இரட்டைக் கோபுரம்

நிர்மலன்

நெடுஞ்சாலையின் இருபுறத்தேயும் தெரிந்த செம்பனைத் தோட்டங்களில் பனிப்புகார் விலகியிருக்கவில்லை. தூரத்தே மலைமுகட்டுக்கும் மேலால் சூரியன் மெதுவாக எட்டிப்பார்த்தான். திரும்பிப் பார்த்தேன் தூரத்தில் இரட்டைக் கோபுரம் மங்கலாய்த் தெரிந்தது. சுப்பிரமணியம் தனது சிவப்பு நிற போட்டோன் காரை நிதானமாகவும் விரைவாகவும் செலுத்திக் கொண்டிருந்தார். பின் சீற்றில் இருந்த சுனில் விம்முவதும் அவனை லால் தேற்றுவதும் காரின் கண்ணாடியில் தெரிந்தது.

எத்தினை மணிக்கு பிளைட் கொழும்பில் லாண்ட் பண்ணும்? “ சுப்பிரமணியத்தின் குரலிலும் கவலை தெரிந்தது.

ரெண்டு மணிக்குப் போய்விடும் நான் சொன்னேன்.

இவரை யாரு கண்டிக்குப் கூட்டிப் போவாங்கள்

சுனிலின்ரை மச்சான் கொழும்பிலை வேலை செய்றார் அவர் கூட்டிக் கொண்டு போவார்.

சுனிலுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. இடிபோல் அச்செய்தி கண்டியிலிருந்து ரெலிபோனின் றிசீவர் வழியாக மலேசியாவில் என் காதில் வந்திறங்கிற்று. சுனிலின் தம்பி விமல் சொன்னான்.

முரளி ஐயே, சுனில் ஐயாகே புத்தா அத மரில்லா, ஐயாவ கெற்ற லங்காவட்ட யவண்ட

சுனிலின் மகன் இறந்து விட்டதாகவும் சுனிலை இலங்கைக்கு அனுப்பி விடும் படியும் சிங்களத்தில் கூறினான்.

விஷ்வா நாங்கள் மலேசியா வந்ததன் பின் பிறந்த சுனிலின் தலைப்பிள்ளை. சுனிலின் முகத்தை விஷ்வாவும் விஷ்வாவின் முகத்தை சுனிலும் பார்க்கக் கூடவில்லையே. இரண்டு நாட்களுக்கு முன்பு விஷ்வா பேராதனை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதாய் சுனில் சொல்லியிருந்தான். ஆனால் அக்காய்ச்சல் குழந்தையின் மரணத்திற்கே காரணமாய் அமையுமென்பதை ஒருவரும் எண்ணியிருக்கவில்லை.

சுனில் இன்னும் அறைக்குத் திரும்பியிருக்கவில்லை. அவன் இந்நேரம் நூலகத்திலிருந்து படித்துக் கொண்டோ அல்லது கொம்பியுட்டர் அறையிலிருந்து ஏதாவது வேலை செய்து கொண்டோவிருப்பான். அவனின் குணமே அது தான். அரசாங்க புலமைப் பரிசில் பெற்று படிக்க வருபவர்கள் படிப்பை மறந்து வேலை செய்யும் போது அவன் பல்கலைக் கழக விரிவுரைகள் முடிவடைந்த பின்னும் கூட என்னுடனும் லாலுடனும் சேர்ந்து அறைக்கு வரமாட்டான். நாங்கள் அறைக்குத் திரும்பி குட்டித் தூக்கம் போட்டு மேல் கழுவி இரவுச் சாப்பாட்டிற்காய் ஏதாவது செய்யத் தொடங்கும் ஏழு மணியளவில் வேர்த்து விறுவிறுக்க வருவான். குளித்து விட்டு சமையலில் உதவி செய்வான்.

விசயத்தைச் சொல்ல பாத்றூமில் உடைகளைச் துவைத்துக் கொண்டிருந்த லால் என்னுடன் பல்கலைக்கழகத்திற்கு வந்தான். நூலகத்தில் ஜேர்னல் ஒன்றைப் போட்டோக் கொப்பி எடுத்துக் கொண்டிருந்த சுனிலை வெளியே கூட்டி வந்து விசயத்தை சொல்லப் பெரும்பாடாகி விட்டது.

