ரயில் சினேகிதம்

பொன் குலேந்திரன்

மொதலாம் மேடையை நோக்கி வரும் யாழ்தேவி கடுகதிப் புகையிரதம் காங்கேசங்துறையை நோக்கிப் போறுப்படுங். அது நிப்பாட்டப்படுங் இடங்கள் ராகம, வெயங்கொடை, பொலக்காவலை ஒளிபரப்பியில் கொழும்பு கோட்டை புகையிரத அறிவிப்பாளர் தனக்குத் தெரிந்த தமிழில் தமிழைச் சிங்கள உச்சரிப்பில்  அறிவித்துக்கொணடிருந்தார். அன்று என்றுமில்லாத கூட்டம். புதுவருடம் தமிழர்களும்; சிங்களவர்களும் கொண்டாடும் தினம். புதுவருடத்துக்கு யார் முதலில் வீட்டை போயடைவது என்ற போட்டியில் சனங்கள் புகையிரத ஸ்டேசன் பிளட்போர்மில் வந்து நிற்பதற்கு முன்னரே பாய்ந்து ஏறிக் கோர்னர் சீட் பிடிக்க நூறுமீட்டர் ஓட்டத்துக்குத் தயாராக நிற்பது போன்ற நிலையில் நின்றார்கள் சில பயணிகள்.. தெரிந்தவர்களின் உதவியுடன் மருதானை தெமட்டகொடை ரயில் செட்டுக்குப் போய் வசதியாக தங்களுக்கும் நண்பர்களுக்கும் கோர்னர் சீட்டைப்பிடித்வர்கள் பெட்டிக்கு வெளியே தலையை நீட்டியபடி தமது கெட்டித்தனத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்தனர்.

அதிகாலை மூன்று மணிக்கே அலாரம் வைத்தெழும்பி தன்னைத்தயார் செய்து கொண்டு தெஹிவளை பஸ் ஸ்டாண்டில் புறுக்கோட்டைக்குப் போகும் இலக்கம் 100 பஸ்சை காலை நாலரை மணி பிடித்து கொழும்பு கோட்டை புகையிரத ஸ்தானத்தை சுந்தரேசன் வந்தடைந்தபோது கோட்டை புகையிரத நிலையக் கடிகாரம்  காலை ஐந்து மணியைக் காட்டியது. புகையிரத ஸ்தானத்துக்கு அன்மையில் இருந்த ஆரியபவானில் காலைசாபட்டுக்கு ஆறு இட்டலிகளையும், சாம்பாரும். ஒரு தண்ணீர்ப் போத்தலையும்; வாங்கிக் கொண்டு டிக்கட் கொடுக்கும் இடத்துக்குப் போனான். நல்லகாலம் அதிக நேரம் கியூவில் நிற்காமல் ரெயில்வே வோரண்டைக் கொடுத்து, இரண்டாம் கிலாஸ் டிக்கட்டை வாங்கக் கிடைத்தது, சுந்தரேசனுக்குப்  பெரும் சந்தோஷம். டிரெயின் வரும் போது எப்படியும் பிளட்போர்மிலை நல்ல இடத்திலை நின்று பாய்ந்தேறி கோர்னர் சீட்பிடிக்கவேணும். வெகு தூரப் பயணம் அது தான் அவன் திட்டம்.

அவன் நினைத்தமாதிரி டிரெயின் பிளட்பாரத்தில் நிற்கமுன்பே அதோடு சேர்ந்து ஓடி ஏறி, வசதியான கோர்னர் சீட் ஒன்றைப் பிடித்துக்கொண்டான். அவன் இறங்கவேண்டிய ஸ்டேசன்; சுண்ணாகம். 255 மைல்கள், சுமார் எட்டுமணித்தியாலப் பயணம்.  தனது சூட்கேசை மேல் தட்டில்  வைத்துவிட்டு சீட்டில் உள்ள தூசியைக் கைக்குட்டையால் துடைத்து விட்டு எதோ சாதனை புரிந்தவன் போல் சுந்தரரேசன் அமர்ந்தான். சில நிமிடங்களுக்குள் அவன் இருந்த கொம்பார்ட்மெண்ட் பயணிகளால் நிறைந்து விட்டது. அக் கூட்டத்தில் புது வருடத்துக்கு ஊருக்குப் போகிறவர்கள் தான் அதிகம் இருந்தார்கள்.

