நியாயப்படுத்துகின்ற கெட்டிக்காரர்கள்

எஸ்.முத்த குணரத்தினம்                          

யாழ்ப்பாணம் என்ற (b)போர்ட் போட்டவாறு அந்த பஸ் மெதுவாகத்திரும்பி ஸ்ராண்டில் அதற்குரிய இடத்தில் வந்து நின்றதை வரிசையில் நின்று அவன் பார்த்துக்கொண்டிருந்தான். தவம் கிடந்த கொக்குகளின் பரபரப்புடன் மீனைப்பிடிக்கச்செல்லும் வேகத்துடன், திடீர்ப்பாய்ச்சலோடு நாற்பது,ஐம்பது பிரயாணிகள் பாய்ந்து ஓடுகிறார்கள்.

அவர்கள் எல்லோரும் முன்கூட்டியே ஆசனத்தை பதிவு செய்து செய்தவர்களாக்கும்என்று மனதில் அவன் நினைத்துக்கொண்டான். ஆனால் ஆசனத்தை பதிவு செய்து ஒதுக்கியவர்கள் அப்படி முண்டியடித்து ஓடித்தான் யன்னல் அருகில் சீற்றை பிடிக்க வேண்டுமா? போட்டியிலும் அவசரத்திலும் சுயநலத்திலும் பழகி விட்ட சமுதாயம்! அநேகமாக அதில் எல்லோரும் வெவ்வேறு அரசாங்க திணைக்களங்களில் தொழில் புரியும் படித்தவர்கள் தான்.

அவர்கள் அப்படி ஒடியதைப்பார்க்க அவனுக்குச்சிரிப்பாக இருந்தது.

யாழ்ப்பாணதிற்கு போவதற்கென்று தன்னோடு ஆசனத்தை முன்கூட்டியே பதிவு செய்து ஒதுக்காமல்,வரிசையில் நிற்கும் மற்றவர்களை ஒரு கணம் பார்த்துக்கொண்டான்.

ஒரு வித்தியாசம் பளிச்சென்று தெரிந்தது. கியூவில் நின்றவர்களில் அநேகரின் முகத்தில் அப்பாவித்தனமும் கையாலாகத்தனமும் எழுதி ஒட்டப்பட்டது போல் இருந்தன. மூட்டை முடிச்சுகளோடு தூரக்கிராமத்திலிருந்து வந்தவர்களும்,வியாபாரிகளும்,விவசாயிகளும் தான் பெரும்பாலும், எதிர்பார்ப்புகளுடன் நிற்பதை பார்க்கும் பொழுது அந்த புதுவிதமான வர்க்க பேதம் அவனுக்கு தெட்டதெளிவாக புரிந்துவிட்டது.

அது   இன்புளூவன்ஸ் நிறைந்தவர்களும், தமது பதவியைக்கொண்டே பிறரிடம் தேவையான உதவிகளைப்பெற தெரிந்த சமார்த்தியசாலிகளும், அந்த சமார்த்தியம் இல்லாது தவிக்கும் இன்புளூவன்ஸ் அற்ற அப்பாவிகளும் தான் என்பது இரு சமாந்தரக்கோடுகள் போன்று அவனது மனதுக்குப் பார்த்தமாத்திரத்தில்  தெரிந்துவிட்டது.

பஸ் சாமர்த்தியசாலிகளை ஏற்றிக்கொண்டு நிறைந்து அந்த வரிசைக்கு வந்ததை அவன் மிகுந்த ஏமாற்றத்துடன் பார்த்துக்கொண்டிருத்தான். "என்னப்பா இது தூரப்பயணத்துக்கு என்று ஆசனம் ஒதுக்க போனால் அங்க சொல்லுறான் பதினைஞ்சு பேருக்கு தான் ஆசனம் ஒதுக்க ஏலும்.அதுக்குமேல முடியாதெண்டு, இங்க பார்த்தால் ட்ரைவர் முதல்க்கொண்டு செக் பண்றவர் வரைக்கும் தெரிஞ்சவங்களுக்கு சலுகை செய்து எல்லா சீற்றும் புக் பண்ணின மாதிரி பஸ் நிறைஞ்சு வருகுதே.இந்த கியூவில் பகல் ரெண்டு மணிக்கு வந்து வெய்யிலில் காத்திருந்தவங்கள் மடையர்களா? எப்படி இந்த இரவு பயணத்தில்  பஸ்சுக்குள்ள ராமுழுவதும் நின்று போகிறது

யாரோ ஒருவரின் அங்கலாய்ப்பை பார்த்து அவனுக்கு மனம் பரிதவிக்கின்றது. இந்த நியதிகள் எல்லாம் அவசியம் வேண்டும் தானா? ஆசனம் பதிவு செய்வதையே  முற்றாக ஒழித்துவிட்டால் என்ன? அவன் மனம் துடித்துக்கேட்கின்றது.

