அண்ணாநகரில் கடவுள்

அகில்

டவுள் மேல் உலகத்திலிருந்து பூமிக்கு இறங்கி வந்தார். அவர் கால்பதித்த இடம் அண்ணாநகர்.

விண்ணை முட்டும் கட்டிடங்கள் சூரியனை மறைத்து எழுந்து நின்றன. புழுதியைக் கிளப்பியபடி வாகனங்கள் பறந்துகொண்டிருந்தன. அவை 'பீப்... பீப்...' என்று எழுப்பிய ஒலி காதைக் கிழித்தது. மூச்சை முட்டும் சனக்கூட்டத்துள் திணறிப்போனார் கடவுள்.

தூய வெண்ணிற ஆடையில் நெற்றி நிறையத் திருநீறு அணிந்திருந்த கடவுளைப் பலரும் ஏதோ புது ஜந்துவைப் பார்ப்பது போலப் பார்த்துவிட்டு அப்பால் நகர்ந்தனர். யாரும் அவருடன் பேசுவதற்குத் தயாராக இல்லை.

'யாரப்பா நீ... பட்டணத்துக்குப் புதுசா? பாக்கிறதுதான் பாக்கிறாய் கொஞ்சம் ஓரமா நிண்ணு பாரு!'

வீதியின் நடுவே நின்று நகரத்தைப் பார்த்துக்கொண்டிருந்த கடவுள் ஆட்டோக்காரனின் குரலைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தார்.

'சரியான சாவு கிராக்கி போல இருக்குது.... ' ஆட்டோக்காரனின் உதடுகள் முணுமுணுத்தன. ஆட்டோ அவரை இடித்துவிடுமாப்போல்; அப்பால் கடந்து சென்றது.

'என்னப்பா இவ்வளவு அவசரம்?'

கடவுளின் உதடுகள் புன்னகையை உதிர்த்தன. நடைபாதையை நோக்கி விரைந்தன அவர் பாதங்கள். தெருவோரமாக நடந்து சென்ற கடவுளை யாரும் பொருட்படுத்தவில்லை. அவசர உலகம் தன் தேவைகளுக்காக விரைந்துகொண்டிருந்தது. தான் படைத்த பூமிதானா இது? என்று கூட கடவுளுக்குச் சந்தேகம் எழுந்தது. ஆறறிவு படைத்த மனிதனின் அதிவேக முன்னேற்றத்தை அவரால் வரவேற்காமல் இருக்க முடியவில்லை.

சற்றுத் தொலைவுவரை நடந்த கடவுள் தனது நடையை நிறுத்தினார். திரும்பிப் பார்த்தார். அவரை நெருங்கி ஒருவர் வந்துகொண்டிருந்தார். அவனிடம் பேச்சுக்கொடுக்க விரும்பினார் கடவுள்.

'மகனே, நான் தான் கடவுள்' தன்னை அறிமுகப்படுத்தினார். ஏளனச் சிரிப்புடன் அவரை ஏற இறங்கப் பார்த்தான் அந்த மனிதன்.

'நான் கடவுள் வந்திருக்கிறேன். உனக்கு என்ன வேண்டும்?; கேள். தருகிறேன்'.

அந்த மனிதனின் உதடுகளில்; புன்னகை ஒன்று ஓடி மறைந்தது. 'கலியுகம் முத்திப் போச்சுது' தலையில் அடித்துக்கொண்டே அப்பால் நகர்ந்தான் அந்த மனிதன்.

கடவுள் பொறுமையாகக் காத்திருந்தார்;. அப்போது பூ விற்கும் பெண்ணொருத்தி அவரைக் கடந்து நடந்தாள். அவளை வழிமறித்தார் கடவுள்.

'பெண்ணே! நான் தான் கடவுள் வந்திருக்கிறேன்.'

'ஆ....மா. கடவுள் இருந்தால் நாட்டில ஏன் இவ்வளவு அநியாயம் நடக்குது. சும்மா பிதற்றாமல் அப்பால நகரய்யா' ஆத்திரமாய் வார்த்தைகளைக் கொட்டியபடி நடையில் வேகத்தைக் கூட்டினாள் பூக்காரி.

