ஊளமூக்கி

ஈரோடு கதிர்

'சுளீர்னு' முதுகுல வுழுந்தபொறவுதான் விருக்குனு முழிச்சுப் பார்த்தேன். சீலையத் தூக்கிச் செருகிட்டு அம்மா நின்னுக்கிட்டிருந்துச்சு, 'ஏண்டி எழுப்பயெழுப்ப என்றி தூக்கம் இப்புடி, இந்தா குண்டால பாலு ஆற வச்சிருக்கேன். சின்னக்கண்ணு எந்திரிச்சா பாட்டல்ல ஊத்திக்குடு'

தூக்கம் தூக்கமா வந்த கண்ணக் கசக்கிட்டு முழிச்சுப் பார்த்தேன், தூக்கு போசி தூக்கிட்டே அம்மா சொன்னா 'அலேய், பொசுப்பா ஒழுங்கா ஊட்லய இரு, அங்கயுமிங்கயும் அவள இழுத்துக்கிட்டு சுத்தாத. எங்யாவது சுத்துனேனு தெரிஞ்சுது, தோலு உறிஞ்சுபோயிருமாமா' படல சாத்திட்டு அம்மா கெளம்பிக்கிட்டிருந்துச்சு.

படல் சாக்கு ஓட்டையில வர்ற வெளிச்சத்துல சின்னக்கண்ணு, போர்வய சுருட்டிக் கட்டிப் பிடிச்சுக்கிட்டு சுருண்டு தூங்கறது தெரிஞ்சுது. ஊளமூக்கிக்கு சளி உதட்டுமேல காஞ்சு போயிருந்துச்சு. புசுபுசுன்னு மெதுவா மூச்சுவுடற சத்தம் கேட்டுச்சு. சின்னக்கண்ணு என்ன மாதிரியேதான் கப்புக் கலரு, கண்ணு மொட்டுமொட்டா அழகா இருக்கும். இப்பத்தான் கொஞ்ச நாளாத்தான் 'க்கா க்கா'னு பேச ஆரம்பிச்சிருக்கா, தத்தக்கா பித்தாக்கனு கூடக்கூட ஓடியாந்திக்கிட்டே இருப்பா. சின்னக்கண்ணு அக்கான்னு கூப்பிடறப்பெல்லாம் எனக்கு மல்லீக்கா நெனப்பு வந்துரும்.

சின்னக்கண்ணு வவுத்துல இருக்கும் போதெல்லாம், வெடியறதுக்கு முன்னாலயே எழுப்பியுட்டு, அம்மா தர்ற வெறுங்காப்பியில ரவுண்டு பன்ன தொட்டுத் தின்னு முடிச்சவுடனே, தூக்குப்போசி சோத்தோட என்ன தோள்ல வச்சிக்கிட்டு அப்பன் பெரியவூட்டு பண்ணயத்துக்கு தூக்கிட்டுப் போயி வுட்ருவாறு.

பண்ணையத்து ஆடு மாடுகள மலையடிவாரத்துக்கு நானும் கோணக்காலு மல்லிகாக்காவும்தான் ஓட்டிக்கிட்டுப் போவோம். பண்ணையக்காரவூட்ல எஞ்சோட்டுக்கு இருக்குற தர்ஷினி பள்ளிக்கோடம் போறதுக்கு, நாங்க மாடோட்ற சமயத்துலதான் பள்ளிக்கோட வேனு வரும். வேனு வந்துட்டுப்போறப்போ அடிக்கிற பொக வாசம் எனக்கு ரொம்ப புடிக்கும்.

மல்லிகாக்காவ மல்லீக்கானுதான் நான் கூப்புடுவேன். அக்கா ஒருத்திதான் 'புஷ்பா'ன்னு என்ன கூப்புடும், மத்தவிங்க 'பொசுப்பா, பொசுப்பா'ன்னுதான் கூப்புடுவாங்க. அக்கா விந்திவிந்தி மேச்சக்காட்டோரம் இருக்குற பயிறுபச்சையக் கடிக்கப் போற மாடுகள முடுக்குறதுக்கு ஓடுறத பாக்குறப்போ பாவமா இருக்கும்.