அப்புறம் அந்த ஒழுங்குகள் இல்லாவிடில் என்ன நடக்கும்? வேறுவிதமான வல்லமை பொருந்த்தியவர்கள்,பலத்தைக்காட்டி  அப்பாவிகளை நசித்து முண்டியடித்து முதலில் ஏறுவார்கள். மற்றவர்கள் .......? இந்த உலகம் பலவான் கையில் தானா?

அவன் தனது முறை வந்த பொழுது கண்டக்டரிடம் ஐம்பது ரூபா நோட்டைக்கொடுத்துயாழ்ப்பாணம் ஒன்று தாங்க என்றான். கண்டக்டர் சரசரவென்று ரிக்கெட்டை எழுதி மிகுதியைக்கொடுக்காது டிக்கெட்டின் பின்புறம் 50/ என்று எழுதி அவனிடம் கொடுத்தான்.

மிச்சம் தாங்க

பிறகு எடுக்கலாம். இப்ப வரிசையில் ரிக்கெட் போட்டு முடிச்ச பிறகு தாறன்அந்த சிறு காகிதத்துண்டை அவன் மிகுந்த கவனத்தோடு ஷேர்ட் கைமடிப்புக்குள் வைத்து சுருட்டிவிடுகிறான்.

அவனை பொறுத்த வரையில் எவ்வளவு பெறுமதி வாய்ந்தது அது!

இழந்துவிட்டால் 50ரூபா இழப்பு, பயணச்சீட்டு பெறுமதி... தண்டப்பணம்.....வாக்குவாதங்கள்....அவமரியாதை...பொலிஸ் ஸ்ரேஷன்.....கோர்ட்....!

வைத்த இடத்திலே பத்திரமாக உள்ளதா என்று மீண்டும் தடவிப்பார்த்துக்கொண்டான்.

சில நிமிடங்களில் அந்தக்கடுகதி பஸ் தனது நீண்ட இரவுப்பயணத்தை மட்டக்களப்பில் இருந்து ஆரம்பித்தபொழுது அந்த பஸ்சில் உட்கார்ந்திருந்த பிரயாணிகளை விட நிற்பவர்கள் தொகை இருமடங்காவது இருக்கும் என்று நினைத்துக்கொண்டான்.

தலைக்குமேல் தொங்கிய தோல்வாரை அவன் பிடித்தவாறு தொங்கிய பொழுது,தன்னைப்போல் அநேக வௌவால்களை அங்கே பார்த்து பரிதாபப்பட்டுக்கொண்டான்.

கீழே சீற்றுகளில் சாமர்த்தியசாலிகளான அழுங்குகள் விறைப்பாக அமர்ந்திருந்தார்கள்.

இரவுப்பயணத்தில்,அதுவும் 250 மைல் தூரம்,பொம்பிளைகள் பஸ்சில் பயணம் செய்யக்கூடாது. நிக்கிற ஆக்களுக்கு பொம்பிளை எண்டாப்போல இடம் கொடுக்க முடியுமா?... ஆச்சீ.... கொஞ்சம் முன்னுக்கு தள்ளி போ.....அதில ஒருமாதிரி  பார்த்திரு  போ.”

தனக்குப் பக்கத்தில் நிற்கும் கிழவியைப்பார்த்து ஒரு அழுங்கு சொல்கிறது. கிட்ட நின்றால் பிறகு இடம் கொடுக்கவேண்டி நேருமோ என்ற பயமோ?

பஸ் காற்றை கிழித்துக்கொண்டு விரைகின்றது.

இந்த உலகில் சமத்துவமும்,சரிநிகர் தகுதிகளும் எல்லாரும் பெறவேண்டும் என்று கூச்சலிடுவதில் அர்த்தமில்லை போல் அவனுக்கு தெரிந்தது. முரண்பாடுகளும் வித்தியாசங்களும் வாழ்வின் ஒவ்வொரு திருப்பங்களிலும், சந்திகளிலும் நின்று கூக்குரலிட்டு கைகொட்டிக்கொக்கரிப்பதை அவன் நிதர்சனமாகக்கண்டான்.

