வாய்ப்பு

ராம்ப்ரசாத

வீட்டு வாசலில் அம்மா ஆசை ஆசையாய் வளர்த்த பட்டு ரோஜா, செம்பருத்தி, கனகாம்பரம், குரோட்டன்ஸ் முதலான செடிகள் அடர்த்தியாய் வளர்ந்த தோட்டத்தினூடே வேயப்பட்ட நடைபாதையில் நின்றபடி ஆக்ஸஸ் கார்டு,அலைபேசி, வாலட் எனப்படும் பணப்பை முதலானவைகளை எடுத்துக்கொண்டோமா என்று மீண்டும் ஒரு முறை அவதானிக்கையில் தான் கவனித்தேன் அலைபேசி மின்சார தாகம் கொண்டிருந்ததை. சார்ஜரை அலுவலகத்திலேயே முந்தினம் வைத்துவிட்டு வந்துவிட்டது நினைவுக்கு வந்தது. அலுவலகம் செல்லும் வரை பெரிதாக அழைப்புகள் இருக்காது என்பதால், அப்பா அம்மாவிடம் சொல்லிவிட்டு பேருந்து நிலையத்திற்கு விரையத் தொடங்கினேன் என் சைக்கிளில்.

பேருந்து நிலையம் வீட்டிலிருந்து
2 கிலோ மீட்டர் தூரம். நாங்கள் இப்போது இருப்பது எங்கள் சொந்த வீட்டில். இந்த வீடு கட்டிய புதிதில் அப்பா தான் தினமும் காலையில் பைக்கில் கொண்டு வந்து விடுவார் பேருந்து நிலையம் வரை. தயாராய் என் அலுவலக பேருந்து நின்றிருக்கும். ஏறிக்கொண்டால் அடுத்த 2 மணி நேரத்தில் அலுவலகத்தில் இருப்பேன். என்னைக் கொண்டு வந்து விட்ட பின் வீட்டிற்கு திரும்பி அப்பா, அண்ணனை பிக்கப் செய்ய வேண்டி இருக்கும். இப்படி ஒரு மாதம் போனது. தினமும் 58 வயது கடந்த அப்பாவை இப்படி வரவழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லாத காரணத்தால், ஒரு சைக்கிள் வாங்கினேன். முதன் முதலில் சைக்கிளில் நான் சென்ற நாளை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். துவைத்து அயர்ன் செய்யப்பட்டு இன் செய்யப்பட்ட சட்டை, பாண்ட், கறுப்பு நிறத்தில் இடுப்பை இறுக்கமாய் கட்டிக்கொண்ட பெல்ட், கறுப்பு நிறத்தில் எக்ஸிக்யூட்டிவ் ஷூ,  இடுப்பில் இடது பக்கம், தொங்கிக்கொண்டிருக்கும் ஆக்ஸஸ் கார்டுடன் ஐந்து இலக்க சம்பளம் வாங்கும் ஒரு பன்னாட்டு நிறுவன ஊழியனைப் பார்க்க வியப்பாகவோ அல்லது பெயரிடப்படாத வேறு ஏதோ ஒரு உணர்வாகவோ இருந்திருக்கவேண்டும். தெருவே என்னை ஒரு மாதிரியாக பார்த்தது. ஆனால் எனக்கு எந்த மாதிரியும் தோன்றவில்லை. என் தேவை பூர்த்தியடைந்த திருப்தி எனக்கு. நான் ஒவ்வொரு நாளும் விடை பெறுகையில், அப்பா கையில் டீ கோப்பையுடன் அன்றைய பேப்பரிலோ அல்லது ஆனந்த விகடனிலோ மூழ்கி இருப்பார். அப்பாவை தொந்தரவு செய்யவில்லை, அவருக்கு கஷ்டம் கொடுக்கவில்லை என்ற எண்ணமே மேலோங்கி இருக்கும். யாருக்கும் தொந்தரவாக இல்லாதிருப்பதில் ஒரு திருப்தி. இரண்டே கிலோமீட்டர் தூரத்துக்கு சைக்கிள் தான் ஏற்ற வாகனம். இதை ஒப்புக்கொள்வதிலோ, பின்பற்றுவதிலோ என்ன குறைந்து விடப்போகிறது.

