தேவரின் மாமரம்

அன்புசிவா
               

தொண்ணுறு வயசுக்கும் அதிகமான பெரியண்ணாத் தேவர் படுத்த படுக்கையா மூன்று மாதக் காலத்திற்கும், அதிக நாளாயிற்று. மாடியில் கிடந்த கயித்துக் கட்டிலில் மரப்பாச்சி பொம்மையைப் போல மெலிந்து கிடந்தார். அருகில் கிடக்கும் எண்பது பக்க நோட்டு அவரின் கடைசி ஆறு ஆண்டுகளப் பற்றிய உடல் நிலையப் பரிசோதித்து மருத்துவர் எழுதித்தந்த குறிப்பேடு. கட்டிலுக்குக் கீழே மண்ணாலான எச்சில் துப்பும் கலயம், அதனருகே பழைய பிளாஸ்டிக் கவரில் பல கலரில் மாத்திரைகள் இருந்தன. என்னதான் தேவரின் மனைவியான கிழவி விழுந்து விழுந்து அந்திமக் காரியங்கள் என்று சொல்லப்பட்ட காலைக்கடன்களைச் சுத்தம் செய்வது, குளிப்பாட்டி விடுவது, வேட்டி மாத்தி விடுவது, வேளா வேளைக்கு சரியான உணவு, மருந்து மாத்திர தந்தாலும், அவர் இருக்கும் அறையும், அவர் உடம்பும் சிறிது துர்நாற்றம் வீசத்தான் செய்தது. தேவர் அவ்வப்போது தன் மனைவியைத் திட்டுவார். 'எனக்கு ஏன் இந்த மருந்து மாத்திர எல்லாம் தர்ற... கரைக்கிட்டா மூணு நா கஞ்சி, மாத்ர எந்த எலவும் தராதே. நானாவது நிம்மதியா உசிர உட்டுரேன்' என்பார். கிழவி வெடுக்கென அழுதபடி , 'கெழம் சும்மா கெட. ஓங்கள பாக்கதான் நா இருக்கேன்ல. ஆரம்பத்துல ஒரு தாலி, அறுபதுல ஒரு தாலி, எழுபதுல ஒரு தாலி மொத்தம் மூணு தாலி நீ கட்டுனதை சுமக்கிறேன். கவனிக்காம வுட்டுறுவேனா? ஓனக்கு முன்னாடி மஞ்ச குங்குமத்தோட நா வடக்கே போகனும்' என்பார். இப்பொழுதெல்லாம் பழைய நினைவுகளில் தேவர் மூழ்கி விடுகிறார். திடீரென தானாகப் பேசுவார். சிரிப்பார். அழுவார். கோபப்படுவார், ஏன்? அவருடைய வரலாறு விசித்திரமானது.

1936 -களில் பழனி அக்ரஹாரத்தில் திண்ணைப் பள்ளிக்கூடம் படிக்கையில் கட்டிளங்காளையாக பெரியண்ணாத் தேவர் ஜமீன் அந்தஸ்தோடு குளமங்கலம் பகுதியச் சுற்றி வந்த நேரம் அது. திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து குளமங்கலம் வந்;து பஞ்சம் பொழைக்க தேவரின் தாத்தாவிடம் உதவி கேட்டது ஒரு நாயக்கர் குடும்பம். தேவரின் தாத்தா அந்த குடும்பத்திற்குத் தேவையான மூங்கில்;, ஓலை, உப்பு , புளி, மிளகாய் பண்ட பாத்திரமெல்லாம் தந்து ஊருக்கு வெளியே வாய்க்கால் ஓரத்தில் வீடுகட்ட அனுமதியும் தந்தார். அவர்கள் விவசாயக் கூலியாளாகப் பிழைத்து வந்தார்கள். அந்தக் குடும்பத்தில் வயசு பெண்ணான பஞ்சவர்ணம் நல்ல உயரமாகவும், நல்ல சிவப்பாகவும் பார்ப்பவர்களையும் கவர்ந்திடும் சுருள்; முடியும் சிரித்த முகமும் கொண்டிருந்தாள். பெரியண்ணாத் தேவர் நண்பர்களோடு குளிக்கச் செல்கையில் பஞ்சவர்ணம் தன்தோழிகளோடு சேர்ந்து அடிக்கிற கேலியும், கிண்டலும் அந்த இளைஞர் கூட்டத்தைப் பற்றியே இருக்கும். குறிப்பாக பெரியண்ணாத்; தேவரையே பஞ்சவர்ணம் அதிகம் கேலி கிண்டல் செய்தாள். தேவரும் கேலி கிண்டல் பதில் சொல்வார். அதுவே பிற்பாடு அவர்களுக்குள் காதலாக மாறத் nhடங்கியது. இருபத்திமூன்று வருஷங்கள் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தது. கோயில் குளம் ஏரிக்கரை, வாய்க்கால், கிணறு, புதர் மறைவு, கரும்புத்தோட்டம் இவையெல்லாம் இவர்களின் சந்திப்பு நிலையங்களாயின.

