ஈரம்

 

ஜெயந்தி சங்கர்

 

 

'என்ன சட்டம், என்ன ஒழுங்கு, இந்த ஊருக்கு இணையே இல்ல' இதையே ஓராயிரம் முறை சொல்லியிருப்பேன். காலை வைக்கக் கூசும் சுத்தமான ரயில் நிலையத் தரைகள், எறும்பின் சுறுசுறுப்புடன் பல இன முகங்கள், சாலையில் வரிசையாய் வழுக்கிக் கொண்டோடும் வாகனங்கள், விண்ணைத் தொட்ட கட்டிடங்கள், கருத்துடன் வளர்க்கப் படும் சாலையோர மரங்கள், எங்கும் நிறைந்திருக்கும் சுத்தம் எல்லாவற்றையும் பட்டிக் காட்டானாய் வாய் பிளந்து பார்த்தேன். 'சாங்கி'

விமான நிலையம் வந்திறங்கி, 'பூலோகம் தானா?!' என்று வியந்த அந்த நாளை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது.

 

நான்கு வருடங்களுக்கு முன், எங்களூரான கருப்பூரிலிருந்து பாதிக் கிராமம் மீனம்பாக்கம் வந்திருந்தது. பஸ்ஸில் பயணிகளில் பாதிக்கு மேல் என் சொந்தங்களும் கிராம ஆட்களும். நான் ஏதோ பெரிய படிப்புப் படித்து உத்தியோகத்திற்காக வெளிநாடு போவது போல. எனக்குக் கிடைத்திருந்தது சாதாரணப் 'பணிப்பெண்' உத்தியோகம் என்பதையும் கடந்து, 'சிங்கப்பூருக்குப் போறா எங்கொழுந்தியா", என்று என் அக்கா வீட்டுக்காரரும், மற்றவர்களும் பெருமைப் பட்டதற்குக் காரணம், இந்த ஊரின்பால் அவர்களுக்கிருந்த ஆகர்ஷணமேயன்றி எனது வெளி நாட்டுப் பயணம் அல்ல. நான்கு பேரிடம் கௌரவமாகச் சொல்லிக் கொள்ளலாமே. 'இந்த விதவைக்கு வந்த வாழ்வப் பாரேன்டா', என்று உள்ளுக்குள் பொறாமைப் பட்டவர்களும் அதில் அடங்கினர். பிள்ளைகள் சோகம் அப்பிய முகத்துடன் எனக்கு விடை கொடுத்தனர்.

 

         அன்று நினைத்துக் கொண்டேன். இன்னும் சில வருடங்களில் பெரியவனை அதே போல ஏற்றிவிட வேண்டுமென்று; நல்ல உத்தியோகத்திற்கு. அதற்கான ஆயத்த முயற்சி தான் இரண்டு மகன்களையும் மாமியாரிடம் விட்டு விட்டு நான் கிளம்பியது. பேரன்களைப் பார்த்துக் கொள்ளும் முழுப் பொறுப்பையும் அவர் ஏற்றதால் தான் என்னால் இன்று இங்கு பொருளீட்ட முடிந்தது.

 

அப்போது பெரியவனுக்குப் பதினேழும் சின்னவனுக்கு பதினொன்றுமே முடிந்திருந்தது. இப்போதோ மூத்தவன் பொறியியல் கல்லூரியில் மூன்றாவது வருடத்தில். நான்கு வருடத்தில் ஒருமுறை கூட ஊருக்குப் போகத் தோன்றவில்லை.

விமான கட்டணத்திற்குரிய பணத்தை ஊருக்கு அனுப்பினால் உபயோகமாகவாவது இருக்கும் என்றே நினைத்து வந்தேன். சென்ற மாதம் பெரியவன், "எனக்கு ஒரு பைக் வாங்கணும்மா,..", என்றதுமே துளியும் தயங்காமல், "ம், வாங்குவோம்.

