ஆகவே புலன்  ஆகாது

பசுந்திரா சசி                  

நடுச்சாமம் , மயான இருட்டு, காற்றில் ஒரு வகை விசப்பூவின் நாற்றம் சுவாசத்தோடு தொண்டையில் கச்சல் பூசியது, இருட்டில் தொலைந்த வெளவால்கள் குறுக்கும் நெடுக்குமாக பறக்கும் சத்தம் இடை இடை வந்து போனது. எனது வீட்டிற்கு மேற்கு மூலையில்  அரை கூப்பிடு தொலைவில் இருந்த இளம் விதவை சின்னத்தாயி வீட்டின் கிடுகுக்கதவு சரசரப்பில்லாது திறந்தது . உள்ளிருந்து பூனை பாதம் போல் ஓசையின்றி அடிமேல் அடி எடுத்து வைத்து ஒருவன் வெளியேறினான்

'சின்னத்தாயி ஒரு 37,38 வயது மதிக்கத்தக்க  விதவை . சின்ன வயசிலேயே கட்டி சீக்கிரமே புருசன் போய் சேர்ந்துவிட்டான். இரண்டு குமர் பிள்ளைகளின் தாய் ; மாவு இடித்து , நாற்று நட்டு ,களை பிடுங்கி , காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கும் இந்தப் பாவியின் வீட்டில் யார் இந்த திருட்டுப்பயல்?, எதற்காக வந்தான்?  சின்னத்தாயியும் வேலையால் வந்து அயர்ந்து தூங்கி இருப்பாள்.  'ஆம்பிள இல்லாத வீடு,  தென்னங்குருத்து போல வயசுக்கு வந்த இரண்டு இளம் குமரிகள் .  இருவரில் ஒருத்தி வாய்பேசவும் முடியாத ஊமைகேட்க யாரும்  இல்லை என்ற துணிச்சல் இவனுக்குபச்சப்பிள்ளையை பாம்பு நெருங்குவது போல் உணர்ந்தேன். 'ஒரு வேளை காதல் கீதலோ ?  என்ன இழவா இருந்தாலும்  நடுச்சாமத்தில்  என்ன வேண்டிக்கிடக்கு ?. இரு வாறன் இண்டைக்கு கையும் மெய்யுமா பிடிக்கிறன் .  அக்கம் பக்கம் - நித்திரை குழம்பிட்டுது - என்று  திட்டினாலும்  பறவாய் இல்லை . காதலா இருந்தால் பெரியவர்களிடம் விபரத்தை விளக்கி சீக்கிமே கலியாணம் செய்து வைத்துவிட வேண்டும். பெட்டைக்கு பிள்ளையை கொடுத்திட்டு இரவோட இரவா காணாமல் போயிற்றால் அதுக்குப் பிறகு ஆரைப்பிடிக்கிறது. தலையில அடிச்சு அழுது தரையில புரண்டு எழும்பி என்ன பிரியோசனம்.' இங்கே  என் வீட்டுக்கு  அருகிலும் குளிக்கவும் , சிறுநீர் களிக்கவும் என மறைவாக அடைப்பு கட்டியிருக்கிறேன் . தொடர்ந்து  என்னால் இந்த மூத்திரக்குச்சிக்குள் இருக்க முடியவில்லை . எழுந்து வெளியே வந்துவிட்டேன்

பல்லில் கடிபட்ட கல்லை தேடும் நாக்கு போல அவனை மெதுவாக பின் தெடர்ந்தேன். என்ன ஆச்சரியம் திடீரென காண வில்லை . எங்கோ ஒளித்து விட்டான். போன திசையையே பார்த்தபடி நின்றேன். பின்  'இன்று இல்லா விட்டால் இன்னொருநாள் மாட்டாமலா போயிருவான். அந்த வாய் போசாத பிள்ளையை தான்  இவன் ஏமாத்துறான் இருக்கட்டும். மிக நுணுக்கமாக பின்தொடர்ந்து சின்னத்தாயி வீட்டில் வைத்தே பிடிக்க வேண்டும். நல்ல காலம் என் கண்ணில் பட்டு விட்டான். -  விடிய சிறு நீர் கழிக்கலாம் - என்று விட்டிருந்தால் தெரிந்தே இருக்காதுஅடிக்கடி சலம் கழிக்க நான் ஒன்றும் இன்னும் சக்கரை வியாதிக்காரன் இல்லை .  படுத்தால் விடியத்தான். இப்போது எழும்பியதற்கு சின்னவன் சீனுவுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்அது இன்னொரு கதை - கொஞ்ச நேரத்திற்கு முன் .

