கண்ணீர் அஞ்சலி

அகில்

வுனியாவில் இருந்து புறப்பட்ட யாழ்தேவி, மதவாச்சியை நெருங்கியபோது மதியம் ஒன்றரை மணியைத் தொட்டுவிட்டது. மதவாச்சி புகையிரத நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டதும் இறங்குவோர் இறங்க, ஏறுபவர்கள் சீட் பிடிப்பதற்காக முந்தியடித்தார்கள். பயணிகளோடு சேர்ந்து 'தெம்பிளி... தெம்பிளி..' என்று கூவிக்கொண்டு இளநீர் விற்பவர்கள், 'சோடா.. சோடா...' என்று கூவியபடி குளிர்பானங்களை விற்பவர்கள், 'வடே.. வடே...' என்று கூவியபடி கடலை வடை விற்பவர்கள்; என்று பெரிய கூட்டமே வண்டியில் ஏறி நிறைந்துகொண்டனர். அவர்கள் சுறுசுறுப்பாக தமது வியாபாரத்தை நடத்தியபடி ஒருவித அவசரத்துடன் முன்னகர்ந்து கொண்டிருந்தார்கள். வியர்வையின் நெடி, வெற்றிலை நாற்றம், சாராய வாடை இவற்றோடு கடலைவடையின் வாசமும் காற்றோடு கலந்து வந்தது. ரயில் பெட்டியின் யன்னல்கள் வழியாகத் தலையை வெளியே நீட்டிச் சிலர் காற்று வாங்கிக்கொண்டிருந்தனர்.

நான் ரயிலில்; யன்னல் அருகோடு அமர்ந்திருந்தேன். பசி வயிற்றைக் கிள்ளியது. யாராவது சோற்றுப் பார்சல் விற்கமாட்டார்களா? என்ற யோசனையுடன் என் கண்களை நாலாபுறமும் சுழலவிட்டேன். நான் அமர்ந்திருந்த மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டிக்குள் இரண்டு, மூன்று பெண்கள் இடுப்பிலே சீத்தையும், ரவுக்கையும் அணிந்துகொண்டு கைகளில் பெரிய கூடைகளை ஏந்திப்பிடித்தபடி ஏறினார்கள். அவர்களோடு சேர்ந்து நல்ல பொதிசோறின் வாசனையும் மிதந்துவந்தது. 'சோறு பார்சல்... சோறு பார்சல்...' என்று கூவியபடி இரண்டொருவர் என்னைக் கடந்து சென்றனர். அடுத்ததாக வந்த பையனை மறித்து அவனிடமிருந்து ஒரு சோற்றுப்பாசலை வாங்கினேன். பார்சலைத் திறக்கும் முன்னே கருவாட்டுக் குழம்பின் வாசனை என் பசியை மேலும் கிளறியது.

அளவான சூட்டில் சாப்பாடு அந்தப் பசிக்கு தேவாமிர்தமாகவே இருந்தது. எப்படி வாங்கினேன்? எப்படி சாப்பிட்டு முடித்தேன் என்று எனக்கே தெரியாது. எதிரே அமர்ந்திருந்த ஒரு தமிழ் குடும்பம் தாங்கள் கட்டிக்கொண்டு வந்த உணவை இருவருக்கு ஒரு பார்சல் என்றவிதத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இடியப்பமும், சீனிச் சம்பலும் வாசமாக இருந்தது. வரவர ரயில் பெட்டிக்குள் நெருக்கம் அதிகரித்துக் கொண்டே வந்தது. வவுனியா, அனுராதபுரம், மட்டக்களப்பு, திருகோணமலை ரயில்கள் சந்திக்கும் முக்கியமான சந்தி இந்த மாகோசந்தி. எனவே அவற்றில் இருந்து சில பயணிகள் இந்த கடுகதி ரயில் வண்டியில் ஏறியிருந்தார்கள். விசில் சத்தத்தைத் தொடர்ந்து புகைவண்டி ஒரு குலுக்குக் குலுங்கியது. ரயில் மெதுவாக ஊர ஆரம்பித்தது.