அடிக்கடி அவர்கள் சந்திக்கிற வாய்கால் ஓரம் ஒரு மாங்கன்ன விளையாட்டா நட்டு வச்சு, தேக்கிலையை தந்து தண்ணிக் கொண்டு ஊத்துவா! தேவரிடம் பேசியபடி! அது நாளடைவில் துளிர்விட ஆரம்பித்தது. அந்த மாங்கன்னுக்கு தினந் தோறும் முத்தம் கொடுப்பாள். தண்ணி ஊத்துவாள் தேவரிடம் சொல்லுவாள். 'இந்த மாங்கன்னு நல்லா தழையும். காயும் பழமும் காய்ச்சிப் பழுத்துக் கிடக்கும். நம்ம மகன், மகள், புள்ளங்கல்ல இந்த மரக்கிளையில் தொட்டில் கட்டி நாம ரெண்டு பேரும் ஆட்டணும். ஒனக்கு முன்னாடியே நான் செத்து போயிருவேன். என்ன இந்த மாமரத்தடியில் பொதக்கணும்' என்பாள். தேவர் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டார். திடீரென பேராவூரணிக்கு வயல் அறுவடைக்காகப் பெரியண்ணாத் தேவர் தாத்தாவின் வேண்டுகோளுக்கிணங்கி நான்கு நாட்கள் போய்விட்டார். ஐந்தாம் நாள் ஊருக்குள் நுழைந்தார். தன் காதலியைத் தேடிய போது தான் நடந்துள்ள விபரீதம் புரிந்தது. இருவரின் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிந்துவிட்டது. பஞ்சவர்ணத்தையும், அவளது ஒரே உறவான தாயையும், தந்தையையும், ஊரைவிட்டே சப்தமில்லாமல் துரத்தி விடுவதென ஜமீன் தாத்தா முடிவு செய்து விட்டார். இதற்கு இடைஞ்சல் வரக்கூடாதென, பெரியண்ணாத் தேவரை பேராவூரணிக்கு நான்கு நாட்கள் சென்று அறுவடையைக் கவனி என்று ராஜ தந்திரம் செய்து அனுப்பிவிட்டார், என அப்போதுதான்; தகவல் கிடைத்தது. ஜமீன் தாத்தாவும், அப்பாவும், அடியாட்களோடு போய் பஞ்ச வர்ணத்தையும், அவங்க அம்மா, அப்பாவையும் அடி அடின்னு அடிச்சு வீட்டுக் கூரையைப் பிச்சிட்டு, கண்டபடி அசிங்கம் அசிங்கமாயப் பேசிவிட்டு, 'சூரியன் நாளைக்கு உதிக்கும் முன்னே ஊரை விட்டு ஓடிப்போயிரணும்.' என்று மிரட்டியதும், தெரியவந்தது. தேவருக்கு வந்தது கோபம் வீட்டுக்குள்ள போய் அப்பங்காரன வீதியில் தூக்கிப் போட்டு மிதிமிதின்னு மிதிச்சார். ஊரு சனம் விலக்கிவிட்டுருச்சு. ஜமீன் தாத்தாவ அரிவாளோட தேடினார். அவரு எங்கோ ஓடி ஒளிந்து கொண்டார். பின்னாளில், பல நாட்கள் சென்று ஊருக்குள் வந்தார். பஞ்சவர்;ணத்தின் உயிர்த் தோழியைத் தேடிப்போனார். அவளும் நடந்த கொடூரத்தை ஒன்று விடாமல் ஒப்பிக்க ஆரம்பித்தாள்.