இவன் என்ர கடைசி பையன் சீனு மெல்ல முனகினான். – படீர் - என்று அவனின் முதுகில் ஓர் அடி விழுந்தது. அடித்தவரின் விரல் அவனின் காதுமடல் வரை சென்று தாக்கியது. அவ்வளவு பெரிய கை விரல் இல்லைசீனுவுக்கு அவ்வளவு சின்ன முதுகு. முனகி அழ ஆரம்பித்தவன் அடியோட அசையாமல் தூங்கி விட்டான். அடிக்கு பயந்த  சாமித்தட்டு விளக்கும் அசைந்து ஒதுங்கி  சத்தமில்லாமல் எரிந்து கொண்டிருந்தது. ஆனால்  நான் எழுந்து  குந்தி விட்டேன்

சுட்டெரிக்கும் விழியுடன்  “ எட்டு மாத குழந்தைக்கு என்ன தெரியும் எண்டு இப்ப அடிச்சனீர்” என உறுமினேன். அந்தப்பக்கம் படுத்திருந்தபடியே  “ அழுதால் அடி விழும் எண்டு தெரிஞ்சதால தானே சத்தம் போடாம படுத்திட்டான்.” என்றாள் பார்ப்பதற்கு பயற்றங்காய் போலவும் பேசும்போது மட்டும் பிசுக்கங்காய் போல் இருக்கும் என் மனைவி .  ' பச்சைப்பிள்ளையை அடிக்கிறாளே முதுகில கறங்கண்டி பின்னுக்கு வருத்தம்  வாதை எண்டு வந்தா என்ன செய்யிறது'  என்ற ஆத்திரம் ஒருபக்கம்ஏன் குழந்தை அழுது குளறாம படுத்திட்டான் என்ற ஆச்சரியம் இன்னொரு பக்கம். அடி வேண்டியவன் தூங்கி விட்டதால் மேற்கொண்டு சண்டையை தொடர வாய்ப்பின்றி போனது . இருந்தாலும் 'இந்த குழந்தைப்பிள்ளைக்கு அடிக்கிறதை பழக்கத்தை  இப்படியே விடக்கூடாது.' என ஒரு பெரிய சண்டை இழுத்து  சட்டிபானை உருட்ட தயாராகினேன். மறு கணம் 'வேண்டாம் ஊரே உறங்கிக்கொண்டு இருக்கிறது . ஊரா உறங்குது ஒரு ஊருக்குள்ள பல மாவட்டங்கள் உறங்கிக்கொண்டு இருக்கிறது.  ஆயுத மோதல்களுக்கு அஞ்சி மடுக்கோயிலுக்கு வந்து  நிம்மதியா படுத்திருக்கிற இந்த அகதி முகாம் சனத்தை எழுப்பி எங்கிட குடும்ப சண்டை காட்டினதா முடியும்' என விட்டுவிட்டேன். சொந்த வீட்டுக்குள் இருந்து - கொஞ்சம் காலை நீட்டி நிமித்தினாலே  பக்கத்து வீட்டு பாயை சுறுட்டும் கால் - அவ்வளவு நெருக்கமான வீடுகள்

'இப்படியே நான் 'சனம் , சனம் 'என்று விட மனைவி - நான் தனக்கு பயந்தவன் - என்ற முடிவுக்கு வந்திருவாள் ' என்ற பயம் வேற உள்ளுக்குள் இருந்தது.  உண்மையில் யாருக்கு யார் பயம் என்று இருவருக்கும் தெரியாது . அதுக்குதான் சண்டை போட வேணுமே . திருமணம்  நடந்ததே  இந்த முகாமில்தான்.   முடிச்சு மூன்று வருசம் தான் ஆகுது அதுக்குள்ள  முக்கால் வாசி காலம் அவள் கற்பவதியாக இருந்து இரண்டு பிள்ளைகள் பெற்று விட்டாள் . உறுக்கவும் முடியாமல் போய் விட்டது. இனியும்  இப்படியே சனம் சனம் என்று விட்டால் எப்பதான் குழந்தைகளுக்கு அடிக்கக்கூடாது என்று புகட்டுவது . சரியான காரணமில்லாமல் வலிந்து சண்டை போட எனக்கு வராது

