஆண்டவன் கட்டளை என்ற படத்தில் ஒரு பாடல், அழகே வா, அருகே வா, அலையே வா, தலைவா வா. காதல் கொண்ட தலைவி, தன் எண்ணத்தை, ஏக்கத்தைச் சொல்லும் ஒரு பாடல், இப்பாடலில் காமத்தை நூலிழையாய், இலைமறைவாய், ஆபாசம் துளியுமின்றி அழகுபட வர்ணிக்கிறார். அவள் மாலைச் செவ்வானத்தின் மஞ்சள் அழகை ரசித்துக்கொண்டிருக்கிறாள். மாலை மயங்கும் நேரமானதால் பறவையினங்கள் தங்கள் கூடுகளுக்குத் திரும்பிய வண்ணம் உள்ளன. இவற்றைப் பார்க்கும்போது தலைவியின் உள்ளம் அவள் காதலனை எண்ணி அசை போடுகிறது. இவளது எண்ண வலிமையினால் தலைவனும் அங்கு வந்து சேருகிறான். ஆனால் அவன் மனதில் ஒரு தடுமாற்றம். எவ்வழி நல்லவர் ஆடவர். அவ்வழி நல்லை வாழிய நிலனே என்ற ஒளவையாரின் புறநானூற்றுப் பாடல் வரிகள் அவனுக்கு நினைவு வருகிறது. தலைவியின் அழைப்பைத் தட்டவும் முடியவில்லை. தவிக்கிறான் சபலத்தின் உச்சியில் நின்று. இன்னும் சொல்கிறாள் அவள் கூட்டுக்கு வரும் பறவைகளெல்லாம் தத்தம் துணையினுக்கு முத்தமிட்டு, தம் வருகையை அறிவிக்கின்றன. ஆனால், நீ மட்டும் ஏனோ தயங்குகிறாய், பறவைக்கு மொழி தெரியாது. ஆனால் இன்பம் பெறும் வழி தெரியும். கூடும் சுகம் அறியும், உனக்கோ என்னை ரசிக்கும் விழிகள் இருக்கிறது. என்னை மயக்கும் காதல் மொழி உன்னிடம் உள்ளது. இன்பம் பெற வழியும் இருக்கிறது. பின் ஏன் தயங்குகிறாய் என்று மோகக்கணைகளைத் தொடு;க்கிறாள் தலைவி. பாடல் வரிகளில் 'ஒரு மொழியறியாத பறவைகளும் இன்ப வழியறியும், இந்த உறவறியும். இரு விழியிருந்தும் நல்ல மொழியிருந்தும் இங்கு வழியிருந்தும் ஏன் மயங்குகிறாய்?' என்று கவியரசர் மொழிகிறார். மொழியைச் சொன்னார். விழியைச் சொன்னார், வழியைச் சொன்னார்.

பொதிகைத் தென்றல் :

சிற்பி கல்லில் செதுக்குவதை நல்ல கவிஞன் சொல்லில் வடிக்கிறான். பாண்டியனின்; அவையிலே நடந்ததைச் சொல்லாமல், அந்தப்புரத்திலே நடந்ததைச் சொல்லுகிறார் கவியரசர்.

பொதிகை மலை உச்சியிலிருந்து புறப்பட்ட தென்றல், தன்னோடு காதலையும் கவிதையையும் அழைத்து வருகிறது. காதலை அந்தக் காதலர்களிடம் கொடுத்துவிட்டு, கவிதையை கவியரசரிடம் கொடுக்கிறது. அப்பொழுதுதான் அவர்களிடமிருந்து இந்தப் பாடல் பிறக்கிறது.

