இது இவர்களின் காலம்

அகில்

நேரம் இரவு பன்னிரண்டு மணியை நெருங்கிக்கொண்டிருந்தது. அபார்ட்மெண்ட் பல்கனியில் நின்றுகொண்டு ரோட்டை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் கௌரி. தீபாவை இன்னும் காணவில்லை. வீட்டிற்குள் இருக்கவும் முடியாமல், பல்கனியில் நிற்கவும் முடியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவித்துக்கொண்டிருந்தாள் கௌரி. உள்ளே இரண்டாவது மகள் துளசி உறங்கிக்கொண்டிருந்தாள். நேரம் நகர்ந்துகொண்டே போனது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மனித நடமாட்டமே இல்லாமல் எங்கும் ஒரு நிசப்தம். மெல்லிய குளிர் காற்று உடலை தழுவிச் செல்ல பல்கனியில் கிடந்த கதிரையில் சாய்ந்துகொண்டாள் கௌரி. தீபாவை இன்னும் காணவில்லை.

பத்து வருடங்களுக்கு முன்னர் திடீரென்று கணவன் மாரடைப்பால் இறந்து போக இரண்டு பெண் குழந்தைகளையும் வளர்த்தெடுக்க கௌரி பட்ட சிரமம் அவளுக்குத்தான் தெரியும். அன்பும், அளவான கண்டிப்போடும் தான் பிள்ளைகளை வளர்த்தாள். 'தகப்பன் இல்லாமல் வளர்ந்த பிள்ளையள். நாளைக்கு ஒரு கெட்ட பெயரையும் சம்பாதிக்கக் கூடாது' என்பதை சொல்லிச் சொல்லியே வளர்த்தாள். 'சிங்கிள் மதராக'ப் பதிஞ்சதில் அரசாங்கம் இருக்க இடமும், வசிப்பதற்கு கொஞ்சம் பணமும் தந்தது. போதாததற்கு கௌரி ஒரு; துணிக்கடையில் தையல் வேலைக்கும் போய் வந்தாள். மனத்தைரியமும், நேர்மையும், துணிச்சலும் உள்ளவள் தான் கௌரி. அதனால்தான் அவளால் இவ்வளவு காலமும் கண்ணியமாகத் தன்னையும், தன் பிள்ளைகளையும் கவனித்துக்கொள்ள முடிந்தது.

மூத்தவள் தீபா கல்லூரிப் படிப்பை முடித்து, இப்போது பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கிறாள். கணணித்துறையை அவள் விருப்பம் போலவே தெரிவு செய்ய அனுமதித்தாள் கௌரி. இளையவள் துளசி. அடுத்த வருடம் கல்லூரிக்குச் செல்லப் போகிறாள்.

'பிள்ளைகள் படித்து நல்ல ஒரு நிலைக்கு வரவேண்டும். அவர்களை நல்ல இடத்தில் கட்டிக்கொடுத்து நல்லபடியாக வாழ வைக்கவேண்டும்' இதுதான் கௌரியின் மண்டைக்குள் குடைந்துகொண்டிருக்கும் ஒரே சிந்தனை. அப்போதுதான் தனக்கும், தன் தையல் இயந்திரத்திற்கும் ஓய்வு கிடைக்கும் என்பது அவள் நம்பிக்கை.

'கிரீச்....' என்ற காதைப் பிளக்கும் ஓசையில் திடுக்குற்றுக் கண்விழித்தாள் கௌரி. காலை ஐந்து மணிக்கு இயங்கத் தொடங்கியவள் பல்கனியில் ஓய்ந்திருந்தவேளை கண்கள் சொருக கண்ணயர்ந்து விட்டிருந்தாள்.

அப்பார்ட்மண்டுக்கு முன்பாக கார் ஒன்று வந்துநிற்பது தெரிந்தது. கூடவே காதைப் பிளக்கும் ஓசையில் மேற்கத்திய இசையின் அதிர்வுகள். மகளைப் பற்றிய நினைவுகள் எழ அவசரமாக எழுந்து எட்டிப்பார்த்தாள்.

'முன் சீட்டில் இருக்கிறவள் தீபா போல இருக்கே...' கௌரியின் நெஞ்சில் பயம் பற்றிக்கொண்டது. அவளின் நினைப்பைப் பொய்யாக்காது தீபா கார்க் கதவைத் திறந்துகொண்டு இறங்கினாள். தீபாவின் வயதை ஒத்த வாலிபன் ஒருவன் உள்ளிருந்து கையசைத்து விடைகொடுத்தான். தீபா காரின் பின்பக்கக் கதவைத் திறந்து தனது புத்தகப் பையை எடுத்து தோளில் கொழுவிக்கொண்டு அப்பார்ட்மண்டுக்குள் நுளைவது தெரிந்தது.

கௌரிக்கு அந்த வானமே இடிந்து தன் தலையில் விழுந்துவிட்டது போல் இருந்தது.

