தேடல்

அகில்

னிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் உலகில் ஏதோ ஒன்றைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இக்கதையின் நாயகன் வரதனும் கூட ஏதோ ஒன்றைத் தேடிக்கொண்டு தான் இருக்கிறான். வருடங்கள் தோறும் அவன் தேடல் தொடர்கிறது. 'முரளி... முரளி...' என்று அவன் மனமும் உடலும் சதா அவனை தேடிக்கொண்டே இருக்கிறன.

முரளி வரதனுடைய பால்யநண்பன். ஒரே ஊரில் ஒன்றாகச் சுற்றித் திரிந்தவர்கள். தென்னந்தோப்புகள், வயல்வரப்புகள், குளம் குட்டைகள் என்று இவர்கள் கால்பதிக்காத இடமே இல்லையென்று சொல்லலாம். புளுதி மண்ணில் குளித்து, முதுகுப்புறத்தாலும், நெற்றியில் இருந்தும் வியர்வை முத்துக்கள் உருண்டோட விழுந்து, புரண்டு விளையாடும் அந்த விடலைப் பருவ வாழ்க்கை இனித் திரும்பப் போவதில்லை.

ஆனால் நண்பனுமா.....!!!

'முரளியைப் பார்க்கவேணும். ஒருதடவையாவது அவனைச் சந்திக்க வேணும்' என்று அவன் உள்ளம் துடித்துக்கொண்டிருந்தது. 'முரளி எப்படியிருக்கிறான்? என்ன செய்கிறான்?' என்ற எண்ண அலைகள் வரதனுடைய சிந்தனையில் சதா வட்டமிட்டுக்கொண்டே இருக்கும்.

முரளி தன் பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு பதின்ம வயதிலேயே வெளிநாடு போவதற்கு என்று கொழும்புக்குப் புறப்பட்டான். காரணம் நாட்டின் யுத்த சூழல்தான். பிறகு அவன் எங்கு போனான்? என்ன ஆனான்? எந்த விபரமும் வரதனுக்குத் தெரியாது.

காலஓட்டத்தில் வரதனும் வெளிநாட்டுக்கு ஏஜென்சியின் உதவியுடன் புறப்பட்டுவிட்டான். இரண்டு, மூன்று தடவை கள்ளப் பாஸ்போட்டில் புறப்பட்டு, பிறகு பிடிபட்டு பல நாட்டுச் சிறைகளிலும் வாசம் செய்தான். ஜேர்மன், சுவிஸ், பாரீஸ் என்று ஒவ்வொரு நாட்டின் எல்லைகளையும் திருடனைப் போல் நுளைந்து..... நாயாய்ப் பேயாய் அலைந்து.... பசி பட்டினியோடு ஒளித்து ஓடி..... கடைசியாய் கனடாவில் வந்து அகதியாய் தஞ்சமடைந்தான். இந்த நாடுகளில் எல்லாம் தன் சொந்தபந்தங்கள், அயலவர் என்று எத்தனையோ பேரைச் சந்தித்து விட்டான். அப்போதுதான் அவனுள் மெல்ல முளைவிடத் தொடங்கியது முரளியைப் பற்றிய தேடல். நாளாக நாளாக அந்தத் தேடல் வளர்ந்துகொண்டே போனது.

வரதனின் தேடல் தொடர்ந்துகொண்டிருந்தது. கனடாவின் காலநிலையைப் போல - கோடை காலத்தில் அடிக்கடி சிலுசிலுக்கும் மழைத்தூறல் போலவும், குளிர் காலத்தில் இன்பம் தரும் இளவெயில் போலவும் முரளியின் நினைவு அவனுள் வந்துபோகும்.

தினமும் வேலை, வீடு என்று வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தாலும் அவற்றுக்கு மத்தியிலும் முரளியைப் பற்றிய தேடல் எங்கோ ஒரு ஓரமாய் மனதின் விளிம்புகளில் அவனுள் ஒட்டிக்கொண்டே இருக்கிறது. அவனுடைய தேடல் தொடர்கிறது.

வரதன் தான் செல்லும் இடமெல்லாம் முரளியைத் தேடினான். அவனைப் பற்றிய ஒரு சிறு தகவலைத் தானும் பெறமுடியவில்லையே என்ற ஆதங்கம் வரதனுள் நண்பனைப் பற்றிய தேடலை மேலும் மேலும் அதிகரிக்கச் செய்தது. ஊர் ஒன்றுகூடலாகட்டும், களியாட்ட நிகழ்ச்சியாகட்டும், உறவினர்களின் கொண்டாட்டங்கள் ஆகட்டும் அவ்வளவு நிகழ்ச்சிகளுக்கு மத்தியிலும் நண்பனின் நினைவுவந்து தலைகாட்டிவிட்டுப் போகும். மனைவியை இருத்திவிட்டு இரண்டு, மூன்று தடவைகள் இவன் அந்த இடங்களையெல்லாம் சுற்றிச்சுற்றி வருவான்.