தண்ணீரைக் குடித்துவிட்டு மிகுதிச் சோற்றுடன் வாழையிலையைக் கசக்கியபோதுதான் அது என் கண்களில் பட்டது. சாப்பாடு சுற்றி வந்த 'பேப்பரி'ன் இடதுபக்க மூலையில் அந்தப் படம் போடப்பட்டிருந்தது. இலையை எடுத்து எறிந்துவிட்டு, யன்னலினூடாக நன்றாக குனிந்து யாராவது வருகிறார்களா? என்று இருபக்கமும் பார்த்துவிட்டு, சாப்பிட்ட கையை சிக்கனமாகக் கழுவிக்கொண்டேன். வாசிப்பதற்காக வாங்கிவைத்திருந்த ஆங்கிலப் பத்திரிகையிலிருந்து ஒரு துண்டைக் கிழித்தெடுத்து ஈரம்போகக் கையைத் துடைத்தேன். அவசரமாக அந்தப் பேப்பரின் கசங்கல்களை நீவி விட்டு மீண்டும் படத்தை உற்றுப் பார்த்தேன். சந்தேகமே இல்லை. அது பார்த்தீபன் தான்!

என் கைகளில் மெல்லிய நடுக்கம்....

பார்த்தீபன்...!

பார்த்தீபன் யார் என்று நான் உங்களுக்குச் சொல்லியே ஆகவேண்டும்.

கிளிநொச்சியில் உருத்திபுரம் அவன் பிறந்து வளர்ந்த பூமி. செந்நெல் வயல்களும், தென்னந்தோப்புக்களும், தோட்டந்துரவுகளும் என்று எப்போதும் பச்சை பசேல் என்று வளங்கொழிக்க இயற்கை அன்னை கண்ணுக்கும், மனதுக்கும் குளிர்ச்சி தரும் பிரதேசம் அது. குளங்களில் தண்ணீர் நிறைந்து வழிந்துகொண்டே இருக்கும். இதமான குளிருடன் செம்மண் வாசனை காற்றில் கலந்திருக்கும். நெல்மணிகள் முதிர்ந்து, கனத்து, பாரத்தில் தலைசாய்த்து நிற்கும்.

பார்த்தீபன் பின்தங்கிய கிராமத்தில் பிறந்திருந்தாலும், படிப்பில் கெட்டிக்காரனாகவே இருந்தான். படிப்பு தவிர்ந்த மற்றைய நேரங்களில் வயலில் இறங்கி வேலைசெய்வான். மாடுகளை அவிழ்த்து மேயவிடுவான். பால்கறப்பான். அவ்வளவு கஷ;டங்களுக்கு மத்தியிலும் அவன் படித்து யாழ் மருத்துவபீடத்திற்குத் தெரிவாகியிருந்தான்.

பார்த்தீபன் யாழ்ப்பாணத்தில் எங்கள் வீட்டில் தங்கியிருந்துதான் பல்கலைக் கழகத்திற்குச் சென்று வந்தான். அப்போது நான் முகாமைத்துவ பீடத்தில் படித்துக்கொண்டிருந்தேன். இருவரும் உறவினர்கள் என்பதற்கும் மேலாக ஒரே வயதொத்தவர்கள் என்பதால் எங்களுக்கிடையில் ஒரு இறுக்கமான நட்பு நிலவியது.

