பதினொரு பேய்கள்

அ.முத்துலிங்கம்று மாதம் சென்ற பின்னர்தான் தோழர் சிவா சுப்பிரமணியத்துக்கு என்ன பிரச்சினை என்பது புரிய ஆரம்பித்தது. இயக்கத்தில் அவர் சேர்ந்து மூன்று வருடம் ஆகியிருந்தது. அவருடன் சேர்த்து செயல்குழுவில் 11 பேர் இருந்தனர். அவர்தான் யாழ்ப்பாணத்துக்கு பொறுப்பாளர் என்று அறிவிப்பு வந்துவிட்டது. ஆனால் செயற்குழு கூட்டத்தில் செல்வன் கேட்ட கேள்வி அவரை யோசிக்க வைத்தது. அதில் இருந்த நியாயம் அவருக்கும் தெரியும். மற்றக் குழுக்காரர்கள் அவனை அவமானப் படுத்திவிட்டார்கள். எல்லோரிடமும் வாகனம் இருந்தது. துப்பாக்கி இருந்தது. அவர்களிடம் ஒன்றுமில்லை. தலைவர்கள் இந்தியாவில் சொகுசாக உட்கார்ந்துகொண்டு கட்டளைகள் பிறப்பித்தார்கள். எப்படி போராட முடியும்?

யாழ்ப்பாணத்தில் மாத்திரம் எட்டுக் குழுக்கள் இயங்கின. அவர்களுடைய குழுவை ஒருவருமே கணக்கில் எடுப்பதில்லை. யாழ்ப்பாண நூல் நிலையத்தை அரச படையினர் எரித்த அடுத்த மாதம் சுந்தரம் குழுவினர் ஆனைக்கோட்டை பொலீஸ் நிலையத்தை அடித்து நொறுக்கினர். அவர்கள் இயக்கம் என்ன செய்தது? வெலிக்கட சிறையில்
18 போராளிகளை சிங்கள அதிகாரம் கொன்றொழித்தது. அவர்கள் இயக்கம் என்ன செய்தது? வேறொரு இயக்கம் திருநெல்வேலியில் தாக்குதல் நடத்தி 13 ராணுவத்தினரை கொன்றது. ஆயுதமே இல்லாமல் எப்படி ராணுவத்தோடு போராடுவது? அவர்களைப் பார்த்து பின்னாலும் சிரித்தார்கள், முன்னாலும் சிரித்தார்கள்.

'நேற்று நான் உரும்பிராய் காவல் அரணைக் கடந்தபோது இயக்க காவல்காரர்கள் என்னிடம் அடையாள அட்டையை கேட்டார்கள். அவர்களுக்கு நான் இயக்கத்தில் வேலை செய்வது தெரியும். காட்டினேன். கால்சட்டை பொக்கற்றுகளை காட்டச் சொன்னார்கள். நான் இழுத்து வெளியே விட்டேன். அவை மாட்டு நாக்குகள்போல தொங்கின. வாகன இலக்கத்தை கேட்டார்கள். சைக்கிளுக்கு எங்கே இலக்கம் இருக்கு? எனக்கு வெட்கமாய் போய்விட்டது. அவர்களிடம் துப்பாக்கி இருந்தது தோழர். நாங்களும் ஈழ விடுதலைக்காகத்தானே போராடுகிறோம். எங்களை மதிக்கிறார்கள் இல்லை.'

இதைக் கேட்டுக்கொண்டு நின்ற மற்றொரு தோழர் சொன்னார். 'இதுவாவது பரவாயில்லை. எனக்கு நடந்ததைக் கேளுங்கள். என்னுடைய இயக்கத்தின் பெயரைக் கேட்டார்கள். நான் சொன்னேன். ஐந்து எழுத்துக்களா என்று கேட்டார்கள். ஓம் என்றேன். ஆங்கிலத்தில் எத்தனை எழுத்துக்கள் என்று கேட்டார்கள். குத்துமதிப்பாக
26 என்று சொன்னேன். மிச்சம் 21 எழுத்துக்கள் சும்மாதானே இருக்கின்றன. அவற்றையும் சேர்ப்பதுதானே என்று ஒருவன் சொன்னான். மற்றவர்கள் சிரித்தார்கள். எல்லா இயக்கங்களுக்கும் சிரிப்புக் காட்டுவதற்காகத்தான் நாங்கள் இருக்கிறோம்.'