'ஒங்க தாத்தாவும், சொந்தக்காரவுகளும், பஞ்சு வீட்டுக்கு வந்து, அசிங்கம் அசிங்கமா பேசினாங்களாம். 'பஞ்சம் பொழைக்க வந்தவளுக்கு ஜமீன் வீட்டு பயலோட சுகம் தேடுதாக்கும்...' என்றெல்லாம் பேசினார்களாம். மூணு பேத்தையும் நையப் பொடச்சாகளாம் ரவயோட ரவயா, ஊரவிட்டு ஓடிப்போயிடுன்னு மிரட்டினார்களாம். பிறகு பஞ்சோட அப்பாவும், அம்மாவும், கோவப்பட்டு பஞ்சுவுக்கு உடம்பெல்லாம் சூடு வச்சாகளாம். காயத்த பஞ்சு எங்கிட்ட காட்டினா... ரொம்ப பாவமா இருந்துச்சு. இன்னக்கி நடு ராவுல கிளம்பிப் போவப் போறோம். எந்த ஊருன்னு தெரியல. இப்பகூட அம்மா, அப்பாக்குத் தெரியாம கொல்லைக்குப் போறேன்னு பொய் சொல்லித்தான் வந்தேன்ன! பெரியண்ணாவ தயவு பண்ணி இந்தப் பஞ்சுவ மன்னிச்சிரச் சொல்லு. இன்னொத்தன நான் கல்யாணம் பண்ணிக்கிட மாட்டேன். அப்படியே பண்ணி வெச்சாலும் தாலிய மறுநாள் கழட்டி எறிஞ்சுட்டு, பெரியண்ணாவைத் தேடி ஓடி வந்துருவேன்... என்று அழுதுட்டே பஞ்சு சொன்னாள்.' என்று தோழி கூறினாள். பின்னர் சோகம் ஊற்றெடுக்க பெரிண்ணாத் தேவர் பஞ்சவர்ணத்தின் நினைவாகப் பழகிய இடங்களில் சுற்றித் திரிந்தார். அப்போதைய ஓரே ஆறுதல் பஞ்ச வர்ணம் நட்டு வச்ச மாங்கன்னுதான். தேவரின் வீட்டிலிருந்து ஒரு மைல் தூரத்தில் அந்த மாமரம் உள்ளது. தற்பொழுது அது பெரிசாகத் தொடங்கியது. மாமரம் காற்றிலே சலசலக்கும் போது, அவ சிரிப்பு ஞாபகம் அவருக்கு வரும். மாமரம் மழையிலே நனையும் போது, பஞ்ச வர்ணம் எங்கோ இருந்து அழுகிற ஞாபகம் வரும். அவளின் நினைவு அதிகம் ஆகும் போது, மாமரத்தின் அடியில் தஞ்சம் அடைவார். அவளை நினைத்து சிரிப்பார், கோபப்படுவார், அழவும் செய்வார்.

அப்படியே கண் அசந்து தூங்கிவிடுவார். அவள் தேவரின் கனவில் வந்து ஏதேதோ பேசுவாள். தேவரின் தூக்கம் கலைந்தவுடன் அவரின் மனம் லேசாகிவிடும். பிறகு வீடு திரும்புவார். அவளைப் பிரிந்ததிலிருந்து மாமரத்தை நன்கு பராமரிக்க ஆரம்பித்துவிட்டார். ஒரு நாள் அந்த மாமரத்தை யாரோ கிளையிலிருந்து உலுப்பி விட்டதை எதேச்சையாகப் பார்த்த தேவர், வீச்சரிவாளோடு மரத்தின் அருகே பாய்ந்தார். யாரோ ஒரு ஏழை சிறுவன் பசி தாங்கவில்லை. அதனால் திருடிப் பசியாறுகிறான் என்பதைக் கண்டவுடன் அவரே நிறைய மாங்காய்களையும், மாம்பழங்களையும் பறித்துப் போட்டார். பஞ்சவர்ணத்துக்கு யாரும் பசியோட இருந்தா பிடிக்காது என்றும், மனதுக்குள் கூறிக்கொண்டு, அன்று முதல் இந்த மாமரம் ஏழை எளியவர்கள் இளைப்பாற, களைப்பாற, ருசியாற, பசியாறப் பயன்பட வேண்டும் என்று, உறுதி எடுத்து செயல்பட ஆரம்பித்தார். ஏலக்கடைக்காரனோ, சந்தை வியாபாரியோ, மாங்காய், மாம்பழத்தைப் பேரம் பேசினால், அவர்களைத் திட்டி அனுப்பிவிடுவார்.

