நடத்துங்க சோதிடரே!

                                     - குவோ ஸிஹாய்

(சிங்கப்பூர் சீனச் சிறுகதை - தமிழில்: ஜெயந்தி சங்கர்)

 ஆசிரியர் குறிப்பு:

1944லில் சிங்கப்பூரில் பிறந்த இவரின் இயற்பெயர் கோக் ஸீ ஹாய். இவர் நன்நாயாங் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். பிறகு சிங்கப்பூர் பாடத் திட்டத்துறையில் பணியாற்றினார். பெரும்பாலும் கட்டுரைகள் மற்றும் சிறுகதைகள் எழுதியுள்ளார். 'முடிவற்ற காத்திருத்தல்' (1964), 'இளமையின் காலடிச் சுவட்டில்' (1967) மற்றும் 'நினைவுகள் பறந்து போகட்டும்' (1977) போன்ற சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். 'நடத்துங்க சோதிடரே!' - கதையின் இறுதியில் குறிப்பாக ஆசிரியர் - ஆவிகளின் மீதான நம்பிக்கைக்கு தான் எவ்விதத்திலும் எதிராக எழுதவில்லை என்றும், இந்தக்கதை ஒரு உருவகக் கதை என்றும் சொல்கிறார்.

சுட்டெரிக்கும் வெயிலில் பூமியே வியர்வையில். மிகவும் கடுமையான வெம்மைமிகு நாள். மயானம் ஒரு உயிரினமும் இல்லாது அமைதியாக இருந்தது.

மரத்தின் கீழ் மூன்று ஆவியுருக்கள் மட்டும் தொடர்ச்சியற்ற உரையாடலில்.

"அனல் பறக்குது. அப்பா, என்ன வெயில், என்ன வெயில்! தாங்கவே முடியல்ல", ஐந்தாம் சகோதரரின் ஆவி சொன்னது.

"உயிரோட இருந்த போது இறை நம்பிக்கை கொண்டு இருந்திருந்தால், இப்போது இங்கு இத்தனை கஷ்டப்பட வேண்டாம். சொர்க்கத்தில் இருந்திருப்போம்", ஆறாம் சகோதரரின் ஆவி அலுத்துக் கொண்டது.

"ஆனால், யாருக்குத் தான் தெரியும், இவ்ளோ சீக்கிரமே நாம் இறந்து போவோம் என்று?", ஏழாம் சகோதரரின் ஆவி கருத்துரைத்தது. "நான் என் ஜாதகத்தைக் கணித்த ஒரு ஜோசியரைக் கேட்டேன். ஐம்பத்தெட்டு வயதுக்குப் பிறகு நான் பணக்காரன் ஆவேன் என்றும் நூற்றி இருபது வயது வரை வாழ்வேன் என்றும் அவர் சொன்னார். ஆனால், யாருக்குத் தெரியும் அவரது கணிப்பு இத்தனை தவறாகும் என்று. நான் நாற்பத்தொன்பது வயதில் இறந்தேன். சொர்க்கத்திற்குப் போக முடியாது போனது. ஏனெனில், எனது ஞானஸ்நானத்திற்கு போதிய நேரமிருக்கவில்லை."

"அதெல்லாம் விதி", ஐந்தாம் சகோதரரின் ஆவி சொன்னது. "நாம் மூவரும் உயிரோடு இருக்கும் போதிருந்தே ஒருவரையொருவர் அறிவோம். ஒரே நாளில் இறந்து ஒரே மயானத்தில் புதைக்கப் பட்டோம். ஆனால், இறந்த பிறகு தான் நெருக்கமான நண்பர்களானோம். இப்போது எனக்கு என்ன வருத்தம் என்றால், இறந்து பல வாரங்களாகியும், நாம் இப்படித் தனிமையில் இருக்க வேண்டியிருக்கிறதே.

யாரும் நமக்கு கிரியைகள் செய்ய வரவில்லை."

"வேகற வெயில். அதுவுமில்லாம, தூரமும் அதிகம். யாரும் இங்கு வர மாட்டார்கள்", ஏழாம் சகோதரரின் ஆவி பெருமூச்செறிந்தது.