சதா படிப்பு, படிப்பு என்று மூழ்கியிருந்த பார்த்தீபனின் வாழ்விலும் காதல் என்ற வசந்தம் வீசத்தொடங்கியது. அவள் பெயர் ஆனந்தி. சொந்த இடம் திருநெல்வேலி. எங்கள் வீட்டுக்கு முன் வீடுதான் அவளுடைய வீடு. நண்பன் என்ற முறையில் தன் காதல் விசயத்தை பார்த்தீபன் என்னிடம் தெரியப்படுத்தினான். நானும் அவனுடைய காதலுக்குப் பச்சைக் கொடி காட்டினேன். தினம் தினம் வெறும் பார்வைகளால் மட்டுமே பேசிக்கொண்டார்கள். ஒருநாள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பார்த்தீபனே அவளிடம் தனது காதலை வெளிப்படுத்தினான். ஆனந்தியும் அதை ஏற்றுக்கொண்டாள். எதுவித எதிர்ப்புகளும் இல்லாமல் அன்பு என்னும் நீர் ஊற்ற வளர்ந்தது காதல்.

ஆனந்தியின் பட்டப்படிப்பு மூன்று ஆண்டுகளுடன் முடிவடைந்திருந்த நிலையில் திருமணப் பேச்சு ஆரம்பமானது. தங்கள் மகள் ஒரு வருங்கால டாக்டரைக் காதலிக்கிறாள் என்பதை அறிந்ததும் ஆனந்தியின் தரப்பில் திருமணத்திற்கு பூரண சம்மதம் தெரிவிக்கப்பட்டது. ஆனந்தியின் படிப்பு முடிந்தகையோடு அவளுக்கு திருமணம் செய்துவைப்பதில் அவசரம் காட்டினர் பெற்றோர். ஆனால் அங்குதான் பிரச்சனையும் உருவெடுத்தது. பார்த்திபனிடம்; திருமணத்திற்கு சம்மதித்த பெற்றோர் நிபந்தனை ஒன்றையும் விதித்தனர்.

'அவுஸ்ரேலியாவில இருக்கிற எங்கட ரெண்டு பிள்ளையளும் எங்களுக்கும், மகளுக்கும் ஏற்கனவே ஸ்பொன்சர் செய்திருக்கினம். இவளின்ர படிப்பு முடியும் மட்டும்தான் பார்த்தனாங்கள். எங்களுக்கு அவளை உங்களுக்கு செய்துவைக்கிறதில எந்தப் பிரச்சனையும் இல்ல. ஆனால் கலியாணம் அவுஸ்ரேலியாவிலதான்' என்றனர்.

'என்ன கலியாணம் அவுஸ்ரேலியாவிலயோ?'

கல்லாய் சமைந்துவிட்டான் பார்த்தீபன். திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததில் மகிழ்ந்துபோயிருந்த பார்த்தீபனின் தலையில் இடிவிழுந்தது போலிருந்தது இந்த அறிவிப்பு. அவன் மறுத்தேவிட்டான். ஆனந்தி அவனிடம் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தாள்.

'அண்ணாவையள் எங்கள ஸ்பொன்சர் பண்ணியிருக்கினம். என்ர படிப்புக்காகத் தான் இவ்வளவு நாளும் அம்மா, அப்பாவையள் வெயிட் பண்ணினவெ. இப்ப நீங்கள் ஏலாது என்றால் எப்பிடி?....' என்றபடி கண்ணைக் கசக்கினாள் ஆனந்தி. பார்த்தீபன் தன் முடிவில் உறுதியாக இருந்தான்.

'நீங்க அங்க வரலாம் தானே. 'டொக்டர்'மாரை என்றால் 'ஸ்பொன்சர்' பண்ணுறதும் சுகம் எண்டு அண்ணா சொன்னவர். அங்க உங்களுக்கு கிளினிக் ஒண்;டும் போட்டுத்தாற மாதிரி கதைச்சவையள். அங்கயென்டால் எல்லா வசதியளோடயும் இருக்கலாம். இங்க மாதிரி நாட்டுப் பிரச்சனையும் இருக்காது. ஒருத்தருக்கும் பயப்பிடத் தேவையில்லை. உங்களப் போல டொக்டர்மாருக்கு அங்க நல்ல உழைப்பாம்' என்று பார்த்தீபனின் மனதைக் கரைக்க எவ்வளவோ பேசிப்பார்த்தாள் ஆனந்தி. பார்த்தீபன் அதற்கெல்லாம் மசியவே இல்லை.