சுந்தரேசன் ஊருக்குப் போவதற்கு காரணம் புதுவருடத்தை தன் குடும்பத்தோடு கொண்டாடவும், அதோடு தன் பெற்றோர் ஒழுங்கு செய்துள்ள பெண்ணைப் பார்த்து பிடித்ததா இல்லையை என்று ஒரு முடிவு எடுக்கவுமே.

சாதகப்பொருத்தம் பார்த்தாச்சு. நல்ல பொருத்தம். ஆக்களை விசாரிச்சாச்சு. பெண்ணின் தகப்பன் மகாலிங்கம், கொக்குவில் இந்துக் கல்லூரியில்; பி.எஸ்.சி பட்டம் பெற்ற சையன்ஸ்  டீச்சர். இன்னும் ஒரு வருடத்தில் ரிட்டையராக இருக்கிறார். அதற்கு முதல் தன் மகளுக்கு கலியாணம் செய்து வைக்க வேண்டும் என்பது அவர் திட்டம். தாயும் ஒரு பட்டதாரி டீச்சர்.  அவர்களுக்கு ஒரு பெண்ணும் ஓரு ஆணும் தான்  பிள்ளைகள். பொறுப்பு கிடையாது. பெண்ணுடைய தமையன் புண்ணியமூர்த்தி மகாஜனா கொலேஜிலை தகப்பனைப் போல சையன்ஸ் டீச்சர். மகள் பேராதனை யூனிவர்சிட்டியிலை பி.ஏ இறுதி ஆண்டு படிக்கிறாள். இன்னும் சில மாதங்களில் படிப்பை முடித்து பட்டதாரியாகிவிடுவாள். இது கலியாணத் தரகர் தம்பையா சுந்தரேசனின் தந்தை செல்லையருக்கு சொன்ன விபரம்.; இந்த விபரத்தை தகப்பன் செல்லையா மகனுக்கு போனிலை  சொன்னபோது படித்த குடும்பம் என்பதால் முதலில் அவன் பெண்பார்க்கத் தயங்கினான்.

பெண்ணின் குடும்பற்றிய  விபரம் கேட்டவுடன சுந்தரசேனுக்கு முதலில் அந்த கலியாணப்பேச்சில் அவ்வளவுக்கு திருப்தி; இருக்கவில்லை. அதன் முக்கிய காரணம், பெண் ஒரு வருஷத்திலை பிஏ பட்டதாரியாகிவிடுவாள். தன்னை விட அதிகம்; படித்திருப்பாள். அவள் குடும்பத்தில் எல்லோருமே படித்தவர்கள். ஆனால் தன் குடும்பத்தில் அவ்வளவுக்கு படிக்காதவர் தானும் தன் பெற்றோரும் என்பதை அவன்; அறிவான். செல்லையர் சுண்ணாகத்தில் பலசரக்கு கடைவைத்திருப்வர். சொந்தத்தில் வீடு. பத்துபரப்பில் ஊரெலுவில் தோட்டக்காணி. சுந்தரரேசனின் தம்பி சிவனேசன் பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். தாய் ஒரு  மருத்துவிச்சி. பட்டதாரிகள் உள்ள குடும்பத்தில்  இருந்து பேசிவந்த பெண் இருந்ததே அவனை யோசிக்க வைத்தது. தான் ஒரு பட்டதாரியாக இல்hத காரணத்தால் தனக்கு அக்குடும்பத்தில் மதிப்பிருக்காது என்று சுந்தரேசன் கருதினான். தனது சமரியில் இருக்கும் நண்பர்களோடு கலந்து பேசிவிட்டு போய் பெண்ணைத்தான் போய் பார்த்துப், பேசி கர்வம் உள்ளவளா என்ற பார்ப்போமே எனச் சுந்தரேசன் முடிவு எடுத்தான். சுந்தரேசனின் தந்தையின் வற்புறுத்தலினால் பெண்பார்க்க தன் ஓப்புதலைக் சுந்தரேசன் கொடுத்தான்.