 நித்திரையும் வர வில்லை 'மெதுவாக சத்தமில்லாத  சண்டை போட்டால் என்ன?' என்று யோசித்தேன். நான் மெதுவா பேசினாலும் அவள் தொண்டை கிழிய கத்துவாள். உடனே சின்னவன் திரும்ப எழும்புவான். ஒருவன் அழுதா காணும் சகோதர பாசம் மற்றவனும் எழும்பி கத்த துவங்குவான்.  கடைசியில் சண்டையை கை விட்டு விட்டு ஆளுக்கொருவரை தூக்கிக்கொண்டு வீட்டால வெளியே வர வேண்டும்  உள்ளே இருந்தால்; ஒருவன் அழுது ஓய மற்றவன் கத்த ஓய்ந்தவன் மீண்டும் தொடங்க விடிய விடிய போட்டிக்கு வாசிக்கும்  நாதஸ்வர சமா போல  தொடரும் .  தொற்று வியாதி பிடிக்கமுன் அழுபவனை  அப்புறப்படுத்தி வெளியே கொண்டு வந்து  சீனி கொஞ்சம் அள்ளி வாயில போட்டால் சில நேரம் தூங்கிவிடுவான். சில சமயம் சீனி புரக்கடித்து இன்னமும் உச்ச சுருதியில் பாடுவதும் நடக்கும். முகாமில்  சாமத்தில வெளிய வருவது என்பது  பூதம் போத்தலால வெளிய வந்த கதை போன்றது

வெளியே அழுகைச்சத்தம் கேட்டால் அருகில உள்ள நாய் குலைக்க வெளிக்கிடும் - வீட்டுக்குள்ளே அழுகை  கேட்டால் குடும்பப்பிரச்சனை என்று நாய்கள் நினைத்திருக்கும் போல - குலைக்கும் நாயின்  ஒலி வட்டத்தினுள் உள்ள மற்றைய நாயும் எழும்பி விடும் இப்படியே தொடர்ந்து விரியும் வட்டம் இறுதியில் அந்த முகாம் எல்லையை தொட்டு நிக்கும். நாய் குலைத்ததும் குமர் பிள்ளை உள்ள சனம் விழுந்தடிச்சு எழும்பி 'யாராவது பூந்திட்டான்களா?' என்று பார்க்கும். அடுத்து மடியில  காசு, பணம் வைச்சிருக்கிற சனம் எழும்பும்.  இறுதியாக வயது போனதுகள் எழும்பி வலம்சலம் போக வெளிக்கிட்டு சேற்றிலயோ செருப்பிலயோ தடக்கி விழுந்து  வைத்திய சாலை கதவை தட்டி நிக்கும். முடிவில் முகாம் பொறுப்பதிகாரி மின் விளக்கை போட்டு விட  கடைசியா முகாமுக்கு அன்று இரவு அரை இரவு தான்.  சேவல் கூவி எழும்புவது போல இங்கு நாய் கூவி  கிழமையில் இரண்டு நாளாவது எழுப்பும். இந்த அரை இரவை இன்று நாம் ஆரம்பித்து வைத்ததாக முடியும் என நினைத்து . கண்ணில் பிழையை வைத்துக்கொண்டு கண்ணாடியை திட்டவது போல ' பிள்ளைக்கு அடிச்சு உமக்கு கை நோகுதா ? இனி அப்படி அடிக்காதயும்' என்று சொன்னால் என்ன என்று நினைத்தேன்.  உடனே 'இதுக்குத்தான் சொல்லுறது ஒரு பிள்ளைக்கும் அடுத்த பிள்ளைக்கும் இடையில இரண்டு வருசமாவது இடைவெளி இருக்க வேண்டும் எண்டு கேட்டாத்தானே இப்ப நான்தான் உத்தரிக்கிறன் ' என ஆரம்பிப்பாள் . எந்தப்பக்கம் காயை நகர்த்தினாலும் வெட்டுத்தான்.  என பேசாமல் எழுந்து சிறு நீர் கழிக்க  போகப்போய் தான் இந்த சின்னத்தாயி வீட்டு சமாச்சாரம் தெரிய வந்தது . சின்னத்தாயி வீட்டுப் பிரச்சனை பற்றி வாயும் திறக்கவில்லை 'உங்களுக்கு ஏன் தேவை இல்லாத வேலை' என்று இரவில் வெளியில போகவும் விட மாட்டாள்  என்று பேசாமல் தூங்கிவிட்டேன்.

மறு நாள் இரவு  மூத்தவன் விவேக் அழ ஆரம்பித்திருக்கிறான். மனைவி கண்ணப்பரின் உத்தியை பயன்படுத்தி நேற்றுப்போலவே அடித்திருக்கிறாள். அவன் அவனின் அப்பா மாதிரி லேசில அடங்க மாட்டான் தொடர்ந்து அழுதிருக்கிறான். இனித்தான் நான் எழும்பப்போகிறேன் . ஏனோ நான் கடைசியாகவே எழும்புவேன்.  எழும்பிய உடனேயே   அழுதவனை தூக்கிக்கொண்டு வெளியே வந்து விட்டேன். மனைவிமேல் இருந்த  நேற்றைய கறள் மேலும் அதிகரித்தது  “ ஏனப்பா சின்னவனுக்கு தெரியுது - அழுதா அடி விழும் - எண்டு ஆனா பொரியவனுக்கு தெரியமாட்டேன் எண்டுதுஎன இன்னும் நான் பழசை மறக்க வில்லை என்ற தொனியுடன்ஒரு குத்தல் கதை விட்டேன்

