கடவுள் சிறை

ஆத்மார்த்தி

அந்த ஊரின் நடுவாந்திரத்தில் ஒரு வட்ட வடிவப் பூங்கா இருந்தது.அதன் வடக்குப்புறத்தில் இருந்த புராதனமான வழிபாட்டுத் தலமொன்று பன்னாட்டு நிறுவனங்களின் பராமரிப்புக்குப் பின் அதன் பழமை முகம் மாறி நவீனமான அல்கோபேனல் பூர்த்தியுடன் மின்னத் தொடங்கியிருந்தது. அதன் காரணமாக அந்த ஊருக்கு வருகை புரியக்கூடிய தேசாந்திரிகளின் எண்ணிக்கை கூடலாயிற்று. மத நம்பிக்கைகளுக்கு வலுக்கூட்டும் ஒரு செயல்பாடாக பழமைவாதிகளும் முதிர்மனிதர்களும் சற்று ஒதுங்கி இருக்க, இளைஞர் பட்டாளம் ஒன்று அந்த வழிபாட்டுத் தலத்தைத் தம் பொறுப்புக்கு ஏற்றுக்கொண்ட போது விமர்சனங்களும் கண்டனங்களும் தெரிவித்தவர்களும் கூட
முழுக்க வண்ணமயமான அல்கோபேனல் பூர்த்தியுடனான அதன் வெளித்தோற்றத்தைக் கண்டு வியந்து தான் போயினர்.

ஒரு முறை உள்ளூர்க்காரர்கள் கூட உள்சென்று பார்க்கவே விழைந்தனர். பன்னாட்டு நிறுவனமொன்றின் பதிவு அலுவலகத்தினுள் நுழைந்தாற்போல் ஒரு உணர்வு ஏற்பட்டது. முழுவதும் ஏர்க்கண்டிஷன் செய்யப்பட்டிருந்த வழிபாட்டுத் தலத்தின் முகப்புப் பகுதியில் விஸ்தாரமான வரவேற்பறை அமைக்கப்பட்டிருந்தது.அதன் மூலையில் இருந்த ராட்ஷச எல்.சீ.டி திரையில் அந்தத் தலத்தின் ஏழு தளங்களில் கிட்டக்கூடிய பல்வேறு வசதிகள் பற்றின விளம்பர வீடியோ ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. உள்ளே வருகிறவர்கள் அனைவரும் தானியங்கி கன்வேயர் பெல்ட்களின் மூலமாகச் சிரமமின்றி அத்தலத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் செல்ல முடிந்தது.

வரவேற்பறையின் மூலையில் இருந்த யுவதிகள் மௌனமாய் அதே சமயத்தில் வசீகரமாயும் புன்னகைத்துக் கொண்டே இருந்தார்கள். உள்ளே வரக்கூடியவர்கள் ஒவ்வொருவரின் விபரங்கள் அனைத்தையும் டச் ஸ்க்ரீன் கம்ப்யூட்டரில் உள்ளீடு செய்துகொண்ட பின்னர் வெறுமனே சுற்றிப்பார்க்க வந்தவர்களுக்கு மஞ்சள் நிற டோக்கனையும், வழிபாட்டுக்காக வந்திருப்பவர்களுக்கு சிகப்பு நிற டோக்கனையும் கொடுத்தனர்.     பரிதியும், அவருக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்த கனாவையும் பார்த்துப் புன்னகையுடன் அவர்கள் விவரங்களைக் கேட்டாள் வரவேற்பு
யுவதி.

