ஓர் இதயத்திலே......

அகில்

ண்பன் வீட்டிற்கு குடிவந்ததில் இருந்து கார்த்திக்கிற்கு மனம் சந்தோசமாக இல்லை. எப்போதுமே முகுந்தனுக்கும், அவரது மனைவிக்கும் ஒரே சண்டை. ஒரு வாரம் சண்டை என்றால், அடுத்த வாரம் சமாதானம். அதைப் பார்க்கப் பார்க்க கார்த்திக்கிற்கு வெறுப்பாக இருந்தது. 'விசயம் தெரியாமல் வந்திட்டன்போல' என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டாலும், அவசரத்திற்கு உதவிய நண்பனிடம் 'நான் வேற இடம் பார்த்துப்போறன்' என்று எப்படிச் சொல்வது என்று சங்கடப்பட்டான்.

கார்த்திக்;கும் முகுந்தனும் ஒரே வயதொத்த நண்பர்கள் இல்லை. கார்த்திக்கை விட முகுந்தன் பத்து வயது மூத்தவன். ஒரே இடத்தில் வேலை செய்ததால் ஏற்பட்ட நட்பு. போன மாதம்தான், கார்த்திக் குடியிருந்த வீட்டுக்காரர்கள் வீட்டை விற்றுவிட்டு தூர இடத்திற்கு குடிபெயர்ந்துபோக, கார்த்திக் முகுந்தனின் வீட்டிற்கு வரவேண்டியதாயிற்று.

'எங்க போகலாம்? யார் ரூமோட சாப்பாடும் தருவார்கள்?' என்ற சிந்தனை முளைக்க தனது கவலையை முகுந்தனிடம் வெளிப்படுத்தினான் கார்த்திக்.

'இதுக்கேன் மச்சான் யோசிக்கிறாய்? எங்கட வீட்டில வந்திரு' என்று சட்டென்று பதிலளித்தான் முகுந்தன். அதன்படி முகுந்தன் வீட்டிற்கு வந்துசேர்ந்தவன் தான் கார்த்திக். முகுந்தனோ, அவன் மனைவியோ நன்றாகத்தான் அவனைக் கவனித்தார்கள். முகுந்தனின் மனைவி அவனை ஒரு சகோதரனைப் போலவே பார்த்துக்கொண்டாள். ஆனால் அனேகமான வார இறுதிநாட்களில் அவர்களுக்கிடையில் நடக்கும் சண்டைதான் கார்த்திக்கிற்கு பெரும் தலையிடியாக இருந்தது. என்னதான் அவர்களிருவரும் சண்டை போட்டாலும் கார்த்திக்கை ஒரு குறையும் இல்லாமல் நன்றாகவே கவனித்துக்கொண்டார்கள்.

சண்டை நடந்த மறுநாளே இருவரும் அன்னியோன்னியத் தம்பதிகளாக சிரித்துக்கொண்டு இருப்பார்கள். இவனுக்கு எரிச்சல் எரிச்சலாக வரும். அவர்களின் பிரச்சினைக்குள் இவன் மூக்கை நுளைப்பதே இல்லை.

'கணவன் மனைவிக்குள் நடக்கும் பிரச்சினைக்குள் நான் ஒரு அன்னியனாக எப்படி?' என்று நினைத்த கார்த்திக் சமயம் வந்தபோது அதை நேரடியாக முகந்தனிடமே கேட்டுவிட்டான்.

'எங்களுக்குள்ள நடக்கிற சண்டையை நீ பெரிசாக எடுக்காத' என்றான் சிரித்தபடியே.

'நான் சொல்லுறன் என்டு நினைக்காத. என்னால இப்பிடி வாழ முடியாது. மனுசியோட பிரச்சனையென்றால் சண்டைபிடிச்சு பிடிச்சு இருக்கமாட்டன். வேறயொரு பெண்ணைப் பார்த்து கலியாணம் கட்டிக்கொண்டு போய்க்கொண்டிருப்பன்' என்றான் கார்த்திக் ஆவேசமாக.

கார்த்திக்கின் இந்த ஆவேசமான பேச்சு, ரமேசுக்கு சிரிப்பை வரவழைக்க சிரித்தே விட்டான்.

'இப்ப உனக்கு தெரியாது. நீயும் ஒரு கலியாணம் கட்டினால்தான் உனக்கு தெரியும்' என்று பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு, சமையலறைக்குள் நுளைந்தான் முகுந்தன்.

.................................................

ஆண்டுகள் சில கழிந்த நிலையில் கார்த்திக்கிற்கு திருமணம் ஆகியிருந்தது. திருமணம் செய்தபின் கார்த்திக் தனது மனைவியுடன் வேறு ஒரு தொடர்மாடியில் வசிக்கத் தொடங்கினான். நாட்கள் நகர, சந்தோசமாகப் பயணித்த அவர்களின் வாழ்க்கைப் படகை சண்டை என்ற புயல்க்காற்று தாக்கத்தொடங்கியது.

'இனி இவளோட வாழமுடியாது' என்று தீர்மானித்த கார்த்திக், ஆலோசனை கேட்பதற்காக முகுந்தனை போனில் தொடர்பு கொண்டான். கார்த்திக்கின் பிரச்சினையை தெளிவாக கேட்டறிந்துகொண்டான் முகுந்தன்.

'கார்த்திக் எதுக்கும் அவசரப்படாத. நிதானமாக முடிவெடுக்கலாம். எனக்கும் மனைவிக்கும் இடையில் நடக்காத சண்டையா? நீ பார்க்காததா?' என்று பல ஆலோசனைகள் வழங்கியும் கார்த்திக் கேட்பதாக இல்லை.