'யார் இந்தப் பொடியன்........?'

கல்லூரியில் படிக்கும் காலத்தில் தீபாவுக்கு கஜன் என்ற 'போய்பிரண்ட்' இருந்தது அவளுக்குத் தெரியும். இரண்டு, மூன்று தடவைகள் தீபாவை 'பிக்கப்' பண்ண கல்லூரிக்கு சென்றவேளைகளில் தீபா கஜனுடன் பேசிக்கொண்டிருப்பதையும், தாயைக் கண்டதும் அவசரமாக அவனிடம் விடைபெற்றுக்கொண்டு ஓடிவருவதையும் கௌரி கண்டிருக்கிறார். அவனுடன் தீபா ஒருநாளும் வீட்டுக்கு வந்ததில்லை. அப்போதெல்லாம் இப்படி நேரம்தாழ்த்தி அவள் வீட்டுக்கு வருவதும் இல்லை. கஜன் தீபாவின் கல்லூரியில் ஒரே வகுப்பில் படிப்பவன் என்றும், படிப்பில் கெட்டிக்காரன் என்றும் தீபா தாயிடம் சொல்லியிருந்தாள். மகளிடம் பக்குவமாக சொல்லிப் பார்த்தாள் கௌரி. அவளோ,

'ஹீ ஈஸ் மை போய் பிரண்ட். நீங்க சொல்;;லுற மாதிரி ஆம்பிளைப் பிள்ளைகளைக் கண்டதும் பயந்து, நிலத்தைப் பார்த்துக்கொண்டு நடந்து வந்தால்; எல்லாரும் என்னைப் பார்த்து சிரிப்பினம். திஸ் ஈஸ் கனடா. நான் ஒண்டும் சின்னப்பிள்ளை இல்லை' என்றாள்.

'இந்த நாட்டு கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் அப்பிடி. ஆண்பிள்ளைகளும், பெண் பிள்ளைகளும் நண்பர்களாக பழகிற நாடு இது. ஒருத்தரை ஒருத்தர் தொட்டுப் பழகினாலும் கெட்ட எண்ணத்தோட பழகிற ஆட்களை அடையாளம் காணுற அளவுக்கு பிள்ளைகளுக்கு அந்த அறிவும் இருக்கிறது.' கௌரி தன்னைத் தானே தேற்றிக்கொண்டாள்.

'ஒரு அளவுக்கு மேல பிள்ளைகளைக் கண்டிக்கக் கூடாது' என்று நினைத்த கௌரி மகள் மீதிருந்த நம்பிக்கையால், அவளை அவள் போக்கில் விட்டிருந்தாள். அந்த நட்பும் காதல் வரை வளர்ந்திருந்தது மகளின் பேச்சுக்கள் மூலம் அறிந்து வைத்திருந்தாள்.

'ஆனால் இவன்.....?'

'இவன் கஜனில்லை...'

'புதியவன்.....!!'

பல்கலைக்கழகத்திற்கு போகத் தொடங்கி ஒரு வருடம் வரை தீபா ஒழுங்காகத் தான் இருந்தாள். இப்போது இரண்டு, மூன்று மாதங்களாகத் தான் அவளது போக்கில் சில மாற்றங்கள். கைத்தொலைபேசியில் நீண்ட நேரமாக அரட்டையடிப்பது, நேரம் தாழ்த்தி வீட்டிற்கு வருவது என்று தாயிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிக்கொண்டிருந்தாள் தீபா. ஜாடை மாடையாக கௌரி கண்டித்தும் தீபா தன் போக்கிலேயே இருந்தாள். அவள் வீட்டிற்கு வரும்போது தீபா அநேகமாக தூங்கிக்கொண்டிருப்பாள். காலையில் எழுந்ததும் அவரவர் தன்பாட்டில் தங்கள் தங்கள் அலுவல்களை நோக்கி பறக்கும் அவசரம்.

தாய் பிள்ளைகளுக்குள் கூட ஒருவரோடு ஒருவர் பேச எங்கே நேரம்?

கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுளைந்த தீபா, தாய் தன்னை உறுத்துப் பார்ப்பதைக் கண்டும் காணாதவளாக தனது அறையை நோக்கி நடந்தாள். கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு மகளை விசாரித்தாள் கௌரி.

'அம்மா, இன்றைக்கு 'ஸ்பெஷல் கிளாஸ்' இருந்துது. அது முடிஞ்சு ஒரு 'பிரெண்ட்' வீட்ட போயிற்று வாறன். அதுதான் கொஞ்சம் லேட்டாயிட்டுது...'

'கொஞ்சம் லேட்.....? இப்ப எத்தினை மணி தெரியுமோ?' என்றாள் மகளை ஆத்திரத்துடன் நெருங்கிய கௌரி.

'ஓ... அம்மா. எனக்கு உங்களோட கதைச்சுக்கொண்டிருக்க நேரமில்லை. நாளைக்கு எனக்கு 'எக்ஸாம்' இருக்கு. பிளீஸ்.... நாளைக்கு கதைப்பம்....'