தோழர் சிவாவுக்கு இது புதிதல்ல. அவரை ஒருமுறை சைக்கிளை உருட்டிக்கொண்டு ஒரு மைல்தூரம் நடக்க வைத்து வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். யாழ்ப்பாணத்துக்கு அவர் பொறுப்பாளர் என்பது அந்த இயக்கக்காரர்களுக்கு தெரியும். அவர் காதுபட ஒருவன் மற்றவனுக்கு சொன்னான். 'அண்ண, மூக்கிலே குறுக்காக எலும்பு சொருகிக்கொண்டு, கையிலே கம்பைச் சுழட்டி காட்டு நடனம் ஆடக்கூடத் தகுதியில்லாத ஆட்கள் எல்லாம் இயக்கம் நடத்தினம். கொஞ்சம் நடந்துபோனால் உடல் பயிற்சி கிடைக்கும்.' அந்த அவமானத்தை மறக்க முடியாது. அவர்கள் எல்லாம் வெட்கித் தலை குனிகிறமாதிரி பெரிசாக ஏதாவது செய்யவேண்டும்.

ஒரு வருடம் முன்னர் சொப்பனா இயக்கத்தில் சேர வந்தபோது தோழர் சிவா மறுத்துவிட்டார். 'நான் எப்படி முடிவு செய்யமுடியும். கமிட்டிதான் முடிவு செய்யும்' என்று சொல்லி கடத்தினார். பெண் விடுவதாயில்லை. 'என்ன கமிட்டி? நீங்கள்தானே கமிட்டி' என்று பிடிவாதம் பிடித்தாள். தன் வளைவுகளை மேலும் விஸ்தரித்துக்கொண்டு நின்றாள். தோழர் சிவா பார்த்தார். 'நல்ல அலங்காரம்தான். நெற்றியிலே பொட்டு. காலிலே கொலுசு. கூந்தலிலே மல்லிகைச் சரம். போர்க் கோலத்தில்தான் வந்திருக்கிறீர்.' அவள் முகம் சிறுத்துப் போனது; ஆனாலும் பிரகாசம் குறையவில்லை. 'உங்கள் இடுப்பில் ஒரு துப்பாக்கிகூட இல்லை. எப்போது போர் துடங்கி நீங்கள் புறப்படுவீர்களோ அப்போது நானும் போர்க்கோலத்தில் வருவேன்.' தோழர் சிவாவுக்கு வெட்கமாகப் போய்விட்டது. அவள் நினைவு பின்னர் அவருக்கு அடிக்கடி வந்து போனது.

இன்னொரு பிரச்சினை இருந்தது. இயக்கத் தோழர்களுக்கு புத்திஜீவிகளைப் பிடிக்காதது. மூன்று வருடங்களுக்கு முன்னர் அரவிந்தன் இயக்கத்தில் சேர வந்தபோது எல்லோரும் அவனை துரத்தி கேலி செய்தனர். காரணம் அவன் நடக்கும்போது இறகு பறப்பது போலிருக்கும். அப்படி மெலிந்து நீண்ட குச்சிபோல தேகம். 'ஏகே
47ஐ அவன் தோளில் தூக்கி வைக்க இன்னொருவர் தேவைப்படும்' என்று பகிடி செய்தார்கள். ஏ லெவல் சோதனையில் நாலு பாடங்களிலும் ஏ எடுத்தவன்இ படிப்பு வேண்டாமென்று இயக்கத்தில் சேர வந்திருந்தான். உடல் வலுவானவர்கள் போர் செய்ய ஒன்றையுமே கண்டு பிடித்ததில்லை. அவர்கள் உடலை நம்பியிருந்தார்கள். பலசாலியை வெற்றிகொள்ள ஆயுதம் கண்டு பிடித்தவன் புத்திசாலி. கல்லாயுதத்தை முறியடிக்க கத்தியை கண்டு பிடித்தவன் உடல் வலுவில்லாதவன்தான். கத்தியை வெற்றி கொள்ள துப்பாக்கியை கண்டுபிடித்தவனும் புத்திஜீவிதான். 'அவனைச் சேருங்கள், எங்களுக்கு பலமாயிருப்பான்' என்று தோழர் சிவா பரிந்துரை செய்தார்.

