கூட்டத்தில் ஒருவன்

நிர்மலன்

நிர்வாகசபைக் கூட்டம் நடைபெறும் கிளப்பின் வாகனத் தரிப்பிடத்தில் கார்களும் வான்களும் பஜிரோக்களும்; நிறைந்திருந்தன. தரிப்பிடத்தின் ஓரமாயிருந்த விறாந்தையில்ட்றைவர்மார் காட்ஸ் விளையாடிக் கொண்டிருந்தனர். மாதாந்தம் இரண்டாவது புதன்கிழமையில் இவர்களும் சந்தித்துக்கொள்கிறார்கள் போல.

இவனுக்குக் களைப்பாகவிருந்தது. அலுவலகம் முடிவடைந்த பின்னர், மூன்று பஸ்களில் மாறிமாறி ஏறி, சனநெரிசலில் வியர்வை பிசுபிசுக்க நசிந்து வந்து, வெள்ளவத்தைச் சந்தியில் இறங்கி, கடற்கரையில் உள்ள இந்தக் கிளப் வரை நடந்து வருவதென்றால் மற்றவர்களுக்கென்ன ஏசி பொருத்தப்பட்ட கார்களிலோ வான்களிலோ பஜிரோக்களிலோ அலுங்காமல் குலுங்காமல் வந்து இறங்கியிருப்பார்கள். கூட்டம் முடிந்த பின் குடித்துத் தள்ளாடினால் அவர்களைத் தூக்கி வாகனங்களில் ஏற்றி வீடுகளில் இறக்கிவிட ட்றைவர்மார் காட்ஸ் விளையாடியபடி காத்திருக்கிறார்களே! தங்களின் சொந்தக் கொம்பனிகளிலிருந்தோ கறுவாத்தோட்ட, பம்பலப்பிட்டிப் பக்கமாயுள்ள சொகுசு வீடுகளிலிருந்தோ நேரத்துடன் வந்திருப்பார்கள். அந்தக் காலத்தில் கல்லூரியில் வெள்ளைக்காரப் பாதர்மாரிடம் கற்ற பங்சுவாலிற்றியை தற்போதும் தாம் கடைப்பிடிப்பதை எண்ணித் தங்கள் ஷேர்ட் கொலர்களை உயர்த்தி விட்டிருக்கலாம். இவனைப் போல அலுவலகம் முடிவடையும் வரை காத்திருந்து, நேரத்தைக் குறித்துத் தரும் இயந்திரத்தினுள் அட்டையைச் செருகி ஒப்பமிட்டு, வெளியே வரவேண்டிய அவசியம் அவர்களுக்கில்லை.

2

இவன் உள்ளே நுழைந்த போது, வழமை போலவே கூட்டம் தொடங்கியிருந்தது. மிஸ்ரர் பிரான்சிஸ் கணக்கறிக்கையை வாசித்துக் கொண்டிருந்தார். இவனுக்குத் தெரியத்தக்கதாய் மிஸ்ரர் பிரான்சிஸ் தான் கல்லூரியின் பழைய மாணவர் ஒன்றியத்தின் கொழும்புக் கிளையின் பொருளாளராய் தொடர்ச்சியாய் இருக்கிறார். இவரென்ன ஆயுட்காலப் பொருளாளரோ? ஆயுட்காலப் பொருளாளர்ஆயுட்காலத் தலைவர், ஆயுட்காலச் செயலாளர் என்று ஒன்றியத்தின் அனைத்து முக்கிய பதவிகளிலும் ஐம்பது வயதைத் தாண்டியவர்கள் தானே அமர்ந்திருந்து அழகு பார்க்கிறார்கள்.

மிஸ்ரர் அன்ரனிப்பிள்ளையின் அருகில் வெறுமையாயிருந்த ஆசனத்தில் அமரப் போனவனிடம்,

யங் மேன் யூ ஆ ஓல்வேஸ் லேட் என்றபடி மிஸ்ரர் பாக்கியநாதர் கணக்கறிக்கையின் பிரதியையும் கையொப்பமிடும் தாளையும் நீட்டினார்.