'என் நண்பனைக் காணமாட்டேனா?' என்ற ஏக்கம் அவன் விழிகளில் நிரம்பி வழியும்.

'அந்த ஆள் எங்க இருக்கிறாரோ.....?. இந்த மனுசன் உலகம் முழுக்க அந்த ஆளத் தேடுது......'

மனைவி சாந்தி சில சமயங்களில் புறுபுறுக்கத் தொடங்கிவிடுவாள். ஆண்டுகள் உருண்டோடியதே தவிர முரளியைப் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

அன்று சனிக்கிழமை. அவனுக்கு வேலை விடுமுறை. முக்கியமாக கடைக்குச் சென்று சாமான்கள் வாங்கிவரும் நாள் அது. சாந்தி வீட்டு வேலைகளைக் கவனிக்க, வரதன் தனியாகத் தமிழ் கடைக்கு வந்திருந்தான்.

கடைக்கு என்று ஒதுக்கப்பட்டிருந்த 'பாக்கிங் பிளேசில்' வாகனங்கள் நிறைந்திருந்தன. எங்கே வாகனத்தை நிறுத்துவது என்று தெரியாமல் கடையுடன் கூடிய அந்த பிளாசாவை ஒருமுறை சுற்றி வலம் வந்தான். அவன் வருவதற்குள் ஒரு கார் புறப்பட அந்த இடத்தைப் பிடிப்பதற்காக இன்னொரு வாகனம் தயாராகக் காத்து நின்றது.

'இது சரிவராது...' முணுமுணுத்தபடி தாடையை மெல்லச் சொறிந்தான். காருக்குள் புளுக்கமாக இருந்தது. காரின் பக்கக் கண்ணாடிகளை நன்றாக இறக்கிவிட்டான். சில்லென்ற காற்று முகத்தில் அறைந்தது. அந்த சுகத்தை அனுபவித்தபடி காத்திருந்தான்.

'எங்கட நாட்டில தான் nஷல்லடி, பொம்மரடி என்று சனம் சாகுதுகள். இதுகள் இங்க இருந்துகொண்டு சும்மா குடிச்சுக் குடிச்சு தங்களத்தாங்களே அழிச்சுக்கொள்ளுதுகள். கஷ;டப்பட்டு உழைக்கிற காசுகளை இப்பிடி......' வரதனுடைய காரைக் கடந்து சென்ற ஒரு பெண் அங்கலாய்ப்புடன் சொல்லிக் கொண்டுபோக வரதனுடைய கவனமும் அங்கு நிலைத்தது.

கடையோடு ஒட்டி நின்ற மரத்தோடு ஒருவன் விழுந்து கிடந்தான். முகத்தின் பாதியை பல நாட்களாக சவரம் செய்யப்படாத தாடி மறைத்துக்கொண்டிருந்தது. அழுக்கேறிய உடையும், சீவப்படாத பரட்டைத் தலையுமாக.....

சரியாக ஊரில் பார்க்கும் ஒரு பிச்சைக்காரனைப் போலவே தோற்றமளித்தான். வரதனுக்கும் அவனைப் பார்க்க வெறுப்பாகத்தான் இருந்தது. ஏதோ தலையை தூக்கி முணுமுணுப்பதும் மறுகணம் தலை தொங்கிப் போவதுமாக அவனைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது. அவனுடைய பையொன்று புற்களுக்கிடையே விழுந்து கிடந்தது.

வரதனைப் போலவே அந்த மரக்கிளைகளில் அமர்ந்திருந்த இரண்டு சிறுகுருவிகளும் திகைப்புடன் தலைசாய்த்து அவனைப் பார்த்துக்கொண்டிருந்தன. போவோர், வருவோர் கண்கள் ஒருவித அருவருப்புடன் அவனைப் பார்த்தன.

மின்னலாய் வரதனுள் ஒரு எண்ணம். அவசரமாய் காரை அப்படியே விட்டுவிட்டு, இறங்கி ஓடினான். அவனுக்கு அது இன்ப அதிர்ச்சிதான். அவனது கனவு இன்றுதான் பலித்தது.

ஆம் அது முரளிதான்!!!

அவன் முரளியே தான்!