"இவ்வளவு எதிர்மறையாகப் பேசாதே", ஆறாம் சகோதரரின் ஆவி சொல்லிவிட்டு, "உஷ், அமைதியாக இரு. யாரோ மலை மீதேறி வரும் ஓசை கேட்கிறது", என்று சொன்னது.

மூன்றும் நிதானித்துக் கூர்ந்து கேட்டன. உண்மையிலேயே, யாரோ மலை மேலேறி வரும் ஓசை கெட்கவே செய்தது. "இத்தனை வெயில் அடிக்கிறது. யாரும் வருவார்கள் என்றா நினைக்கிறாய்?", என்று ஏழாம் சகோதரரின் ஆவி கேட்டது.

 "ஏதேனும் புது ஆவி வந்து ஏதேனும் அறிக்கை விடப் போகிறதோ?", ஐந்தாம் சகோதரரின் ஆவி நகைச் சுவையாகப் பேசிட முயன்றது.

சில கணங்கள் அமைதியில் போனது. மெதுவாக சிலர் தோன்றினர்.

"பார்! ஒரு தம்பதி. அவர்கள் அலைந்திடும் ஆவியுருக்களா என்ன?", ஆறாம் சகோதரரின் ஆவி ஆச்சரியத்தில் கூவியது.

"எங்கே அவர்கள்?", ஏழாம் சகோதரரின் ஆவி கழுத்தை நீட்டித் தேடியது.

"அவர்கள் அந்நியர்கள். இவர்களை நாம் பார்த்ததே இல்லையே."

"எத்தனை பொறுப்பான குழந்தைகள்! நம்மை நினைவு வைத்திருக்கிறார்கள்.

இத்தனை வெயிலில் இத்தனை தூரம் நடந்து வந்திருக்கிறார்கள்!", ஐந்தாம் சகோதரரின் ஆவி சொன்னது.

"எனக்கு மிகவும் அவர்களைக் குறித்து கவலையாக இருக்கிறது", ஆறாம் சகோதரரின் ஆவி கொஞ்சம் சௌகரியமாக உணர்ந்து சொன்னது. "எத்தனை வெயில் இன்று. அவர்களுக்கு இந்த வெயிலால் 'ஸன் ஸ்ட்ரோக்' வந்தால், இறந்து எம்முடன் சேர்ந்து விடுவார்கள்."

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிக் கொண்டே வியர்த்தபடியே அவர்களிருவரும் மரத்தை நோக்கி வந்தனர். அந்தப் பெண் கொஞ்சம் பெருமனாக முப்பது மதிக்கும் படியிருந்தாள். அந்த ஆண் எலும்பும் தோலுமாக, நாற்பது வயதில் இருந்தான்.

"அடடா!", என்று ஆச்சரியப் பட்டது ஐந்தாம் சகோதரரின் ஆவி.

"யார் அவர்கள்?", என்று கேட்டது ஆறாம் ஐந்தாம் சகோதரரின் ஆவி அவசர அவசரமாக, ஐந்தாம் சகோதரரின் ஆவிக்கு வேண்டியவர்களென்று புரிந்து கொண்டு.

"ஐயய்யோ! அவர்கள் எங்கள் வீட்டுக்காரரும் அவர் மனைவியும்! இந்த நேரத்தில் இங்கு என்ன செய்கிறார்கள்?", என்றது ஐந்தாம் சகோதரரின் ஆவி.

"உனக்காகத் தான் வருகிறார்களோ என்னவோ!", என்றது ஏழாம் சகோதரரின் ஆவி.

 "இருக்காது. நாங்கள் என்றுமே சுமுகமான உறவில் இருந்ததேயில்லை. தவிர, நான் அவருக்கு வாடகை பாக்கி வேறு அவ்வப்போது வைத்திருந்தேன்.

வீட்டுக்காரர் என்னைத் துரத்தியடிக்க நினைத்தார். அவர் மனைவியிடம் கெஞ்சியிருக்கிறேன். நண்பர்களிடம் கடன் வாங்கி அவரின் மகனைத் திரைப் படத்திற்கு அழைத்துக் கொண்டு போனேன். நான் இறந்த போது அவர்கள் ஒரு மாலை கூட வாங்கி வரவில்லை. எனக்காக அவர்கள் வந்தாலும் என்னால் அவர்களுடன் பேச முடியாது. நான் உயிருடன் இருந்த போது மிச்சம் வைத்திருந்த கடனையும் செலுத்த முடியாது. அவர்களுக்கு என்ன தான் வேண்டும் என்று பார்ப்போம்", என்றது ஐந்தாம் சகோதரரின் ஆவி.

