அவரார் (Avatar)
 

திரைவிமர்சனம்:  (குரு அரவிந்தன்)


வரார் என்ற ஆங்கிலத் திரைப்படம் பற்றியே இன்று பலரும் பேசிக்கொள்கிறார்கள். நவீன தொழில் நுட்ப வசதிகளைக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகவே இது கணிக்கப்படுகின்றது. தெய்வீகப்பிறப்பை நாங்கள் அவதாரம் என்று சொல்வதுண்டு. அவதாரம் என்ற வடமொழியில் இருந்துதான் இச்சொல் உருவானதோ தெரியவில்லை. இது போன்ற இதிகாசங்களும் புராணக்கதைகளும் நிறையவே எங்களிடம் இருந்தாலும் அதை எல்லாம் வேடிக்கையாகவும், கற்பனைக்கு அப்பாற்பட்டது என்றும் நாம் ஒதுக்கி விடுகின்றோம். எம்மில் பலர் மகாபாரதம் இராமாயணம் போன்ற கதைகளை நம்பத் தயாராக இல்லை. ஆனால் அப்படியான புராணக் கதைகளை மையமாக வைத்து எப்படி அவற்றைத் திரைப்படமாக்கிப் பணமாக்கலாம் என்பதில் மேலை நாட்டவர்கள் தங்கள் கவனத்தைத் இப்போது திருப்பியிருக்கிறார்கள். திரை அரங்கங்களின் முன்னால் நிற்கும் சினிமாரசிகர்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது அதில் அவர்கள் வெற்றியும் கண்டிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

அவரார் என்ற இந்தக் கதையிலும் சடாயு, கருடன் என்றெல்லாம் நாங்கள் படித்தது போன்ற பிரமாண்டமான பறவைகள் வருகின்றன. அவை மக்களைச் சுமந்து கொண்டு பறப்பது
(Animation techniques) போன்ற காட்சிகளையும் அமைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தைப் பார்க்கும்போது இராமாயணக்கதை, கூடுவிட்டுக் கூடுபாயும் விக்கிரமாதித்தன் கதை எல்லாம் ஞாபகத்திற்கு வருகின்றன. மகாபாரதத்தில் கண்ணனை அவதாரம் என்கிறோம். இந்தப்படத்திலும் கார்மேகக் கண்ணன் போல ஒருவர் வருகின்றார். குதிரை, கருஞ்சிறுத்தை போன்ற மிருகங்களும் மக்களைச் சுமந்து செல்கின்றன. எகிப்திய நாகரிகத்தில் வரையப்பட்ட ஓவியத்தில் கண்ட குதிரைகளைப் போலவும் சிறுத்தைகள் போலவும் இவை இருக்கின்றன. ஈட்டி, வேல், அம்பு, சூலம், கத்தி, வாள் போன்ற ஆயுதங்கள் போர்க்கருவிகளாகப் பாவிக்கப்படுகின்றன. இடையிடையே எங்கள் ஊரில் நடக்கும் வேட்டைத் திருவிழாக்களின் ஞாபகங்கள் வருகின்றன. இந்துக் கடவுள்களின் கைகளில் இருக்கும் ஆயுதங்களைப் போல, அத்தனை ஆயுதங்களும் அவர்கள் கைகளில் இருக்கின்றன. மரத்திற்கு மரந்தாவும் வால்களைக் கொண்ட இனமாக அவர்கள் இருக்கிறார்கள். ஆலமரங்களும் அதன் விழுதுகளும் இங்கேயும் பிரமாண்டமாக உருவெடுத்து நிற்கின்றன. நவீனகாலத்திற்கும், புராதன காலத்திற்குமான போராட்டமான கதையாக 2154ல் நடக்கும் கதையாக இத் திரைக்கதை நகர்கின்றது. பன்டோரா என்ற கிரகத்தில் இருக்கும் நாவி என்ற இனத்திற்கும் அங்கு கனிவளம் தேடிச் சென்ற மனிதருக்குமான போராட்டம் பற்றிய கதையாக இருக்கின்றது. சுருங்கச் சொன்னால் நாங்கள் கேயில்களிலும், ஆதிகாலக் குகைகளிலும் பார்த்த புராதன ஓவியங்களையும் சிற்பங்களையும் நவீன தொழில் நுட்ப வசதிகள் மூலம் பிரமாண்டமான திரைகளில் நடமாட விட்டிருக்கிறார்கள். ரைரானிக் படத்தைத் தொடர்ந்து இந்தப்படம் 1999ம் ஆண்டு வெளிவந்திருக்க வேண்டும். ஆனால் இந்தப் படம் இத்தகைய நவீனதொழில் நுட்ப வசதிகளுக்காகக் காத்திருந்ததால்தான் காலம் கடந்து இப்போது வெளிவந்திருக்கிறது.