வரதனுக்கு ஒரு நிமிடம் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. ஆனந்தத்தில் உடலில் ஒருவித படபடப்பு.

'டேய் முரளி... டேய் முரளி...' மரத்தோடு சாய்ந்து கிடந்தவனின் தோளைப் பிடித்து உலுக்கினான் வரதன். எவனை பல ஆண்டுகளாகப் பார்க்க வேண்டும், பேச வேண்டும் என்று துடியாய் துடித்துக்கொண்டிருந்தானோ அவன் தான் அங்கே விழுந்துகிடந்தான்.

பார்க்கவும், தொட்டுப் பேசவும் அருவருப்பான தோற்றத்தில்....!!!

துர்நாற்றமும், சாராயவாடையும் வயிற்றைக் குமட்டியது.

இது முரளிதானா.....?

வரதனுக்கு அவன் கண்களையே நம்பமுடியவில்லை. இதைத்தான் தெய்வச் செயல் என்பதா.....!

'எப்படியோ என் நண்பன் எனக்கு கிடைத்து விட்டான்.' வரதனின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

வரதனை யாரென்றே புரிந்துகொள்ளும் நிலையில் முரளி இல்லை. இருபத்தியிரண்டு வருடப் பிரிவு வரதனுக்கே அவனை அடையாளம் காணக் கடினமாகத்தான் இருந்தது. குடி போதையிலும், பசி மயக்கத்திலும் கிடக்கும் முரளி எப்படி வரதனை அடையாளம் கண்டுகொள்வான்?

'சின்ன வயதில் பார்த்த அதே சாயல்' வரதன் நண்பனின் தோள்களை பாசத்துடன் வருடினான்.

'டேய் முரளி என்னைத் தெரியுதாடா? என்னைப் பாரடா'

வரதன் அவனை உலுக்கினான். முரளி ஒரு முறை தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்தான். முரளியின் கண்களில் ஒரு சிறு மின்னல். ஆவலா? திகைப்பா? என்று அறியமுடியாமல் அவன் கண்கள் மலர்ந்து விரிந்தன. அவ்வளவு தான் மறுபடியும் தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டான். அவனுடைய கடைவாயில் வழியாக எச்சில் வடிந்துகொண்டிருந்தது. அவனைத் தொட்ட இடமெல்லாம் பிசுபிசுவென்று இருந்தது.

பளிச்சென்ற வெள்ளைநிற சேட்டும், நீலநிற அரைக்காற்சட்டையும் அணிந்து மாணவர் தலைவனாக பாடசாலை விளையாட்டுப் போட்டிகளின் போது முரளி அணிவகுத்து நிற்கும் காட்சி வரதனின் கண்களுக்குள் ஒருகணம் வந்து போனது.

'இவனுக்கு என்ன நடந்தது?'

'எதுக்காக இப்பிடிக் குடிக்கிறான்?'

'எப்ப இவன் கனடாவுக்கு வந்தவன்?'

'ஏன் இப்பிடி ரோட்டில கிடக்கிறான்?'

அடுக்கடுக்காய்ப் பல கேள்விகள் அவன் மனதுள் எழுந்தன. அந்தக் கேள்விகளுக்கெல்லாம் முரளி சுயநினைவுக்கு வந்தால் மட்டுமே விடைகாண முடியும். முழங்காலை முட்டுக்கொடுத்து முரளியை மெதுவாகத் தூக்கி நிமிர்த்த முயற்சிசெய்தான். திமிறி வழுக்கிக்கொண்டு போனான் முரளி.

'சுகந்தி... எங்கயடி போயிற்றாய்?'

'உன்னை விடமாட்டன்.....' ஏதேதோ முணுமுணுத்தன முரளியின் உதடுகள். திரும்பவும் முரளியை அணைத்து தூக்க முயற்சித்தான் வரதன்.

'என்ன அண்ண.... உங்களுக்கு தெரிஞ்சவரோ?' என்று கேட்டபடி அதுவரை நடப்பவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த இளைஞன் ஒருவன் உதவிக்கு வந்தான்.

'ஓம் தம்பி. ஒருக்கா பிடியுங்கோ இவரை காருக்குக் கொண்டுபோக வேணும்..' என்றான் வரதன். அந்த இளைஞனின் உதவியுடன் முரளியை நடப்பித்து ஒருவாறு கார் சீற்றில் உட்காரவைத்தான். சீற்றுடன் சரிந்து கிடந்தான் முரளி. அந்த இளைஞனுக்கு நன்றி தெரிவித்துவிட்டு காரை ஸ்ராட் செய்தான் வரதன்.

