செல்போனின் மௌனம்

இந்திராஅலங்காரம்

கனவில் அலாரம் அடிப்பது போல இருந்தது.  திடுதிப்பென விழித்ததில் ஒரு கணம் எதுவுமே புரியவில்லை.  லேசான செவ்வானத்துடன் சளசளவென மழை பொழிந்து கொண்டிருந்தது ஜன்னலில் தெரிந்தது.  இன்று காலை வைகையைப் பிடித்து திருச்சிக்குச் செல்ல வேண்டும்.  மாப்பிள்ளை வீட்டுக்கு, வீடு பார்க்க வருவதாய் கூறியிருந்தோம்.

இந்த திட்டத்தை ஒத்திப் போட்டு விடுவோமா என்று கூட நினைக்க வைத்தது அசதியும் தூக்கமும். வாய்ப்பேயில்லை.  தங்கைகள், அம்மா, அத்தை அனைவரின் குரலும் கேட்டது பக்கத்து அறையில்.  கதவு இடுக்கின் வழியே டியூப் லைட் வெளிச்சம் கசிந்து வந்து கொண்டிருந்தது.

குமாரை எழுப்பினேன்.   குளிருக்கு ஒருக்களித்து சுருட்டிப் படுத்துக் கொண்டிருந்தார்.  காலை ஏழு மணி வரைக்கும் தூங்குவதில் குமாருக்கு அப்படியொரு திருப்தி.  இன்று அதிகாலை மூன்று மணிக்கு எழுப்புவதற்கு கஷ்டமாக இருந்தது.  வேறு வழியில்லை.  விழித்துக் கொண்டார்.  கொசுவலையிலிருந்து வெளியே வந்து லைட்டைப் போட்டேன். 

‘கட்டாயம் போகனுமா?, பாபர் மசூதி வழக்குல இன்று  தீர்ப்பு சொல்லப் போறாங்க?’ என்றார். 

“நாளை மாலை 3.30க்குத் தான்”. 

“நாளைக்கு ஒரு ஜட்ஜ் ரிடையர்டு ஆகப் போறார். அதனால இன்னைக்கே சொல்லுவாங்க” என்றார். 

“இல்லை டி.வி செய்திய நேத்து நைட்டே பார்த்துட்டேன் நாளைக்குத்தான்னு சொன்னாங்க” என்றேன்.

“சரி, உங்க இஷ்டம்”

நாங்கள் இரண்டு பேரும் சுடு தண்ணீர் வைத்துக் குளிக்க வேண்டும்.  பாத்ரூமில் நாய்க்குட்டியின் மூச்சா, கக்காவைப் பார்த்து முகத்தைச் சுழித்துக் கொண்டே குளிக்கப் போனார்.  இரண்டு நாள் முன்பு, பிறந்து ஒரு மாதம் கூட ஆகாத ஒரு பெண் நாய் குட்டியை தெருப் பையன்கள் விளையாட்டுப் பொம்மை போல வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.  அதற்கு வலது காலில் ஒரு பெரிய காயம்.  அந்த காயம் எப்படி உருவானதோ தெரியவில்லை. சீழ் வைத்து, அந்தக் குட்டியால் நடக்கக் கூட முடியவில்லை. ஹோமியோ மருந்து ஒரு டோஸ் போட்டவுடன் சற்று குணமாகி விளையாடித் திரிந்தது.  அதை மனப்பூர்வமாக வைத்துக் கொள்ளவும் முடியவில்லை, வேண்டாம் என்று வெளியில் அனுப்பவும் முடியவில்லை.