'நாளைக்கு என்ன கதைக்கிறது? இப்ப எனக்கு மறுமொழி சொல்லு' என்றாள் கௌரி.

திரும்பி தாயின் முகத்தைப் பார்த்தாள் தீபா. தாயின் இறுகிய முகத்தைப் பார்த்ததும் தன்னை சுதாகரித்துக்கொண்டு 'சொல்லுங்க இப்ப உங்களுக்கு என்ன தெரியவேணும்?' என்றாள்.

'அது ஆரு 'பிரண்ட்'? இப்ப உன்னை கொண்டுவந்து 'ட்ரொப்' பண்ணினவனா அந்த 'பிரண்ட்'? இவ்வளவு நேரமும் அப்பிடி என்ன கதை உங்களுக்கு?' கௌரியிடமிருந்து சீறிப்பாய்ந்தன கேள்விக்கணைகள். ஒன்றும் பேசாமல் சுவரைப் பார்த்தபடி நின்றாள் தீபா. தாய் தனது விடயங்களில் தலையிடுவது அவளுக்கு பிடிக்கவில்லை.

அவளுக்கு கொஞ்சம் புத்திமதிகளைச் சொன்னாள் கௌரி. தீபாவின் முகம் இருண்டு கறுத்தது.

'ஸோ வட்? இப்ப நான் என்ன பெரிய பிழை செய்துட்டன். ஹீ ஈஸ் மை போய் பிரண்ட்'

'நானும் அவரும் கதைச்சுக்கொண்டு இருந்தம். இண்டைக்குக் கொஞ்சம் லேட் ஆகீட்டுது. அதுக்கேன் இவ்வளவு அட்வைஸ் பண்ணுறீங்க. நான் மற்ற நாட்களில இப்பிடி லேட்டா வந்திருக்கிறனா? இன்றைக்கு மட்டும்தான் கொஞ்சம் லேட்டாகிட்டுது...'

மகளின் வார்த்தைகளைக் கேட்டதும் உடைந்துபோனாள் கௌரி. ஏழு அல்லது எட்டு மணிக்குள் வீட்டுக்கு வந்து சேரவேண்டும் என்பது அவளது கட்டளை. அதை பிள்ளைகள் இருவரும் மீறியதே இல்லை. தோழிகளின் வீட்டில் சேர்ந்து படிக்கப் போவதாகக் கூறினால்;கூட நன்றாக விசாரித்து, அதை உறுதி செய்தபின்னரே அவர்களை அனுப்புவாள். தன்னுடைய கட்டுப்பாட்டில் பிள்ளைகள் நல்ல முறையில் வளர்ந்துவருகிறார்கள் என்றுதான் கௌரி நினைத்தாள். ஆனால் தீபா இன்று கதைத்த விதம் அவளது உறுதியை உடைத்துவிட்டது.

'முந்தி அந்தப் பெடியன் கஜனோட 'போய்பிரண்ட்' என்று சொல்லிக்கொண்டு திரிஞ்சனியல்லோ..... அது என்ன மாதிரி?' சந்தேகத்துடன் கேட்டாள் கௌரி.

'அம்மா அது... அவர் கொலிஜ்ஜில படிக்கேக்க..... அவன் என்ர 'போய்பிரண்டா' இருந்தார். பிறகு அவன நான் விட்டிட்டன். அவன் ஒழுங்கா படிக்கிறதில்லை. அவனுக்கு சரியான முறையில உடுப்பு உடுக்கக் கூடத் தெரியாது' என்றவள் தொடர்ந்தாள்.

'இவரின்ர பெயர் பிரதீபன். நல்ல பெடியன். படிப்பு... விளையாட்டு..... கராட்டி என்று சரியான 'அக்டிவ்'. பிரதீபன்ர குடும்பமும் நல்ல குடும்பம். நல்ல வசதியான ஆக்கள். நான் அவையளின்ர வீட்ட போயிருக்கிறன். நல்லா ஆக்களோட பழகத் தெரிஞ்ச ஆக்கள். பிரதீபன்ர அம்மா ஒரு பார்மஸியில வேலை செய்யிறா. அப்பாவும் ஒரு எக்கவுண்டன். நல்ல வசதியா இருக்கினம். ...'

'முந்தி அந்தப் பெடியன் கஜனோட சுத்தித் திரிஞ்சாய். இப்ப வேற ஒருத்தனோட சுத்திக் கொண்டு திரியிறாய். ஆரும் இதுகளைக் கேள்விப்பட்டால் எவ்வளவு வெக்கக் கேடு. உங்களை எல்லாம் வளர்க்க நான் எவ்வளவு கஸ்டப்படுகிறன். உனக்கு ஒரு தங்கச்சி இருக்கிறாள். நாளைக்கு அவள் உன்னப் பார்த்துத்தான் பழகப் போறாள்......' விசும்பினாள் கௌரி. தாயின் கண்கள் கலங்கியதும் ஓடி வந்து அணைத்துக்கொண்டாள் தீபா. உதட்டைக் கடித்துக்கொண்டு சிறிதுநேரம் பேசாமல் நின்றாள்.