பக்கதிலிருந்தவரோடு புது நட்புகள்; அரசியல் பேச்சுகள்; அந்தரங்கங்களை கிண்டி எடுக்கத்துணைபோகும் கேள்விகள்; குசலங்கள்; கற்பனைகள்; கனவுகள்; பஸ்சின் வேகத்தைக்கடந்து ஊருக்கு போய்விட்ட மனநினைவுகள்;ஒதுங்கிய தனிமை தவிப்புகள்; அந்த பஸ்சுக்குள் ஒருகோடி நினைவுகள் சங்கமித்துக்கொண்டிருந்தன.

பஸ் ஒரு தரிப்பில் நின்றுவிட்டு மணி அடித்து புறப்பட்டபொழுது,மீண்டும் படபடவென்று கோவிற்பூசை மணிபோல் அடிக்கவும் பஸ் ஒரு குலுக்கலுடன் நின்றது.

சீற்றில் இருந்தவர்கள் முதலில் சலித்துக்கொண்டார்கள்ஒரே தொல்லை,இந்த கண்டக்டர் தன்ர ஊக்குவிப்புபணத்துக்காக மனுசரை ஒவ்வொரு கோல்ற்ரிலும் ஏத்தியேத்திக்கொண்டிருக்கிறான், இது கடுகதி பஸ் எண்டதையும் மறந்து

நிற்பாட்டியிருந்த பஸ்சுக்கு வெளியே கூச்சல். ‘ஐயோ! எண்ட கை முறிஞ்சு போச்சுதே.. நான் சாகப்போறன். ஐயோ

எல்லோரும் பரபரப்புடன் எட்டிப்பார்க்கிறார்கள்.....

நடுத்தர வயதைக் கட ந்த கிழத்தை எட்டிப்பார்க்கும் ஒரு மனிதனை பஸ்சின்,முன்கதவால் பிடித்துக் கொண்டு வந்து,டிரைவரின் பின்னுக்கிருந்த  குருமாரின் சீற்றில் இருந்தவர்களை எழுப்பி அதில்  கண்டக்டர் இருத்தினான்.    

கிழவனின் வலது கை, தோல் உரிந்து,சிராய்ப்புடன் இரத்தம் ஒடிக்கொண்டிருந்தது. மணிக்கட்டுடன்  முறிந்து  தொங்கியது போலிருந்தது.

ஏறவேண்டாமென்று மணி   அடித்தபின் உன்னை  யார்  ஏறச்சொன்னது? மிதி பலகையில்  நின்று  லையிட் கம்பத்துடன்  மோதிவிட்டு  இப்ப  எங்களுக்கு

  கரைச்சல் கொடுக்கிறாய்....ம்.ம்.....,றைட்  அண்ணே பஸ் ஸை. எடு. இடையில் வாற         பொலிஸ்  ஸ்ரேஷனில்  என்றி போட்டுவிட்டு போவம். இல்லாட்டி எங்களுக்குத்தான்  பிறகு பிரச்சினை

பஸ்  மெதுவாகப் புறப்பட்டது.

டிரைவருக்கு  ஏகப்பட்ட ஆத்திரம்..அடிக்கடிமுனகிக்கொண்டும்  நோவினால்  பிரலாபித்துக் கொண்டுமிருந்த  கிழவனை ஆத்திரத்துடன்  அடிக்கடி  திரும்பிப் பார்த்தவாறு  பஸ்ஸை  ஓட்டிக்கொண்டிருந்தான்.பொலிஸ் ஸ்ரேசன் முறைப்பாடு, ஆஸ்பத்திரி,மருந்து கட்டல் என்பவ ற்றை நினைத்தவுடன்   டிரைவருக்குக்   கொதித்துக்கொண்டு வந்தது.

"இந்தக் கிழவனை இனிப்  பொலிஸ்  ஸ்ரேஷனுக்குக் கூட்டிச் சென்று என்றி எழுதிப் போறதென்றால் நாங்கள்போனமாதித்தான். உவனை இதிலை   இறக்கி

விடுங்கோயாரோ சொல்வது கேட்கிற.து. கூடவே பல குரல்கள் பீரிட்டுக்  கிளம்புகின்றன.

எடுத்ததே இரண்டு  மூன்று நாள்  லீவுதான்  இந்தக்  கிழவனுக்கு மருந்து கட்டி

பொலிஸ்  ஸ்ரேஷன் போய்  போறதெண்டால்  நாளைக்குக் காலை  பத்து  மணிக்கும்  வீட்ட போக ஏலாது.”

