திரியும் உண்மைகள்

ராம்ப்ரசாத்


'மஞ்சு, பூர்ணிமாவ நான் லவ் பண்றேன்'.

'நினைச்சேன், பணம் வாங்காம ரிப்பேர் பண்றப்போவே நினைச்சேன்'.

மெலிதாக வெட்கப் புன்னகை பூத்த கதிர் தொடர்ந்தான். 'ஆனா எனக்கு கொஞ்சம் சந்தேகமா இருக்கு'.

'அடப்பாவி. லவ் பண்ண ஆரம்பிச்சதுமே சந்தேகமா உனக்கு'.

'இல்ல. அவ ஸ்கூட்டி ரிப்பேர் ஆறதும், என்கிட்டயே எடுத்துட்டு வரதும், ரிப்பேர் பண்ற வரைக்கும் என் கிட்டயே பேசுறதும், வீட்ல சமைச்சத என்கிட்ட குடுக்குறதும், நாளு, கிழமைன்னா வீட்டுக்குக் கூப்பிடுறதும் எல்லாமே, நான் ஆசப்பட்ற மாதிரியே நடக்குது'.

'சரி, அதுல என்ன சந்தேகம் உனக்கு?'.

'எல்லாமே நமக்கு சாதகமா அமைஞ்சிட்டா அப்புறம் கடவுள்னு ஒண்ணு எதுக்கு?'.

'கேள்வி நல்லாதான் இருக்கு'.

'அப்போ பதில் என்ன?'.

'அத அந்த பொண்ணுகிட்டயே கேளேன்'.

'கேக்கலாம். ஆனா இப்போ கேட்டா சரியா இருக்குமா தெரியல. நீ அவளுக்கு பக்கத்து வீடு தானே. அங்க என்ன நடக்குதுனு உனக்கு தெரிஞ்சிருக்குமே'.

'அந்த பொண்ணு நேரத்துக்கு எழுந்திரிக்கிது. குளிக்கிது. ட்ரஸ் பண்ணுது. காலேஜ் போகுது. வருது. சனி ஞாயிறுல நாவல் படிக்கிது அக்கம்பக்கம் உறவுக்காரங்க வீட்டுக்கு போகுது. வருது. அப்புறம் தூங்குது. ஆனா இதெல்லாம் வச்சி அந்த பொண்ணுக்கு வேற லவ் இல்லனு சொல்ல முடியுமா தெரியல'.

'நீ அவளுக்கு ப்ரண்ட் தானே?'.

'ஆமா, நாலஞ்சு வருஷமா நாங்க ப்ரண்ட்ஸ் தான். ஏன் கேக்குற'.

'இல்ல, இப்படி பதில் சொல்ற. அவ வேற யாரையாச்சும் லவ் பண்றாளா என்ன?'.

'அப்படி அவ என்கிட்ட இதுவரை சொன்னதே இல்ல'.

'அப்போ அவ யாரையும் லவ் பண்ணலனு தானே அர்த்தம்'.

'இருக்கலாம்'.

'என்ன மஞ்சு, இப்படி பேசுற?'.

'எப்படி பேசுறேன்?'.

'இல்ல, உன் ப்ரண்ட் பத்தி நீயே தப்பா பேசுற மாதிரி இருக்கு'.

'எது தப்பு?'.

'இப்ப நீ சொன்னதுதான். அவ லவ் பண்றாளானு கேட்டதுக்கு இருக்கலாம்னு சொன்னியே'.

'ஆமாம்னு சொல்லலையே. அது எப்படி தப்பாகும்?'.

'சரி, தப்பு இல்ல. ஆனா சரியும் இல்ல தானே?'.

'அது சரியும் இல்ல. தப்பும் இல்ல. அது ஒரு உண்மை'.

'என்ன உண்மை?'.

'இருக்கலாம்ங்கறது'.

'.........'.

