சிரிப்ப

விஜய் மகேந்திரன் 

 
பூங்காவில் ஆங்காங்கே தெரிந்த ஒரு சிலரைத் தவிர ஆள் ஆரவமற்றுத்தான் இருந்தது. அவர்களும் புகைக்காக ஒதுங்கியவர்கள். சில ஓரினச் சேர்க்கையாளர்களும் அங்கு வருவதுண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். திடீரென்று எனக்குள் இருந்து மனக்கசப்புகள் அழுகையாக உடைத்து வெளிக்கிளம்பின. கேட்பாரற்று பூங்கா கிடந்ததால் சுதந்திரமாக அழ முடிந்தது. ஒரு கட்டத்தில் சோர்ந்து அமர்ந்த பெஞ்சிலேயே படுத்து உறங்கியும் போனேன். எனது சான்றிதழ்கள் அடங்கிய பைல் தலைமாட்டில் இருந்தது என நினைக்கிறேன். மேகமூட்டம் கரிய நிறமாகி வானத்தில் வருவதைப் போன்று என் எண்ண ஓட்டங்கள் அமுங்கின அந்த உறக்கத்தில். மீண்டும் கண் விழித்து எழுந்தபோதுதான் நான் உறங்கியிருக்கிறேன் என்பதை என்னால் நம்ப முடிந்தது. சுயப்பிரக்ஞை அற்ற ஒரு மந்த நிலை என் உடலில் இருந்ததை உணர முடிந்தது. கண்களில் வடிந்த நீரைத் துடைத்தேன். கன்ன ஓரங்களில் கண்ணீரின் உப்பு ஒட்டி உலர்ந்திருந்தது. என் முகத்தை இப்போது கண்ணாடியில் பார்த்தால் எனக்கே பிடிக்காது என்று தோன்றியது. என் பிரக்ஞை மீண்டும் திரும்பிய போது என் எதிரில் புதிய ஆள் ஒருவர் நின்று கொண்டு இருந்தான். அட்டைக்கரி போல கருப்பு என்றாலும் அவன் கண்களில் நுண் உளியைக் கண்டேன். 'எதுவும் கஞ்சா கேஸா' என என் நினைவு ஓட்டம் சென்ற போதே அவன் என்னிடம் 'நான் இங்கே உட்காரலாமா' என்றான். நான் சற்றே அசூசையுடன்இ 'உட்கார்' என்றேன்இ அதற்கு மேல் என்னால் அவனிடம் பேச ஒன்றுமில்லை என்றே தோன்றியது. என் அருகில் கொஞ்சம் இடைவெளி விட்டு உட்கார்ந்தான்.

'மதியத்திலிருந்து அழுது கொண்டிருக்கிறாயா' என்று ஆரம்பித்தான்.

'இல்லையே' என்று சமாளித்தேன் நான்.

'நான் உன்னை மதியத்திலிருந்து கவனித்துக் கொண்டிருக்கிறேன். ஏன் பொய் சொல்கிறாய்'.
'ஆமாம் எனக்கு என் கவலை, உன்னால் அதற்கு என்ன செய்ய முடியும்.'

'அப்படி என்ன உனக்கு கஷ்டம்?'

'வேலை கிடைக்கவில்லை. ஐந்து வருடங்களாக வேலை இல்லாமல் நான் மட்டும் சுற்றிக் கொண்டிருக்கிறேன்'.

'இதுதான் உன் கவலையா, வேறு உனக்கு கஷ்டமில்லையா', என வானத்தைப் பார்த்து சிரித்துக் கொண்டே கேட்டான். அந்தச் சிரிப்பு எனக்கு மிகவும் புதியதாகத் தென்பட்டது.

'ஆமாம் வேலை கிடைத்தால் என் பிரச்சனை தீர்ந்துவிடும்' அவன் மெல்லியதாக மீண்டும் என்னைப் பார்த்து சிரித்தான்.

'சரி இன்று வீட்டுக்குப்போ, பொழுது சாயும் நேரம் அம்மா வீட்டில் உன்னைத் தேடுவார்கள், நாளை நாம் இதே இடத்தில் சந்திக்கலாம்' என்றான். 'எதற்கு...' என்று இழுத்தேன் நான்.

'நாளை சொல்கிறேன். நாளை மறுபடியும் சந்திப்போம், இன்று புறப்படு' என்றான்.