ஆனால் உலகம் அப்படியல்ல. சமூகம் அப்படியல்ல. கேள்விகள் கேட்காமல் சுற்றி உள்ளவர்களைப் பார்த்து அப்படியே வாழ மட்டுமே பழக்கப்பட்டுள்ளது. பத்தாயிரம் சம்பளம் வாங்கினால் மொபெட், இருபதாயிரம் வாங்கினால் பைக், நாற்பதாயிரம் வாங்கினால் கார், இதுதான் வருமானத்தைக்கொண்டு உருவான ஜாதிகளின் அடையாளம் இங்கே. அந்த அடையாளங்கள் இல்லாத யாரையேனும் பார்க்க நேர்ந்தால் ஏதோ வேற்று கிரகவாசியை பார்ப்பது போல் இருக்கும் இவர்கள் பார்வை.

சிந்தனைகளில் மூழ்கியிருந்தபடி சைக்கிள் மிதித்ததில் பேருந்து நிலையம் வந்தே விட்டேன். அருகே இருந்த சைக்கிள் ஸ்டாண்டில் சைக்கிளைப் பூட்டிவிட்டு வெளியில் வந்து, தயாராக நின்றிருந்த கம்பெனி பேருந்தில் ஏறிக்கொண்டேன். வெய்யில் சுள்ளென்று அடித்தது. அதனால் வெய்யில் படாத பேருந்தின் கூரை நிழல் படிந்த இருக்கையில் அமர்ந்து கொண்டேன். சற்றைக்கெல்லாம் பேருந்து சாலையில் ஓடத்துவங்கியிருந்தது.

சிறிது நேரம் கழித்துஇ சுந்தர் ஒவ்வொரு சீட்டாக வந்து ஒரு ஆங்கில பேப்பரை வைத்துவிட்டு போனான். சுந்தர் அந்த பேருந்தின் கிளீனர். வயது பதினெட்டு இருக்கும்.
8வதுடன் படிப்பை நிறுத்தியவன். பேருந்தைக் கிளீன் செய்வது, யாரோ நான்கு பணக்காரர்கள், ஆங்கில பத்திரிக்கை நடத்துவது எப்படியென்று பார்க்க இலவசமாக வினியோகிக்கும் சற்றே உயர்ரக பேப்பரில் அச்சடிக்கப்பட்ட செய்தித்தாள்களை பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் தருவது, பயணம் செய்பவரிடம் வருகைப்பதிவேட்டில் கையெழுத்து வாங்குவது இதல்லாம் இவன் வேலை. இவனுக்கு ஒரு அம்மா இருக்கிறாள். பாவம், உடல் நலம் குன்றியவள். ஏதோ மருத்துவ பிரச்சனை. அவளைக் காப்பாற்ற, தான் வேலை செய்வதாக முன்பொரு நாள் சொல்லியிருந்தான்.

பேப்பர் படித்துக்கொண்டே யதேச்சையாக அவனை கவனித்ததில் அவன் முகம் சோர்வில் நனைந்திருந்தது தெரிந்தது. பார்த்துக்கொண்டிருந்த பேப்பரை மடித்து வைத்துவிட்டு அவன் பக்கம் திரும்பினேன்.

'சுந்தர்' கூப்பிட்டேன்.

'ண்ணா' திரும்பினான்.

'இங்க வாயேன்'.

இரண்டு வரிசை தள்ளி உட்கார்ந்திருந்த என் இருக்கைக்கு வந்து நின்றான்.

'என்ன டல்லா இருக்க'.

'ஒண்யுல்லனா'

'சும்மா சொல்லுடா. ஏதாவது பிரச்சனையா?'

சற்றே தயங்கியவன், நான் ஏற்கனவே அவனிடம் பேசி ஓரளவு அறிமுகமானவனாதலால் தொடர்ந்தான்.