'விதுக்குட்டி. அப்பாவின்ர செல்லம்....'

'விதுக்குட்டி.... விது....' முரளி காற்றிலே கைகளை அசைத்தபடி முணுமுணுத்தான்.

'எடியேய்.... சுகந்தி... ' முரளியின் வாய் அந்தப் பெயர்களை அடிக்கடி உச்சரித்தது. இடையிடையே கெட்ட வார்த்தைகளும்....

'என்ர விதுக்குட்டி எங்கயடி?'

'ஆட்டக்காரி... தேவடியாள்....'

வழிநெடுகிலும் முரளி சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் ஏதேதோ பிதற்றிக்கொண்டிருந்தான். இந்தப் பிதற்றலுக்கும், முரளியின் இந்த நிலைமைக்கும் ஏதோ சம்மந்தம் இருக்கிறது என்று மனதுக்குள் நினைத்தபடி காரைச் செலுத்தினான் வரதன்.

வரதனின் காரைக் கண்டதும் முன் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த பிள்ளைகள் காரைச் சூழ்ந்துகொண்டனர். பிள்ளைகளைக் கண்டதும் முரளி 'விது... விது...' என்றபடி அவர்களை கையசைத்து அருகில் அழைத்தான்.

'ரெண்டுபேரும் விளையாடினது காணும் ஓடிப்போய் 'ஹோம்வேர்க்' செய்யுங்கோ' தன் பிள்ளைகளை விரட்டினான் வரதன். ஏதோ வித்தியாசமாய் உணர்ந்தவளாக சாந்தி வெளியே வந்தாள்.

'என்னப்பா...?' என்றபடி காரை நெருங்கியபோதுதான் பின்சீட்டில் கிடக்கும் முரளியைக் கண்டாள்.

'என்னப்பா? இதாரிது?.....'

'யாரென்று சொல்லுறன் முதல்ல அந்தக் கார்கதவைப் போய் திற வாறன்.....' என்றபடி காரில் இருந்து இறங்கினான் வரதன். புதியவன் மீது கண்களை படரவிட்ட சாந்தியின் முகம் சுருங்கிப்போனது.

'என்னப்பா.... ஆரிது....? தலைகால் தெரியாமல் குடிச்சுப் போட்டு கிடக்கிறார்! ஹூம்ம்..... சரியான மணமாய் இருக்குதப்பா....' மூக்கைப் பொத்திக்கொண்டு மெதுவாகச் சொன்னாள் சாந்தி.

'உந்த ஆராய்ச்சியளை எல்லாம் பிறகு செய்யலாம். முதல்ல இதைப்பிடி' என்றபடி முரளியின் பையை அவளுடைய கைகளில் திணித்தான். முகம் கோணலாக இரண்டு விரல்களால் அந்தப் பையை பெற்றுக்கொண்டாள். வரதன் முரளியை கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டு குளியலறைக்குக் கொண்டு வந்தான்.

'இனியாவது சொல்லுங்க? ஆரப்பா இது.....?' சாந்தியால் ஆவலை அடக்கமுடியவில்லை. வரதனிடமிருந்து நீண்ட பெருமூச்சொன்று வெளிப்பட்டது.

'யாரை நான் இவ்வளவு காலமும் தேடிக்கொண்டு இருந்தேனே அந்த உயிர்த்தோழன் முரளிதான் இது'

'என்னப்பா சொல்லுறியள்...!' என்றபடி ஆச்சரியமாய்க் கேட்ட சாந்தியிடம் நடந்ததை எல்லாம் ஒப்புவித்தான் வரதன்.

முதலில் முரளியின் முகத்தை மூடியிருந்த தாடியைச் சவரம் செய்தான் வரதன். சாந்தி முரளியின் சூவைக் கழட்டி உதவி செய்தாள். மதுவாடை வயிற்றைக் குமட்டியது. சாந்தியின் உதவியுடன் முரளியை குளிக்கச் செய்தான். வரதன் முரளியை 'சிங்'குள் இருத்தி, 'ஷவரை'த் திறந்து விட்டான். கொழுக்கியில் மாட்டியிருந்த துவாயை எடுத்து முரளியின் தலையைத் துவட்டிவிட்டான். வரதனுக்கென்று வாங்கியருந்த புதிய சேட் ஒன்றையும், சாரம் ஒன்றையும் கொண்டு வந்து வைத்துவிட்டுப் போனாள் சாந்தி.

குளித்ததில் முரளிக்கு போதை கொஞ்சம் இறங்கியிருந்தது. தலை கொஞ்சம் நிமிர்ந்திருந்தது. சிவந்த கண்களுடன் நண்பனை ஏறிட்டான். முகத்தில் எந்த சலனமும் இல்லை.