'சரி பார்க்கலாம்' என்று கிளம்பினேன். சாலையில் நடக்கும்போது என் உடலினுள் மின்சாரப்பாய்ச்சல் போல ஒரு அதிர்வை உணர முடிந்தது என்னால். யார் இவன்? கஞ்சா கேஸா? வேறு எது மாதிரியும், ம்ம்கூம், அவன் நன்றாக சுய உணர்வுடன் அல்லவா பேசினார். எனக்குத்தான் ஏதாவது பித்துபிடித்துவிட்டதா? என் மனம் நிலைகொள்ளா குரங்காக மாறியது.

என் வீடு உள்ள தெருவை அடையும் வரை அவனைப் பற்றிய சிந்தனைத் தெளிவின்மையே என்னிடம் மேலோங்கி இருந்தது. சிந்தனை தடுமாறியவனாக, என் வீட்டுக்கு அடுத்த வீட்டில் உள்ள கேட்டைத் திறந்தேன். அவர்களின் டாபர் மேன் என்னிடம் உறுமியது. அந்த வீட்டு இளம் பெண் நாயின் சத்தத்தைக் கேட்டு வெளியே வந்தவள், என் முகத்தைப் பார்த்ததும் ஒருவித சுழிப்புடன் வீட்டினுள் சென்றாள். எதிர் வீட்டு மகேஷைக் கண்டால் அவளது ரியாக்ஷன் வேறுமாதிரி இருந்திருக்கும். சலிப்புடன் சென்று என் வீட்டுக் கம்பி கேட்டைத் திறந்தேன். நேரத்தோடு வீட்டுக்கு வரும்போதே என்னை அர்ச்சிக்கும் என் அன்புத் தாயார் இன்று என்ன பொன்மொழிகளை (வசைகள்) உதிர்க்கப் போகிறாரோ என்ற பயத்துடன் நுழைந்தேன்.

என்னைக் கண்ட அம்மா, 'என்னடா இவ்வளவு சோர்வா தெரியுற, சாப்புடுறயா' என்றாள்.

காலையில் போன நேர்முகத் தேர்வைப் பற்றி அவள் எதுவும் கேட்காதது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. வியப்பு குறையாமல், போய் சாப்பிட்டு, படுக்கைக்குப் போனேன். என்னைப் பார்த்து முகம் சுழித்த பக்கத்து வீட்டுப் பெண்ணின் முகம் தெரிந்தது. எனக்கு வந்த கோபத்தில் நான் மட்டும் இப்போது மகாராஜாவாக இருந்திருந்தால், அவளைத் தூக்கிக் கொண்டுபோய், அந்தப்புரத்தில் போட்டு ஆசைக் கிழத்தியாக வைத்திருக்கலாம் என்று தோன்றியது. சில நாட்களாகவே இது போன்று விபரீதமாக என் மனம் யோசிக்கிறது. புறக்கணிப்புகள் என்னைத் துரத்திக் கொண்டே இருக்கின்றன.

சிறிது நேரத்தில் தூக்கம் என்னைத் தழுவியது. நான் ஆழ் உறக்கத்துக்குச் சென்றபோது, பூங்காவில் பார்த்த ஆளின் முகம் கனவில் வந்தது.

'என்ன உனக்கு இப்போது நிம்மதியா' என்றான். சிரித்த முகத்துடன் என்னைப் பார்த்து நின்றிருந்தான். அதன்பிறகு ஏதேதோ என்னை ஏமாற்றிய முகங்கள், அலைக்கழித்த பெண்கள், தெருவில் சுற்ற விட்ட சமூகம், என்ன செய்வது? நான் அடுத்த பிறவியில் ஹிட்லராக பிறக்க வேண்டும் என்று கடவுளிடம் கனவில் மன்றாடினேன். எதற்கும் செவி சாய்க்காதவர் இதற்கா செவி சாய்க்கப் போகிறார்?

அதிகாலையில் எழுந்தபோது பூங்காவில் பார்த்த அவன் அருகில் நான் இருப்பதைப் போன்ற உணர்வு. அன்றைய முழுவதும் ஒருமுறை சுற்றிவிட்டு கட்டிலுக்கு அடியில் பார்த்தேன். ஒரு சுண்டெலி துள்ளிக்குதித்து ஓடிக் கொண்டிருந்தது. ஏதோ புதியதாக பிறந்த மாதிரி ஒரு உத்வேகம் என் மனதில். இன்று அவனைச் சந்திப்பது என முடிவு செய்தேன்.

