ராதையடி நீ எனக்கு...!

இராமசாமி ரமேஷ். அளம்பில்       

'மிஸ் ப்ரியங்கா! நந்தகியை வரச்சொல்லுங்க..." என்ற விஷ்ணுவிடம், 'சேர்! இன்றைக்கு நந்தகி ஓபீஸ்க்கு வரலை..." என்றாள் பிரியங்கா. '! அப்படியா? .கே..." அவனது முகமும் உள்ளமும் அந்தப் பதிலால் சோர்ந்தன. இத்தனை நாட்களாய் கொஞ்சம் கொஞ்சமாய் சேமித்து மூடிவைத்து வளர்த்த காதலை, துணிவு இல்லாமல் நந்தகியிடம் அவன் இதுவரை சொல்லவில்லை. இன்றாவது சொல்லி அவளது விருப்பத்தைத் தெரிந்து கொள்ளலாம் என்றால், 'ச்சே! அதுவும் முடியாமல் போய்விட்டதே! நான் அதிஷ்டமே இல்லாதவன்" தன்னைத்தானே நொந்து கொண்டவனுக்கு  அன்றைய பொழுதின் வேலையே ஓடவில்லை. செய்து முடிக்கவேண்டிய வேலையை திருப்தியாகச் செய்யாமல் ஏனோ தானோவென்று கிறுக்கிக்கொண்டிருந்தான்கையெழுத்துக்கூட கோணலாகிப் போனதாகவே தோன்றியது.

மதியம் உணவு இடைவேளையின்போது சிலவேளை அவள் வரக்கூடும் அல்லவா? ஏதாவது அவசரமான வேலை இருந்திருக்கும். அதனை முடித்துவிட்டு மதியம் வரக்கூடும் என எதிர்பார்த்துக்கொண்டிருந்தான். மணி இரண்டைத் தாண்டியும் அவள் தரிசனம் இவனுக்குக் கிடைக்கில்லை. வேதனைதான். என்ன செய்வது? மறுநாள் இருக்கிறது தானே என்பதால் அன்றைய பொழுதை சபித்தான்.

மறுநாள்...

நிலவைக் கண்டவுடன் உவகையோடு மலர்கின்ற அல்லிப் பூக்களைப் போல, மனசு முழுவதும் ஒருவித சந்தோசம் கலந்த படபடப்போடு காலையில் அலுவலகத்துக்கு வந்தான் விஷ்ணு.

அவன் படித்து முடித்துவிட்டு   வேறு எங்கும் தொழில் பார்ப்பதைவிட, தனது கம்பனியையே நிர்வகிக்கட்டுமே என விஷ்ணுவின் தந்தை ராஜாராம், தனது வயது முதிர்வைக் காரணம்காட்டி மகனிடம் அலுவலகத்தை பொறுப்பெடுத்து வேலைசெய்யும்படி விண்ணப்பித்திருந்தார். அவனோ, 'இத்தனை பெரிய கம்பனியை... நான் ஒருவன் எப்படி தன்னந்தனியாக  நிர்வகிக்க முடியும்? இது என்னால் முடியாது அப்பா..." என்று மறுப்புத் தெரிவித்தான். இருந்தும், ராஜாராம் தொடர்ந்தும் நச்சரித்துவர விஷ்ணுவால் ஏற்காமல் இருக்கமுடியவில்லை. 'ஓகேப்பா! ஆனால்... ஒரு கண்டிஷன். என்னால அதை முழுமையா ஏற்றுக்கொள்ள முடியாது. நான் ஓபீசுக்கு போறேன். அங்குள்ள வேலைகளையும் பாத்துக்கிறேன். இருந்தாலும்... நீங்க வீட்டிலயிருந்து என்னோட வேலைகளை சரிபார்க்கணும். ஏன்னா... நான் இதில அனுபவம் இல்லாதவன் டாடி" அவன் வைத்த கோரிக்கையை சந்தோசமாக ஏற்றுக்கொண்டார் ராஜாராம். இதை ஏற்றுக்கொள்ள சம்மதிக்கவைத்தது போலவே, வெகுசீக்கிரமே இவனுக்கொரு கல்யாணத்தையும் நடத்திவிட வேண்டுமென எண்ணிக்கொண்டார்.

