பண்பாட்டுக் கழகத்தின் அனுபவப் பகிர்வுக் கருத்தரங்கம்

மதிகண்ணன் (அமைப்புச் செயலர், மாவிபக)

அருப்புக்கோட்டை டிசம்பர் 20  மானுட விடுதலை பண்பாட்டுக் கழகத்தின் அனுபவப் பகிர்வுக் கருத்தரங்கம் ஆசாத் வாலிபர் சங்கத்தில் நடைபெற்றது.

அறுபது ஆண்டுகளும் அரைமணி நேரமும் என்ற தலைப்பிலான இந்நிகழ்ச்சிக்கு மாவிபகவின் அமைப்புச்செயலர் மதிகண்ணன் சுப்புராயுலு தலைமை வகித்தார்.

வந்திருந்தவர்களை விடுதலைப்பறவைகள் அரும்பின் பரிமளம் வரவேற்றார். 'தனிமனிதனின் மனத்தினுள் ஆழ்ந்து கிடைக்கும் சமூக உணர்வைத் தட்டி எழுப்பி அதனை செயல்தளத்திற்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஒன்றாக இக்கருத்தரங்கம் ஒருங்கிணைக்கப்பட்டது' என்ற தலைமையுரையுடன் மதிகண்ணன் அனுபவப் பகிர்வினைத் தொடக்கி வைத்தார். நூலகராக இருந்து பணி ஓய்வு பெற்ற டி.பாலசுப்பிரமணியன் தான் நூலகராக இருந்தபோது இருபது ஆண்டுகளுக்கு முன்னரே அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி போன்ற நகர் நூலகங்களில் நடத்திய வாசகர் வட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அன்றைய நாட்களிலேயே விருதுநகரில் ஒரு வாசகர் வட்ட அரங்கில் ஜெயகாந்தன் பேசும்போது இசங்கள் தொடர்பான விவாதம் தொடங்கி கலவரமாகி அடிதடியை நெருங்கிச் சென்ற சூழலை நினைவு கூர்ந்தார். தொடர்ந்து தலைமை ஆசிரியராக இருந்து பணி ஓய்வு பெற்ற நா. போத்திராஜ் மாணவர்கள் மத்தியில் தமிழ் உணர்வையும் பகுத்தறிவுச் சிந்தனையையும் வளர்ப்பதற்காக தான் முன்னெடுத்த முயற்சிகளையும் அவற்றின்வழி பெற்ற படிப்பினைகளையும் நகைச்சுவை உணர்வுடன் பகிர்ந்துகொண்டார். தற்சமயம் அவர் ஒரு தனியார் கல்வியியல் நிறுவனத்தில் முதல்வராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற தவசி ஆனந்தம் நூற்றாண்டு காணும் சாரண இயக்கத்தில் தான் ஈடுபட்ட நாட்களைப் பகிர்ந்து கொண்டார். இன்றுவரை சாரண இயக்கத்தின் மாவட்டப் பொறுப்பில் இருந்து செயல்பட்டு வருகிறார். கல்வித்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற தங்கராஜ் அவர்கள், பணிக்காலத்தில் தன்னுடைய வாசிப்பு அனுபவத்தையும், தொழிற்சங்க அனுபவத்தையும், தொழிற்சங்கப் போராட்டங்களின் வழியாக சிறைசென்ற அனுபவங்களையும் உணர்வுப் பூர்வமாகப் பகிர்ந்து கொண்டார். தற்போதும் அவர் குடியிருக்கும் பகுதியில் குடியிருப்போர் நலச் சங்கத்தின் பொறுப்பாளராக இருந்து வருகிறார்.

இந்நால்வரும் பணி ஓய்வு பெற்று ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆனபோதும்கூட சுறுசுறுப்பாக சமூகத்தளத்தில் இயங்கிக் கொண்டிருப்பவர்கள். அனுபவப் பகிர்வைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில் அனைவரும் பங்கேற்றனர்.

'நிரந்தரப் பணியில் இருப்பவர்கள் பலர் பத்திரிகைகள் படிப்பதற்குக்கூட நேரம் கிடைப்பதில்லை என்று சொல்லுகின்ற நோய்க்கு ஆட்பட்டிருக்கும் சூழலில் இத்தகையவர்களின் அனுபவப் பகிர்வு என்பது நேரத்தை எப்படி ஒழுங்கு செய்வது என்பதற்கு நல்ல வழிகாட்டுதலாக அமைந்தது' என நன்றியுரையின்போது மானுடவிடுதலைப் பண்பாட்டுக் கழகத்தின் துணைத்தலைவர் சுப்புராயுலு குறிப்பிட்டார். நினைவுப் பரிசுகளை பாலையம்பட்டி நாகராஜ் வழங்கினார்.

எதிர்காலத் திட்டமிடலுக்கான உரையாடலுடன் முடிவுற்ற நிகழ்வில்
2010 ஜனவரியில் நாடகப்பட்டறை நடத்துவது என முடிவுவெடுக்கப்பட்டது. பட்டறைக்கான முனனேற்பாடுகளை புதுச்சேரி சங்கர், ரவிக்குமார் மற்றும் காரைக்கால் ஜெயபால் ஆகியோர் செய்ய ஒப்புதழ் பெறப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கேகேயும், முனியசாமியும் செய்திருந்தனர். 

maveepaka@gmail.com