ஒன்றுமே செய்யாமல் இருந்தால் அவர்கள் இயக்கத்தைப் பற்றி எப்படி வெளியே தெரியவரும். வங்கியை கொள்ளை அடிக்கலாம் என்று ஒருவர் சொன்னார். தோழர் சிவாவுக்கு அது விருப்பமில்லை. அப்படி முடிவெடுத்தாலும் எப்படி? அவர்களிடம் ஒரு கறள் பிடித்த துப்பாக்கிகூட இல்லையே. ஒரு துப்பாக்கி இடுப்பில் இருந்தால் ரகஸ்யக் குரலில் பேசினாலும் அது இடிமுழக்கம் போலக் கேட்கும். ஏ லெவல் அரவிந்தன் அருமையான யுத்தி ஒன்று சொன்னான். 'யாழ்ப்பாணம் கோர்ட்டிலே லைசென்ஸ் இல்லாததால் பொதுமக்களிடம் பறிமுதல் செய்த
8 வேட்டை துப்பாக்கிகள் உள்ளன. அதை பூட்டி வைத்திருக்கும் இடமும் எனக்குத் தெரியும். ஓர் இரவிலே அதை கொள்ளையடித்துவிடலாமே.'

அந்த இடத்துக்கு காவலே இல்லை. மறுநாள் இரவு பூட்டை உடைத்து உள்ளே போய் 8 துவக்குகளையும் கைப்பற்றி விட்டார்கள். 'தோழர், தோட்டாக்கள் இல்லை. கொஞ்சம் கறள் பிடித்துப்போய் இருக்கு. என்ன செய்யலாம்?' 'அது பரவாயில்லை. குழாயில் பாதியை வெட்டுங்கள். காவுவதற்கு வசதியாயிருக்கும். தோட்டா இல்லை என்பது எங்களுக்குத்தான் தெரியும். துப்பாக்கிக்கும் தெரியும். குறிபார்க்கப்படும் ஆளுக்குத் தெரியாது அல்லவா?' என்றார் தோழர் சிவா.
11 பேருக்கு 8 துப்பாக்கிகள். இதுதான் ஆரம்பம். உடனேயே செயற்குழுவை கூட்டினார்கள். இந்தியாவிலிருக்கும் மேலிடத்துக்கு அறிவிக்காமல் காரியம் செய்யவேண்டும் என்று தீர்மானிக்கப் பட்டது.

'துப்பாக்கிதான் கிடைத்துவிட்டதே, வங்கியை கொள்ளையடிப்போம்.' இவர் வங்கியை கொள்ளை அடிப்பதிலேயே குறியாய் இருந்தார். இன்னொருவர் 'சிறையை உடைப்போம். ஆறுமாதம் முன்பு மட்டக்கிளப்பு சிறையை உடைத்து போராளிகள் வெளியேறினார்கள். அவர்கள் துணிச்சலில் பாதியாவது எங்களுக்கு வேணும்' என்றார். 'ராணுவ வாகனத்துடன் மோதுவோம்' என்றார் இன்னொரு தோழர். அவர் தோட்டா இல்லையென்பதை மறந்துவிட்டார். 'ராணுவத்துக்கு உதவும் தேசவிரோதிகளைப் பிடித்து வந்து அடைத்து வைப்போம்' என்றார் ஒருவர். அப்பொழுதுதான் தோழர் சிவாவுக்கு புதிதாக மூளையிலே பொறி உண்டாகியது. 'நாங்கள் செய்வது உலகச் செய்தியாக வேண்டும். இலங்கை, இந்தியா, ஐரோப்பா, அமெரிக்கா எல்லாம் எங்களைத் திரும்பிப் பார்க்க வேண்டும். தோட்டா இல்லாத துப்பாக்கியால் செய்யக்கூடிய ஒரே காரியம் ஆட்களைக் கடத்துவதுதான். அமெரிக்காவிலிருந்து சுற்றுலா வரும் ஆளைக் கடத்தினால் உலகப் பிரபல்யம் உடனேயே கிடைத்துவிடும். என்ன கோரிக்கை என்பதை பிறகு தீர்மானிக்கலாம்' என்றார். எல்லோருக்கும் பிடித்துக் கொண்டது. ஜனாதிபதி ரேகன் டெலிபோனில் அவர்களை அழைத்துக் கெஞ்சுவது கண் முன்னே வந்தது. பாதிவெட்டிய துப்பாக்கிகளைத் தூக்கி தலைக்குமேலே பிடித்துக்கொண்டு எல்லோரும் நடனமாடினார்கள்.

