வாமனி

சிதனா

பெயர்: மங்களகெளரி பெருமாள்

புனைப்பெயர் : சிதனா


வலி என்பது எல்லாருக்கும் பொது எனும் போது, முதலில் கையை ஓங்கியவன் கூச்சலிடுவதில் என்ன நியாயம்?

எதிர்பாரா தாக்குதலினால் ஏற்பட்ட வலி அதீதமானதாக இருக்க, தாங்க மாட்டாமல் அவன் போட்ட கூச்சலில், பாதசாரிகளில் சிலர் தங்களின் அவசர நடையிலிருந்து நிதானித்து என்னவென்று பார்த்தார்கள். நின்று பார்த்தவர்களுள் அவளும் அடக்கம்; அவனை இடுப்பில் அடித்தவள்.

விஷயம் இன்னதென்று புரிந்துக் கொண்ட போது, அந்த நடைபாதை மனிதர்களிடம் ஒரு தீவிர சலசலப்பு, ஏதோ தாங்களே அடிபட்டு விட்டது போன்ற பாவனையில்.

"ஒன்றர ஜான் ஒயரம் இருந்துக்கிட்டு ஒரு ஆம்பளைய கைநீட்டி அடிச்சிருக்கு. இந்த குட்டிக்கு எத்தனை கொழுப்பு பார்த்தியா..?" என்று பாதசாரிகளில் ஒருவன் முதல் குரல் கொடுத்தான்.

"இந்தா ஒன்னத்தான.... ஒரு ஆம்பளைய கை நீட்டி அடிப்பியா நீயி? அவ்வளவு திமிறா...? அவன் ஒன்னப் பிடிச்சி ஏதாவது பண்ணியிருந்தானா.... என்னப் பண்ணியிருப்ப நீ? அவசரத்துக்கு வேகமா ஓட முடியுமா உன்னால..?"

"அவசரத்துக்கு வேகமா நடக்க முடியுமான்னு கேளுங்க மொதல்ல..! ஒரு ஆம்பளைய அடிச்சிருக்கியே, பதிலுக்கு இவரு ஒன்ன அடிக்கக்கூட வேணாம். இருக்கிற அவரு ஒயரத்துக்கும் ஒடம்புக்கும், அப்படியே நடு மண்டையில ஓங்கி ஒன்னு வச்சிருந்தாருன்னா, பூமிய பொளந்துக்கிட்டு உள்ள போயிருப்ப தெரியுமா...? "

ஜீன்ஸும் டி சர்ட்டுமாய் குட்டை முடியோடு கொஞ்சம் அலட்சியமாய் நின்றிருந்த அவள், தன் கையிலிருந்த கனமான ஃபைலை ஓங்கி காட்டினாள், அடித்து விட போவதாய். ஏற்கனவே அந்த அவனை, அதே ஃபைலை ஆயுதமாக்கித்தான் இடுப்பில் தாக்கியிருந்தாள்.

நல்ல ஹார்ட் கவர் ஃபைல் அது. உள்ளே நிறைய காகிதங்கள் இடம் பிடித்திருக்க, கனமும் கூடியிருந்தது. கூர்மையான அதன் முனைதான் அவனது இடுப்புக்கு வலி ஏற்படுத்தியதில் கணிசமான பங்கை ஆற்றியிருந்தது.

"பார்த்தியா.... எவ்வளவு இருந்தா... இது இப்படி ஃபைலை தூக்கி காட்டும். ஆட்டுக்கு வால அளந்து வச்சுருக்கும் போதே இந்த ஆட்டமா?"

"அலோ, என்னால ஆடலாம் முடியாதுங்க .... நான் பாட்டுக்கு என் வேலைய பார்க்க போய்கிட்டு இருந்தேன். அந்தாளுதான் என்னை மொதல்ல அடிச்சது. சம்பந்தமே இல்லாத என்னை ஏன் அடிக்கனும்னு அங்க கேளுங்க. ஒங்க ஒயரத்துக்கு என் தலை எட்டுனா, என் கைக்கு ஒங்க இடுப்பு எட்டாதா? தலையில கை வச்சுத்தான் பாருங்களேன் பார்ப்போம்..."