6.40க்கு வைகை எக்ஸ்பிரஸ்.  ஆறு மணிக்கு ஜங்சனில் இருக்க வேண்டும்.  முன்பதிவு செய்யாததால், இடம் கிடைப்பது சிரமம்.  வயதான அம்மா, அத்தைக்கு மட்டும் கூட இடம் கிடைத்தால் போதும். கூட்டம் நிறைய இருக்குமோ என்று பயமாக வேறு இருந்தது.  குமாரை முதலில் அனுப்பி, டிக்கெட் எடுக்கச் சொல்லி, இடம் போடச் சொல்வதாய் திட்டம்.  குமார் குளித்த பின்னும் கூட தூக்கக் கலக்கத்திலேயேதான் இருந்தார்.  டீ குடித்த பின் தான் குமாருக்கு தூக்கம் விலகியது.  ஒரு வழியாக கிளப்பி விட்டேன்.  அரை மனதோடுதான் கிளம்பினார்.  வேறு வழியே இல்லை.  வைகையை தவற விட்டால் அம்மாவையும், அத்தையையும் பஸ்ஸில் அழைத்துச் செல்வது ரொம்ப சிரமம்.  அத்தை ரயில் பயணம் என்பதால் தான் உடனே வரச் சம்மதித்தார்கள்.

தங்கைகள் பரபரப்பாக கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.  அத்தை வழக்கம் போல சாமியார் போல உட்கார்ந்திருந்தார்கள்.  நேற்று மாலைதான் குளித்தார்களாம்.  இப்பொழுது குளிக்கும் விருப்பமில்லை.  வழக்கம் போல சம்மந்தமேயில்லாத கலர் ஜாக்கெட்டுடன் புது சேலை கட்டியிருந்தார்கள்.  மாமா இறந்த பின்பு மேட்சாக ஜாக்கெட் அணியும் பழக்கத்தை விட்டு விட்டார்களாம்.  கழுத்தில் ஒரு பவளப் பாசி.  காதில் 50 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்த போது போட்ட ஒரு தங்கத் தோடு.  அவ்வளவுதான் அலங்காரம்.  அம்மாவெல்லாம் அப்பா இறந்த பிறகு கூட பொட்டு வைக்கத் தான் செய்தார்கள்.  இப்பொழுது அம்மா பொட்டு மட்டுந்தான் வைப்பதில்லை.  மற்றபடி எல்லாவற்றையும் கச்சிதமாக செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள்.

மழை சுத்தமாக நின்று விட்டது.  ஒரு வழியாக நான், தங்கைகள் 2 பேர், அம்மா, அத்தை எல்லோரும் தயாராகி விட்டோம்.  கதவைத் திறந்தால் எதிர் வீட்டுத் ‘தேவதை’.  அம்மாவுக்கு அந்த மாடு மேய்க்கும் கிழவியை பிடிக்காது, எங்களுக்கும் தான்.  அது போன பின்னால் கிளம்பலாம் என்றார்கள்.  மணி 5.30 ஆகிவிட்டது.  இதற்கு மேல் தாமதிக்க முடியாது.  இருட்டில் எங்கள் வீட்டை ஒட்டிய சந்து வழியாக நடந்து பஸ் நிறுத்தம் வந்தோம்.  மழை பெய்து ஓய்ந்த குளிர்ச்சி.  இரவு.  ரோட்டிற்கு எதிர்புறத்தில் வயலிலிருந்து தவளைகளின் பேரிரைச்சல்.  அதன் இடைவிடாத சத்தம் சற்று பீதியாக இருந்தது.  எங்களைத் தவிர 2 ஆண்கள் நிறுத்தத்தில் காத்திருந்தனர்.  

செல் போன் ஒலித்தது. குமார்தான். 

“டிக்கெட் எடுத்தாச்சு, எங்க இருக்கீங்க?” என்றார். 

“இன்னும் பஸ் ஸ்டாப்பில் தான் நிற்கிறோம் பஸ் வரல“ என்றேன். 

“சரி, வாங்க நான் 3வது பிளாட்பாரத்துல வெயிட் பண்றேன்”.

