சோறு

கமலாதேவிஅரவிந்தன், சிங்கப்பூர்

உடம்பெல்லாம் கசகசவென்றிருக்கிறது. சங்கரன்குட்டிக்கு  அங்கே, இங்கே, எங்கே, என்றே தெரியாமல் உடம்பு பூராவும், சொறிந்துகொண்டே இருக்க வேண்டும்போலிருக்கிறது. ஆனாலும எவ்வளவு நேரம் தான் சொறிவது?

சொறிந்து, சொறிந்து, ஆங்காங்கே, தடிப்பு தடிப்பாய், தழும்பு போல வீங்கியிருக்கிறது. உடம்பிலுள்ள அழுக்குக்கசம் வேறு, விரல்களுக்குள் சேர்ந்து கறுப்பாய் இந்தக்  கைகளைப் பார்க்கவே குமட்டிக்கொண்டு வருகிறது.

என்னமோ செய்கிறது? என்ன என்று தெரியவில்லையே? ,பசிஆம் பசி தான், அவனுக்குப் பசிக்கிறது.

காலையிலிருந்தே அவனுக்கு யாருமே சாப்பிடக்கொடுக்க வில்லை. உடம்புக்கு முடியாமல் போனபிறகுதான் இந்த அலட்சியம்.

சம்பாதித்துக் கொட்டும்போது அம்மாக்காரியாகட்டும், கட்டிக்கொண்ட வந்த கழுதையாகட்டும். விழுந்து விழுந்து கவனித்துக் கொண்டவர்கள் தான்.

நேரத்துக்கு தட்டில்  சுடச்சுட விழவேண்டும். அதுவும வாய்க்கு ருசியாய் இல்லையென்றால் சிவசைலமே ஆடியிருக்கிறான். ஒரே அறை, அதுவும் பேயறை, ஜானகி சுருண்டு விழுந்திருக்கிறாள். அழுதுகொண்ட உணவு படைத்திருக்கிறாள்.

விம்மிக்கொண்டே அவன்  மிருக வெறிக்கு இரையாகியிருக்கிறாள்.

அதிலும் குடித்துவிட்டு  வரும் இரவு சங்கரன் குட்டிக்கு கண்மண் தெரியாது வீட்டுக்குள் நுழையும்போதே, ஜான வேண்டும்.

அவனுடைய மிருகப்பசிக்கு, இரையாகி  மீளும்போது, ஜானுவுக்கு அப்படியே அவனை வெட்டிப்போட்டு விடலாமா?, என்று  நெஞ்சு கொதிக்கும் .

ஆனால், சங்கரன்குட்டி அவளை  குதறிக் குலைத்துப் போட்டபிறகு தான், சாந்தமாகிபோய், நிம்மதியாகத் தூங்குவான்.

கப்பல்பட்டறையில்  டெக்னிஷியன் வேலை. நாயைவிடக் கேவலமாக மேலதிகாரிகள் அவனைத்திட்டுவார்கள். ஆட்டிப்படைப்பார்கள்.

ஒருமுறை வெல்டிங் மெஷினில் உள்ள கோளாறை, அவன் கவனிக்கப்போவதற்குள், அங்கே போய்விட்ட மேலதிகாரி, அத்தனை கூலிக்காரர்களுக்கும் முன்னால் அவனைக் கெட்டவார்த்தையால் திட்டிவிட்டார். உயிர்னிலையில் அடிபட்ட நாயாய், ஆக்ரோஷத்தோடு வீடு திரும்பிய அவனுக்கு அன்று கிட்டிய ஒரே வடிகால் அவன் பெற்ற பெண்  அம்பிலிதான்.

ஓடாய் உழைத்துக்கொட்ட நான். சுகமாய் இழுத்துப் போர்த்துக்கொண்டா தூங்குகிறாய்? பெற்ற தகப்பன் வருகிறானே என்று கொஞ்சமாவது பயம் இருக்கிறதா? ஒரு மரியாதைகூட இல்லாத தடித்தனம் எங்கிருந்து வந்தது நாயே,“ என்று ஓங்கி அந்த 12 வயசுக்குழந்தையின் நெஞ்சில் மிதிக்க, குளித்துக் கொண்டிருந்த ஜானு ஓடி வந்து விலக்க, அவளுக்கும் சரமாரியாய் அடி விழுந்தது. தாங்கமாட்டாமல்  அம்மாக்காரிதான் கத்தினாள்,.

பாவி காய்ச்சலாய்ப் படுத்துக் கிடக்கிற குழந்தையைப்போயி  இப்படி மிதிச்சிட்டியே? காலமாடா, உனக்கொரு கேடு வராதா? குருவாயூரப்ப? இந்த சண்டாளனை நீ வாரிக்கிட்டு போக மாட்டியா?”

