முடத்தெங்கு

கலாநிதி பால.சிவகடாட்சம்


வாருங்கோ சேர். உங்களுக்கு செக்கண்ட் பீரியட் ப்ரீ. எனக்கு தேர்ட் பீரியட்தான் ப்ரீ. உங்கள் வீடு பக்கத்தில் என்றபடியால் லஞ்சுக்கு நீங்கள் வீட்டுக்குப் போய்விடுவீர்கள். இப்படிச் சந்தித்தால்தானே நாங்கள் ஏதாவது பேசிக்கொள்ளமுடியும். இன்றைக்கு வகுப்பில பிள்ளைகள் என்ன அமைதியாக இருக்கிறார்கள் என்றுதானே பார்க்கிறீர்கள். ரெஸ்ற் ஒன்றும் நான் கொடுக்கவில்லை. கொடுக்கிறதில் ஒரு பிரச்சனை இல்லை. ஆனால் முப்பது பேரின் ஆன்ஸ்வெர் பேப்பர்களையும் திருத்திமுடிக்குமுதல் போதும் போதும் என்றாகிவிடும்.

பாடப்புத்தகத்தில் இந்த இந்தப் பக்கங்களைப்படித்துவிட்டு இத்தனையாம் பக்கத்திலுள்ள கேள்விகளுக்கு விடை எழுதுங்கள் என்று சொல்லிவிடுவன். ரெஸ்ற் குவிஸ் என்று எழுதாமல் இப்படி எழுதி மார்க்ஸ் வாங்குவதில் பெடியங்களுக்கும் சந்தோசந்தான்.

இந்தக் கிளாஸ் அசைன்மென்ற்றுக்கு எப்படி மார்க்ஸ் போடுகிறேன் என்றுதானே யோசிக்கிறீர்கள். பத்துகேள்விகளுக்கும் விடையளித்திருந்தால் பத்துக்குப் பத்து என்று மார்க்ஸ் போடுவன். அஞ்சுக்கு விடை எழுதியிருந்தால் அஞ்சுமார்க்ஸ் தான் கிடைக்கும். இரண்டு மூன்று கேள்விகளுக்கான விடைகளைப் படித்தால் போதும் அவன் சரியா எழுதியிருக்கிறானா இல்லையா என்பது தெரிந்துவிடும். எல்லாவற்றையும் படித்துப் பார்த்துவிட்டுத்தான் மார்க்ஸ் போடவேண்டும் என்ற அவசியம் இல்லை.

அங்க என்ன கதை. என்ன? இறேசர் கேட்டனியோ? ஏதாவது தேவையென்றால் என்னைத்தான் கேட்கவேணும். அங்க உங்களுக்குள்ளே கதைக்கக்கூடாது. விளங்குதோ?

அதுசரி சேர். நம்முடைய அரசியல் தலைவர்கள் இனி என்ன செய்யப்போகினமாம். அரசாங்கம் எங்களுக்கு ஒன்றும் கொடுக்கப்போறதில்லை. பிற நாடுகளை நம்பிப்பிரயோசனம் இல்லை. இதைக்கேளுங்கோ சேர். இன்றைக்கு 65 வருடங்களுக்கு முன்னர் தோட்டத் தொழிலாளரின் குடி உரிமையைப்பறித்து அரசாங்கம் அவர்களை நாடற்றவர்களாக்கியபோது எந்த ஒரு நாடாவது கேள்வி எழுப்பியிருக்குமா? அல்லது அவர்களுக்கு ஆசைவார்த்தைகூறி கூலிகளாகக் கூட்டிவந்து தேயிலைத் தோட்டங்களும் ரப்பர்த் தோட்டங்களும் உருவாக்கிப் பணம்பண்ணிய நாடுதான் ஏதாவது கேள்வி எழுப்பியதா? அது ஒன்றும் மனித உரிமை மீறல் இல்லையா? நூற்று ஐம்பது வருடங்களுக்கும் மேலாக மாட்டுக்கொட்டிலிலும் கேவலமான லைன்களில் வாழ்ந்து முடித்த சனத்துக்கு இனிமேல்தான் வீடுகட்டிக்கொடுக்கப்போகினமாம். பேப்பரில படித்திருப்பியள்தானே.

ஐம்பது அறுபது வருசத்துக்கு முந்திய நிலைவேறு இப்ப நிலை வேறு என்று சொல்லுறியள் ஒப்புகொள்கிறேன். ஆனா இதைக் கேளுங்கோ இஞ்ச அகதியா வந்த ஒருவர் மூன்றுவருசம் இருந்துவிட்டால் அவருக்குக் சிற்றிசன்ஷிப். கிடைத்துவிடும். ஆனால் எத்தனை நாடுகளில எங்கட சனம் எத்தனை வருசமாய் அகதிகளாக இருக்குதுகள் அதுகளுக்கு குடி உரிமை கொடுக்கவேணுமெண்ட எண்ணம் அந்த நாடுகளுக்குத் தோன்றவில்லையே.