பதின்ரெண்டாம் வகுப்போடு சுந்தரேசன் படிப்பை நிறுத்திக்கொணடவன். அவனது தாய்; மாமன் மகேசன், வவுனியா கச்சேரியில் தலமை கிளார்க்காக இருந்தார். அரசாங்கத்தில் வேலை செய்தால் பல சலுகைகள் கிடைக்கும். அதோடு நிரந்தரமான, பாதுகாப்பான, மாதம் மாதம் குறிப்பிட்ட திகதியில் சம்பளம் . வருடத்துக்கு இலவசமாக பணம் செய்ய 3 ரெயில்வே வோரண்டுகள். பல அரசியல்வாதிகளின் அறிமுகம் கிட்டும்.  இப்படி பல காரணங்களைக் காட்டி தன் மருமகன் சுந்தரசேனை மேலே படிக்க விடாது அரசாங்க சேவையில் தன்னைப் போல் கிளார்க்காக  சேர ஊக்குவித்தார். செல்லையருக்கு தன் மைத்துனர் சொன்னது தான் வேதவாக்காகப் பட்டது.

சுந்தரேசா நீ படித்தது போதும். மாமா சொல்வது போல அரசாங்கத்தில் வேலைக்கு சேர்ந்து விடு. எனக்கும் வயசாகி கொண்டு வருகிறது என்று தகப்பன் சொன்னது அவனுக்கு சரியெனப்பட்டது.

சுந்தரேசனின் மாமன் மகேசன் எதையும்; காரணம் இல்லாமல் செய்யமாட்டார். சுந்தரேசனைத் தன் மகள் ஜானகிக்கு திருமணம் செய்து வைப்பதே அவர் திட்டம். ஆனால் பாவம் சுந்தரேசன் வேலையில் சோந்து இரண்டு வருடத்துக்குள், ஜானகி தன்கூட வேலை செய்த ஒருவனைக் காதலித்து பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டாள். மகளின் செயல், மகேசனுக்கு எதிர்ப்பாராத ஏமாற்றத்தையும், கோபத்தையும் கொடுத்தது.

சுந்தரேசன் அரசாங்கத்தில் ஒரு கிலாஸ் ரூ கிளரிக்கல் சேவன்ட். தான் மேற் படிப்பு படிக்காதவன், என்ற தாழ்வு மனப்பான்மை அவனிடம் இருந்தது. படித்தவர்களோடு பேசிப் பழகுவதைத் தவிர்த்;தான்.   ஆனால் அரச சேவையில் சேர்ந்து தன் அதிகாரிகளிடம் வெகு விரைவில் நல்ல பெயர் வாங்கினான். காரணம் அவர்களின் கட்டளைகளை ஒன்றும் முறு பேச்சு அல்லாமல் செய்து முடிப்பவன். அதோடு சிங்களம் பிரச்சனையில்லாமல் பாஸ்செய்தவன். சீனியோரிட்டியின் படி அவனுக்கு இன்னும் சில மாதங்களில் கிலாஸ். 1 க்கு பதவி உயர்வு கிடைக்க இருந்தது.

தற்போது மலே வீதியில் உள்ள கல்வி இலாக்காவில் சுந்தரேசனுக்கு வேலை. அரசாங்கத்தில் பரிபாலான சேவைக்கான  சிஏஏஸ் (CAS) என்று அழைக்கப்படும் சோதனைக்குத் தன்னைத் தயார் செய்து கொண்டிருந்தான். என்றாவது ஒரு நாள் சுண்ணாகத்துக்கு தான் உதவி அரசாங்க அதிபராக நியமனம் பெற்றுப் போக வேண்டும் என்பது அவனின் கனவு.