அதற்குமேல் சாபம் விட வாயிருக்கவில்லை கிழவிக்கு. ”பொளேர்", என்று ஒரு பேயறை அவ்வளவுதான்,   கிழவியின் வாய் கிழிந்துவிட்டது. ரத்தம் கொட்ட கிழவி மயங்கி கீழே சரிந்து விட்டாள்.

கூந்தலைப்பிடித்திழுத்து, ஜானுவைப்போட்டுப் புரட்டிக்கொண்டிருந்த சங்கரன்குட்டி கவனிக்கவில்லை. ஜுரவேகத்தில், சுவரோடு, உறைந்துபோய்உட்கார்ந்திருந்த அம்பிலிக்குட்டிக்கு  அடிவயிற்றில் அமிலம் வெடித்துச் சிதறியது.

டேய் என்று பிளிறிய குரலில் கூவிக்கொண்டே, கீழே கிடந்த குண்டாந்தடியை எடுத்து, சங்கரன்குட்டியின் பின்மண்டையில் போட்டாளே ஒரு போடு. இது மட்டும் தான் அவ்வப்போது சங்கரன் குட்டியின் நினைவில் அக்கினியாய் சுழன்று சுழன்று வருகிறது. எவ்வளவு முயன்றும், அதற்குப்பின் நடந்த எதுவுமே சரியாக நினைவுக்கு வரவில்லை. அவ்வப்போது கோர்வை, கோர்வையாய், சீறும் நாத்தழலோடு அவனை நோக்கி கொத்தவரும் மூர்க்கப் பாம்புகளின் அணிவகுப்பு மட்டும் நிற்கவில்லை. பால் வைக்கப்போனால் கையைக் கடிக்காமல், கொத்துவது போல், படமெடுத்து நிற்கும், நாகராணிகளைக் காணக்காண உடம்பில் வெப்பம் மூள்கிறது.

நாகராணிகளையாவது, கட்டி அணைத்துக் கொஞ்ச வேணும்போல், இவன தவிதவிப்பதைக் காண  அவனுக்கே பொறுக்கவில்லை. ஆனால் இந்த உடம்பின் தினவு  ஆட்டுவிக்கும் போதெல்லாம், ஏன  அதிசயமாய் அவனுக்கு  ஜானுவைத்தான் தேடுகிறது . சூடான அவள் மூச்சுக்காற்றும், பிணங்கிகிடக்கும்போதும், பவழமாய் அந்தப் பட்டு உதடுகளும்.,, என்றைக்காவது மெத்து மெத்தென்ற அந்த முறுகிய உடம்பை, மென்மையாய்  அனுபவித்திருக்கிறோமா? ஆண்டு அனுபவித்தது எல்லாமே இருட்டுக்குக் கிட்டிய குருட்டுக்காமம்தானே?
க்‌ஷண சபலம், அது கூட கனவுதானா? யார் சொன்னது?

தூமகேதுவாய் அப்படியே அவளுள் புகுந்துஅவளை இரண்டாய்க்  கிழித்துப் போடவேண்டும் போல் எரிமலை அவனுள் வெடிக்கிறது இரவா, பகலா,கண்ணுக்க எல்லாமே மசமசத்துத்தான் தெரிகிறது. எரிச்சலை அடக்கமுடியாமல் படீர் என்று சுவரில் ஓங்கி குத்தினான்.

கை வலிக்கவேயில்லையே. ஏன்? சங்கரன்குட்டிக்கு ஆச்சர்யமாக இருந்தது. கைகள் காய்ப்பு தட்டிப்போய்,முரடித்துக கிட்டே கொண்டு போனாலே நாற்றம் தாங்கவில்லைதான்.ஆனாலும மூக்கைப் பொத்தத் தோன்றவில்லை. மாறாக ஏனோ திடீரென்று சிரிப்பு வந்தது.

குலுங்கி குலுங்கி சிரிப்பு வருகிறது. பிறகு தான் சிரிப்பதையே, ரசிக்கத்தொடங்கினான். அம்மணமாய், யாரோ எதிரில் வருவது போல் தோன்றுகிறதே?

யார்? யாரது? நிழலாய் நிழலின் பூடகமாய், மூலையில் நின்று விட்டு அடுத்த கணம் மறைந்து விடுகிறது.

