கொரங்காட்டி மகன்

முகில் தினகரன், கோயமுத்தூர்,


அந்தக் குடிசை வீட்டின் முன் கூடியிருந்த ஆண்கள் இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருக்க பெண்கள் பெருங்குரலில் அழுது ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தனர் ஒப்பாரிக் கிழவி ஒரு ஓரத்தில் தன் வழக்கமான ஒப்பாரிப் பாடலை அதே ராகத்துடன் ஒப்பித்துக் கொண்டிருந்தாள்.  இடையிடையே பெரிய சப்தத்துடன் மூக்குச் சீந்தல் வேறு.

சற்றுத் தள்ளி கைகட்டி நின்று கொண்டிருந்த தருமன் சவமாய்க் கிடந்த தன் தந்தையை ஊடுருவிப் பார்த்தான்.  ஏனோ அவனுக்குள் சோகமோவேதனையோதுயரமோ..கவலையோ சிறிதும் தோன்றவேயில்லை.  ஏன்..அப்பாவின் மரணம் என்னை மட்டும் கொஞ்சங்கூடப் பாதிக்கவேயில்லை?…” யோசித்துப் பார்த்தான். ஒரு வேளை..எப்பவும் அவருகூட சண்டை போட்டுக்கிட்டே இருந்ததால் என்னையுமறியாம எனக்குள்ளார அவரு மேல ஒரு வெறுப்பு வளர்ந்திடுச்சோ?”

இந்தாப்பாதருமுஅப்படித் தள்ளிப் போயி நின்னுட்டா என்னப்பா அர்த்தம்?..வாப்பாஇப்படி முன்னாடி வந்து நின்னு சாவுக்கு வர்றவங்க கிட்ட கும்பிடு வாங்கிக்கப்பாசெத்துப் போன கொரங்காட்டி கோவிந்தனுக்கு நீதானே ஒரே மகன்?” ஊர்ப் பெரியவர் கத்தலாய்ச் சொல்ல,

உடம்பெல்லாம் எரிந்தது தருமனுக்கு.

வேலை வெட்டியில்லாத வெறும்பயல்தண்டச் சோத்து தடிராமன்தண்டுவன்..என்று பலவிதமான வசை வார்த்தைகள் தன் மேல் எறியப் படும் போதெல்லாம் சிறிதும் ஆத்திரப்படாமல் மௌனமாய்த் தன் கோபத்தை விழுங்கிக் கொண்டு நகரும் தருமனால் கொரங்காட்டி மகன் என்று யாராவது அவனை அடையாளம் கூறி விட்டால் போதும் ருத்ரமூர்த்தி ஆகிவிடுவான்.

யோவ்எம் பேரு தருமன்..அதைச் சொல்லி அடையாளம் சொல்லுஇல்லையா எங்கப்பன் பேரு கோவிந்தன் அதைச் சொல்லி அடையாளம் சொல்லுஅதென்னய்யா கொரங்காட்டி மகன்?” பற்களை நற..நறவென்று கடித்துக் கொண்டு கத்துவான்.

அடஇப்ப என்ன சொல்லிட்டாங்க?…உங்கப்பனோட தொழிலு அதானே?…அதைத்தான் சொன்னோம்,”

என்னய்யா பொpய தொழிலு..கொரங்காட்டித் தொழிலுஅந்தக் கெழம்தான் வேற தொழில் பண்ண வக்கில்லாம..கேவலம் கொரங்கைப் புடிச்சுக்கிட்டு ரோடு ரோடா திரியறான்னா..என்னையும் எதுக்கய்யா கொரங்காட்டி மகன்னு சொல்லிச் சொல்லி கேவலப்படுத்தறீங்க?..இனிமே எந்தச் சிறுக்கி மவனாது என்னைய கொரங்காட்டி மகன்னு சொல்லட்டும் அப்புறம் காட்டறேன் நான் யாருன்னு

க்கும்இதுக்கு ஒண்ணும் கொறைச்சலில்லைஅந்தத் தொழில்ல சம்பாரிச்ச காசுல தின்னு வளர்ந்த ஒடம்பு பேசுற பேச்சைப்பாரு என்று சொல்லி விட்டு சம்மந்தப்பட்டவர்கள் நகர,

கூசிப் போய் நிற்பான் தருமன்.

ஆஹாவானம் கடாமுடாங்குது..மழை கிழை புடிக்கறதுக்கு முன்னாடி சவத்தைத் துhக்க ஏற்பாடு பண்ணுங்கப்பா முண்டாசு கட்டியிருந்த காரியக்காரனொருத்தன் திடிரென்று எழுந்து பொத்தாம் பொதுவாய் உரத்த குரலில் சொல்ல,

துரித கதியில் காரியங்கள் நடைபெற்று. அடுத்த அரை மணி நேரத்தில் கொரங்காட்டி கோவிந்தனின் சடலம் காடு நோக்கிப் பயணப்பட்டது.