அடுத்த மாசமே பணமனுப்பறேன், நீ நல்லாப் படிப்பா", என்று சொல்லியிருந்தேன் அவனிடம் போனில். அவனை ஆளாக்கி விட்டால் இளையவனின் கல்விப் பொறுப்பை அவன் ஏற்றுக் கொள்வான் என்ற பெரும் நம்பிக்கை.

     

வந்த புதிதில் ஒவ்வொன்றும் புதுமையாக இருந்தது. சின்னச் சின்ன விஷயத்தையும் ஆர்வமாய் ஆசையாய் பார்த்துப் பார்த்து ரசிக்கவும் ஊரோடு ஒன்றவுமே கிட்டத் தட்ட ஒரு வருடமானது. மூங்கில் கழிகளில் துணிகளை உலர்த்திக் க்ளிப் போட்டு, சன்னலுக்கு வெளியே கொடுத்து அங்கிருந்த துளைகளில் நுழைத்து வைக்கும் வித்தையை எனக்குப் பொறுமையாகச் சொல்லிக் கொடுப்பதற்குள் ரோகிணி எடுத்த விடுப்பும் கூட முடிந்து விட்டிருந்தது.

 

      என்னைக் காட்டிலும் ஏழெட்டு வயது இளையவரேயானாலும் 'அம்மா' என்றே நான் என் முதலாளியான ரோகிணியை அழைத்து வந்தேன். 'மேடம்' என்றழைக்க ஏனோ என் நாக்குக்குக் கடைசி வரை வரவேயில்லை. வெளிறிய வண்ணப் புடைவையைத் தவிர வேறு உடைக்குள் புகவும் என்னுடல் ஒப்பவில்லை.

 

      அவர்களது ஒன்றரை வயதான செல்ல மகள் ஸ்வேதாவும் 'ஆண்டி, ஆண்டி' என்று என்னோடு ஒட்டிக் கொண்டாள். குடும்பத்தில் ஒருத்தியாகவே இருந்து வந்தேன்.

என்னால் அவர்களுக்கோ அவர்களால் எனக்கோ பிரச்சனை என்று ஒன்று வந்ததே இல்லை. ரோகிணியும் சரி, அவளது கணவரும் சரி என்னை நடத்தும் விதம் சிங்கை நாளிதழ்களில் பணிப்பெண்களை முதலாளிகள் துன்புறுத்தும் செய்திகளைக் கேலி செய்வதாய் இருக்கும். எங்கள் 'திலோக் ப்ளாங்கா' வட்டாரம் என் மனதில் பதிய ஒரு வருடம் பிடித்தது.

     

மின்தூக்கியைப் பயன்படுத்த மட்டும் எனக்குத் தயக்கம். யாரேனும் உடனிருந்தால் மட்டுமே ஆறாவது மாடிக்குச் செல்ல லிப்டைப் பயன் படுத்தினேன். தனியே இருந்தால், விறுவிறுவென்று படிகளில் ஏறி விடுவேன்.

ஸ்வேதா கூட, "என்ன ஆண்டி, இப்பிடி பயப்படறீங்க?", என்று கேலி செய்வாள்.

 

      மின்தூக்கியில் தனியே ஏற வேண்டிய நிர்பந்தம் அன்று தான் ஏற்பட்டது.

ஸ்வேதாவைப் பள்ளியில் விட்டுவிட்டுத் திரும்பும் போது வழியில் செல்வி ஸ்டோரில் எனக்குத் தேவையான 'ஹமாம்' சோப்பு வாங்க வேண்டியிருந்தது. எதிர் பூக்கடையில் பூக்கட்டிக் கொண்டிருந்த ஆள் புதிதாகத் தெரிந்தான். பூக்கடை முதலாளி கண்ணில் படவில்லை. கொஞ்சம் பூஜைக்கு உதிரிப்பூ வாங்கிக் கொண்டே, "முன்னாடியிருந்த ஆள மாத்திட்டாங்க போல?", என்று சாதாரணமாய்க் கேட்டேன்.