                                                                                ♣♣♣♣♣

யாழ்தேவி ராகமைவை தாண்டியவுடன் அவனுக்குப் பசி வயிற்றை கிண்டியது. அன்று காலை மூன்று மணிக்கே எழும்ப, கோப்பி கூட குடிக்காமல் அவசரம் அவசரமாக பஸ் பிடித்தவன். ஆரியபவான் கட்டிக் கொடுத்த இட்டலி பார்சலைப் பிரித்துச் சாப்பிடத் தொடங்கினான். அவன் சாப்பிடுவதைக் கண்டதும, அவனுக்கு முன் இருந்த ஒரு குடும்பமும் காலை சாப்பாடடை உண்ண ஆரம்பித்தனர். காலை சாப்பாட்டை முடித்த பின்னர் தான் கொண்டு வந்த தண்ணீர்ப் போத்தலை எடுத்து மடக் மடக் என்று குடித்த பிறகு  சுந்தரேசனுக்கு தூக்கம் கண்ணை வருடியது, தன்னையறியாமலே கண்களை மூடிக் கொண்டான். 

பொல்காகவலை புகையிரத நிலையத்தில் சிங்களத்தில் அறிவிப்பாளரின் குரல் கேட்டு சுந்தரேசன் தூக்கத்தில் இருந்து விழித்தெழும்பி  பார்த்தபோது தன்னருகே  காலியாக இருந்த சீட்டில் ஒரு பெண் இருப்பதைக் கண்டான். வயது சுமார் இருபத்தைந்து மட்டில்  இருக்கும் என்பது அவன் ஊகம். பச்சை நிற சர்வாகமீஸ் அணிந்திருந்தாள். பேரழகி என்று சொல்லமுடியாது. ஆனால் துரு துருத்த கண்கள். மூக்குத்தி போட்டிருந்தாள். கழுத்தில் ஒரு சங்கிலி, காது இரண்டிலும் சிவப்புக் கல பதித்த தோடுகள். அதைத்; தவிர வேறு நகைகள் இல்லை. நெற்றியில் ஒரு கறுத்த நிறப் பொட்டு. அதனால் அவள் திருமணமாகாதவாளக இருக்கலாம் என சுந்தரேசனின் ஊகம். அவளின் எளிமையான தோற்றம் சுந்தரேசனுக்கு பிடித்துக்கொண்டது.

மன்னிக்கவும் நான் ஏறியது பொல்காகவலை ஸ்டேசனில். உங்களுடைய தூக்கத்தை குழப்பிப்போட்டேனா? அப்பெண் தமிழில் கேட்டாள்.

“எப்படி இவளுக்கு நான் ஒரு தமிழன் என்று தெரியும்?; என்று சுந்தரேசனுக்கு புரியவில்லை.

பரவாயில்லை. ஒரு சின்னத் தூக்கம் தான். இன்று காலை மூன்று மணிக்கே எழும்பிவிட்டேன்.  அது தான் என்றான் இளித்தபடி சுந்தரேசன்.

அப்போ நீங்களும் யாழ்ப்பாணமா போகிறியல்?

இல்லை சுண்ணாகம் ஸடேசனில் நான் இறங்க வேண்டும். அது சரி நான் தமிழ பேசுவேன் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?; சுந்தரேசன் பெண்ணிடம் தனது சந்தேகத்தைக்  கேட்டான்.

உங்கள் நெற்றியில் இருக்கும் திருநீறு காட்டிக் கொடுத்து விட்டது என்றாள் சிரித்தபடி அந்தப் பெண் தான் கொண்டு வந்த காலை சாப்பாட்டு பார்சலை அவிழ்த்தபடியே.

அவள் கொண்டு வந்திருந்தது இரண்டு சாண்விட்ச்சுகளும் ஒரு கதலி வாழைப்பழம் மட்டுமே. அது போதுமா அவளது பசி தீர்க்க. ஒரு வேளை தனது பருமன் அதிகரிக்காமல் இருக்க சாப்பாட்டில் கவனமோ என்னவோ?  என நினைத்தான் சுந்தரேசன். சாப்பிட்டுக்கொணடிருக்கும் போது அந்தப் பெண்ணுக்கு விக்கல் எடுத்தது.