மினி பஸ் ஒன்று வந்தது.  ஏறிவிட்டோம்.  அதிகாலை பயணம் குளிர்ச்சியாக இருந்தது.  காய்கறி மார்க்கெட்டில் மொத்தமாக காய்கறிகள் வாங்கப் போகும் கூட்டம்,  வழக்கமாகப் பணிக்குச் செல்லும் கூட்டம் என பஸ் நிறைந்திருந்தது.  இப்படி அதிகாலையில் எழுந்து குளித்து  கிளம்பி, பணிக்குச் சென்று மாலை வீட்டிற்கு திரும்பி வரும் வாழ்க்கை நன்றாகத் தானிருக்கும்.  ஒரே மாதிரியான சோம்பேறித்தனமான சவசவத்துப் போன வீட்டு வேலைகளையும் பிரச்சினைகளையுமே மீண்டும் மீண்டும் யோசித்து யோசித்து சலிப்பாக போய் கொண்டிருக்கிறது வாழ்க்கை என்றாள் தங்கைகளில் ஒருத்தி.  உண்மைதான்.

சரியாக, 6.10க்கு மதுரை ஜங்சனின் பின்புற நுழைவு வாயிலில் இறங்கினோம்.  3வது பிளாட்பார்மில் இடது புற படிக்கட்டில் இறங்குவதா, வலது புறத்திலா என்று சந்தேகம் வந்தது.  முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள், ரயிலின் கடைசியில் தான் இருக்கும் என்று வலது புறம் இறங்கினோம்.  நல்ல கூட்டம்.  நீண்ட வரிசை காத்துக் கொண்டிருந்தது.  பெண்கள் பெட்டிக்கு அருகில் சென்றோம்.  அங்கும் நல்ல கூட்டம்.  குமார் இன்னும் எங்கள் கண்களில் படவில்லை.  போன் செய்தேன்.  ‘அப்படியே எதிர்புறம் எஞ்சின் இருக்கும் பக்கம் நடந்து வாங்க’  என்றவுடன் திரும்பி நடந்தோம்.  கூட்டத்திற்குள் அம்மா, அத்தையை கூட்டிச் செல்வது சிரமமாக இருந்தது.  தங்கைகள் பார்த்துக் கொண்டார்கள்.  கூட்டத்தில் கனகாம்பரக் கலர் சட்டையைக் கண்டு பிடித்து விட்டேன்.  குமாரும் கையை அசைத்து எங்களை நோக்கி வந்தார்.  அம்மாவும், அத்தையும் லேசான பதட்டத்துடன் இருந்தார்கள்.  எஞ்சினை ஒட்டியும் முன்பதிவு செய்யப்படாத இரண்டு பெட்டிகள் இருக்குமாம்.  இன்று தான் எனக்குத் தெரியும்.  ஏ.சி. பெட்டிக்கு அருகில் நின்றோம்.

அங்கு மாதிரி நீண்ட வரிசையில்லை.  ஆனால் கூட்டம் கும்பலாக இருந்தது.  இதில் எப்படி முண்டியடித்துக் கொண்டு ஏறுவது.  அம்மாவையும், அத்தையையும் ஏற்றுவது எப்படி என்று அச்சமாக இருந்தது.  என் முகத்தில் தெரிந்த கலவரத்தைப் பார்த்த  குமார் மெதுவாக ‘போர்ட்டர் கிட்டச் சீட்டுக்குச் சொல்லியிருக்கேன்’ என்றார்.  சற்றே நிம்மதியடைந்தேன்.  அம்மா அருகில் வந்து “போர்ட்டர் கிட்ட சொல்லியிருக்கீங்களா? ஊட்டிக்கு போனப்ப ரயிலில் இடம் பிடிச்ச கதையாக ஆகப் போகுது” என்று கூறிச் சிரித்தார்கள்.  நானும் தங்கைகளும் கூடச் சேர்ந்து சிரித்தோம்.  குமாருக்கு ஒன்றும் புரியவில்லை.