'முரளி... என்னை யாரென்று தெரியுதா?' ஆவலுடன் வரதன் கேட்க 'ம்ம்ம்...' என்று தலையாட்டினானே தவிர பதில் ஒன்றும் வரவில்லை. கண்கள் மட்டும் நீரைச் சொறிந்தன.

சாந்தி சூடாகப் பரிமாறிய உணவை அரக்கப்பரக்கச் சாப்பிட்டான். 'சரியான பசிபோல...' வரதனின் விழிகளில் நேசம் நிறம்பி வழிந்தது. நண்பனிடம் உடனடியாக பேச்சுக் கொடுக்க அவன் விரும்பவில்லை. போதை தெளிந்தபின் காலையில்; பேசலாம் என்று நினைத்தான். வரதன் காட்டிய விசிட்டர்ஸ் ரூமில் முரளி வந்து படுத்துக்கொண்டான். அவன் கட்டிலில் விழுந்த கொஞ்ச நேரத்திற்கெல்லாம் குரட்டை ஒலி கேட்கத்தொடங்கியது. வரதன் அறைக்குள் சென்று முரளி தூங்குவதைக் கொஞ்சநேரம் நின்று பார்த்துவிட்டு வெளியே வந்தான்.

வரதன் மனதில் புதிய தேடுதலுக்கான கேள்விகளின் அடுக்குகள்....

'முரளி கலியாணம் கட்டி.... பிள்ளையளும் இருக்குது போல....?'

'மனுசி கோவிச்சுக்கொண்டு பிள்ளையத் தூக்கிக் கொண்டு கனடாவுக்கு வந்துட்டுதோ.....?'

'மனுசியின்ர சகோதரங்கள் ஆராவது இங்க கனடாவில இருக்கினம் போல....?'

'முரளி ஏன் தன்ர குடும்பத்தோட இல்லை....? அவையளுக்க என்ன பிரச்சனை?'

'இவன் இவ்வளவு காலமும் கனடாவிலயே இருந்தவன்? எப்பிடி என்ர கண்ணில படாமல் போனான்?'

விடை தேட வேண்டிய பல கேள்விகள் அட்சய பாத்திரத்தில் இருந்து ஊற்றெடுப்பது போல அவனுள் நிரம்பி வழிந்தன.

எல்லாவற்றுக்கும் விடை நாளை தெரிந்துவிடும் என்று நினைத்தபடி அந்த அறைக்கதவைச் சாத்திவிட்டு தனது அறைக்கு வந்தான்.

வரதனுக்குத் தூக்கம் வரவில்லை. கட்டிலில் புரண்டு படுத்தான். சாந்தி எதுவும் பேசாமலேயே படுத்திருந்தாள். குடிகாரனை வீட்டுக்குள் கூட்டிவந்து கணவன் செய்யும் சிரமபரிகாரம் அவளுக்குப் பிடிக்கவில்லை. அவளுடன் வாதம் செய்ய வரதனும் விரும்பவில்லை. எனவே படுக்கையறையில் ஒரு அசாத்திய அமைதி நிலவியது. அந்த மௌனவெளியில் வரதனின் நினைவுகள் கடந்த காலத்தை நோக்கிப் பயணித்தது.

சரவணை என்பது அவர்கள் பிறந்து வளர்ந்த அழகான கிராமம். கிராமத்தைச் சூழ வயல்வெளிகளும், ஆங்காங்கே சிறிய பெரிய குளம் குட்டைகளும் இருந்தன. பசுமை நிறைந்த அந்தக் கிராமத்தில் மழைக்காலத்தில் மட்டும் வெள்ளம் நிறைந்து எங்கும் நீர் சூழ்ந்திருக்கும். வயல் எது? வரம்பெது? குளம் எது? குளக்கட்டு எது? என்று தெரியாமல் எங்கும் சேற்று மண்ணிறத்தில் வெள்ளம் தேங்கி நிற்கும்.

மழைக்காலம் என்றால் சிறுவர்களுக்கு மகிழ்ச்சிதான். பள்ளிக்கூடம் போகும்போதும், வரும்போதும் நீரில் கால் படாமல் போகவே மாட்டார்கள். முரளி வரதனையும், வரதன் முரளியையும் வெள்ளத்தில் தள்ளிவிட்டபடி விளையாடிக்கொண்டே பள்ளிக்கூடம் செல்வார்கள். இவர்களோடு மற்ற அயல் பிள்ளைகளும் சேர்ந்துகொள்ளுவார்கள். வழியில் தெருவில் போவோரின் எச்சரிக்கைகள் ஒன்றும் இவர்கள் காதுகளில் விழவே விழாது.