'கடவுளே, கடவுளே என்று கதறும் இந்த மக்களின் குரல் கேட்டுத்தானே நான் ஓடோடி வந்தேன். இவர்களோ முன்னால் நிற்கும் என்னை, நான் தான் கடவுள் என்று சொன்னபின்பும் என்னை நம்புகிறார்கள் இல்லையே' கடவுள் தனக்குள் பேசிக்கொண்டார்.

'பார்ப்போம். இன்னும் என்னென்ன வினோதங்கள் இந்தப் பூவுலகில் நடக்கின்றது என்று' முணுமுணுத்துக்கொண்டே கடவுள் மீண்டும் நடக்கத் தொடங்கினார். அப்பொழுதுதான் அந்தச் சுவரொட்டி அவர் கண்களிற் பட்டது.

'அட நம்ம இடம்'.

படத்தில் கைலயங்கிரியைக் கண்டதும் கடவுளுக்கு வீட்டு ஞாபகம் வந்து விட்டது. உமையம்மை பிரிவுத் துயருடன் இவருக்கு விடை கொடுத்திருந்தார்.

'இன்று ஒருநாள் மட்டும் பூலோகத்தில் தங்கி நம்; பக்தர்களுக்கெல்லாம் அருள்பாலித்துவிட்டு வருகிறேன் தேவி' கடவுள்; அம்மையைச் சமாதானப்படுத்தினார்.

'ம்...... பூலோகத்தில் இன்று பொழுது சாயும்வேளை தாங்கள் இங்கிருக்க வேண்டும்' அன்புக்கட்டளையிட்டாள் அன்னை.

புன்னகை தவழும் முகத்துடன் சுவரொட்டியைக் கூர்ந்து பார்த்தார்.

'அட இது நம்மைப் போலவே இருக்கே...' கண்களை அகலத் திறந்தபடி அருகில் சென்று பார்த்தார்.

அதே புலித்தோல் ஆடை, கைகளில் கமண்டலம், நெற்றி நிறைந்த நீற்றுப் பூச்சு. சுடலை ஆண்டியாக உருத்திராட்சம் தரித்து தியானத்தில் அமர்ந்திருந்தார் ஒருவர்.

'எல்லாம் அச்சு அசல் நான் தான். ஆனால் இந்த முகம்......?'

'நான் இப்படி ஒரு அவதாரம் எடுத்ததாக ஞாபகம் இல்லையே......!!'

பக்கத்தில்..... அவருடைய தேவியாகத் தான் இருக்க வேண்டும். அருள் ஒழுகும் பார்வையுடன் புன்னகை நிரம்பியவளாய் அமர்ந்திருந்தார்.

'இவள் உமையில்லையே...!!!' திருதிருவென்று விழித்தார் கடவுள்.

'எப்போது நடந்தது இந்த விபரீதம்....!!!'

சிந்தனையுடன் மேலே சிவப்பு எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருந்த அந்த வாசகங்களைப் படித்தார்.

'பகவான் பாலதயானந்த அடிகளுக்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிறந்த தின உற்சவம். பகவான் அவதரித்த இப்பொன்நாளைக் கொண்டாட அடியார்களை அன்புடன் அழைக்கிறோம். பகவானுக்கு உங்கள் கரங்களாலேயே பால் அபிசேகம் செய்து அருள்பெற்று உய்யுங்கள். பஜனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு இறைதரிசனமும், அருளாசியும் பெறுங்கள்!!'

கடவுள் அப்படியே உறைந்து போனார். 'எனக்குப் போட்டியாக இன்னொருவன்....!'. நம்பமுடியாமல் இருந்தது கடவுளுக்கு. அவரது பாதங்கள் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தன.


கூச்சல் நிறைந்த நகர்ப்புறத்தை விட்டு அந்தப் பாதை அவரை ஒரு மண்டபத்தின் முன் நிறுத்தியது.