நாங்கள் ஒரு முறை குடும்பத்தோடு ஊட்டிக்கு சென்று திரும்பும் போது மலை ரயிலில் பயணம் செய்ய ஆசைப்பட்டு, மழையோடு ஊட்டி ரயில் நிலையத்திற்கு போனோம்.  சுற்றுலாக் கூட்டம் கும்பலாகயிருந்தது.  மழையோடு மீண்டும் பஸ் ஸ்டாண்ட் போகச் சிரமப்பட்டுக் கொண்டு அங்கிருந்த போர்ட்டரிடம் இது போலவே இடம் பிடிக்க உதவி கேட்டோம்.  அவரும் சம்மதித்து தலைக்கு 50 ரூபாய் வசூலித்து விட்டார்.  ரயில் வந்த உடனேயே ‘ஏறுங்க, ஏறுங்க இடம் பிடிங்க’ என்று என்னையும், அண்ணனையும் கூட்டத்துக்குள் தள்ளிவிட்டார். நான் கூட்டத்திற்கு பயந்து பின்னால் வந்து, பெட்டி நிரம்பிய பின் ஏறி, நின்று கொண்டே கோவை  வரை பயணம் செய்தோம்.  ரயில் கடந்து வந்த இயற்கைக் காட்சிகள் எங்களது கால் வலியை குறைத்தது என்றாலும், எங்கள் யாராலும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது அந்தப் பயணம்.

அந்த போர்ட்டர் என்னையும், குமாரையும் மட்டும் அவருடன் வருமாறு அழைத்தார்.  எங்களைப் போலவே இன்னும் சிலரை அழைத்துக் கொண்டு ஏசி பெட்டிக்குள் ஏறி, அந்தப் பக்கம் தண்டவாளத்தின் பக்கம் இறங்கச் சொன்னார்.  அங்கு ஒரு கள்ளத்தனமான அமைதி நிலவியது.  அந்த நேரம்  அங்கிருந்தவர்களில் ஒருவரது செல்போன் ஒலிக்க, அவர் எடுத்துப் பேசினார்.  உடனே போர்ட்டர், ‘சார், சத்தம் போடாதீங்க, பேசாதீங்க சார்’ என்று படபடப்புடன் கண்டித்து விட்டு ‘நாமளே தெரியாம இடம் பிடிக்கப் போறோம்... நீங்க வேற...’ என்றார்.

அன்ரிசர்வ்டு பெட்டியின் கதவருகில் எல்லோரும் - ஏறக்குறைய 10 பேர் இருப்போம் – நின்று கொண்டிருந்தோம்.  உள் பக்கம் திறக்கும் சத்தம் கேட்டது.  இருந்த பத்து பேரும் முண்டியடித்து ஏறினார்கள்.  நானும் குமாரும் கடைசியாக ஏறினோம்.  நாங்கள் உட்பட ஏறியவர்கள் அனைவரும் இடம் பிடித்த பின் பிளாட்பார்ம் பக்கமுள்ள கதவு திறந்து விடப்பட்டது.  வெளியில் நின்று கொண்டிருந்த கூட்டம் பரபரப்பாக ஏறியது.  அதில் சிலருக்கு ஏற்கனவே இடம் பிடித்து வைத்திருந்தார்கள்.  மற்றவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை.  தங்கைகளும், அம்மாவும், அத்தையும் ஏறினர்.  குமார் கீழே இறங்கிப் போய் போர்ட்டரை பார்த்து விட்டு வந்தார்.  குமார் திரும்பி வந்ததும்  ‘எவ்வளவு கேட்டாங்க?’ என்றேன்.  ‘300 ரூபாய் கேட்டான், 200 ரூபாய் கொடுத்து விட்டு வந்தேன்.  150 ரூபாய் கொடுத்ததுக்கு நான் போலீஸ்க்கு குடுக்கனும், அங்க கொடுக்கனும், இங்க குடுக்கனும்னு புலம்ப ஆரம்பிச்சுட்டான், அதனால 200ரூபாய் கொடுத்தேன்’ என்றார்.

 ‘சரி பரவாயில்லை, சொன்ன மாதிரி இடம் பிடிச்சு குடுத்துட்டாங்கல்ல,’ என்றேன்.

சன்னல் கதவுகளை திறந்து நாங்கள் 6 பேரும் வசதியாக ஒரே இடத்தில் உட்கார, ரெயில் புறப்பட ஆரம்பித்தது.  மதுரையிலிருந்து எங்கள் ஊர் ஊர்மெச்சிக்குளம் வழியாகத்தான் ரயில் திண்டுக்கல் செல்லும்.  எத்தனை முறை பயணம் செய்தாலும், ரயில் பயணம், இப்படி இடம் கிடைத்து சொகுசாய் போனால், புது அனுபவமாகத்தான் தோன்றுகிறது.