கிழக்கிலிருந்து வரும் காற்று கொண்டல், மேற்கிலிருந்து வருவது கோடை, வடக்கிலிருந்து வருவது வாடை, தெற்கிலிருந்து வருவது தென்றல், இந்தத் தென்றல் என்னவெல்லாம் செய்கிறது பார்த்தீர்களா? தலைவியின் ஆடை பூட்டி வைத்த மேனியிலும் புகுந்து, தவழ்ந்து, சிலிர்க்க வைக்கிறது. தலைவனின் நினைவை சிந்திக்க வைக்கிறது. கார்குழலை நீராட்ழ, கண்ணிரண்டை தாலாட்டி, ஆஹா... தேனிதழில் முத்தமிட்டு சிரிக்கிறதாம். சாரல் காற்றாக வந்து தேகமெங்கும் நீரெடுத்து தெளித்திடும் தென்றலாம். அத்தோடு நின்றதா? அப்புறம் பள்ளியறைக்கும் செல்கிறது. அங்கே போனால் கட்டிலிலே இணைந்திருக்கும் காதலர்கள் கொஞ்சம்கூட இடம் தரவில்லையாம். பொய்க்கோபம் கொண்டு, வந்த வழி திரும்பி ஊரில் எஞ்சியுள்ள கன்னியர்கள் மேனியிலெல்லாம் கலந்துவிடுகிறது. மன்னன் தென்னனிடம் (பாண்டியன்) குடை, படை, ஆள் அம்பு சேனை எல்லாம் இருக்கலாம். ஆனால் அவற்றை எல்லாம் கண்டு கொஞ்சங்கூட அஞ்சாததாம் இந்த பொதிகைத் தென்றல். இலக்கியம் இயம்பினார். கவித்துவம் கலந்தார். காதலுணர்வு மீதூற திரை இசைப்பாடல் தந்தார். கண்ணதாசனே சாகாவரம் பெற்றது நீயும், உனது பாடல்களும் காதலும் கவிதைகளுமல்லவா?

நாலு பக்கம், நாலு நடை, நாலு குணம், நாலு மொழி :

எத்தனையோ திரைப்படப் பாடல்கள், அத்தனையிலும் இல்லாத ஒரு திறனாய்வு இந்தப் பாடலில் இருப்பதைப் பார்க்கிறேன். பொய் சொல்லாதே என்ற ஒரு படத்தில் ஒரு பாடல் எழுதுகிறார். காதலுக்கு நாலு பக்கம், கால்களுக்கு நாலு நடை, மாதருக்கு நாலு குணம். மைவிழிக்கு நாலு மொழி. அது என்ன? நாலு, நாலு என்று பார்த்தால் பாடலிலே விளக்கம் சொல்கிறார்?

காதலுக்கு நாலு பக்கம் :
   - கண்களினால் எழுதுவதே முதல் பக்கம்
   - கலந்துகொள்ளும் இதயங்களே இரண்டாம் பக்கம்
   - எண்ணுவதைச் சொல்லுவதே மூன்றாம் பக்கம்
   - இன்பமதைப் பெறுவதே நான்காம் பக்கம்
கால்களுக்கு நாலு நடை :
   - ஆசை மிதக்கையிலே அன்னநடை போடும்
   - அருகினில் வா என்றால் சின்னநடை போடும்
   - கட்டிலுக்குச் செல்கையிலே கன்னிநடை போடும்
   - காரிருளில் பஞ்சணையில் என்னநடை போடும்?
மாதருக்கு நாலு குணம் :
   - காதலனின் பார்வையிலே தலைகவிழும் ஒரு குணம்
   - கைகளுக்குள் இருக்கையிலே கண் மறைக்கும் மறுகுணம்
   - அள்ளிவரும் நினைவுகளை அடக்கி வைக்கும் ஒரு குணம்
   - அணைக்கையிலே அத்தனையும் மறந்திருக்கும் மறுகுணம்
மைவிழிக்கு நாலு மொழி :
   - தனக்குள் தனிமையிலே சிரிக்கும் மொழி ஒன்று
   - தலைமகன் கண்களுக்கு அனுப்பும் மொழி ஒன்று
   - ஆசைமலர் பூத்ததுபோல் வீசும் மொழி ஒன்று
   - அடுத்தவருக்குத் தெரியாமல் பேசும் மொழி ஒன்று

ஒன்றே நாம் : ஒன்றானோம் :
மனித வாழ்க்கையில் மலர்ந்திடும் பருவங்களை மழலை கொஞ்சும் மணிவாய்ப் பருவம், நாலும் தெரியும் நடுத்தரப் பருவம், நடந்ததை கணிக்கும் பருவம், நடுங்கும் பருவம் என நான்காகப் பார்க்கிறார் கவியரசர். இதில் வாலிபப் பருவமே வாழ்க்கையில் வளங்காணும் பருவம். இப்பருவத்தில் ஆணும், பெண்ணும் தம்பதியராய் இணையும் பொழுது சார்பியக்கம் கொண்டோராய் மாறுகின்றனர் என்பதை உடலுறுப்புகளின் செயல்பாட்டின் வழி தெளிவுற விளக்குகிறார்.

