தண்டனை

ஆனந்த் ராகவ்

(அவுஸ்ரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் நடத்திய சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற சிறுகதை)

தூணோடு பிணைக்கப்பட்ட அந்த வெள்ளைக்காரன்  ஈரமாய் இருந்தான். எந்தக் கணமும் உடம்பைத் துளைக்கப்போகும் தோட்டாக்களை எதிர்பார்த்து வியர்த்திருந்தான். மரண பயம் உந்திய தாகத்தில் கைநடுக்கத்துடன் குடித்த தண்ணீர் வடிந்து சட்டையை நனைத்திருந்தது. கால்சராயில் ஈரம், சிறுநீர் கழித்ததால் இருக்கலாம்.

சீனியர் சார்ஜெண்ட் விச்சயனுக்கு அது பழக்கப்பட்ட காட்சிதான்.   உள்ளூர்காரர்கள், போதைப் பொருள் கடத்தும் கறுப்பர்கள், பாலிலியல் குற்றங்களில் அகப்படும் வெள்ளைக்காரர்கள் என்று சகல குற்றவாளிகளும் உல்லாசபுரியாக வந்து மொய்க்கும் தாய்லாந்தின் 'பாங்க் குவாங்' மத்தியச் சிறைச்சாலை.

இங்கு மரணதண்டனைக் கைதிகள் ஏராளமாய் வருகிறார்கள்.  அவர்களைப் பிணைத்து வைத்து பதினைந்து குண்டுகளால் மார்பைக் குறிவைத்து சுட்டுக்கொல்ல வேண்டிய வேலை. இருபது வருடங்களுக்கு மேலாய் செய்து குரூரம் மழுங்கிய தொழில்.

மார்புக்கூட்டில் சரியாக குறி தவறாமல் சுட்டால் எட்டு தோட்டாக்கள் போதும். அவர்கள் திமிறினாலோ  கவனம் சிதைந்து குண்டுகள் சிதறினாலோ இன்னும் நான்கைந்து முறை சுடவேண்டி வரும். அதிகப்படியாக பதினைந்து தான். ரொம்ப அபூர்வமாய்தான் பத்து தோட்டாக்களுக்கு மேல் போகும். எட்டு கற்பழிப்புக் கொலைகளுக்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட  கூனனுக்கு பதினாலு தோட்டாக்கள் ஆனது.  கூன் முதுகால் இருதயம் சற்று கீழே இறங்கிப் போனதை உணராமல் வழக்கமாய் சுடுவதுபோல நெஞ்சுக்கூட்டுக்குள் எட்டி அவன் சாவு சட்டென்று வராமல் இழுத்து இழுத்து இறந்து போனது அவ்வப்போது ஆழ்ந்த தூக்கத்தில் எட்டிப் பார்க்கும்.  இப்போதெல்லாம் பழகிவிட்டது. சரியாக எட்டு தோட்டாக்கள்தான்.

மரண தண்டனையை துப்பாக்கிச் சூட்டில் நிறைவேற்ற காலம் காலமாய் இருந்து வரும் வழக்கம்.  ராணுவ ஆட்சியின் வழிமுறையைத் தொடர்ந்த தண்டனை முறை.  ஜனநாயகம் நடைமுறைக்கு வந்தபின்பும்  மாறாது அறுபத்து ஐந்து வருடங்களாய் தொடர்ந்த தாய்லாந்து விதிமுறை.

துப்பாக்கியை கையில் எடுத்துக் கொண்டார்.  அதைத்தொட்டு எடுத்துக் கொண்டதும் நரம்பு வழியாய் பாய்ந்த துடிப்பு கை முழுவதும் பரவியது.  வெள்ளைக்காரனுக்கு நேர்க்கோட்டில் நான்கு மீட்டர் தூரத்தில் நின்றார். அந்தக் கறுப்பு பிஸôசை கண் முன்னே நீட்டிய மாத்திரத்திலேயே இருதயம் நின்று போய்விடும் என்று தெரியும் விச்சியனுக்கு.