செல்போன் ஒலித்தது.  மாப்பிள்ளையின் அக்கா கவிதா பேசினாங்க.  ‘ட்ரெயின் கிளம்பிருச்சு, அங்க எப்படியும் 9.30 – 10க்கு திருச்சி வந்துருவோம்’ என்றேன்.  ‘சரி, வாங்க, ஜங்சன் வந்து கூட்டிட்டுப் போயிடுறேன்’ என்றார்.

சரியாக ஒரு மணி நேரத்தில் 7.45க்கு திண்டுக்கல் வந்து விட்டோம்.  காலை உணவிற்கு வீட்டிலேயே தயார் செய்து கொண்டு வந்த எலுமிச்சை சாதத்திற்கு வடை வாங்கிக் கொண்டோம்.  திண்டுக்கல்லை விட்டு ரயில் புறப்பட்டவுடன் காலை உணவை சாப்பிட்டோம்.  எங்களுக்கு எதிரில் உட்கார்ந்திருந்த குடும்பம் இட்லி, சட்னி என சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.  இவ்வளவு அதிகாலையில் எப்படி இட்லி, சட்னி எல்லாம் செய்து எடுத்து வர முடிகிறது என்று மலைப்பாக இருந்தது.   ஒரு பாட்டி காதில் அணிந்திருந்த தண்டட்டி குலுங்க, குலுங்க வடையை ருசித்துக் கொண்டிருந்தார்.  வழியெங்கும் மழை தூறல் இருந்து கொண்டேயிருந்தது.   தொலைவில் தெரிந்த மலையில் மேகம் மிதந்து சென்றது.  ‘உத்தமபாளையம் இப்பிடித்தாங்க இருக்கும்.  எங்க காலேஜ் சன்னலில் இருந்து பார்த்தா இப்படித்தான் தெரியும், பாடத்தக் கவனிக்க பிடிக்குமா?’ என்று சொன்னார் குமார்  உற்சாகமாக.  அம்மாவும் அத்தையும் சற்றே கண்ணயர்ந்தார்கள்.

சரியாக 8.45க்கு திருச்சி ஜங்சனில் இறங்கினோம்.  அங்கும் மழை தூறிக் கொண்டிருந்தது.  இவ்வளவு சீக்கிரமாக வந்து சேர்வோம் என்றும் நாங்கள் நினைக்கவில்லை.  நான் மாப்பிள்ளையின் அக்காவிற்கு போன் செய்தேன்.  ‘என்ன ஒன்பதரை ஆகும்னீங்க, அதுக்குள்ள வந்துட்டீங்க’ என்று கேட்டதற்கு,  ‘எனக்கு சரியா டைம் கால்குலேட் பண்ணத் தெரியல’ என்றேன்.  ‘சரி, அங்கேயே வெயிட் பண்ணுங்க, நான் உடனே வந்துர்றேன்’ என்றார்.