நாளைக்குத் தீபாவளிக்கு விடிய வீட்டை போன மாதிரித்தான் உவனோடு

இங்க மாரடிக்கிறதிலும்  பார்க்க இங்க  எங்காவது  சந்தியில் இறக்கிவிட்டுப்போறதுதான் நல்லது  அண்ணே.”

குடித்துவிட்டு ஏறினதோ  கிழவா.”

"நாளைக்குக் காலம்பற நான் ஒரு கொன்பறன்ஸிற்கு நிற்கவேணும் இப்பிடியென்றால் போனமாதிரித்தான்.”

பஸ்ஸில் தொங்கிக்கொண்டு நின்ற அவன் ,காயம்பட்ட அந்தகிழவ னுக்காக இப்பொழுது  பரிதாபப்பட்டான் .

இந்தப்பஸ்சுக்குள் யாராவது, ஒரு உயிராவது காயம் பட்ட அந்த மனிதனுக்காக த் துடிக்கக் கூடாதா?.........இந்த பஸ்சுக்குள் யாராவது ஒரு               டாக்டர் இருந்து__இருக்கிறார் என்றுஅவன் நம்பினான். அவரெழுந்து  சென்று கிழவனின்  வேதனையைக் குறைக்கக் கூடாதா?.

எல்லோரும்  தங்கள் தங்கள்  பிரயாணத்தின்  நோக்கை குறித்துக்கவலைப்படுகிறார்களே அன்றிக்கொஞ்ஞமாவது மனிதாபிமானத்தைக்காட்டி, காயம் பட்டவன் மேல் இரக்கபடுவாதாய் இல்லையே! என்ன மனுசர் இவங்கள்! ஏதோ கோவிலுக்குக்காவடி எடுத்துப்போற மாதிரியும்,தங்கள் தெய்வீக யாத்திரைக்கு இடையூறு ஏற்பட்ட மாதிரியும்,தங்களின் சுயநலத்தைத்தானே நியாயப்படுத்துகிறார்கள்என்று அவன் மனதில் விரக்தியோடு எண்ணிக்கொண்டான்.

கிழவன் நிறைய பயந்துவிட்டான் போல் இருந்தது. வேதனையில் அடிக்கடிஐயோ நான் சாகபோறேன் என்று புலம்பிக்கொண்டே வந்தான். கிழவனது கரத்தில் இருந்து இன்னும் இரத்தம் வடிந்துகொண்டிருந்தது. அந்த பஸ்ஸிற்குள் இருந்த மங்கிய வெளிச்சத்தில், காயம் பட்ட கை வெட்டிப்போட்ட ஆட்டின் கழுத்துப்போன்று சிவந்துபோயிருந்தது.

பஸ் திடீரென்று குலுக்கலுடன் நின்றது.

டிரைவர், சீற்றிலிருந்து ஆவேசத்துடன் கையை ஓங்கியவாறு எழுந்து வந்தான். ‘டேய் வடுவா,ராஸ்கல் நீ குடிச்சுப்போட்டு ஏறினதும் இல்லாமல் சும்மா சத்தம் போட்டுக்கொண்டு வாராய் என்ன. இதென்ன கிட்டடிக்கு போற பஸ் எண்டா ஏறினனி? அபசகுணம் மாதிரி ஏறினதும் இல்லாமல்... சத்தம் போடாமல் இரு. துலைச்சுபோடுவன் துலைச்சு

கிழவனை வெருட்டியவாறே மீண்டும் பஸை ஸ்ரார்ட் செய்தான் டிரைவர். கிழவன் வேதனை உணர்வுகள் இப்பொழுது முகத்தில் தெரிய மெதுவாக அனுங்கிக்கொண்டிருந்தான். குரல் விட்டு அழவும் முடியாது அந்த சுதந்திரபுருசர்களிடையே கிழவன் அடிமைப்பட்டிருந்தான். கிழவனைப்பார்த்துக்கொண்டு நின்ற அவன் பிரயாணிகளை  மெதுவாக விலக்கியவாறு கிழவனுக்கு அருகில் சென்று, தனது தோளில் இருந்த துவாயை எடுத்து காயம் பட்ட கரத்தைச்சுற்றிக்கட்டுப்போட்டான். கிழவன் நன்றியுணர்வோடு அவனை நிமிர்ந்து பார்த்தான்.