நகருக்கு ஒதுக்குப் புறமாக அந்த இடத்திற்குச் சற்றும் பொருத்தமற்ற பெரிய மண்டபம் அது. மண்டபம் அலங்கரிக்கப்பட்டு டாம்பீகமாகக் காட்சியளித்தது. முற்றிலும் காவியணிந்து சாந்தம் தவழும் முகத்துடன் சிரித்துக்கொண்டிருக்கும் சாமியார் ஒருவரின் பெரிய 'கட்அவுட்' ஒன்று ஆளுயர மாலையணிவிக்கப்பட்டு பக்திமணம் பரப்பிக்கொண்டிருந்தது. மண்டபத்திற்கு வெளியே பெண்களும், ஆண்களுமாகக் கூட்டம் நிரம்பி வழிந்தது. காவல் முஸ்தீபுகளும் பலமாக இருந்தன. தூய்மையான வெண்ணிற ஆடைகளைப் பக்தர்கள் அணிந்திருந்தார்கள்;. பக்தியும், பணிவும் அவர்களில் குடிகொண்டிருந்தது. எல்லோரும் மெதுவான குரலில் அந்தச் சாமியாரைப் பற்றிப் பேசிக்கொண்டனர். அவர்கள்; சாமியாரிடம் ஆசியும், அருள்வாக்கும் பெறுவதற்காகக் காத்துநின்றனர். கடவுள் தனக்குள் சிரித்துக்கொண்டார். அந்த மனிதர்களில்; ஒருவரை நெருங்கினார்.

'நான் தான் கடவுள்' என்றார்.

கடவுளை வினோதமாகப் பார்த்தான் அந்த மனிதன்.

'என்னப்பா அப்படிப் பார்க்கிறாய்? நான் தான் கடவுள். நீண்ட காலத்தின் பின்னர் இன்றுதான் பூலோக சஞ்சாரம் செய்கிறேன். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள். நான் தருகிறேன்'; கடவுள் மீண்டும் கூறினார்.

கடவுளுக்கு அருகில் நின்ற சற்று வயது முதிர்ந்த ஒருவர்,

'நாங்களும் கடவுளைப் பார்க்கத்தானப்பா இங்கே வந்திருக்கிறோம். இந்தச் சாமியார் பெரிய மகான், ஞானி. கடவுளின் மறு அவதாரம். கலியுகவரதர். உன்னை இந்தச் சாமியார்கிட்ட கூட்டிப்போகிறேன். உன்னோட இந்தப் பைத்தியம் சீக்கிரம் குணமாயிடும்' என்று பதிலளித்தார்.

அவரது பேச்சு கடவுளுக்குச் சிரிப்பாக இருந்தது. வாய் விட்டுச் சத்தமாகச் சிரித்தார். கூடியிருந்த பக்தர்கள்; அச்சத்துடன் அவரைப் பார்த்தனர்.

திடீரென்று கூட்டம் அமைதியானது. பக்திவெள்ளம் பெருக்கெடுக்க எல்லோரும் விழுந்து விழுந்து வணங்கினர். காவியுடையணிந்த ஒருவர் பக்தர்கள் புடைசூழ வாகனத்தில் இருந்து இறங்கி மண்டபத்துக்குட் பிரவேசித்தார். அந்த மனிதனுக்குப் பஞ்சாரார்த்தி தீபம் காட்டி, மாலைகள் சூட்டி மகிழ்ந்தார்கள் பக்தர் கூட்டம். மண்டபம் அதிர கோசங்கள் முழங்க அந்த மனிதன் முன்னே நகர்ந்தார். தொடர்ந்து பக்தர் கூட்டம் உள்ளே நுளைந்தது. எல்லோரும் பக்தி வெள்ளத்தில் மூழ்கியிருக்க, கடவுள் ஒரு ஓரமாய் நின்று வாய்பிளந்து இந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டு நின்றார். பக்கத்தில் அதே கிழவர் நின்றுகொண்டிருந்தார்.

நேரம் நகர்ந்துகொண்டே போனது. கடவுள் பொறுமையை இழந்தார். மீண்டும் கிழவருடன் பேச்சுக் கொடுத்தார்.

'நான் தான் கடவுள். உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள் நான் தருகிறேன்' என்றார்.

முதியவர் அருகில் நின்ற மனிதனுடன் கண்களால் ஏதோ பேசிவிட்டு கடவுளின் கைகளை இறுகப் பற்றினார்.

'எங்க கூட வா. உனக்கு நாங்கள் கடவுளைக் காட்டுறோம்' என்று கூறியபடி கூட்டத்தை விலக்கிக்கொண்டு கடவுளை இழுத்துக்கொண்டு மண்டபத்திற்குள் நுளைந்தார்.