அவன் சிறுவயது முதல் ஊரின் மீதும், தன் மக்கள் மீதும் அதீத பற்றுக்கொண்டவன். தான் மருத்துவப் படிப்பை முடித்ததும், தான் பிறந்து வளர்ந்த ஊரில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று அடிக்கடி சொல்வான். அப்படிப்பட்டவன் அவர்களின் விருப்பத்திற்கு சம்மதிப்பானா?

'என்ர உயிர் மூச்சு இருக்கும் வரைக்கும் இந்த நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேணும் என்றதுதான் என்ர விருப்பம். வெளிநாட்டு வசதி வாய்ப்புகளை விட நான் இந்த மண்ணையும், மக்களையும் நேசிக்கிறன். என்ர தாய் மண்ண விட்டு நான் எங்கயும் வரமாட்டன்' என்றான் உறுதியாக.

ஆனந்தி அழுது மன்றாடிக் கேட்டுப்பார்த்தாள். பார்த்தீபன் மறுத்தே விட்டான்.

'என்னோட என்ர ஊரில வாழ ஏலுமென்றால், நீர் எங்கட கலியாண விசயத்தைப் பற்றி பேசும். இல்லையென்றால் உம்மட விருப்பம் போல செய்யலாம்' என்று பிடிவாதமாகக் கூறிவிட்டான்.

தங்கள் படிப்பையும், டாக்டர் பட்டத்தையும் காட்டி எத்தனையோ டாக்டர்கள் சொந்த மண்ணை, சொந்த நாட்டை விட்டு வெளியேற தனது படிப்பு தனது மக்களுக்கு பயன்பட வேண்டும் என்று நினைத்த பார்த்தீபன் தன் காதலியின் ஆசைக்கு இணங்க மறுத்துவிட்டான். காதலா? தன் மக்களா? என்று வந்தபோது மக்கள்தான் என்று தனது காதலைத் தியாகம் செய்தான்.

முடிவில் ஆனந்தி தனது பெற்றோருடன் அவுஸ்திரேலியாவுக்குப் பயணமானாள்.

படிப்பு முடிந்ததும் பார்த்தீபனுக்கு அவனுடைய அயல் ஊரான தருமபுரத்திலேயே நியமனம் கிடைத்தது. நல்ல கைராசியான டாக்டர் என்ற பெயருடன் சந்தோசமாகத் தனது கடமையை ஆற்றினான். பின்னர் அந்த ஊரிலேயே ஒரு பெண்ணை மணந்துகொண்டான்.

காலங்கள் உருண்டோட கிளிநொச்சி மண்ணில் யுத்தம் தொடங்கியது. மண்ணை நம்பி விவசாயம் செய்து வாழ்ந்து வந்த மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு இடம்பெயரத் தொடங்கினர். எங்கும் குண்டுச் சத்தங்களும், மரண ஓலங்களுமே மிஞ்சின. இடம்பெயர்வுகள் தொடர்ந்தன.

தருமபுரம் மருத்துவமனை காயக்காரர்களால் நிறைந்து வழிந்தது. மருந்துப் பற்றாக்குறையோடு, மருத்துவர்கள் பற்றாக்குறையும் கொண்ட வன்னிப்பிரதேசம் அது. தொண்டர்கள் பலர் உதவிக்கு கைகொடுக்க இரவு, பகல் பாராமல் காயக்காரர்களைக் கவனித்தான் பார்த்தீபன். நாட்கள் நகர நகர போரின் அகோரம் கூடிக்கொண்டே போனது. கண்மூடித்தனமான இராணுவத் தாக்குதலில் தருமபுரம் அரசினர் மருத்துவமனை கூட மிஞ்சவில்லை.