பாடசாலை முடிந்து வரும்போது, வயல்வெளிகளில் தேங்கி நிற்கும் நீருக்குள்; சிரட்டையை வைத்து மீன்குஞ்சு பிடிப்பார்கள். குருணி நண்டு பிடிப்பார்கள். நீர் நிறைந்திருக்கும் குளத்திற்குள் கல்லெறிந்து விளையாடுவார்கள். வரதனின் அம்மா அல்லது முரளியின் அக்கா கையில் பிரம்போடு வரும் வரை அவர்கள் விளையாட்டு தொடரும். வெள்ளை உடையில் படிந்திருக்கும் கறையைப் பார்த்ததுமே வரதனின் அம்மா சத்தம் போடத்தொடங்கிவிடுவாள்.

முரளிக்கு நீர் நிரம்பியிருக்கும் குளத்தில் குளிப்பதென்றால் மிகவும் பிரியம். வரதனுக்கோ நீச்சல் தெரியாது. அவன் கரையில் நின்று முரளி நீந்துவதைப் பார்த்துக்கொண்டிருப்பான்.

ஒரு மழைக்காலத்தில்தான் அந்தச் சம்பவமும் நடந்தேறியது. அப்போது வரதனுக்கு பதின்மூன்று அல்லது பதின்னான்கு வயதுதான் இருக்கும்.

ஒரு மம்மல் பொழுதில் விளையாடி முடித்துவிட்டு நண்பர்கள் எல்லோரும் பிரிந்து போனார்கள். முரளியும், வரதனும் வெள்ள நீரில் விளையாடியபடியே வீட்டுக்கு வந்துகொண்டிருந்தனர். மைதானம் தாண்டி வயல்வரப்புகளில் நடந்தார்கள். அருவிவெட்டு முடிந்திருந்த வயல்காணிகள் எல்லாம் வெள்ளத்தால் மூடியிருந்தன. வயலில் இருந்து பள்ளமான பகுதியை நோக்கி வெள்ளம் ஓடிக்கொண்டிருந்தது. அந்த நீரில் கால்களை நனைத்தபடியே நண்பர்கள் இருவரும் நடந்;தனர். வயல்களைத் தாண்டி அப்பால் நடக்க நடக்க வெள்ளம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

திடீரென்று வரதனின் கால் சறுக்கிக் கொண்டு போனது. பயத்தில் விக்கித்துப் போனான் வரதன். அவனை நீர் உள்ளே இழுத்துக்கொண்டது. வயல் வரம்பென்று நினைத்து வரதன் குளத்துக்குள் காலை விட்டுவிட்டான். விளைவு குளத்துக்குள் அவன் மூழ்கத் தொடங்கினான். எல்லாம் கண் இமைக்கும் சிறுபொழுதுதான். ஆனால் வரதனால் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் அது.

வரதனுக்கு மூச்சுத்திணறியது. எங்கேயோ இருண்ட ஒரு உலகத்தை நோக்கித் தான் பயணப்படுவது போன்ற ஒரு பிரமை. கைகளையும், கால்களையும் அடித்துப் பார்த்தான். கரையேற முடியவில்லை. எதிரே நிற்கும் நண்பனைத் தவிர ஒன்றும் தெரியவில்லை. அவனை நோக்கி கைகளை நீட்டி சத்தம் போட்டான். சேற்றுக்குள் கால்கள் புதைந்து யாரோ இழுப்பது போல இருந்தது. வெள்ளநீரும், சேறும் தொண்டைக்குள் கரித்தது. கத்தமுடியாமல் தொண்டை இறுகுவது போல இருந்தது. 'ஐயோ நான் சாகப்போறேன்' என்று வரதன் தனக்குள் நினைத்துக்கொண்டான். அது ஒருகணம் தான்.

அப்போதுதான் தன்னோடு பின்னால் வந்துகொண்டிருந்த வரதனின் சத்தத்தைக் காணவில்லையே என்று திரும்பிப் பார்த்தான் முரளி. வரதன் தண்ணீருக்குள் தத்தளித்துக்கொண்டிருந்தான். நண்பன் திடீரென்று நீருக்குள் மூழ்கத் தொடங்கியதும் ஒரு கணம் திடுக்குற்று அப்படியே நின்றுவிட்டான். மறுகணம் தன்னை சுதாகரித்துக்கொண்டு, 'ஐயோ... வரதன் குளத்துக்குள்ள விழுந்துட்டான். எல்லாரும் ஓடிவாங்க... ஓடிவாங்க...' என்று குரல் கொடுத்தான்.