'அம்மா.... இப்ப ஏன் அழுகுறீங்க. இது என்ர வாழ்க்கை. என்ர வாழ்க்கை எப்படி இருக்க வேணும் என்று நான் தான் முடிவெடுக்க வேணும். எனக்கு ஒரு ஆளைப் பிடிக்காட்டில் நான் எப்பிடி அவரோட வாழ ஏலும்? ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்து வராட்டில் விட்டுட்டு, எனக்;கு பிடிச்ச ஒரு ஆளை தெரிவுசெய்யிறதில என்ன பிழையிருக்குதம்மா? கஜனின்ர குடும்பத்தை விட இவை நல்ல வசதியான ஆக்கள்.' என்ற தீபா, தாயின் கைகளை அன்புடன் பற்றி,

'அம்மா... இன்றைக்கு நான் லேட்டாக வந்தது பிழைதான். இனி நான் லேட் பண்ண மாட்டன். ஐயாம் ரியலி வெரி சொரி. பிளீஸ் அம்மா.... சிரியுங்கோ அம்மா...' என்று தாயுடன் குழைந்தாள். கௌரிக்கும் தன்னை தேற்றிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

பதின்மூன்று, பதின்னாலு வயதிலயே காதல், கலியாணம் என்று அவசரப்பட்டுட்டு பிறகு கையில பிள்ளையோட 'டைவேர்ஸ்' எண்டு வந்து நிக்கிற எத்தனையோ இளம் பிள்ளைகளின் கதைகளை இந்த புலம்பெயர்;ந்த மண்ணில் அவள் கேள்விப்பட்டிருக்கிறாள். அந்த நிலைமை தன் பிள்ளைகளுக்கு வரக்கூடாது என்பதுதான் அவளது கவலை. மகள் சொல்லுவதிலும் ஏதோ உண்மை இருப்பது போலவும் பட்டது.

நாட்கள் நகர்ந்தன. தீபா தாய்க்கு கொடுத்த வாக்கைத் தவறாமல் கடைப்பிடித்தாள். எப்போதும் போலவே வேளைக்கு வீட்டிற்கு வந்துவிடுவாள். ஆனால் அவள் நடை, உடையில்தான் அதிக மாற்றங்கள் தெரிந்தன. மகளுக்கு அதிகம் கட்டுப்பாடுகளை விதிக்க கௌரியால் முடியவில்லை. பிரதீபன், தீபா காதல் வளர்ந்து நெருக்கம் அதிகரிப்பதை அவள் உணராமல் இல்லை. மகளின் படிப்பு முடியும் நாளுக்காகக் காத்திருந்தாள்.

யூனிவேர்சிட்டி முடித்து தீபா நல்ல வேலையில் சேர்ந்துகொண்டாள்;. இளையமகள் துளசியும் யூனிவேர்சிட்டிக்குப் போகத் தொடங்கியிருந்தாள். தீபாவுக்கு திருமணத்தை முடித்து வைத்துவிட்டால் ஒரு பெரிய பாரம் குறைந்துவிடும் என்று தீர்மானித்தாள் கௌரி. அப்போதுதான் தீபா அவள் தலையில் பெரிய கல்லைத் தூக்கிப்போட்டாள்.

அன்று வழமைபோல வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பியிருந்தாள் கௌரி. அவள் வந்து சிறிது நேரத்திற்குள்ளாகவே தீபாவும் வீட்டிற்கு வந்துவிடுவாள். நண்பர்களுடன் விருந்து, அல்லது எங்காவது போகிறாள் என்றால் முன்கூட்டியே தாயிடம் சொல்லிவிடுவாள். மாலை மயங்கும் வேளையாகியும் மகள் வீடு திரும்பவில்லை. யோசனையுடன் சென்று தொலைபேசியை சோதித்தபோது தீபாவின் கைத்தொலைபேசியிலிருந்து ஒரு செய்தி அனுப்பப்பட்டிருந்தது.

'அம்மா நான் தீபா பேசுறன். பிரதீப் வேலை அலுவலாக அமெரிக்கா போறார். நானும் அவரோட போறன். நீங்க யோசிக்க வேண்டாம். நாளைக்கு வந்துடுவன்'

அதிர்ந்துபோய் உட்கார்ந்து விட்டாள் கௌரி.

'தீபாவுக்கு எப்படி இவ்வளவு மனத் தைரியம் வந்தது?.....'

'ரெண்டு பேருமாகப் போய் அங்க ஒருநாள் தங்கியிருந்துபோட்டு வரப்போகினம் என்று கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் சொல்லிப்போட்டு போயிட்டாளே'

'ஏதாவது நடந்துதென்றால் என்ன செய்ய...?' தன்னையே நொந்துகொள்வதைத் தவிர அவளுக்கு வேறு வழி தெரியவில்லை.