உல்லாசப்பயணம் வந்த தாய்லாந்தில் மனைவியைக் கொன்று மாமிசம் வெட்டும் கத்தியால்  காய்கறி வெட்டுவது போல அவளை துண்டு துண்டாக்கி கழிவுகள் அகற்றும்  பாலிலிதீன் பைகளில் அடைத்து  சவ்ப்ரயா நதியின் கால்வாயில் போட்டவன் இந்த ஜெர்மானியன்.

அவன் செய்த குற்றத்தின் தீவிரத்தில் பத்தில் ஒரு பங்குகூட இந்தத் தண்டனையில் அவன் அனுபவிக்கப்போவதில்லை. அதில் விச்சயனுக்கு வருத்தம் இருந்தது.

அவன் கைகள் பக்கவாட்டில் நீட்டிக்கப்பட்டு கட்டப்பட்டது. அந்த சிப்பந்தி கறுப்புத்துணி கொண்டு அவன் கண்களை கட்டுகிறான். கட்டும்போதே வெள்ளைக்காரன் உடம்பு நடுங்குகிறது. கசாப்புக் கடை கத்தியால் பொண்டாட்டியை அறுக்கும்போது அவள் உடம்புகூட இப்பிடிதான் துடித்திருக்கும்.  விச்சியன் மெüனமாய் அவனிடம் பேசினார்.

'தண்டனை நிறைவேற்றப்படும் முன் நீங்கள் இரண்டு நிமிடங்கள் பிரார்த்தனை செய்யலாம்.''

கடவுளின் தோரணையில் சார்ஜெண்ட் விச்சயன்  சொல்கிறார்.  அந்த வார்த்தைகள் அவருள் எழுப்பும்  அளவிட முடியா கிளர்ச்சி அலைகளை மெலினமாய் அனுபவித்தவராய் நின்றார்.  ஒவ்வொரு முறை  சொல்லும் போதும் மேலோங்கும் அந்த உணர்வு அவரை ஆட்கொண்டு விடும்.

விச்சயன்  துப்பாக்கியை அவனுக்கு நேரே தூக்கிப் பிடித்தார்.  கடைசி ஆசைகளை நிறைவேற்றி பலிலிகடாவாய் நிற்கவைத்திருக்கும் கொலைகாரர்கள் முன்னால் நின்று அவர்கள் செய்த கீழ்மைகள் மட்டும் மனதில் ஆக்ரமித்திருக்க மார்பைக் குறிவைத்துச் சுடும் வேலையின் நெருடல் பழகி விட்டது.

இந்த வேலையைப் பழகும் காலத்தில்  விச்சயன் நிறைய தூக்கமிழந்திருக்கிறார்.  தோட்டாக்கள் துளைக்கும் உடம்பிலிருந்து வெளிப்படும் ரத்தப் பீச்சும், பிய்ந்து சிதறும் சதைப் பிண்டங்களும் பின்னிரவில் துரத்தியது கொஞ்ச நாட்கள் தான்.  பிணைக்கப்பட்டு நிற்பவர்களின் குற்றப் பின்னணி தெரிந்து கொண்டு ஆசுவாசம் பெறத்துவங்குவதற்கு முன் தயங்கிய நாட்கள். வருடக் கணக்கில் கொன்று குவித்து  உணர்வில் கலந்துவிட்ட கடமை.