'மனிதர்களின் பார்வையில் காட்சிகள் விரிகையில் உண்மை திரிகிறது. உண்மை என்கிட்ட வந்துச்சா தெரியல. ஆனா என்கிட்ட வந்தது என்னைக் கடந்து உன்கிட்ட வர்றப்போ என்கிட்ட எப்படி வந்துச்சோ அப்படியே உன்கிட்ட வரட்டும்னு தான் அப்படிச் சொன்னேன். மீதிய நீயே புரிஞ்சிக்கோ'.

'ம்..........   ம்.........   ம்.....................'

'ரொம்ப கொழப்பிட்டேனா?'.

'இல்ல. ஆனா இந்த பதில மேலோட்டமா எடுத்துக்கிட்டா ஆபத்தா முடிய வாய்ப்பிருக்கு'.

'நீ மேலோட்டமா எடுத்துக்குற ஆளு இல்லனு எனக்குத் தெரியும். அதான் இப்படிச் சொன்னேன். இல்லனா வேற மாதிரி பதில் சொல்லியிருப்பேன்'.

லேசாக சிரித்தவாறே அவள் சொன்னதை அவனின் வெறுமை மெளனமாக உள்வாங்கிக் கொண்டிருந்தது.

'சரி கதிர், நான் வரேன். நீ யோசிச்சு முடிவு பண்ணு' என்றபடியே திரும்பி அவளின் வீடு நோக்கி நடக்கத்தொடங்கியிருந்தாள் மஞ்சு.

மஞ்சு அப்படித்தான். அவளுக்கு எதிலும் ஒரு ஆழ்ந்த புரிதல் இருந்தது. அறிவில் முதிர்ச்சி இருந்தது. அவளிடம் இம்மாதிரியான பதில்களை சர்வ நிச்சயமாய் எதிர்பார்க்கலாம். அவள் வரைக்கும் பிரச்சனையின்றி பொத்தாம் பொதுவாய் யாருக்கும் பாதகமின்றி தன்னையே பொருப்பாளி ஆக்கிவிட்டு தந்திரமாய் கழன்றுகொண்டுவிட்டாள். இவளை என்னவென்று சொல்வது. தேர்ந்த சிந்தனைக்காரி என்றா? குழப்பவாதி என்றா? அல்லது கழுவுகிற மீனில் நழுவும் மீன் என்றா? கதிரின் அன்றைய இரவு மிகவும் நீண்டதாகக் கழிந்தது.

மஞ்சு பூர்ணிமா வீட்டிற்கு பக்கத்து வீடு. பூர்ணிமா வயதுக்காரி தான். இன்னும் திருமணமாகவில்லை. கதிருக்கு தோஸ்து. பூர்ணிமாவை காதலிக்கிறான் கதிர். ஆனால் அவள் பொறியியல் கல்லூரியில் படிப்பவள். கதிரோ பி.ஏ. படித்துவிட்டு சைக்கிள் கடையில் செட்டிலானவன். தியாகு என்றொரு பையன் கதிருடன் வேலை செய்கிறான்.

கடந்த நான்கு வருடங்களாக பூர்ணிமாவின் மேல் காதல் கதிருக்கு. பூர்ணிமாவின் ஸ்கூட்டி எப்போது ரிப்பேர் ஆனாலும் அவள் இவன் கடைக்குத் தான் வருவாள். அவளுக்காகவே ஸ்கூட்டி ரிப்பேர் மட்டும் அதிகப்படியாக தெரிந்து கொண்டான். அவளுக்கு மட்டும் ப்ரீ சர்வீஸ். அவளே முன்வந்து பணம் கொடுத்தாலும் வாங்க மாட்டான். ஸ்கூட்டி ரிப்பேர் ஆகும்வரை அவள் இவனிடம் தான் பேசிக்கொண்டிருப்பாள். அப்போதெல்லாம் அவள் வேண்டுமென்றெ ஸ்கூட்டியை ரிப்பேராக்கி இவனிடம் பேசுவதாக நினைத்துக்கொள்வான். என்றாவது இப்படி பேசும்போது தன் காதலைச் சொல்லிவிட வேண்டும் என்று நினைத்துக்கொள்வான். ஆனால் அந்த என்றாவது இன்று வரை நடந்திருக்கவில்லை.