சாமியார் புலித்தோல் விரித்த பஞ்சணையொன்றில் அமர்ந்திருந்து தியானத்தில் மூழ்கியிருந்தார். பாதி முகத்தை மறைத்திருந்த கருந்தாடி அவரது முகத்திற்கு ஒரு வசீகரத்தைக் கொடுத்திருந்தது. நெற்றியிலே திருநீற்றைப் பரவிப் பூசி, நடுவிலே ஒரு ரூபாய்க் குற்றியளவில் குங்குமம் இட்டிருந்தார். புன்னகை தவழும் குழந்தை முகம். அவர் கண்திறக்கும் வேளைக்காய் அவரைச் சூழ்ந்து பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தெய்வ சக்தியாலும், அவரது ஒப்பற்ற மாந்திரீக ஆற்றலாலும் அவர் எத்தனையோ பக்தர்களின்; பிணி, துன்பம், வறுமைகளைப் போக்கியிருப்பதாக அவர்கள்; பேசிக்கொண்டனர்.

மெதுவாகக் கண்களைத் திறந்தார் சாமியார். அருள் ஒழுகும் கண்களால் அடியவர்களை அரவணைத்தார். பக்தர்கள் கூட்டம் 'ஓம் சாந்தி, ஓம் சாந்தி' என்று கோசம் எழுப்பியது. சாமியாரின் பார்வை தன் முன்னே குறுநகையுடன் அமர்ந்திருந்த கடவுளின் மீது படிந்தது. முதியவர் எழுந்து சாமியாரைச் சாஸ்டாங்கமாக விழுந்து வணங்கினார். சாமியாருக்கு அருகில் அமர்ந்துகொண்டு தன் பக்கத்தில் கடவுளை இருத்தினார். சுவாமியின் காதருகில் குனிந்து கடவுளைக் காட்டி ஏதோ கிசுகிசுத்தார்.

சாமியார் கடவுளை ஏற இறங்கப் பார்த்தார். கண்களை மூடி மறுபடியும் ஏதோ தியானத்தில் ஆழ்ந்தார். சில நிமிடங்களில் மீண்டும் கண்களைத் திறந்தார்.

'அன்பனே! போன ஜென்மத்தில இவன் செய்த பாவம்தான் இப்போ இவன் இப்பிடியெல்லாம் உளறிக்கொண்டு அலைகிறான்.' என்று கூறிய சாமியார், தட்டில் இருந்த திருநீற்றை அள்ளி கடவுளின் முகத்தில் விசிறினார். வேப்பிலையை எடுத்து கடவுளின் தலையிலே ஓங்கியடித்தார். திணறிப்போனார் கடவுள். கண்களில் விழுந்த திருநீறு அவர் விழிகளை உறுத்தியது. எழுந்து நடக்க முற்பட்டார். அருகிலே நின்ற சாமியாரின் சீடர்கள் இருவர் முதியவரின் உதவியுடன் மீண்டும் அவரை உட்காரவைத்தனர்.

'ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வந்து பூஜையில கலந்துகொள்ளப்பா. உன்னைப் பிடிச்ச பீடையெல்லாம் உன்னை விட்டு ஓடிப் போகும். சாந்தம் பெறுவாய்' என்றரர் சாமியார். அவரிடம் ஏதோ சொல்ல வாயைத் திறந்தார் கடவுள். சாமியார் கடவுளின் வாயில் திருநீற்றைப் போட்டார். கடவுளாற் பேசமுடியவில்லை. சாமியாரின் தட்டில் சில ரூபாய் நோட்டுக்களைப் போட்டு விட்டு அந்த முதியவர் கடவுளின் கைகளைப் பற்றினார்.

'ஆகா.... என் பெயரைச் சொல்லி எத்தனை அநியாயம் நடக்கிறது இந்தப் பூவுலகில்..... கடவுளும் வியாபாரப் பொருளாகி விட்டார்; என்று ஆலயத்தில் வந்து என் பக்தர்கள் எல்லாம் புலம்புவது இதனால் தானா......?' கடவுள் விக்கித்துப்போனார்.

வெளியே வந்ததும் முதியவரிடமிருந்து தன் கைகளை விடுவித்துக்கொண்ட கடவுள் 'நான் தான் கடவுள் என்கிறேன். நீங்கள் ஏன் என்னை நம்புகிறீர்கள் இல்லை. உனக்கு என்ன வேண்டும் கேள் நான் தருகிறேன். நான் தான் கடவுள் என்பதை உனக்குக் காட்டுகிறேன்' என்றார் சற்றே கோபமாக கடவுள்.