மல்லீக்கா பள்ளிகோடம் போனதேயில்லியாம், என்ன 'நீ பள்ளிக்கோடம் போடி புஷ்பா'ன்னு சொல்லிக்கிட்டேயிருக்கும். மத்யான சோத்துக்குக்கு கட்டுத்தரைக்கு ஓட்டியாந்துருவோம், சோறு தின்னுட்டு, அஞ்சாங்கல்லு ஆடுவோம், புளியங்கொட்ட இருந்தா, ஒரு பக்கம் ஒரசி வெள்ளையாக்கி, தாயக்கரம் ஆடுவோம்.

திடீர்னு ஒரு நாள் அம்மாக்கு வலி வந்து ஆஸ்பத்திரிக்கு போயிட்டாங்கன்னு பக்கத்தூட்டு ஆயா சொல்லி, அவுங்கூட்லியே படுக்க வச்சுக்கிச்சு. ரெண்டு நாள் ஆயாவூட்லதான் இருந்துட்டு பண்ணயத்துக்குப் போனேன். மூனாம் நாள் மத்தியானப் பஸ்சுக்கு அம்மாலும் அப்பனும் வந்துருவாங்கன்னு ஆயா சொல்லுச்சு. மாடு மேச்சுட்டு மத்தியானச் சோத்துக்கு வரும்போது அப்பன் வர்றது தெரிஞ்சுது. மூனு நாளா பாக்காத அப்பன பாத்தவுடனே அழுகாச்சி வந்துருச்சு. ஓடிப்போயி கட்டிப்புடிச்சுக்ட்டு அழுததுல தங்கச்சியா, தம்பியான்னு கேக்க மறந்து போயிட்டேன்.

வூட்டுக்குள்ளே நொழையும் போதே அம்மா 'அலேய்.. பொஸ்சுப்ப்ப்பான்னு' ஓடியாந்து தூக்கிக்கிச்சு. அம்மா தூக்கவும் எனக்கு திரும்பியும் அழுவாச்சி வந்துருச்சு. அப்பவும் கேக்கல தங்கச்சியா, தம்பிப் பாப்பாவானு. பாப்பாவ பாருன்னு பக்கத்துல கூட்டிக்கிட்டுப் போனப்போத்தான் துணியத்தான் இழுத்துப் பார்த்தேன். அப்போத்தான் தெரிஞ்சுது தங்கச்சின்னு. என்னமோ தெரியல அப்போயிருந்தும் அவ மேல பாசம்னா பாசம்.

அடுத்த நா காத்தால பண்ணையத்துக்கு எழுப்புனப்போ அழுவாச்சி வந்துருச்சு. பாப்பாவ வுட்டுட்டு போக மாட்டேன்னு அழுதேன், செரின்னு அப்பன் வுட்ருச்சு. அப்படியும் ரெண்டு நாள் கழிச்சு அழுவுறப்பயே தூக்கிட்டுப்போயி வுட்டுருச்சு அப்பன். மேச்சக்காடு முழுசும் அழுதுக்கிட்டேயிருந்தேன். மல்லீக்காதான் கண்ணத் தொடச்சு மடிமேல உட்கார வச்சுக்குச்சு. அடுத்த நாளும் அழுதேன், அம்மாதான் 'பாவம் பொசுப்பா, வூட்டலதான் இருக்குட்டுமேனு' சொல்லுச்சு.

எந்நேரமும் சின்னக்கண்ணுகூடவே இருப்பேன். சின்னக்கண்ணு சீக்கிரமே பால்குடிய வுட்டுட்டா, பால்குடிய வுட்ட பொறவு அம்மாளும் பண்ணையத்துக்கு வேலைக்கு போவ ஆரம்பிச்சிருச்சு, பெறகு நான் தான் சின்னக்கண்ணுக்கு காவல்.