இது நடந்து ஒரு மாதம் கடந்து விட்ட நிலையில் ஒரு நாள்.

''ண்ணா, ண்ணா' மூச்சிறைக்க ஓடிவந்த தியாகு கதிரின் சைக்கிள் கடை வாசலில் கொளுத்தும் வெயிலை வடிகட்டிக்கொண்டிருந்த சாக்குத் துணியை தாங்கியபடி, நிலத்தில் ஊன்றி நிறுத்தப்பட்டிருந்த மரக்கட்டையில் ஒரு கைவைத்து முட்டுக்கொடுத்து சாய்ந்தபடி மூச்சுவாங்க நின்றான்.

கழுவிக்கொண்டிருந்த பஞ்சர் ஒட்டிய சைக்கிள் ட்யூபை ஒரு கையால் பிடித்தபடி தியாகுவைப் பார்த்த கதிர் எந்த வித உணர்வையும் வெளிக்காட்டாதவனாய் 'என்னடா?' என்றபடியே ட்யூபைக் கழுவுவதைத் தொடர்ந்து கொண்டிருந்தான்.

''ண்ணா, பூர்ணி அக்காக்கு கண்ணாலமாண்ணா. கட்டிகினு எங்கியோ போதாம் அது' தியாகு அவசரமாய் சொல்லி நிறுத்த, கதிர் இப்போது ட்யூப் கழுவுவதை முழுவதும் நிறுத்திவிட்டிருந்தான்.

'என்னடா சொல்ற?' கையிலிருந்த ட்யூபை கீழே போட்டுவிட்டு பதட்டத்துடன் எழுந்தவனின் வார்த்தைகளில் அதிர்ச்சி கலந்திருந்தது. புருவங்கள் சுருங்கியிருந்தன.

'ஆமாண்ணா. அது காலேஜ்ல படிச்ச பையனாம்ணா. லவ்வாம். இன்னாஇன்னாவோ பேசிக்கிறாங்கணா. மேட்டர கேட்டதும் இங்கதாண்ணா வரேன்'.

'யாரு சொன்னா?'

'மஞ்சக்கா தாண்ணா சொல்லிச்சி. உன்னான்ட சொல்ல சொல்லி சொல்லிச்சிணா'.

கதிர் பதில் பேசவில்லை. அதற்கு பிறகும் தியாகு ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தான். ஆனால் கதிர் எதையும் கவனிக்கவில்லை. அவன் கவனம் அவன் எதை நடந்துவிடக்கூடாது என்று எண்ணியிருந்தானோ அது நடந்தேவிட்டதில் இருந்தது. உள்ளுக்குள் எதோ ஒரு உணர்வு அவனின் எதிர்பார்ப்புகள் பொய்க்கபோகிறது என்று சொல்லிக்கொண்டே இருந்தது. பூர்ணிமா, இத்தனை நாட்களில் வேறொரு ஆடவனிடம் காதல் வயப்பட்டவள் என்று தோன்றியிருக்கவில்லை. மஞ்சு சரியாகத்தான் சொல்லியிருக்கிறாள். மனிதர்கள் பார்வையில் காட்சிகள் விரிகையில் உண்மை திரிகிறது. அன்றொரு நாள் மஞ்சுவுடன் பேசுகையில் பூர்ணிமாவுடன் நான்கைந்து வருட நட்பு என்று சொல்லியிருக்கிறாள். நான்கைந்து வருடம் பழகிய தோழியிடம் கூட பூர்ணிமா உண்மையை சொல்லியிருக்கவில்லை. அவளின் 'இருக்கலாம்' என்கிற பதில் எத்தனை அர்த்தமுள்ளது என்று இப்போது தோன்றுகிறது. எத்தனை உண்மை அதில் மறைந்திருக்கிறது.

இதைத்தான் நீயே புரிந்துகொள் என்று சொன்னாளா?