கவிதா வந்து சேர 40 நிமிடங்களுக்கும் மேலானது.  நாங்கள் அதற்கிடையில் பயணிகள் ஓய்வறைக்கு போய் பாத்ரூம் போய்விட்டு, பால், டீ குடித்து விட்டு, போகிற வருகிற ட்ரெயினை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.   அவர் வந்த பிறகு திருச்சி ஜங்சனிலிருந்து சத்திரம் பஸ் நிலையத்திற்கு பஸ்சில் போனோம்.  மலைக்கோட்டையை கடந்து சென்றோம்.  ‘சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து நடந்தே போயிரலாம்.  பக்கந்தான் வீடு’ என்றார் கவிதா.  நாங்கள் 6 பேர், அவங்களையும் சேர்த்து ஏழு பேர் நடந்தோம்.   ஒரு மினி ஊர்வலம் போல மெயின்ரோட்டிலேயே சிறிது தூரம் நடந்திருப்போம்.  ஜம்ஜம் பிரியாணிக் கடை எதிரிலுள்ள சந்தில் கூட்டி கொண்டு போன கவிதா  ஒரு கோயில், ஒரு மசூதி தாண்டி அதை விட சிறிய சந்தின் வழியாக – அதில் ஒரே ஒரு ஆள் மட்டுந்தான் நடக்க முடியும் – கூட்டிப் போனார். எல்லோரும் ஒருவர் பின் ஒருவராய் கவிதாவை பின் தொடர்ந்தோம்.  கவிதா நெருங்கும் ஒவ்வொரு வீட்டையும் இது தான் அவர்களது வீடாக இருக்குமோ என்று நினைத்துக் கொண்டே பின் தொடர்ந்தோம்.  ஆனால் அவர் பல வீடுகளை கடந்து சென்று ஒரு வீட்டின் முன் நின்று, எங்களை திரும்பி பார்த்து விட்டு எங்களிடம் ‘உள்ளே வாங்க’ என்று சொல்லிவிட்டுப் போனார்.  தென்னை ஓலை கிடுகில் வேயப்பட்ட நாட்பட்ட கூரையைக் கண்டு வியப்புடன் ‘இதுதான் இவங்க வீடா?’ என்றாள் தங்கை.  ‘இருக்காதே, நம்ம வீடு மாதிரின்னு’ சொன்னாங்களே.  யாராவது தெரிஞ்சவங்க வீடா இருக்கும், இல்லைன்னா பக்கத்திலேயே அக்கா வீடு இருக்குன்னாங்க, அதாருக்கும்’ என்றேன் சன்னமான குரலில் தங்கையிடம்.  என் நினைப்பை தவிடுபொடியாக்குகிற மாதிரி ‘செருப்பக் கழட்டிட்டு உள்ள வாங்க’ என்றார்.  எல்லோரும் ஒரு வித அதிர்ச்சியோடு உள்ளே போனோம்.  ஒரு அறை – அங்கிருந்து ஒரு சின்ன கதவு வழியாக உள்ளே நுழைந்தோம்.  அறையில் ஒரு சின்ன இரும்பு கட்டில், மூலையில் கலர் டிவி, ரெண்டு பீரோ.  இவை தவிர 1 சேர், 2 ஸ்டூல் கிடந்த து.    அம்மா, அப்பா, கவிதா இவர்களோடு நாங்கள் ஆறு பேரும் எப்படி எங்கு உட்கார்வது என்று தடுமாறிக் கொண்டிருந்தோம்.  உள்ளே வந்த மாப்பிள்ளை ‘அந்த கட்டிலில் அட்ஜஸ்ட் பண்ணி உட்காருங்க’ என்றார் ஒரு தினுசான தொனியில்.  அப்போது இருந்த பரபரப்பில் அதை பெரிது படுத்தவில்லை.  இவை அனைத்தையும் பார்க்க பார்க்க என்னால் நம்பவே முடியவில்லை.  ‘திறந்திருக்கும் மற்றொரு கதவின் வழியே உள்ளே போனால் பின்புறம் நம்வீடு மாதிரி இருக்குமோ, இது வெறுமே ரிசப்ஷன் அறை மாதிரி இருக்குமோ’ என்று குழப்பத்தோடு கதவின் உள்ளே பார்த்தேன்.  எழுந்து உள்ளே போனேன்.  3க்கு 7 அடி அளவில் சிறிய சமையலறையது.  காரை சுவர்தான்.  மண்ணெண்ணை ஸ்டவ்.  ஃபேன் ஓடிக் கொண்டிருந்தது.