"ஆமாங்க்கா. போன வாரத்துலேருந்து நாந்தாம் பூக்கட்டறேன். நீங்க எந்தூருக்கா?", என்று வெகு நாட்கள் பழகியவனைப் போல பதில் சொன்னான் அந்த இளைஞன்.

 

      தன்னுடைய ஊரிலிருந்து வந்தவராய் இருந்தால் தன் குடும்பத்தினரையே பார்த்த மகிழ்ச்சி இவர்களுக்கு. நானும் நின்று பேசினேன். 'பெர்மிட்'

இருக்கறவங்களுக்கு ஒரு மணிநேர பூக்கட்டும் வேலைக்கு பத்து வெள்ளியென்றால், 'பெர்மிட்' இல்லாதவங்களுக்கு அதில் பாதி கொடுத்தாலே போதுமாம். அவன் பெர்மிட் இல்லாமல் பாஸ்போர்ட்டையும் 'தொலைத்து'

விட்டவனாம். எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. பிடிபட்டால் தீர்ந்தான்.

 

      நிலம், நகை என்று ஏகமாய் விற்று விட்டு நான்கு வருட வேலையென்று அழைத்து வரப்பட்டு, ஆறு மாதம் முடிவதற்குள் வேலை செய்த காண்ட்ரேக்டர் கையை விரித்து விட்டதில் தலைமறைவு வாழ்க்கை. "தங்கச்சி கல்யாணம் முடியற வரைக்காச்சும் கெடைக்கற வேலைல ஏதாவது சம்பாரிச்சு அனுப்பணும்கா." பார்க்க மிகவும் பாவமாய் இருந்தது.

     

நேரமானதை உணர்ந்தவுடனே வீட்டை நோக்கி விரைகையில் சொடசொடவென்று முன்னறிவிப்பேயில்லாமல் மழை பெருந்தூறலாகக் கிளம்பியது. அடுக்குமாடிக் கீழ்த் தளங்களில் புகுந்து நிற்காமல் நடந்தேன். ஆனாலும், ஆடைகள் நனைந்து விட்டன. சமையல் வேலை இருந்ததால், வேறு வழியில்லாமல் தனியாக லிப்டில் ஏறினேன். ஏறும் போது பாதியிலேயே ஒரு குலுக்கலுடன் நின்றது. பகீரென்று அடிவயிற்றில் பயம் கவ்வியது.

     

இன்னும் ஆறாவது மாடியும் வந்திருக்கவில்லை என்பது புரிந்தது. கதவைத் திறக்கும் பொத்தானை அழுத்திப் பார்த்தேன். ¥¥ம், கதவு திறக்காமல் சதிசெய்தது. உள்ளே புழுக்கமும் இருட்டும் சேர்ந்து ஒரே அவஸ்தையாக இருந்தது. யாரும் வராமல், கதவைத் திறக்காமல் அங்கேயே செத்து விடுவோமோ என்றெல்லாம் விபரீதக் கற்பனைகள் தோன்றின. கண்டு பிடித்து உடலை எடுக்கும் போது அழுகியிக்குமோ என் சடலம். சிங்கப்பூரில் செத்தால் என் சாவும்கூட என் கிராம மக்களுக்கு பிரமிப்புச் செய்தி தானோ. அப்படிச் செத்து விட்டால் சின்னவனைப் பெரியவன் ஆளாக்குவானா?,...

     

லிப்டின் உள்ளேயிருந்த மணியை அழுத்திய படியிருந்தேன். கணங்கள் யுகங்களாகத் தோன்றின. சாதாரணமாகவே பயந்தவளான எனக்கு மிகவும் பயமாயிருந்தது. முகத்தில் முத்து முத்தாய் வியர்த்தது. உள்ளங்கைகள் ஜில்லிட்டு விட்டன. ஆடைகள் ஈரத்தினால் உடலோடு ஒட்டிக் கொண்டன. என்ன செய்வதென்றே தெரியவில்லை. நான் மின்தூக்கியில் சிக்கிக் கொண்டது ரோகிணிக்கு எப்படித் தெரியும் என்ற கவலை வேறு அரித்தது.