அடடா அவசரத்திலை வரும் போது தண்ணீர் போத்தலைக் கொண்டு வர மறந்திட்டேனே என்று தன்னை நொந்து கொண்டாள் அவள்.

யோசிக்காதையுங்கோ. என்னிடம் தண்ணிப் போத்தல் இருக்கிறது. இந்தாருங்கோ உங்கடை  விக்கலையும, தாகத்தையும் தீர்த்துக் கொள்ளுங்கள். என்று தன்னிடம் இருந்த தண்ணீர் போத்தலை அவளிடம் நீட்டினான் சுந்தரேசன்.

தேவைப்பட்ட நேரம் தண்ணிர் தந்து உதவியதுக்கு மிகவும் நன்றி. அது சரி உங்கள் பெயர் என்ன?

என்னுடைய பெயர் சுந்தரேசன். நண்பர்களும், என்னோடு ஒபீசிலை வேலை செய்பவர்களும் சுந்தர் என்று தான்  என்னைச் சுருக்கமாக கூப்பிடுவார்கள், என்றான் அவன்  அப்பெண் திருப்பிக் கொடுத்த தண்ணிர்;ப் போத்தலை வாங்கியபடியே சுந்தரேசன்.

எண்டை பெயர் புனிதவதி. என்னை புனிதா என்று தான் கூப்பிடுவினம் அவள் கேட்காமலேயே தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள் அந்தப்பெண்...

காரைக்கால் அம்மையாரின் பெயர் என்று சொல்லுங்கோ. நல்ல புனிதமான பெயர். சுந்தரேசன் தனக்குத் தெரிந்த வரலாற்றை மறைமுகமாக  புனிதாவுக்கு எடுத்துக்காட்டினான்.

அது சரி நீங்கள் கொழும்பிலையா வேலை?

ஆமாம் கல்வி அமைச்சில் கினார்க்காக வேலை. சீ ஏ எஸ் பரீட்சை எடுக்க இருக்கிறன்.

அப்படியா? ஆந்தச் சோதனையில் பலத்த போட்டியிருக்குமே?.

எனக்கு தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மூன்று பாஷைகளும் தெரியும். அதாலை எனக்கு சி ஏ எஸ் கிடைக்கிற சான்ஸ் கூட இருக்கிறது என நினைக்கிறன்.

கொழும்பில தனியாகவா இருக்குறீர்கள்? புனிதா தொடர்ந்து கேட்டாள்.

இல்லை இல்லை தெஹிவளையில் அரசாஙகத்தில் வேலை ஆறு தமிழ் ஒபிசேர்ஸ் நடத்துகிற சம்மரியல் நானும் ஒருவன். இரண்டு பேர் ஒரு ரூமிலை இருக்கிறோம்.

அப்போ சாப்பாடு வெளியிலையா?.

வேறு என்ன செய்வது? சனி ஞாயிறுகளில், நாயர் என்ற மலையாளத்தான்  ஒருவன் சம்மரிக்கு வந்து சமைப்பான். எங்களுக்கு அவன் சமையல் பிடித்துக்கொண்டது. இது தான கொழும்பு வாழக்கை என்று அலுத்துக்கொண்டான் சுந்தரேசன்.

ஏன் குடும்பத்தை கொழும்புக்கு கூட்டிவந்து ஒன்றாக வாழலாமே? புனிதா கேட்டாள்.

குடும்பமா?. எனக்கு இன்னும் திருமணமாகவில்லை என்றான் சுந்தரேசன். இவளுக்கு தான் மச்சாளை மணக்க இருந்ததையும் அவள் அவளோடு வேலை செயத ஒருவனோடு ஓடிப்போனதைப் பற்றிய விபரத்தை இவளுக்குச் சொல்லி ஏன குடும்ப மானத்தைப் பகிரங்கப்படுத்துவான். அதோடு தான் பெண்பார்க்க போவதற்காகவே ஊருக்குப் போவதையும்; அவன் அவளுக்குச் சொல்ல விரும்பவில்லை.

