பாரதி - ஒரு பார்வை

கவிஞர். மா.உலகநாதன், முனைவர் பட்ட ஆய்வாளர்

முன்னுரை:

பாரதியார் ஒரு சமூகச் சீர்திருத்தவாதியாகத்தான தமது எழுத்துப் பணியைத் தொடங்குகிறார். பின்னர் அது விடுதலைப்போருக்கு அடித்தளமாக அமைந்தது. எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும், அவருடைய எழுத்துக்களில் ஒருதலைப்பட்ட ஒளி வெளிப்படுவதைக் காணலாம். இசை முதலிய நுண் கலைகள், தமிழகம், இந்தியா, உலகம் பற்றிய உரமான, உயரமான சிந்தனைகள், பெண் விடுதலை, சமூகச் சீர்திருத்தம் என அனைத்துக் கோணங்களிலும் பாரதியாரின் பரந்த உள்ளக்கிடக்கை ஒளிர்கிறது.

அதே நேரம், கொடுமை கண்டு, சிறுமை கண்டு அவர் சீறும்போது அதில் வெளிப்படும் கனலையும் காண்கிறோம். இந்த கணல், கோபம் இவை அத்தனையும் பாரதத்திற்கு இலாபமாக அமைந்தது.

சாதிக்கொடுமை:

அக்ரஹாரத்து பாரதி அரிசணங்கள் அனுபவிக்கும் சாதிக்கொடுமையை சினந்து, சாதி நூறு சொல்லுவாய் போ, போ, போ என்று இடிமுழக்கம் செய்கிறார். (இப்போது அவர் இருந்திருந்தால் தேர்வாணயத்தின் பின்னிணைப்பில் காணப்படும் சாதிப்பட்டியலைப் பார்த்து நொந்து நூலாகியிருப்பார்). இழிவு கொண்ட மனிதர் என்பது இந்தியாவில் இல்லையே ; என்று அடையாளப்படுத்துகிறார். நாட்டைச் சூழ்ந்துள்ள தீமைகளைப் போ, போ, போ என்று வெருட்டிப் பாடுகின்றார். கீழ்மை என்றும் வேண்டுவாய் போ, போ, போ: வேறு, வேறு பாஷைகள் கற்பாய் நீ! வீட்டு வார்த்தை கற்கிலாய் போ, போ, போ என்கிறார். இன்றைக்கு சாதரணமாக அனைவருமே தமிங்கிலம் பேசுகின்றனர். குழந்தைகள் கூட தங்கள் ஆங்கில அறிவை பெற்றோர்களுக்கு மெய்ப்பிக்க மம்மி, டாடி எங்கின்றனர். வேறுபாஷைகளை கற்பதிலும், பேசுவதிலும் தமிழர்கள் என்றுமே சளைத்ததில்லை.

நிவேதிதை:

1905 ஆம் ஆண்டு காசியில் நடந்த காங்கிரசு மாநாட்டிற்கு பாரதியார் செல்கிறார். அங்கே, சகோதரி நிவேதிதாவைச் சந்திக்கிறார். நிவேதிதா சுவாமி விவேகானந்தரைக் குருவாக ஏற்றுக் கொண்டவர். அங்கே, பாரதியாரைப் பார்த்து, நிவேதிதா, உனக்குத் திருமணமாகிவிட்டதா? அப்படியானால், ஏன் உன் மனைவியை இங்கு அழைத்துவரவில்லை? என்று கடிந்து கொள்கிறார். உன் வீட்டுப் பெண்களை அறியாமையில் மூழ்கவிட்டு, அப்படி என்ன உனக்கு சுதந்திர உணர்வு வேண்டிக்கிடக்கிறது? என்று பாரதியாரை ; வினவுகிறார்;. இந்தச் சந்திப்புக்கு பிறகு பாரதியின் வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது எனலாம். நிவேதிதாவின் மேல் அவர் எவ்வளவு மதிப்பு வைத்திருந்தார் என்பது, அன்னை நிவேதிதாவுக்கு தமது முதல் இரண்டு நூல்களையும் அர்ப்பணம் செய்ததிலிருந்தே கண்டு கொள்ளலாம்.

பெண் விடுதலை:

பெண்களை தெய்வமாகவும், மகா சக்தியின்; வடிவமாகவும் கண்டவன் பாரதி. தாய்மையை ஏற்கும் அவர்களைத் தெய்வமாகவே வழிபட முனைந்தவன். பெண்களை வற்புறுத்தி, தாம் விரும்பியபடி கட்டிக்கொடுப்பது இன்றும் கூட வழக்கத்தில் உள்ளது. ஆணும் பெண்ணும் நேசித்து மணந்து கொள்ள வேண்டாமா? இப்படியா வற்புறுத்திக் கல்யாணம் செய்வது? பாரதி சினந்து சீறி, வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும் வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம் என்கிறார்.

பெண் கல்வி:

1914 - 1915 களில் நம் பெண்களின் நிலைமை எவ்வாறு இருந்தது? பாருங்களேன்! ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்று எண்ணியவர்கள் இருந்த காலம். ஆனால் அது இப்போது இறந்த காலம்.

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி
    பேணி வளர்த்திடும் ஈசன்:
மண்ணுக்குள்ளே சில மூடர்.
    நல்ல மாதரறிவைக் கெடுத்தார்.


இப்படி பெண்கல்வியை, பெண்ணின் பேச்சுரிமையை மறுத்தவர்களும், மறைத்தவர்களும் பாரதியின் சினத்தால் இன்று மறைந்தே போனார்கள்.

நடிப்புச் சுதேசிகள்:

ஓரிடத்தில் தலையையும், இன்னோரிடத்தில் வாலையும் காட்டி, நடிக்கும் நடிப்புச் சுதேசிகள ; - ஊரை ஏமாற்றும் கும்பல் ஒன்று அந்த காலத்திலும் இருந்திருக்கிறது. அவர்களைச் சாடு சாடு என்று துளைத்தெடுக்கிறார்.

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
     வஞ்சனை சொல்வாரடி - கிளியே
வாய்ச் சொல்லில் வீரரடி!
     'கூட்டத்திற் கூடிநின்று கூவிப் பிதற்றலின்றி
நாட்டத்திற் கொள்ளாரடி - கிளியே!
     நாளில் மறப்பாராடி!


கொதித்த நெஞ்சம்:

இந்திய மக்கள ; சுதந்திர உணர்வேதுமின்றி, அடிமைச் சேற்றிலே அமிழ்ந்து, அதிலேயே சுகம் கண்டு வாழ்வதைக் கண்டு, மனம் கொதிக்கிறார் மகாகவி.

நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
     நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர்
     அஞ்சாத பொருளில்லை யவனியலே'


என்று குமுறிக் கொந்தளிக்கிறார்.

முடிவுரை :

குறுகிய காலமே வாழ்ந்த அந்த முண்டாசுக்கவிஞனின் நியாயமான கோபங்கள் பல்வேறு சமூகச் சீர்திருங்களுக்கும், இந்திய சுதந்திர வேட்கைக்கும் பெண் விடுதலைக்கும், வித்திட்டன என்றால் அது மிகையல்ல. ஆனால், இன்றைய நிலையில் அவரது சிந்தனைகள் சீர்திருத்தங்கள் பொய்வேடமிட்டு புனைந்து திரிகின்றன. இதற்கு, காலம்தான் பதில் சொல்லவேண்டும்!

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்த லரிது. குறள் :
29worldnath_131149@yahoo.co.in