'அம்மாக்கு தினத்துக்கு மாத்திரை வேணும்ணா, ஆனா தினத்துக்கு துட்டு கிடைக்கிற்தில்லணா. இந்த வேலைல கிடைக்கிற துட்டு வூட்டு செலவுக்கே போவுதுணா. வேற வேலை பாக்கலான்னா இப்போ வாங்கற்த விட கம்மியாதான்னா கடிக்கும். அதான் இன்னா பண்றதுன்னே புரியலனா' என்றான் சோகத்துடன்.

'அம்மா வேலை பாக்குறாங்களா?'

'முன்ன இட்லி கடை போட்ருந்துச்சுனா. அப்பால முடியல அதுக்கு. வீட்ல தான் கிடக்குது. அதுக்கு எதுனா பண்னுனா'.

'எலேய்இ வராங்க பாரு.சைன் வாங்கு' அடுத்த நிறுத்தத்தில், கத்திய டிரைவரின் குரலுக்கு இருவரும் திரும்பினோம்.

'அப்பறம் வரேண்ணா' என்றபடியே ஓடினான் அவன். பாவம் இவன். படிக்கும் வயதில் வேலை செய்கிறான். அப்படியும் பணத்தேவை தீரவில்லை.
18-20 வயது வரை பிள்ளைகளுக்கு உலகம் முழுதும் புரியாது. பெற்ற குழந்தைகளுக்கு நல்ல படிப்பும், உடல் ஆரோக்கியத்தையுமாவது பெற்றோர்கள் தரவேண்டும். அதன் பின் மேலே வருவதும் தாழ்ந்து போவதும் அவர்கள் பாடு. அப்படித் தர முடியாதவர்கள் குழந்தைகள் பெற்றுக்கொள்வதைவிட, தங்கள் நிலையை உயர்த்திக்கொள்வதில் அக்கறை காட்டுவதே சாலச்சிறந்தது. நிலையை உயர்த்திக்கொண்ட பிறகு பிள்ளைகள் பற்றி யோசிக்கலாம். ஆனால், அப்படி நடப்பதில்லை. எல்லோரையும் பார்த்து தானும் திருமணம் செய்து, மலட்டுப்பட்டத்துக்கு பயந்து பிள்ளை பெற்று, காப்பாற்ற முடியாத நிலை வருகையில், அவர்கள் படிப்பை விடுத்து வேலைக்கு போகவைத்து, இப்படியும்தான் அறியாமை வளர்க்கிறார்கள் இந்த தேசத்தில்.

வாழ்க்கை இம்மாதிரியான எல்லா சிறுவர்களையும் ஒரே மாதிரி நடத்துவதில்லை. சிலர் உறுப்படியாக தொழில் கற்று வாழ்கையின் ஏதோவொரு கட்டத்தில் தேர்ந்து தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கும் அளவிற்கேனும் உயர்கிறார்கள். வேறுசிலர்இ சமுதாய சீர்கேடான விஷயங்களை சந்திக்க நேர்ந்து குற்றவாளி ஆகிறார்கள்.

ஐந்து வருடங்கள் கழித்து இவனை வாழ்க்கை என்னவாக மாற்றப் போகிறது என்கிற சிந்தனை எழும்பியிருந்தது என்னுள். வாய்ப்புக்கள் தான் ஒரு மனிதனை, எந்த திசையில் அவனின் பயணம் இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கிறது. அந்த வாய்ப்பு ஒரு குற்றத்தின் அல்லது நாளைய சமூக சீர்கேட்டின் இன்றைய கதவாக இருப்பின், அதை உணரும் முதிர்ச்சியோ பக்குவமோ இல்லாத நிலையில், சமூகத்தின் இருட்டுப் பாதை எந்த வித எதிர்ப்புமின்றி அப்படியே சுவீகரித்துக்கொள்கிறது. என்ன செய்கிறோம், என்னவாக ஆகிறோம் என்றே தெரியாமல் அதன் ஆழத்தில் புதைந்து போய் விட நேர்கிறது. திரும்பி வருதல் இல்லாத ஒரு ஒற்றையடி ஒருவழிப்பாதை அது.