எனது 2வது தங்கை எனது காதுக்குள் ’10 நிமிசத்துக்குள் கிளம்பிறனும், இது சரிப்பட்டு வராது, இது நம்ம வீடு மாதிரியா இருக்கு.  எவ்வளவு பெரிய பொய் சொல்லியிருக்காங்க’ என்று கோபத்தோடு கிசுகிசுத்தாள். எங்கள் வீடு நாலு அறைகள் கொண்ட கான்கீரிட் வீடு.  அம்மா, அத்தை, குமார் 3 பேரும் மாப்பிள்ளையின் வேலை விவரங்கள் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தனர்.  நானும், தங்கைகளும், கவிதாவோடு என்ன பேசுவது என்ற குழப்பத்திலிருந்தோம்.  அதற்குள் மாப்பிள்ளைக்கு ஒரு போன் வர அவர் எழுந்து வெளியே போய் விட்டார்.  குடிக்க, கொறிக்க எதையோ கொடுத்தார்கள்.  10 நிமிடந்தான் கரைந்திருந்தது.  மாப்பிள்ளையின் அண்ணன்கள், அண்ணிகள் 2 பேர் மற்ற 3 அக்காக்கள் அவர்களது குழந்தைகள் 4,5 பேரும் வந்து எங்களை ‘வாங்க, வாங்க’ என்று வரவேற்று விட்டுப் போனார்கள்.  அந்த இடத்திலிருந்த நெருக்கடியும், அந்நியத்தன்மையும் ஒரு விதமான உணர்வை ஏற்படுத்தியது.  தங்கைகள் உடனே கிளம்பும் திட்டத்தை தவிர வேறொன்றையும் யோசிக்கவில்லை.

மாப்பிள்ளை வேலையில்லாதவர்.  ரியல் எஸ்டேட் வேலை செய்து வருகிறாராம். பத்தாவது படித்திருக்கிறாராம், நான் தங்கையிடம் மாப்பிள்ளை படிக்காதவராய் இருந்தால் என்ன, நாம் படித்திருக்கோம் இல்லையா என்று சமாதானப்படுத்தியிருந்தேன். இந்த வீட்டைப் பார்த்தவுடன் என் எண்ணமும் மாறத் தொடங்கியிருந்தது. திருமணம் முடிந்ததும் வீட்டை இடித்து கட்டி கீழ்தளத்தில் கடையும் மாப்பிள்ளை குடும்பமும், முதல் மற்றும் இரண்டாம் தளத்தில் முறையே அண்ணன்கள் இரண்டு பேரின் குடும்பமும் என்பது எதிர்காலத்திட்டம்.

அம்மாவுக்கு, அவங்க அம்மா வீடு போல பெருங்கூட்டமாய் இருந்தது பிடித்துப் போனது போலத் தெரிந்தது.   உற்சாகமாக மாப்பிள்ளையின் அம்மா அப்பாவோடு பேசிக் கொண்டிருந்தார்.  அத்தையும்தான். எப்படியோ நழுவிப் போய்விட்டது 1 மணி நேரம்.  ஒரு வழியாக விடைபெற்றுக் கொண்டு கிளம்பினோம்.

வீட்டுக்கு அதே பரபரப்பு பயணத்துடன் மாலை 3.30க்கு வந்து சேர்ந்தோம்.

வரும் வழி முழுவதும் நானும் தங்கைகளும் அந்த வீட்டையும், வீட்டு நபர்களையும் அவர்கள் பேசின விதத்தையும்   பற்றியே பேசிக் கொண்டிருந்தோம்.  எப்படி இப்படி யெல்லாம் பொய் சொல்ல முடிகிறது என்ற அதிர்ச்சி, ஆச்சரியத்திலிருந்து வெளிவர முடியாமலேயே இருந்தோம்.  மாப்பிள்ளையின் அண்ணன்கள், அம்மா, அப்பாவைவிட கவிதாவிற்கு தன் தம்பிக்கு திருமணம் செய்து வைத்து விடும் ஆர்வம் அதிகமாக இருந்தது.  கவிதாவிற்கும் எனக்கும் இடையே லேசான நட்பு வளர்ந்திருந்தது.  சரி கவிதாவிடம் சிலவற்றை பேசி சரி செய்வோம் என்றும், வீடு பணம் எல்லாம் எதிர்காலத்தில் சம்பாதித்துக் கொள்ளலாம் என்றும், நல்ல மனிதர்களாக இருந்தால் சரிதான்...அங்கு பிரச்சினை என்றால் கூட மதுரையில் கூட செட்டிலாகட்டும் என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தேன்.

