சொல்லேருழவர் சுரதா

கவிஞர். மா.உலகநாதன், முனைவர் பட்ட ஆய்வாளர்

வில்லே ருழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லே ருழவர் பகை. - குறள் -
872

தேர்ந்தெடுத்த சொற்களைப் பெய்து, தேன்மழையாக உவமைக் கவிதைகளைப் பொழிந்தவர் கவிஞர் சுரதா.

வாழ்க்கைக் குறிப்பு :

தஞ்சை மாவட்டம், திருவாரூக்கு அருகே பழையனூரில்
23.11.1921இல், திருவேங்கடம், செண்பகம் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இயற்பெயர்.      T. இராசகோபால். பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தவர். இவரது முதற்கவிதையின் முதல் வரிகள் இப்படி ஆரம்பித்தன.

நடுவிரல் போல் தலைதூக்கு - நம்
நாட்டாரின் இன்னலைப் போக்கு.


ஒரு பக்கம், நாடு ஆங்கிலேயேரிடமும், தமிழகம் ஆதிக்க சக்திகளிடமும் அடிமைப்பட்டு, அல்லலுற்ற நேரம். இருபது வயது இளமைத் துடிப்போடு மேற்கண்ட கவி வரிகள் சினந்து சிலிர்க்கின்றன. சீர்திருத்தக் கருத்துகளிலும், அவற்றைச் சீரிய முறையில் கடைப் பிடிப்பதிலும் வாழும் பெரியாராகவே வாழ்ந்தவர்.

தாசனுக்குத் தாசன் :

பாரதிக்குத் தாசன் பாரதிதாசன், அந்தப் பாரதிதாசனின் தாசன் இந்தச் சொற்சிற்பி சுரதா! ஆம்! சுப்புரத்தினம் என்ற பாவேந்தரின் பெயரை, முதலில் சுப்புரத்தினதாசன் என்று வைத்துக் கொண்டார். பின்னர், சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். பாரதிதாசனின் உதவியாளராக, அவர் வீட்டிலேயே தங்கி அவரது எழுத்துப் பணிகளுக்கு மிகவும் உதவியவர்.

அக்காலத்தில், அரசவைக் கவிஞராக இருந்த நாமக்கல் கவிஞர். வெ. இராமலிங்கம் பிள்ளை அவர்களுடன் பல மாதங்கள் தங்கியிருந்து அவரது எழுத்துப் பணிகளுக்கும் உதவிபுரிந்தவர். இந்த அனுபவங்கள் அவரை ஒரு இலக்கியவாதி, நடிகர், எழுத்தாளர், பத்திரிகையாளர் எனப் பலதுறை, பலதிறம் என ஆளுமை நிறைந்தவராக்கியது.

நடிகர் :

1942 இல் சுயமரியாதை இயக்கக் கருத்துகளைப் பரப்பும் வகையில், சென்னையில் நாடகக்குழு ஒன்று இயங்கி வந்தது. இந்த நாடகக் குழுவினரால் பாரதிதாசனின் புரட்சிக்கவி நாடகம் தமிழகத்தின் பல பகுதிகளிலும் நடத்தப்பட்டது. அதில் அமைச்சர் வேடத்தில் சுரதா நடித்தார். வாழ்க்கையில் நடிக்கத் தெரியாத அவர், நாடகத்தில் நடித்தாராம்!

எழுத்தாளர் :

1944 இல் பி.யூ.சின்னப்பாவைக் கதாநாயனாகக் கொண்டு, மங்கையர்க்கரசி என்ற திரைப்படம் தயாரானது. நம் கவிஞர் முதன்முதலில் திரைப்படத்திற்கு உரையாடல் தீட்டிய படம் இதுதான். மிகக் குறைந்த வயதில், இவர் எழுதிய உரையாடல்கள் மிகவும் புகழ் பெறவே, அதை நூல் வடிவில் வெளியிட்டார் கவிஞர். இந்த வசன நூல் தான் ஒரு திரைப்படத்தின் கதை, வசனம் புத்தக வடிவில் முதன் முதலாக வந்ததாகும்.

1946 இல் இவர் எழுதிய சாவின் முத்தம் என்ற நூலை ஸ்டார் பிரசுரம் வெளியிட்டுப் பெருமையடைந்தது.

