செல்லரித்த சொந்தங்கள்

சரோ வர்ணன்


ரம்மியா கண்களை சில நிமிடங்கள் மூடியபடி காரில் சாய்ந்து விட்டாள். அவளுக்குத் தெரியும். போக்குவரத்து வழமைக்கு திரும்பி கார் அசைய சில நிமிடங்கள் ஆகுமென்று. வெள்ளிக்கிழமை குதூகாலம் ஒவ்வொரு உழைக்கும் ஜீவன்களிலும் துளிர்வதை அவளால் பார்க்க முடிந்தது. வழமையாக வெள்ளிக்கிழமைகளில் போக்குவரத்து நெரிச்சல் ஏற்படுவது சகஜம்தான். அதை தவிர்ப்பதற்காகவே முன்னெச்சரிக்கையாக இன்று அரைமணித்தியாலம் முன்பாக வேலையிலிருந்து புறப்பட்டும்; பயனளிக்காது போய் விட்;டது. பேசாமல் வழமையான நேரத்திற்கே வந்திருந்தால் மேலதிகமாக அரைமணித்தியால சம்பளமாவது கிடைத்திருக்குமென மனம் பேதலித்தது.

'நாளைக்கு புரட்டாதிச் சனி. விரதத்திற்கு சமைக்க வேலை முடிந்து வரும்போது கொஞ்சம் மரக்கறி வாங்கிக் கொண்டு வாம்மா' என அம்மா காலையில் அவள் வேலைக்குப் புறப்படும்போது கூறியதாலே வழமையாக வீடு திரும்பும் பாதையை விட்டு புதிய பாதையில் வர வேண்டியதாயிற்று. கார் மெல்ல, மெல்ல ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. இடையில் பொலிஸார் கார்களை வேறு வழிக்கு திருப்பும்படி கூறிக்கொண்டிருந்தார்கள். எங்கே விபத்து நடந்திருக்க வேண்டும்.

'விபத்து' வாழ்க்கையில் எங்கே? எப்படி? எப்போது? எதனால் வருமென கூறமுடியாது. ஒரு விநாடியில் தலைவிதியை விபத்து தலைகீழாக மாற்றி விடும். மனதுக்குள் தனக்குத் தானே கூறிக்கொண்டாள். கார் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக நகரத் தொடங்கியது. அப்பாடா! என ரம்மியாவுக்கு நிம்மதிப் பெருமூச்சு வந்தது. அம்மா பாவம். எவ்வளவோ சுறுசுறுப்பாக ஓடித் திரிந்தவள் இப்போது மிகவும் சோர்ந்து முடங்கி விட்டாள். அதற்கு தானும் ஒரு காரணி என்பதை அவளால் மறுக்கமுடியாது. அம்மாவுக்கு உடம்பெல்லாம் ஒரே சோர்வு, மூட்டுவலி. உட்கார்ந்தால் எழுந்திருக்க முடியாது. எழுந்தால் உட்கார முடியாது. மிஞ்சிப் போனால் 15 நிமிடங்கள் ஒரு இடத்தில் இருக்க முடியாது. வைத்தியர் ஆர்த்ரைட்டீஸ் என மருந்து தந்தார். அது ஆரம்பத்தில் பலன் தந்தாலும், நாளடைவில் மருந்துக்கு உடம்பு இடம் கொடுக்க மறுக்கிறது நடை அம்மாவுக்கு அவசியமென எண்ணி பலதடவைகள் 'அம்மா வாங்கோ கொஞ்சம் ஓக் போவோம்' என மாலை நேரங்களில் அழைத்தால் அம்மாவும் மிகவம் சுறுசுறுப்பாக புறப்படுவாள.; ஆனால் நடக்கத் தொடங்கி பத்து நிமிடங்களில் 'என்னால் முடியாது ரம்மியா' என இரு கைகளால் குனிந்து முழங்கால்களை பிடித்துக் கொள்வாள். அப்படி இல்லாவிட்டால், நடந்து செல்லும் பாதையில் கரையில் கட்டியிருக்கும் மேட்டுப் பகுதியைத் தேடிப் பிடித்து குந்தி விடுவாள். கனடாவில் சின்னச்சின்ன தேவைக்கெல்லாம் காரைப் பயன் படுத்துவதால் கால்களின் பயன்பாடு சுருங்கிவிட்டது. அம்மாவை போல பல முதியவர்களுக்கு கனடாவில் இதே பிரச்சனைதான். அம்மாவை இந்தக் குளிரில் நடக்க விடக்கூடாது என அவளை கார் பழக்கத்துக்கு அடிமையாக்காமல் கொஞ்சத்தூரமென்றாலும் நடக்க விட்டிருந்தால் இப்படி நடந்தவுடனே களைத்திருக்க மாட்டாள்.

