சூரியா......!!?

மணிமாலா மதியழகன்

“எங்களுக்குள் ஏற்பட்டிருப்பது காதலாகயிருக்குமோ என எனக்கு....”

“போதும்டா... மூச்சுக்கு முந்நூறு தடவைக்குமேல இதையே சொல்றே...!”

அதுவரை பூரிபோலிருந்த பரமுவின் இதயம் பரோட்டாவைப்போலானது.

“உன்னோட பைத்தியக்காரத்தனத்துக்கு அளவில்லையா....!இதயத்துக்குள்ள அம்பைவிட்டு ஒட்டிசுவத்தயே நாசமாக்கியிருக்கே, கண்றாவியா எழுதி கவிதைங்கிறே,பஸ்சுல ஒருத்தி பார்த்து சிரிச்சிட்டான்னு என்னைப்போட்டு கொல்றியேடா...! ஓவர்டைம் பாத்துட்டு ரூமுக்குவந்து சமைச்சி சாப்பிட்டுட்டு தூங்கப்போகவே பன்னெண்டாகுது, பேய் பிரேக்பாஸ்ட் எடுத்துக்குற நேரத்துலகூட உனக்குள்ள காதல் பொங்கணுமா....? அதை எங்கிட்ட கொட்டணுமா....?”

‘சே.... என்னவொரு ரசனைகெட்ட மனுஷன்’ போர்வையையிழுத்து தலைவரை மூடிக்கொண்டான் பரமு.

பயபுள்ள நல்லாத்தான் இருந்தாங்க. திடீர்னு ஒருநாள் பார்க்கிறேன், மேசைமேல சென்ட் பாட்டில், கிரீம்னு ஏகப்பட்டது அடுக்கியிருக்கு! எப்பவும் அங்கே ரெண்டு சீப்பும் ஒரேயொரு சென்ட் பாட்டில்தானிருக்கும்.

“என்னடா இதெல்லாம்?”

“அழகுக்கு அழகு சேர்க்கண்ணே!”

“அழகா எங்கேயிருக்கு?” நான் சுத்திமுத்தி பார்க்க,“இதான வேணாங்கிறது, நான் சூர்யாமாதிரி இருக்குறதாலதான அந்தப்பொண்ணுக்கு என்மேல ஒரு ‘இது’ வந்திருக்கு....!”

“சிங்கம் சூர்யாவையா சொல்றே?” சந்தேகம்னு வந்துட்டா தெளிவுபடுத்திக்கணுமில்ல.

“ஆமாண்ணே..... அந்தப்பொண்ணும் ஜோதிகாமாதிரியே இருக்கு....!”

‘அந்தப்பெண் எப்படியோ.....! ஆனால் இவன்....!’

வந்த கடுப்புல கத்திய எடுத்து முட்டைக்கோசை சதக்சதக்னு வெட்டி கோபத்தை அடக்கினேங்க! எனக்கும் பொண்டாட்டி புள்ளன்னு இருக்குதுல்ல! மறுநாள் பைநிறைய துணிமணிகளோட வந்து நிக்கிறான். ஏன்னு கேக்க எனக்கு தலையெழுத்தா?

ஜோதிகா(!!)வுக்காக எதையோ வாங்கியிருக்கான், அப்பப்ப அதைப் பார்த்து சிரிக்கிறான், எங்கிட்ட மறைக்கிறான். காசநோய் கண்டவர்களிடமிருந்து விலகியிருப்பதுபோல காதலுற்றவர்களிடமிருந்தும் தள்ளியிருத்தல் சிறப்புயெனப்பட்டது.ஊருக்குப்பேசுறதுமில்லை, பணத்தையும் அனுப்பலை. அவங்கப்பா எங்கிட்ட புள்ளைக்கி என்னாச்சிங்கிறார், என்னத்துன்னு சொல்ல!ஒருநாள் மண்டைய கீறிகிட்டே கைமாத்தா நூறுவெள்ளி கேட்டான். காசைபோட்டு கரியாக்காதேன்னு சொல்ல, “காசு என்னண்ணே பெரிய காசு! எப்ப வேணா சம்பாதிச்சிக்கலாம்! காதல் அப்படியா?”ன்னான்.

“ஏண்டா, அந்தப்புள்ளைகிட்ட சொல்லித் தொலையேண்டா!”

“சுத்த வெவரங்கெட்டவரா இருக்கீங்களேண்ணே, அததுக்குன்னு ஒருநாளு இருக்குல்ல...!”

அவன் காத்திருந்த நாளுக்கு முதல்நாள் ரூமுக்கு வந்த நான், உள்ளேயிருந்த ஆளைப்பாத்துட்டு, மாறிவந்துட்டோமோன்னு வெளியே போகத் திரும்ப “அண்ணே!”

“பியூட்டி பார்லர் போயிட்டு வந்தேண்ணே!”

“......” சிலசமயங்களில் மெளனமே சிறந்தது.

வீட்டுக்குப் போன்பண்ணிட்டு தூங்கலாம்னு பேசினா, “நாளைக்கு ரிசல்ட் தெரிஞ்சிடுமுன்னு ஒரே பரபரப்பா இருக்குங்க!” அரசியலைப் பேசினாள் என்னவள்.

“இங்கேயுந்தான்” அவனைப் பார்த்தபடி.

“வெளங்காமப் பேசறதே மனுஷனுக்கு வேலையாப் போச்சி!” எரிச்சலானாள்.

மறுநாள் வேலைமுடிந்து திரும்பிய நான் வில்லன் கையில் அகப்பட்ட கதாநாயகிபோல அறை அலங்கோலமாகக் கிடந்ததைக்கண்டு நிலைமையை யூகித்தேன். இணைந்த இதயங்களுள்ள சங்கிலியொன்று மூலையில் வீசப்பட்டிருந்தது. அவனது கவிதைகளும், சுவற்றில் ஒட்டிவைத்திருந்த இதயமும் சுக்குநூறாக்கப்பட்டு, சடலம்போலக் கிடந்தான். இமைகளின் அசைவில் என் கலக்கம் விடைபெற்றது.

“சொல்லிட்டாண்ணே....சொல்லிட்டா....”

“அழாதேடா.....”

“ஒருமாசமா ஒத்திகைபாத்து வச்சிருந்ததை அவகிட்ட சொல்லலாமுன்னு பூவாப்போன என்னோட இதயத்தை முள்ளா குத்திட்டாண்ணே....!” தொடர்ந்தான். நான்,“உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்”னு சொல்ல, “நானும்தான்”ன்னு சொன்னாள்...”

“என்னதாண்டா சொன்னா?”

“நீங்க சூரிமாதிரியே இருக்கீங்கண்ணே...!ன்னு சொல்லிட்டாளே....!”

என்ன பாக்குறீங்க? பிஞ்சிகிடக்குற இதயத்தைக் கூட்டிக் குப்பைலபோட உதவமுடியுமா? ப்ளீஸ்...!

 

(300 வார்த்தைகள்)

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்