பிரார்த்தனை முடிந்து விட்டது என்கிற மாதிரி  துப்பாக்கி செயல்படுவதற்காக லாட்ச்சை மாட்டுவது அந்த அறை முழுவதும் எதிரொலிக்கிறது. விச்சயன் கிளர்ந்து போய் வெள்ளைக் காரனைப் பார்த்தார். தண்டனைக் கைதிகளின்  இறுதிக் கணங்கள் சாவின் குரூரம் அப்பிய உணர்வோடு வசீகரமானவை. திரும்பத் திரும்ப பார்த்துப் பழகி அசாதாரணமான ஈர்ப்பு அனுபவம் கொண்டவை. அந்த நிலையிலேயே கொஞ்சம் நீட்டித்து மரணத்தின் கைப்பிடிக்குள் வைத்திருந்து அழ வைக்கத் தூண்டும் கவர்ச்சிகரமான கட்டம். கதறும் அந்த மனிதப்பேய்களின் உயிரை ஊசலாட வைக்கும் அந்த நிமிடம் விச்சயன் எதிர்பார்க்கும் ஒன்று.

'ஐயோ கடவுளே''..... நடுங்கியபடி வெள்ளைக் காரன் கதறுகிறான்.

சிலர் அழுவார்கள். சிலர் அழுத்தமான மெüனத்தோடு உடம்பு பதற நிற்பார்கள். சிலர் மன்னிப்புக் கோரி யாசிப்பார்கள்.. விச்சியன் தான் தண்டனை தருபவர் போல. சட்டம் தான் கொல்கிறது.   தான் வெறும் கருவி என்பதை மறந்து ஆயுதம் ஏந்திய தன்னிடம் கதறுவதை மனதின் மூலையில் ரசித்து ஒதுக்கி இருக்கிறார். வெறும் கருவியாய் தான் இருந்தவர். சட்டம் நீட்டிய திக்கில்  குற்றவாளிகளை சம்ஹாரம் செய்யும் மனிதக் கருவி. மெல்ல மெல்ல கோபமும் தாபமும் வேட்கையுமாய் புரண்டு எழும் மனம் இயந்திரத்தன்மையை விஞ்சி நின்று விட்டது. துப்பாக்கி அவர் கை விரல்களில் இயங்கும் கருவியாக இருந்து உடலோடு ஒட்டிப் போன அங்கமாய் மனத்தளவில் நீண்டுவிட்டது.

துப்பாக்கியைத் தூக்கிப்பிடித்து அவர் கவனம்  அவன் உடம்பில் பதிய....  துப்பாக்கி பிடித்திருக்கும் வலது கையின் கீழே இடது கையை ஆதரவாக முட்டுக் கொடுத்து ஆழமாய் மூச்சு வாங்கினார். கண் முழுதும் துளைக்க வேண்டிய அவன் மார்பால் நிறைந்திருக்க துப்பாக்கியை இயக்கினார்.

வெடிச்சத்தத்தை மூழ்கடித்த வெள்ளைக் காரனின் கதறல் அந்தச் சுவர்களுக்குள் எதிரொலிலித்தது. முதல் தோட்டாவுக்குப் பிறகு கொஞ்சம் இடைவெளி தந்தார்.  முதல் குண்டு உடம்பில் தைத்ததும் விறைப்பான உடம்பு கொஞ்சம் தளறும் அப்போது இடைவிடாமல் சுடவேண்டும்.

முதல் தோட்டா குறி தவறி அவன் கழுத்தின்கீழ் பாய்ந்தது. இருதயத்தைத் தவறவிட்டது தெரிந்தது. முதல் தோட்டா எப்போதும் கொஞ்சம் தவறும். ரத்த வட்டம் உதிக்கும் அதன் பாதை தெரிந்தபிறகு கொஞ்சமாய் துப்பாக்கியை திசை திருப்பி அடுத்தடுத்து வெடிக்கும் குண்டுகளை வரிசையாக  நெஞ்சில் பாயவைக்க அதிகபட்சம் மூன்று ஆகலாம்.

சுட்டார்.

இரண்டாவதும் மூன்றாவதும் இருதயத்தை துளைத்து இலக்கை எட்டிய திருப்தியில் சரமாரியாகச் சுட்டார்.