 “ இவன் தகப்பன் மாதிரி சுணங்கித்தான் புரியும்என்றாள். தேவையா இது எனக்கு. என  விவேக்கின் அழுகையை நிறுத்த    “ இரப்பு விவேக் நாங்கள் சீனி..., சீனி... , சீனி சாப்பிடுவம்"  என்றபடி சீனியை எடுத்து சொண்டில் தடவி விட்டேன்.  அழுகை நின்று விட்டது.  அப்படியே நித்திரையாக்கவும் சின்னத்தாயிவீட்டை கவனிக்கவும் என  வெளியில் வந்தேன்

சின்னத்தாயி வீட்டின் அருகில் போய் பார்க்க முடியாது வயதுக்கு வந்த பிள்ளகைள் இருக்கும் வீடு சனம் பதுமைப்பித்தனை விட புதுமையாக கதை புனைந்து விடும். பகலுக்கு ஒரு கண் இரவுக்கு எத்தனையோ..?.   பிள்ளையை தோளில் போட்டபடியே என் வீட்டு வாசலில் நின்று  பார்வையை சின்னத்தாயி வீட்டு வாசல் வரைநீட்டினேன்நான் நினைத்தது போலவே கதவு திறந்தது. ஐம்புலனாலும் அவதானித்தேன் .நேற்றை விட மிகவும் மெதுவாக ஒரு கால் வெளியே வந்தது பின் காலின் மீதியான ஆளும் வந்தது . முகத்தை மூடி போர்த்தபடி உருவம் வெளியேறியது. இம்மறை கையில் ஒரு தடியும் வைத்திருந்தான். நாய் ஏதும் திரத்தி வந்தால் அடிப்பதற்காக இரவில் அப்படிதான் பலர் போய்வருவார்கள். முற்றங்களை முட்ட வைத்தே இங்குள்ள வீதிகள் விரிக்கப்பட்டிருந்தன.   என்ன ஆச்சரியம் அவன் அந்த தடியை ஊன்றி ஊன்றி நடந்தான் . 'என்ன ஒரு இரவுக்குள் வயதாகிவிட்டதா ?' பார்ப்பதற்கு வயதானவர் நடைபோலவே இருந்தது.  நிச்சயமாக இது நேற்று வந்தவன் இல்லை . பின்தொடரும் எண்ணத்தை கைவிட்டேன். இப்போது எனக்கு சின்னத்தாயி மேலும் சந்தேகம் வந்தது. அவளுக்கும் வாழும் வயசுதான். போன வாரம் தான் அவளுக்கு ஒரு தம்பி பிறந்தான். சின்னத்தாயியின் தாய் தாம்பத்தியம் செய்யும் போது மகள் மட்டும் வேண்டாமா என்ன . ஆனால் இவரை பிடித்து சின்னத்தாயிக்கு திருமணம் எல்லாம் செய்து வைக்கமுடியாது.  இப்படி இரவில் மட்டும் சேர்ந்து வாழாமல் பகலிலேயும் கூட இவளுடன் இருக்கலாம் . அப்படி இருக்கும் இடைக்குடும்பங்கள் பல இம் முகாமில் இருக்கத்தான் செய்கின்றன . அவை இலக்கியவாதிகள் தவிர்ந்த சாதாரண மானவர்களுக்குதான் கண்ணில் படும்.  பகலைக்காட்டிலும் இரவுகளே பலவற்றை புரியவைப்பது போல இருந்து . ஆனாலும் அந்த இளம் பொம்பிளக்கள்ளன்மேல் எனக்கு போபம்  இருந்தது.   என்ன செய்வது என  தெரியாமல் தலை சுற்றியது.  வந்து படுத்துவிட்டேன்.