உண்மையில், மஞ்சுவுடனான உரையாடலுக்குப்பின் ஒரு வகையில் இச்செய்தியை அவன் முன்பே எதிர்பார்த்திருந்தான். அதனால்தானோ என்னமோ ஏமாற்றமோ, துக்கமோ பெரிய அளவில் இல்லாமல் போனது. இல்லையெனில் இந்நேரம் அவன் தூக்கிலோ அல்லது விஷமருந்தியோ தற்கொலைக்கு
முயன்றிருக்கலாம்.

மஞ்சுவுக்கும் பூர்ணிமாவின் காதல் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் அதற்காக 'பூர்ணிமா யாரையும் காதலிக்கவில்லை' என்று அன்றே அவள் சான்றிதழ் அளித்திருந்தால் இந்நேரம் என்னவாகியிருக்கும்? ஏமாற்றம் என் உயிரைக் குடித்திருக்கும். அப்படிச்சொல்லாமல் 'இருக்கலாம்' என்று சொல்லி ஒரு உண்மையை சொல்லாமல் உணர்த்தியிருக்கிறாள். ஒரு எச்சரிக்கை உணர்வைத் தோற்றுவித்திருக்கிறாள். இன்றைய ஏமாற்றத்தை அன்றே கொன்றிருக்கிறாள். வார்த்தைகளில் எத்தனை சாதுர்யம்.

தன் நான்கு வருடக் காதல் வெறும் கனவாய்க் கரைந்ததில் பெருத்த ஏமாற்றம் கதிருக்கு. உண்மையாய் காதலிப்பவனுக்குத்தான் பெண் சொந்தம் என்று அறிவுரைகள் சொல்கிறார்கள். படமெடுக்கிறார்கள். ஆனால் நிஜ வாழ்க்கையில் அப்படி நடப்பதில்லை. இந்த நான்கு வருடங்களில் மனதுக்குள்ளேயே அவளை பூஜித்தது தான் மிச்சம். என்னைவிட வேறு எவனால் அவளை அதிகமாக விரும்பியிருக்க முடியும். அந்த காதலில் என்ன குறை வைத்தேன்.

அவளைத்தவிர வேறு யாரும் முக்கியமல்ல என்றல்லவா இருந்தேன். அவளுக்காகவேதானே என் ஒவ்வொரு பொழுதையும் கடத்தினேன்.

அவளுக்காகக் காத்திருந்தேன். அவளையே பார்த்திருந்தேன். அவளைத் திருமணம் செய்யவே சம்பாதித்தேன். சேர்த்துவைத்தேன். நாளை எவனையோ திருமணம் செய்யப்போகிறாள். அட்சதை போட்டுவிட்டு வரவேண்டியது தான். சே, என்ன வாழ்க்கை இது.

வெருப்பு அவனை முழுமையாகப் படர்ந்தது. அடுத்த இரண்டு நாட்கள் சைக்கிள் கடைக்கு விடுமுறை போர்டு போட்டுவிட்டு தனிமையை நாடினான்.

மனதிற்குள்ளாகவே புழுங்கித் தீர்த்தான். மனம் விட்டு அழுதான். வாழ்க்கை வெறுத்தது. அர்த்தமில்லாமல் போனதாகத் தோன்றியது. கதிர் தற்கொலை செய்யுமளவிற்கு போக விரும்பவில்லை. ஆணாய் பிறந்திருக்கிறேன். எனக்கு விருப்பமான வாழ்க்கை எனக்குக் கிடைக்கவில்லை. பூமியில் பிறந்த எத்தனை ஜீவன்களுக்கு அது கிடைத்திருக்கிறது? பரவாயில்லை. என் காதல் கனவாய்க் கரைந்து போனதற்கு இறைவனிடம் நிச்சயம் ஒரு காரணம் இருக்கும். அவளுடன் வாழப் பயன்படாத தன் வாழ்க்கை நல்லதொரு வாழ்க்கை வாழ வழியின்றி இருளில் கிடக்கும் யாருக்கேனும் பிரயோஜனப்படட்டும். யாருக்கும் பிரயோஜனமில்லாமல் போவதைவிட யாருக்கேனும் உபயோகமாய் இருக்கட்டும். பூமியில் தோன்றும் காதல்கள் அத்தனையும் வென்றுவிடுகிறதா என்ன? எத்தனை பேர் அதிர்ஷ்டம் செய்திருக்கிறார்கள்? அதைவிடஇ எத்தனை பேருக்கு இன்று எனக்கிருக்கும் வாழ்க்கை கூட கிடைக்காமல் போயிருக்கிறது. எத்தனை பேருக்கு என் வாழ்க்கை பயன்படும்? ஆம். அதுதான் சரி. யாருக்காவது பயன்படட்டும். எதற்காவது பயன்படட்டும்.