முதல் ஒன்றிரண்டு தோட்டக்களுக்குத் தான் அவன் அலறினான். அதன் பிறகு வெளிப்பட்டது சின்னச்சின்னதாய் உடம்பின் எதிரலைகள். தொங்கிப்போன தலையுடன் அதிரும் உடம்பு.  நம்பிக் கூட வந்த மனைவியை வெட்டிச் சிதைத்த உடம்பு. பத்து முறை சுட்டவுடன் நிறுத்தினார். புகை, வெடித்த துப்பாக்கி மருந்தின் வாசம், ரத்தத்தின் வாசம் சூழ, விச்சியன்  அவனை  நோக்கி நடந்தார்.   இறந்துபோயிருந்தான். வாய் வழியே ரத்தம் வடிய.. உயிரின் சுவடே இல்லாமல் மார்பு  முழுக்க துவாரங்களாய் மரித்திருந்தான்.

திரும்பி நடந்தார். உடம்பிலும் கையிலும் பரவிய நடுக்கம் போக, வெள்ளைக்காரனின் பாவம் நிறைந்த சுவாசம் பட்ட உடல் தோய குளிக்க வேண்டும். பிணத்தை அப்புறப்படுத்தி கொலைகாரனின் மத நம்பிக்கை சார்ந்து அவன் கடவுளிடம் அவனை மறுபடி பூமிக்கு அனுப்பாமலிலிருக்க வேண்டி சேர்ப்பிக்க வேண்டும். அதற்கு நிறைய சிப்பந்திகள் இருக்கிறார்கள். விச்சியன் நிதானமாய் நடந்தார்.

காவல் துறையிலிலிருந்து வார்டன் வேலையில் ஆரம்பித்த சிறைச்சாலை தொடர்பு. கொஞ்சம்போல் சம்பளம் உயர்த்தி மரணதண்டனை  நிறைவேற்றும் மனோஜ÷க்கு உதவியாளனாய் பதவி உயர்வு வந்ததில் தொடர்ந்த வாழ்க்கை. சார்ஜெண்ட் மனோஜ் பணி ஓய்ந்ததும் வந்த கடமை.  கணிசமான சம்பள உயர்வும் ஒரு உதவியாளனும் பிரத்யேக துப்பாக்கிகளுமாய் மிடுக்காக தொடர்ந்த வேலை. கை நடுக்கமெடுத்த ஆரம்ப தண்டனைகளுக்குப் பிறகு எண்ணிக்கை ஏராளமாய் உயர்ந்து சிறைக்கைதிகளை நடமாடும் சவங்களாய் பார்க்கும் பக்குவம் வந்த சேர்ந்த அனுபவம்.

வெள்ளைக்காரன் முகம் மறுபடி கண் முன்னால் நின்றது.  உடம்பெல்லாம் பச்சை குத்திய ஆறடி ஜெர்மானியன். கொஞ்ச நாள் நினைவில் கூட வரும். பிறகு மறந்து போகும். அடுத்த கொலையாளி வரும்வரை. எவ்வளவு முகங்கள் ஞாபகம் இருக்கும்? யோசித்துப் பார்த்தார்.

முதல் தண்டனை மறக்கவில்லை. மறக்காது. நைஜீரியாக்காரன். போதைமருந்து கடத்தி அகப்பட்டவன். தன்னை விட இருபது வயது மூத்தவனை கொல்ல வேண்டிய தடுமாற்றம் நிறைந்த கை நடுக்கமெடுத்த முதல் தண்டனை.  அவன் கேட்டு வாங்கி வாங்கி தண்ணீர் குடித்ததும். சுடும்முன் அனுமதி வாங்கி இரண்டு சிகரெட்டு புகைத்தது மறக்கவில்லை. சார்ஜெண்ட் ப்ரமோத் அருகிலேயே நின்றிருந்தார். அவரின் கையில் ஒரு துப்பாக்கியோடு. விச்சியன் சுடத்துவங்கும் முன் அவரின் வலுவான கையால் தோளை அழுத்தி தெம்பூட்டியது மறக்கவில்லை.