அடுத்தநாள் பிற்பகல் 4 மணிக்கு மூத்தவன் விவேக்குடன் நல்ல தண்ணிக்கிற்றுக்கு போய் நிற்கும் போது ஒரு இளைஞன் ரொபி பையை கொண்டு வந்து பிள்ளையின் கையில் கொடுத்து விட்டுப் போனான் . ' யார் இவன் ? ஏன் பிள்ளைக்கு ரொபி கொடுக்கிறான் ?.' புரியவில்லை .  ஏதோ விருப்பமாக்கும் மகன் வேற பம்பரம் மாதிரி  குண்டா கருப்பா கண்ணும் மூக்குமா இருப்பான். ஆசையில் கொடுத்து விட்டான் என்று விட்டு விட்டேன். ' ஒருவேளை அந்த இளம் கள்ளன் இவனோ...? - தான் சின்னத்தாயி வீட்டுக்கு வந்து போவதை நான் அவதானித்ததை இவன் கண்டுவிட்டு அதனை வெளியில் சொல்லாமல் இருக்க லஞ்சம் என்றபேரில் பிள்ளைக்கு இனிப்போ..?' - என யோசனை தொட்டது . உடனே திருப்பி கொடுத்திருக்க வேண்டும் இல்லை "இது எதற்கு ?" என்றாவது கேட்டிருக்க வேண்டும் எதுவும் பேசாமல் வேண்டிக்கொண்டது தப்பாகி விட்டது. நாளை இவனே - இவருக்கும் இது தெரியும் -  என என்னை சாட்சிக்கு அழைக்கலாம் அல்லவா .  விளையாட்டு விளையாட்டாக சின்னப்பொடியள் என்னை நீருக்குள் மூழ்கடிப்பது போல இருந்தது .  தடி ஊன்றியவரை விட்டு விட்டு மற்றவனை பிடித்தாக வேண்டும் என உறுதி பூண்டேன்

அன்று இரவு ஒரு மணி ஆகியும் இருவரில் ஒருவனாவது எழும்ப மாட்டானா   என தூங்காமல் விழித்திருந்தேன்.  இரண்டு வண்டன்களில் ஒருவனும் எழும்ப வில்லை . தொடர்ந்து மூன்று நாட்கள் மூவரும் தூங்க நான் மட்டும் விழித்திருந்தேன் . அப்பப்ப சிறுநீர் குச்சிக்கு போய் வந்தேன் யாரையும் காணவும் வில்லை நெடு நேரம் நிற்க முடியாமலும் போய்விட்டது . நாலாவது நாள் இரவு நாய் குலைக்கும் சத்தம் கேட்டது.  சின்னவன் எழும்பி விட்டான். விட்டால்  படுத்திருவான் என பாய்ந்து தூக்கிக்கொண்டு வெளியே வந்து விட்டேன். குழந்தையின் அழுகை நின்று விட்டது. நான் உள்ளே வர மனமில்லாமல் வாசலில் நின்றேன். வேறும் எங்கோ குழந்தை ஒன்றின் அழுகையும் நாயின் குரைப்பும் போட்டிபோட்டது . தாய் அதற்கு மேலால கத்தி தாலாட்டினாள். சின்னத்தாயியின் கதவு மெதுவாக ஆடியது. சற்று உள்ளே வந்து நின்று கவனித்தேன். சரசரப்பு இல்லாமல்   கதவு திறந்தது உள்ளிருந்து ஒரு உருவம் வெளியே காலடி வைத்தது.  நல்ல நிலவு வெளிச்சம் இருந்தாலும் முன்னால் நின்ற பாலமரத்தின் நிணல் வாசலில் படர்ந்திருந்ததால்  அடையாளம் காண முடியவில்லை .  உருவம் மழுமையாக வெளியே வந்து விட்டது.  பெரிசா..? சிறுசா..? கூர்ந்து பார்த்தேன்.  என்ன ஆச்சரியம் இருவரும் இல்லை வேறு ஒருவர். எனக்கு இரண்டு கண்ணும் பிதுங்கி வெளியே வந்து விழுந்து விட்டது நல்ல காலம் உடனே எடுத்து மறுபடி ஒட்டவைத்துக்கொண்டேன் அன்றிரவு  கனவில்.  