     - கண்கள் இரண்டு, காண்பன ஒன்று
     - செவிகள் இரண்டு, தேர்வன ஒன்று
     - நாசி இரண்டு, நாடுவது ஒன்று
     - கைகள் இரண்டு, கடமைகள் ஒன்று
     - கால்கள் இரண்டு, நடப்பவை ஒன்று
     - அங்கம் இரண்டென ஆக்கியபோதும் செய்கை ஒன்றெனத் திகழ்வது உடம்பு. எங்கோ இருந்த இருவர் இணைந்ததும் ஒன்றாகி விடுகின்றனர்.

இதைத்தான் பணமா பாசமா என்ற படத்தில் வரும் மெல்ல... மெல்ல... எந்தன் மேனி நடுங்குவது மெல்ல என்ற பாடலின் கடைசி வரிகளில் இப்படிச் சொல்கிறார். ஒன்றிலிருந்தே ஒன்று வரும். அந்த ஒன்றுக்குள் ஒன்று உறங்கிவிடும். ஒன்று பிரிந்தபின் ஒன்றுமில்லை. நாம் ஒன்று இரண்டு என்பது என்றுமில்லை.

மெய்யும், பொய்யும் :
கண்ணதாசனின் திரை இசைப்பாடல்களும் சரி, மற்ற கவிதைகளும் சரி, யாப்புச் சார்ந்த ஒரு ஓசை நயம், தேர்ந்த சொல்லெடுத்து வரும் ஓசை இனிமை, தூய இசைக் கலப்பால் தோன்றும் இசை இனிமை ஆகியவற்றைக் காணலாம். அவருடைய கவிதை ஒன்றில், புலவர் பாடிய அழகெலாம் பொய்யடா. புகழ்ந்துமு கூறிடும் உவமையும் பொய்யடா. இலகு செந்தமிழ்க் காவியம் பொய்யடா. இளமை என்பது பொய்யிலும் பொய்யடா.

சபலத்துக்கும் சஞ்சலத்துக்கும் இடையில் அவர் தவிப்பதை அவரது தனிப்பாடல்கள் நமக்குத் தரம் பிரித்துக் காட்டுகிறது. இந்தத் தாக்கத்தினால் ஆயிரம் பொய் என்ற படத்தில் இப்படி எழுதினார் போலும், புலவர் சொன்னதும் பொய்யே. பூவையர் ஜாடையும் பொய்யே பொய்யே. கலைகள் சொல்வதும் பொய்யே பொய்யே. காதல் ஒன்றுதான் மெய்யே மெய்யே. பட்டினத்தார் முதலியவர்கள் இன்பங்களைத் துய்த்து பின் அவற்றைத் துறந்து பிறகு வாழ்க்கை நிலையாமையைப் பாடினர். கண்ணதாசனோ இன்பங்களின் நிலையாமையை உணர்ந்தும் அவற்றிலிருந்து விடுபட விரும்பவில்லை.

வள்ளலுக்கும் வள்ளல் :
கர்ணன் ஒரு கொடை வள்ளல் என்பதை நாமறிவோம். அந்த வள்ளலுக்கும் வழங்கிய வள்ளல் ஒருவர் உண்டு. அது வேறு யாருமல்ல. கர்ணனு;ககு இல்லற இன்பத்தையும், மழலை இன்பத்தையும் வழங்கும் அவர் மனைவிதான்! இதைத்தான் கண்ணதாசன் இந்தப் பாடலில் சொல்கிறார். மகாராசன் உலகை ஆளுவான். இந்த மகாராணி அவனை ஆளுவாள். அதுமட்டுமா? ஆண் பெண்ணிடம் நோற்குமிடமும் தோற்குமிடமும் எது என்பதை இப்படிச் சொல்கிறார். பாதத்தில் முகமிருக்கும், பார்வை இறங்கி வரும், வேகத்தில் லயித்திருக்கும், வீரம் களைந்திருக்கும். இப்படி எந்த வள்ளலுக்கும் தன்னையே வழங்குவது மனைவியல்லவா?