வாய்க்காலை ஒட்டி மயானக்கரை உள்ளது. குளித்து விட்டு வந்து காடத்து எட்டு, கருமாதி எப்படி என்றைக்குச் செய்வது, என்று அமர்ந்து, ஊர்க்கூடிப் பேசும் இடமாக மாமரம் மாறிவிட்டது. நாளடைவில் ஊர்ப் பஞ்சாயத்து இந்த மாமரத்தடியிலேயே நடக்க ஆரம்பித்து விட்டது. கிராமம் சம்பந்தப்பட்ட விஷயம் பேசறது பற்றி எந்தக் கலக்டெர் வந்தாலும், சரி, எந்த மேலதிகாரிகள் வந்தாலும் சரி, கூட்டம் போடுவது இந்த மாமரத்தின் நிழலில் தான். அருகிலேயே பள்ளிக் கூடம் இருப்பதால், மாணவ – மாணவிகள் என்று ஒரு கூட்டம் மரத்தடியில் காணப்படும். ஊஞ்சல் கட்டி விளையாடுவார்கள். தேவரும் சில வேளைகளில் அவர்களோடு சேர்ந்து விளையாட முடியாவிட்டாலும், நடுவர் வேலையைச் சிறப்பாகச் செய்வார். தேவர் வீட்டு மாமரத்தின் காய்களை, பழங்களை மசக்கையான பெண்கள் விரும்பி வந்து, சாப்பிட்டுச் செல்வார்கள். இப்படியாக தேவரின் மாமரத்திற்கு சீரும் சிறப்பும் உண்டு.

நாளடைவில் தேவரின் அம்மா நொந்து வேண்டிக் கொண்டதால், சொந்தத்தில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இருந்தாலும் பஞ்ச வர்ணத்தின் நினைவு மில்லி கிராம் கூட குறையவில்லை. காலச்சக்கரம் விரைந்தோடியது. ஐந்து ஆண்மகன்களுக்குத் தந்தையானார். தேவரின் ஐந்து மகன்களும், மருமகள்களும், பேரப்பிள்ளைகளும் ஒன்று கூடி தேவர் வீட்டிலிருந்து நேர்த்திக் கடன் செலுத்தப் போவார்கள். எல்லாம் ஊருக்காகத்தான், பேருக்ககாத்தான். ஒருவருக்கொருவர் மனதளவில் பிரிந்து தான் இருந்தார்கள். அதற்கு கண்கண்ட சாட்சி வீட்டில், கீழ்ப்பகுதியில், மாமரத்தை வெட்டி வித்து ஐந்து பங்காகப்பிரிப்பது பற்றி சிறிய மாநாடு நடக்கும் காட்சி! தேவரின் மனைவியோ மகன்களின் பேச்சைப் பெரிதாகக் கண்டுகொள்ள வில்லை. மதிய நேரத்தில் தேவர் மாத்திரை, மருந்து, உணவு எதுவும் சாப்பிடவில்லை. அந்திப் பொழுதாயிற்றே இப்பவாச்சும் கொடுத்துப் பார்ப்போம் என்று தேவரின் மனைவி மாடிப் பகுதிக்குப் போனாள்.

தேவர் பாதிக் கண்களைத் திறந்து, 'கீழே என்ன ஒரே சத்தம்? மரம் மரம்னு பேச்சு கேட்குதே...?'

அது கிடக்கட்டும். இந்தக் கஞ்சியாவது குடி.

பசியில்லை.. என்னா சத்தம்?...

'நீ போட்டியே ஒரு சட்டம் அதுலதான் பிரச்சனை... என் பொண்டாட்டி, புள்ள, மருமக, பேரப்புள்ள, பொதுஜனங்க யார் வேணும்னாலும் இந்த மாமரத்தடியில் இருந்து எவ்வளவு மாங்கா, மாம்பழம் வேணுமி;னாலும் சாப்புடலாம். வீட்டுக்கு மட்டும் கொண்டு போகக்கூடாது. காசு பணத்துக்கு விக்கக் கூடாதுன்ன பாரு... அதுல தான் இடி வுழுந்துருச்சு. அஞ்சு மருமவளும் ஆளு இல்லாதப்ப ஒருத்தர் மாத்தி ஒருத்தர் மாங்காயை மடியில களவாண்டு, வந்து கொழம்பு வச்சுத் திங்கறாளுவ. அக்கம் பக்கத்து வீடுகள வித்துறதும் உண்டு தான். ஒரு மருமவ நிறைய களவாண்டு வந்தறா. இன்னொரு மருமவளுக்குக் கெடக்க மாட்டீடங்குது எனக்கு எதில்லேயே அதப்பத்தி சாடை பேசி வாய்ச் சண்டை போடுறாளுங்க. உண்மையிலேயே அந்த மரத்துக்கு மேல அஞ்சு சிரிக்கி மவளுக்கும் பொறாம அதிகம். ஒனக்கு கெடக்கிற மாங்கா, மாம்பழம் எனக்கு கெடக்கல. அதனால யாருக்கும் இந்த மரம் வேணாம் வெட்டிப்புடலாம்னு நெனைக்கிறாளுங்க. நாசமத்துப் போறவளுங்க.