அன்றும் அப்படித்தான் நடந்தது. அதிகாலையிலேயே ராணுவத்தினர் nஷல் வீச்சு ஆரம்பமாகிவிட்டது. பல்குழல் பீரங்கிகள் தொப்புத்தொப்பென்று விழுந்து தருமபுரம் பிரதேசமே அதிர்ந்துகொண்டிருந்தது. வைத்தியர்களும், வைத்தியம் தெரிந்தவர்களும் என்று வைத்தியசாலை ஓய்வின்றி இயங்கிக்கொண்டிருந்தது. திடீரென்று பாரிய வெடியோசையொன்று. பார்த்தீபனுக்கு பதுங்குகுழிக்குள் ஓடக்கூட நேரம் இருக்கவில்லை. மற்ற மருத்துவர்களைப் போலவே அவனும் இரண்டு காதுகளையும் பொத்திக்கொண்டு விழுந்து குப்புறப்படுத்தான். அடுத்த கணம் காதை செவிடுபடுத்தும் மற்றுமொரு இடியோசை. எங்கும் புழுதி மண்டலம். அடுத்தடுத்து நான்கைந்து nஷல்கள் மருத்துவமனைக் கட்டடம் மீது விழுந்து வெடித்தன. நோயாளர்கள், காயக்காரர்கள் பலர் இறந்து போனார்கள். வைத்தியர் ஒருவரும், தாதியர்கள் சிலரும் படுகாயமடைந்தனர். பார்த்தீபனுக்கும் வலது கையில் இரண்டு சன்னங்கள் துளைத்திருந்தன. கட்டிட இடிபாட்டுக்குள் மாட்டிக்கொண்டதில் காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது.

மருத்துவமனைக் கட்டிடம் முழுவதும் சேதமடைந்ததாலும், பாதுகாப்பின்மையாலும் வைத்தியசாலை இறுதியில் புதுமாத்தளன் பகுதிக்கும் இடம்மாறியது.

பார்த்தீபன் தனது மனைவியையும் இரண்டு வயது மகனையும் கூட்டிக்கொண்டு, தன் உறவினர்களோடு புதுமாத்தளன் பகுதிக்கு இடம்பெயர்ந்தான். அங்கு வைத்தியர்களுக்கு என்று போதியளவு விடுதி வசதிகூட இருக்கவில்லை. மக்களோடு மக்களாக மருத்துவமனையை ஒட்டி ஒரு கூடாரத்தை அமைத்துத் தனது குடும்பத்தை தங்க வைத்தான். அரைப்பட்டினி, கால் பட்டினி என்று நாட்கள் நகர்ந்தன. அந்தப் பகுதியில் பெரும் தொகையான மக்கள் தங்கி இருந்தனர். காயமடைந்து வைத்தியவசதிகள் ஏதுமற்று துடித்துக்கொண்டிருக்கும் குழந்தைகளைப் பார்த்தபோது பார்த்தீபனுக்கு தன்னுடைய காயங்கள், வலிகள், வேதனைகள் ஒன்றும் பெரிதாகத் தோன்றவில்லை. பார்த்தீபன் அங்கிருந்த மருத்துவமனையில் தனது பணியைத் தொடர்ந்தான். கூடார வெக்கைக்குள்ளும், மரங்களின் நிழலிலும் கிடந்த நோயாளர் பெரும் சிரமப்பட்டனர். பார்த்தீபன் தன்னால் முடிந்த மட்டும் ஓடியோடி அவர்களுக்கு உதவினார்.

இரண்டு, மூன்று நாட்களாக முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன், இரட்டைவாய்க்கால், இடைக்காடு, வலைஞன் மடம் பகுதிகளில் தொடந்து தாக்குதல் நடத்தப்பட்டது. பாதுகாப்பு வலயம் என்று அரசினால் அறிவிக்கப்பட்ட பகுதிகளே குறிவைத்துத் தாக்கப்;பட்டன. காயமடைந்தோர், இறந்தோர் உடல்கள் வந்து குவிந்துகொண்டே இருந்தன.