'என்ர சம்மதம் கூட அவளுக்குத் தேவையில்லாமல் போயிட்டுது. வெளியில தெரிஞ்சால் வெக்கக்கேடு. சீ...'

'பொத்திப் பொத்தி வளர்த்தன். ரெக்கை முளைச்சவுடன தங்கட இஸ்டத்துக்கு பறக்க வெளிக்கிட்டுட்டாள்'

கௌரி தனக்குள் புலம்பினாள்.

'இன்னும் முறையாக கலியாணம் பேசி முற்றாக்க இல்லை. அதுக்குள்ள பறக்கிறாள். இது எங்கபோய் முடியப்போகுதோ?' ஒரே கலக்கமாக இருந்தது கௌரிக்கு.

திடீரென்று எதையோ நினைத்து எழுந்தகௌரி குளியல் அறைக்கு சென்று முகத்தைக் கழுவி வெளியில் செல்லத் தயாரானாள்;. துளசியை கதவை தாள்ப்பாழ் போட்டுப் பூட்டச் சொல்லிவிட்டு வெளியேறினாள்.

அண்மையில் பிரதீப் வீட்டிற்கு அவனுடைய பிறந்த நாள் விழாவுக்காக தீபா தாயை அழைத்துச் சென்றிருந்தாள். பிரதீபின் பெற்றோரைச் சந்தித்து பிரதீபனையும், தீபாவையும் கண்டித்து வைக்கும்படி கேட்டுக்கொள்வதற்காகவே அவள் இப்போது புறப்பட்டு வந்திருந்தாள். அவள் சொல்வதை அவர்கள் எப்படி புரிந்துகொள்ளப் போகிறார்களோ? என்று அவளுக்கு அச்சமாகவும் இருந்தது. திருமணத்திற்கு முன் பிள்ளைகள் இப்படி ஒன்றாக ஊர் சுற்றுவதை எந்தப் பெற்றோர்களும் அனுமதிக்க மாட்டார்கள் என்ற சிறுநம்பிக்கையுடன் தான் அவள் அவர்களின் வீட்டைத்தேடி வந்தாள்.

'தீபா இப்பிடி அடங்காமல் அவனோட வெளிக்கிட்டுத் திரியுறதைப் பார்த்து அவையள் எவ்வளவு அசிங்கமாக கதைக்கப் போகினம். ஆத்தைக்காரியும் விட்டிட்டாள் என்று என்னைத் தான் வாய்க்கு வந்தபடி சொல்லுவினம்' கௌரியின் மனம் எதையெதையோ நினைத்து சங்கடப்பட்டுக்கொண்டது.

கௌரி 'கோலிங்' பெல்லை அழுத்தியபோது பிரதீப்பின் அம்மா கதவைத் திறந்தார். ஆச்சரியத்துடன் அவளை வரவேற்று உபசரித்தார். உள்ளே பிரதீபனின் தந்தையார் அமர்ந்திருந்தார். தான் வந்த விசயத்தை எப்படிக் கதைப்பது என்ற தயக்கத்துடன் 'லிவிங்ரூமில'; கிடந்த சோபாவில் அமர்ந்துகொண்டாள் கௌரி.

'எங்க தீபா வரேல்லையா?' என்று அந்த அம்மாள் கேட்டபோதுதான் அவர்களுக்கும் தீபா பிரதீபுடன் சென்ற விசயம் தெரியாது என்பது புரிந்தது. தயங்கியபடி விசயத்தைச் சொன்னபோது அவர்களுக்கும் அதிர்ச்சிதான்.

'பிரதீப் இதைப்பற்றி எங்களோட ஒன்றும் சொல்ல இல்லை. தெரிஞ்சிருந்தால் நாங்கள் இப்பிடிப் போக விட்டிருக்கமாட்டம்' என்றார் சற்றே கோபம் தோய்ந்த குரலில் பிரதீபின் அப்பா. பிள்ளைகளின் காதல் விவகாரம் ஏற்கனவே அவர்கள் அறிந்ததுதான். இருவருடைய பட்டப்படிப்பும் நல்லபடி முடிந்துவிட்டது. இருவருக்கும் அவர்கள் விரும்பியது போலவே வேலையும் கிடைத்துவிட்டது. இனி என்ன தாமதம்? திருமணத்தை முடித்துவிடுவோம் என்ற முடிவுக்கு இருவீட்டாரும் வரவேண்டியதாயிற்று.

'பிள்ளையளின்ர காரியங்களை நாங்கதான் யோசிச்சு செய்திருக்கவேணும். அதுதான் அவையள் எல்லாத்திலயும் முந்தப்பாக்கினம்...' பொருள் பொதிந்த வார்த்தைகளை உதிர்த்தார் பிரதீபனின் அப்பா. கௌரி குறுகுறுக்கும் குற்ற உணர்வுடன் அமர்ந்திருந்தாள்.