வாய்க்காப் பக்கம் ஒரு முரட்டு ஆளு கணக்கா நிக்கிற மரத்த வெட்டியே ஆகணும்மா. அதுக்குத் தலகாணி மந்திரம் போட்டு அஞ்சு பசங்களையும் கொம்பு சீவி விட்டாச்சு. பசங்க என்ன பேசிக்கிறாங்க தெரியுமா? நமக்குள்ள பாகப்பிரிவினை செய்யாம கிடக்கிறது இந்த மாமரம் ஒண்ணுதான். மாமரத்துக்குப் போறப் பாதயத்தான் ஊருக்கு ஒப்படச்சிருச்சு அறிவு கெட்ட கெழம். மாமரத்தையும் ஒப்படக்கே ஆச பட்டாலும், ஆச்சரியப்படுறறதுக்கு இல்ல. கெழம் உசிரோட இழுத்துக்கிட்டு இருக்கறப்பவே, கெழத்துக்குத் தெரியாம மரத்த வெட்டிப்புடணும். இல்லாட்டி கெழம் மண்டைய போட்டுட்டா ஊர்க்காரன் எவனாவது பிரச்சனைப் பண்ணுவான். நம்ம அஞ்சு பேரும் திங்க முடியாம ஊருக்காரன் திங்கரான். வருசம் வருசம் சீஸனுக்கு சீஸன் ஏலக்கடையில் மாங்கா மட்டும் அழிஞ்ச ரேட்டுக்குக் குடுத்தாலும், பத்தாயிரத்துக்கு விக்கலாம். கெழம் உடாது. அதனாலே அழகான மரத்த வெட்டி டவுன்ல பதினைந்தாயிரத்துக்கு வித்துப்புடலாம். ஆளுக்கு வல்லுசா மூணாயிரம் கெடக்கிம் என்று பேசுதுக கிறுக்குப் பயபுள்ள' என்று சொல்லி நிறுத்தி விட்டு, சரி, பசியெடுத்தா கொரலு குடு வாறேன்' என்று சொல்லிய படி மாடிப்படியிலிருந்து கீழே இறங்கினாள்.

தேவர் முழுதாகக் கண்களைத் திறந்தார். இழக்கக் கூடாத ஒன்றை இழக்கப் போவதாக உணர்ந்தவர் படக்கென எழுந்து தள்ளாடியபடி, ஊன்று கோலை எடுத்துத் தடுமாறி கீழே இறங்கி வந்தார். ஐந்து மகன்களும் மரம் பற்றிய பேச்ச நிறுத்திக் கொண்டார். அவர்கள் முகத்தில் தேவருக்கு விழிக்கப் பிடிக்கவில்லை. 'சொன்னாலும் கேட்கிற பிள்ளைகளா நீங்கள்? குடித்துவிட்டு வந்து அப்பனையே அடிக்கிற அவதாரங்கள். அய்யனாரு தான் கூலி கொடுக்கணும்'. என்று நொந்து கொண்டு மாமரத்தை நோக்கி இருமியபடி தள்ளாடி, தடுமாறி நடந்தார். கடைசியாக மாமரத்தைப் பார்க்க வேண்டும். கடைசியாக பஞ்சவர்ணத்தின் நினைவுச் சின்னத்தைப் பார்க்க வேண்டும். என்றல்லவா கிளம்பிவிட்டார்.

பௌர்ணமி நிலா வெளிச்சத்தில் பச்சை இலைகள், வெள்ளி இலைகளாய் மின்னின. மாமரத்தின் அருகே தேவர் கால் வைத்தவுடன், சலசலவென மாமரம் ஓசையிட்டது. சிட்டுக்குருவிகள், கிளிகள், காக்கா, மைனா, நாரை, ஆந்தை, வெளவால் எல்லாம் இனிமையாக ஒலி எழுப்பியது. இவையெல்லாம் தேவரின் வருகைக்கு மகிழ்ச்சி தெரிவித்தது போல் இருந்தது. பறவைகள் எச்சில் படுத்தி கடிபட்ட மாம்பழங்கள் மண்ணில் சொத் சொத்தென விழுந்து கொண்டிருந்தன. ஊன்று கோலை மண்ணில் ஊன்றியபடி, அண்ணாந்து மேலே பார்த்தவாறு, மரத்தைச் சுற்றி சுற்றி வந்தார். 'நீ பெரிய சாம்ராஜ்யம் தான் மாமரமே!' என்று பொக்கை வாய்த் திறந்து கர்ஜித்தார். மரக்கிளையில் ஆங்காங்கே பறவைகள் கூடு கட்டி இருந்த காட்சியை மனதுள் உள்வாங்கி கதறியபடி,

'ஏ மாமரமே நாளக்கி இந் நேரம் நீ இருப்பியா? மாட்டிh? சொல்லு?'