அவளின் நேர் கொண்ட பார்வையும், கீச்சுக் குரலின் அதிகார தொணியும் உள்ளுக்குள் மெல்லியதாய் ஒரு பயம் கலந்த வியப்பைக் கொடுக்க, அடி வாங்கி இடுப்பை பிடித்துக் கொண்டு நின்றவனை "இந்த பெண் சொல்வது உண்மையா?" எனும் தினுசில் பார்த்தனர் அத்தனைப் பேரும்.

அவன் வலியில் முணகிக் கொண்டிருந்தான்.

"நான் அடிக்...கலங்க.... அவசரமா நடந்துப் போயிட்டுருக்கும் போது.. அவங்க முதுகுல .... கை பட்டுடுச்சி.... அவ்ளோதான்..." - என்னவோ பேசத் தெரியாதவன் போல் அடிக்குரலில் முணுமுணுத்தான்.

ஈனஸ்வரமான குரல் என்றாலும் பொய்யை மெய் போல சொல்லக் கூடிய திறமையான குரல் அவனுக்கிருந்தது அந்த நேரத்திலும்.

இது ஒன்று போதாதா பொது நலத்தில் அக்கறை கொண்ட சமூகத்திற்கு.

"அவருக்கு நல்லா நடு இடுப்புல அடி பட்டுருக்குங்க. ஆம்பளைய இடுப்புல அடிக்கும் போது அடி பலமா பட்டா உயிருக்கே ஆபத்தாயிருமே, தெரியாதா ஒனக்கு?"

மீண்டும் அவளையே குற்றவாளியாக்கத் துடிக்கும் கேள்விகள்; பார்வைகள்.

ஒரு ஆணை இடுப்பில் அடித்தால், அது உயிர் போகும் அளவுக்கு ஆபத்தானது என்று தெரிந்து வைத்திருக்கும் இந்த சமூகம், ஒரு பெண்ணை பிட்டத்தில் அடிப்பது அநாகரீகத்தின் உச்சம் என ஏன் அதே ஆண் பிள்ளைகளுக்கு சொல்லி வளர்க்கவில்லை!?

அதுவும் பேறு குறைந்த ஒரு பெண்ணை பிட்டத்தில் தட்டுவதை நடக்கும் போது 'கை பட்டு விடல்' என்பது போன்ற சாதாரண விஷயமாக்கி பேசுவதும், தூசு தட்டுவது போல அந்த சம்பவத்தை தட்டி விட்டு போக நினைப்பதும் பரிவுமிக்க சமூகத்தின் அடையாளமா?!

நிமிர்ந்து நிற்க முடியாதவர்களை முட்டி காலில் அடிப்பது போல, மொத்தமே மூன்றரை அடி உயரம் இருக்கும் ஒரு பெண்ணை, அவளின் சின்ன பாதங்கள் உதவிய வேகத்தில் நடந்துக் கொண்டிருக்கும் போது, யாரோ ஒருவன் திடீரென அவள் பிட்டத்தில் அடித்தானானால், அது எந்தளவிற்கு அவளுக்கு ஆபத்தாக முடியும் என்பதை கொஞ்சமும் யோசிக்காதவர்கள் அடித்தவனுக்காக பரிந்துக் கொண்டு வருவதென்ன நியாயம்?

அப்படி அடித்தவன் குறித்து, அவள் உடனடியாக மனித உரிமை ஆணையத்திடமா புகார் கொடுக்க முடியும்?

திருப்பி அடித்தாள்...... தன் பலம் கொண்ட மட்டும்.; அவனும் வலியை உணரட்டுமே என்று!

அதை தவறென சொல்பவர்களுக்காக பயந்து தான் ஓடப்போவதில்லை எனும் ரீதியில் அவள் இன்னமும் அங்கேயே நின்றிருந்தாள்.