தாங்ஸ் அங்கிள்

அந்த மண்டபத்தின் மேற்குப்புறம் சுவரில்லாமல் வெளியாய் இருந்தது. கூரையை அழகிய தூண்கள் தாங்கியிருந்தன. இவன் வெளியே பார்வையைச் செலுத்தினான். வெண்மணலில் தென்னைகளுக்குக் கீழே மெல்லிய வெளிச்சத்தில் வட்டமேசைகளில் சுற்றிவர இருந்த சிலர் மெதுவாய்க் கதைத்தபடி குடித்துக் கொண்டிருந்தனர். அருகிலிருந்த நீச்சல் தடாகங்களின் நீலநிறத் தண்ணீரில் ஆண்களும் பெண்களுமாய் நீந்திக் கொண்டிருந்தனர். கிளப்பையும் கடற்கரையையும் பிரிக்கும் கம்பிவலை வேலி நீண்டிருந்தது. வேலிக்கப்பால் கருமையாய்த் தோன்றிய கடலின் மேனியின் இடையிடையே வெண்ணிறக் கோடுகளாய் தோன்றிய அலைகள் கரையை நோக்கி வந்தன.

மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்குமிழ்கள் உமிழ்ந்த ஒளிக்கதிர்கள் கூட்டத்திலிருந்த பலரின் வழுக்ககைத் தலைகளில் பட்டுத் தெறித்தன.

1.
படுகதிர், தெறிகதிர், படுபுள்ளியிலுள்ள செவ்வண் இவை மூன்றும் ஒரே புள்ளியில் சந்திக்கும்
2.
படுகதிர் செவ்வணுடன் அமைக்கும் கோணமாகிய படுகோணம், தெறிகதிர் செவ்வணுடன் அமைக்கும் கோணமாகிய தெறிகோணத்திற்குச் சமனாகும்.

பத்தாம் வகுப்பில் சயன்ஸில் ஞானப்பிகாசம் மிஸ்ஸிடம் படித்த, ஒளித்தெறிப்பு விதிகள் இவன் நினைவுக்கு வந்தன. ஒப்பமான மேற்பரப்புக்கு மட்டுந்தான் இரண்டாவது விதி பொருந்துமென்றால் இவர்களின் வழுக்கைத் தலைகள் ஒப்பமானவையா? இவனுக்கு இலேசாகச் சிரிப்பு வந்தது.

வரவு-செலவு அறிக்கையைப் புரட்டிப் பார்த்தான். ஒன்றியத்தால் இரண்டு வாரங்களுக்கு முன்ஹொட்டேல் ட்ரான்ஸ் ஏசியாவில் நடத்தப்பட்ட கிறிஸ்மஸ் டினர் டான்ஸ் வைபவத்தின் வரவு-செலவுகளை, மிஸ்ரர் பிரான்சிஸ் தானொரு ஓய்வுபெற்ற பட்டயக் கணக்காளர் என்பதை எல்லோருக்கும் நினைவுபடுத்தவோ, என்னவோ நவீன கணக்கியல் முறைகளைப் பயன்படுத்தி தயாரித்திருந்தார். அறுபது பக்கங்களைக் கொண்ட நூலாய் அவ்வறிக்கை ஆங்கிலத்தில் அமைந்திருந்தது. அறிக்கையின்படி பல ஆயிரம் ரூபாய் பலரிடமிருந்து வருமதியாயிருந்தது. அவற்றை வசூலித்தால் இலாபமாக ஆயிரத்து முன்னூறு ரூபாய் தேறும். இவனுக்கு அதிர்ச்சியாயிருந்தது. மடையர்கள்! குடியும் சாப்பாடும் கேளிக்கையும் தான் இவர்களுக்கு முக்கியமாகிப் போனவையா? இன்றுடன் இவ்வொன்றியத்திலிருந்து விலகிவிட வேண்டுமெனத் தீர்மானித்தான்.

ஆளுக்கு ஆயிரம் ரூபாய் சேர்த்துக் கொடுத்திருந்தாற் கூட அந்தப்பிள்ளைகளுக்கு ஒரு மாதத்திற்கு சாப்பாடு கொடுத்திருக்கலாமே!