சார்ஜெண்ட் ப்ரமோத் கூட நின்றது அதற்குப்பின் தொடர்ந்த சில ஆரம்பகால தண்டனைகளுக்குத்தான். விசையை இயக்க இயக்க சந்தேகங்கள் விலகிவிட்டன விச்சியனுக்கு. தண்டனை வழி சமுதாயத்தை சீர்படுத்தும் சட்டம் சொல்வது சரியாகத்தானிருக்கும் என்ற நம்பிக்கையில், அது போதித்த நியாய உணர்வு மனதில் வேரூன்றிப்போன இருபது வருடங்களில் இப்போதெல்லாம் அந்த கேள்வி எழுவதில்லை.

நூற்றுக்கணக்காக சுட்டுத் தீர்த்து தலை சரிகிற சடலங்களில் சில மனதை ஆக்ரமித்துக் கொள்கின்றன.  வருடங்கள் ஓடி  ரத்தம் தோய்ந்த நிறைய உடல்களை பார்த்தும்  பாபச் செயல்களால் நிறைந்திருக்கும் உலகத்தின் சில முகங்கள் மறப்பதில்லை. சிறைக்கு வெளியே பரந்த உலகத்தில் சிதறிக் கிடக்கிற ஏராள மனித முகங்களிடையே  புலப்படாத முகங்கள். கண்களை மூடி யோசிக்கிற போது வரிசையாக நகருகிற முகங்கள்.

தண்டனைகளும் அதன் தீவிரங்களும் அச்சுறுத்தும்  பயத்தில் சீராக நடக்கும் சமூகம் அவருக்கு இருபத்து ஐந்து வருடங்களாகப் பரிச்சயப்பட்டது. தடம் மாறி போகாத, சிவப்பு விளக்குக்கு பயந்து அவசரமாய் நிற்கும் வாகனங்கள், டிக்கெட்டு வாங்க வரிசையில் நிற்கும் ஜனங்கள், போலீஸ்காரனின் லத்தி கண்ணை நிரப்ப தடுப்புக்கு மேலே மீறாத கூட்டம். இடுப்பில் பதவிசாய் மடங்கியிருக்கும் துப்பாக்கி கவனத்தில் மண்டியிடும் குற்றவாளிகள்...  ஒரு கோட்பாட்டுக்கு உட்பட்டு ஒழுங்கு பேணும் முறை. கண்ணுக்குத் தெரியாமல் காற்றில் மறைந்து சொடுக்கும் சாட்டையாய் அவ்வப்போது தாக்கும் ஆயுதம். தண்டனை பயம். சமூகத்தில் நிம்மதியை நிலைநிறுத்தும் இறைவன். தனக்கு அதில் ஒரு பங்கு இருக்கிற பெருமையில் உயிர் பறிக்கும் தொழிலில் உறுத்தல்  இருந்ததில்லை.

தண்டனை பயத்தை மீறி தவறுகள் நடந்தபடி நகர்ந்த நாட்களில் சிறைச்சாலைக்குள் வந்து சேரும் களங்கங்கள் குறையாமல் தொடர்ந்தன. ஒருவனைக் குறைத்து விட்டு ஓய்ந்தால் இன்னொருவன் அவனிடத்தை ஆக்ரமிக்கும் ஆயாசமான வாழ்க்கை நீண்டது. தோட்டாக்கள் சிதறடித்து இருதயம் ஓய்ந்து போகும் அதே கணத்தில் வேறு எங்கேயோ மூர்க்கத்துடன் இன்னொரு தவறு நிகழ்ந்து கொண்டிருக்க விச்சியன் இயங்கிக் கொண்டிருந்தார். ரத்தமும் ஓலமும் குற்றவாளிகளின் உயிர் உதிர்ந்த சடலங்களுமாய் நகர்ந்த நாட்களின் இறுதியில் அடுத்த மரண தண்டனைக்கு எதிர்பார்த்துக் காத்திருந்த இடைவெளியில்தான் அந்த அறிவிப்பு வந்தது. நேர்க்கோட்டில் துரிதமாய் பயணித்திருந்த வாழ்க்கையை நிறுத்தி வைத்த சிவப்பு விளக்கு மாதிரி. அவரை நிலை குலையச் செய்த அறிவிப்பு.