மகளுக்குச்சுகமில்லை என்று தந்தி வந்தது ராசா.அதுதான் அவசரத்தில் நிற்கேலாமல் வாசல்படியில் நின்றனான். லைற் போஸ்ற் அடிச்சிட்டுதுபோல இருக்குது, நான் இனி என்ன செய்யப்போறன் ஐயோ

கிழவனின் உயிரணுக்கள் பிரலாபித்தன.

பிற உயிர் துடிக்கையிலே யார் ஒருவன் நெஞ்சில்   அவனுக்காக கண்ணீர் வடிக்கிறானோ அவன்தான்  உண்மையான மனிதன்என எங்கோ படித்த வாசகங்கள் அவன் நினைவுக்கு வர...’அப்படியானால் இந்த பஸ்ஸிற்குள் யாருமே மனுசர் இல்லையா?’ என நொந்தான். அப்படி நினைக்கையில் அவனுக்குச்சிரிப்பாகவும் இருந்தது.

இந்தப்படித்த கனவான்கள்__புதிய சமுதாயத்தை உருவாக்குபவர்கள் __எதிர்காலச்சமூகத்திற்கு வித்துக்கொடுப்பவர்கள்__எவரிடமும் அந்த மனிதத்துவம் இல்லையா!

வித்தியாசமான நாளைய சமுதாயத்திற்கு இவர்களின் இப்பொழுதைய உணர்வுகள் உரைகற்களா?

பஸ் டிரைவர் தூரத்தில் தெரிந்த சிவப்பு விளக்கை முந்த வேண்டும் என்று எண்ணியவன் போல் விரைவாகச்செலுத்தினான்.

திடீரென்று, மிதிபலகையில் நின்ற வாறே பிரயாணம் செய்த கண்டக்டரை அழைக்க எண்ணியவன் போல் மிதிபலகை விளக்கை டிரைவர் இரண்டு மூன்று தரம் அணைத்து ஒளிச்சைகை காட்டினான்.

கண்டக்டர் பிரயாணிகளுக்கூடாக டிரைவரிடம் நீந்திச்சென்றான்.

ஏன் கோபால், இதிலவார பொலிஸ்ஸ்ரேசனில் சனியனை இறக்கிவிட்டு,என்றி போட்டுவிட்டு போவம்.முன்னுக்கு தானே ஆஸ்பத்திரியும் இருக்குது. பொலிஸ்காரர்களே ஆளை அனுப்பி மருந்துகட்டுவாங்க, அவன் சண்முகமும் இங்க தான் இருக்கிறான்,எங்கட ஆள் தானே. எல்லாம் ஷேப்பண்ணலாம், பஸ் ஓடுற மூடே இவனால் எடுபட்டுப்போச்சு. சே...’

ஓமோம் அப்படியே செய்தால் சரியண்ண

பொலிஸ் என்று மும்மொழிகளிலும் எழுதப்பட்ட போர்ட் பஸ்சின் வெளிச்சத்தில் எதிரே பிரகாசித்தது. டிரைவர் பஸ்சை நிறுத்தினான்.

ஏய் கிழவா இறங்கு கண்டக்டர் துரிதப்படுத்தியவாறே கிழவனையும் இழுத்துக்கொண்டு பொலிஸ்ஸ்ரேசனுக்குள் நுழைவது பஸ் கண்ணாடிக்குள்ளால் பனிப்புகாரூடாக பார்ப்பது போல் தெரிகின்றது.

எல்லாரும் இறங்குங்கோவன், இருந்து என்ன செய்யப்போறியள்? உது முடிஞ்சு வர இரண்டு மணித்தியாலமாவது எடுக்காதா?’

கால்கடுக்க நிற்பவர்களை தற்காலிகமாகவாவது இளைப்பாற விடுவோமே என்ற எண்ணம் இன்றி, ஆயினும் இருந்து மரத்துப்போன உணர்வுகளின் தாக்கத்தினால் மெதுவாக இறங்குகிறார்கள்.

ஒவ்வொரு நிமிடமும் இந்நிலைக்கு காரணமான அந்தக் கிழவனைச்சபித்துக்கொண்டு... நேரம் கடந்து சென்றுகொண்டிருந்தது.

இரண்டுமணிநேரம்.

அஜாக்கிரதையான ஒரு மனித  உயிரினால் அவசரப்படுவோருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை போன்று நேரம் கடந்துகொண்டிருந்தது. அதில் நின்றவர்களின் வாயிலிருந்து புறப்பட்ட சாபங்களுக்கும்,சலிப்புகளுக்கும் மட்டும் கரங்களிருந்தால் அவை அந்த கிழவனிடம் சென்று அவனை இழுத்து,நிர்வாணமாக்கி அடி அடியென்று அடித்து,குதறி,கழுத்தைநெரித்து,கையை முறித்து............. இவர்களின் இந்த வார்தைகளுக்கு அவ்வளவு வேகமும் குரூரமும் இருக்குமா?

