வரும் வரை காத்திருப்போம்

அ. கங்காதர்சினி

'அம்மா...... அம்மா......' அவள் கூப்பிட்ட குரலுக்குப் பதில் இல்லை.

'அண்ணா.... அண்ணா.....' எந்த பதிலும் இல்லை. வீட்டில் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. அவள் வீட்டை ஒருமுறை சுற்றி வந்தாள். யாரும் இல்லை. அயர்வுடன் விறாந்தையில் கிடந்த கதிரையில் விழுந்தாள்.

'அம்மா எங்க போயிருப்பா? ம்....... ஓ......இன்டைக்கு வெள்ளிக்கிழமை. ஒருவேளை கோயிலுக்கு போயிருப்பாவோ.......'

'வீட்டுக்கு இன்னும் விளக்கு ஏத்தயில்ல. வீடு இருண்டு கிடக்குது. அண்ணாவையும் காணயில்ல....' அவள் சிந்தனை அவர்களைப் பற்றிய தேடலாக இருந்தது.

எங்கேயோ தூரத்தில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. சிந்தனை கலைந்து அவள் நினைவுகளில்; காலையில் நடந்த சம்பவம் நிழலாடியது.

'அந்த நாய். அதை எங்கயோ நான் பார்த்திருக்கிறன்.'

'அந்த நாய்.....'

'அந்த நாய்.... என்னைக் கண்டதும் வாலை ஆட்டிக்கொண்டு என்னைப் பார்த்துதே. அந்த நாய்..... அந்த நாய்.....'

அவள் சிந்தனைகள் சுழன்றன. வெளியே பொழுது இருட்டிக்கொண்டு வருவது அவளுள் ஒருவித பய உணர்வை ஏற்படுத்தியது. ஊரடங்குச் சட்ட நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது.

சற்று நேரம் 'கேட்'டடியில் நின்று பார்த்தாள்.

'அம்மாவையும் காணயில்ல. இந்த அண்ணாவையும் காணயில்ல. வீடு இருண்டுபோய் கிடக்குது......' முணுமுணுப்புடன் மறுபடியும் வந்து கதிரையில் விழுந்தாள்.

'வீட்டில ஒருத்தரும் இல்ல. நான் மட்டும் தனிய இருக்கிறன். எப்பதான் வரப்போகீனமோ தெரியேல்ல'. நாய்கள் இன்னும் அடங்கவில்லை. குரைத்துக்கொண்டேயிருந்தன.

அவள் நினைவுகள் அந்த நாயிடமே நிலைத்தன.

'அந்த நாய். அதை எங்கயோ நான் பார்த்திருக்கிறன்.' 'அந்த நாய்..... அந்த நாய்.....' அவளுள் பொறிதட்டியது.

'ஓ...... அது முந்தி நாங்கள் இடம்பெயர முன்னம் எங்கட பக்கத்து வீட்டுல நின்ற நாயெல்லோ. அப்ப கொஞ்சம் சின்னதாய் இருந்தது'.

அவளுக்கு ஞாபகம் வந்துவிட்டது. அவள் கூட அதுக்கு எத்தனையோ தடவை சாப்பாடு போட்டிருக்கிறாள். வாலையாட்டியாட்டி அது சாப்பிடும் அழகை ரசித்திருக்கிறாள். அவளுக்கு ஞாபகம் வந்துவிட்டது.

கோயில்மணி 'டாங்...டாங்.....'என்று ஒலியெழுப்பியது. அவள் மனம் மறுபடியும் அலுத்துக்கொண்டது.

'இந்த அம்மா இன்னும் வரயில்ல. அண்ணாவும் எங்க பொயிட்டாரோ தெரியாது. நான் அவையளுக்காக இங்க பார்த்துக்கொண்டிருக்கிறன். வீடு இருண்டு போய்க் கிடக்குது. விளக்கு வைக்கவேணும்'.

தூரத்தில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.