இத்தனை சுலபமாக திட்டத்தை செயலாக்கலாம் என ஒருவருமே நினைக்கவில்லை. யாழ்ப்பாணத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த அலென் தம்பதிகள் வசித்தனர். ஒரு மாதம் முன்புதான் திருமணம் செய்து குடிநீர் ஆராய்ச்சி செய்வதற்காக வந்திருந்த ஸ்டான்லி அலெனுடன் புது மனைவி மேரியும் இருந்தார். இருவரும் அமெரிக்காவின் ஒஹையோ மாநிலத்தின் ரூஃலின் கம்பனிக்காக வேலைசெய்தனர். 'சுற்றுலாப் பயணிகளுக்கு காத்திருக்கத் தேவையில்லை, இவர்களையே கடத்தலாம்' என்று ஏ லெவல் அரவிந்தன் சொன்னான். அப்படியே முடிவும் எடுக்கப்பட்டது.

வியாழக்கிழமை,
10 மே 1984 அன்று மாலை ஆறுமணிக்கு இருவர் தம்பதிகள் வசித்த குருநகர்இ பீச் ரோட் 19ம் வீட்டுக்கதவைத் தட்டினார்கள். நூலகத்துக்கு நன்கொடை பெற வந்ததாகச் சொன்னதும் அலென் அடுத்தநாள் காலை வந்து சந்திக்கச் சொன்னார். மறுபடியும் இரவு 10 மணிக்கு போய் கதவை தட்டினார்கள். அவர்கள் திறக்கவில்லை. தம்பதிகள் ஜேம்ஸ் பொண்ட் படம் ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவர் முன்கதவை தட்டிக்கொண்டிருக்க இருவர் பின் கதவை உடைத்து உள்ளே புகுந்தார்கள். துப்பாக்கிகளைக் கண்டதும் தம்பதிகள் வெலவெலத்து விட்டார்கள். அலென் கட்டை கால்சட்டையும் ஒரு பனியனும் அணிந்திருந்தார். மனைவி மெல்லிய வெள்ளை உடையில் காணப்பட்டார். இருவருடைய கண்களையும் கட்டி அவருடைய வாகனத்திலேயே அவர்களை ஏற்றிக் கடத்தினார்கள்.

மாறனுக்கு காரோட்டத் தெரியும் ஆனால் லைசென்ஸ் கிடையாது. மைக்கேல் கொழும்புக்காரன். அவனிடம் லைசென்ஸ் இருந்தது, ஆனால் யாழ்ப்பாண வீதிகள் பழக்கமில்லை. மைக்கேல் ஓட்ட மாறன் பக்கத்தில் இருந்து வழிசொல்லிக்கொண்டு வந்தான். போராளிகள் காரிலே முகமூடிகளைக் கழற்றினார்கள். மைக்கேல் சொன்னான் 'நாங்கள் முகமூடி அணிந்தது வீண். இவர்கள் எங்களை அடையாளம் காணவே முடியாது. எல்லா முகங்களும் இவர்களுக்கு ஒன்றுதான்' என்றான். மண்டை தீவுஇ மணல்வீதி
18ம் நம்பர் வீடு ஒரு தோழருடையது. அங்கே தம்பதிகளை அடைத்துவைத்தனர். இரண்டு காவலாளிகள் துவக்குகளுடன் வீட்டிலேயே தங்கினர். மற்ற இருவரும் வாகனத்தை ஓட்டிச்சென்று சேந்தன்குளம் கடற்கரையில் நிறுத்திவிட்டு மெதுவாக வீடு போய்ச் சேர்ந்தனர். மாறன் 200 றாத்தல் எடை இருப்பான். காலையும் மாலையும் உடற்பயிற்சி செய்து உடம்பை பயில்வான்போல முறுக்கி வளர்த்து வைத்திருப்பான். முதலைக் கண்ணீர் தெரியும். இவனுக்கு முதலைச் சிரிப்பு. சும்மா இருக்கும்போதே சிரிப்பது போன்ற முகம். கழுத்துக்கு மேலே அவன் உடம்பு வேலை செய்வதில்லை. ஆனால் அன்று அவன் கடற்கரையில் வாகனத்தை நிறுத்தியது அவன் வாழ்க்கையில் அபூர்வமாக புத்தியை உபயோகித்து செய்த முதல் காரியமாகும்.

அடுத்த நாள் காலை
9 மணிக்கு ஒரு பையன் யாழ்ப்பாண அரசாங்க அதிபரிடம் சென்று ஒரு கடிதத்தை கொடுத்துவிட்டு ஓடினான். அவர் கடிதத்தை திறந்து பார்த்ததும் நடுநடுங்கிவிட்டார். அது இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுக்கு எழுதப்பட்டிருந்தது. சொற்குற்றம் பொருட்குற்றத்துடன் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கடிதத்தில் சொல்லப்பட்ட விசயம் மட்டும் குற்றமற்றதாக இருந்தது. அதன் சுருக்கம் இதுதான்.