இங்கே ஒரு விசேடம் என்னவென்றால் இவை எல்லாம்
2டி, 3டி, (Three dimensional depth) ஐமாக்ஸ் (Image Maximum) (2-D, 3-D, IMAX-3D,) என்று பெரிய திரைகளில் இடம் பெறுகின்றன. அதைவிட ஸ்ரீறியோ (Stereo) ஒலி அமைப்பில் இயற்கையான சத்தம் போன்ற ஒலி அமைப்போடு இப்படத்தைப் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. ஒரு படத்தின் வெற்றிக்கு ஒளி, ஒலி அமைப்புக்களும் மிகவும் முக்கியமானது. அது இப்படத்தில் திறம்படவே கையாளப்பட்டிருக்கிறது. திரை அரங்கத்தின் வாசலில் சண்கிளாஸ் போன்றதொரு கண்ணாடியைத் (Lenses Polarized) திரைப்படம் பார்க்கும் போது அணிவதற்குத் தருகிறார்கள். அதை அணிந்து கொண்டு பார்க்கும்போது நாமும் படத்தோடு ஐக்கியமாகி விடுகின்றோம். பறவைகளோடு நாமும் பறப்பது போலவும், கதாநாயகி தவறி விழும்போது நாமும் கீழே விழுவது போலவும், விமானம் வெடித்துச் சிதறும்போது அதன் பாகங்கள் எங்களைத் தாக்கவருவது போலவும் உணர்கின்றோம். எங்களை அறியாமலே முன்னும் பின்னும் நகர்கின்றோம். உதைபந்தாட்டத்தை ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டு நிற்பவர்கள் தம்மையறியாமலே காலால் உதைப்பது போன்ற உணர்வோடு நாமும் நடந்து கொள்கிறோம். ஐமாக்ஸ் திரையும், 3- டி யின் ஆளுமையும் எங்களை இப்படி எல்லாம் ஆட்டிப் படைக்கின்றது.

இந்தப் படத்தை இயக்கித் தயாரித்தவர் புகழ்பெற்ற தயாரிப்பாளரும் இயக்குநருமான ஜேம்ஸ் கமறூன்
(James Cameron) என்பவராகும். ஓன்ராறியோ, கனடாவைச் சேர்ந்த இவர் ஏற்கனவே வெளிவந்த சிறந்த பல படங்களை இயக்கியதன்; மூலம் மிகவும் பிரபல்யமானவர். ரேமினேற்ரர், ஏலியன், றம்போ, அபிஸ், ரைற்ரானிக் போன்ற படங்களை இயக்கியவர். 1997ல் வெளிவந்த ரைரானிக்கின் கடைசி நிமிடங்களைச் சினிமா ரசிகர்கள் யாருமே மறந்திருக்க மாட்டார்கள்.

சாம் வேர்த்திங்டன்,
(Sam Worthington) சூ சல்டானா, (Zoe Saldana) ஸ்ரீபன் லாங் (Stephen Lang) ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய பாத்திரமேற்று நடிக்கிறார்கள். 1976ல் இங்கிலாந்தில் பிறந்து அவுஸ்திரேலியாவில் வளர்ந்த சாம் வேர்த்திங்டன் தொலைக்காட்சி நாடகங்களில் நடித்தாலும், ரேமினேற்ரர் சல்வேசன் என்ற படத்தின் மூலம் தான் ஹொலிவூட்டில் நன்கு அறிமுகமானவர். இந்தப்படத்தில் சூலி என்ற பாத்திரம் ஏற்று நடிக்கின்றார். 1978ல் அமெரிக்காவில் நியூஜேர்சியில் பிறந்த நடிகை தான் சூ சல்டானா. பைறேட்ஸ் ஆவ்த கரீபியன், ஸ்ராறாக் போன்ற படங்களின் மூலம் புகழ்பெற்றவர். நைற்றி என்ற பாத்திரமேற்று இதில் நடிக்கின்றார். அமெரிக்கா நியூயோர்க் நகரில் 1952ல் பிறந்த நடிகர் ஸ்ரீபன் லாங், புறம் மெக்சிக்கோ வித் லவ், பப்பிளிக் எனிமிஸ் போன்ற படங்கள் மூலம் பிரபல்யமானவர். கேணல் மில்ஸ் என்ற பாத்திரமேற்று இந்தப் படத்தில் நடிக்கின்றார்.

கோடிக்கணக்கான பணத்தைக் கொட்டி இது போன்ற தொழில் நுட்ப வசதிகளோடு தமிழில் படம் எடுப்பதை எம்மால் நினைத்தும் பார்க்க முடியாது. அப்படி எடுத்தாலும் அதற்குரிய வருமானத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது. எம்மிடையே மிகவும் திறமையான இயக்குநர்கள் இருப்பதால் எதிர்காலத்தில் நாமும் நவீன தொழில் நுட்பத்தைக் கொண்டு முயற்சி செய்து பார்க்கலாம். எமக்குப் பழக்கமான கதைகளை வேறொருவர் எடுத்துத் தருவதைவிட நாமே எடுத்தால் சிறப்பாக இருக்கும் என்பது மட்டுமல்ல, எங்களாலும் முடியும் என்பதை வெளி உலகிற்குக் காட்டலாம். இன்றைய சினிமா உலகிற்கு அறிமுகமாகியிருக்கும் நவீன தொழில் நுட்ப வசதிகளை நாங்களும் தெரிந்து கொள்வதற்காக, இந்தப் படத்தை ஒருமுறையாவது பார்ப்பதில் தவறில்லை.
kuruaravinthan@hotmail.com