சில வினாடிக்குப்பின் 'மாமரமே என்னோட நீ எழுவது வருசம் மேல வாழ்ந்துருக்க! நான் ஆச வச்ச பஞ்சவர்ணத்தோட அடையாளம் நீ!. நீ செத்துட்டா பஞ்ச வர்ணத்துக்குத் துரோகம் செஞ்சவனா ஆயிருவேன். ஏ அஞ்சு புள்ளங்களும் உன்ன சாவடிக்கப் போறாங்க. கேவலம் காசுக்கு விக்கப் போறானுக. ஓன்ன எப்படிக் காப்பாத்திக்கப் போற? என்று ஆங்காரமாய் ஓசை எழுப்பினார். பிறகு அப்படியே மரத்தோடு சாய்ந்து உட்கார்ந்து விட்டார். மரத்தைச் சுற்றி திடீரென்று பலமாகக் காற்று வீசத் தொடங்கியது. முன்னை விட இலையின் சலசலப்பும் அதிகமாயிற்று. பறவைகள் அதிகமாக ஓசையிடத் துவங்கின. தேவர் வெடுக்கென பத்து வயது பையன் மாதிரி எழுந்து, நின்று மாமரத்தை உற்றுப் பார்த்தார். வேக வேகமாய் வாய்க்காலை நோக்கி நடையைக் கட்டினார். ஊன்று கோலை வாய்க்காலில் தூக்கி எறிந்தார். முட்டிக்கால் அளவு தண்ணீhல் மூன்று முறை முங்கி எழுந்து, கரயேறி மாமரத்தை மூன்று முறை வலம் வந்து, தாரை, தப்பட்ட, கொம்பு, உறுமி, மேளம், மாற்றி மாற்றி முழங்கும் அய்யனார் கோவில் மைதானத்தை நோக்கி நடந்தார். ஆங்காங்கே பொது மக்கள் குழுக் குழுவாக நின்று சிரித்துப் பேசி மகிழ்ச்சியாக இருந்தார்கள். அந்தக் கூட்டத்தை எல்லாம் விலக்கிக் கொண்டு கருப்பண்ணசுவாமி சந்நிதிக்குள் நுழைந்து விபூதித் தட்டிலிருந்து விபூதியை அள்ளி நெற்றி, உடம்பெல்லாம் பூசிக் கொண்டார்.

சுவாமியின் தலையில் புதிதாகக் கட்டப்ட்ட தலைப்பாகயை உருவி, தன் தலையில் கட்டிக் கொண்டார். தன்னுடைய துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டார். சுவாமியின் காலடியில் கிடந்த எலுமிச்;சப் பழம் சொருகிய ராட்சச அரிவாளைத் தோளில் வைத்துக் கொண்டு நாலுகால் பாய்ச்சலில் சிலையாய் நிற்கும் வெள்ளைக் குதிரையின் காலடி அருகே ஓடிவந்து நின்று கொண்டு, சாமி அருள் ஆட்டம் போடத் தொடங்கினார். சுற்றி நின்று வேடிக்கைப் பார்க்கும் பொது மக்கள், தேவரின் உற்றார் உறவினர், ஊரின் முக்கியஸ்தர்கள், ஊராட்சி மன்றத் தலைவர், அரசியல் பிரமுகர்கள், ஊர் நாட்டாமை அனைவரும் ஆச்சரியத்துடன், அரிவாள் தூக்கி சாமியாடும் தேவரை அருள்வாக்கு கேட்க நெருங்கினார்கள். ஒரு கொடுவா மீசை பூசாரி, விபூதி தீபாராதனை தட்டுடன் தேவரை நெருங்கினார். இன்னொரு பூசாரி உடுக்கை ஒலியுடன், சாமியாடும் தேவரைப் பார்த்து பாடத் தொடங்கினார்.

'எங்க தேவரய்யா மேல வந்து ஆடுற சாமி... நீ... யாரு... யாரு... கொஞ்சம் மனசிரங்கி நீ... கூறு...கூறு... பெரிய கடவுள் காக்க வேணும்... பிள்ள கொற தீக்க வேணும்...அறியாம தவறு செஞ்சா தண்டிக்காம சொல்லு... சொல்லு...என்று ராகம் போட்டு இழுத்தார். தேவர் தன்கேள்விக் குறி போலுள்ள மீசை முகத்தையும், உடம்பையும் சிலுப்பிக் கொண்டு உயர்த்திய அரிவாளைக் குலுக்கியபடி குதிரை போலக் கனைத்துக் கொண்டு ராகம் போட்டு பாடத் தொடங்கினார்.

