தன் வீட்டு ரோஜாவும் மணக்கும்

வித்யாசாகர்

''டொக்..டொக்..''
'...........................'
'டொக்...டொக்...''
'யாரோ கதவை தட்றாங்க பார். போயி கதவை திறயேண்டி'
'போ..மா,  நீ போயி திற,  நான் போல'
'டொக்...டொக்., ஏங்க வீட்ல யாருமில்லையா?'
ஆணின் குரல் சற்று வேகமாய் வருவதை கேட்டு அந்தம்மா ஓடிவந்து கதவைத் திறக்கிறாள். வெளியே வந்து தெருவின் இரண்டு முனையையும் மாறி மாறி பார்க்கிறாள்.

''நான் தான் கதவை தட்டினேனென்றேன்''

'யாருப்பா நீ?''

''சொல்றேன், உள்ளே போங்க..''

''உள்ளவா.. ஏன்.. ஏன்; நீ ஏன் உள்ளே வரணும்''

''உள்ளே போயி பேசுவோமே'' சற்று அதட்டலாக சொன்னேன்

''உன்னையெல்லாம் உள்ளே விடமுடியாது, இங்கயே சொல்லு இல்லைனா நீ கெளம்பலாம்''

என்ன சொல்வதென்று சற்றெனக்கு பயம் தான். மனதை தைரியப் படுத்திக் கொண்டு.

''உள்ள போங்கமா, உட்கார்ந்து பேசலாம்''

''யாருப்பா நீ? ஏன் எண்ணை இப்படி தொல்லை பண்ற, என்ன வேணும் உனக்கு? இங்கயே சொல்லு பரவால்ல''

''ஊம்.. பொண்ணு வேணும் தரியா; சொன்னா நாறிடும் பரவால்லையா????''

அவள் படாரென அதிர்ந்து வழிவிட்டு விலகி நிற்கிறாள். நானே உள்ளே சென்று ஒரு இருக்கையை எடுத்துப் போட்டு அமர்ந்துக் கொண்டேன்.

''வாங்க, இப்படி உட்காருங்க.. என் பேரு ரமணி மனோகரன். பத்தாவது படிக்கிறேன். தோ.. இந்த பக்கத்து தெருவு இல்ல.. அங்கதான் என் வீடு''

அந்த பெண் ஓடி வராண்டாவிற்கு சென்று வெளிக் கதவைத் தாளிட்டு வந்தது

''உங்க பொண்ணை மாப்பிள்ளை பார்க்க வாந்தாங்களாமே.கல்யாணம் பண்ணப் போரீங்களா(ம்)?''

''ஏம் பொண்ணுக்கு நான் கல்யாணம் பண்றேன். இல்ல கருமாதி பண்றேன். உனக்கென்ன வேணும் நீ யாரு இதலாம் கேட்க? இப்படி மெரட்டற!''

''நண்பன். என் நண்பன் வாசுதேவனின் நண்பன் ரமணி மனோகரன். அவனும் 'இதோ.. நிக்குதே இந்த உங்க லக்ஷ்மியும் காதலிக்கிறாங்க''.

'ஐயோ கடவளே.. சிவ சிவா' அவள் காதை அடைத்து கொண்டு தன மகளை பார்க்கிறாள். அது விசும்பி அழ ஆரம்பிகிறது.

''நாசமாய் போவ..நீ, உருப்புடுவியா, எவ்வளவு தைரியமா என் வீட்டுலையே வந்து என்கிட்டவே என் பொண்ண கொடுன்னு கேட்குற? நாங்க என்ன வீடு, என்ன மனுசாளுன்னு எதனா தெரியுமா உனக்கு. எழுந்துரு.. வெளியே போ.. இனி ஒரு நிமிஷம் இங்க நீ இருக்க கூடாது; போ.. போ வெளிய''

நானேழுந்து ஏதோ சொல்ல வர..

''மரியாத கெட்டு போய்டும் உனக்கு, சின்ன பையனாசென்னு பாக்குறேன், வெளியே போ, போடா.......''