'நீங்க தீபாவின்ர குறிப்பை ஒருக்கா எங்களுக்கு ஈமெயில் பண்ணிவிடுங்கோ. நான் நாளைக்கே கோயில்ல ஐயரிட்டக் குடுத்து ஒரு நல்ல நாளாகப் பார்க்கிறன்' என்றார் பிரதீபனின் அம்மா.

'கலியாணச் செலவையெல்லாம் இரண்டு பகுதியும் ஆளுக்கு அரைவாசியா பிரிச்சுக்கொள்ளுவம். எங்களுக்கு மகன் ஒரே பிள்ளையென்றதால பெரிய மண்டபமாக எடுத்துச் செய்யவேணும். கலியாணத்தை கோயில்ல சிம்பிளாக முடிச்சிட்டு, வரவேற்பை மண்டபத்தில வைச்சிருவம். பிள்ளையளும் அதைத்தான் விரும்புவீனம்' என்றார் பீரதீபனின் தந்தை.

'எங்கட பக்கத்தில இனசனம் அவ்வளவாக இல்லை. நான் கொண்டாட்டங்களுக்கு போறதும் குறைவு. என்னுடைய சகோதரர்களும், ஒரு பதினைஞ்சு, இருபது குடும்பங்களும் தான் எங்கட பக்கத்தில வருவீனம்' என்றாள் கௌரி. மகளின் திருமணம் திடீரென்று முடிவானதும் சந்தோசமும், ஒருவித பதட்டமுமாக இருந்தது.

அவர்களே எல்லாவற்றையும் பொறுப்பாய் பேசுவதும், பங்குகொள்வதும் கௌரிக்குச் சந்தோசமாக இருந்தது.

'தீபா சொன்னது உண்மைதான். நல்ல சனங்கள்'

வீட்டிற்குத் திரும்பும்போது அவள் மனம் இலேசாக இருந்தது. எதையெதையோ நினைத்துப் பயந்துகொண்டு வந்தாள். எல்லாம் நல்லபடியாகவே நடந்து முடிந்து, தீபாவின் கலியாணமும் நடக்கப் போகிறது. இந்த விசயத்தை மகளிடம் உடனேயே சொல்லவேண்டும் என்று பரபரத்த உள்ளத்தை கட்டுப்படுத்திக்கொண்டு அவர்கள் வரவுக்காக காத்திருந்தாள்.

மறுநாளே பிரதீப்பின் தாயார் தொலைபேசியில் தொடர்புகொண்டார்.

'வார ஆவணிக்கே கலியாணத்தை வைக்கலாம். ஐயர் ரெண்டு திகதி குறிச்சுத் தந்திருக்கிறார். தீபாவோட கதைச்ச பிறகு எந்த நாள் வைக்கலாம் என்று முடிவுசொல்லுங்கோ'

கௌரிக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. இவ்வளவு விரைவிலேயே மகளுக்குத் திருமணம் நடக்கப் போவதை அவள் நினைத்தும் பார்க்கவில்லை. மாதங்களை எண்ணிப்பார்த்தாள். பாதிப்பாரம் அப்போதே குறைந்துவிட்டது போல உணர்ந்தாள்.

அவள் விரைவாகச் செயல்ப்பட வேண்டியிருந்தது. உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது போன்ற உற்சாகம் தொற்றிக்கொண்டது. மற்றத் தமிழ் குடும்பங்களைப் போல அவள் தன் பிள்ளைகளுக்கு அவர்கள் பெரிய பிள்ளைகளானபோது செய்யும் கொண்டாட்டத்தைக் கூட செய்யவில்லை. சாதாரண சடங்கோடு நிறுத்தியிருந்தாள். அவள் வீட்டில் நடக்கப் போகும்..... அவள் நடத்தப் போகும் முதலாவது விசேசம் இதுதான்.

'இப்பவே சொன்னால்தான் வேலையில் லீவெடுக்கலாம்.....'

'யார்யாருக்கு சொல்ல வேணும் என்டு லிஸ்ட் போட வேணும்....'

'தீபாவுக்கும், துளசிக்கும் கொஞ்சம் நல்ல உடுப்புகள் எடுக்க வேணும்....'

செய்ய வேண்டிய காரியங்களைப் பட்டியில் போட்டபோது தலைக்கு மேல் பெருஞ்சுமை ஏறிவிட்டது போல் தோன்றினாலும், அது சுகமான சுமையாகவே இருந்தது. சந்தோசமாய் தலை நிமிர்ந்தபோது சுவரில் மாட்டியிருந்த புகைப்படத்திலிருந்து தீபாவின் அப்பா தன்னைப் பார்த்து முறுவலிப்பது போல ஒருகணம் அவள் உணர்ந்தாள். அவள் உடல் பரபரத்தது.