அவர்கள் வருவதற்குள் வரதன் மூழ்கிப்போய்விடுவான் என்று முரளிக்குத் தோன்றியது. மெல்ல மெல்ல வெள்ள நீர் அவனை குளத்தின் நடுப்பாகத்தை நோக்கி நகர்த்திக்கொண்டிருந்தது. அந்த ஆழத்திற்குள் சென்று விட்டால் நண்பனைக் காப்பாற்ற முடியாது என்பது முரளிக்குத் தெரியும். புத்தகப் பையை கழற்றி எறிந்துவிட்டு, விநாடியில் முரளி நீரில் பாய்ந்து வரதனை நோக்கி நீந்தத் தொடங்கினான். சிறிது நேரத்தில் அவன் கைகளில் முரளியின் தலைமுடி கற்றையாகப் பிடிபட்டது. அப்படியே இறுகப் பற்றி கரைக்கு இழுத்துக்கொண்டு வந்தான். கரையை நெருங்கும் போது வேறு பல கைகளும் அவனுக்கு உதவிசெய்தன. வரதனின் அம்மா ஒப்பாரி வைத்து அழத்தொடங்கியிருந்தாள். நண்பர்கள் இருவரும் மூச்சு வாங்க ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். முரளி அவனைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான். நண்பனைக் காப்பாற்றியது அவனுக்குச் சந்தோசமாக இருந்தது. வரதனுக்குக் கண்களில் கண்ணீர் பொங்கிவழிந்தது. நண்பனை நன்றியோடு பார்த்தான். அவனுக்கு உயிர் கொடுத்த நண்பன் அவன்.

அன்று வரதனின் உயிர் தப்பியது முரளியால் தான். நண்பன் என்பதற்கு மேலாக தனது உயிரைக் காப்பாற்றியவன் என்பதாலும் வரதன் முரளி மீது அதிக பாசமாக இருந்தான். தன் உயிர்காத்த நண்பனை சந்திக்கவேண்டும், அவனுடைய வாழ்க்கை எப்படியிருக்கிறது என்று அறியவேண்டும். அவனுக்கு ஏதாவது உதவவேண்டும் என்ற ஆதங்கங்களே பின்னாளில் வரதனின் தேடலுக்குக் காரணமாய் அமைந்தன. பழைய நினைவுகளில் மூழ்கியபடி அப்படியே உறங்கிப் போனான் வரதன்.

வரதன் எத்தனை மணிக்குத் தூங்கப் போனாலும் காலையில் வழமையாக எழும்பும் நேரத்திற்கே கண்விழித்து விடுவான். குளியலறையில் சாந்தி குளித்துக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. பிள்ளைகள் தங்கள் அறைகளில் இன்னும் தூங்கிக்கொண்டு இருந்தார்கள். வரதன் அவசரமானான். நண்பனுடன் பேச அவனுக்கு நிறைய விடயங்கள் இருந்தன. தேனீர் தயாரிப்பதற்காக தண்ணீரை ஊற்றி எலெக்ரிக் கேத்தலில் வைத்துவிட்டு, முரளியின் அறையை நோக்கி நடந்தான்;. அறைக்கதவு லேசாகத் திறந்திருந்தது. நண்பனாக இருந்தாலும் ஒரு நாகரீகம் கருதி அறைக்கதவை இரண்டுமுறை தட்டினான். எந்தச் சத்தமும் இல்லை. கதவைத் திறந்து கட்டிலைப் பார்த்தான். முரளியைக் காணவில்லை. 'வோஷ;ரூம்' திறந்துகிடந்தது. மேசைமீது இருந்த முரளியின் உடமைகள் அடங்கிய பையும் காணாமல் போயிருந்தது. வரதனுக்கு மனம் திடுக்குற்றது.

'ஸ்... அதுக்கிடையில எங்கபோயிட்டான்?'

'முரளி..... முரளி.....' என்று அழைத்தபடி கதவைத் திறந்து வெளியேவந்து தேடினான். பதட்டம் வரதனை தொற்றிக்கொண்டது. எதிர் எதிர்ப்பக்கமாக இருந்த இரண்டு தெருமுனை வரையும் ஓடிச்சென்று பார்த்தான். முரளியைக் காணவில்லை. மறுபடி வீட்டிற்கு வந்து அறையிலும், வெளியிலுமாக நண்பனைத் தேடினான். அதற்குள் சாந்தியும் குளித்து, உடைமாற்றிக்கொண்டு வந்துவிட்டாள்.