அதை பெண் என்று சொல்வதற்கு மனம் கூசுகிறது.  நீண்ட முடி , தூய வெள்ளை ஆடை கால்வரை  வளர்ந்திருந்ததுஉருவம் படமெடுத்த  பாம்பு போல இழுபட்டு சென்றது.  இதயம் துடிப்பதற்கு பதிலாக நடுங்க ஆரம்பித்தது. நான்  பேய் பிசாசு என்று எதற்கும் பயந்தவன் இல்லை . ஆதனால் இந்த சின்னத்தாயி பலருக்கு பேயோட்டி இருக்கிறாள்.  ஓட்டிய பேய் எல்லாம் அவள் வீட்டிலேயே ஒட்டிக்கொண்டதா..? நான் கண்டதெல்லாமே பேயா இதை வெளியில் சொன்னால் என்னை பேயா என்பார்கள்.  பேய் பற்றி அம்மா - மனித கணம் , அசுரகணம்,  தேவ கணம்- இவற்றில்  தேவ கணதிற்குதான்  பேய் தென்படும்  என சொன்னதை ஒருகணமும் நம்பியதில்லை . இன்று பேய் ஆராட்சி பல்கலைக்கழகம் வைத்தாலும் தகும் என தோன்றியது . பல சமயங்களில் சம்பவங்கள் நிகழ்ந்தபின்தான் சாத்தியக்கூறுகள் வெளிப்படுகின்றன. இப்படியும் நடக்கலாம் என அதன்பின்னரே நம்பப்படுகிறது. மனிதம் இயற்கை இயல்புகளை இறுதிவரை பயின்றபடியே இருக்கின்றது. விறைத்தபடி அவளையே இல்லை அதனையே பார்த்துக்கொண்டு நின்றேன் .  மூலையால் திரும்பும்போது அது சின்னத்தாயியின் மூத்த மகள் போல இருந்தது. நான் மீண்டும் நாத்திகனாகி விட்டேன்.  'ஓகோ - இன்று நீ வரவேண்டாம் நான் உன் வீட்ட வாறன்- என்று கூறி இவா போறா போல கிடக்கு  நல்ல விவரமாக பேசிதான் காதல் செய்கிறார்கள். பாவம் அந்த துணையில்லாத தாயை பேய்க்காட்ட எத்தனை திட்டங்கள். இறுதியில் எனக்கும் அல்லவா 'பேய் 'காட்டி விட்டாள் . இதோ  சின்னத்தாயியை எழுப்பி - உன் மூத்த பெட்டையை கூப்பிடு - என  பிடிச்சுக்கொடுத்து பெடியனையும் கண்டு பிடிச்சு காரியத்தை முடிக்கிறன் ' என்ற முடிவுடன் சின்னத்தாயியின் வீட்டு முற்றத்திற்கு பிள்ளையுடன் வந்து மெதுவாக சின்னத்தாயியை கூப்பிட்டேன்

என்ன தம்பி பிள்ளைக்கு திருநீறு போட வேணுமா... இரவில அடிக்கடி எழும்பி அழுறான் போல கிடக்கு  இரு வாறன் - அடி புள்ள.., அடி புள்ள.... , விளக்கை கொழுத்தி நிருநீத்துத்தட்டை எடுத்து வா.." என்றபடி படலையை திறந்து வெளியே வந்தார் சின்னத்தாயி . நல்லதாகப்போய்விட்டது நாம் தலையிடாமல் பிரச்சனை உடையப்போகிறது   இப்போது எல்லாம் தானே தெரிய வரும்.  சின்னத்தாயியின் குரல் கேட்டு எழும்பக்கூடிய  காது கேட்கும் மூத்த பிள்ளை இன்னொரு பிள்ளையை பார்க்கபோய்விட்டதே வாய் பேச முடியாத பிள்ளைதான் இருக்கு. அதற்கு எங்க சின்னத்தாயி சொல்வது  கேட்கப்போகிறது   எல்லா குட்டும் இப்ப உடையும் என  ஆவலோடு காத்திருந்தேன் .  வீட்டின் மூலையில் விளக்கு கொழுத்துப்பட்டது . ஊமைப்பிள்ளை எழுந்து விளக்கை கொழுத்தி  அக்காவைத்தேடியது  நான் குனிந்தபடியே நின்றேன்.

பின் மெல்ல  தலையை நிமிர்த்தி பார்த்தேன். ஒருத்தி விளக்கோடும் இன்னொருத்தி திருநீற்றுத்தட்டோடும் நின்றார்கள்உண்மையிலேயே இது பேய் வீடு என ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டு கண் விழித்தபடி இறந்த சடலம் போல மலைத்து நின்றேன் . சின்னத்தாயி சின்னவன் சீனுவுக்கு திருநீறு போட்டார்.  "எனக்கும் திருநீறு போடுங்கோ " என நன்றாக மேலெல்லாம் போட்டுக்கொண்டு வந்தேன்.  இனி காய்ச்சல் வரும் என தெரிந்தது . பிள்ளை எழும்பினாலும் வெளியே வரக்கூடாது என்ற முடிவுடன்  தூங்கி விட்டேன்.  