"உங்கள் பெயர்,ஊர் மற்றும் விலாசம் சொல்லுங்கள்.."
பரிதி சொன்னார்"நான் பரிதி.இது கனா.. இருவருக்கும் பூர்வீகம் தமிழ்நாடு. வசிப்பது அமெரிக்காவில்."
"உங்கள் உறவுமுறை..?"
"என் மனைவி இவள்"
அதனை பதிவு செய்து கொண்ட வரவேற்பு யுவதி"இந்த வழிபாட்டுத் தலத்திற்கு வருகை புரிந்ததன் காரணம்..?"
கனா லேசான சிரிப்புடன் சொன்னாள் "நீண்ட நாட்களுக்குப் பின் தாய்நாடு வருகிறோம்.எங்கள் முன்னோர்களுக்கு ஒரு நேர்த்திக்கடன் இருந்தது. அதை நிறைவேற்றுவதற்காக வந்துள்ளோம்."
அதன் பின் அவர்களது விலாசம் இன்ன பிறவற்றை எல்லாமும் பதிந்து கொண்டு, பதிவுக்கட்டணம், வழிபாட்டுக்கட்டணம்,நேர்த்திக்கடன் கட்டணம் என ஒரு தொகையை வரிகளுடன் பெற்றுக் கொண்டு, ஆன்லைன் பேமெண்டுக்கான ரசீதைக் கொடுத்து அவர்களை முதல் தளத்திற்கு செல்லும்படி சொன்னாள். லிஃப்டில் ஏறி முதல் தளத்தில் நுழைந்தனர். அங்கே வரிசையாக போடப்பட்டிருந்த குஷண் நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு எதிர்சுவற்றில் தெரிந்த திரையில் ஒளிபரப்பான சமீபத்தில் ரீமிக்ஸ் செய்யப்பெற்ற ஒரு பழைய பக்திப்பாடலை ஆர்வமாக கவனிக்கலாயினர் இருவரும். கொஞ்ச நேரத்தில் இன்னொரு யுவதி வந்தாள்.

"வணக்கம்...திருவாளர் மற்றும் திருமதி பரிதி..."
"நாங்கள் தான்.."
"என் பெயர் யோ. இந்த வழிபாட்டு உலா முழுவதும் தங்களுக்கு உடன் உதவி புரிவது என் வேலை. நான் உடன் வருவதில் எதுவும் ஆட்சேபம் உண்டா..?"
"இல்லை யோ... சொல்லப்போனால் எங்களுக்கு மகிழ்ச்சியே.."என்றாள் கனா.
"வாருங்கள்... இரண்டாவது தளத்திற்குப் போகலாம்" என்று கனாவின் கை பற்றி அழைத்துச் சென்றாள் யோ. பின் தொடர்ந்து விரைந்தார் பரிதி. எஸ்கலேட்டர் அடுத்த தளத்தில் அவர்களைத் துப்பியது. விஸ்தாரமான அந்த தளத்தின் நடுவாந்திரத்தில் ஒரு அரைவட்ட மேசையின் பின் புறம் ஒரு துறவி அமர்ந்திருந்தார்.அவர் முழுக்க ஐரோப்பிய பாணி உடைகளில் இருந்தார். அவர் ஒரு துறவி என்பது அவர் மழிக்காமல் பாதி டையை மறைக்குமாறு தொங்கிக்கொண்டிருந்த அவரது வயலட் நிறத் தாடியைப் பார்க்கையில் பரிதிக்கு புரிந்தது. கனாவை அவர் அர்த்த பார்வை பார்த்தார். அவளும் மௌனமாக ஆமோதித்தாள்.ஏன் எனில் அந்த நாட்டில் பொதுக்குடிமக்கள் தாடி வளர்ப்பது தடை செய்யப்பட்டிருந்தது. மீறி வளர்த்தால் அரசாங்கமே அரசரோபோக்களை அனுப்பி கட்டாய ஷேவிங் செய்துவிடும். அதுவும் குறிப்பிட்ட முறைகள் மட்டும் தான். மீண்டும் மீண்டும் ஒருவர் தாடி வளர்ப்பது தெரிந்தால் அரசரோபோக்கள் கட்டாய ரோமநீக்க தண்டனையை வழங்கி விடுவர். அதன் பின் ஒருவருக்கு தாடி, தலைமுடி, மீசை என எல்லாமும் வழுக்கை ஆகிவிடும்.