மகே புத்தே

எனது மகனே என்று சூழலை மறந்து கத்தினான். மலே, சீன, இந்திய மாணவர்கள் எங்களை வித்தியாசமாய்ப் பார்க்கத் தொடங்கினர்.

ரிக்கட் பதிவு செய்ய கோலாலம்பூர் போவதற்காக நாங்கள் பஸ்சுக்கு காத்திருந்த பொழுது சுப்பிரமணியம் தனது காரை எங்களுக்கருகே நிறுத்திக் கதைத்தார். காரிலேயே ஸ்ரீ லங்கன் எயார் லைன்சின் ரிக்கட் பதிவு செய்யும் அலுவலகத்திற்குப் கூட்டிப் போனார். எவ்வளவு சொல்லியும் கேட்காமல் தானே ரிக்கட்டுக்குரிய பணத்தைச் செலுத்தினார்.

சுப்பிரமணியம் மலேசியர் என அவரின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் கூறினாலும் அவரின் தகப்பன் இலங்கையர் தான். மலேசிய ரெலி கொம்மில் பொறியியலாளர். அவரின் தகப்பன் கந்தசாமி யாழ்ப்பாணம் மாதகலில் இருந்து மலேசியா வந்து ரெயில்வேயில் ஸ்ரேசன் மாஸ்ரராய் வேலை செய்து அங்கேயே குடும்பமாய்த் தங்கி விட்டனர். மாதகல் பொன்னையாப் பரியாரியின் பேரன் தான் என்று சுப்பிரமணியம் அடிக்கடி சொல்வார். சுப்பிரமணியம் எங்களுக்கு அறிமுகமானதே வித்தியாசமான சம்பவத்தின் மூலந்தான்.

நாங்கள் மலேசியா வந்த புதிதில் பல்கலைக் கழகத்தால் விடுதி வசதி செய்து தரப்பட்டது. எங்களுக்கு கன்ரீனில் கிடைக்கும் எண்ணெய் மிகுந்த சாப்பாடு ஒத்துக் கொள்ளவில்லை. ஒரு மாதிரி எங்கள் இணைப்பாளரைப் பிடித்து அவர் மூலமாய் ஒரு சிறிய வீடு வாடகைக்குப் பெற்றிருந்தோம். புது வீட்டுக்கு வந்த இரண்டாம் நாளின் காலையில் படிப்பதற்காய் நான் எழுந்த போது குழாயில் தண்ணீர் வரவில்லை. பேசாமல் இருந்தேன். சுனிலும் லாலும் கூட எழுந்து

வத்துற நா என்று சொல்லிக் கொண்டிருந்தனர். காலைக் கடன்களை முடிக்காமல் அந்தரப்பட்டுக் கொண்டிருந்தோம்.

நானும் லாலும் வெளியே போய் பக்கத்து சீனரின் வீட்டு வெளிக் கதவைத் தட்டினோம். வீட்டுக்கு முன்னால் புத்தபெருமானின் சிலை இருந்தது. இலங்கையில் இருப்பவைகளிலும் பார்க்க சிறிது வித்தியாசமாய் இருந்தது. வயதான சீன மூதாட்டி வந்து வீட்டுக் கதவைத் திறந்து எங்களைப் பார்த்தாள். லால் புத்தர் சிலையைப் பார்த்து விட்டு நம்பிக்கையுடன்

வோட்டர் …….. வோட்டர்என்று கேட்டான். மூதாட்டி கதவை அடித்துச் சாத்தி விட்டுப் போய் விட்டாள். அவருக்கு ஆங்கிலம் புரியவில்லையோ? அல்லது விசா இல்லாமல் மலேசியாவில் அலையும் பங்களாதேசத்தவரென நினைத்தாரோ? மலேசியர்கள் இலங்கையரையும் பங்களாதேசத்தவரையும் தோற்றத்தை வைத்து வேறுபடுத்தக் கஸ்ரப்படுகிறார்கள்.

அடுத்த வீடு ஒரு மலேக்காரரினது. வீட்டுக்காரர் யன்னலால் எட்டிப் பார்த்தவர் கதவைத் திறக்கவில்லை.