கொஞ்ச நேரம் ஓய்வெடுத்ததும், அந்தப் பெண்மணி கண்களைத் துடைத்துக் கொண்டு கண்ணைத் திறந்து ஒரு கணம் சரியான கல்லறை தானா என்று உறுதிப் படுத்திக் கொண்டாள். கூடையிலிருந்து சில மாண்டரின் ஆரஞ்சுகள், வறுத்த கோழி, சில துண்டு பன்றிக்கறி, மேலுலகப் பணம் மற்றும் சில வத்திக் காகிதங்களையும் எடுத்து முறையாக அடுக்கினாள்.

"ஐந்தாம் சகோதரரே, எங்களுக்கும் விருந்தில் பங்கு கொடுக்க வேண்டும்.

உயிரோடு இருந்த போது நான் கோழி சாப்பிட்டதேயில்லை", வறுத்த கோழியின் வாசத்தைப் பிடித்த படியே ஏழாம் சகோதரரின் ஆவி சொன்னது.

இந்த கட்டத்தில், ஐந்தாம் சகோதரரின் ஆவி உணர்ச்சி வசப் பட்டது.

கண்ணீரால் நிறைந்தன அதன் கண்கள். இந்தத் தம்பதி தன்னுடன் நட்பாக இருக்கவில்லை தான் உயிரோடு இருந்த போது. ஆனால், அவர்கள் நினைவு வைத்திருந்து, வெயிலில் சிரமப் பட்டு அத்தனையும் கொண்டு வந்து படைத்தனர்.

மிகவும் நன்றியுணர்வு பெறுகியது ஐந்தாம் சகோதரரின் ஆவி.

 "ஐந்தாம் சகோதரரே, ஒழுங்காக உட்காருங்கள். அவர்கள் உங்களை வணங்குகிறார்கள்", என்றது ஆறாம் சகோதரரின் ஆவி. ஐந்தாம் சகோதரரின் ஆவி அவர்களுக்கு நேராக நிமிர்ந்து உட்கார்ந்து ஏற்றது. அதற்குப் பிறகு, அந்தப் பெண்மணி முழந்தாளிட்டு வணங்கினாள்.

 "ஐந்தாம் சகோதரரே, நான் உங்களை என்றுமே கொடுமைப் படுத்தியதில்லை, நம்மிடையே நட்பில்லாதிருந்த போதிலும். சில நேரங்களில் வாடகையைக் கொடுக்காத போது நான் உங்களிடம் கொஞ்சம் கெடுபிடியாக இருந்திருப்பேன்.

நான் உங்களின் பாக்கியைக் கூட விட்டுக் கொடுத்து விட்டேன். உங்களின் திடீர் மரணத்தினால் நாங்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்தோம். இப்போது, உங்களுக்கென்று சிறப்பாக சமைத்துக் கொண்டு வந்திருக்கிறேன் உணவு வகைகளை.

நமது பழைய நட்பின் காரணமாக."

 அவளின் சொற்கள் உண்மையில் ஐந்தாம் சகோதரரின் ஆவியின் மனதைக் கரைத்து விட்டதால் ஐந்தாம் சகோதரர் விம்மினார்.

"அதே நேரத்தில் எங்களுக்கு தயவு செய்து நீங்கள் உதவ வேண்டும்", என்றபடி முழந்தாளிட்டார்.

 "என்னிடம் உதவியா?", வியந்தது ஐந்தாம் சகோதரரின் ஆவி.

  "ஏதோ காரியத்துடன் தான் வந்திருப்பதாகத் தெரிகிறது", என்றது ஆறாம் சகோதரரின் ஆவி.

  "என்ன தான் சொல்கிறார்கள் என்று கவனி", என்று சொன்னது ஏழாம் சகோதரரின் ஆவி.