ஆரது என்ன கேள்வி விளங்கவில்லையோ? எந்தக் கேள்வி. அதில் விளங்கிக்கொள்ளுறதுக்கு ஒண்டும் இல்லையே. நேரடியான கேள்விதானே. கேள்வியை ரெண்டு மூன்று தரம்வாசி. அப்படியும் விளங்காட்டி அதைவிட்டுவிட்டு அடுத்த கேள்விக்குப் போ.

ஹிஸ்ரரி பாடம்தானே சேர் . இதில விளங்கப்படுத்துகிறதுக்கு என்ன இருக்குது. பாடப்புத்தகத்தை வாசித்து விளங்கிக்கொண்டால் போதும். இந்தக்காலத்துப் பிள்ளகளுக்குப் புத்தகம் வாசிக்கிறதுக்கு நேரமோ பொறுமையோ இல்லை. எல்லாம் ஐபொட்டும் ஐபட்டும் என்று நேரத்தை வீணாக்குதுகள்.

எங்கவிட்டனான் சேர். ஓம் அதுதான். எங்கெல்லாமோ எத்தனையோ வருஷங்களாக அகதிகளாகக்கிடந்து அலையுதுகள். அவையளுக்குக் குடியுரிமைகொடுக்கவேண்டும் என்று எந்தநாட்டுக்காரன் மனப்பூர்வமா விரும்புறான். இயலுமானவரை கலைச்சுவிடத்தான் பார்க்கிறான். இஞ்ச எங்க மனிதாபிமானம் பேசுது. எல்லாம் போலிவேஷம் தான் பாருங்கோ.

எங்களிடம் பெற்றோல் மட்டுமா இல்லை. குடிக்கத் தண்ணீரும் தான் இல்லை. மற்றவர்களிடம் சம்பளத்துக்கு வேலைசெய்து பிழைப்பவர்கள். எங்களுக்காக ஆரு உண்மையாகப் பாடுபடப் போகிறாங்கள். ஏதாவது ஒரு நாட்டில யாராவது எங்களுக்காகப் பேசுறாங்கள் என்றால் எல்லாம் எலெக்சனில எங்களுடைய வோட்டுகளைக் கறக்கிறதுக்காகத்தான். நான் சொல்லுறது சரிதானே.

யூதர்கள் வலிமைமிக்க நாடுகள் பலவற்றின் ஆட்சியாளர்களைத் தங்கள் கைக்குள் வைத்திருக்கிறார்கள். பலஸ்தீனியருக்கு எண்ணெய்வளமிக்கநாடுகளின் ஆதரவு இருக்குது. இரண்டு பேருமே ஒவ்வொருவிதத்தில் பலசாலிகளாக இருப்பதால் எவருக்கும் முழுவெற்றியோ முழுத்தோல்வியோ ஒருநாளும் கிடைக்கப் போவதில்லை. தலாய்லாமா தங்களுடைய நாட்டை சீனாக்காரன் பிடிச்சு ஆளுவதாக ஐம்பது வருஷமா அழுதுகொண்டு திரியிறார். இந்த விடயத்தில சைனாக்காரனுக்கு எதிரா எவனாவது கைதூக்குவான் என்று நினைக்கிறியளே. தலாய்லாமா அழுதுகொண்டே இருக்கவேண்டியதுதான்.

என்ன ஜேசன்? பத்தாவது கேள்விக்குப் புத்தகத்தில் பதில் இல்லையோ. அந்தக்கேள்வி உங்களுடைய திங்கிங் ஸ்கில்சை ரெஸ்ற் பண்ணுவதற்காகத்தான். நீயாக யோசித்துத்தான் அதுக்கு விடை எழுதவேணும். புத்தகத்தில் பதில் கிடைக்காது.

நல்லா யோசிச்சுப்பாருங்கோ சேர். நாங்கள் எண்ணெய்வளமிக்க நாடுகளின் ஆதரவு பெற்ற பலஸ்தீனியர்கள் இல்லை. எங்களுக்கு வல்லரசு நாடு ஒன்று கூட ஆதரவு இல்லை. அதே சமயம் நாங்கள் எங்கள் உரிமைக்காகப் போராடுகிறது சீனா போன்ற ஒரு வல்லரசோடு அல்ல. நாங்கள் இரண்டும் கெட்டான். எங்கள் பிரச்சனைக்கான தீர்வு என்றுமே கிடைக்காமல் போகலாம்.. சிலநேரம் ஒரு நல்ல தீர்வு கிடைக்கலாம். அல்லது எங்களது இனமே அழிந்துபோய்விடலாம் காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

நூற்றிஐம்பது வருசங்களுக்கு முன்னரேயே டார்வின் சொல்லி விட்டார் பாருங்கோ. வலிமையுடையதுதான் வாழ்வுக்குரியது. மற்றவை எல்லாம் அழிந்துபோக வேண்டியவைதான். இதுதான் இயற்கையின் நியதி.

அப்போ மாஸ்ரர். வகுப்பு முடியப்போகுது. உங்களுக்கும் அடுத்த வகுப்பு எடுக்கவேணும். நாளைக்குச் சந்திப்பம்.


பல்வகை உதவிவழிபடு பண்பின்
அல்லோர்க்கு அளிக்கும் அது முடத்தெங்கே
- நன்னூல்