அந்த நாய். அவளுக்கு அந்த நாயின் ஞாபகம் வந்தது. காலையில் நடந்த சம்பவம் அவள் கண் முன் தோன்றியது. அவள் யாழ் பல்கலைக்கழக கலைப்பிரிவு இறுதியாண்டு மாணவி. அன்று காலை அவசர அவசரமாக 'கம்பஸ்'சுக்குப் போக ஆயத்தமானாள். மணிக்கட்டைத் திருப்பி நேரத்தைப் பார்த்தாள். 'இன்னும் பத்து நிமிஷம்தான் இருக்கு.......' நினைத்தவள் 'கம்பஸ் பைலையும் நோட்டுக்களையும் சைக்கிள் கரியரில்' சொருகினாள்.

'அம்மா பொயிட்டு வாரன்' அடுக்களையிலிருந்த தாய்க்கு கேட்கும்படி சத்தமாகச் சொல்லிவிட்டு, சைக்கிளை மிதிக்கத் தொடங்கினாள்.

அதற்குள் இராணுவத்தினரின் அந்த 'சென்றிப் பொயின்ற்'. ஒரு கிலோமீற்றர் தூரத்தில இருக்கிற பல்கலைக்கழகத்திற்குப் போவதற்குள் அவள் ஐந்து சோதனைச் சாவடிகளைக் கடக்கவேண்டியிருந்தது. வழமைபோல் 'சைக்கிளை' விட்டு இறங்கினாள். பெண்கள் வரிசையில் நின்று 'பொடி செக்கிங்கில்' ஒரு மரமாகி வெளியே வந்தாள். அப்பொழுதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. அவளுக்கு இப்போது நினைத்தாலும் உடல் பதறியது.

திடீரென ஜந்தாறு நாய்கள். அவை எங்கிருந்து வந்தன என்று சிந்திப்புதற்குக் கூட அவளுக்கு அவகாசம் இருக்கவில்லை. அவை வெறிபிடித்தன போலக் குரைத்துக் கொண்டு பாய்ந்து வந்தன. அவள் நின்ற பக்கமாய் புழுதியைக் கிளப்பிக்கொண்டு பாய்ந்து வந்தன. அவள் உடல் நடுக்கத்துடன் பதறத்தொடங்கியது. பயத்தில் வெலவெலத்துப் போனாள்.

'யாரோ உசிக்காட்டி விட்டிருக்கிறாங்கள். அம்பிட்டாள் குதறி எடுத்துடுங்கள்'

நினைத்தவள் சைக்கிளையும் போட்டுவிட்டு ஓடத் தொடங்கினாள். ஆனாள் நாய்களின் வேகம் அவளை மிஞ்சிவிட்டது. அவள் உதடுகள் 'கடவுளே என்னைக் காப்பாற்று. என்னைக் காப்பாற்று' என்று முணுமுணுத்தன. அவளை அண்மித்த நாய்கள் அவளையும் முந்திக் கொண்டு அப்பால் ஓடின. ஆசுவாசமாய் மூச்சுவிட்டாள் அவள்.

அந்த நாய்கள் ஒரு கன்றுத் தாச்சிப் பசுவை குறிவைத்து ஓடின. பசுவும் தன் சக்தியை எல்லாம் பிரயோகித்து தன் ஓட்டத்தின் வேகத்தை கூட்டியது. அவள் மெதுவாக நடந்து, விழுந்து கிடந்த தன் சைக்கிளைத் தூக்கி நிறுத்தினாள். விழுந்துகிடந்த நோட்டுக்களை சேகரித்தாள். நாய்களின் குரைப்பும், பசுவின் மூசல் சத்தமும் அவளுள் வேதனையை ஏற்படுத்தியது. எதுவும் செய்யச் சக்தியற்றவளாய் சைக்கிளை வேகமாக மிதித்தாள்.