 • 1. அமெரிக்க உளவுப்பிரிவைச் சேர்ந்த ஸ்டான்லி அலென் தம்பதியினரை கடத்தியிருக்கிறோம். அவர்களை விடுதலை செய்வதற்கான நிபந்தனைகள்.

  2. மட்டக்கிளப்பு சிறையில் அடைத்து வைத்திருக்கும் 20 விடுதலைப் போராளிகளை உடனே விடுதலை செய்யவும். போராளிகளின் பட்டியல் இணைக்கப்பட்டிருக்கிறது.

  3. இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்களை காசாகவோ தங்கமாகவோ தமிழ்நாடு அரசின் வசம் எங்கள் சார்பில் ஒப்படைக்கவேண்டும்.

  4. அவகாசம் 72 மணி நேரம் மட்டுமே. தவறினால் தம்பதிகள் சுட்டுக் கொல்லப்படுவர்.

  இப்படிக்கு

  மக்கள் விடுதலைப் படை
   

கடிதம் கொடுத்த சில மணி நேரங்களிலேயே விசயம் உலகச் செய்தியாகிவிட்டது. இலங்கை பத்திரிகைகள் எழுதின. ரேடியோக்கள் அலறின. திருச்சி வானொலி முதலில் செய்தியை அறிவித்தது. பிபிசி தமிழோசை தொடர்ந்தது. இங்கிலாந்து பத்திரிகைகள் எழுதின. நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டதாக அமெரிக்காவிலிருந்து ஓர் அனுதாபி டெலிபோனில் தகவல் சொன்னார். இலங்கை பாதுகாப்பு அமைச்சராக இருந்த அதி புத்திசாலி லலித் அத்துலத்முதலி, நிருபர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு கேட்ட கேள்விக்கு 'கடத்தல்காரர்களுக்கு என்னுடைய பதில் 'காதைப் பிளக்கும் மௌனம்' என்றார். பின்னர் அவருடைய புத்தி சாதுர்யத்தின் கனம் தாங்க முடியாமல் வாயை திறந்தார். 'கடத்தல்காரர்களின் வாகனம் சேந்தன்குளம் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அலென் தம்பதியினரை இந்தியாவுக்கு கடத்திவிட்டார்கள். இங்கே தேடுவதில் என்ன பிரயோசனம்? இந்தியா கடத்தல்காரர்களுக்கு துணைபோய்விட்டது' என முதல் கணையை ஏவினார்.

அமெரிக்க உபஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் இந்திரா காந்தியை சந்திப்பதற்காக டெல்லி வந்திருந்தார். 'தமிழ்நாடு அரசு கடத்தல் பணத்தை அவர்கள் சார்பாக பெறும்' என்று எழுதியது இந்திரா காந்திக்கு அவமானகரமாக இருந்தது. இலங்கை ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனா இந்திய தூதர் சாட்வாலை நெருக்கினார். உலகம் முழுக்க பரபரப்பாகியிருந்தது. ஆனால் ஒருவருக்கும் மண்டைதீவு, மணல்வீதி
18ம் நம்பர் வீட்டை சோதிக்கவேண்டும் என்று தோன்றவில்லை. அது மிக மிக அமைதியாக இருந்தது. உரும்பிராய் வேம்பன் ஒழுங்கையில் இருக்கும் கல்வீட்டைச் சோதிக்கலாம் என்றும் ஒருவருக்கும் தோன்றவில்லை. அங்கேதான் தோழர் சிவா இருந்தார். அது கலகலப்பாகவும் கொண்டாட்டத்துடனும் இருந்தது. காரணம் ஒரு வருடம் முன்னர் இயக்கத்தில் சேர வந்த சொப்பனா வீட்டைவிட்டு வெளியேறி இயக்கத்தில் இணைந்துவிட்டார். திடீர் முடிவுக்கு என்ன காரணம் என்று தோழர் சிவா கேட்டபோது 'போர் துடங்கிவிட்டதே' என்றார். திருச்சி வானொலியை கேட்டதிலிருந்து சொப்பனா வானிலிருந்து கீழே இறங்கவில்லை.