அடுத்த வாரத்தில் ஒரு நாள்,

மொட்டைத் தலையுடன் திண்ணையில் அமர்ந்திருந்த தருமனை அவன் தாய் வடிவாத்தாள் வார்த்தைகளால் இடித்தாள்.

அந்த மனுசன் இருந்தப்ப எப்படியாச்சும் நாலு தெரு சுத்தி தெனமும் பத்து இருபதுன்னு கொண்டாந்து வீட்ல அடுப்பொpய வெப்பாருஇவனுந்தான் இருக்கானே திண்ணையைத் தேய்ச்சுக்கிட்டு

திரும்பி தாயை முறைத்தான் தருமன்.

க்கும்இந்த மொறைப்புக்கொண்ணும் கொறைச்சலில்லைஅட..இந்த வீட்டுக்குள்ளார மனுசங்க பட்டினியாக கெடந்தாக் கூட பரவாயில்லைஅதா அந்தக் கொரங்கு..பாவம் வாயில்லா ஜீவன்அதுக்கு வயித்துக்கு ஏதாச்சும் குடுக்கறதுக்காவது ஏதாச்சும் சம்பாரிக்க வேணாமா?..இத்தினி நாளு அது சம்பாரிச்சுக் குடுத்ததைத்தானே நாம தின்னோம்?”

பொறுமையிழந்த தருமன் வேகமாக எழுந்து தன் தாயிடம் வந்து அவள் தாடையைத் தொட்டுத் தூக்கி ம்மோவ்..இத்தினி நாளு நான் எப்படியோ..ஆனா இனிமே நான் பழைய தருமனில்லகடைசி வரைக்கும் உன்னைய உக்கார வெச்சு சோறு போட வேண்டியது என்னோட கடமை..அதை நான் செய்வேன்..நீ ஏதும் பேசாத

அப்படின்னா இன்னிக்கே அந்தக் கொரங்கப் புடிச்சுக்கிட்டு தொழிலுக்குக் கௌம்பு மகன் திருந்தி விட்ட சந்தோஷத்தில் வடிவாம்பாள் கூவினாள்.

ம்ஹூம் கொரங்காட்டித் தொழிலு எங்கப்பனோட போகட்டும்

அப்புறம்?…கலெக்டர் உத்தியோகம் பாக்கப் போறீகளாக்கும் கிண்டல் தொணித்தது வடிவாம்பாளின் குரலில்.

சட்டென்று சீரியஸாகிப் போன தருமன் ஏம்மா..ஆறறிவு படைச்ச மனுசன் அஞ்சறிவு மிருகத்தொட வித்தைகளைக் காட்டி..காசு சம்பாரிச்சுஅதுல வயிறு வளர்க்கனுமா?…கேவலமாயில்லை?…அந்தக் கொரங்கு மனசுக்குள்ளார என்ன நெனைக்கும் மனுசங்களைப் பத்தி?.. “ஓ..மனுசங்களுக்கு தானாசுயமா எதுவும் செய்யத் தெரியாதுஅதனாலதான் நம்மைச் செய்ய வெச்சு..அதுல சம்பாரிச்சு சோறு திங்கறான்நம்மை விட்டா அவனுக்கு வேற கதி கெடையாதுநம்ம தயவு இல்லாட்டி அவன் பொழைக்கவே முடியாதுன்னு நெனைக்காதா?” என்றவன் மள..மளவென்று எழுந்து நடந்து அந்தக் குரங்கை அவிழ்த்து விரட்டினான்.

வருஷக் கணக்கில் ஒரு கயிற்றுச் சிறையில் சிக்கிக் கொண்டு கொடுப்பதை மட்டும் சாப்பிட்டுக் கொண்டு சொல்கிற வித்தைகளை மட்டும் செய்து கொண்டு கூண்டு வாழ்க்கையை அனுபவித்து அலுத்துப் போயிருந்த அந்தக் குரங்கு ஒரே தாவலில் பக்கத்து மரத்தில் ஏறிக் கொண்டது.  அங்கிருந்து கீழே நின்று கொண்டிருந்த தருமனைப் பார்த்து ப்ப்ப்ர்ர்ர்என்று சப்தமெழுப்பி விட்டு  படு வேகமாக கிளைகளில் ஏறிஅடுத்த மரம்அடுத்த மரம்..எனத் தாவித் தாவி மறைந்தே போனது.