3

அன்பான பழைய மாணவர்களே!
என்று ஆரம்பித்திருந்த இவனது கல்லூரி அதிபரின் ஈமெயில்
யாழ்ப்பாணத்தை நாட்டின் ஏனைய பகுதிகளுடன் இணைக்கும் பிரதான பாதை மூடப்பட்ட தற்காலச் சூழ்நிலையில் கல்லூரிச் சிறார்களில் பலர் போதிய உணவு உட்கொண்டு வராமையால் தினமும் வகுப்பறைகளில் மயங்கி விழுகிறார்கள். இதனால் அனைத்து மாணவர்களுக்கும் சமைத்த உணவு கல்லூரியால் வழங்கப்படுகிறது. இதற்காக தினமும் ஐயாயிரம் ரூபாயளவில் செலவு செய்ய நேரிடுகிறது. கல்லூரியின் நிதிநிலைமையில் இத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பது இயலாத விடயம். எனவே பூமிப் பந்தெங்கும் பரந்து வாழும் கல்லூரியின் பழைய மாணவர்களே, உங்கள் சகோதர்களுக்கு உணவளிக்க உதவிடுவீரெனத் தொடர்ந்து,
இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக
இறைபணியிலுள்ள
வண.பிதா அன்ரன் அருமைநாயகம்
என நிறைவடைந்திருந்தது.


அன்றும் அலுவலகம் முடிவடைந்து, இவன் கூட்டத்திற்குப் போனபோது, அது ஆரம்பமாகியிருந்தது. பசியால் வாடும் கல்லூரி மாணவர்களுக்கு உதவி புரிய நிதிதிரட்டுவதற்காய் கிறிஸ்மஸ் டினர் ஒழுங்கு செய்வது பற்றிக் கலந்துரையாடினர். நட்சத்திரக் ஹொட்டேல்களில் சாப்பிடுவதையும் குடிப்பதையும் தவிர வேறெதையும் பற்றிச் சிந்திப்பதற்குக் கூட இந்தப் பழசுகளுக்கு இயலாமலிருப்பது பற்றி இவனுக்கு வேதனையாயிருந்தது.

டினர் டான்ஸைத் தவிர்த்து நிர்வாகக் குழுவிலிருப்பவர்களிடம் தலா இரண்டாயிரமும் பொதுக்குழுவிலிருப்பவர்களிடம் ஆயிரம் ரூபாயும் சேகரித்து அனுப்புவது சிறந்ததென இவன் சொன்னபோது பலர் ஏளனமாய்ச் சிரித்தார்கள். ஒருவர் கூட இவனுக்கு ஆதரவாய்க் கதைக்கவில்லை.

டினர் டான்ஸின் மூலம் குறைந்தது ஐந்து இலட்சமாவது சேகரிக்கலாமெனவும் ஆட்களிடம் பணம் சேர்த்தால் இருபத்தையாயிரத்திற்குக் குறைந்த தொகையைத்தான் சேகரிக்கலாமென்றும் ஆங்கிலத்தில் மிஸ்ரர் பிரான்சிஸ் சொன்னார். புதிய தலைமுறையினர் நவீன பாணியில் சிந்தித்துத் செயற்படவேண்டுமென்று மிஸ்ரர் அலோசியஸ் இவனுக்கு இலவச ஆலோசனை கூறினார்.

டினர் டான்ஸின் நினைவாக சிறப்பு மலரொன்று வெளியிடுவதென்றும் அதிலே விளம்பரங்களை பிரசுரிப்பதன் மூலம் பெருமளவு பணத்தைத் திரட்டலாமென்றும் மிஸ்ரர் அன்ரனிப்பிள்ளை சொன்னார். நிர்வாகத்திலுள்ளவர்கள் சிறப்பு மலருக்கு ஆளுக்கு இரண்டு விளம்பரங்களையாவது சேகரித்துத் தந்து, மூவாயிரம் ரூபாய் பெறுமதியான டினர் ரிக்கெட்டுக்களில் பத்தினை விற்க வேண்டுமெனவும் தீர்மானித்துக் கூட்டம் கலைந்தது.


ஹொட்டேல் ட்ரான்ஸ் ஏசியாவின் போல் றூம்கல்லூரியின் வர்ணங்களைக் கொண்ட சோடனைகளாலும் பலூன்களாலும் எழிற்கோலம் பூண்டிருந்தது. மண்டபத்தின் நடுவில் பெரிய கிறிஸ்மஸ் மரம் வர்ண விளக்குகளால் ஒளிர்ந்தது. அதனடியில் சிறிய குடிலில் பாலகன் யேசு.