அவன் அவ்விடத்தில் நிற்கமுடியாமல்,கிழவனைப்பார்ப்பதற்காக பொலிஸ்ஸ்ரேசன் நோக்கி நடந்தான்.

யன்னலுக்கூடாக எல்லாம் தெரிந்தது.

பொலிஸ் அதிகாரியின் முன், கண்டக்டர் முகத்தில் கோபம் கொந்தளிக்க நிற்கிறான்.கிழவன் அந்த அதிகாரியிடம் ஏதோ சொல்வது  தெளிவில்லாமல் கேட்கிறது.கிழவன் என்ன சொல்கிறான் என்று அறிவதற்கு அவன் யன்னலருகே போய் நின்றான்.

நான் பஸ்சில் ஏறவே இல்லை ஐயா.. ஏறவிடாமல் கண்டக்டர் தான் என்னைப்பிடிச்சு தள்ளினவர்.அப்பதான் கீழவிழுந்தனான். லைற் போஸ்ரோடு அப்பதான் கை அடிபட்டது.’

கிழவனின் வார்த்தைகளைக்கேட்டு அவன் ஒருகணம் திகைத்து போய்விட்டான்.கண்டக்டரில் பழியைப்போடுகிறானே கிழவன். தன்னில் பழியைப்போட்டு மிதிபலகை பிரயாணத்துக்காகத்தண்டித்துப்போடுவார்களே என்ற அச்சத்தில்,தப்ப வழி தேடுகிறான் கிழவன் என்று அவன் துக்கத்தோடு எண்ணிக்கொண்டான்.

அவனுக்கு இப்போது ஒன்று முன்பைவிடத்தெளிவாகத்தெரிந்தது.

பஸ்சிற்குள் மட்டும், தவறை நியாயப்படுத்துபவர்கள் இருந்தார்கள் என்று இல்லை. இந்தக்கிழவனும் மனிதகுலத்தின் பிரதிநிதிதான். சுயநலம் ஒவ்வொரு மனிதனிலும் அடிப்படைக்குணமாய் உறங்கிக்கொண்டிருக்கின்றது. எல்லோருமே தங்கள் தப்பையும் தவறையும் மறைத்து அதை நியாயப்படுத்துவதில் கெட்டிக்காரர்கள்தான்.

நீண்ட நேரத்துக்கு பின்னர் விசாரணைகள் முடிந்து கிழவனை ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு, பஸ் புறப்பட்டபொழுது பழையபடி அந்தப்பரபரப்புடன், சரளமான உரையாடல்களும் சேர பஸ்சுக்குள் களைகட்டத்தொடங்கிவிட்டது.

இன்னும் சிறிது நேரத்தில்,பிரயாணிகளே நிற்கவும் இடமில்லாதிருக்கும் இந்த பஸ்சுக்குள், தயிர்முட்டிகளையும், கூடைகளையும், பிரயாணிகளின் சௌகரியத்தையும் கருதாது வியாபார நோக்கோடு ஏற்றப்போகும் கண்டக்டரையும், அதை நியாயப்படுத்தவிலைவாசியேற்றத்தில் இந்தக்குறைஞ்ச சம்பளத்தில் நாங்க என்ன செய்யேலும்? இப்படி சைட் பிஸ்னஸ் செய்யாமல்என்று சொல்லப்போகும் கண்டக்டரின் சாட்டையும் நினைத்துக்கொண்டான். ’கிழவன் நியாயப்படுத்திய தவறு, இதைவிட அவ்வளவு பாதிப்பானதல்ல என்றுதான் அவன் மனதில்பட்டது. இதுகுறித்து நாளை இளைஞர் மன்றத்தில் விவாதிக்கவேண்டுமென மனதில் மிகுந்த சுமையுடன் அதனை ஒதுக்கி வைத்தான்.

தவறுகளையும் நியாயப்படுத்தும் கெட்டிக்காரர்களைச்சுமந்துகொண்டு, இரவின் தாக்கத்தையும் பொருட்படுத்தாது தனது நீண்ட தூரப்பயணத்தை பஸ் தொடர்ந்துகொண்டிருந்தது.

அவன் கால் கடுக்க நின்றான்........

 

mukunthan72@gmail.com