மறு நாள் இரவு சத்தம் கேட்டுது. நான் பெரியவனை கட்டிப்பிடித்த படி கிடந்து விட்டேன் . ஆனால் சின்னத்தாயி வீட்டின் முன் பலர் கூடினார்கள். குசு குசு என பேச்சொலியும் கேட்டது . பல பேய்கள் வந்து கூடி  விட்டதா ?, இல்லை என்னைப்போல் பலர் பேயை பார்த்து பயந்து சின்னத்தாயியிடம் திருநீறு போடுகிறார்களா? , நேற்று  சின்னத்தாயி பாவம் என்று நான் உதவ நின்றேன் இன்று சின்னத்தாயி ஊருக்கே  உதவுகிறாளா ?, எனக்கு  கேட்கும் சத்தம் ஏன் மனைவிக்கோ பிள்ளைகளுக்கோ கேட்கவில்லை?. என்னை வெளியே வரவைக்க பேய்கள் கூட்டமாக வருவது போல  நாடகமாடுகிதா?, நான் நிறைய திகில் கதை படித்திருக்கிறேன்  என்னிடம் பேயின் திட்டம்  பலிக்காது என  அசையவில்லை.  இப்போது சின்னத்தாயியின் அழு குரல் மிக தெளிவாக காதில் விழுந்தது . 'இறுதியில் சின்னத்தாயிக்கே பேய் பிடித்து விட்டதா..? வைத்தியரையும் நோய் விட்டுவைக்குமா என்ன 'ஒரு முறை எட்டித்தான் பார்ப்போம்  என எழும்பி வெளியே வந்தேன். நிறைய பேய்கள் சின்னத்தாயி வீட்டின் முன் நின்றன. சின்னத்தாயியின் கதவு ' ' என்று திறந்து கிடந்தது . பலர் விளக்குகளுடனும் நின்றார்கள் . ' அட பக்கத்து விட்டு நந்தினி கூட பயமில்லாம நிக்குது  இன்று ஒரு பேயை நாம் பிடிக்க வேண்டும்,  இல்லை நம்மை பேய் பிடிக்க வேண்டும்'  என  எங்கிருந்தோ ஒரு துணிவு வர சின்னத்தாயி வாசலை நோக்கி நடந்தேன். சின்னத்தாயி தலைவிதி கோலமாக வாசலில் சக்கப்பணிய இருந்து புலம்பிக்கொண்டு இருந்தார் .  என்ன நடந்தது என அருகில் நின்றவரிடம் கேட்டேன். " அந்த இரண்டாவது வாய்பேசாத பிள்ளை இரண்டு மாசம் கர்ப்பமாக இருக்காம் , ஆண்ணில்லாத வீடு என்று ஆரோ  இப்படி செய்து போட்டான்"  என்றார் அவர்.  எனக்கு பரீட்சையில் விடை தெரிந்த கேள்வியை வாசிக்காமல் தவற விட்டமாதிரி  இருந்தது.  'கொஞ்சம் விபரமாக இருந்திருந்தால் முதல் நாளே அவனை பிடித்திருக்கலாம். ' சீ ' கடுமையாக சிந்தித்து எல்லாவற்றையும் கோட்டை விட்டு விட்டோமே ' என  என்மேலே வெறுப்பாக இருந்தது . நான் கண்ட  சம்பவங்களை கூறினால் ஒரு வேளை அவனை பிடிக்க உதவலாம் அல்லவா என யோசித்தேன்.  எதை  எப்படி சொல்வது . கிழவரை சொல்வதா? , இளைஞனை சொல்வதா..? , இல்லை அந்த நீண்ட முடிப்பொண்ணைத்தான் சொல்வதா ?,  இதுற்கு ஒரு பெண்ணும் இரு ஆண்களும்தான்  காரணம் என்று சொல்வதா..? சின்னத்தாயி நேற்று எனக்குப்போட்ட திருநீறு காணாது என்று நினைத்தவிடுவார்.  என அமைதியாக இருந்து விட்டேன்.  முதல் நாளே அந்த பையனை பிடித்து கேட்டிருந்தால் இன்று இப்படி ஒரு நிலைவராமல் தடுத்திருக்கலாம். பாவம் அந்த ஊமைப்பொண். இனி என்ன செய்யப்போகிறது  என நித்திரை இல்லாமமே இரவு கழிந்தது