அடுத்த மூன்று நான்கு வீடுகளிலும் அதே மாதிரித் தான். இயற்கை உபாதை தொல்லை கொடுத்தது. ஐந்தாவது வீட்டின் வாசற் கதவு நிலையில் நூல் கட்டப்பட்டு அதனுள் பிளாஸ்ரிக்கினால் செய்யப் பட்டிருந்த மாவிலைகள் கோர்க்கப்பட்டிருந்தன. என் மனதில் சிறிது நம்பிக்கை துளிர் விட்டது.

கதவைத் தட்ட வயதான ஆண் வந்து கதவைத் திறந்தார். எழுபது வயதிற்கு கூடுதலாக இருக்கும் போலிருந்தது. கண்ணாடி அணிந்திருந்த அவர் கையில் மலேசிய நண்பன் பத்திரிகை இருந்தது.

ஐயா தண்ணி இருக்கா? “ நான் கேட்டேன். ஓடி வந்து கையைப்பிடித்தவர்.

நீங்கள் சிலோன்காரரா?” என்று சொல்லி வீட்டினுள் கூட்டிச் சொன்றார். எனது மூன்று சொற்களிலேயே எனது நாட்டைக் கண்டு பிடித்து விட்டார். எங்களைப் பற்றி விசாரித்தார். அவரின் முகத்தில் சந்தோசம் தெரிந்தது.

தான் யாழ்ப்பாணம் மாதகலில் பிறந்தாரென்றும் கனகாலத்திற்குப் பின்பு தாய் நாட்டுத் தமிழ் கேட்க ஆசையாய் இருக்கிறதென்றும் சொன்னார். மனைவி என்று ஒரு மூதாட்டியையும் மகன் சுப்பிரமணியத்தையும் சுப்பிரமணியத்தின் மனைவியையும் அறிமுகப்படுத்தினார். சுப்பிரமணியத்தின் பிள்ளைகள் பாடசாலைக்குச் சென்று விட்டதாகச் சொன்னார். அவர் என்னுடன் கதைக்க விரும்பினார். ஊர்ப் புதினங்கள் கேட்டார். அதற்குள் லால் சைகையால் தனது உபாதையைக் கூறிக் கொண்டிருந்தான்.

அவர் வீட்டில் பெரிய தண்ணீர்த் தொட்டியிருந்தது. நானும் லாலும் அவர் வீட்டில் காலைக் கடன் முடித்துக் குளித்தோம். அந்தக் குடும்பமே எங்களை சாப்பிடாமல் போக விடவில்லை. மேசையில் அவர்களுடன் அமர்ந்து தோசை சாப்பிட்டு விட்டு எங்களின் வீட்டுக்குப் போனோம். சுனில் இயற்கைக் கடன் கழிக்காமல் அந்தரப்பட்டு எங்களை ஏசியபடியிருந்தான். லால் தோசையின் சுவையைச் சொல்லி சுனிலின் கோபத்தை அதிகரித்துக் கொண்டிருந்தான். சுனிலும் சுப்பிரமணியத்தின் வீட்டில் வந்து காரியங்களையும் நிறைவேற்றிச் சாப்பிட்டான். அன்று சுப்பிரமணியம் எங்களை தனது அலுவலகத்திற்கு போகும் வழியில் காரில் ஏற்றி பல்கலைக்கழகத்தில் இறக்கி விட்டார்.

அதன் பிறகு ஒவ்வொரு நாளும் அவரின் கார் எங்களை பல்கலைக் கழகத்தில் இறக்கி விட்டு விட்டுத் தான் அவரின் அலுவலகம் போகும். சுனிலும் லாலும் இங்கிலீசில் அவருடன் கதைப்பார்கள். எல்லோரிலும் பார்க்க சுனில் அவருக்கு நெருக்கமாகிப் போனான்.