அந்தத் துறவி அவர்களை கருணையோடு பார்த்தார். சைகையாலேயே தனக்கெதிரே இருந்த சிந்தெடிக் சோஃபாவைக் காட்டி அவர்களை அமரச் செய்தார். தன் முன்னால் இருந்த தெர்மல் ஃப்ளாஸ்கை திறந்து அதிலிருந்து ரோஜாவாசனையுடன் கூடிய புனித நீரை எடுத்து பரிதி மீதும் கனா மீதும் தெளித்தார். அவர்களுக்குச் சிலிர்ப்பாயிருந்தது. பொங்கும் கருணையுடன் அந்தத் துறவி மெல்லப் புன்னகைத்தார்.
"பரிதி,கனா,இருவரும் நலமா..?"என்றார்.
"நலமாயிருக்கிறோம் குருஜி.."
"குருஜி என்பது பழைய வார்த்தை. குருவும் சிஷ்யர்களுமற்ற சீ ப்ளஸ் ப்ளஸ் சித்தாந்தத்தின் ப்ரஜைகள் நாம்... உங்களுக்குத் தெரிந்ததே உண்மையான உண்மை. இதில் குரு என்பது யாருமில்லை. என்னை நீங்கள் துறவி 666 என்று அழைக்கலாம். என் பெயர் அதுதான்" என்றார். கண்களை மூடிக்கொண்ட பரிதி, மௌனமாக அமர்ந்திருக்க, கனாவை வாஞ்சையுடன் பார்த்த துறவி 666 "கனா...இங்கே நீங்கள் வந்ததற்கு எதுவும் வேண்டுதல் காரணமா..?"
பரிதி அமைதியாயிருக்க கனா சொன்னாள் "வேண்டுதல் என்று ஒன்றும் இல்லை." துறவி பதிலளித்தார் "கனா,உங்களுக்கு உளவியல், சித்தாந்தம், மதம், மார்க்கம், நாத்திகம், மருத்துவம் என்று பலதரப்பட்ட துறைகளில் ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய ஆறாவது தளத்தில் நிபுணர்களுடன் வீடியோ கான்ஃரென்சிங்க் செய்ய முடியும். அதே போல என்ன மாதிரியான கடவுளை நீங்கள் வழிபட விரும்புகிறீர்கள் என்பதை ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் நிரம்பிய கேலரியிலிருந்து சூஸ் செய்து கொள்ளலாம். உங்களுக்குப் பிடித்தமான கடவுளின் சிந்தெடிக் உருவத்தை நீங்கள் தொட்டுணர்ந்து வழிபடும் வசதிகளும் இங்கே உண்டு. அந்தக் கடவுள் உங்களிடம் பேசவேண்டுமென நீங்கள் விரும்பினால் அதையும் நிறைவேற்றிக்கொள்ளலாம். வேறெந்த வகையில் நான் உங்களுக்கு உதவ முடியும்..?"என்றார்

அதற்கு வறண்ட தனது செயற்கைப் புன்னகை ஒன்றை பதிலாக தந்த கனா சொன்னாள் "துறவி.... இவருக்கும் எனக்கும் வரவேண்டிய ப்ரமோஷன்கள் எல்லாமும் வந்துவிட்டன. எங்களுக்கு அரசாங்கத்தின் புண்ணியத்தில் நல்ல சம்பளமும், சகல வசதிகளும் இருக்கின்றன.ஆனால் எங்களுக்கு ஒரே ஒரு குறை தான்.எங்கள் இருவருக்கும் பிறந்த ஒரே மகன் வீவீ. அவன் அரசபள்ளியில் படித்தான். இப்பொழுது அரச கல்லூரியில் மேற்படிப்புபடிக்கிறான். அவனுக்கு அரசதர்மப்படி இன்னும் சில வருடங்களில் நியா என்ற பெண்ணுடன் திருமணம் ஆகும். நான் எனது 88ஆவது வயதிலும், இவர் தனது 90ஆவது வயதிலும் ஒரே தினத்தில் அரசகட்டளைப்படி கொல்லப்படுவோம். அரசதிட்டப்படி எல்லாமும் ஸ்மூத் ஆகப் போய்க்கொண்டிருக்கிறது தான்... இருந்தாலும் இவர் மனதில் சமீபகாலமாய் ஒரு குறை."
என்று பரிதியைப் பார்க்க அவர், சொகுசான வாட்டர்குஷன் சோஃபாவில் கொர்ரென்று குறட்டை விட்டு உறங்கிக்கொண்டிருந்தார். அவரை லேசாகக் கிள்ளி எழுப்பினாள் கனா. பதறியபடி எழுந்த பரிதி,"எனக்கு ஐம்பது வயசு தான் ஆகிறது. இன்னமும் நாற்பதாண்டுகள் கழித்து தான் என்னைக் கொல்லமுடியும்"என்றார். சொன்னவர் தானிருக்கும் இடம் பொருளைக் கவனித்து தனக்குள்ளாக வெட்கினார்.