மேலதிகாரி தயக்கமாய் தான் சொன்னார். அரசு முத்திரையும் அச்சடித்த காகிதமுமாய் மேஜை மேல் விரித்துவைத்து அவர் பேசத்துவங்குகையில் பின்னால் என்னமோ பெரிய சங்கதி இருந்தது தெரியும் விச்சியனுக்கு.

'மரணதண்டனை நிறைவேற்றும் உத்தியில் மாற்றம் கோரி உத்தரவு வந்திருக்கிறது சார்ஜெண்ட். இனி துப்பாக்கியால் சுட வேண்டாம் என்று உத்தரவு. அந்த முறையை அரசாங்கம் வாபஸ் வாங்கப் போகிறதாம்.'' முறையிடுகிற மாதிரி அதிகாரி சொல்கிறார்.

நம்ப இயலாமல் விச்சியன் அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தார்..

விஷ  ஊசி.  குண்டு துளைக்காமல், ரத்தம் சிதறாமல் மென்மையான இறப்பு.  பெüலான்.. பொட்டாசியம் க்ளோரைட் கலந்த கலவை.  வியாதிக்கு ஊசி போடுகிற மாதிரி... சாகறவனுக்கு வலிலியே தெரியாது. பெண்டதால் கொடுத்தவுடனே ஆள் மயக்க நிலைக்குப் போவான். பெüலான் நுரையீரலை நிறுத்திவிடும். பொட்டாசியம் க்ளோரைட் இருதயத்துக்கு.  அதுவும் துப்பாக்கியால் இருதயத்தை நிறுத்துகிற மாதிரிதான். இந்த ரசாயனம் இதயத்தை நிறுத்திவிடும்.     தூக்கத்துல சாகற மாதிரி  பத்து நிமி'த்துல காரியம் முடிஞ்சிடும். இவ்வளவு ஆர்ப்பாட்டம் தேவையில்லை.. இந்த ரத்தக்களறி வேண்டாம்... துப்பாக்கியால் சுடுவது அநேகமாய் எல்லா நாட்டிலும் வழக்கொழிந்து போய்விட்டது.  நாமும் வரு'க்கணக்காய் தொடரும் வழக்கத்தில் இதை செய்து கொண்டிருக்கிறோம். இது ரொம்ப மிருகத்தனமானதென்று அரசாங்கத்துக்கு ஏக கெடுபிடி.  அதுதான் மாற்றியாக வேண்டும் என்று உத்தரவு வந்திருக்கிறது.'

விச்சியன் எதிர்த்து பேசத் திராணியில்லாமல் ஆச்சரியமான பார்வையுடன் நின்றார். 'தண்டனை மட்டுமா குற்றங்களை தடுக்கிறது? தண்டனையின்  தீவிரமும் இல்லையா?  மிருகத்தனத்துடன் நடந்துகொள்ளும் கொலைகாரர்களுக்கு ஏன் மனிதாபிமானத்துடன் தண்டனை தரவேண்டும்...'

'தண்டனை முறையும்  குற்றத்துக்கு நிகராய் கொடூரமாய் இருக்கவேண்டிய அவசியமில்லையே சார்ஜெண்ட்.''

பலம் முழுதும் போன உணர்வில் தளர்ந்து போனார்.