வெள்ளக் குதிரயிலே... வெள்ளக் குதிரயிலே...வலம் வந்து ...வலம் வந்து.... எல்லயக் காக்குற அய்யனாரு...அய்யனாரு.... வீடு ,மாடு, மனை, வய, மக்க, மனுசரு எல்லோருக்கும் நா கொற வக்கல... ஆனா எனக்குத்தான் கொற வக்கப் போறீங்க... கொற வக்கப் போறீங்க... பாவிகளா.... பாவிகளா...' என்றார். அதிர்ந்து போய் உடுக்கையடிப்பதைச் சிலகணம் நிறுத்தி விட்டுப் பூசாரி தொடங்கினார்.

அய்யனாரய்ய என்ன கொறயின்னு வெலக்கமா சொல்லுங்கய்யா... சாமியாடும் தேவர் குதிர போல் கனைத்து விட்டு, நா வெளயாண்டு போற


பாதையில் கொற நட்ந்தா...
ஒரு மண்டலத்துக்குள்ள இந்த
ஊர சுடுகாடா மாத்திப்புடுவேன். பெருநோய
உண்டு பண்ணுவேன். இந்த மண்ணுல நான்
காவ காக்க மாட்டேன்'

சுற்றி நின்ற முக்கியஸ்தர்கள் ஒவ்வொருவராகப் பேச ஆரம்பித்தனர்.

நீயே தெய்வம் ஒனக்கு யாரு
கெடுதல் செய்யப் போறா?
அய்யனாரப்பா வெட்டு ஒண்ணு
துண்டு ரெண்டுன்னு படீர்னுபேசு யாரு
என்ன கெடுதி செய்யப் போறா?
பட்டு பட்டுன்னு தேங்கா ஒடச்ச மாதிரி சொல்லு'

நீ தங்கறதுக்கு அருமையான கோயில் இருக்கு. வேற என்ன கொற?

'அவசரப்பட்டு ஒம் புள்ளங்கள நீயே அழிக்கலாமா? மனுசன்னா முன்ன பின்ன இருக்கத்தான் செய்வான். தெய்வமா ஆடுற ஒனக்குத் தெரியாதா? சாமியாடும் தேவர் கண்களை மூடிக்கொண்டு பேசலானார்.

'சொல்றேன். ராப்பொழுதுல நா நகர்வலம் வர்றேன். வெள்ள குதிரயிலே. அதுல தடவரப் போவுது. மனுச பதருக எனக்கே சவால் வுடுது' ஊராட்சி மன்றத் தலைவர் எந்தத் தடயும் வராம நாங்க பாத்துக்கறோம். எந்தப் பாதயில தடயிருக்கு? அங்க பாரு சூரியன் எரிஞ்சு வர கெழக்குத் தெசயப் பாரு. வாய்க்காப் பக்கத்துல ஒரு பெரிய மாமரம் தெரியுதா? அங்க தான் எனக்குக் கெடுதி வரப்போகுது. கை கட்டி பவ்யமாய் நின்ற எம்.எல்.ஏ சொன்னார் 'ஒனக்கு ஒரு கெடுதியும் வராது. அது பெரியண்ணாதேவர் வூட்டு மரம். தங்கமான மனுசன். அவரு வளர்;த்த மரம். அத தான் ஊருக்குப் பொதுவாக்கிட்டாரு. ஒனக்கு வருஷந் தவறாம கெடா வெட்டி பொங்க வைக்கிறதே அந்த மரத்தடி நிழல்ல தானே! நீ இப்ப ஏறி வந்துருக்கறதே பெரியண்ணாத் தேவர் மேலத்தான். அவரு கெடுதி பண்ண மாட்டாரு.' பெரியண்ணாத் தேவர் துள்ளல் ஆட்டத்தை நிறுத்தாமல்,' சொல்றேன், தேவரு நல்லவரு. ஆவன இன்னும் கொஞ்சம் நேரத்துல வைகுந்தம் கூட்டிப் போகப் போறேன். தேவரு வூட்டுல கிடக்கே ஐந்து மனுச பதரு அவனுகளத் தான் சொல்றேன். மரத்த காசாக்கப் போறாகளாம். நான் அவங்கள கரியாக்கப் பொறேன்.' ஊர்ப் பெரியவர்கள் பதில் கொடுக்கத் தொடங்கி விட்டார்கள்.

மாமரத்த தேவர் வெட்ட விடமாட்டார்.