முதியவர் புன்னகையுடன் அவர் முதுகிலே தடவி,

'அந்தச் சாமியார் ரொம்ப மகிமையுள்ளவர். அவர் சொன்னதுபோல வருகிற வெள்ளிக்கிழமை மறுபடியும் இங்கே வா. உனக்கு எல்லாம் சரியாயிடும்' என்று அன்பொழுகக் கூறிவிட்டு அப்பால் நகர்ந்தார் முதியவர்.

'ஏ நில்லப்பா....' கடவுளின் அழைப்பு தன் காதுகளில் விழாதவரைப் போல அந்த முதியவர் வேகமாக நடந்தார்.

'இவர்கள்; எல்லாம் ஆலயத்தில் வந்து என்னை மனமுருகி அழைத்த போது சிலையாய் நின்றுகொண்டேன். அதற்காக என்னை இப்படிப் பழிவாங்குகிறார்களா இந்த மனிதர்கள்'

தன்னை யாராவது நம்பமாட்டார்களா என்ற ஆதங்கத்துடன் கண்களைச் சுழல விட்டார். கடவுளாக என்ன? ஒரு மனிதனாகக் கூட யாரும் அவரை ஏரெடுத்தும் பார்க்கவில்லை.

பொழுது மெதுவாக இருட்டத் தொடங்கியது. காலை முதல் நடந்ததாலோ என்னவோ கடவுளும் கால்கள் வலிப்பதைப் போல உணர்ந்தார். சற்றுத் தூரத்தில் கோயில் கோபுரம் கண்களில் பட்டது. சற்று ஓய்வெடுத்துக்கொள்ள அதுதான் சரியான இடம் என்று கண்டுகொண்ட கடவுள் கோயிலை நோக்கி விரைந்தார். பாவம் அவருக்கு அமருவதற்கு சரியான இடம் கிடைக்கவில்லை. பாதையின் இருமருங்கிலும் வயது, பால் வேறுபாடின்றி சிலர் அமர்ந்திருந்து, போவோர் வருவோரிடமெல்லாம் பிச்சை கேட்டுக்கொண்டு இருந்தனர்.

'ஒழுங்காக அவயவங்களைக் கொடுத்து, மண்ணில் நல்ல வண்ணம் வாழ வழி சமைத்து வைத்தும் இந்த மனிதர்கள் ஏன் இப்படி இரந்து உண்கிறார்கள்?' ஒன்றும் புரியாதவராய் அவர்களைக் கடந்து நடந்தார். கோயில் வாயிலருகில் சிறிய இடமொன்று அவருக்காக காத்திருந்தது. அமர்ந்துகொண்டார். பல பக்தர்கள் அவரைக் கடந்து கோயிலுக்குள் நுளைந்தனர். கடவுள் அயர்ச்சியுடன் சாய்ந்து கண்களை மூடினார்.

அசதியில் கண்ணயர்ந்த கடவுளை தட்டியெழுப்பியது ஒரு வலிமையான கரம். எதிரிலே நல்ல திடகாத்திரமான இளைஞன் ஒருவன் நின்றுகொண்டிருந்தான். அவன் உருவத்திற்கு சற்றும் பொருந்தாமல் கைகளை ஏந்தி கடவுளிடம் யாசித்தான்.

'ஐயா ஏதாவது தர்மம் பண்ணுங்கய்யா. சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு. தயவு பண்ணுங்கய்யா'. அவன் குரல் கடவுளை நெகிழவைத்தது.

'ஏம்பா பார்க்க நல்ல வாட்ட சாட்டமா தெரிகிறாய். ஏன் இப்பிடி யாசகம் செய்கிறாய்? உன்னால் உழைத்து வாழ முடியாதா?' கடவுள் கேட்டார்.

'நான் கிராமத்தில பிறந்து வளந்தவனய்யா. ஏதாவது ஒரு வேலை கிடைக்குமின்னு கையில இருந்த பணத்தோட பட்டணம் வந்தேன்யா. பணம் எல்லாம் தீந்து போனது தான் மிச்சம். ஒரு வேலையும் கிடைக்கல. சாப்பிட்டு ரெண்டு நாளாச்சுதய்யா' என்றான் உருக்கம் நிறைந்த குரலில் அந்த இளைஞன்.