இந்த உலகத்திற்கு அவள் வந்த போது, அவளது நீண்...ட தலைதான் அவள் சிறப்பு குழந்தை எனும் தகவலை பெற்றவர்களுக்கு உணர்த்தியிருக்க வேண்டும். ஒரு நீண்ட பப்பாளி பழ வடிவத்தில், கழுத்தோடு ஒட்டியிருக்கும் தலை. கள்ளி செடியின் கணு போல வடிவெடுத்திருக்கும் கைகளும் கால்களும். அதிலும் அவளை சரியாக நடக்க விடாமல் செய்தது சற்றே உள்நோக்கி வளைந்திருந்த கால்கள். நீளம் குறைவான கைகள். அதோடு விட்டிருக்கலாம் படைத்தவன்.

சாதாரண பெண்களுக்கு பின்னழகு என்று வர்ணிக்கப்படும் பிருஷ்டம், இவளுக்கு கேலிக்குறியதாக ஆகியிருக்க வேண்டாம்.

"விலுக்கு விலுக்குன்னு ஒரு நடை ..... ஆட்டி... ஆட்டி.... "

எத்தனையோ பேர் பேசிய வார்த்தைதான்.

அவள் என்ன கேட்டுக் கொண்டா வந்தாள், இந்த உடம்பை?

அப்படி பிறந்து விட்டாள் என்பதற்காகவே, உறவுகள், பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்கள், நடைபாதையின் சக பயணிகள் என்று எத்தனை பேர்தான் அவள் உடல் குறித்து, தங்களுக்குத் தெரிந்த சைகை மொழியாலேயே பேசுவார்கள் ஈவு இரக்கம் இன்றி? ஒரு பெண்ணின் பிருஷ்டம் என்பது பொது சொத்தா, யார் வேண்டுமானாலும் தட்டி விட்டுப் போக?

சராசரி பெண்ணிடம் துணிவார்களா இப்படி பின்னால் தட்ட, அல்லது பேறு குறைந்த ஒரு ஆணை மற்றொரு சராசரி ஆண்தான் பிருஷ்டத்தில் தட்டுவானா? இதற்கு பெயர் வெறும் பகடி வதைதான் என்றால், வதை என்ற வார்த்தையின் உண்மை அர்த்தம் என்னவாக இருக்க முடியும்?

கோபம் வருகிறதுதான் அவளுக்கும். சீற்றம் கொள்கிறாள்தான். ஆனால், பிறரின் சொல்லும் இவளின் சீற்றமும் ஒன்றாய் கூடி பசிக்கும் வயிற்றுக்கு ஒரு பிடி சோறு போடுமா?

பள்ளிக்காலத்திலேயே அம்மாவும் அப்பாவும் கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல இந்த கிள்ளைக்கு சொல்லித்தான் வளர்த்திருக்கிறார்கள்.

"நீ இப்படி பிறந்தது எங்களுக்கு மனக்கஷ்டம்தான். ஆனால் ஒன் ஒடம்பு ஒன்னை கஷ்டப்படுத்தக்கூடாது. நல்லா படி. உன்னால முடிஞ்ச அளவுக்கு சிறப்பா படிச்சி பாஸ் பண்ணனும். ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் கையில ஒரு வேலையும் ஊதியமும் ஒனக்கு கட்டாயம் தேவை. பிற்காலத்துல அதுதான் ஒனக்கு பலம் கொடுக்கும்!

ஆ!! எப்பேர்ப்பட்ட சத்திய வார்த்தைகள் அவை!

கணிதம் எளிதாக வந்து அவளை கைப்பற்றிக் கொண்டது. கணக்கியல் துறையில்தான் படித்து பட்டமும் பெற்றாள். வீட்டு மனிதர்களுக்கும் நெருங்கிய நட்புகளுக்கும் மட்டுமே தெரியும் அவள் ஒரு சார்டர்ட் அக்கவுண்டன் என்பது.

விரும்பிய வேலை, கை நிறைய சம்பளம் என்பது மட்டுமல்ல அவளது நிமிர்வுக்கு காரணம். குறையாக பிறந்த தன்னை தாங்கிப் பிடித்த பெற்றோர்களை அவர்களின் வயதான காலத்தில் தன் உள்ளங்கையில் வைத்து தாங்கும் சக்தியாக நிற்பவளுக்குள் இப்பொழுதுதானா துணிவு வந்திருக்கும்; தன்னை பிள்ளை பூச்சியென நினைத்தவனை தேளாய் கொட்டி விட்டு அவன் துடிப்பதை நின்று பார்க்கும் அளவுக்கு?