தோழர் சிவா ரேடியோவை ஒரு காதில் வைத்தபடியே இருந்தார். துப்பாக்கிதாரிகள் கடத்தியதாக பிபிசி சொன்னது அவர் வாழ்நாளில் கிடைத்த பேறு. மூன்று நாள் முடியமுன்னரே அவர் நினைத்ததுபோல உலகப் புகழ் கிடைத்துவிட்டது. 'அது என்ன, சொப்பனா? உம்முடைய அப்பாவுக்கு வேறு பெயர் கிடைக்கவில்லையா?' இறுக்கமான அவர் முகத்தில் நிரந்திர புன்னகை வந்துவிட்டது. அவள் தலைகுனிந்தாள். 'பிடிக்கவில்லையா?' 'அப்படிச் சொல்லுவேனா? நல்ல பெயர்தான், பொருள் தெரியவில்லை.' 'சொப்பனம். சொப்பனம் என்றால் கனவு. கனவானவளே என்று அர்த்தம். கனவிலேதான் நான் ஒருத்தருக்கு கிடைக்கக்கூடியவள். 'சொப்பன வாழ்வில் மகிழ்ந்து' என்ற பாடலைக் கேட்டதில்லையா? சிவகவி படத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடியது. அந்தப் படத்தை அப்பா 9 தடவை பார்த்தாராம். அதுதான் சொப்பனா என்று வைத்திருக்கிறார்.' 'அப்பாடி, உம்முடைய பெயரில் இத்தனை விவரம் இருக்கா?' 'அடுத்த வரியில் உங்கட பெயர் வருகுது.' 'அது என்ன?' 'சுப்ரமண்ய ஸ்வாமி உனை மறந்தேன்.' அவரைக் கூர்ந்து பார்த்துக்கொண்டு 'என்னை மறப்பீர்களா?' என்றாள். எட்டுத் துப்பாக்கிகளையும் யாரோ பறித்துவிட்டதுபோல நிராயுதபாணியாக நின்று முத்தமே படாத அவள் முகத்தை ஆராய்ந்தார். எங்கே தொடங்கலாம் என்று தோழரால் முடிவுக்கு வரமுடியவில்லை.

ஞாயிறு பகல் முடிந்து இரவு தொடங்கியது. விடிந்தால் திங்கள் காலையாகிவிடும். 72 மணி நேரம் கெடு நெருங்கியது. பிணைக் கைதிகளை சுடவேண்டும் அல்லது விடுவிக்க வேண்டும். ஞாயிறு இரவு அலென் தம்பதியினரை பார்க்க தோழர் சிவா போனார். மிகப் பரிதாபமான காட்சி. அவர்கள் இருவரும் நிலத்திலே உட்கார்ந்து ஐஸ்கிரீம் கூம்பை நக்கிக்கொண்டிருந்தனர். ஒரு போராளியின் மனைவி பக்கத்திலே நின்று சுளகினால் விசுக்கிக்கொண்டிருந்தார். அவர்கள் உடம்பிலே வியர்வை ஆறாக ஓடியது. பயமாக இருக்கலாம். தாங்கமுடியாத வெக்கையாகவும் இருக்கலாம். 'எல்லாம் வசதியாக இருக்கிறதா? 'ஆமாம் இருக்கிறது. நன்றி.' என்றார்கள். இரண்டு நிமிடத்தில் 15 தடவை நன்றி சொன்னார்கள். ஐஸ்கிரீம்தான் அவர்களின் கடைசி உணவாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் ஒருவரை ஒருவர் பார்த்தபடியே சாப்பிட்டார்கள். தோழர் சிவா சொன்னார். 'உங்களைக் கொல்லமாட்டோம். நாங்கள் காட்டுமிராண்டிகள் அல்ல. உரிமைக்காக போராடுகிறோம். ஒருகாலத்தில் ஜோர்ஜ் வாஷிங்டன் தலைமையில் பிட்டிஷ்காரரை எதிர்த்து உங்கள் தேசம் விடுதலைக்காக போராடினது அல்லவா? அதுபோலத்தான் இதுவும். பொறுத்துக்கொள்ளுங்கள்.'

அன்று இரவு இந்திரா காந்தி அமெரிக்க தம்பதிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார். எம்ஜிஆர் பொலீஸ் மா அதிபரை அழைத்து விவகாரத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரும்படி கட்டளையிட்டார். கே.மோகன்தாஸ் செயல்வீரர் என்று பெயர் எடுத்தவர். இயக்கத் தலைவர் பத்மநாபாவையும் அவருடைய உதவியாளர்களையும் கைது செய்து சென்னை ஹொட்டல் அறை ஒன்றில் அடைத்தார். 'அங்கே அலென் தம்பதிகள் கொலை செய்யப்படும் அதே நேரம் இங்கே நீங்கள் அனைவரும் கொல்லப்படுவீர்கள்' என்று கடைசி எச்சரிக்கை விடுத்தார்.' 'அலென் தம்பதிகள் விடுவிக்கப்பட்டுவிட்டனர்' என்று பத்மநாபா உத்தியோகபூர்வமாக ரேடியோவில் அறிவித்தார். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆள் கடத்தல் விவகாரம் முற்றுப்பெற்றது.