பார்த்தீபனைப் போன்ற வைத்தியர்களுக்கு கையறுநிலைதான். தம் இரண்டு கைகளால் எத்தனைபேருக்குத் தான் மருந்துபோட முடியும். நாள் தோறும் முன்னூறு, நானூறு வரையானோர் காயமடைந்தனர். அவர்களில் ஒரு தொகையினர் அடுத்தடுத்த நாட்களில் இறந்துபோயினர். காரணம் சாதாரண தலைவலி மாத்திரைகூட அவர்களிடம் இல்லைஎன்கிற நிலைதான். வெட்டும், கொத்தும் எல்லா வகையான கூரான ஆயுதங்களும் சிகிச்சைக்குப் பாவிக்கப்பட்டன. எல்லா வகையான துணிவகைகளும் காயக்கட்டுகளுக்குப் பாவிக்கப்பட்டன. கொதித்த நீர், சுண்ணாம்பு போன்றவைகளும் மருந்தாக பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருந்தன.

வெயில் வெக்கையிலும், மண்ணை அள்ளிக்கொண்டு வந்து கொட்டிய காற்றின் வீச்சிலும், கூடாரங்களிலும், மரங்களுக்குக் கீழும் காயப்பட்டுக்கிடந்தவர்கள் வேதனையில் துடித்துக்கொண்டு இருந்தனர். மருந்தின்றி வெறுமனே கட்டப்பட்டிருந்த நாள்பட்ட காயங்களிலிருந்து புழுக்கள் கூட நெளிந்தன.

'சர்வதேச நாடுகளில் கூட இந்த மனித இழப்புக்களைக் கேட்க யாருமில்லையா? பசியாலும், பட்டினியாலும் வாடும் இந்த உயிர்களின் பெறுமதி யாருடைய கண்களுக்கும் புலப்படவில்லையா? மனித உயிர்கள் இவ்வளவு மலினப்பட்டு விட்டதே' என்று பார்த்தீபன் தினமும் புளுங்கினான். பிறந்த குழந்தை முதல் பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள் என்று காயப்பட்டும், இறந்தும் கிடப்போரைக் காணக்காணப் பார்த்தீபனுள் அவர்களுக்காகச் சேவை செய்ய வேண்டும் என்ற வெறி கூடிக்கொண்டே வந்தது.

இப்போதெல்லாம் பார்த்தீபன் ஒரு இயந்திரத்தைப் போலவே செயற்பட்டான். எப்போது உறங்குகிறான். எப்போது விழிக்கின்றான் என்று அவனுக்கே தெரியாது. சாவுகள் கூட அவன் கண்களுக்கு சாமான்யமாகத் தெரிந்தன. இறந்தவர்கள் போக இருக்கிறவர்களுக்கு வேண்டியதை ஒரு இயந்திரத்தைப் போல செய்துகொண்டிருந்தான். எந்தக் குண்டுச் சத்தங்களும் அவனை இடஞ்சல் செய்யவில்லை. வலியின் வேதனையில் அழுது குளறும் மக்களின் அவலக் குரல்கள் மட்டுமே அவனுடைய காதுகளுக்குள் சதா கேட்டுக்கொண்டிருந்தன. இரவு பகல் பாராமல் நேயாளர்களுடனேயே சுழன்றான். சரியான மருத்துவ வசதியில்லாமல் அநியாயமாக அங்கவீனர்களாகிக் கொண்டிருக்கும் இளம்பிஞ்சுகளைப் பார்த்து அவனுடைய உள்ளம் வெதும்பியது. இயலாமையும், ஆற்றாமையும் சேர்ந்து அவனுக்கு இந்த உலகத்தின் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்தியது. தன்னுடைய குடும்பத்தைக் கூட மறந்துவிட்டு மருத்துவப்பணியில் ஈடுபட்டான்.