ராசகுமாரி மண்ணுல கால் வெக்கிறதுன்னாவே கத்துவா, எங்க போனாலும் 'பொஸ்க்காக்கா... தூத்க்கோ'னு துணியப்புடிச்சு புடிச்சு இழுக்குறா. சின்னக்கண்ணு 'க்கா'ன்னு கூப்பிடறப்பல்லாம், எனக்கு மல்லீக்கா நெனப்பு வந்துரும். தர்ஷினிய பார்த்து ரொம்ப நாளாச்சு. வேனு வந்துட்டுப்போற வாசம் மட்டும் மனசுக்குள்ளே அப்டியே இருக்குது.

தர்ஷினி மாதிரியே சின்னக்கண்ணுக்கு துணி போட்டுப் பாக்கனும். என்னய எப்போ பள்ளிகோடத்துக்கு வுடுவாங்கன்னு தெரியல, கரட்டுப் பக்கம் கல்லொடைக்கப் போற அப்பன் வாங்குற காசு, சந்தச் செலவுக்குத்தான் செரியா இருக்குதாம். அதுனால தர்ஷினி போற பள்ளிக் கோடத்துக்கெல்லாம் போவ முடியாதாம்.

சாவடிப் பள்ளிக்கோடத்துக்குத்தான் போவனுமாம், அடுத்த வையாசி மாசத்துல கொண்டுபோய் வுட்ரலாம்னு அப்பன் சொல்லுச்சு. அம்மாதான் இப்பவே ஒரு வருசம் கூடிப்போச்சு வர்ற வைகாசிலீயே வுட்றலாம்னு சொல்லுச்சு. எனக்கும் எப்படா வையாசி மாசம் வரும்னு ஆசையா இருந்துச்சு. பக்கத்தூட்டு ஆயாகிட்ட கேட்டப்போ, நாலு மாசம் இருக்குதுனு சொல்லுச்சு. 'சாமி நாலு மாசம் சீக்கிரம் வந்தரனும்'னு சாமி கும்பிட்டேன்.

அன்னிக்கொரு நாள், நான் பள்ளிக்கோடம் போயிட்டா, சின்னக்கண்ணுவ அம்மாயி வூட்ல வுடனும்னு அம்மா சொன்னப்போ அழுவாச்சு வந்துருச்சு. பள்ளிக்கோடத்துக்கு சின்னக்கண்ணுவ தூக்கிட்டு போய்க்றேனதுக்கு, அம்மா பள்ளிக்கோடத்துல வுடமாட்டாங்கன்னு திட்டுச்சு.

சின்னக்கண்ணு சிணுங்க ஆரம்பிச்ச சத்தம் கேட்டுச்சு.. ஓடிப்போய் பாட்டல்ல பால ஊத்திக்கொடுத்தேன். 'மொச்சுக்.. மொச்சுக்'னு குடிக்கிற சத்தம் கேட்டுச்சு. மூடுன கண்ணுக்குள்ளே கண்ணுமுழி அசையறது தெரிஞ்சுது. குடிச்சுப்போட்டு பாட்ல பக்கத்துல போட்டப்போ, வவுறு குண்டாத் தெரிஞ்சுது. தூரத்துல எங்கியோ வேனு ஆரன் அடிக்கிற சத்தம் கேட்டுச்சு, சின்னக் கண்ணு தூக்கத்துல சிரிக்கிற மாதிரி ஒதட்ட சுழிச்சா. தூக்கத்லயும் ஊளமூக்கி அழகாத்தான் இருக்குறா.

மனசுக்குள் சாமி நெனப்பு வந்துச்சு
சாமி நாலு மாசம் சீக்கிரம் வந்தரக்கூடாது சாமி

 

kathir7@gmail.com



முற்றும்