பாடசாலை, கல்லூரி, பட்டப்படிப்பு என விஷ்ணு எத்தனையோ சூழலில் வாழ்ந்திருந்தாலும், ஏனோ அவன் காதல் என்கிற பாதையில் பயணிக்க விரும்பவில்லை. காதல் அவனுக்கு கசப்பானதாகவோ அல்லது ஏமாற்றமளித்த ஒன்றாகவோ காணப்படாத போதும், நட்புக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை அவன் காதலுக்குக் கொடுக்கவில்லை.

'வசதி,வாய்ப்புக்கள் உள்ள உனக்கு... ஏன்டா காதலிக்கப் புடிக்கலை? " இப்படி எத்தனையோ நண்பர்கள் அவனிடம் கேட்டபோதெல்லாம், 'டேய்! காதல் வசதிக்காக வர்றது கிடையாது. எனக்கு ஏனோ... அதுல இன்ரஸ்ட் இல்லைடா..." இப்படியே சொல்லி தப்பித்துவிடுவான்.

வசதி,வாய்ப்புக்கள் ஏராளமாய் அவனிடத்தில் கொட்டிக்கிடந்தும் அவைகளை நாடாமல் இந்த இளைய வயதிலேயே ஆசைகளைத் துறந்தவனாக காதலுக்கு வெகுதூரத்திலேயே இவனது வாழ்க்கைப் பயணம் நகர்ந்துகொண்டிருந்தது.

இந்தக் காலப்பகுதியில் தான், தந்தையார் அலுவலகப் பொறுப்பை இவனிடத்தில் ஒப்படைத்தார். தனது வாழ்வில் ஏதோ ஒன்றை இழந்துவிட்ட ஏக்கம் அவன் ஆழ்மனதில் பதுங்கியிருந்தாலும், வெளிக்காட்டிக் கொள்வதில்லை. தன்னால் அலுவலகத்தையும் அங்கு பணிபுரியும் அனுபவசாலிகளையும் எப்படி நிர்வகிக்க முடியும்?என்ற கேள்வி அவனுக்குள் இருந்தாலும், தந்தையின் இயலாமையை எண்ணி பொறுப்பை வாங்கிக்கொண்டான்.

அவனுக்கு முதன்முதலாக அலுவலகத்தில் உள்ள அத்தனை ஊழியர்களையும் அறிமுகப்படுத்தினார் தந்தை. இனிமேல் தன்னோடு ஒன்றாகப் பணிபுரியவேண்டியவர்கள் என்பதினால், அத்தனைபேரையும் உண்மையாகவே நினைவில் நிறுத்திக்கொண்டு நலம் விசாரித்துக்கொண்டிருந்தான். அப்போதுதான்  நந்தகி அவன்முன்னால் தோன்றினாள். ஏற்கனவே, சிலதடவைகள் இங்கே அவன் வந்திருந்தாலும், அப்போது அவளைப் பார்த்ததாய் நினைவிருக்கவில்லை.

'விஷ்ணு! இது நந்தகி! நம்ம மனேஜர் பத்மசீலனோட பொண்ணு. அவருக்கு பாரிசவாதம் நோய் தாக்கியிருக்கிறதால... நந்தகிதான் இனி அவரோட கடமைகளைச் செய்வா." 'நந்தகி! இது விஷ்ணு..."  மரியாதையோடு அவனை நோக்கிய அவள், 'வணக்கம் சேர்!" சிறு புன்னகையை உதிர்த்துவிட்டு தன் பணியினுள் ஆழ்ந்துபோனாள். அவனும் அந்தக்கணத்தில் எதையுமே நினைவில் கொள்ளாவிட்டாலும், அந்தப் பெயரைமட்டும் தனது ஞாபகப் பொக்கிஷங்களோடு பொறித்துக்கொண்டான்.