திடீரென்று சிறுனீர் கழிக்கவேண்டும் போலிருக்கிறது. ஆனால் அவன் கட்டுப்பாட்டையும் மீறி, வேஷ்டி நனைந்து விடுகிறது. இப்பொழுதெல்லாம் இப்படித்தான். அடிக்கடி வேஷ்டி நனைந்து விடுகிறது. அட, உடம்பு கூட அவன் கட்டுப்பாட்டில் இல்லையா ஆமாம், ஜானு  எங்கே?

இந்த சோம்பேறிக்கழுதை ஜானு எங்கேதான் போய்த் தொலைந்தாள்?

, மீண்டும் இது யார்? பொக்கை வாயில், வெற்றிலையை முறுக்கான் போட்டுக்கொண்டு,, இடுப்பில் கையை வைத்துக்கொண்டு, நெருப்பாய் முறைத்துப் பார்க்கிறாளே யாரிவள்? ”காலமாடா, இன்னுமா உனக்கு கேடுகாலம் வரவில்லை? இன்னும் உன்னை வாரிக்கொண்டு போகவில்லையா?”

கையை இவனை நோக்கி நீட்டி, சடசடவென்று முறிக்கிறாளே? , நினைவு வந்து விட்டது, இவள், இவனைப் பெற்ற மூதேவி தானே.

இன்னுமா இந்தப் பீடை சாகவில்லை?

திடீரென்று பசி  மட்டும்  மீண்டும் நினைவுக்கு வருகிறது. பெருங்குடலை சிறுங்குடல் விழுங்குகிறது.பசி, பசியேதான் அகோரமாய்ப் பசிக்கிறது. தலை வேறு பாரமாய் இருந்தாலும் பசிக்கு முன்னால், எதுவுமே ஒரு பொருட்டாய் படவில்லை. சாப்பிடணுமே? என்ன அது?

சட்டென்று நினைவுக்கு வர மாட்டேன்கிறதே? வெள்ளையாய், பருக்கை பருக்கையாய், இருக்குமே, . அது ,அது என்ன? இல்லை.

மூளையை கசக்கிப்போட்டு யோசித்தும் நினைவுக்கே வரமாட்டேன்கிறதே? ரொம்ப யோசித்தால் தலை வலிக்கிறது.

, இன்னொன்றுகூட இவனுக்குப் பிடிக்குமேசாப் ஸ்டிக்கால் குத்தி எடுத்து  நீட்டமாய்  வால் வாலாய்த் தொங்குமே?, சுழற்றிப் பிய்த்து, வாயில் போடுவானே? ஹாக்கர் செண்டரில் சென்றமர்ந்ததுமே, பியரோடு ருசித்து சாப்பிடும் அயிட்டமாச்சே?

காசில்லையென்றால் தான் பியர் சம்பளம் கைக்கு வந்துவிட்டால், முதல் நாளே ஸ்காட்ச் விஸ்கி தான் . வீட்டிலும் துண்டு மீன் தான்.

வஞ்சனை மீன் என்றால் பிரச்சினை இல்லை. கெம்போங் மீன் என்றால் தான் தட்டோடு தூக்கி அடிப்பான்.எல்லாம எல்லாமே நினைவுக்கு வருகிறது.

லஹரியின் பெயர் கூட நினைவுக்கு வருகிறது. ஆனால் தினசரி சாப்பிடும் பருக்கையின் பெயர்  ,வெள்ளை, வெள்ளையாய், அது,

அது தான் நினைவுக்கே வரமாட்டேன்கிறது.

எங்கே போனாள் இந்த ஜானு?   ? யாரிது?

அட, சும்மா வாங்க,, , பார்த்தே பசியாறிடுவீங்களா? பணம் கொடுக்க மட்டும்தான் கசக்குதா?பாத்துய்ய, எல்லாம் ஏஜண்டுக்கே போயிடுது.

நீயா பாத்து மனசு வச்சு குடுக்கறதுதான் எனக்கு. இந்தியாவிலேருந்து  வரும்போது வீட்டு வேலைக்குன்னு தான் கூட்டிக்கிட்டு வந்தாங்க.

இங்கே வந்த பிறகுதான் இந்த நாறபொளப்பாப் போச்சுஅட, வா, அய்யே, உன் சந்தோசம் தான் என் சந்தோசம்.’
 
அவள் பெயர் என்ன ,தெரியலையே?

ஆனால் அந்தப்பெண் அழுதபோது மனசு அப்படியே கரைந்து விட்டது. அவள் போலீஸில் பிடிபடும் வரை சங்கரன் குட்டிதான் அவளது பிரதான வாடிக்கை.

ஜானு பிறகு ஒரு நாளும் அழுது அவன் பார்த்ததே இல்லை. எப்பொழுதுமே விறைப்பு தான். சாப்பாட, சாப்பாடு, இவன் சாப்பிடாத சாப்பாடா?