சுப்பிரமணியம் செவ்வாய்க் கிழமைகளின் இரவில் பாசா மலாத்துக்குப் போகும் போது எங்களையும் காரில் ஏற்றிச் செல்வார். அந்தச் சந்தையில் ஒரு வாரத்திற்குச் தேவையான மரக்கறி மீன் இறைச்சி அரிசி எல்லாவற்றையும் வாங்கி ஏற்றி வருவோம். சந்தையில் விலை விசாரிக்க தமிழ் உதவியது. சுப்பிரமணியம் வீட்டுப் பிரிச் எங்கள் உணவுகளையும் பழுதடையாது பாதுகாத்தது. தைப்பூசமன்று பத்துமலைக்கு தனது குடும்பத்துடன் எங்களையும் கூட்டிப் போனார். பிள்ளைகளின் பாடசாலை விடுமுறைக்கு மலாக்கா, ஜென்ரிங் கைலாண்ட்,…. என்று வேன் பிடித்து சுற்றுலா போனபோதெல்லாம் எங்களையும் கூட்டிச் சென்றனர். ஒருமுறை செந்தூலில் உள்ள சிவன் கோவிலுக்கும் அருகில் இருந்த ஸ்ரீ லங்கன் பௌத்த பன்சாலைக்கும் அவர்களுடன் போனோம். அங்கிருந்த இலங்கைப் பௌத்த குரு தமிழிலும் கதைத்தார். சுப்பிரமணியம் அனேகமான சனி ஞாயிறுகளில் தோசை சாப்பிட வீட்டுக்கு அழைத்துப் போனார். தீபாவளியன்று மூன்று நேரமும் எங்களுக்கு விருந்து தந்தனர்.

நீலாயில் உள்ள கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் நான் சுனிலின் ரிக்கட்டையும் பாஸ்போட்டையும் எடுத்துக் கொண்டு ஸ்ரீ லங்கன் எயார் லைன்சின் கரும பீடத்தை நோக்கி நடந்தேன். என்னைத் தொடர்ந்து சுப்பிரமணியம் சுனிலின் சூட்கேஸைத் தள்ளிக் கொண்டு வந்தார். பின்னால் லால் சுனிலின் கையைப் பிடித்தபடி நடந்து வந்தான். அவர்களைத் தொடர்து துன்பமும் வந்தது.

கரும பீடத்தின் முன்னால் வழமையைப் போல் வரிசையில் நில்லாது பயணிகள் கும்பலாய் நின்றனர். அவர்களை விலத்தியபடி கரும பீடத்திற்குப் போனேன். அதிலிருந்த மயிலின் இறகுச் சேலை அணிந்து லிப்ரிக் பூசியிருந்த இளம் பெண் அந்நேரத்திலும் சிரித்தபடி

பிளைட் கான்சல்என்று சொல்லி கொம்பியுட்டர் பிரிண்ட் அவுட் ஒன்றை நீட்டினாள். கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் தகர்க்கப்பட்டு மோதல்கள் நடைபெறுவதாய் இக்பால் அத்தாஸை மேற்கொள் காட்டி சீ.என்.என் இணையத்தளம் வெளியிட்டிருந்த செய்தி அத் தாளில் இருந்தது. தலைசுற்றுவது போலிருந்தது. சிறு குழந்தையின் உடலை பல நாட்களுக்கு வைத்திருக்க முடியாதே. சுனில் என்ன செய்வான்?

வயோதிப சிங்களக் தம்பதி பௌத்த துறவி என்போருடன் சுனிலும் லாலும் கதைத்தபடியிருந்தனர். அவர்களுக்கு விமானப் பயணம் தடைப்பட்ட செய்தியை சொல்ல வேண்டிய தேவை எனக்கு இருக்கவில்லை. சுப்பிரமணியம் சுனிலின் சூட்கேஸைப் பிடித்தபடி நின்றார்.

பறத் தெமிலு சுனில் சொன்னான்.

இவங்கள் என்ன பேசுறாங்கள் சுப்பிரமணியம் என்னைக் கேட்டார்.

எனக்கு சரியாகச் சிங்களம் தெரியாது என்றேன்.

அடியில் நெருக்கமாகக் கட்டப்பட்டு உயர உயர விரிவடைந்து செல்லும் மலேசிய இரட்டைக் கோபுரத்தின் பெரிய படமொன்று விமான நிலையத்தின் சுவரில் வரையப்பட்டிருந்தது.


.
mukunthan72@gmail.com