யாழ்தேவி பகல் ஒனறுநு முப்பதுக்கு கோண்டாவிலுக்குப் போய்விடும் தானே? புனிதா கேட்டாள்.

ஏன் உங்கள் ஊர் கோண்டாவிலா?

ஆம் என்று சுருக்கமாக பதில் சொல்லிவிட்டு தனது கைப் பையில இருந்து லஷ்மியின் மிதிலாவிலாஸ் என்ற நாவலை எடுத்து வாசிகத் தொடங்கினாள்.

என்ன ஆச்சரியம் சுந்தரேசன் கூட லஷ்மியின் விசிரி.

அடடா நீஙகள் ஒரு லஷ்மியின் விசிரியா? சுந்தரேசன் புனிதாவைக் கேட்டான்.

ஆமாம் அவவுடைய பெண்மனம் போன்ற பல நாவல்களை வாசித்திருக்கிறன். புனிதாவிடமிருந்து பதில் வந்தது.

அப்படியா? லஷ்மி ஒரு எழுத்தாளினி மட்டுமல்ல ஒரு டாக்டர் கூட. தென் ஆபிரிக்காவில் பல வருடங்கள் வேலை செய்தவ. ஆனந்த விகடன் மூலம்  எழுத்துலகுக்கு அறிமுகமானவ. எனக்கும் அவ எழுதிய கதைகள் என்றாலேபோதும். குடும்ப பிரச்சனைகளை அழகாக தன் கதைகளில் படம் பிடித்து எழுதக் கூடிய எழுத்தாளினி என்றான்  சுந்தரேசன் தனக்கும் தமிழ் இலக்கியத்தில ஆர்வம் உண்டு என்பதை வெயிப்படையாக புனிதாவுக்கு சொல்லிக காட்டினான்.

அப்படியா. நீங்களும் தமிழ்நாவல்கள் வாசிப்பீர்களா?

கல்கியின் சரித்திர நாவல்கள் எல்லாமே வாசித்துவிட்டேன். அவர் அப்படியே எங்களை வாசிக்கும் போது சோழ, பல்லவ, பாண்டிய காலத்துக்கு கூட்டிசெல்வார். அவரது கற்பனைத் திறன் அபாரம்.

இருவரும் குறிப்பாக ஈழத்து தமிழ்; இலக்கியததைப் பற்றி பேசிக்கொண்டார்கள். நேரம் போனது அவாகள் இருவருக்கும் தெரியவில்லை..

புகையிரதம் அனுராதபுரத்தை அடைந்து விட்டது. பார்த்தியலா நாங்கள் சோழ சாம்ராஜ்யத்தை பேசிக் கொண்டிருந்த போது அனுராதபுரத்தை சோழரகள் ஆட்சி செய்ததை நினைவூட்டவோ என்னவோ அனுராதபுரத்துக்கு வந்துவிட்டோம். இன்னும் யாழ்ப்பாணத்துக்கு 120 மைல்கள் தூரம்தான். அரைவாசி தூரம் வந்துவிட்டோம் என்றாள் புனிதா.

மன்னிக்கவும் புனிதா. உங்கள் வாசிப்பை என் பேச்சு மூலம் திசை திருப்பிவிட்டேன்.. நீங்கள் தொடர்ந்து வாசியுங்கள். நான் சிறிது நேரம் தூங்கப்போகிறன். யாழ்ப்பாணம் ஸ்டேசன் வந்தவுடன் என்னை எழுப்பி விடுங்கோ என்றான் சுந்தரேசன்.

நிட்சயமாக. நீங்கள் நிம்தியாக தூங்குங்கள் என்று சொல்லிவிட்டு புத்தகத்தை தொடர்ந்து வாசிக்கத் தொடங்கினாள் புனிதா.