வட்டமேசைகளில் தூய வெண்ணிறத் துணிகள் விரிக்கப்பட்டிருந்தன. அவற்றைச் சுற்றி கோர்ட் அணிந்த ஆண்களும் விலையுயர்ந்த ஆடையணிந்த பெண்களும் அமர்ந்திருந்தார்கள். மேலைத்தேய இசை காற்றில் கலந்தொலித்தது.

சைலன்ட் நைட், ஹோலி நைட்…’
ஒரே மாதிரியான அழகிய ஆடையணிந்த சிறுவர் சிறுமியர் கிறிஸ்மஸ் மரத்தினடியில் நின்று கரோல் கீதங்களை இசைத்தனர். இன்ரர்நஷனல் ஸ்கூல்’;களில் படிக்கின்ற மிஸ்ரர் பிரான்சிஸ், மிஸ்ரர் அலோசியஸ், மிஸ்ரர் அன்ரனிப்பிள்ளை………..ஆட்களின் பேரப்பிள்ளைகள் போல. ஏழ்மைச் சூழலில் மாட்டுத் தொழுவத்தில் பிறந்த பாலகன் யேசுவை நட்சத்திர ஹொட்டேலின் ஆடம்பரச் சூழலில் இக்குழந்தைகள் வரவேற்றுப்பாடுகிறார்களே, அவர் வருவாரா? அவர்களுக்கு அருகிலிருந்த குடிலை எட்டிப் பார்த்தான். பலருக்கும் அலங்காரப் பொருள்போல் ஆகிவிட்ட பாலகன் யேசு, மந்தைகள் சூழ நிற்க கன்னி மரியாளின் மடியில் உறங்கியிருந்தார். யாழ்ப்பாணத்திலுள்ள இவனின் கல்லூரியில் பசியால் மயங்கி விழும் சிறார்களின் நினைவு இவன் மனதில் வந்தது.

ஐரோப்பாவிலிருந்து மறைபணியாற்ற வந்த துறவிகளால், ஒன்றரை நூற்றாண்டுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட கல்லூரி. பச்சைப் பசேலென்ற புல்வெளி நிறைந்த மைதானத்தில் கடற்கரைப் பக்கமிருந்து குபுகுபுவெனச் சோளகக் காற்று வீசும். கம்பீரமான நிமிர்ந்து நிற்கும் கட்டடங்கள். ஓங்கி வளர்ந்த மலை வேம்புகள். எட்டு வருங்களுக்கு முன் இவன் கற்ற கல்லூரி. இவன் மட்டுமா அங்கு கற்றான்? உலகம் போற்றும் பலர் கூட அங்கு தானாமே கற்றார்கள். இன்று அங்கு உணவுக்கு வழியின்றி பசியால் மயங்கி விழும் சிறார்கள் அவர்களுக்கு உணவளிக்க பழைய மாணவரிடம் உரிமையுடன் கையேந்தும் கல்லூரி அதிபர்.

மேசைகளில் மதுப்போத்தல்கள் நிறைந்திருந்தன. இளம் பெண்களைக் கொண்ட நடனக் கோஷ்டியொன்று பாண்ட் இசைக்கேற்ப நடனமாடியது. இந்தடான்ஸ் குறூப்பை தனது அலுவலகச் சிங்கள நண்பர் மூலமாய் சீப்பாய்ப் பிடித்ததாக மிஸ்ரர் பாக்கியநாதர், பெருமை பொங்க இவனிடம் சொன்னார். ஓ! மிஸ்ரர் பாக்கியநாதருக்கும் பல இடங்களிலும் செல்வாக்கு இருக்கிறது போல.

மிஸ்ரர் அன்ரனிப்பிள்ளையும் மிஸ்ரர் லோரன்ஸ்ம் தங்கள் பருத்த வண்டிகளை தூக்கியபடி நடனக் கோஷ்டிக்கு அருகிற் சென்று நடனமாடியது இவனுக்குச் சிரிப்பாயிருந்தது. பரிசாரகர்கள் வெற்றுப்போத்தல்களை எடுத்து புதிய போத்தல்களை மேசைகளில் வைத்தனர். சிலர் பெரிதாய் தங்களுக்குள் ஜோக் சொல்லிச் சிரித்தனர்.