 "பரிதி உம் மனதில் இருக்கும் குறை என்ன...?"என்றார் துறவி.
."என் முன்னோர்கள் இங்கே இதே ஊரில் வசித்தவர்கள். அப்பொழுதெல்லாம் இந்த இடத்தில் கோயில் என்கிற பெயரில் வழிபாட்டுத்தலம் இருக்குமாம். அழகான கடவுள்கள் சிலைகளாக வீற்றிருப்பார்களாம். அதில் ஒரு கடவுள். ஆக்சுவல்லி எனக்கு பேர் மறந்து விட்டது. பட் அந்த கடவுளின் டெஸ்க்ரிப்ஷன் தெரியும். ஒரு மனித உடல் பட் தலை மட்டும் எலிஃபேண்ட் அதாவது யானை தலையுடன் இருக்குமாம். பார்ப்பதற்கு அழகாக இருக்கும் என கேள்விப்பட்டிருக்கிறென். அந்த கடவுள் சிலை அல்லது படத்தை ஒரு முறை பார்க்க வேண்டும் அது தான் என் மனதில் இருக்கும் குறை."
சிரிக்கலானார் துறவி
666."அய்யா பரிதி.. நீங்கள் அரசுபணியில் இருக்கும் விஞ்ஞானி .நானோ அரசதுறவி 666.உங்களுக்கு தேவையான விதவிதமான கடவுள்கள் இங்கே கிடைப்பார்கள். தொட்டு உணரக்கூடிய சிந்தெடிக் கடவுள்கள், கார்ட்டூன் கடவுள்கள், ரப்பர் தெய்வங்கள், பாலிவினைல் உருவங்கள்,ரோபோக்கள் என அறிவியலின் அத்தனை சாகசங்களையும் கொண்டு உருவாக்கப்பட்ட வழிபாட்டு தலம் இது. ஆனால் நீங்கள் கேட்பது அரசவிரோதம். தடை செய்யப்பட்ட பழைய தெய்வங்கள் இங்கே மட்டுமல்ல வேறெங்கேயும் உங்களால் பார்க்கவியலாது."

 பெருமூச்சுடன் எழுந்தார் பரிதி.யோ முன்னே நடக்க பின்னே தொடர்ந்தாள் கனா. மூன்றாம் மற்றும் நான்காம் தளங்களில் துறவி 666 முன்னமே சொன்ன வினைல் சிந்தெடிக் தெய்வங்களை வரிசையாக கண்டு களித்துவிட்டு மெல்ல லிஃப்டில் ஏறி ரூஃப் டாபில் இருந்த மல்டி குசைன் ரெஸ்டாரெண்டுக்குள் நுழைந்தார்கள். இயற்கை என்பதன் சாட்சிகாட்சியாக வானம் மட்டுமே விஞ்சி இருந்ததை அங்கலாய்த்தபடி பார்த்தவர்கள் அவரவர்க்கு தேவையான உணவுகளை வரவழைத்து சாப்பிட்டார்கள். யோ இவர்களுடன் கலந்து கொள்ளவில்லை. முதல் நிலை ரோபோவாக யோ இருக்கக்கூடும் என்று இருவரும் தங்களுக்குள் ரகசியமாக சொல்லிக் கொண்டனர். அப்பொழுதும் பரிதி தனக்குள் மெல்லிய குரலில் சொல்லிக் கொண்டார்.