இந்த நிலையில் தான் பார்த்தீபனின் மகனும், மனைவியும் எறிகணைத் தாக்குதலுக்கு இலக்காகிக் காயமடைந்தனர். பார்த்தீபனின் மனைவி பித்துப் பிடித்தவள் போல அழுதுகுளறினாள். மகனுக்கு தலையில் பலமான காயம் ஏற்பட்டிருந்தது. நெற்றியில், கண் புருவத்திற்கு அருகில், அவன் பிஞ்சுக் கைகளில், வயிற்றில், கால் தொடையில் என்று அந்தச் சின்னஞ்சிறு சிசுவின் உடல் பூராவும் கட்டுப்போட்டிருந்தது. அவனை மடியில் வைத்துக்கொண்டு தடவித் தடவி மனைவி அழுதுகொண்டிருந்தாள். அவளுக்கும் தோள் பட்டையிலும், பின் முதுகிலும் கட்டுக்கள் போடப்பட்டிருந்தன.

'எல்லாம் உங்களால தான். இப்ப உங்களுக்கு சந்தோசம் தானே.... நான் அப்பவே வெளிக்கிடுவம், வெளிக்கிடுவம் எண்டு சொன்னனான். கேட்டனீங்களோ....' என்று பார்த்தீபனைக் கண்டதும் ஆவேசம் வந்தவளைப் போல கத்தினாள் அவள்.

காயப்பட்டுக் கிடக்கும் குழந்தையையும், மனைவியையும் பார்த்தபோது பார்த்தீபனாலும் தாங்க முடியவில்லைதான். தான் ஒரு டாக்டராக இருந்தும் தன் மனைவிக்கோ, மகனுக்கோ சரியான சிகிச்சை செய்ய முடியாமல் இருப்பதைக் காண மனம் வெறுத்தது பார்த்தீபனுக்கு. கிட்டவாக துப்பாக்கி வேட்டுக்களும், இராணுவ கவச வாகனங்களின் உறுமல்களும் கேட்டுக்கொண்டிருந்தன.

'சனமெல்லாம் கடல் வழியாகவும், தரை வழியாகவும் வெளியேறப்போகீனமாம். நாங்களும் அவையளோட போவம்' என்று புலம்பத்தொடங்கினாள். அவளது கோபத்திலும், பேச்சிலும் இருக்கும் நியாயம் பார்த்தீபனுக்குப் புரியாமல் இல்லை.

'நான் ஒரு டாக்டர். என்னுடைய உழைப்பு இப்ப இந்த மக்களுக்கு கட்டாயம் தேவை. இது எல்லாத்தையும் விட்டுவிட்டு என்னால வரஏலாது. நீர் மகனைக் கொண்டு போம். உதவிக்கு உம்மட அம்மா, சகோதரங்கள் இருக்கீனம் தானே....' பார்த்தீபன் சொல்ல கோபமாய் அவனைப் பார்த்தாள் மனைவி. மனைவியையும், மகனையும் வெளியேற்றி விட்டு தான்மட்டும் அங்கு தங்கிவிட உத்தேசித்தான் பார்த்தீபன்.

'நான் அரசாங்க ஊழியன். என்னை இராணுவம் ஒன்றும் செய்யாது. நான் என்ர கடமையைத்தான் செய்கிறேன். நீர் போம். எனக்கு ஒரு பிரச்சினையும் வராது. நீர் பிள்ளையைக் கவனமாக் கொண்டு போம்' என்றான்; பார்த்தீபன்.

மனைவியைத் தேற்றி அனுப்புவதே பெரும்பாடாக இருந்தது பார்த்தீபனுக்கு. அதைத்தவிர வேறு வழியிருப்பதாகவும் அவனுக்குத் தோன்றவில்லை. போரின் இடைவெளி குறைந்துகொண்டே வருகிறது. இந்த நிலையில் அவர்களை யுத்தத்திற்கு பலிகொடுக்க அவன் விரும்பவில்லை. கெஞ்சி, மன்றாடி, கோபித்து, அழுது என்று பல அஸ்திரங்களைப் பாவித்து மனைவியையும், குழந்தையையும் வெளியேற்றினான். இரவோடு இரவாக புறப்பட்ட மக்களுடன் தனது குடும்பத்தையும் அனுப்பிவைத்தான்.