எதிரே தெரிந்த பஸ் தரிப்பு இடம்; வேலையை விட்;டு வரும் தொழிலாளர்களின் வருகையால் அமளிப்பட்டுக் கொண்டிருந்த போதிலும், திடீரென அவள் கண்களில் பட்ட உருவம்..... ஒரு கணம் உடலின் சக்தியை பிடுங்கி எடுத்த உணர்வு. காரை நிறத்துவோமா? என உள்ளுணர்வு ஒரு கணம் தடுமாறியது. சீ...சீ.. பெரிய மிராசு மாதிரி நடந்த இந்த மனிதனிடம் எனக்கென்ன பரிதாபம்? ஏன் நான் வலிய போய் பேச வேண்டும்? எரிமலையாய் மனம் குமுறியது. பழைய நிலைக்கு வரும் முன் பஸ் புயல் போல வந்து அவனை ஏற்றிக் கொண்டு பறந்து விட்டது.

அவளின் வேதனை மூச்சுக்காற்றை எடுத்துக் கொண்டு எப்படித்தான் கடைக்கு வந்து சேர்ந்தாளோ அவளுக்கே தெரியாது. அம்மா சொன்ன சாமான்கள் கூட நினைவிருந்து சில விநாடிகளுக்குள் மறந்து விட்டது. ஒரு நாளும் இப்படி அவளுக்கு நடந்ததில்லை. மிகவும் சிரமப்பட்டு சுதாரித்துக் கொண்டாள். கைத்தொலைபேசியில் அழைத்து அம்மாவிடம் வாங்க வேண்டிய சாமான்களை மீண்டும் தெரிந்துகொண்டாள். சாமான்களுடன் வீட்டை அடைந்த போது, 'எங்கே ரம்மியா சீனி, தேங்காய் வாங்க மறந்து விட்டாயா?' என அம்மா கேட்டபோது 'அடடா வாங்க மறந்து விட்டேன். நாளைக்கு விடிய வாங்கித் தாரேன்' என கூறினாளே தவிர, அவனை கண்டுதான் இந்த புத்தி தடுமாற்றம் எனக் கூறி அம்மாவைத் தடுமாற வைக்க ரம்மியாவுக்கு விருப்பமில்லை. தனக்குள் சோகத்தை புதைத்துக் கொண்டாள்.

கண்களை மூடியப்படி கட்டிலில் சாய்ந்தாள். ரம்மியாவுக்கு தூக்கம் வரவில்லை. அவளிடமிருந்து நிம்மதியான தூக்கம் விலகி சில வருடங்களாகி விட்டன. மனதில் தூக்க முடியாத சுமை. இதை வெளியில் சொல்லி ஆறுதலடையவும் அவளுக்கு விருப்பமில்லை. காரணம் யாரிடமாவது சொன்னால் நீ தேடிக் கொண்ட வாழ்க்கை இது. இப்போது புலம்பி என்ன பிரயோசனம் என்பார்கள். அந்த கையாலாகாத வாழ்க்கைக்கு விடிவு கிடைத்தாலும், கழுத்தில் விழுந்த மூடிச்சு இன்னும் இறுகிக் கொண்டுதானிருக்கிறது.

ரம்மியா ரவியை காதலித்துதான் திருமணம் செய்து கொண்டாள். பின் அவள்தான் முதலில் கனடாவுக்கு வந்து ரவியையும், அம்மாவையும் ஸபோன்சர செய்தாள். காலம் மிகவும் சந்தோசமாகதான் கழிந்தது. ரவி நல்லவன். ஆனால் இளகிய மனம். பாசம் அளவுக்கு அதிகமாக இருந்ததால் அவனை கட்டுப்படுத்துவது கடினம். தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என அடம் பிடிப்பவன். ஏற்கனவே தங்கையை கனடாவுக்கு அழைக்க கொஞ்சம் காசை அனுப்பியிருந்தான்.