முதன்முதல் கடமையை ஏற்றுக்கொண்ட அந்தநாள், ஒருவாறு தனது ஆயுளை முடித்துக்கொள்ள அடுத்தநாள் அலுவலகம் விரைந்தான். அலுவலகத்தை அடைந்ததும், ஏனோ மனசும் விழிகளும் நந்தகியைத்தேடி ஓடின. கடைக்கண்ணால் நோட்டமிட்டான். நந்தகி இருக்கிறாள் என்பதை உறுதிசெய்துகொண்டு தனது வேலைக்குள் நுழைந்துகொண்டான். தன் வாழ்நாளிலேயே இதுவரை எதைப்பற்றியும் அலட்டிக்கொள்ளாத அவன் நினைவுகள், நித்தமும் நந்தகியின் நிழலோடு பேசத்தொடங்கின. அவளை தேவைப்படாத சந்தர்ப்பங்களில் எல்லாம் அழைத்தான். அதிகமாய் பேசவும் அச்சம் அவனைத் தடுத்துவிடும். இருந்தாலும், அலுவலக விடயங்களுக்காக பேசிக்கொள்ளும்போது அவளது தனிப்பட்ட விபரங்களையும் தெரிந்துகொள்ளத் தொடங்கினான்.

தனக்கு சம்பளம் கொடுக்கின்ற முதலாளி என்ற ரீதியிலும், தனக்குப் பெரியவன் என்பதினாலும், நந்தகி பணிவோடும் மரியாதையோடும் நடந்துகொண்டாள். அளவுக்கதிகமாகவும் அவன் பேசுவதற்கு அவள் இடமளிப்பதில்லை. கடைசியில் அவளது இத்தகைய குணங்களே, அவனது மனதில் காதல்ச்செடி முளைத்து             மொட்டவிழ்க்க காரணமாய் அமைந்தன.
எப்போதும் காலை பத்துப் பதினொரு மணிக்கு அலுவலகம்வரும் அவன், தன் காதல் பூக்கத்தொடங்கியதிலிருந்து காற்றாய் மாறினான்.

எட்டுமணியானால் அலுவலகத்தில் ஆஜராகியிருப்பான். ஈடுபாடில்லாமல் எதையாவது உடுத்தால் போதுமென வாழ்ந்தவன், அவளுக்குப் பிடிக்கின்ற விதங்களில் அவளைப்போலவே எளிமையாக அணியத்தொடங்கினான். சின்னச் சின்ன விடயங்களிலும்  அதிகமாய் கவனமெடுத்து இரசனையோடு செய்யப்பழக்கப்படுத்திக்கொண்டான். எப்போது அவனுக்குள் காதல் வைரஸ் நுழைந்துகொண்டதோ அன்றிலிருந்து ஆளே மாறிப்போனான் விஷ்ணு.

நாட்கள் கரைந்து நாட்காட்டிகள் குறைந்து காலம் கடுகதியில் காணாமல் போய்க்கொண்டிருக்க, அந்த ஆறுமாத இடைவெளியில் தனது கருவில் காதல்குழந்தையை பத்திரமாக வளர்த்துக்கொண்டிருந்தான் அவன். ஆறுமாத காலங்களில் அவளுக்கும் அவனுக்குமான இடைவெளிகள் குறைந்து நட்பாகப் பேசிக்கொள்ளத் தொடங்கியிருந்தார்கள். பொறுத்துப் பொறுத்துப் பார்த்தான். அவளாக ஏதாவது செய்கிறாளா என்று? இல்லை! அவள் இதுதொடர்பாக சிறு அசைவைக்கூட காட்டவில்லை. இனியும் பொறுக்க முடியாது. தன்னுடைய காதலை அவளிடம் சொல்லியே தீருவது என்று முடிவெடுத்தான். காத்திருப்பதால் இறுதியில் காதல், கண்ணீரையே பரிசளித்துவிடும் என்பதை பலருடைய வாழ்க்கையிலே கண்கூடாக கண்டுள்ளதால் எப்படியாவது விண்ணப்பத்தை விலாசமிட நினைத்தான். வருகின்ற காதலர் தினத்தில் தாங்களும் ஜோடிகளாய் சிறகடிக்க மனம் நாடியது. அதனால்தான் இன்று அவளது வருகையை எதிர்பார்த்து காத்திருக்கிறான். அவள் வரவு அமாவாசையில் பௌர்ணமியைத் தேடுவது போலாகிவிட்டது.  