'எடுத்தமா முடிச்சமா என்று முடிவெடுப்பதற்கு வாழ்க்கை ஒன்றும் சாதாரண விடயம் இல்லை. நிதானமாகத்தான் முடிவெடுக்க வேணும்' என்ற முகுந்தன்,

'கார்த்திக் நான் சொல்லுறன் என்று நினைக்காத. உடன தீர்மானம் எடுத்தால் அது தப்பான முடிவாகப் போகிறதுக்கு காரணமாகப் போயிரும். ஒரு வாரம் எங்கயாவது; போயிற்றுவா. பிறகு வந்து நீ நல்ல ஒரு முடிவாக எடு' என்றான்.

முகுந்தன் இவ்வாறு வற்புறுத்திச் சொல்ல, கார்த்திக்கும் அதற்குச் சம்மதித்தான். அண்டை நாடான அமெரிக்காவிலுள்ள தன் நண்பன் ஒருவனைப் பார்க்கப் புறப்பட்டான் அவன்.


........................................


ஏதேதோ காரணங்கள் சொல்லி வேலையில் இருந்து ஒருவாரம் விடுப்பு எடுத்துக்கொண்டு போன கார்த்திக், இரண்டு தினங்களிலேயே கனடாவுக்குத் திரும்பி வந்தான்.

வீட்டுக்கு வந்தபோது மனைவி ஜமுனா வேலைக்குப் போயிருந்தாள். தான் கனடாவுக்கு வந்திருப்பதை போனில் தொடர்ப்பு கொண்டு முகுந்தனுக்குத் தெரியப்படுத்தினான். கூடவே,

'உன்னை அவசரமாகச் சந்திக்க வேண்டும்' என்றான். வேலையில் அரைநாள் விடுப்பு எடுத்துக்கொண்ட முகுந்தன் கார்த்திக்கை ஒரு கோப்பி ஷொப்பில் சந்தித்துக்கொள்வதாகத் தெரிவித்தான்.

கோப்பி ஷொப்பின் வலது பக்க மூலையில் கார்த்திக் அமர்ந்திருந்தான். இரண்டு கோப்பிகளுக்கு மாத்திரம் ஓடர்கொடுத்து எடுத்துக்கொண்டு வந்தான் முகுந்தன்.

'சொல்லுமச்சான் என்ன முடிவு செய்திருக்கிறாய்?' அறிந்துகொள்ளும் ஆவலுடன் கார்த்திக்கின்; முகத்தை நோக்கினான் முகுந்தன். இரண்டு மிடறு காப்பியை சாவகாசமாக உறிஞ்சினான் கார்த்திக்.

'அவள் இல்லாமல் என்னால வாழமுடியாது முகுந்தன். கலியாணம் கட்டி ரெண்டு மாதம்தானே ஆகியிருக்குது. பிரிஞ்சு வாழலாம் என்று நினைச்சன். இதயத்தின்ர எங்கையோ ஒரு மூலையில் அவளில பாசம் ஒட்டிக்கொண்டிருக்கிறது போல இருக்குது. ரெண்டு நாளாக அவளின்ர முகத்தைப் பார்க்காமல் இருந்தது வாழ்க்கையே வறண்டுபோனது மாதிரி இருந்துது......' என்றான் கார்த்திக்.

'வெரிகுட் மச்சான். இதுதான் உன்னை ஒரு கிழமை லீவு எடுத்துக்கொண்டு எங்கேயாவது போய்வா என்று சொன்னதன் மகத்துவம். இங்க எங்கடயாக்கள் கொஞ்சமும் யோசிக்காமல் உணர்ச்சி வசப்பட்டு அவசரத்தில சில முடிவுகளை எடுத்துக்கொண்டு குடும்பமெல்லாம் அழிஞ்சுபோய் நிக்கீனம்.'

'எதையும் ஆர அமர யோசிச்சு முடிவெடுக்கவேணும். குடும்பம் என்றால் சின்னச் சின்ன பிரச்சனைகள் வரத்தான் செய்யும். அதுகூட சந்தோசம்தான். ஊரில எங்கட அம்மா, அப்பா பிடிக்காத சண்டையா? எனக்கு மனுசியோட சண்டை பிடிக்காட்டில் அன்றைக்கு சரியான போரிங்காக இருக்கும். வீம்புக்குக்கென்றே அவளை சண்டைக்கு இழுப்பேன். அவளும் அப்பிடித்தான். பிறகு நானோ அவளோ ஒருத்தரை ஒருத்தர் சமாதானப்படுத்துறது என்று ஒன்று இருக்கே. அது அலாதியானது. அனுபவிச்சால்தான் தெரியும்' என்றான் கடையிதழ்களில் புன்னகை பரவ. அவனது புன்னகை கார்த்திக்கையும் தொற்றிக்கொண்டது. தலையை அசைத்து ஆமோதித்தான் கார்த்திக்.

'சரி முகுந்தன். ஜமுனா வேலை முடிஞ்சு வர்ர நேரமாகுது. நான் போய் அவளை பிக்அக் பண்ணப்போறன்' என்று அவன் வெட்கத்துடன் சொல்ல,

'அடேங்கப்பா, மனுசியின்ர நினைப்பு வந்துட்டுது. இனி நான் என்ன சொன்னாலும் நிற்கமாட்டாய்.....' என்றான் முகுந்தன் குறும்பாய் சிரித்துக்கொண்டே.

மனநிறைவுடன் நண்பர்கள் இருவரும் கோப்பி ஷொப்பில் இருந்து வெளியேறினர்.