அய்யய்யோஅடப் பாவிப் பயலேபொழப்பையே கெடுத்திட்டியே….வித்தை காட்டுற கொரங்க வெரட்டி விட்டுட்டியே…” என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அலறினாள் வடிவாத்தாள்.

ச்சைகத்தாதேகொரங்கு சம்பாரிச்சுக் கொடுக்கற காசை நான் சம்பாரிக்க மாட்டேனா?..ஒரு அஞ்சறிவு மிருகத்து மேல இருக்கற நம்பிக்கை நீ பெத்த மகன் மேல் இல்லையா?”

அடேய்..வெறும்பயலேஅது வித்தை காட்டும்நீ….?”

பதில் பேசாது குறுஞ்சிரிப்போடு நகா;ந்தவன் மாலை வீடு திரும்பும் போது கை நிறைய சில்லரைக் காசுகளோடும்உடம்பு நிறைய அசதியோடும் வந்தான்.

அவன் கொண்டு வந்து கொட்டிய சில்லரைக் காசுகளை யோசனையோடு பார்த்த வடிவாத்தாள் இதென்ன பூராவும் சில்லரைக் காசுகளாவே இருக்குது?….ஏண்டா தருமு கொரங்கு திரும்ப வந்து..வித்தை காட்ட ஆரம்பிச்சிடுச்சா?”

மகன் மனசு மாறி அப்பனைப் போல கொரங்காட்டித் தொழிலுக்கே வந்திட்டானோ என்கிற நப்பாசையில் அவசரமாய்க் கேட்டாள்.

முறைத்தான் தருமன்.

பொறவு?..இதுகளை எங்கஎப்படிச் சம்பாரிச்சே?”

ம்ம்ம்பஸ் ஸ்டாண்டு ரோட்டுல சொல்லியபடியே அவன் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட,

வடிவாத்தாள் குழப்பத்திலாழ்ந்தாள்.

எப்படிஎப்படி சம்பாரிச்சிருப்பான்?…பஸ் ஸ்டாண்டு ரோட்டுலன்னு வேற சொல்றான்ஒரு வேளை பிச்சை கிச்சை எடுக்கறானோ?” அவளுக்கு அந்தச் சில்லரைக் காசுகளைப் பார்க்கவே அருவருப்பாயிருந்தது. கேடு கெட்ட பயலேஉங்கப்பன் செஞ்ச கொரங்காட்டித் தொழிலைக் ;கேவலம்ன்னு பேசிட்டு அதைவிடக் கேவலமான தொழிலுக்குப் போயிட்டியே….வர்றேன்….நாளைக்கே வர;றேன்நீ பிச்சை எடுக்கற அதே பஸ் ஸ்டாண்டுக்கு வந்து அங்கியே உன் மானம் மரியாதிய கெடுக்கறேன்…” உள்ளுக்குள் கறுவிக் கொண்டாள் வடிவாத்தாள்.

மறுநாள்.

காலை பதினொரு மணியிருக்கும்,

பஸ் ஸ்டாண்டு ரோட்டிற்கு படு ஆவேசமாகக் கிளம்பிச் சென்ற வடிவாத்தாள் அங்கு கண்ட காட்சியில் வாயடைத்துப் போய் கற்சிலையாய் நின்றாள்.

ஒரு சிறிய கும்பலுக்கு நடுவில். உடலெல்லாம் வியர்வை ஆறாய் ஓட தானே குரங்காய் மாறி வித்தை காட்டிக் கொண்டிருந்தான் தருமன்.

நின்ற நிலையிலிருந்து மேலெழும்பி அந்தரத்தில் பல்டியடிப்பது, முன்னும் பின்னுமாய் சரமாரியாய்க் குட்டிக் கரணம் போடுவது, நெருப்பு வளையத்திற்குள் தாவுவது, கம்பி மேல நடப்பது, என தன் தந்தை அந்தக் குரங்கை வைத்து என்னென்ன வித்தைகளைச் செய்தாரோஅந்த  வித்தைகளைத் தானே செய்து கொண்டிருந்தான் தருமன்

ஏம்மா ஆறறிவு படைச்ச மனுசன் அஞ்சறிவு மிருகத்தோட வித்தைகளைக் காட்டி..காசு சம்பாரிச்சுஅதுல வயிறு வளர்க்கனுமா?…”

மகன் நேற்று கேட்ட அந்தக் கேள்வி வடிவாத்தாளின் செவிகளில் இப்போது ஒலித்தது.

பயலே நீ ரோஷக்காரண்டாபொழைச்சுக்குவேடா தாயின் வாய் தானாக முணுமுணுத்தது.

 

                                                                              (முற்றும்) 

mukildina@gmail.com