கதிர் நாளிதழ்கள் புரட்டினான். தனக்கென்று எதுவும் வேண்டாமென ஒதுக்கினான்.

அவளைக் கொண்டு நிரப்ப நினைத்திருந்த வாழ்க்கை, அவளையொத்த தூய்மையை, உண்மையை, நியாயத்தை, தர்மத்தை ஏற்கட்டும். திருமணத்திற்கென நிற்கும் யாரோ ஒரு ஊனமுற்ற பெண் அல்லது கைம்பெண் யாருக்கேனும் தன் வாழ்க்கை அர்த்தத்தைத் தரட்டும் என்று புரட்டினான். இருபத்தியெட்டு வயதில் ஒரு கால் செயலிழந்த பெண் ஒருத்தியின் விளம்பரத்தைப் பார்த்துவிட்டு அதில் குறிப்பிட்டிருந்த எண்ணைத் தொடர்புகொண்டான். பெண்ணின் அப்பாதான் போனை எடுத்தார். வார இறுதி நாளில் நேரில் வீட்டிற்கு பெண் பார்க்க வருவதாக தெரிவித்துவிட்டு, வீட்டு விலாசம் வாங்கிவிட்டு தொடர்பை துண்டித்தான்.

மனது சற்றே லேசானது போல் இருந்தது. எதனால் என்று தெரியவில்லை. ஆனால், பூர்ணிமாவையே நினைத்துக்கொண்டு வாழ்க்கையை சீரழித்துக்கொள்வதைவிட ஊனமுற்ற பெண் ஒருத்தியின் வாழ்க்கை பிரகாசமாய் ஒளிர்ந்திட உபயோகப்படும் என்பதில் தன் வாழ்க்கை அர்த்தப்படுவதாய் உணர்ந்தான்.  வார இறுதி நாள் வந்தது. வீடு சற்றே தொலைவில்தான். அரைமணி நேரப் பேருந்துப் பயணத்திற்குப் பிறகு பெண் விட்டிற்கு அருகாமையிலேயே இறங்க முடிந்தது. தொலைப்பெசியில் பெண்ணின் அப்பா சொன்ன விலாசத்தைத் தேடிச் சென்றான். அது ஒரு பழைய வீடு என்பது முதல் பார்வையிலேயே தெரிந்தது. சுவற்றில் விரிசல் விட்டிருந்தது. பெயிண்ட் அடித்து வருடங்கள் பலவாகியிருந்தன. தரைதளம் மட்டுமே. வீட்டு எண்ணை சரிபார்க்க அருகே சென்றபோதுதான் அது காதில் விழுந்தது. ஐம்பதைக் கடந்த ஒரு ஆணின் குரலும், இருபதில் ஒரு பெண்ணின் குரலும்.

'அப்படியெல்லாம் இருக்காதுமா'.

'இல்லப்பா, உங்களுக்குத் தெரியாது. நான் நொண்டி. அவனுக்கு அப்படியில்ல. கல்யாணத்துக்கு அப்புறம் அவனுக்கு என்னைத் தவிர வேற எல்லா பொண்ணும் அழகா தெரியலாம். இன்னொரு ஊனமில்லாத பொண்ணப் பாத்து ஆசப்படலாம். வேணாம்ப்பா. எனக்கு பாக்குற பையனையும் என்ன மாதிரியே ஊனமா பாருங்கபா'.

கேட்டுக்கொண்டிருந்த கதிர் சிலையாகிவிட்டிருந்தான்.
 ramprasath.ram@googlemail.com