புன்முறுவல் செய்தார் கடவுள்.

'உனக்குப் பணம் தானே வேணும். இந்தா பிடி. இதை வைத்து உழைத்துச் சாப்பிடு. இனிமேல் இதுபோல் யாசகம் செய்யாதே' கடவுள் தன் பைக்குள் கையை விட்டார். தான் பூவுலகிற்கு வந்த பயனாக ஒருவனாவது பலன் பெறுகிறான் என்ற சந்தோசம் கடவுளுக்கு. நம்ப முடியாமல் பார்த்துக்கொண்டிருந்த இளைஞனின் கைகளில் ஒரு கட்டுப் பணத்தை வைத்தார்.

கண்ணீர் மல்க கடவுளின் கால்களில் வீழ்ந்து வணங்கினான் இளைஞன். 'பெரியவரே நீங்க கடவுள் சாமி..... நீங்க தெய்வம் சாமி தெய்வம்....' அவன் குரல் தளதளத்தது.

'நான் சொன்னால் யாரு நம்பறான்....?' கடவுள் புன்னகை பூத்தார்.

கடவுள் கொடுத்த பணத்தை தனது சட்டைப் பைக்குள் திணித்தான் இளைஞன். அந்த நேரம்பார்த்து அவன் கைகளை ஒரு இரும்புக்கரம் தடுத்தது. இரண்டு கான்ஸ்டபிள்களுடன் காவல்துறை அதிகாரி நின்றுகொண்டிருந்தார்.

'எங்கால உனக்கு இவ்வளவு பணம்? பார்க்க பிச்சைக்காரனாட்டம் தெரிகிறாய். ஏதுடா இந்தப் பணம்? உண்மையைச் சொல்லு.' ஒரு காவல்துறை அதிகாரி அவனை மிரட்டினார். அவர்களைக் கண்டதும் பயத்தில் நடுங்கினான் அந்த இளைஞன்.

'ஐயோ எனக்கு ஒண்ணும் தெரியாதய்யா. இந்தப் பெரியவருதான் எனக்கு இவ்வளவு பணத்தையும் தந்தாரு. என்னை விட்டுருங்க ஐயா' கெஞ்சினான் இளைஞன். அருகில் நின்ற கடவுளிடம் காவல் அதிகாரியின் பார்வை படிந்தது.

'ஓகோ நீங்க தான் இவருக்கு பணம் கொடுத்தீங்களா பெரியவரே.....?' என்று கிண்டலாகக் கேட்டார் அதிகாரி.

'ஆம் நான் தான் இவனுக்கு பணம் கொடுத்தேன். அவனுக்கு ஒன்றும் தெரியாது. நான் தான் கடவுள்.' மறுமொழி கூறினார் கடவுள். பக்கத்தில் நின்ற இளைஞனுக்கோ கடவுளின் பேச்சைக் கேட்க தலை கிறுகிறுத்தது. சிங்கம் கர்சிப்பதைப் போலச் சிரித்த காவல் அதிகாரி ஆவேசம் வந்தவரைப் போல கத்தத் தொடங்கினார்.

'ரெண்டு பேருமாச் சேர்ந்து என்ன டிராமாவா பண்ணுறீங்க. நடவுங்க ரெண்டு பேரும் ஸ்டேசனுக்கு. ஒருத்தன் பயந்தாங்கொள்ளி மாதிரி நடிக்கிறான். ஒருத்தன் கடவுள்னு பைத்தியம் மாதிரி நடிக்கிறான். நாட்டில தீவிரவாதிங்களோட அட்டகாசம் கூடிப்போச்சு. எந்த நேரத்தில எந்த ரூபத்தில வாராங்கன்னே சொல்லமுடியாது'

'ஐயோ எனக்கு ஒண்ணும் தெரியாதய்யா. நா பட்டணத்துக்கு புதுசு. என்னை விட்டுருங்கய்யா. எனக்கு இவர் யாருன்னே தெரியாதுங்க. என்னை விட்டுருங்கய்யா' கண்ணீருடன் கதறினான் இளைஞன்.

