இருத்தலின் விதிகள்

விஜய் மகேந்திரன்

அந்தி மயங்கும் பொழுதுகளில், நானும், எனது நண்பரும் காலார சுற்றித்திரிவது வழக்கம், இலக்கிய சஞ்சாரம், சினிமா, குடும்ப வாழ்க்கை, வேலைக்கான பிராயத்தனங்கள் என்று பேச்சு பல புள்ளிகளை சுற்றி வளைத்து தொட்டு மீளும். அன்று தி. நகர் அபிபுல்லா சாலையில் ஆரம்பித்த நடை கோடம்பாக்கம் ஸ்டேசன் தாண்டி சென்றுவிட்டது. ரயில் வருவதற்கான ஆயத்தமாக அவரச அவசரமாக கேட்டை சாத்திக் கொண்டிருந்தார் கேட்கீப்பர். வெகுதொலைவு நடந்தது போன்ற களைப்பில் நண்பர் இருந்தார். ஒரு டீ சாப்பிடலாமா? என்றேன். சொல்லுங்க என்றறபடியே எதிர்ப்புறமிருந்த அரச மரத்தைக் கவனித்தார். அதன் கீழ் சாக்கு விரித்து பழைய புத்தகங்களை அடுக்கியிருந்தார் ஒருவர்.

போய் பார்க்கலாமா என்றேன். ஏதாவது பாக்கெட் நாவல் மாதிரி வைச்சுருப்பான், டைம்தான் வேஸ்ட் ஆகும் என்றார். தேடிப்பார்க்கலாமே என்று நான் முன்னகர்ந்தேன். நண்பர் சலிப்புடன் பின் வந்தார். கடைவிரித்திருந்தவர் கிட்டத்தட்ட ஏறக்கட்டிவிட்டு கிளம்ப முற்பட்டிருந்தார். பிரித்து பல புத்தகங்களைப் பார்த்தேன். நண்பர் சொன்ன மாதிரியே ஒரு இலக்கியப் புத்தகத்தைக்கூட காண முடியவில்லை. தேகப்பராமரிப்பு, மனைவியை மயக்குவது எப்படி? (1965ல் வந்திருக்கிறது), இலவம்பஞ்சு மெத்தையின் மருத்துவப் பயன்கள் எனப் பட்டியல் நீண்டது. ஏன் சார் ஒன்றும் தேறலியா, சனிக்கிழமை முடிஞ்சா வாங்க, கொஞ்சம் புது புக் வருது என்று கடையை கட்டி எடுத்துக்கொண்டு கிளம்பினார்.

நண்பர் சரியான வேலை கிடைக்காமல் குடும்பச்சூழலில் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். எனக்கு வேலை கிடைத்தும் நிறைவில்லாத சம்பளத்தால் வீட்டில் சரியான அங்கீகாரம் கிடைக்காமல் அலைந்துகொண்டிருந்தேன். இருவருக்கும் வீடு மறுக்கப்பட்ட உரிமைகளின் கழகமாக விளங்கியது. இலக்கிய வாசிப்புக் கூட பழைய புத்தகங்களாலேயே சாத்தியமானது.

அன்று பிரியும் தருணத்தில் நண்பர் வேலை விஷயமாக திருச்சி செல்லவிருப்பதாக கூறினார். வருவதற்கு குறைந்தது மூன்று நாட்கள் ஆகலாம் என்றார். வீட்டின் விஷச்சூழலில் இருந்து தப்ப அடுத்த நாளிலிருந்து நான் மட்டும் தனியாக தாலை நடையை மேற்கொள்ள வேண்டியிருந்தது. ரங்கராஜபுரம் ரயில்வேகேட்டைக் கடக்கும்போது தவறாமல் கண்ணில்படுவான் பழைய புத்தகக்கடைக்காரன். நட்பான புன்சிரிப்பு ஒன்றை உதிர்த்துவிட்டு கடந்து சென்றுவிடுவேன்.

அந்த வாரத்தின் சனிக்கிழமை அன்று திருவல்லிக்கேணியிலிருந்கும் பெரிய தெருவில் பழைய புத்தகக்கடைக்குள் சென்றேன். சலித்துத் தேடியும் சம்பத்தின் இடைவெளி கிடைக்கவில்லை. கிருத்திகாவின் வாஸவேஸ்வரம் சுந்தர ராமசாமியின் பள்ளம் போன்றவை அதிசயமாகக் கிடைத்தன. ஒரு இலக்கிய நண்பர் இடைவெளியை இப்போது அப்போது என தராமல் இழுத்தடித்தார். ஏதோ வெறுமை நிறைந்த மனநிலையில் மாலைநடையைக்கூட நிறுத்திவிட்டு வீட்டில் தனித்திருந்தேன். மனைவி சந்தேகப்பட்டவளாய் இன்னிக்கு ஊர் சுத்தக் கிளம்பலயா என்று கூட கேட்டாள். இல்லை என்பதுபோல் தலையாட்டினேன்.