'என்னப்பா.... என்ன அவர் இல்லையோ?' என்றாள் ஒருவித அச்சத்துடன். வீட்டின் நாலாபுறமும் அவள் பார்வை ஒரு அவசரத்துடன் படர்ந்தது.

'இல்லையப்பா காண இல்லை...' என்றபடி அந்த அறையை ஆராய்ந்தான்;. அப்போதுதான் மேசையில் கண்ணில் படும்படி வைத்திருந்த அந்த காகிதத்துண்டு கண்களிற் பட்டது. பரபரப்புடன் கடிதத்தை எடுத்துப் பிரித்தான்.

என் பிரிய நண்பனுக்கு,

நீ குடும்பம், குழந்தைகள் என்று சந்தோசமாக இருப்பதைப் பார்க்க எனக்குச் சந்தோசமாக இருக்கிறது.

தலையை நிமிர்த்தினான் வரதன்.

'அப்ப இவன்ர குடும்பம், குழந்தைகளுக்கு என்ன நடந்தது? எல்லாரையும் பிரிஞ்சு இருக்கிறானோ? நான் நினைச்சது சரியாத் தான் போச்சுது' பதில்களற்ற கேள்விகள் அவனுள் எழுந்து அடங்கியது. தொடர்ந்து படித்தான்.

குடும்பம், குழந்தை குட்டி என்று சந்தோசமாக வாழத் தெரியாத பாவி நான். எல்லாத்துக்கும் இந்த பொல்லாத பணம் தான் காரணம். அளவுக்கு மிஞ்சின பணம் குதிரை ரேஸ், சூது என்று என்ர வாழ்க்கை நாசமாப் போச்சு. மனுசியெண்டு வந்தவளும் என்னை ஒரு மனுசனா மதிக்க இல்லை. வெளிநாட்டுச் சட்டதிட்டங்கள் எல்லாம் அவளோட கைகோர்த்துக் கொண்டு என்னை காலவாரிப் போட்டுது.

நேற்று குடிவெறியில கிடந்த என்னைத் தூக்கிவந்து பசிக்கு சாப்பாடும் தந்து கவனிச்சதுக்கு நன்றி. உனக்கும், சகோதரிக்கும் நான் வீண் கரைச்சலைக் குடுத்துப் போட்டன். ரெண்டு பேரும் என்னை மன்னிச்சிருங்கோ. உங்கட உதவியை நான் மறக்க மாட்டன்.

வெளிநாடு வந்தபிறகு என்ர வாழ்க்கையில் பல பிரச்சனைகள். ஆணோ, பெண்ணோ வாழத் தெரியாமல் வாழ்;ந்தால் இதுதான் நிலமை. என்ர பிரச்சனைகளை எல்லாம் உனக்குச் சொல்லி உன்னையும் வேதனைப்பட வைக்க நான் விரும்பேல்ல. நான் போறன். என்னைத் தேட வேண்டாம்.

இப்படிக்கு,
உனது தோழன்,
முரளி.

கடிதம் இரத்தினச் சுருக்கமாக எழுதப்பட்டிருந்தது.

இவ்வளவு நாளும் தேடிக்கொண்டிருந்த நண்பன் கிடைத்து விட்டானே என்று பெரும் ஆறுதலாக இருந்தது வரதனுக்கு. அந்த ஆறுதலும் ஓர் இரவுடனேயே கொள்ளை போனது. செயலற்றுச் சில விநாடிகள் கல்லாய்ச் சமைந்திருந்தான்.

வுரதனின் தேடல் முற்றுப்பெறவில்லை. பல புதிய கேள்விகளுக்கான தேடல்கள் அவனுள் எழுகின்றன.

முரளியின்ர வாழ்க்கையில என்ன நடந்தது? அவன் இவ்வளவு காலமும் எங்க இருந்தவன்?

அவனுடைய மனைவி, பிள்ளைகளுக்கு என்ன நடந்தது?

முரளியின்ர குடும்பம் எங்கே இருக்கிறது?

அவன் ஏன் இப்பிடி அனாதையைப் போல, பைத்தியக்காரனைப் போல அலைஞ்சுகொண்டிருக்கிறான்?

என்னுடைய நண்பன் முரளி எங்க இருக்கிறான்?

'முரளி.... முரளி....' என்று வரதனின் உடலும் மனமும் சதா நண்பனையே தேடிக்கொண்டிருக்கிறன.


அவனுடைய தேடல்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

தேடல்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன..........!!!

.................................................


தினக்குறள்,
2011
ஈழநாடு(கனடா),
2011



ahil.writer@gmail.com