தீடீரென ஒரு நாள் தொலைபேசி அழைப்பு வந்தது. தங்கை சுதா கனடாவுக்கு வெளிக்கிட்டு விட்டதாகவும் ஏயர் போட்டுக்கு போய் அவளை அழைத்து வரும்படி மாமாவிடமிருந்து போன் வந்தது. விடயத்தை ரம்மியாவிடம் கூறியவன் அவள் பதிலைக் கூட எதிர்பார்க்க நேரமில்லாது காரை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான். திரும்பி வரும்போது அவர்களுக்கு தேவையான சாமான்களை கை நிறைய வாங்கி வந்தவன் ரம்மியாவிடம் சமைக்கும்படி கூறிய போது இடையில் ஏதோ சொல்ல வாய் எடுத்த ரம்மியாவை, இடைமறித்து 'உதுல இருந்து அளக்காமல் போய் கொம்மாவுக்கு உதவி செய். எனக்கு உன்னோட கதைக்க இப்போ நேரமில்லை' என விமான நிலையத்துக்கு பறந்து விட்டான். தாயும், மகளும் அதிர்ச்சியில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

ஐந்து வருடங்கள் வாழ்ந்தவள் ஐந்த நிமிடத்தில் அந்நியவளாக மாறி விட்டதை போன்ற உணர்வு ரம்மியாவுக்கு ஏற்பட்டாலும், அம்மாவுக்கு அதனை காட்டிக் கொள்ள விரும்பாதவளாக சமையலறைக்கு வந்தவள் அம்மாவின் முகம் எதிர்பாராமல் அடி வாங்கியதை போல இருப்பதைக் கண்டு திகைத்துப் போனாள்.

தங்கை சுதா கனடாவுக்கு வந்த பின் ரவி அவளுடனும், மகன் சதீஸூடனும் பொழுதை கழிக்கத் தொடங்கினான். பாசம் என்பதற்காக ரவி நியாயங்கள், உண்மை என்பவற்றை உதட்டுக்குள் ஒளித்துக் கொள்வதை உணர்ந்துக் கொண்டாள். எதற்கெடுத்தாலும், கோபம், வெறுப்புடன் அவனிடமிருந்து எந்த நேரம் என்ன சொற்கள் வருமெனத் தெரியாமல் வேலை செய்யுமிடத்தில் ஓவர்டைம் கேட்டு அதிக நேரத்தைக் கழித்தாலும் அம்மா வீட்டில் தனித்து விடுவாள் என்ற பயம் வேறு உள்ளுற இருந்து வாட்டியது. சமையல் வேலையிருந்து வீடு கிளீன் பண்ணுவது, தங்கையின் மகன் சதீஸை பாராமரிப்பது என சகல வேலையும் அம்மா ரம்மியாவுக்காக முகம் சுழிக்காது மௌனமாக செய்தாள்.

சுதா வீட்டில் எதுவும் செய்யாது ஆங்கில வகுப்புக்கு போய் வரத் தொடங்கினாள். அவளும், மகனும் கனடாவுக்கு வர ஏஜென்சிக்கு கொடுத்த காசில் அரைவாசி ரவியுடையது. அதனை கொடுக்கும் நினைப்பே இல்லாமல், தனது கணவனை கூப்பிட உதவும்படி நச்சரிக்கத் தொடங்கினாள். மகன் சதீஸூக்கு தேவையான விளையாட்டு சாமான்கள், உடுப்பு என நிறைய செலவுகள் வேறு. ரம்மியா சம்பளம் எடுத்து பேங்கில் போட்டால், இரண்டு நாட்களில் பணம் காலியாகி விடும். ரம்மியாவால் அம்மாவின் கைச்செலவுக்காக சிறு தொகை பணத்தை கூட கொடுக்க முடியாத நிலமை. அம்மாவுக்கு முன்பு போல சுதந்திரமாக வெளியில் போக முடியாதபடி சுதாவின் மகனைப் பார்க்கும் முழுப் பொறுப்பும் அம்மாவிடம் சுமர்த்தப்பட்டிருந்தது. எதனையும் ரவியிடம் சொல்ல முடியாது. அவனும் எதனையும் கேட்கும் நிலமையிலில்லை.

பாசம் நியாயங்களை மறைத்து நின்றது. தனக்கு கார் வாங்க சிறுகச்சிறுக சேகரித்த பணம் ஐந்தாயிரமும் கரையத் தொடங்கிய போதுதான் ரம்மியா ரவியிடம் கொஞ்சம் கொஞ்சமாக நச்சரிக்கத் தொடங்கினாள். விசா காட் எல்லாம் நிரம்பி விட்டது. இந்த நிலையில் சதீஸின் பிறந்த தினத்தை மிகப் பெரிதாக செய்ததுடன், இரண்டு பவுணில் தங்கச் செயின் வேறு ரவி செய்து கொடுத்தான். ஆனால் ரம்மியாவின் அம்மாவின் பிறந்த தினத்திற்கு ஒரு கேக் வாங்க பல தடவைகள் ஞாபகப்படுத்த வேண்டும். இது ரம்மியாவுக்கு தாங்க முடியாத வேதனையும், ஏமாற்றத்தையும் தந்தது.