அப்பொழுது அவளுள் ஒரு மின்னல் வெட்டியது. திரும்பிப் பார்;த்தாள். அந்த கன்னங்கரேல் என்ற நாய்.... அதன் முகத்தின் இரு பக்கமும் வெண்மை நிறம் படர்ந்திருந்தது. அதன் வால் நுனிப்பகுதியில் முன்பு எப்போதோ ஒரு காயம் ஏற்பட்டு உரேமம் இன்றி, வடுவாக இருந்தது. காலை விந்தி விந்தி ஓடினாலும் அதன் குறியில் கண்ணாக இருந்தது. ஏதோ ஒரு உந்துதலில் அந்தப் பசுவை நோக்கிப் பாய்ந்தது. பாவம் அந்தப் பசு. பெரிதாக சத்தமிட்டுக் கொண்டே ஓடியது. தனது கொம்புகளையே கவசமாக்கிக் கொண்டு நாய்களை விரட்டியது. நாய்கள் சற்று விலகுவதும் மறுபடி வந்து சேட்டை செய்வதுமாக இருந்தன. முள்வேலிகள் உடலைக் கிளிக்க வேலிகளைத் தாண்டி ஓடியது அந்தப் பசு.

அவள் சைக்கிள் காற்றைக் கிழித்துக்கொண்டு விரைந்தது. அன்று அவளுக்குப் படிப்பில் கவனம் செல்;;லவில்லை. கண் முன்னே அந்தச் சம்பவம் மறுபடி மறுபடி வந்து தொல்லை கொடுத்தது. 'பாவம் அந்தப் பசு. அதுக்கு ஏன்ன நடந்துதோ தெரியாது' அவள் இதயம் அந்த வாயற்ற ஜீவனுக்காக கசிந்தது. 'அந்த நாய்..... அந்த நாய்......' அன்று முழுவதும் அவளுள் ஒரு நெருடல்.

இப்பொழுது அவளுக்கு ஞாபகம் வந்துவிட்டது.

'அந்த நாய்..... அதுக்கு அவள் சாப்பாடு போட்டிருக்கிறாள். அதுவும் வாலையாட்டியாட்டி சாப்பிடும்.'

'ஓம்.... அது நாங்கள் வளர்த்த நாய். நாங்கள் சாப்பாடு போட்டு வளர்த்த நாய்.' ஏதோ குற்ற உணர்வில் உள்ளம் குறுகுறுத்தது அவளுக்கு.

'எங்கட வீட்டில மட்டுமில்ல, இன்னும் அக்கம் பக்கம் இருக்கிற வீடுகளில எல்லாம் போய் நல்லா சாப்பிடும். நாங்களும் அதுக்கு ஆசையாகத்தான் சாப்பாடு போட்டனாங்கள். அப்பவெல்லாம் அது எங்களுக்கு வாலை ஆட்டிக்கொண்டே சாப்பிடும். அது எங்களுக்கு ஒரு காவல் என்றுதான் நினைச்சம்' வெறுப்பாய் இருந்தது அவளுக்கு. அந்த பசுவை நினைக்க நினைக்க வேதனையாக இருந்தது.

'நாங்க இடம்பெயர்ந்து போன பிறகு யார் போட்ட சாப்பாட்டச் சாப்பிட்டிச்சோ தெரியாது. இன்டைக்கு யாரோ உசிக்காட்டி விட்டிருக்கீனம் போல இருக்குது.'

'பாவம் அந்தக் கன்றுத் தாச்சிப் பசு. எத்தனை நாய்கள் அதை விரட்டிக்கொண்டு போச்சுது. அதுவும் தன்னை காப்பாத்த எவ்வளவு போராடிச்சுது.'

அவளுள் ஒர் இனம் புரியாத வேதனை.

கோயில் மணி மறுபடியும் அவள் சிந்தனையைக் கலைத்தது. மனம் அலுத்துக்கொண்டது.

'இந்த அம்மாவ இன்னும் காணயில்ல. அண்ணாவும் எங்க போயிட்டாரோ தெரியாது. நான் அவையளுக்காக இங்க பாத்துக்கொண்டிருக்கிறன். வீடு இருண்டு போய்க் கிடக்குது. விளக்கு வைக்கவேணும் நாய்கள் குரைத்துக் கொண்டேயிருக்குதுகள்.'