1952 இல் அமரகவி, 1953இல் ஜெனோவா ஆகிய படங்களுக்கும் கதை வசனம் எழுதினார். 17 நூல்களும், 5 இலக்கிய இதழ்கள் வெளியிட்டுள்ளார்.

1956 இல் பட்டத்தரசி என்கிற சிறு காவிய நூலை சுரதா வெளியிட்டார். 16 பக்கங்கள் கொண்ட பரபரப்புக்குரிய அந்நூலின் முன்னுரைக் கவிதையை ஒரு மணி நேரத்திலேயே எழுதி முடித்துச் சாதனை படைத்தார்.

1954 இல் கலைஞர் கருணாநிதி அவர்களின் முரசொலி இதழில் கவிஞர் தொடர்ந்து எழுதி வந்தார். எழுச்சியும் வேகமும் நிறைந்த அந்தக் கவிதைகளைப் படித்த பின்னர் தான், சுரதா பரம்பரை என்று சொல்லிக் கொள்ளுமளவுக்கு, இவருக்கு இரசிகர்கள் உருவாயினர். எழுத்துலகில் கலைஞருக்கு, முன்னோடி ஆனவர்.

இதழ்கள் :

1965 இல் சுரதா எழுதிய புகழ்பெற்ற தேன்மழை என்கிற கவிதை நூல் வெளிவந்தது. 1969 இல் இந்நூலுக்குத் தமிழக அரசின் பரிசு கிடைத்தது.

1968 இல் இவர் தனது பெயரிலேயே சுரதா என்கிற மாதமிருமுறை கவிதை இதழைத் தொடங்கினார். அதன் பிறகே, கவிஞர்கள் தங்கள் பெயரில் இதழ்களை வெளியிடும் முறையைக் கையாண்டனர்.

1971 இல் ஆனந்த விகடன் வார இதழில் வாரந்தோறும் இவர் எழுதி வந்த கவிதைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. விகடனில் ஏனையவற்றை விட இவரது கவிதைக்கே அதிக அளவில் கடிதங்கள் வந்து குவிந்ததும்.

விருதுகள் :

1972 இல் தமிழக அரசு கவிஞருக்கு கலைமாமணி பட்டம் வழங்கியது. 1987இல் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, தமிழக அரசு முதன் முதலில் ஏற்படுத்திய பாவேந்தர் விருது (ரூ. 10,000 பணமுடிப்பு, 4 பவுன் தங்கப்பதக்கம்) நம் கவிஞருக்கு வழங்கிப்பெருமையடைந்தது.

1982 இல் தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் திருமடத்தில் கவியரசர் பட்டமும், தங்கப் பதக்கமும் சுரதா அவர்களுக்கு வழங்கப்பட்டது.

1992 இல் உலகத் திருக்குறள் உயராய்வு மையத்தின் நான்காவது திருக்குறள், மாநாட்டில் குறள் பரப்பு மாமணி விருது வழங்கப்பட்டது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் சார்பில் 1995இல் மாமன்னன் இராசராசன் விருதை டாக்டர் கலைஞர் அரசு வழங்கிச் சிறப்பித்தது. 3000க்கு மேற்பட்ட கவியரங்க நிகழ்ச்சிகளுக்குத் தலைமையேற்று நடத்தியுள்ளார். 2000 கவிஞர்கள் இவர் தலைமையில் பாடியிருக்கின்றனர்.

புதுமை புகுத்திய புலவன் :

வீட்டுக்கு வீடு கவியரங்கம், முழுநிலாக் கவியரங்கம், படகுக் கவியரங்கம், ஆற்றுக்கவியரங்கம் என்று கவியரங்க நிகழ்ச்சிகளில் புதுமையையும், புரட்சியையும் புகுத்தியவர்.

இவரது நூல்கள் மதுரைப்பல்கலைக்கழகம், கேரளப் பல்கலைக் கழகம், மலேசியப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பாடநூலாக வைக்கப்பட்டிருக்கின்றன.

கவிஞருக்கு, உவமைக் கவிஞர் என்னும் சிறப்புப் பெயரை வழங்கியவர் புகழ்பெற்ற சிறுகதை மன்னன் ஜெகசிற்பியன் என்பது பெருமைக்குரியது!

திரை இசையில் உவமை :

நாணல் படத்தில் ஒரு பாடல் எழுதினார்.
விண்ணுக்கு மேலாடை,..... பருவமழை மேகம்
வீணைக்கு மேலாடை,....... நரம்புகளின் கூட்டம்.