மனசுக்குள் வேதனைதான். இருப்பினும், காதலர் தினத்துக்கு இன்னும் நான்கு நாட்கள் இருக்கின்றனவே என மனதைத் தேற்றிக் கொண்டு, நாளைய பொழுதும் நமக்காய் விடியும் என்றவாறு வீடு திரும்பினான்.

அடுத்தநாள்...

அலுவலகம் ஆட்களால் ஆக்கிரமிக்கப்பட்டு கொண்டிருந்தது. 'இன்றாவது ...வந்திருப்பாளா?" படபடக்கும் இதயமும் ஏங்கித் தவிக்கும் மனசுமாக நந்தகியைத் தேடி விழிகளை அலையவிட்டான். 'ஆமாம்.. அதோ இருக்கின்றாள்... "தன் காதல் தேவதை கண்களில் சிக்கிவிட்டாள்  என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு  அறைக்குள் நுழைந்தபடி போனிலே அவளை அழைத்தான். எப்போதும் போலவே அன்றும் வந்தாள் நந்தகி. 'நந்தகி  இதுல உட்காருங்க. உங்களோட கொஞ்சம் பேசணும்" அமர்ந்துக்கொண்டு அவனை நோக்கினாள் நந்தகி.

 'எனக்கு சுத்தி வளைச்சு பேசத் தெரியாது. அதனால நான் உன்னோட எம்.டி என்கிற நிலையில் இல்லாமல்... சாதாரண ஒருத்தனாய் நின்னு கேட்கிறேன். நான் உன்னை லவ் பண்றேன் . நீ என்னை ஏத்துக் கொள்வாயா?" அப்பாவியாய் இருந்தவள் சீறினாள்.  'நோ..நோ...சேர். எனக்கு இதில் இஷ்டமில்லை. ஆம் சொரி..." இருக்கையிலிருந்து எழுந்துக் கொண்டாள்  நந்தகி. 'என்ன காரணம்னு நான்  தெரிஞ்சுக்கலாமா?" 'காரணம் சொல்லும் நிலையில் நான் இல்லை. என்னை வற்புறுத்தாதீங்க ப்ளீஸ்..." சொல்லிவிட்டு வெளியேற முயன்றவளை கையமர்த்தினான் விஷ்ணு.

'நந்தகி... உன்னை இன்னைக்கு நேற்றில்லை. நான் எப்போ உன்னைப் பார்த்தேனோ? அன்றிலிருந்து உன்னைக் காதலிக்கிறேன்இதுவரைக்கும் காதல்லயே பிடிப்பில்லாமல் அவாய்ட் பண்ணிவந்த  நான்... உன்னை  பார்த்ததிலிருந்து நீதான் என் மனைவின்னு மனசில எழுதிவைச்சிட்டேன். ப்ளீஸ் நந்தகி... என் காதலை புரிஞ்சுக்கோ..." அவன் நிலை தடுமாற, அவள் பனித்த விழிகளோடு 'கடவுளே... என் நிலைமையைச் சொன்னால் புரிஞ்சுக்க மாட்டேன்னு அடம்பிடிக்கிறீங்களே..." கண்ணீர்த்துளிகள் அவளது கன்னங்களில் கோலமிட்டன.

'ஏய்... என்னடி பொல்லாத நிலமை? என்னை எதுக்காக பிடிக்கலைன்னு சொல்லு? நான் விட்டிடுறேன்..." ஆவேசமாகக் கத்தினான் விஷ்ணு. ' ப்ளீஸ் விஷ்ணு. என்னோட நிலைமை தெரிஞ்சா... என்னை இந்த நிமிஷமே நீங்க தூக்கி எறிஞ்சிடுவீங்க. நான்... நா..ன்... ஒரு விதவை... விஷ்ணு" சேலைத் தலைப்பால் வாயைப் பொத்திக்கொண்டவள் விம்மினாள். இந்தச் செய்தியைக் கேட்டதும் அதிர்ச்சியடைவான் என எதிர்பார்த்தவள் மிரண்டாள்.