என்றோ ஒரு நாள், நான்கு பேர் ஒன்றாய் கூடி ஆளுக்குக்கொஞ்சம் பணம் போட்டு உணவு, துணிமணிகள் வாங்கி ஒரு அனாதை இல்லத்திற்கு சென்று, அங்கிருக்கும் குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு வருவதில் என்ன இருக்கிறது. அவர்கள் அனாதைகள் என்கிற எண்ணம் அந்த இடத்தைவிட்டு வந்த பிறகு அவர்களின் மனதில் தங்கிவிடாதா? இப்படியெல்லாம் உதவுவதைவிட, இதுபோல், காலத்தின் போக்கில், வாழ்க்கையின் அடுத்தடுத்த கட்டங்களில் நேரப்போகும் எதையும் எவ்வித உதவிகளும் இன்றி, எதிர் நோக்கும் சுந்தர் மாதிரியானவர்களுக்கு நல்ல வாய்ப்புக்களை வழங்குவது எவ்வளவோ மேல். இந்த ஒரு வாய்ப்பு அவன் ஒட்டு மொத்த வாழ்க்கையின் திசையை தீர்மானிக்க உதவினால் போதுமே. ஒரு நாளின் பொருள் ஈட்ட நல்ல வழிகளும் இருக்கிறது, அதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும் என்கிற எண்ணம் அவனுக்குள் விதையாய் விழுந்தாலும் போதுமே.

பேருந்து அலுவலகம் நெருங்கி நின்றது. ஒரு முடிவுடன் கடைசியாய் எழுந்தேன். அவனைக் கடக்கையில் அவனை தனியே வரும்படி அழைத்தேன். வந்தான். என்
5 நிமிட தகவல் பறிமாற்றம் அவனுக்குள் ஒரு தெளிவைக் கொடுத்திருந்தது அவன் முகத்தில் தெரிந்தது. மாலை சந்திப்பதாய்ச் சொல்லி விலகினேன்.

அதன் பிறகு அலுவலக வேலையில் மூழ்கியதில் தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு இரவுப் பேருந்தையே பிடிக்க முடிந்ததில் அவனைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டவில்லை. அடுத்து வந்த வாரத்தில் விடுப்பில் இருந்த நான்இ அவனை எதிர் நோக்கி அண்ணா நகர் தபால் அலுவலகம் சென்றபோது, நான் சொன்னது போலவே நின்றிருந்தான். அவனை நெருங்குகையில் என்னைப்பார்த்தவுடம் அடையாளம் கண்டு சிரித்தபடி கிட்ட வந்தான்.

'ன்னாஇ தாங்க்ஸ்னா. நீங்க சொன்னாபோலயே பஸ்ல போடுற பேப்பர் மொத்தத்தையும் இங்க அண்ணாச்சி கடில போடறேன்னா. இருவது ரூவா குடுக்குறாரு. நீங்க சொன்னா போல இந்த ரெவனு இஸ்டாம்பு
3 கிலோ மீட்டர் தள்ளிதான்னா கடிக்கிது. அதுல ஒரு ரூவா ரெவனு இஸ்டாம்பு அங்க வாங்கியாந்து இங்க ஒண்ணேகாலுக்கு விக்கறேன்னா. ரெண்டு தபா விக்கிறதுல ஒரு நாளைக்கு 30 ரூவா கிடைக்கிதுனா. இது போதும்னா. ஆத்தாவுக்கு மருந்துக்காச்சும் நிக்கிதுனா'. என்றான் மலர்ச்சியோடு.

'அம்மாவ ஹாஸ்பிடலுக்கு அழைச்சிட்டு போய் காமி. இந்தா' என்றபடி ஒரு
500 ரூபாய்த்தாளை அவன் கையில் திணித்தேன்.
'தாங்க்ஸ்னா' என்றவன் கண்கள் பனித்திருந்தன.




ramprasath.ram@googlemail.com