நிறங்கள்...

லறீனா அப்துல் ஹக் - இலங்கை

இடைவேளைக்கான மணியடித்ததும் மாணவிகள் கூட்டிலிருந்து விடுபட்ட பறவைகள் போல வகுப்பறையிலிருந்து வெளியே ஓடினர். கைகளைக் கழுவிக்கொண்டு சாப்பிட அமர்ந்த நளீரா, பேப்பரால் சுற்றப்பட்டிருந்த சாப்பாட்டுப் பார்சலைப் பிரித்தாள். கால் றாத்தல் பாணை இரண்டாக வெட்டி இடையில் சீனி தூவப்பட்டிருந்தது. தனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த தோழிகளின் விதவிதமான சாப்பாடுகளின் மணம் அவளது நாவில் எச்சிலூற வைத்தது. ஒருவருக்கொருவர் தத்தமது உணவில் சிறிய பங்கைப் பரிமாறிக் கொண்டனர். நளீரா தன்னுடையதில் இருந்து ஒரு துண்டுப் பாணைப் பிய்த்து பக்கத்தில் இருந்த சமீலாவிடம் நீட்டினாள்.


"இந்தாங்கடா சமீலா."

"ஐயோ, இண்டைக்கும் பாணும் சீனியும் தானா? எனக்கு வாணாம். அத நீங்களே தின்னுங்கடா". சமீலா முகத்தைச் சுழித்தபடி கூறவே, மற்ற மாணவிகளும் அருவருப்போடு முகத்தைத் திருப்பிக் கொண்டனர். 'அயர்ன்' பண்ணப்படாமல் நிறம் மங்கிப் போன வெள்ளை யூனிபோர்ம், இழுத்து வாரிய இரட்டைப் பின்னலில் மின்னும் ஈர்களும் இடையிடையே நெளியும் பேன்களும், எண்ணெய் வழியும் கருத்த முகத்தில் கலங்கிய கண்களுமாக பாண் துண்டை நீட்டிய அவளின் கைவிரல்களின் அழுக்குப் படிந்த நகங்கள் அவர்களுக்கு அருவருப்பை ஏற்படுத்தியதில் வியப்பொன்றுமில்லை.

தன்னுடைய அழுகையை அடக்கிக் கொண்டு மௌனமாகச் சாப்பிட்டு முடித்த அவள், மைதானத்தை நோக்கி ஓடினாள். இடது கால் சப்பாத்தின் முன்பகுதி முதலையின் வாய்போல பிளந்திருந்ததால் சின்னச் சின்னக் குருணிக் கற்கள் உள்ளே நுழைந்து உள்ளங்காலில் குத்தின. ஓட்டத்தை நிறுத்தி சப்பாத்தைக் கழற்றக் குனிந்தாள்.

பாடசாலைக்கு செருப்பு அணிந்து வருவதால் தினமும் அதிபரிடம் அவள் அடிவாங்குவது பொறுக்க முடியாமல் வகுப்பாசிரியையான கைரூன் டீச்சர் வகுப்பில் உள்ள வசதியான குடும்பத்து மாணவியான சிரீனிடம் சொல்லி, பாவித்துக் கொஞ்சம் பழசான அந்தக் 'கென்வஸ்' சப்பாத்தை வாங்கிக் கொடுத்திருந்தார். மாதக்கணக்காய் அதைத்தான் அவள் பாவித்து வந்தாள். நன்றாகவே நைந்து போயிருந்த அந்தச் சப்பாத்து போன வாரம்தான் பிய்ந்தது. உம்மாவிடம் சொன்னால் அடிவிழும் என்ற பயத்தில் அன்றும் அவள் அதையே போட்டுக்கொண்டு வந்திருந்தாள்.

"சங்கிலி புங்கிலி கதவத் தொற...

நா மாட்டேன் வேங்கப் புலி...

சங்கிலி புங்கிலி கதவத் தொற...

நா மாட்டேன் வேங்கப் புலி...

இங்க ஒரு ஆடு வந்திச்சா?

இல்ல..." வட்டமாகக் கை கோத்தபடி கோரஸாகக் குரல் கொடுத்த மாணவிகளின் பக்கமாய் ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள், நளீரா.

முதல்நாள் நடந்த சம்பவம் இன்னும் மனதிற்குள் பசுமையாய் இருந்தது. நேற்றும் இதுபோல் அவள் தன் வகுப்புத் தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். மகிழ்ச்சியும் ஆரவாரமும் உற்சாகத் துள்ளலுமாக விளையாடிக் கொண்டிருக்கையில், தற்செயலாக நளீராவின் காலில் தடுக்கி மஸீனா கீழே விழுந்துவிட்டாள். தன்னை வேண்டுமென்றே நளீரா தள்ளிவிட்டதாகக் கத்தியழுது அவள் ஏசிய ஏச்சு இருக்கிறதே...! அப்பப்பா! நினைக்கும் போதே நெஞ்சு நடுங்கியது. "கறுப்பி... கறுப்பி..." என்று அவளை அவர்கள் எல்லோருமாய்ச் சேர்ந்து பழித்துக் காட்டியது இப்போதும் கூட காதுகளுக்குள் ஒலிப்பது போலிருக்கவே, கண்கள் கலங்கி, அழுகையில் உதடு கோணியது, நளீராவுக்கு. தன்னிரு புறங்கைகளையும் சட்டென்று முகத்துக்கு நேராய் நீட்டி ஒருதரம் கூர்ந்து பார்த்துக் கொண்டாள். 'ஏன் எண்ட தோல் இப்பிடி அட்டைக் கரி மாதிரி கன்னங்கரேலெண்டு இரிக்கி?' என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டது அந்தப் பிஞ்சு.