இப்படி தினமும் சாயங்காலம் வீட்டோட இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும், பாக்குறேன் நாளைக்கு அந்தாளு (நண்பரை) தேடிவந்துட்டா கிளம்பிடுவீங்க என்றுவிட்டு டிவியில் மெகாசீரியல் ஒன்றைப் பார்க்க ஆரம்பித்தாள். அந்த நண்பரின் மனைவியிடமும் எனக்கு இந்த மரியாதைதான் கிடைக்கும் என்று நினைத்தபோது ஏனோ சிரிப்பு வந்துவிட்டது.

மனைவி சொன்ன மாதிரி நண்பர் தேடிவரவேயில்லை. என்ன ஆனார் எனத் தெரியவில்லை. திருச்சியில் வேலை கிடைத்து செட்டிலாகிவிட்டாரா அல்லது ஊர் திரும்பியும் வேறு விவகாரத்தில் சிக்கிக்கொண்டாரா என்று பலவாறு யோசித்தபடியிருந்தேன். என்ன ஆனாலும் அவர் வீட்டிற்கே சென்று விசாரிக்கலாம் என்று கிளம்பினேன். ராயப்பேட்டையில் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் இருந்த அவரது வீட்டிற்கு போனபோதுஇ வாசலிலேயே நண்பருக்கும் அவரது மனைவிக்கும் ஏதோ வாக்குவாதம் நடந்துகொண்டிருந்தது. என்னைக் கண்டதும் அவரது மனைவி அவசரமாக வீட்டினுள் சென்றாள்.

இப்ப பாத்து நீங்க ஏன் வந்தீங்க. அவளுக்கு இரண்டு அறை கொடுக்கலாம்னு இருந்தேன் என்றார் நண்பர். கிளம்புங்க எங்காவது போகலாம், ஏன் வீட்டில சண்டை போட்டுட்டு அமைதியைக் கெடுத்துக்கறீங்க கையைப் பிடித்து அழைத்து வந்தேன்.

பறவைகள் கூடு திரும்ப ஆரம்பித்திருந்தது. வாகன போக்குவரத்து அதிகரித்திருந்தது. புகைமண்டிய சாலைகளைக் கடந்துஇ கடற்கரை நோக்கி செல்லும் சாலையில் நடந்துகொண்டிருந்தோம். நண்பர் எதுவும் பேசாமலிருந்தார். வேலை விஷயம் என்னாச்சு என்றேன். ஏன் கேக்கறீங்க, எட்டு மணி நேர வேலை, மூவாயிரம் ரூபாய்தான் சம்பளம். அதுக்கு எழுவத்தெட்டு கண்டிஷன் போடுறான். இவ பரவாயில்லை சேருங்கன்னு சொல்றா என்றார்.

ஏன் அப்படிச் சொல்றாங்க? அப்பவாவது புத்தகம் படிக்கிறதை விட்டு ஒழிப்பீங்க, அதைச் செஞ்சாலே உருப்படுவீங்கங்றா. எனக்கு அதற்குமேல் பதில்பேசத் தெரியவில்லை. ஒருகணம் நினைவில் என் மனைவி தோன்றி மறைந்தாள். சில நாட்கள் கடந்திருந்தது. காலை பத்து மணியளவில் எனது மோட்டார் வாகனத்தை எடுத்துக்கொண்டு மளிகைச் சாமான்கள் வாங்கக் கிளம்பினேன். நேரத்தோடு வீட்டுக்கு வந்துடுங்க மனைவி எச்சரித்து அனுப்பினாள். என்னுடைய உள்மனம் ரங்கராஜபுரம் ரயில்வேகேட் கடந்து சென்று வாங்கிவரலாம் என்றது. இது ஒரு பைத்தியகாரத்தனம் எனத் தெளிவாகத் தெரிந்திருந்தும் இம்மாதிரி கட்டளைகளை எனது மனம் ஏற்கும். பலமுறை அதற்கு செருப்படியும் கிடைத்திருக்கிறது.

இப்படித்தான் ஒருமுறை அசோக்நகர் சென்றுகொண்டிருந்தேன். போகும் வழியில் சிறுபத்திரிகை நடத்தும் நண்பரின் வீடு இருக்கிறது. அவரைப் பார்த்து நாளாயிற்று என்று சென்றேன். மாலை நான்கு மணி இருக்கும். வசதியான அபார்ட்மெண்டில் குடியிருக்கிறார். அவரது பிளாட்டிற்குச் சென்று அழைப்பு மணியை அழுத்தியதும்இ கதவு திறந்து என்னைப் பார்த்தவர், ஓ... நீங்களா! வாங்க நாம மொட்டை மாடிக்குப் போய் பேசலாம் என்றவர் மாடிக்கு அழைத்துச் சென்றார். மாடியில் வெயில் காய்ந்துகொண்டிருந்தது.