வேறு வழியில்லை.
14 மே1984 திங்கள் இரவுசரியாக 8.45 மணிக்குஅலென்தம்பதிகளை யாழ்ப்பாணம் தேவாலயத்தின்ஆயரிடம்இயக்கத்தினர்ஒப்படைத்தனர். தம்பதிகளுக்கும் இயக்கத்தினருக்கும் ஆயர் இஞ்சிக் கோப்பி வழங்கி கொண்டாடினார். அதேசமயம்உரும்பிராய் வேம்பன் ஒழுங்கை கல்வீட்டில் தோழர்சிவாஅளவுமீறிய உற்சாகத்தில் இருந்தார். இயக்கம் உலகச் செய்தியாக்கிவிட்டது. மூன்று நாட்களில் சொப்பனா தோழருடையஇரும்புஇதயத்தைபிளந்துஉள்ளே நுழைந்துவிட்டாள். கடத்தல் வெற்றிகரமான முடிவை எட்டியபோது அவரைக் கட்டிப்பிடித்து பெரிய முத்தம் ஒன்று கொடுத்தாள்.

தோழர் சிவா மறுபடி சொப்பனாவை அணைத்தார். அன்று இரவு அது 17வது தடவை. அவள் அவருடைய தலைமுடியை ஏழு குதிரை வேகத்தில் இழுத்தபடி முன்னேறினாள். அவள் கன்னமும், உதடுகளும் நெற்றிப் பொட்டும் ஒரே சிவப்பு நிறத்துக்கு மாறியிருந்தன. 'ஓ சொப்பனா, சொப்பனா' என்றார் தோழர் சிவா. அவருக்கு அந்தப் பெயரை பலதடவை உச்சரிக்க வேண்டும்போல தோன்றியது. அவர் குனிந்து தன் கால் பெருவிரலை பிடித்தார். 'என்ன? என்ன?' என்று பதறினாள் சொப்பனா. நேற்று மதில் பாய்ந்தபோது காயம் என்றார். 'இங்கேயா?' என்று பெருவிரலை தடவினாள். 'ஓமோம்' என்று தலையாட்டினார். அங்கே முத்தம் பதித்தாள். 'இங்கே?'' என்று கணுக்காலை தடவினாள். அவர் 'ஓமோம்' என்று சொல்ல அங்கே முத்தம் பதித்தாள். 'இங்கே?' முழங்காலை தடவினாள். 'ஓமோம்.' அங்கேயும் முத்தம் பதித்தாள். அவள் முத்தங்கள் மேல்நோக்கி ஏறின. உடம்பின் உறுப்பின் பெயர்களும் மாறியபடியே வந்தன.

புத்திஜீவிகளுக்கு ஒரு பழக்கம் உண்டு. சமய சந்தர்ப்பம் தெரியாது. ஏ லெவல் அரவிந்தன் பதற்றமாக உள்ளே நுழைந்தான். 'நீங்கள் ஆள் கடத்தல் வெற்றி என்று சொல்லி கொண்டாடுகிறீர்கள். இது முழுத்தோல்வி அல்லவா? வெளியிலே தலைகாட்ட முடியவில்லையே?'

'என்ன தோழர் இப்படிச் சொல்கிறீர்? எங்களுடைய வெற்றியை குறைவாக எடைபோடுகிறீர். இன்று நாங்கள் உலகச் செய்தி. இலங்கைப் பேப்பர்கள்இ இந்தியப் பேப்பர்கள், அமெரிக்க பேப்பர்கள் எல்லாம் இதே செய்திதான். பெருமைப்படும் நாள் இது.'

'பெருமை கிடக்கட்டும். நாங்கள் எதற்காக கடத்தினோம்? அந்தக் காரணம் நிறைவேறியதா? அதுவல்லவா முக்கியம் தோழர்.'

'அதிலென்ன சந்தேகம். உலக நாடுகள் எமது இயக்கத்தின் செயல்பாடுகளைக் கண்டு வியப்பு மேலிட்டு நிற்கின்றன. இது சாதனையல்லவா? ஆக
11 பேருடன், 8 வெட்டிய பாதி துப்பாக்கிகளுடன், 12,400 ரூபாய் செலவில் உலக சாதனை படைத்திருக்கிறோம். தோழரே, நீர் ஒரு வரலாற்றுப் புள்ளியில் நிற்கிறீர்.'