, சாப்பாடு என்றவுடன் தான் நினைவுக்கு வருகிறது.

அடிக்கடி அவனைத் திட்டும் மேலதிகாரி, சீனன், பெயர் கூட சட்,என்னவ  எழவுப் பெயர். அவன், இப்படித்தான்,
 
ஒருமுறை ரெஸ்டாரெண்டிலிருந்து வந்திறங்கிய உணவை, சங்கரன்குட்டிதான் அவனுக்குப் பரிமாறவேண்டும் என்று ஆர்டர் போட, அந்த வக்கிரத்துக்கு இவன் கொடுத்த சாட்டையடி,

நினைக்கவே சிரிப்பு சிரிப்பாய் வருகிறது உணவுத்தட்டைத் திறந்து, காறித்துப்பிவிட்டு , தன்னுடைய எச்சிலைக் கொண்டுபோய்,

அவனை சாப்பிட வைத்த சாமர்த்தியத்தை, நினைக்க நினைக்க  இன்பமாய் இருக்கிறது.

இப்படி எத்தனை, எத்தனை? சாதனைகள்? இவன் கிட்டே வாலாட்டினால் இவனொன்றும் சும்மா இருக்கமாட்டான்.

அடிக்கு அடி, வக்கிரத்துக்கு வக்கிரம்.

ஏதோ பேச்சுக்குரல் கேட்கிறதே?   மழுங்கி ,மழுங்கி, மூளை ,அடிக்கடி இப்படித்தான் மந்தித்துப்போய் விடுகிறது.
ஏன்? எதையுமே கோர்வையாய் யோசிக்க முடியவில்லை?

ஆனால் பசிக்கிறதே? அய்யோ பசிக்கிறதே

ஏய் ஜானு ,சண்டாளி எங்கேடி போய் ஒழிஞ்சே?”   ’” நாயிண்டெ மோளே’, நீ மட்டும் இப்ப என் கையில கிடைக்கணும், வாடிவா.

வீட்டு ஆம்பிளை படுத்துட்டான்னா, அவ்வளவு கொழுப்பு வச்சுப்போவுதா உனக்கு? வா தடிக்கழுதை, வாடி,”

திடீரென்று அவன் உடலை நாகராணிகள்  முறுக்கிப்பிடித்து மேலே படர்கிறார்கள். கழுத்தில் ஒன்று, வயிற்றில் ஒன்று, இடுப்புக்குக் கீழே ஒன்று, வளைந்து, வளைந்து, நெளிந்து, நெளிந்து, , உயிர்த்தீயின் வலி, மரணபயமாக குலை நடுங்க வைக்கிறது.

சுரீர், என்று எங்கோ கடிபடும் வலி.    நாகராணி கொத்திவிட்டாளா?

கண்விழித்தபோது, சங்கரன் குட்டிக்கு  உடை மாற்றிமருத்துவமனை  கட்டிலில் சீராக கிடத்தப் பட்டிருந்தான். காலையில ஏற்றிய ஊசி மருந்தின் வீர்யத்தில், மொடை நாற்றமோ, மூத்திர வாடையோ, எதுவுமே  நினைவில் இல்லை. மனுஷ்ய ரூபமோ அருவமோ கூட நினைவின்றி அலக்க மலக்க விழித்தான்.

மன நல மருத்துவமனையில் அப்போது உணவு நேரம். சாப்பாட்டு ட்ரோலியை தள்ளிக் கொண்டு, மருத்துவமனை ஊழியர்கள் இருவர்  வர,

பாய்ந்து சென்று மற்றவர்களோடு சங்கரன் குட்டியும்  வரிசையில் நிற்கிறான்.

அப்போது நோயாளிகளைப் பார்க்க வந்த உறவினர்களில் ஒருவர் கூட சங்கரன் குட்டியைத் தேடி வரவில்லை.

உணவு பரிமாறும் ஊழியர் தான்,

பாவம் எவ்வளவு வருஷமாக இந்த அநாதை இங்கு கிடக்கிறான்”, எனும் அனுதாபத்தோடு ,இன்னும் கொஞ்சம் சோற்றை அள்ளி அவன் தட்டில் போடுகிறார்.

அப்பொழுதுதான் சங்கரன் குட்டிக்கு பெயர்........  அதன் பெயர்..........  நினைவுக்கு வருகிறது.

அய், சோறுசோறு", என்று குதூகலித்தவாறே, இரண்டு கையாலும் அவன் வாரி வாரித் தின்னத்தொடங்க, சாப்பாட்டு ட்ரோலி அவனை கடந்து சென்றது.

[முற்றும்]                                                                             
 

kamaladeviaravind@hotmail.com