'ஐந்து புள்ளங்களுக்கும் நெல புலத்ததான் பிரிச்சு கொடுத்தாரு. மாமரத்த ஊரு சனங்களுக்கு பொதுவாக்கிட்டாரு. அந்தப் பக்கம் போறவங்க வர்றவங்க களைப்பாற, இளைப்பாற, பசியாற தானமாவுட்டாரு.' ஒரு பெரியவர் நெஞ்சிலடித்துச் சொன்னாhர். 'அய்யனாரப்பு தேவரு தம் பையங்களோட கை வெட்டுறாரோ இல்லையோ? அவனுக மரத்துல கைய வச்சானுக அஞ்சு தலகளையும் ஓங் குதிர காலடியில போட்டுருவோம்' என்ற உணர்ச்சிப் பொங்கப் பேசினார். பொது மக்களைப் பார்த்து ஊராட்சி மன்றத் தலைவர் 'அது தேவரு தானமா வெச்ச சொத்து. தேவரோட ஐந்து பையன்களுக்கும் உரிம கெடயாது. தேவரே கைப்படி எதுவும் மகன்களுக்கு எழுதிக் கொடுக்கல. அது... அந்த மாமரம் இந்தக் கிராமத்தோட பண்பாடு. நாகரீக அடையாளங்களில் ஒண்ணாப் போயிருச்சு. ஒடனே பஞ்சாயத்துக் கூட்டுப்பா. தேவரோட ஐந்து பையன்களையும் பஞ்சாயத்து முன்னாடி நிறுத்து.' என்று கட்டளையிட்டார்.

இரண்டு இளைஞர்கள் உடனே மோட்டார் சைக்கிளில் தேவரின் வீட்ட நோக்கிச் சென்றார். தேவர் மீண்டும் உற்சாகமாகத் துள்ளித் துள்ளி சாமியாடி, குதிரை போல ஒலி எழுப்பி 'நான் ராப்பகல் குதிரையில் ஏறிவந்து காவல் காக்கையில், அசந்து மசந்து தங்கற இடம் மாமர நிழல் தான். ராத்திரியில் நானும், சங்கிலிக் கருப்பனும் ஊஞ்சல் கட்டி விளையாடுற மரமும் அதுதான். இந்த மண்ணோட காவல் மரம். துஷ்டப் பிசாசுகள விரட்டியடிக்கிற மரம். நான் குடியிருக்கிற மரத்துக்குக் கேடு வந்தா அழிச்சிப்பிடுவேன்.. அழிச்சி. என்ற படி தேவர் பல்லை நற நறவெனக் கடித்தார். வாயில் உமிழ் நீருடன் ரத்தமும் சேர்ந்து வந்தது. தோளில் தூக்கிப் பிடித்த அரிவாளைக் கீழே மெல்ல சரிய விட்டார். சில வினாடிகளில் தானும் மண்ணில் சரிந்து படுத்துக் கொண்டார். கண்கள் என்னவோ கிழக்குத் திசையில் பௌர்ணமி வெளிச்சத்தில் மின்னும் மாமரத்தைப் பார்த்தபடி இருந்தது. கூடி நின்ற பலரும் பதறியபடி தேவரைத் தூக்க முயன்றார்கள். பூசாரியோ தேவர் மேல விபூதி அடித்தார். இன்னொரு பூசாரி தேவரைத் தொட்டுத் தூக்கினார். தேவர் உடம்பு துவண்டு விட்டது. பேச்சுமில்லை. மூச்சுமில்ல. சில வயதான உறவுக்காரப் பெண்கள், முந்தானையால் வாய்ப் பொத்திக் கண்ணீர் விட ஆரம்பித்தார்கள். தேவரின் மனைவி ஓடி வந்து 'ஆணை சரிஞ்சிருச்சே...அய்யா... என்று' ஒப்பாரித் தொடுத்தாள். பின்னால் ஓடிவந்த ஐந்து மகன்களும், மருமகள்களும் தேவரின் நிலையைப் பார்த்துவிட்டு, குதிரச் சவுக்கால் அடி வாங்கியது போல விக்கித்து நின்றார்கள். கிழக்கில் பௌர்ணமி வெளிச்சத்தில் நின்ற மாமரம் தேவரின் செயலுக்குக் கலகலவென ஓசையெழுப்பி ஆரவாரம் செய்தது. சிறிது நேரத்தில் வானம் கருத்து தூறல் போட்டது மாவிளைகளில் திரண்ட துளிகள் தேவரின் மரணத்திற்காக அழுவது போல இருந்தது.
                

anbushiva2005@gmail.com