காதல் பாடல் எழுதுவதில் கவியரசர் கைதேர்ந்தவர். சொல்லுகிறார். காதல் பாட்டு எழுதுவதென்றால், நானே தான் காதலனாவேன். கனிந்துருகும் என் உள்ளம். காதல் எழுத்தில் வெள்ளமாய்ப் பெருகும். அதை எழுது, இதை எழுது என்று ஏதோ ஒரு தேவதை என்னைப் பிடித்துத் தள்ளும். ஒருவேளை அது காதல் தேவதையோ? என்கிறார். ஒரு பாடலில் ஆலிலை மேலொரு மேகலை ஆட, ஆசைக்கனிகள் மாலையில் வாட, பாதி விழிகள் காதலில் மூட, பாடலில் விழுந்த பழம்போல் ஆட, நீ தரவேண்டும், நான் பெறவேண்டும் நிலவினில் ஆடும் நிம்மதி வேண்டும் என்பார்.

கவிச்சக்கரவர்த்தி கம்பனையும், செயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணியையும், கவிச்சிங்கம் காளமேகத்தின் சிலேடைகளையும், அருணகிரிப் பெருமானின் அருஞ்சுவைப் பாடல்களில் சிலவற்றையும் அவர் ரசித்து ருசித்து, கேட்கும் மக்களையும் ஈர்க்கும் வண்ணம் அவற்றைத் திரைப்படப் பாடல்கள் வடிவில் தந்தார்.

வாயின் சிவப்பை விழிவாங்க
   மலர்க்கண் வெளுப்பை வாய் வாங்கத்
தோயக் கலவி அமுதம் அளிப்ப{ர்
   தூங்கக் கபாடம் திறமினோ!


என்று கலிங்கத்துப்பரணியில் ஒரு பாடல், போருக்குச் சென்று, வீடு திரும்பும் தலைமகன் தன் வீட்டுக் கதவு தட்டி உள்ளே நுழையும் இந்தக் காட்சியை கண்ணதாசன் தன் மனதில் நிறுத்தி அன்னை இல்லம் படத்திலே மடி மீது தலை வைத்து என்ற ஒரு பாடலை எழுதினார். அதிலே கலிங்கத்துப்பரணி வரிகளை வாயின் சிவப்பு விழியிலே, மலர்க்கண் வெளுப்பு இதழிலே. காயும் நிலவின் ஒளியிலே, காலம் நடக்கும் மகிழ்விலே என்று பாடலில் கொண்டு வந்தார். இலக்கியங்கள் இவரது பாடல்களில் புதிய இலக்கணங்களைப் பெற்றது.

முடிவுரை :

அகந்தையே காணா அருந்தமிழ்ப்பா வேந்தாய்த்
திகழ்ந்து திரையுலகம் போற்ற -- மகிழ்ந்தவனே
தண்டமிழ்ப் பாவால் தமிழரின் நெஞ்சம் வாழ்
கண்ணதாச நீயே கவி!   
                           - பூவை அமுதன்

ஆயிரமாயிரம் பாடல்களை தமிழ் ரசிகனுக்குத் தந்து பாமரன் முதல் பண்டிதன் வரை ரசிக்க வைத்து, முணுமுணுக்கச் செய்த பெருமை கவியரசருக்கே உரித்தானது. தரு வளரும் அளவில், புகழ் வளரவேண்டிய தமிழை யான் கற்றுவந்தேன் என்ற அவரது கூற்றுப்படியே தமிழ் உள்ளவரை அவர் புகழ் இமயமென உயர்ந்து நிற்கும் என்பதில் ஐயமில்லை!.
 worldnath_131149@yahoo.co.in