கவிஞர் வாழ்ந்த காலங்களில் கதாநாயகிகளிடம் மேலாடை இருந்த காலம். அதனால் தான் பாடல் முழுவமையும் மேலாடை என்ற வார்த்தையைச் சேர்த்துள்ளார். அது மட்டுமல்ல! தொடர்ந்து பாடலில் சொல்லுவார். மண்ணுக்கு மேலாடை மரத்தின் நிழல் என்பான் நாயகன். இல்லை இல்லை மண்ணுக்கு மேலாடை வண்ணமயில் இருட்டு என்பாள் நாயகி, நிழல் என்பதற்கும் இருட்டு என்பதற்கும் எத்துணை வேறுபாடு பாருங்கள்! நிழல் இடம் மாறக்கூடும் இருட்டு நிரந்தரமாக மண்ணில் தொடரும் அல்லவா? உருவகமும், உவமையும், கற்பனையும் ஒன்றையொன்று விஞ்சுகின்றன. கவிஞர் சுரதாவைப் பற்றி வாலி பாடும்போது,

அவன் உரைக்காத உவமையில்லைளூ
அவனுக்குத்தான் உவமையில்ல
ை என்பார்.

நீர்க்குமிழி என்ற படத்தில் ஒரு தத்துவப்பாடலை எழுதியிருந்தார்.

ஆடி அடங்கும் வாழ்க்கையடா,....
ஆறடி நிலமே சொந்தமடா,...
முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா
கண் மூடினால் காலில்லாக் கட்டிலடா


இந்தப் பாடலைப் பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள். காட்சியில் நடித்திருந்தவர் நடிகர் நாகேஷ் அவர்கள்,

பிறந்தோம் என்பதே முகவுரையாம்
   பேசினோம் என்பதே தாய்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
   மரணம் என்பதே முடிவுரையாம்.


வாழ்க்கை என்ற கட்டுரையில் முகவுரையும், உள்ளது. முடிவுரையும் உள்ளது என்கிறார். முத்தாய்ப்பாக கீழ்;க்கண்ட வரிகளில் வாழ்க்கை நிலையாமையை நச் என்று வர்ணிக்கிறார். இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்.

இந்தப் பாடலைத்தான், தன் இறுதிநாளில் ஒலிக்கச் செய்ய வேண்டுமென்று ஒரு வானொலிப் பேட்டியின் போது கவிஞர் வேண்டுகோள் விடுத்தாராம்.

பாவலர்களின் பாராட்டு :

கவிஞர் வேழவேந்தன் சுரதாவைப் பற்றிச் சொல்லும்போது,

துறைமுகம் ஆனார் பாட்டுத்
துறைகண்ட கவிஞர்க் கெல்லாம்.
என்கிறார். கவிதை மொழியை கன்னித் தமிழில் பேசிய அவரது நாக்கு தமிழ்நாக்கு என்கிறார் கவியரசி ச. சகாயமேரி.

அறிவிலோ ஆனைபலம்
   ஆற்றும் கவிதைச்
செறிவிலோ வான்பலமாம்
   செப்பு - நெறியிலோ
செந்தமிழ்ப் பாட்டுத்தேன்
   சிந்துவதே நாளெல்லாம்
நற்தமிழ்ப் பொற்சுரதா நாக்கு!


கவிஞரின் உற்ற தோழரான பாட்டரசர் பண்ணுருட்டி பரமசிவன் அவர்கள் சுரதா 1000 என்ற கவிதைத் தொகுப்பைச் மிகச் சிறப்பாகத் தமிழுலகத்துக்கு அளித்துள்ளார். சுரதா கவிஞர் பேரவை என்னும் அமைப்பு பண்ணுருட்டியில் கவிஞர் பரமசிவன் அவர்களால் தொடங்கப்பட்டு, கவியரங்கம், பட்டிமன்றம், ஆய்வரங்கம் போன்றவை சிறப்;பாக நடைபெற்று வருகிறது.

முடிவுரை :
84 ஆண்டு காலம் வாழ்ந்து 20.06.2006 இல் மறைந்தார். அவர் அமரரானாலும், அவரது கவிதைகள் வழி, இன்னும் தமிழாய் வாழ்கிறார்.worldnath_131149@yahoo.co.in