குளித்து முடித்துவிட்டு, சட்டை, பேண்டைப் போட்டேன். வெளியே கிளம்ப யத்தனித்தபோது, அம்மா சமயலறையில் இட்லி அவித்துக் கொண்டிருந்தாள்.

'டேய் சாப்பிட்டு வெளியே போ' என்றாள். அவள் கண்களை உற்று நோக்கினேன். அதில் ஒருவித பாச உணர்வு குடியேறியிருந்தது. கடந்த ஐந்து வருடங்களாக வேலை கிடைக்காதது என் கையாலாத்தனம் எனக் கூறி சண்டையை காலைச் சாப்பாட்டில் ஆரம்பித்துவிடுவாள்.

அதை நிறுத்த வேண்டும் என்றால் நான் சாப்பிடாமல் வெளியே செல்வதுதான் ஒரே வழி. அவளும் அதைத்தான் எதிர்ப்பார்க்கிறாள் போலும். முக்கால்வாசி இந்த வருடங்களில் எனது அதிகபட்ச சாதனை சாப்பிடாமல் வீட்டை விட்டு வெளியேறுவதே. வீராப்பாக வெளியேறும் போது ஒன்றும் தெரியாது. பத்து மணி சுமாருக்கு அடிக்கும் வெயிலில் தலைச் சுற்றல் ஏற்பட்டு அரை மயக்க நிலை வந்துவிடும். அந்த மயக்க நிலையுடன் தான் வேலை தேடி என் பயணம் அமையும். எங்கோ தெரு முக்கில் உள்ள பெட்டிக்கடையில் டீ, பிஸ்கட் என உயிர் வாழ்வதற்கு உணவு அருந்தி என் தேடுதல் வேட்டை தொடரும். மாலை வீட்டுக்குத் திரும்பும்போது காதுகளுடன் சேர்த்து தலை வலிக்கும். உமிழ்நீரில் கசப்பு ஏறி அடிக்கடி எச்சிலை வெளியே துப்ப வேண்டியிருக்கும். வீட்டில் நுழைந்தவுடன் அம்மா கேட்கும் முதல் கேள்வி, 'இன்னிக்கு ஏதும் வேலை கிடைச்சுச்சா'.

நான் இல்லை என்பது போல தலையாட்ட வேண்டியிருக்கும். அடுத்த நிமிடம் அவள் என்னை முறைத்தபடி சமையல் அறையினுள் சென்றுவிடுவாள்.

சமையல் அறையினுள் இருந்து அவளது வசை மொழிகள் வீட்டை நிறைக்கும். வசை மொழிகளுக்குத்தான் எத்தனை வண்ணங்கள். கருப்பு, சிவப்பு, பச்சை என வண்ண மயமான வசைமொழிகள். சுவர்கள் முழுக்க வசைமொழிகள் உள்ளது போல எனக்கு அந்நேரத்தில் தெரியும். அதன்பின் அவளது சொற்களை என் காதுகள் தன்னிச்சையாகத் தடை செய்துவிடும். அமைதியாக என் அறையினுள் சென்று விடுவேன். அறையின் ஓரத்தில் உள்ள ஸ்டான்டில் உள்ள புகைப்படத்தில் உள்ள என் அப்பா, வழக்கமாக என்னைப் பார்த்து புன்னகைப்பார். அதற்கு குங்குமப் பொட்டு வைப்பதற்குத்தான் என் அம்மா என் அறையினுள் நுழைவது. அதுவும் நான் இல்லாத நேரத்தில் நுழைவாள். அவர் இருந்த காலத்தில் என் பால்யத்தில் சிரிப்பும் கும்மாளமும் நிரம்பியிருந்தது இதே வீடு. இதே சுவர்கள் அதற்கும் சாட்சியாக காத்திருக்கின்றன. அப்பா புகைப்படத்தின் முன் என் நிலைமையைச் சொல்லி புலம்புவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. அம்மாவைச் சொல்லியும் குற்றமில்லை. அவளது கடைசி நகையும் போன வாரத்தில் அடகுக்கடைக்குப் போய்விட்டது. நான் தற்கொலை செய்துகொண்டு சூழலில் இருந்து தப்பிவிடலாம். எனக்காகவே இன்னும் தன்னுள் உயிரை வைத்துக் கொண்டிருக்கும் அம்மாவின் கதி எனக்கு புரியாமலா இருக்கிறது? பிளாட்பாரங்களில் பிச்சை எடுத்து வாழ்வோர் கூட சில தருணங்களில் மகிழ்ச்சியாக இருப்பதை எத்தனையோ முறை கவனித்திருக்கிறேன். அவர்கள் உலகில் உள்ள அகமகிழ்ச்சிகூட எனக்கு இந்த வயதில் மறுக்கப்பட்டு விட்டதே என குழப்பமடைவேன். சாவதும் எளிதானது இல்லை என்றுதான் தோன்றியது. வாழ்க்கையின் முக்கிய எதிர்காலப்புள்ளிகள் என் கண்முன்னாலே சிதறடிக்கப்பட்டு வருவதாகத் தெரிந்தது.