அவளே வார்த்தெடுத்த அவளது சுயம் தந்த தைரியம் அல்லவா அது!

நடந்து விடும் தூரத்தில் இருந்த ஒரு நிறுவனத்தில் கொண்டு கொடுப்பதற்காக கனமான ஃபைலைத் தூக்கிக் கொண்டு தன் உடலும் காலும் ஒத்துழைக்கும் வேகத்துக்கு நடந்துக் கொண்டிருப்பவளை, பின்னால் தட்ட ஒருவன் மெனக்கெட வேண்டாம்தான். போகிற போக்கில் செய்யக் கூடிய காரியம்தான்.

அப்படி தட்டி விடும் போது, அதன் எதிர்வினைக்கு தன்னை அவன் தயார் செய்து கொள்ள வேண்டுமில்லையா?

கள்ளி செடியை கணுவுக்கு கணு ஒடித்து விட்டு அதில் பால் வடிவதை ரசிப்பது போல, ஒரு பெண்ணை பிருஷ்டத்தில் அடித்து விட்டு, நின்றும் வேடிக்கைப் பார்க்கிறார்களே....

வெம்மையுடன் பொங்கும் பெண்ணின் வேதனை புரியாதவர்களா, வெண்மையாய் கண்ணீர் வடிக்கும் கள்ளி செடிக்கு வருந்துவார்கள்?

ஆனால் இவள் குத்து செடியாய் முளைத்திருக்கும் கள்ளியல்ல.. படிப்பு தந்திருக்கும் தைரியத்தில் நிமிர்ந்து நிற்கும் வாமன அவதாரம். மூன்றடி மண்ணுக்காக யாசகம் கேட்க மாட்டாள். தனக்கானதை எடுத்துக் கொள்ளும் விவேகம் அறிந்தவள்.

"இப்ப என்னாங்கறீங்க...? அந்தாளு என்ன பின்னால தட்டுனான்... நானும் பதிலுக்கு தட்டுனேன்... தட்ஸ் ஆல்..... வேணும்னா சொல்லுங்க, பக்கத்துலதான சுந்தரம் கிளினிக்.... கூட்டிட்டுப் போறேன்"

வாய் கொஞ்சம் அடைத்துத்தான் போனது, கூச்சலோடு அவளை குற்றம் சொன்னவர்களுக்கு.

இவ்வளவு தைரியமாக பேச வேண்டுமென்றால், தவறு அவளிடம் இல்லையோ....?

பஞ்சாயத்து பண்ண வந்தவர்கள் மெல்லிய முணுமுணுப்போடு அந்த இடத்தை விட்டு விலக, அவளும் அவனும் மட்டுமே மிஞ்சி நின்றார்கள் அங்கே.

ஒரு கையை ஃபைலுக்காக கொடுத்திருந்தவள், மறு கையை இடுப்பில் வைத்தபடி நின்றிருந்தாள்.

"அலோ மிஸ்டர்...... என்னை அடிக்கனும்னா ஒரு இன்ஞ்சாவது நீங்க குனிஞ்சிருந்திருக்கனும். அப்பத்தான் உங்களால என் பின் பக்கம் தட்ட முடியும்! ஆனா... கால எக்கி நின்னு எல்லாம் நான் உங்கள அடிக்கல.... என் ஒயரத்துக்கு எவ்வளவு எட்டுச்சோ அங்கதான் நான் அடிச்சேன்.... எப்பவும் என் ஒயரத்துக்கு மிஞ்சி நான் எதையும் பண்றதில்ல.....!"

சொல்லி விட்டு, தன் மொத்த உடலும் எப்பவும் போல விசுக் விசுகென்று அசைய அவள் தன் இயல்பில் போய் கொண்டிருந்தாள்.

அவன் இன்னமும் தன் இடுப்பை பிடித்தபடி அங்கேயே நின்றுக் கொண்டிருந்தான், தனது ஐந்தே முக்கால் அடி உயரத்தை கூனி குறுக வைத்து விட்டு போய்கொண்டிருப்பவளை பார்த்தபடி.

முற்றும்


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்