'அம்மா....' என்று அழைத்தபடி தீபா உள்ளே வரும்போது தான் அவள் சுயஉணர்வுக்கே வந்தாள். கூடவே பிரதீப். இருவரையும் அன்புடனும், ஆவலுடனும் நோக்கினாள் கௌரி.

வீட்டிலே பெரிய பூகம்பம் வெடிக்கப் போகிறது என்ற பயத்தில்தான் தீபா பிரதீபனை துணைக்கு அழைத்து வந்திருந்தாள். தாயின் முகத்தில் காணப்பட்ட சந்தோசத்தின் ரோகைகள் அவளுக்கு நம்பமுடியாமல் இருந்தது. தீபா மெல்ல உள்ளே நழுவ, தயங்கியபடி நின்ற பிரதீபை அமரச்சொன்னாள் கௌரி.

சற்றும் எதிர்பாராமல் திடீரென்று திருமணத்தைப் பற்றி கௌரி பேசவும் பிரதீப் சங்கடத்துடன் நெளிந்தான். மௌனமாக கௌரி சொல்வதையெல்லாம் கேட்டுத் தலையாட்டினான்.

'ரெண்டு பேரின்ர படிப்பும் முடிஞ்சிட்டுது. நீங்கள் நினைச்ச மாதிரியே ரெண்டு பேருக்கும் வேலையும் கிடைச்சிட்டுது. இனி இப்பிடிச் சுத்தித் திரிஞ்சுகொண்டு இருக்கக் கூடாது. நேரகாலத்தோட உங்கட கலியாணத்த முடிக்க வேணும்' என்ற கௌரி தங்களது திட்டத்தையும் சொல்லிமுடித்தாள். தீபா அதிர்ச்சியும், ஆச்சரியமுமாய் தாய் சொல்வதையெல்லாம் கதவருகில் நின்று கேட்டுக்கொண்டிருந்தாள்.

'அன்ரி, எங்கட கலியாணத்தைப் பற்றி நாங்கள் 'ஆல்ரெடி' கதைச்சிருக்கிறம். நீங்க தீபாவோட இதைப்பற்றி கதையுங்கோ' என்ற பிரதீப் அவசரமாக வெளியேறினான்.

பிரதீபனின் கார் புறப்பட்டுச் செல்லும்வரை காத்திருந்த தீபா தாயின் முன் வந்து நின்றாள். 'அம்மா உங்களை நாங்கள் கேட்டனாங்களோ எங்களுக்கு கலியாணம் செய்து வையுங்க என்று. எங்களுக்கு இப்ப கலியாணம் வேண்டாம்' என்றாள் பிடிவாதமாக.

புன்முறுவல் மாறாமலேயே 'இப்ப இப்பிடித்தான் சொல்லுவாய். கலியாணம் முடிஞ்சாப் பிறகு பார்...' என்றபடி மகளின் கன்னத்தைச் செல்லமாகக் கிள்ளினாள் கௌரி.

'இல்லையம்மா. நான் சீரியஸா சொல்லுறன். எங்களுக்கு கலியாணம் வேண்டாம். நானும் பிரதீபனும் இதைப் பற்றி ஏற்கனவே கதைச்சிருக்கிறம். எங்களுக்கு கலியாணம் செய்யுற ஐடியாவே இல்லை'

'என்ன பிள்ளை? அப்ப என்ன கலியாணம் கட்டாமல் குடும்பம் நடத்தப் போறீங்களோ? சீச்சீ..... என்ன அசிங்கமான கதை கதைக்கிறாய்? அதுதான் ரெண்டுபேருமாச் சேர்ந்து ஒன்றா வெளிக்கிட்டுத் திரியிரியளோ....'

'ஓம் நாங்க இப்போதைக்கு கலியாணம் செய்ய மாட்டம். உங்களுக்கு நாங்கள் ஒன்றா இருக்கிறது பிடிக்க இல்லையென்றால் நாங்கள் ஒரு அபார்ட்மெண்ட் எடுத்துக்கொண்டு போய் இருக்கிறம்.'

தலையில் இடிவிழுந்தது போல அதிர்ந்துபோனாள் கௌரி.

''லைப்ல செட்டில்' ஆகிறதுக்கு முதல் நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சுகொள்ள வேணும். 'லைப்லோங்' நான் அவரோட வாழுறதுக்கு அவர் சரியான ஆளா என்று நான் டிசைட் பண்ண வேணும். வாழ்க்கையை நல்லா 'என்ஜாய்' பண்ண வேணும். அதுக்குப் பிறகு..... வேணுமென்டால் கலியாணம்.....' தங்கள் திட்டத்தை விளக்கினாள் தீபா.

'இவ்வளவு காலமா போய் பிரண்ட், போய் பிரண்ட் என்று சுத்தித் திரிஞ்சாய். இன்னும் அவரை நீ புரிஞ்சுகொள்ள இல்லையா....? ஒன்றா இருந்து குடும்பம் நடத்திப் பார்த்துத் தான் தெரிஞ்சுகொள்ளுவியோ.....?'