இரும்பு ஊசிகளாய் குண்டுகள் தாக்கப்போகும் பயத்தில் அவர்கள் கடவுளை கூப்பிடுவதும், கருணைக்காக யாசிப்பதும், கண்கலங்கி வருந்துவதும் இனி கிடையாது. அந்தக் கொலைகாரர்களை அமரவைத்து வலிலிக்காமல்  ஊசி ஏற்றும்போது அவன் என்னைப் பார்த்து ஏளனமாய் சிரிக்கலாம். நோகாது.   விச்சியன் மேலதிகாரியைக் கேட்கமுடியாமல் நின்றார்.

ழூகைகள் பிணைக்கப்பட்டு கண்கள் கட்டப்பட்டு அவன் நிற்கிறான். விச்சயன்  துப்பாக்கியை  எடுத்து வைத்துக்கொள்கிறார். இதனை இனி இயக்க வேண்டியதில்லை. என் உடம்பிலிலிருந்து பிய்த்து எடுத்த உறுப்பாய் அதை அங்கம் அங்கமாய் கழற்றி அலுவலகப் பெட்டியில் வைத்து விடுவார்கள். வெறும் காட்சிப்பொருளாய் முடங்கிப் போய்விடும்.

'டேவிட்.. நீங்கள் பிரார்த்தித்துக் கொள்ளலாம் வழக்கமான நிதானம் இல்லாமல் அவசரகதியில் சொல்கிறார். இப்படி சொல்வது இது இறுதி முறையாய் இருக்கும் என்கிற நினைப்பு உந்த வார்த்தைகள் படபடப்பாய் கொட்டுகின்றன.

விடைப்பான மார்பும் நேராக பார்க்கும் பார்வையுமாய் அவன் தனக்கு பிரார்த்தனை தேவையில்லை என்கிற தொனியில் விறைப்பாக நின்றிருந்தான். அந்த உடல் மொழி அவரை கலைத்தது. சாவுக்கு பயப்படாதவனா இல்லை வெளியில் விறைப்பு காட்டி உள்ளுக்குள் நடுங்குகிறவனா?  அவனை இன்னொரு முறை பார்க்க வேண்டும் போல இருக்கிறது.  விச்சியன் மெல்ல  நடந்துபோய் அவன் கண்கட்டை அவிழ்க்கிறார். கண்கட்டு அவிழ்த்த நிலையில் அவன் கண்கள் இன்னும் ரத்தம் தெறிக்கும் சிவப்போடு கோரமாய் தெரிகிறது.

பின்னால் நடந்து வந்து  துப்பாக்கியை எடுத்துக் கொண்டார். துப்பாக்கியின் சேப்டி லேட்சை விடுவித்து வலது கையில் பொருத்திக் கொள்கிறார்.. அவனை நோக்கி எட்டு வைக்கிறார். இவன் முகமும் மறக்காது. இவன் கண்களும் மறக்காது.  பூக்கள் பூக்கிறார்போல் மலர்ந்த சின்ன உயிர்களைக் கசக்கி எறிந்த கிராதகன் இவன். இவனுக்குப் பிரார்த்தனை கூட தேவையில்லை. அவனை நோக்கி எட்டு வைக்கும்போது அவன் கண்களோடு கண்களாய் அவர் பார்வை கலக்கிறது.

'எவ்வளவு கொலை செஞ்சிருக்கே டேவிட்? பதினைஞ்சா பதினாறா?.. எண்ணிக்கை ஞாபகம் இருக்கா இல்லை மறந்து போச்சா?  ஏன்? சிக்கினா நாங்க மரண தண்டனை தருவம்னு தெரியாதா? தெரிஞ்சுமா செய்யற? சிக்கமாட்டம்னு நம்பிக்கையா? இல்லை கவலை இல்லையா?

பதில் சொல்லாமல் அழுத்தமாய் நின்றவன் அவருள் இன்னும் கோபத்தைக் கிளறினான். சாவு பயத்தில் கூட மனது இளகாத கயவன்.

'மாட்டாம இருந்திருந்தா இன்னொரு இருபது கொலை செஞ்சிருப்பயா... பதில் சொல்டா...?''