கோபம் வந்து தன்னை உம்மா அடிக்கும்போது சொல்லிச் சொல்லி ஏசுவது அவளது நினைவுக்கு வந்தது. அவள் அப்படிக் கன்னங்கரேல் என்ற கறுப்பாகப் பிறந்த காரணத்தால் அவளைப் பார்க்க விருப்பமில்லாமல்தான் வாப்பா உம்மாவோடு கோபித்துக்கொண்டு போனதாக! இடைவேளை முடிவுற்றதற்கான மணி ஒலிக்கவே, தன்னையறியாமல் கன்னத்தில் வழிந்திருந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு வகுப்பறையை நோக்கி விரைந்தாள்.

அடுத்த பாடம் ஃபரீதா டீச்சருடையது. ஏனோ தெரியாது, ஃபரீதா டீச்சருக்கு அவளைக் கண்டாலேயே பிடிப்பதில்லை. அந்தப் பாடசாலைக்குப் புதிதாக வந்த அழகான இளம் டீச்சரான அவரின் மனதைக் கவர அவ்வகுப்பு மாணவிகள் 'நான்', 'நீ' என்று போட்டி போட்டபோது, அவள் மட்டும் பயந்து போய் ஒரு மூலையில் ஒதுங்க வேண்டியதாயிற்று. அவள் அவரிடம் அடிவாங்காத நாளே இல்லை எனலாம். 'என்னை ஏன் யாருக்குமே புடிக்குதில்ல?' அந்தப் பிஞ்சு மனதில் அடிக்கடி எழுகின்ற கேள்விக்கு பதில் மட்டும் தெரியவேயில்லை.

பாடசாலை விட்டதும் பிள்ளைகள் சாரிசாரியாக அணிவகுத்து வாயிலை நோக்கி விரைந்தனர். தன்னுடன் படிக்கும் அநேகமான மாணவிகளின் தாயேனும் தந்தையேனும் அல்லது வேறோர் உறவினரேனும் அவர்களை அழைத்துச் செல்ல வந்திருப்பதைக் கண்டபோது வழமைபோல 'தன்னை அழைத்துப் போக ஒருவரும் வருவதேயில்லையே!' என்ற ஏக்கமும் துக்கமும் அன்றும் ஏற்படத் தவறவில்லை. தெருவோரமாக நடந்து செல்கையில் 'வள்வள்' எனப் பரிதாபகரமாகக் கத்தியபடி ஒரு கறுப்பு நாய்க்குட்டி அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்ததைக் கண்டதும், 'என்னை மாதிரியே இந்தக் கறுப்பு நாய்க்குட்டியையும் எல்லோரும் அடிச்சி வெரட்டியிருப்பாங்களோ, அதுதான் இது இப்பிடி அழுதுகொண்டிருக்குதோ? பாவம்!' நளீரா அதைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி வீட்டை நோக்கி நடந்தாள்.

அன்று புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகியிருந்தன. பாடசாலை எங்கும் ஒரே பரபரப்பு. நளீராவின் வகுப்பு மாணவிகள் படபடக்கும் உள்ளங்களோடு எசெம்பிளி ஹோலில்  கூடியிருந்தனர். அதிபர, மாணவியரின் பெறுபேறுகளை அறிவித்தார். கைரூன் டீச்சரின் கண்கள் கூட்டத்தில் யாரையோ தேடித் துலாவியது. தேடிய நபர் தென்படாததால் உள்ளம் ஏமாற்றத்தில் சற்றே சோர்வுற்றது.

"அவளுக்கு நானும் படிப்பிச்சேன். நல்ல கெட்டிக்காரி. இந்த எக்ஸாமில் அவள் நல்லா பாஸாகுவாள் எண்டு எனக்கு அப்பவே தெரியும்."

"மாவட்டத்திலேயே முதலாவதாக வந்திருக்கிறாளே!"

"கறுப்பாக இருந்தாலும் ஸீனத்தான முகம். அவளால் ஸ்கூலுக்கே பெருமை"

 ஃபரீதா டீச்சர் பெருமிதத்தோடு சொல்வது கைரூன் டீச்சரின் காதில் விழவே, 'இந்த மனிதர்களின் நாக்குகள் எவ்வளவு சீக்கிரம் புரண்டு புரண்டு பேசுகின்றன! பச்சோந்தி போல அடிக்கொரு நிறம் காட்டுகிறார்களே!' அவர் வியப்புடன் தனக்குள் சிரித்துக் கொண்டார்.

'டமார்...!' வேகமாக வந்த அந்த லொறி நிலைமையை உணர்ந்து நிறுத்தப்படுவதற்கிடையில் காரியம் கைமீறிப் போயிருந்ததுதன் வெள்ளைச் சீருடை இரத்த வெள்ளத்தில் மிதக்க, 'உம்மா...!' என்ற அலறல் எழுந்தது நளீராவிடமிருந்து. மெல்ல மெல்ல உணர்விழந்துவர, உயிர் நழுவிச் சென்று கொண்டிருந்த நிலையிலும் பாதி திறந்த விழிகளால் கடைசியாக ஒருதரம் அவள் தன் புறங்கையைப் பார்க்கிறாள். இப்போது அவளுடைய கை கறுப்பில்லை... செக்கச் செவேலென்றிருந்தது.

                                      
 

lareenahaq@gmail.com