'அப்ப பிரதீபன் உனக்கு ஒத்துவராட்டில் இன்னொருத்தனை பார்ப்பியா?' நெஞ்சுகொதிக்க மகளைப் பார்த்துக் கேட்டாள் கௌரி. இனம் புரியாத பயத்திலும், அதிர்ச்சியிலும் அவள் உடல் லேசாக நடுங்கியது. மகள் சொன்ன செய்தி அவளுக்கு புதிதாக இருந்தது.

'ஐயோ நான் வளர்த்த பிள்ளையா இப்பிடி?' தலையில் கையை வைத்துக்கொண்டு சோபாவில் போய் விழுந்தாள் கௌரி.

'அம்மா நான் அப்படிச் சொன்னனானோ? எங்களுக்கு இப்ப கலியாணம் செய்யுற ஐடியா இல்லை. இன்னும் ரெண்டொரு மாதத்தில நாங்கள் ஒரு அபார்ட்மென்டுக்கு போகப்போறம். அங்கதான் எங்கட 'லைப்ப ஸ்டார்ட்' பண்ணப் போறம்' என்றாள் தீபா.

'சீச்சீ வாய மூடு. என்ன கேவலமான கதை கதைக்கிறாய். என்ன ஆட்டக்காரத்தனம் இது? உந்த விளையாட்டெல்லாம் இந்த வீட்டில நடக்காது. ஒழுங்கு மரியாதையா நடக்கவேணும். எங்கட பண்பாடு, கலாச்சாரம் எல்லாத்தையும் மறந்திட்டியா? உனக்குப் பிறகு நான் துளசிய ஒருத்தனுக்கு கட்டிக்குடுக்க வேணும்' என்ற கௌரி முகத்தில் அறைந்தபடி அழத்தொடங்கினாள்.

'அம்மா திஸ் ஈஸ் மை லைப். நான் தான் 'டிசைட்' பண்ண வேணும். நான் மற்றவைக்காக பார்க்க ஏலாது...' என்ற தீபாவின் கன்னத்தை கௌரியின் கைகள் பதம் பார்த்தன.

'மரியாதையாக நான் சொல்லுறதைக் கேட்டு நட...' என்ற தாயை ஒருபுறமாக விலக்கிக் கொண்டு தன் அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டாள் தீபா.

மகளின் பேச்சிலும் செயலிலும் அதிர்ந்துபோய் உட்கார்ந்திருந்தாள்; கௌரி. எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்த துளசி, தாயை அணைத்து ஆறுதற்படுத்தினாள். மகளிடம் சண்டை போட்ட களைப்பிலும், அதிர்ச்சியிலும் கண்களை மூடிச் சோபாவில் சாய்ந்து உயிரற்ற பிணமாகக் கிடந்தாள் கௌரி. புயலுக்குப் பின்னான அமைதியைப் போல வீட்டின் உள்ளே பேரமைதி நிலவியது.

வெளியே கிரீச் என்ற சத்தத்துடன் கார் ஒன்று வந்து நிற்கும் சத்தம் கேட்டது. தொடர்ந்து காதை அடைக்கும் ஆபிரிக்க நாட்டு இசை. கௌரி மெல்ல நடந்து பல்கனியைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தாள். பிரதீபனுடைய கார் என்பதை அடையாளம் கண்டுகொள்ள அவளுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை.

'யேஸ் பிரதீப்.... ஓகே...' என்றபடி தன் கைத்தொலைபேசியை அணைத்தாள் தீபா. அரவம் கேட்டுத் திரும்பியபோது, தீபா தன் தோள்களில் ஒரு டிரவலிங்க் பையை மாட்டிக்கொண்டு கதவைத் திறந்துகொண்டு வெளியே போவது தெரிந்தது.

பல்கனிக்கு வெளியே பிரதீபன் கார் டிக்கியைத் திறந்து தீபாவின் கைகளில் இருந்த பையை வாங்கி உள்ளே திணித்துக்கொண்டான். முன்கதவு வழியாக தீபா காரில் ஏறி அமர்ந்துகொண்டாள். பிரதீபன் மறுபுறம் ஏறிக்கொள்ள கார் காற்றைக் கிழித்துக்கொண்டு பறந்தது.

பல்கனியில் நின்றுகொண்டு எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு மௌனமாக நின்றாள் கௌரி. மகளின் பேச்சையோ, நடந்த சம்பவத்தையோ அவள் மனம் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை.

நேரம் இரவு பன்னிரண்டு மணியை நெருங்கிக்கொண்டிருந்தது. அபார்ட்மெண்ட் பல்கனியில் நின்றுகொண்டு ரோட்டை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் கௌரி. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மனித நடமாட்டமே இல்லாமல்; இரவு நீண்டுகிடந்தது.

..........................................................................


தினக்குரல்,
13 யூன் 2010

ஈழநாடு (கனடா),
12 நவம்பர் 2010