''ஏன்டி இப்படி கத்துற? என்ன நடந்துடுச்சு இப்போன்னு இப்படி கத்துற?'' இது அவளோடைய கணவன்.


''ச்சி.. ஆம்பளையா நீ, உன்னோட கையாலாகாத தனத்தால தான்யா இப்படி வீடு ஏறி கண்ட நாயெல்லாம் வருது''


''ம், தபார்ம்மா, பாத்து பேசு, ஊம் பொண்ணை எங்ககூட சினிமாவுக்கு கூட்டி வர்றதே இந்தாளு தான். உனக்கெதனா பேசணும்னா அதை இவர் கிட்ட பேசிக்கோ, அதலாம் உங்க பிரச்சனை. இதோ பார் உங்க பொண்ணும் என் நண்பன் வாசுதேவனும் சேர்ந்தெடுத்த படம். பத்திரமா என் கையில் இருக்கு. இனி யாரும் இந்த வீட்டுக்கு பொண்ணு கேட்டு வரக்கூடாது. வந்தா இதைப் பெருசா எடுத்து உங்க வீடு வாசல்ல ஒண்ணு, தெருவுல ஒண்ணு, பொண்ணு பார்க்க வரவன் நெத்தில ஓன்னுன்னு ஊரெல்லாம் ஒண்ணு ஒண்ணா ஓட்டுவேன்''

நான் பேசி முடிப்பதற்குள், அவள் பொங்கியெழுந்து விட்டால் '' ச்சீ... மிருகமே நீ எல்லாம் படிக்கிற பையனா; உருப்புடுவியா நீ..''

அவள் கத்த அவளுடைய கணவர் அவளருகே வந்து ''நீ சும்மா ஏண்டி இப்படி ஊரக் கூட்டுற, ஆம்பள எனக்கு தெரியாதா என்ன செய்றது செய்யக் கூடாதுன்னு''

'தெரியும்யா; உனக்கு எல்லாம் தெரியும், 'த்தூ' உன்ன எல்லாம் என் புருஷன் நீயெல்லாம் என் பொண்ணுன்னு சொல்லவே வெட்கமா இருக்கு.. அவன் கூட நல்லாருப்பா(ன்)யா நீங்க நல்லாவே இருக்க மாட்டீங்கயென அவர்களை பார்த்து கத்திவிட்டு கதறி அழுகிறாள்.

''மன்னிச்சிடுங்கம்மா. எனக்கும் ஒரு தங்கை இருக்கிறாள். நீங்கள் என் அம்மா மாதிரி, நீங்கள் அழுவதை என்னால் பார்க்கமுடியவில்லையென்று'' உள்ளுக்குள்ளே எனக்கு தவிக்கத் தான் செய்தது. பரிதாபம் காட்டினால் பயபடமாட்டர்கள். மொத்த குற்றத்திற்கும் காரணம் அந்த ஒரு பொறுப்பற்ற லக்ஷ்மியின் தந்தை. அவர் குற்றத்தால் என் நண்பனை நான் விட்டுவிட முடியாதே என மனதை கல்லாக்கி கொண்டு 'அழுது பயனில்லை என்பது போல் விரைப்பாய் அவர்களை பார்த்து ஒரு முறை முறைத்துவிட்டு, வீம்பாக எழுந்து தெருவில் நடக்கிறேன்; அன்றெனக்கு வயது பதினைந்து.

இன்று நாற்பது வயதாகிறது. எனக்கும் ஒரு மகளிருக்கிறாள். அழகானவள். அதே லஷ்மி குடியிருந்த தெருவில் தான் என் மகளும் நடந்து பள்ளிக்குச் செல்கிறாள். அதே பத்தாம் வகுப்பு படிக்கிறாள். எல்லோரும் அவளையும் ரசனையாக பார்கிறார்கள் என்பதை உணர்கிறேன். எங்கு என்னைப் போல் ஒருவன் என்னை தேடி வந்து என் பெண்ணையும் கேட்டு விடுவானோயென ஒரு நெடுங்கால நெருப்பு அடிவயிற்றில் எரிந்துக் கொண்டேயிருக்கிறது. 
vidhyasagar1976@gmail.com