கவிதாவிடம் இருந்து போன் வந்தது.  ‘பத்திரமா வந்து சேர்ந்துட்டோம்’ என்றேன். ‘என்ன உங்களுக்கு திருப்திதானே?’ என்று கேட்டார்.  ‘கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு உங்கள கூப்படறேன்.  உங்கக்கிட்ட கொஞ்சம் பேசனும்’ என்று நான் சொல்லவும் கவிதாவும் சரி என்று இணைப்பைத் துண்டித்தார்.

அரைமணி நேரம் ஓய்வெடுத்து விட்டு சூடாக ஒரு தேநீர் அருந்திவிட்டு கவிதாவிற்கு போன் செய்தேன். 

‘....எங்க வீடு மாதிரின்னு சொன்னீங்க.  கூரை வீடு நாளைக்கே விழுந்துரும் போல இருக்கு’ என்றேன்.

‘அதெல்லாம் இடிச்சு கட்டிரலாம், அது நல்ல சென்ட்ரான இடம்’ என்றார் கவிதா.

‘சரி... கடைக்குன்னா எவ்வளவு இன்வெஸ்ட் பண்ணப் போறீங்க?’ என்று கேட்டேன்.

‘என்னங்க, அதுக்குள்ள இந்த விவரமெல்லாம் கேட்கறீங்க...’

‘ஏன் கேட்க கூடாதா?’ என்றேன் பதிலுக்கு.

‘என்ன உங்க தங்கச்சிக்கு ஒரு பத்து பவுன் கூட போட மாட்டீங்களா.  வீட்டைக் கட்டிருவோம், கடைய வைச்சிருவோம்... என் தம்பி, ‘‘பாவம்... அப்பா இல்லாத குடும்பம் நான் வீட்டோட போய் இருந்து ஹெல்ப் பண்றேன்”னு சொன்னான் தெரியுமா? நீங்க என்னாடான்னா ரொம்ப பேசறீங்க...’ என்றார்.

இந்த பதிலை கேட்டவுடனே அவங்க வீட்டிற்குள் நுழைந்ததிலிருந்து இப்பொழுது வரை உள்ளே அழுத்தி வைத்திருந்த பொறுமை உடைந்து போனது.

ஹலோஎன்ன சொல்றீங்கஉங்க தம்பி 10 வது பெயில், ஒழுங்கான வேலையில்லை.  அவரு எங்களுக்கு ஹெல்ப் பண்றாராமாஅந்த வீட்ல ஒரு குடும்பம் இருக்கிறதே கஷ்டம், உங்க தம்பிய மதிச்சு கல்யாணப் பேச்சுப் பேசுனதே அதிகம்... இதுல நகை வேறயா?’ என்றேன் கடுப்போடு.

கவிதா அதிர்ச்சியடைந்து போனாலும், அதை மறைத்துக் கொண்டு நாங்க உங்க அம்மாகிட்ட பேசிக்கிறோம் போனக் கொடுங்க என்றார் நிதானமாக.

இப்ப முடியாது  போன வையுங்க’ என்று போனைத் துண்டித்து விட்டேன்.

அன்று இரவு அம்மா என்னிடம், ‘என்னடி திருச்சிக்கு போன் பண்ணுனியா?’ என்று கேட்ட போது ‘ம்...அதெல்லாம் போன் பண்ணி பத்திரமாக வந்து சேர்ந்தாச்சுன்னு சொல்லியாச்சு’ என்றேன் அம்மாவுக்கு புரியாத மழுப்பலோடு.

அடுத்த நாள் காலை மீண்டும் கவிதாவிடமிருந்து போன் வந்த போது என்னுடைய செல்போன் மௌனமாக அதிர்ந்து ஓய்ந்தது. யாருக்கும் கேட்காத சைலன்ஸ் மோடில் வைத்திருந்தேன். 

அம்மா ‘என்னிடம் திருச்சியிலிருந்து போன் வந்ததா?’ என்று பலமுறை கேட்ட போதும் ‘இல்லையே’என இயல்பாக பதிலளித்து விட்டேன்.

 

indira.alangaram@gmail.com