தோழர் அரவிந்தன் கீழே பார்த்தார். அவருக்கு புள்ளி தெரியவில்லை. 'உங்களுக்கு புளிய மரத்து பேய் கதை தெரியுமா?' என்றார்.

'இது கதை பேசும் நேரமில்லை. கொண்டாடும் நேரம் தோழர். சுருக்கமாகச் சொல்லுங்கள்.'

'ஒரு வீட்டுக்காரர் முன் வளவில் இருந்த புளியமரத்தில்
10 பேய்கள் குடியிருந்தன. ஒருநாள் வீட்டுக்காரர் புளியமரத்தை வெட்டி எள் விதைக்கத் தீர்மானித்தார். அவருக்கு 10 மூட்டை எள் கிடைக்கும். இதைக் கேள்விப்பட்ட பேய்கள் அலறியடித்துக்கொண்டு அவரிடம் வந்தன. 'ஐயா, மரத்தை வெட்டவேண்டாம். நாங்கள் எங்கே போவோம்? உங்களுக்கு வருடத்துக்கு 10 மூட்டை எள் தந்துவிடுகிறோம்.' வீட்டுக்காரர் சம்மதித்தார். சில வருடங்கள் ஓடினதும் ஒரு புதுப்பேய் வந்து சேர்ந்தது. அது சொன்னது, 'இது கேவலம். மனிதன் அல்லவா பேய்க்கு பயப்படவேண்டும். நான் அந்த மனிதப் பதரிடம் பேசுகிறேன்' என்று வீறாப்பாய்ப் போனது. வீட்டுக்காரர் மாட்டுக்கு சூடுபோட இரும்புக் கம்பியை நெருப்பில் பழுக்க காய்ச்சிக்கொண்டு இருந்தார். பேயை கண்டதும் அவர் கையில் சூட்டுக் கம்பியுடன் பேச வந்தார். பேய்க்கு நாக்குழறியது. 'நான் புதுப்பேய். நாங்கள் 11 பேய்கள். இனிமேல் 11 மூட்டை எள் – இல்லை, இல்லை- இனிமேல் 11 மூட்டை எள்ளை எண்ணெயாகவே தருகிறோம்.'

'என்ன சொல்ல வருகிறீர், தோழர்? விளக்கமாகச் சொல்லமாமே.'

'நாங்கள் கேட்ட பணயப் பணம்
2 மில்லியன் டொலர். அது கிடைக்கவில்லை. சிறையில் இருந்து 20 போராளிகளை விடுவிக்கவேண்டும். அதுவும் நிறைவேறவில்லை. மாறாக சிறையில் அடைத்த போராளிகளின் தொகை 22 ஆக கூடியிருக்கிறது.'

'அது எப்படி?' 'நாங்கள் விடுதலை செய்யக் கோரியவர்களின் பட்டியலில் சிலர் ஏற்கனவே விடுதலையாகி வெளியே இருந்தனர். அவர்களையும் இன்னும் சிலரையும் பொலீஸ் மறுபடியும் பிடித்து சிறையில் அடைத்துவிட்டது. எதற்கு என்று கேட்டதற்கு அப்பொழுதுதானே உங்களை விடுதலை செய்யலாம். அதுதானே கோரிக்கை' என்றார்களாம். இப்பொழுது சிறையில் இருப்பவர்களின் எண்ணிக்கை
22.'

'அது இருக்கட்டும், தோழர். போராட்டத்தில் ஒன்றிரண்டு பின்னடைவுகள் ஏற்படும். அது இயற்கை. இலங்கை சரித்திரத்தின் திசையை உடைத்திருக்கிறோம்.'

'ஓம் தலைவா.'

'இனிமேல் எங்கள் போராட்டம் உலகமயமாக்கப்பட்டுவிடும். நகர்வுகள் இல்லை. பாய்ச்சல்தான்.'

'ஓம் தலைவா.'

'புதிய பெண்கள் அணி துவங்கப்பட்டுவிட்டது. அதன் தலைவி இவர்தான், சொப்பனா.'

அவசரமாக தலையை ஒதுக்கி, சேலையை நேராக்கி, உதட்டுக் காயத்தை மறைத்தவாறு சொப்பனா உடம்பை விறைப்பாக வைத்துக்கொண்டு செருப்புக் காலில் நின்றார்.

'ஓம் தலைவா.'