     

வெகுநேரம் கழித்து கொட்டித்தட்டும் சத்தம் கேட்டது. பேச்சுக் குரல்களும் உடன் கேட்டன. மின்தூக்கியைப் பழுது பார்த்தனர். சில நிமிடங்களில் அசைந்து மேலேறத் தொடங்கியது. கதவு திறந்தது, ஆறாம் மாடியில். வெளியே சின்னதும் பெரியதுமாய் இரைந்து கிடந்த ஆயுதங்களைக் கீழே குத்த வைத்து உட்கார்ந்திருந்த மலாய்க்காரர் ஒவ்வொன்றாகப் பொருக்கிப் பெட்டியில் போட்டுக் கொண்டிருந்தார். அவர் கொஞ்சம் நகர்ந்து வழிவிட்டதும் நான் சிறையிலிருந்து விடுதலையான பெரும் நிம்மதியோடு வீட்டை நோக்கி விரைந்தேன்.

என் பின்னாலேயே ஒரு சீனர் ஓடி வந்து ஆங்கிலத்தில் ஏதோ கேட்டார். அவர் தான் மின்தூக்கியைப் பழுது பார்க்கும் வேலைக்கு சூபர்வைஸர் என்று கூறிக் கொண்டே என்னை உடன் வரச் சொன்னார். கைக்கடிகாரத்தைப் பார்த்த எனக்கு அதிர்ச்சி! இருபது நிமிடங்களுக்கு மேல் உள்ளேயிருந்திருக்கிறேன்.

வேலையெல்லாம் அப்படியே கிடந்தன. இதில் இந்த ஆள் வேறு எதற்குக் கூப்பிடுகிறான் என்று யோசித்த படியே பின்னால் போனேன்.

           

லிப்டின் தரையில் தேங்கியிருந்த குட்டிக் குளத்தைக் காட்டி, "யூ பாஸ்ட் யூரின்?", என்றதும் எனக்கு மிகவும் கூச்சமாகி விட்டது. எத்தனை முறை 'நோ லா' என்று  சொல்லியும் விடாமல் கேட்டார் அவர். நான் மறுபடியும் ஓடோடி வீட்டியடைந்து கதவைத் திறந்து ஆடைகளைக் களையுமுன் குக்கரில் சாதமும் பருப்பும் மட்டும் வைத்தேன்.

     

அப்போது வாயிற்கதவு திறக்கும் ஓசை கேட்டது. ரோகிணி தான் வந்திருந்தார்.

கூடத்தை எட்டிப் பார்த்தால் அவசர அவசரமாய் எதையோ தேடுவது தெரிந்தது.

"இங்க ஒரு 'யெல்லோபைல்' இருந்திச்சே பார்த்தீங்களாம்மா? ஆமா, ஏன் ஒரு மாதிரியிருக்கீங்க? டிரெஸ்ஸெல்லாம் வேற ஈரமாயிருக்கு?", என்று அக்கறையோட கேட்டதும், மழையில் நனைந்ததையும் லிப்டில் மாட்டிக் கொண்டதையும் சொன்னேன். "எப்பயும் ஏறவே மாட்டீங்களே. ரொம்ப பயந்திட்டீங்களா?", என்றதற்கு பதில் சொல்லும் முன், வாசற்கதவில் நிழலாடியது. அதே சீனர் மறுபடியும் ரோகிணியிடம் லிப்டில் சிறுநீர் கழித்தேனாவென்று என்னைக் கேட்டுச் சொல்லச் சொன்னார். ரோகிணி என்னைத் திரும்பிக் கேட்டு விட்டு நான் இல்லையென்றதும் அவரிடம், ஆடையில் இருந்த மழைத் தண்ணீர் தான் சொட்டிச் சொட்டித் தேங்கியிருக்கும் என்று கூறி அனுப்பினார்.
jeyanthisankar@gmail.com