அப்புறம் சொல்லுங்க என்று பேருக்கு சில நிமிடம் பேசிக்கொண்டிருந்தவர் வொய்ப் வெளியே போறேன்னு சொன்னாங்க, ஷாப்பிங் பண்ண,கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்றுவிட்டு கீழே சென்றார். கிட்டத்தட்ட ஒருமணி நேரம் மொட்டை வெயிலில் நின்றுகொண்டிருந்தேன். ஏதோ சந்தேகம் வந்தவனாக கீழே போய் பார்த்தபோதுஇ நண்பர் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டது தெரிந்தது. உள்ளுணர்வின் கட்டளையால் செருப்படி பட்ட தருணங்களும் அதிகம்.

எனது வாகனம் ரெயில்வே கேட்டைக் கடந்து பழைய புத்தகக் கடையில் போய் சரியாக நின்றது. பத்து வயது மதிக்கத்தக்க சிறுவன் கடையில் உட்கார வைக்கப்பட்டிருந்தான். கடைக்காரரை விசாரித்தேன். புத்தகம் எடுக்கப் போயிருக்கிறார் என்றான். மளிகைக் கடைக்குச் சென்று சாமான் பட்டியலைக் கொடுத்தேன். சாமான்களை வீட்டிற்கு அனுப்பி விடுவதாக முகவரி குறித்துக் கொண்டார்கள். லேசான நிம்மதி ஏற்பட்டது. மறுபடியும் புத்தகக்கடைக்கு வந்தேன். கடைக்காரர் ஒரு மூட்டையை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வந்தார். அதைப் பிரித்துக்கொட்டியபோது ஒரு கணம் அதிர்ந்து விட்டேன். நடப்பது நிஜம்தானா என்று ஒருமுறை கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். அத்தனையும் நவீன இலக்கியப் புத்தகங்கள். சம்பத்தின் இடைவெளியும், சி.மணியின் ஒளிச்சேர்க்கை, குட்டி இளவரசன் என நான் தேடிய புத்தகங்கள் எனக்கு அருகாமையில் கிடந்தன.

எங்கேயிருந்து எடுத்துட்டு வர்றீங்க என்றேன் வியப்பு குறையாமல். மாம்பலத்துல ஒருவீட்ல இருந்து சார். வீட்டுப் பெரியவர் காலமாயிட்டாரு, அவர் வச்சுருந்த புஸ்தகங்கள பசங்களுக்கு வேணாம்னு தூக்கிப் போட்டுட்டாங்க. அப்படியா இவ்வளவு புத்தகம் படிச்ச அந்தாளு பிள்ளைகளுக்கு அதன் அருமை தெரியாமல வளர்த்திருப்பான். காசுகூட வேணானுட்டாங்க. சும்மாவா கொடுத்தாங்க? நீ வந்ததுனால உன்கிட்ட போடுறோம். இல்லாட்டி இதையெல்லாம் சேத்து வச்சு எரிச்சிருப்போம்னு செல்றாங்க முட்டாப்பசங்க.

நான் பதில் பேசாது நின்றேன். மளிகைக் கடைக்குக் கொடுத்ததுபோக மீதமுள்ள பணத்தில் எத்தனை புத்தகம் வாங்க முடியுமோ வாங்கிக் கொண்டேன். மீதமுள்ளவற்றை இன்னொரு நாள் வாங்கிக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு வீட்டிற்கு சென்றேன். புத்தகங்களை என் கையில் பார்த்த என் மனைவி உங்கள திருத்த முடியாது என்று சொன்னாள். அவள் மீது கோபம் எதுவும் வரவில்லை. எனது இருப்பைப் பற்றிய பயம் மட்டும் மெலிதாகக் கவ்வியது.

பின்குறிப்பு: சமீபத்தில் ரங்கநாதன் தெருவில் மனைவியுடன் பிறந்தநாளுக்கு புடவை வாங்க சுற்றிக் கொண்டிருந்தேன். கூட்டத்தில் ஒருவராக எதிர்பட்டார் பழைய கடைக்காரர். நான் புத்தகங்கள் வாங்கிச் சென்ற அடுத்தநாளே இன்னொருவர் புத்தகங்களைப் பார்த்துவிட்டு, கணிசமான தொகை கொடுத்து, அத்தனை புத்தகங்களையும் ஆட்டோ ஒன்றில் ஏற்றிச் சென்றுவிட்டதாகக் கூறினார். அந்த முகமறியாத நபர் இதைப்படிக்கும் நீங்களாகக் கூட இருக்கலாம்.

 

vijaymahindran@gmail.com