மறுநாள் சின்னத்தாயியின் கர்ப்பமான மகள்  மடு வைத்தியசாலையில் இருந்து வவுனியா பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டாள் . கரு கலைப்பு வசதி இங்கே இல்லை என அப்போதுதான் எனக்கு தெரியவந்தது.  நான் சின்னத்தாயி வீட்டை அவதானித்தது போல வேறு ஒருவரும் அவதானித்திருக்கிறார் என  கதை அடிபட்டது.  ஓரளவு மன நிறைவு.  ' நம்மைப்போல் இல்லாமல் அவனாவது முழுமையாக பார்திருக்கமாட்டானா  ஒரே கள்ளன் பல வேடங்கள் போட்டு வந்து போகிறான் என அவனுக்காவது தோன்றி  இருக்காதா ?' என எண்ணிக்கொண்டு  பார்த்தது யார் என விசாரித்தேன்கதை நெருப்புகுளம்பு போல என் காதுகளில் நிரம்பியது. - சின்னத்தாயி வீட்டு முற்றத்தையே பார்த்தபடி நான் பல இரவுகள் நின்றதாகவும் , பகலில் கூட நான் அவரின் வீட்டை கடக்கும் போது உற்று உற்று பார்த்ததாகவும், கதை  தெரிய வந்த நேற்று  இரவு கூட  - பயந்து பயந்து வந்து பார்த்ததாகவும் இதற்கு நான் தான் காரணம் - என கதை அடிபட்டதுபோதுமடா சாமி புதுக்குளத்து வெள்ளாண்மை என திகைத்தேன்.  பலர் என் மனைவிக்கு பயந்து ஒழித்து போசிக்கொண்டு இருந்தனர்.   ' மனைவி காதில் பட்டால் என் கதை கந்தல். அவள் காதில விழ முன் நாமே நடந்ததை சொல்லிவிடுவது தான் முறை ' என்ற முடிவுக்கு வந்தேன் . என்னை பேயன் என்று நினைத்தாலும் பறவாய் இல்லை என இரவே முழு கதையையும் மனைவியிடம் ஒப்புவித்தேன். நான் சொல்வதை கவனமாக  கேட்டுவிட்டு பின்பு  கதைக்குமாறு சொன்னதால் - எல்லாக்கதையையும் அமைதியாக கேட்டாள்.  இரவாகையால் அவளின் முகம் எப்படி இருக்கிறது என  பார்க்க முடியவில்லை. நான் முடித்ததும் - மனைவி கருத்த பானை கவிட்ட கத்தரி வெருளியின் சுண்ணாம்பு முகம் போல சிரித்தாள் !.   பின்மங்குனி மாப்பிள்ளை நான் சொல்லுறத வடிவாக்கேழும் " என்றாள். அவள் என்னில் குறை கண்டுபிடிக்கிற எந்த சந்தர்ப்பத்தையும் தவற விட மாட்டாள். நான் வைக்கோல் அடைந்து கட்டிய மிளகாய் வெருளி பேல விறைத்த படி  "நான் எப்படியோ இருந்திட்டுப்போறன் என்னை  நம்புகிறீரா இல்லையா ? “  என்றேன் . அவள் சிரித்தபடிகுமர் பிள்ளைகள் இருக்கிற வீடு ஆம்பிளதுணை இல்லை எண்டு  சின்னத்தாயின்ர தம்பி தங்கச்சி  வந்து படுக்கிறதுகள். தகப்பனும் வந்து துணைக்கு படுப்பார். அனேகமா சின்னத்தாயி தங்கு வேலைக்கு போனா அதுகள் தான் வந்து போறதுகள் . அதைத்தான் நீங்க பார்திருக்கறீங்கஎன்றாள்.  எனக்கு கோபம் அதிகரித்தது "அப்ப அந்த ரொபிக்கு என்ன சொல்லுறீர் என்றேன். “ அதுவா நீங்க பிள்ளையள் அழுதா - சீனி தாறன், சீனி தாறன் - எண்டது கேட்டிருக்கும் பாவம் இந்த மனுசன் ஒரு விசுக்கோத்தையோ , ரொபியையோ குடுக்காம சீனியை சினியை கொடுக்குதே எண்டு வேண்டி தந்திருக்குங்கள் ". என்றள் அசட்டுத்தனமாக. எனக்கு கூட்டத்தின் முன் நிர்வாணமான ஒரு  உணர்வும்  மறுபுறம் கடுப்பும் ஏற்றபட்டது .  “ சரி துணைக்கு படுக்க வந்தவை கள்ளனுக்கு பாதி இரவை கொடுக்கவா பாதியில எழும்பி போனவஎன்றேன்  . அவள் சினந்தபடி  “ விடியத்தான் போறதுகள் இப்படி சாமத்தில யாராவது எழும்பி பின் முகாமே விழித்து  லைட்டும் போட்டா இனி தேவை  இல்லை எண்டு போறதுகளாக்கும் . இது கூட தெரியாம என்னை பிடிச்சுக்கேழுங்க " என்றாள்.  நான்  “  அந்த வாயில்லாப்பிள்ள வயித்தில வளர்வதற்கு யார்தான் காரணம்" என்றேன்.  மனைவி  " உதெல்லாம் இப்ப உங்களுக்கு ஏன்  இழுத்து மூடிக்கொண்டு படுங்கோ சும்மா சாமத்தில தொண தொண என்று மனசரை நித்திரையும் கொள்ள விடாம  எதையும்  முழுசா தெரியாம அரை குறையை வச்சு  கதை கட்டவேண்டியது. கர்ப்பமாம் கர்ப்பம் - பெட்டைக்கு வயித்தில கட்டி எண்டு வவுனியா கொண்டு போயிருக்குதுகள் " என்றபடி மறுபக்கம் சரிந்தாள் மனைவி

      முற்றும்.