அவனைச் சந்திக்க ஒருவித மனக்கிளர்ச்சியோடு பூங்காவை நோக்கி நடந்தேன்.

'யார் அவன்?' என்று யோசனை நீண்டது. பூங்காவிற்கு வந்ததும் அவனைத் தேடத் துவங்கினேன். அவன் வரவில்லை. இதற்குமுன் என் வாழ்வில் எங்கும் அவனைச் சந்தித்ததற்கான அடையாளங்களே இல்லையே என நினைத்தேன். வெகுநாள் பழக்கப்பட்டவன் போலல்லவா பேசினான். நான் அவனை வெறுப்புடன் நோக்கியபோதும். என் பின்னால் யாரோ நிற்பதை உணர்ந்து திரும்பினேன். அதே புன்னகையுடன் அவன் நின்றிருந்தான்.

'என்னைத் தேடினாயா'

'ஆம்'

'தாமதமாகிவிட்டது. மன்னித்துக்கொள். நேற்று உன்னை அம்மா திட்டியிருக்கமாட்டார்களே' என்றான்.

'ஆம். எப்படி அவ்வளவு துல்லியமாகச் சொல்கிறாய்? நீ யார் முதலில் சொல்லு'.

'நானும் உன்னை மாதிரி ஒர் ஆள். அவ்வளவே'.

'நீ சொல்வது பொய். உனக்கு வேறு ஏதோ அனுமானுட சக்தி இருக்கிறது'.

'சக்தியெல்லாம் ஒன்றும் இல்லை'.

'வேலைக்கு என்ன செய்யப்போகிறாய்? உனக்கு என்ன வேலை வேண்டும்?'.

'ஏதாவது' என்றேன்.

'அதுதான் உன் பிரச்சனை. உனக்கு என்ன வேலை செய்ய வேண்டும் என்றே தெரியவில்லை'.

'கேலி செய்யாதே.' நான் எரிச்சலுடன் கூறினேன்.

'உண்மை அதுதான். என்ன செய்ய வேண்டும் என்றே உன்னைப் போன்றோருக்கு தெரிவதில்லை' என்றான்.

'உன்னை நான் இதற்குமுன் இங்கு பார்த்தது இல்லையே'.

'எல்லோரையும் எல்லோரும் எந்நேரமும் பார்க்க முடியாது. அது தானாக அமையும். அது உனக்கு நேற்றுதான் அமைந்தது'.

'உன் பெயர்'

'குமரேஷ்'

'எங்கிருக்கிறாய்? '

'திருவல்லிக்கேணியில்'

'அங்கே'

'ஒரு அச்சகத்துக்குப் பக்கம் உள்ள வீட்டில் இருக்கிறேன்'.

'அப்படியா' என்று அசுவராஸ்யத்தோடு கூறினேன்.

'உனக்கு விரைவில் நல்ல வேலை கிடைக்கும். கொஞ்சம் இரு. நான் தண்ணீர் குடித்துவிட்டு வந்துவிடுகிறேன்' எனப் புறப்பட்டான்.

வெகு நேரமாகியும் அவன் திரும்பவில்லை.