மறுநாள் அதிகாலையே கடும் தாக்குதல் ஆரம்பமானது. அதிகாலை முதல் மதியம் பதினொரு மணிவரை புதுமாத்தளன் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை பரந்திருந்த மக்கள் மீதும் அங்கு இருந்த மருத்துவமனை மீதும் குண்டு மழை பொழிந்தன இராணுவத்தினரின் விமானங்களும், பீரங்கி மோட்டார்களும். கடற்கரை மணலினுள்ளும், கடலிற்குள்ளும், நடந்தது கோரத்தாக்குதல். மறைந்து தப்ப எந்த மறைவிடங்களோ, சிறுபற்றைகளோ இல்லாத அளவிற்கு ஓர் பேரழிவு. ஆயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். தப்பியோடிய மக்களும் கேடயங்களாகப் பிடிக்கப்பட்டு, புதுமாத்தளன் மருத்துவமனையை நோக்கி முன்னேறியது இராணுவம். ஏற்கனவே பிரயோகிக்கப்பட்ட இரசாயனக் குண்டு, மயக்க வாயுக்களினால் தாக்கப்பட்டு மயங்கிக்கிடந்த பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். தங்களால் இயன்றளவு கொலைவெறித் தாக்குதலை நடத்திய இராணுவத்தினர் எஞ்சியிருந்தோரை இழுத்துச் சென்றனர்.

இந்த நிலையில் தான் பார்த்தீபனைப் பற்றியும் பல்வேறு வதந்திகள் வெளியாகிக்கொண்டிருந்தன.

டாக்டர் பார்த்தீபன் அந்த கோரத் தாக்குதலில் கொல்லப்பட்டார் என்று ஒரு செய்தி தெரிவித்தது.

போராளிகளைப் பராமரித்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரிலும், அவர்களுக்கு ஆதரவாளர்கள் என்ற பெயரிலும் சில வைத்தியர்கள் கைது செய்யப்பட்டு இராணுவத்தினரின் சித்திரவதைக்கு உள்ளானார்கள். பார்த்தீபனும் அந்த வகையில் கைது செய்யப்பட்டிருப்பதாக ஒரு வதந்தி பரவியது.

எதையும் ஊர்ஜிதம் செய்ய முடியாமல் தமிழ் மக்கள் முட்கப்பி வேலிகளுக்குள் மௌனிகளாக முடங்கிக்கிடந்தனர்.

'இராணுவ வீரர்களாக இருந்தால் என்ன? போராளியாக இருந்தால் என்ன? டாக்டர்களுக்கு எந்த உயிர் என்றாலும் உயிர்தானே?' என்று பார்த்தீபன் அடிக்கடி சொல்வது என் ஞாபகத்திற்கு வருகிறது. துயரம் நெஞ்சை அடைக்க அந்தப் பத்திரிகைத் தாளை மறுபடி விரித்துப் பார்த்தேன்.

கண்ணீர் அஞ்சலி என்ற வாசகங்களுக்கு கீழ், இரு குத்துவிளக்குகளுக்கு மத்தியில் டாக்டர் பார்த்தீபனும், அவரது இரண்டு வயதுக் குழந்தையும் எந்தக் கள்ளங்கபடமும் அற்று சிரித்துக்கொண்டிருந்தனர்.

என் கண்களில் இருந்து விழுந்த இரு துளி கண்ணீர் திவலைகள் 'கண்ணீர் அஞ்சலி' என்ற அந்த வரிகளுக்கு அர்த்தம் கொடுத்து அழிந்து போயின.

...........................................

உதயன்(கனடா), 26 நவம்பர் 2010
 

ahil.writer@gmail.com