'கண் முன்னே நிற்கும் கடவுளை நம்ப மறுக்கிறாயா மானிடனே? உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்' கடவுள் அன்பொழுக அதிகாரியுடன் பேசினார்;.

'என்னய்யா? செஞ்சதையும் செஞ்சுட்டு லஞ்சமா தரப்பார்க்கிறாய். ரெண்டு பேரையும் உள்ள வச்சு, முட்டிக்கு முட்டி தட்டினா தான் உண்மைய ஒத்துப்பாங்க போல இருக்கு.' மிரட்டினார் அந்த காவல் அதிகாரி.

'ஸ்டேசன்ல நா கவனிக்கிற கவனிப்பில, நானே உனக்கு கடவுளக் காண்பிக்கிறேன். முதல்ல நட ஸ்டேசனுக்கு' அதிகாரி சொல்லிக்;கொண்டிருக்கும் போதே இரண்டு கான்ஸ்டபிள்கள் இருவரது கைகளுக்கும் விலங்கு மாட்டி தரதரவென்று இழுத்துக்கொண்டு போய் வண்டியில் ஏற்றினார்கள்.

'கடவுளே நீதான் என்னைக் காப்பாற்று...' உயரத்தெரிந்த கோபுரத்தை அண்ணாந்து பார்த்துக் கூவினான் இளைஞன். கைவிலங்குகளுடன் அவனுக்கருகில் அமர்ந்திருந்தார் கடவுள்.

வண்டி காவல் நிலையம் முன்பாக நின்றது.

'ஊம்......ஊம்.... சீக்கிரம் இறங்குங்க.' அதிகாரதோரணையில் கட்டளையிட்டான் கான்ஸ்டபிள். கடவுள்; காவல் அதிகாரியைத் தொடர்ந்து நடர்ந்தார்.

'கான்ஸ்டபிள் இவங்க கேஸைப் பைல் பண்ணிப்போட்டு ரெண்டு பேரையும் எதிர்க்க எதிர்க்க இருக்கிற செல்லுகள்ல தனித்தனியா போட்டுரு. நாளைக்கு காலைல முதல் வேலையா இவங்கள விசாரணை பண்ணணும். ரொம்ப ஆபத்தான தீவிரவாதிங்க போல தோனுராங்க. ஆளுக்கு ரெண்டு கான்ஸ்டபிளை ராத்திரி பூரா காவலுக்குப் போடு' கட்டளைகளைப் பிறப்பித்துவிட்டு, தனது தொப்பியை எடுத்து தலையில் மாட்டிக்கொண்டு ஜீப்பை நோக்கி நடந்தார் காவல் அதிகாரி.

கேஸைப் பைல் பண்ணிவிட்டு, இருவரையும் இழுத்துக்கொண்டு போய் இரண்டு செல்களில் போட்டான் கான்ஸ்டபிள். கம்பிக்கதவுகளுக்கு வெளியே துப்பாக்கியை நீட்டியபடி இரண்டு கான்ஸ்டபிள்கள் நிறுத்தப்பட்டனர். அவர்களின் செயல் சிரிப்பை மூட்டியது கடவுளுக்கு. நாள் முழுதும் நடந்த அயர்ச்சியுடன் கம்பிக் கதவுகளுக்குள் அடைபட்டிருந்த சுவரின் ஓரமாக சாய்ந்து கண்களை மெதுவாக மூடினார் கடவுள்.

மறுநாள் காலை காவல் நிலையம் பெரும் பரபரப்பாக இருந்தது. இளைஞன் நின்றுகொண்டிருந்த செல்லுக்கு எதிர்ப்புறமாக இருந்த அறையின் கம்பிக்கதவுகளில் போடப்பட்ட இரும்புப் பூட்டு அப்படியே தொங்கிக்கொண்டிருந்தது.

அனைத்துப் பத்திரிகைகளின்; முதல் பக்கத்திலும் முக்கிய செய்தியொன்று வெளியாகியிருந்தது.

'அண்ணாநகரில் கடவுள் என்று தன்னைச் சொல்லிக்கொண்டு திரிந்த பெரியவர் பலத்த பாதுகாப்பின் மத்தியில் காவல் நிலையத்திலிருந்து மாயமாக மறைந்து விட்டார்;'



.. முற்றும் ..


உதயன்(கனடா),
11 யூலை 2008