அடுத்த நாள் வேலை தேடக் கிளம்பினேன். என் வீடு இருந்த மையச் சாலையில் நடந்து கொண்டிருந்தேன். அதற்கு குறுக்கே ஒரு பெரிய சந்து தெரிந்தது. என் உள் மனம் அதைப் பார்க்கும்படி சொல்லியது. அந்தச் சந்தினுள் நுழைந்தேன். ஆட்டொ மொபைல்ஸ் கடைகள், நட்டு, உதிரிபாகங்கள் விற்கும் கடைகள் சந்தினுள் நிரம்பியிருந்தன. அதைக் கடந்த போது இன்னொரு மையச்சாலை வந்தது. அதில் சிறிது தூரம் நடந்த போது ஒரு பெரிய விற்பனை அங்காடி இருந்தது. அதனுள் சென்று வேலை கேட்கலாம் என்று தீர்மானித்தேன். அங்கிருந்த செக்யூரிட்டியிடம் வேலை ஏதும் காலி இருக்கிறதா என்று விசாரித்தேன். அங்காடியின் மேனேஜரைப் பார்க்கச் சொன்னார். உள்ளே சென்று விசாரித்தேன். அங்காடி முழுவதும் குளிர் சாதன வசதி செய்யப்பட்டிருந்தது என் வியர்த்த உடலுக்கு இதமாக இருந்தது. மானேஜர் குடோனில் கணக்குப் பார்த்துக் கொண்டிருப்பதாகக் கூறி, பேஸ்மெண்டில் உள்ள அறைக்குப் போகச் சொன்னார்கள். அங்கு காத்திருந்த சிறிது நேரத்தில் கருப்புச் சட்டையும், நீல பேண்டும் அணிந்த சற்றுப் பருமனான ஒருவர் அறையை நோக்கி வந்துகொண்டிருந்தார். அவர்தான் மானேஜர் என்று என்னால் தீர்மானிக்க முடிந்தது. அவரைக் கண்டவுடன் எழுந்து நிற்க முற்பட்டேன். அவர் அமரச் சொல்லி கைகாட்டி விட்டு என் எதிரே உள்ள இருக்கையில் அமர்ந்தார். எனது பைல்களை வாங்கி பேருக்குப் பார்த்தார். 'அடுத்த வாரத்தில் இருந்து இங்கே சூப்பர்வைசர் வேலை காலியாகிறது. நாங்கள் இனிமேல்தான் விளம்பரம் கொடுக்கலாம் என்று இருந்தோம். ஆனால் நீங்களே இங்கு தேடிவந்திருக்கிறீர்கள். எப்படித் தெரியும்?' என்றார். பிறகு முகவரி கொடுத்துப் போங்கள். வீட்டுக்குக் கடிதம் வரும் என்றார். நான் சொன்ன முகவரியைக் குறித்துக் கொண்டார். நான் அவரிடம் விடைபெற்று வேறு வேறு கம்பெனிகளுக்கு வேலை தேடிச் சென்றேன். வழக்கம் போல சலித்து மாலையில் வீடு திரும்பினேன்.

இரு நாட்கள் கழிந்து அங்காடியில் இருந்து வேலைக்குச் சேரச் சொல்லி அழைப்புக் கடிதம் வீடுதேடி வந்தது. ஐந்தாயிரம் சம்பளம் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அம்மாவுக்கு சுத்தமாக நம்ப முடியவில்லை. அளவு கடந்த மகிழ்ச்சியில் என் பழைய அம்மாவை அன்றுதான் மீண்டும் கண்டேன். குலோப் ஜாமூன் செய்து கொடுத்தாள். 'என் வாக்கு பலித்ததல்லவா' என்று அவன் என்னைப் பார்த்துக் கேட்பது போல இருந்தது. அவனைத் தேடி உடனே பூங்காவுக்கு ஓடினேன். அவன் அங்கு இல்லை. திருவல்லிக்கேணிக்குச் சென்றேன். அங்குள்ள அச்சகங்களுக்கு பக்கம் உள்ள வீடுகளாக அவனைப் பற்றி விசாரித்தேன். அவன் உருவம், பெயர், அடையாளம் சொல்லி விசாரித்தபோது ஒருவருக்கும் தெரிந்திருக்கவில்லை. களைத்துப்போய் ஒரு டீக்கடையில் டீ ஒன்றைக் குடித்தேன். என்னுள் என்ன காரணத்தினாலோ அழுகை அடக்க முடியாமல் வெளிவந்தது. எதற்கு என புரியாமல் சாலையில் நின்று விசும்பிக் கொண்டிருந்தேன். நடந்த எதையும் அம்மாவிடம் சொல்லக்கூடாது எனத் தீர்மானித்தேன். அவள் பயந்துவிடக்கூடும். நான் பூங்காவுக்குப் போவதை நிறுத்திவிட்டேன். அவன் சிரிப்பு மட்டும் நெடுநாட்கள் கனவில் வந்தபடியே இருக்கிறது.



vijaymahindran@gmail.com