அவன் கண்களை பார்த்துக் கொண்டே விச்சியன்  சுட்டார். நெஞ்சில் சுடாமல் கீழே... கால்களை நோக்கி. அந்த துப்பாக்கியின் கூரிய குண்டு அவன் வலது கால் விரல்களில் பட்டு ரத்தம் தெறித்தது.

'நீ கற்பழிச்ச குழந்தைகளின் வயசு என்ன  நாலா... ஆறா...... ஏன் டேவிட்? சின்னக் குழந்தைகளை .... எப்பிடி மனசு வருது....?  சுட்டார்.. இடது காலில் ரத்தம் கொப்பளிக்க அவன் அலறத் தொடங்கினான். அந்த அலறல் ஒலிலி  ஓசை அவரை கொஞ்சம் சாந்தப்படுத்தியது போல ஒலித்து மேலும் கேட்கும் ஆசையைக் கிளறியது. ஊசி போடும் போது யாரும் இதுபோல அலற மாட்டார்கள்.

'பூ  மாதிரி இருந்த குழந்தைகளோட ஆடையைக் களட்டிய கை இதுவா.....''

வலது கையில் ரத்த வட்டங்கள் உதித்த போது அறை அதிர்ந்தது. வலிலிக்கிறது அவனுக்குத் தெரிகிறது. வலி என்றால் என்னவென்று தெரியாதவனுக்கு ஏற்படுத்திய பெரிய காயம். இன்னும் ஆழமாய் காயம் ஏற்படுத்த வேண்டும்.

காதைப் பிய்த்தபடி போன குண்டு தலையை உரசி எரிந்து ரத்தம் உதிர்த்தது...

'கத்து. இன்னும் உரக்க.... மத்த கைதிகளுக்குச் கேக்கறா மாதிரி.... உலகம் பூரா எட்டுகிற மாதிரி கத்து.

உன்னைப் போல கிராதர்கள் எல்லாருக்கும் கேட்கும்படி.. கத்துடா அவன் தோளில் துளைத்த குண்டு பீச்சியடித்த ரத்தம் அவன் கன்னத்தில் பட அலறினான்.''

'அந்த சின்னப் பெண்கள் ஆத்மாக்கள் சாந்தி அடைகிற மாதிரிக் கதறு..''

வலது தோளில் துளைத்து தெறித்து,  துடைகளில் குண்டுகள் பாய்ந்து அவன் கால்சராய் பிய்ந்து ரத்தம் வழிந்தது.

'இன்னும் உரக்க... பக்க வாட்டில் நின்று அவன் வாயில் சுட்டார்...''

அவன் ஊளைச் சத்தமும் கதறுலுமாய் அலறினான்..

உயரமான மதில்சுவர்களைத் தாண்டி விரைவாக நகரும் வாகனங்களில் ஒன்று சிவப்பு விளக்கு பார்க்காமல் சிறுவனை இடித்து நசுக்கிவிட்டு விரைகிறது. விச்சியன் கையில் ஊசியோடு அதைத் துரத்திக் கொண்டு ஓடுகிறார்.

அவன் கண்களில் இன்னும் அந்த வெறி தாண்டவமாடுவது போலத்தான் தோன்றியது விச்சியனுக்கு.

சுட்டார்.

'உன் இருதயத்துல இரக்கமே இல்லையா...''

அவன் வலி கடந்த நிலையில் இருந்தான்.

'இவ்வளவு குரூரம் எங்கிருந்து வருது.. இந்தப் பாழும் மூளையிலிருந்தா...''

உடம்பெல்லாம் ரத்தத் துவாரங்களாய் செயலிழந்து போனவனின் உடல் துடிக்க, நிறுத்தச் சொல்லி அறை பூரா ஒலிக்கும் அலறல் உணராமல் இரண்டு துப்பாக்கிகளின் குண்டுகள் தீர்ந்த பின்னும் விச்சியன் விசையை இயக்கிக் கொண்டிருந்தார்.

 

anandraghav@yahoo.com