ஒரு நாள் ரம்மியா ' ரவி இப்படியே பேங்கில கடனில போனால் யார் இதற்கு பொறுப்பு? நமக்கு இப்போது பிள்ளைகள் இல்லை என்பதற்காக....? அவள் முடிக்கும் முன்பே ரவியின் கத்தலில் ரம்மியா அதிர்ந்து போனாள். 'இனியும் நமக்கு பிள்ளை பிறக்குமென நம்புகிறாயா? என்ர தங்காச்சி நான் எதுவும் அவளுக்கு செய்வேன் அதை கேட்க யாருக்கும் உரிமை கிடையாது. நீ என்னுடைய மனுசி நான் சொல்லற படி தான் கேட்க வேண்டும். விருப்பமென்றால் இரு. இல்லையென்றால்...... பாய்ந்து வந்த வார்த்தைகள் சுயநினைவுடன் வந்ததாக ரம்மியாவுக்கு தெரியவில்லை. இனியும் இவனுடன் வாழ்ந்தால் தான் மட்டுமல்ல அம்மாவும் அவமானம் பட வேண்டுமென எண்ணியவளின் தன்மானம் உந்தியது. வேதனை, வியப்பு, கோபம் மேலிட அவனை நிமிர்ந்து பார்த்தாள். பின் ஏதுவும் பேசாது அறைக்குப் போய் தன்னுடையதும், அம்மாவுடையதும் உடைகளை அடுக்கத் தொடங்கினாள். பெட்டியுடன் இருவரும் புறப்பட்ட போது சதீஸ் ஓடி வந்து அம்மாவின் கால்களை பிடித்தபடி அழுதபோது 'இந்தக் குழந்தைக்கு இருக்கும் நன்றி கூட இந்த மனித மிருகங்களுக்கு இல்லையே' என சதீஸைத் தூக்கி கெஞ்சினாள். நீதான் இந்த உலகம் என சுற்றி வந்தவன் 'போய் தொலை' என கூறுமளவுக்கு மமதை வந்து விட்டது. எத்தனை நாட்களுக்கு இந்த ஆட்டம் நீடிக்கப் போகிறது என ரம்மியா மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்.

பல போராட்டம், முயற்சி, வைராக்கியம் என்பன ரம்மியாவை உயர்த்தியது. படித்து நல்ல கம்பனியில் வேலை கிடைத்தது. அவளுக்கு கீழ் பலர் இன்று வேலை செய்கின்றனர். கார், வீடு என சொத்துக்கள் உண்டு. ஆனால் வாழ்க்கையில் கிடைக்க முடியாத சொத்து இல்லாமல் அவள் வாழ்க்கை வெளிப்பார்வைக்கு அழகானது, சொகுசானது. ரவி மட்டும் அவளை அன்று அப்படி நடத்தியிருக்காவிட்டால்..... ரம்மியாவும் இன்னும் தொழிற்சாலையில் வேலை செய்து பஸ்ஸில் போய் வந்து கொண்டிருப்பாள். ஆனால் நிலமை இன்று மாறி விட்டது. ஆனால் ரவியே இன்று சொத்துகள், சொந்தங்கள் அனைத்தையும் இழந்து நடுத் தெருவில் வருவதற்கு சுதாவே காரணமாகும். அவவின் கணவனை ரவி இங்கு கூப்பிட்டு விட, அவள் தனியாக போய் விட்டதுடன், பணத்தால சுதாவுக்கும், ரவிக்கும்; பிரச்சனை ஏற்பட்டு பின் அவள் ரவியுடன் கதைப்பதையும் நிறுத்திக் கொண்டாள். ரவிக்கு கடன் தொல்லை ஒரு புறம். ஒரு சொந்தமும் இல்லாத பரிதாப வாழ்க்கை மறுபுறம்.

ரம்மியா இன்றும் அதே பாதையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். அதே பஸ்தரிப்பில் கையில் சாப்பாட்டுப் பையுடன் களைத்து பஸ்ஸூக்காக பரிதாபமாக காத்திருக்கிறான் ரவி. ரம்மியா ஏதோ நினைத்தவளாக கார் ஹோனைப் பலமாக அடித்து விட்டு அவனைக் கடந்து செல்கிறாள். கையாலாகாதவளாக இருந்த ரம்மியா இன்று தைரியசாலியாகி, ஆனால் அன்று வீரானாக இருந்த ரவி இன்று கையாலாகாதவனாக வாழும் வாழ்க்கை. ஆம்! நிஜமான சொந்தங்கள் செல்லரித்ததால் வந்த விளைவு.

 sarovarnan@gmail.com