"இங்கே பார்க்க முடியும் என்று மினு சொன்னாளே... முடியவில்லையே" என்று.
தங்களுக்கு வேண்டிய திரவ வகைகளைச் சப்பிவிட்டு கீழிறங்கினார்கள் பரிதிக்கு திடீர் என அவரது ரிஸ்ட்போனில் ஒரு அழைப்பு வந்தது. ரகசியக் குரலில் பேசினார்."அப்படியா..நல்லவேளை நீ ஃபோன் செய்தாய்."எல்லை கொள்ளாத சிரிப்புடன் அழைப்பை துண்டித்து விட்டு கனாவிடம் சொன்னார்.

"கனா...,நீ கீழே சென்று நம் காரில் காத்திரு. நான் பின்னாலேயே வந்து விடுகிறென். ஐந்தாவது மாடியில் எனக்கொரு சின்ன வேலை. முடித்துவிட்டு வந்துவிடுகிறேன்."என்றார்.
கனா புரிந்தும் புரியாமலும் கிளம்பிச்சென்று வாசலில் வெளியேறி தங்கள் காருக்கு வந்து உள்ளே அமர்ந்துகொண்டு ஏசியை சீறவைத்தாள். ம்யூசிக் ப்ளேயர் அலறியது. கண்களை மூடிக் கேட்டுக்கொண்டிருந்தவள் திடீரென்று மிதப்பதைப் போல் உணர்ந்தாள்.டக்கென விழித்துப்பார்த்தால் பரிதி ஓட்டிக்கொண்டிருந்தார்."எப்போது வந்தீர்கள்..?"
"இப்போதான் என் மல்லிகையே.."என்றார் பரிதி உற்சாகமாக
அவரது புதிய மகிழ்ச்சிக்கு காரணம் புரியாமல் ":என்ன திடீர்னு கிளம்பிப் போனீர்கள்....?"
ஒரு ஆளற்ற சாலையில் சடர்ன் ப்ரேக் அடித்து வாகனத்தை நிறுத்திய பரிதி... நான் பார்த்தேன் கனா.... இத்தனை நாளாய் எந்தக் கடவுள் சிலையைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தும் ஒரு முறை கூடப் பார்க்காமல் இருந்தேனோ, அதைப் பார்த்தே விட்டேன்.. எப்படி இருந்தது என உனக்கு சொல்லக்கூட முடியாது. அவ்வளவு பழசாக இருந்தது. ஐந்தாவது மாடியில் ஒரு இருட்டு அறையில் இருந்த அந்த கடவுள்சிலையைக் கடைசியில் பார்த்தே விட்டேன்."என்றார் சந்தோஷமாக.கனா பெருமூச்சொன்றை விட்டாள்.
"எப்படி திடீரென்று பார்க்க முடிந்தது..?"
"ஃபோன் செய்து என்னை வரச்சொன்னவள் யோ. அவள் தான் என்னை சப்தமில்லாமல் அந்த இருளறைக்கு அழைத்துச் சென்று காண்பித்தவள்."
"உங்கள் புலம்பல் கேட்டு மனம் இறங்கினாளா யோ..?"
"நீ வேறு... இந்த இருபத்தைந்தாம் நூற்றாண்டில் பழைய கடவுள்களைக் கூடத் தடை செய்துவிட்ட சர்வபல அரசாங்கத்தால் தடுக்கவே முடியாத ஒன்றும் உண்டு தெரியுமா..?"
கனா கேட்டாள்.."அப்படி என்ன அது..?""
"யோ எனக்குச் செய்தது உதவி அல்ல...ப்ரதிபலன்..."என்று அட்டகாசமாய்ச் சிரித்தவர் சொன்னார்.."லஞ்சம்... புராதனமானது.. ஒழிக்க ஒழிக்க முளைத்துக்கொண்டே இருப்பது."


          
aathmaarthi@gmail.com