'இதுதானா காரணம்? இது எனக்கு ஏற்கனவே தெரிஞ்சதுதான். நந்தகி... நீ என் மனசுக்குள்ள வந்த நாளிலிருந்து உன்னைப் பற்றி எத்தனை கனவு கண்டேனோ? அதேபோல உன் குடும்பம், உன்னோட வாழ்க்கை பற்றி நிறையவே தெரிஞ்சு கொண்டேன். நீ வாழ்ந்த போர்ச்சூழல் உன்னை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ண வைச்சதும், ரெண்டே நாள்ல உன்னோட தாலியை... நீ எறிகணைக்கு காவுகொடுத்ததும் எனக்கு நல்லாவே தெரியும். எனக்கு அது தேவையில்லை. எனக்கு உன்னோட அன்பும்... உன்னோட நல்ல மனசும்தான் வேணும்...தருவியா நந்தகி?" என்றவனை இடைமறித்தாள் நந்தகி.

'ஐயோ விஷ்ணு. நான் கலங்கப்பட்டவ. அதுமட்டுமில்லாமல்... இன்னொருத்தரோட வாழ்ந்தவள். வேண்டாம் விஷ்ணு. உங்க மனசுக்கும், வசதிக்கும்... இந்த கசங்கிப்போன மலர் வேண்டாம். நான் வர்ணம்  இழந்துபோன வானவில். இனி வாழமுடியாதவள்..." மீண்டும் அவள் அழ, அவன் மெதுவாக அவளது கரங்களைப் பற்றினான்.

'நந்தகி... எனக்கு உன்னோட கடந்தகால வாழ்க்கை தேவையில்லை. அதை கிளறவும் நான் விரும்பலை. எனக்கு நீ படுற அத்தனை வேதனைகளும் தெரியும். உன்னோட உடம்பு என்கிறதைத் தாண்டி... மனசுதான் பெருசா தெரியுதுஉன் நினைப்புகளினாலேயே இவ்வளவு மாறிப்போன நான்... நீ எனக்கே கிடைச்சீன்னா...." அதற்குமேல் அவனால் பேசமுடியவில்லை.
'இல்லை விஷ்ணு... உங்களுக்கு எந்த விதத்திலும் பொருத்தமில்லாத என்னைப்போய்..."

'வேண்டாம் நந்தகி. நீ உன்னையே ஏமாத்திக்காத. நான் இப்போ உன்கிட்ட என் காதலைச் சொன்னதுபோல உனக்கு இன்னொரு சர்ப்ரைஸ். என்ன தெரியுமா? நான் உன்னை காதலிக்கிறதை... அப்பாகிட்ட சொல்லிட்டேன். அவர் இப்போ உங்க வீட்டில சம்மந்தம் பேசிக்கொண்டிருப்பார்." இவன் சொல்வதைக் கேட்டு விக்கித்துப் போனாள் நந்தகி.

அப்போது அவன் 'ஏய் நந்து? இப்போவாவது .கே சொல்லும்மா?" என்றுவிட்டு அவள் காதருகில் குனிந்து, 'என்மேல உனக்கு கொஞ்சம்கூட லவ் கிடையாதா?" என்று கேட்டதும், அதுவரை கண்ணீர்த் துளிகளினால் கரைந்துகொண்டிருந்த அவள் விழிகள், அகலமாய் விரிந்தன. வாசலை நோக்கி நகர்ந்தவள், திரும்பி அவனைநோக்கி மெதுவாய் தலையசைத்துவிட்டு ஒரு ஓரப்பார்வையோடு வெளியேறினாள். அந்தக்கணமே விஷ்ணுவின் நினைவுகளும் நந்தகியின் நினைவுகளும் காதாம்பரி இராகத்தில் காதல்பாடல்களை இசைக்கத்தொடங்கிவிட்டன.
 


ramasamy.mullai@gmail.com