பாலகன் யேசுவின் வருகையை மதுவருந்திக் களிக்கின்றனரோ? மூன்றாம் வகுப்பில் முதல் நன்மை பெறுவதற்கு ஆயத்தப்படுத்திய காலங்களில் கண்ணாடியணிந்த சிஸ்ரரின் பிரம்புக்குப் பயந்து பாடமாக்கிய பத்துக் கட்டளைகளை மனதில் சொல்லிப் பார்த்தான். அவற்றுடன்மதுவருந்தாமல் இருப்பாயாக! என்பதனையும் சேர்த்து திருச்சபை பதினொரு கட்டளைகளாக்கினால், இவர்கள் மதுவருந்தாமல் விடுவார்களோ?

பெரும்பாலான ஆண்கள் குடித்தபடி பழைய கதைகளைக் பேசியபடியிருக்க சிறார்களும் பெண்களும் சாப்பிடத் தொடங்கியிருந்தனர்.

பல விதங்களில் சமைக்கப்பட்ட இறைச்சி வகைகள், மீன் வகைகள், நூடில்ஸ், இடியப்பம், புரியாணி, பிரைட் றைஸ், … இன்னும் இவனுக்குப் பெயர் தெரியாத உணவு வகைகளால் ஃபுஃவே நிறைந்திருந்தது.

கிறிஸ்மஸ் மரத்தினடியில் ஆண்களும் பெண்களுமாய் சோடியாய் இசைக்கேற்ப நடனமாடினர். மின்விளக்குகள் பல்வேறு வர்ண ஒளிகளை உமிழ்ந்தன.

பசியால் மயங்கி விழும் சிறார்களுக்கு உணவளிக்க குடித்து விருந்துண்டு நடனமாடிப் பணம் சேர்க்கிறார்களே! இக் கூட்டத்தில் தானுமொருவன் என்ற நினைப்பெழ தன் மீதே இவனுக்கு வெறுப்பாயிருந்தது. நூடில்ஸை கரண்டியால் எடுத்தவன் அதைக் வாயினுள் வைக்காமல் மீண்டும் கோப்பையினுள் இட்டான்.


4

யங் மேன் வாட் ஆ யூ திங்கிங் என்று மிஸ்ரர் அன்ரனிப்பிள்ளை இவனைப் பார்த்துக் கேட்ட போது, சிந்தனைகள் கலைய அவரைப் பார்த்துப் பூன்னகைத்து சபையை நோக்கினான்.

மிஸ்ரர் பிரான்சிஸ் கணக்கறிக்கையை வாசித்து முடித்த களைப்பில் மேசையில் இருந்த மினரல் வோட்டரைக் குடித்தார். கிளப்பின் பணியாள் மேசைகளில் போத்தல்களையும் கிளாஸ்களையும் அடுக்கத் தொடங்கினான்.

வருமதியாகவுள்ள மிகுதிப் பணத்தை உடனடியாகச் சேகரிக்க வேண்டுமெனவும் இலாபமாய்க் கிடைக்கக்கூடிய ஆயிரத்து முந்நூறு ரூபாவுக்கான செக்கை மறுநாளே பதிவுத் தபால்மூலம் அதிபருக்கு அனுப்பி வைப்பதாக தலைவர் அலோசியஸ் மகிழ்ச்சி பொங்கச் சொன்னார். கூட்டத்திலிருந்தவர்கள் கரகோஷம் செய்தனர்.

இவனுக்கு தொடர்ந்தும் அங்கிருக்கப் பிடிக்கவில்லை. வெறுப்பாயிருந்தது. இவர்கள் இனிக் குடித்துக் கூத்தாடி வீடுகளுக்குத் திரும்பும் வரை இவனும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், இளைய தலைமுறையினரிடம் ஒத்துப்போகும்தன்மை, சமூகஇசைவாக்கம் என்று... விடயங்கள் அற்றுப் போய்விட்டதாக ஆங்கிலத்தில் புலம்புவார்கள்.

இவன் தலையை மேற்குத் திசையை நோக்கித் திருப்பி நீச்சல் தடாகங்களை வேடிக்கை பார்க்கத் தொடங்கினான்.


.
mukunthan72@gmail.com