                                                                              ♣♣♣♣♣

செல்லையாவும் மனைவியும் சுந்தரசேனை அழைத்துக்கோண்டு பெண்பார்க்க போக புறப்பட்டபோது, தரகர் தம்பையாவும்; அவர்களோடு சேர்ந்து கொண்டார். 

தரகருக்கு தான் பேசிவந்த திருமணம் தடையின்றி முற்றாகி விட்டால் தனக்கு இரணடு புகுதிகளிடமிருந்தும் கிடைக்கும் தரகு பணத்தில் தன் மனைவியின் வைத்திய செலவுக்கு எடுத்த கடனைத் தீர்த்து விடலாம் என்று நினைத்தார்.

பெண் வீடு அவ்வளவு பெரிய வீடில்லை. முன் கேட்டைத் தாண்டியவுடன் ஒரு சடைத்த வேப்பமரம்.

பெண்ணின் தகப்பன் வாங்கோ வாங்கோ. நீங்கள் இந்த நேரம் வருவீரகள் என்று எதிர்பார்த்தனான். என்றார் இளித்தபடி. தன் மகன் புண்ணியமுர்த்தியை வந்திருந்த மாப்பிள்ளை வீட்டாருக்கு அறிமுகப்படுத்தினார் பெண்ணின் தந்தை. சுந்தரரேசன் சுற்று முற்றம் கண்ணோடம் விட்டான். மூன்று செர்டுபிகட்டுகள் பிரேம் போட்டு சுவரில் தொங்கிக்கோண்டிருந்தன, அப்படங்களுக்கு அருகே பெண்ணின் தமையனின் பட்டம் பெற்ற போது  உடையோடு எடுத்தபடம் வேறு. அவை குடும்பம் படித்த குடும்பம் என்பதை எடுத்துக்காட்டியது. தான் உவர்கள் குடுமபத்துக்குள மாப்பிள்ளையாகப் போனால் தனக்கு தக்க மரியாதை கிடைக்குமா என்றது அவன் மனம்.

விசாலாடசி இராசாத்தியை கூட்டிக்கொண்டு வாரும் பெண்ணின் தகப்பன் மனைவிக்கு குரல்கொடுத்தார் .

பெண்ணின் பெயர் ராசாத்தியா”?. மனதுக்குள்  சுந்தரேசன் சிந்தித்தான். பெண் கையில் சிற்றுண்டியோடு புதுக் காஞ்சிபுர பச்சை நிறச் சேலையொடு ஹாலுக்குள் பெண் வந்தபோது அவள் முகத்தைப் கண்டதும் சுந்தரேசனுக்கு ஒரே அதிர்ச்சி. நான் பாரக்க வந்த பெண் நான் ஏறகளவே ரயிலில் சந்தித்து பழகிய் புனிதாவா?. ஆனால் ராசாத்தி என்று பெண்ணின் தகப்பன் கூப்பிட்டாரே. வாயில் விரலை வைத்து சிந்தித்தான் சுந்தரேசன். 

என்ன சுந்தர் யோசிக்கிறியல்?. நான் ரயிலில் உங்களைச் சந்தித்த புனிதா தான்”, என்றாள் ஏதோ முன்பே அறிமுகமானவள் போல.

அப்போ ராசாத்தி என்ற உங்கள் அப்பா சொன்னாரே?

அது எனது செல்லப் பெயர். விட்டிலை அப்படித் தான் என்னைக் கூப்பிடுவினம் என்றாள் புனிதா

பெண்ணும் மாப்பிள்ளையும் ஏற்கனவே அறிமுகமானவர்கள் என்பதை அறிந்து எல்லோரும் வாயடைத்துப் போய் இருந்தார்கள். தரகர் தம்பையாவுக்கு உள்ளக்குள் மகிழ்ச்சி. இருவரும் ஏற்கனவே பேசித் தீர்மானித்துவிட்டார்கள் போல கிடக்கு என்றார் சிரித்தபடி தம்பையர்.

  ♣♣♣♣♣