 "ஐந்தாம் சகோதரரே, உங்களுக்குத் தெரியுமா, எங்களின் முக்கிய வருமானமே குதிரைப் பந்தயத்திலிருந்து. ஆனால், சமீபத்தில் எங்களுக்கு ஒரே துரதிருஷ்டம். எப்போதும் தோல்வி. மிகுந்த நட்டம். கிட்டத் தட்ட ஓட்டாண்டியாகி விட்டோம். மற்றவருக்கு உதவிடும் பண்புண்டு உங்களுக்கு.

ஆகவே, அடுத்த குதிரைப் பந்தயத்தின் போது வந்திருந்து எங்களுக்கு உதவிட வேண்டும் என உங்களிடம் கேட்கவே நாங்கள் வந்தோம். நாங்கள் முதல் பரிசு வாங்குமாறு செய்யுங்கள். நாங்கள் விட்டதைப் பிடிக்கவும் உதவுங்கள்.

இல்லையென்றால், நாங்கள் தொலைந்தோம்!"

"எங்களிடம் கருணை காட்டிடுங்கள். எங்களைக் கத்திடுங்கள்", என்று விம்மியழுதாள் வீட்டுக்காரர் மனைவி.

 "இம்முறை நீங்கள் எங்களுக்கு உதவவில்லையென்றால் இறப்பதைத் தவிர வேறு வழியில்லை", வீட்டுக்காரர் தன் பங்குக்கு அழுதார்.

 "தயவு செய்து அங்கு தோன்றி உங்களின் சக்தியைக் காட்டுங்கள். இதை மட்டும் நீங்கள் செய்து விட்டால், உங்களுக்கென்று ஆலயத்தில் பெரிய படையல் கொடுப்போம். உங்களின் கல்லறையைப் புதுப்பித்து விடுவோம். நீங்கள் இங்கு சௌகரியமாக இருக்கலாம்", என்றபடியே வீட்டுக்காரர் மனைவி மீண்டும் நிலத்தில் விழுந்து கும்பிட்டாள்.

 பெரும் இக்கட்டில் மாட்டிக் கொண்டு விட்டது ஐந்தாம் சகோதரரின் ஆவி. தன் சக்திக்குள் இருந்தால் தானே மற்றவருக்கு அதால் உதவ முடியும்? குதிரைச் சூதில் அதற்கு அத்தனை பரிச்சயம் இல்லை. சொல்லப் போனால், அதைப் பற்றி அதற்கு ஒன்றும் தெரியாது. தன் நிலையை அவளிடம் எடுத்துரைக்கும் நிலையிலும் இல்லை அது. கொஞ்சம் தயங்கி விட்டு, மீண்டும் தொடர்ந்தால் வீட்டுக்காரர் மனைவி. ஒரு பெட்டியை எடுத்துத் திறந்து அதற்குள்ளிருந்த எண்களிட்டிருந்த மூங்கில் கீற்றுகளைக் குலுக்கி, பிரார்த்தித்தாள் உரக்க:

"கருணை காட்டுங்கள்! உங்களின் சக்தியைக் காட்டுங்கள். அடுத்த பாந்தயத்தில் வெற்றி பெறவிருக்கும் முதல் பத்து குதிரைகளின் இலக்கங்களைக் காட்டுங்கள். கருணை காட்டுங்கள்! தயை கூர்ந்து வெற்றியடைய இருக்கும் எண்களைக் காட்டுங்கள்."

 "ஐயய்யோ!", என்று அதிர்ந்தது ஐந்தாம் சகோதரரின் ஆவி. திரும்பித் தன் சக ஆவிகளைப் பார்த்தது. "நான் உயிரோடு இருந்த போதே நான் குதிரைப் பந்தயத்திற்குப் போனதில்லையே. எப்படி நான் குருட்டாம்போக்கில் சொல்ல?"

"புகித் தீமாவில் தான் குதிரைப் பந்தயம் நடக்கிறது என்று கேள்விப் பட்டிருக்கிறேன். கவலையே படாம ஏதாவது ஒரு இலக்கத்தை எடுத்துக் கொடு", என்றது ஏழாம் சகோதரரின் ஆவி.

 "நான் அப்படிச் செய்ய மாட்டேன். கேட்டாயல்லவா, வெற்றி பெறா விட்டால் தற்கொலை செய்து கொள்வோம் என்று சொன்னதை", எனக் கேட்டது ஐந்தாம் சகோதரரின் ஆவி.

 ஆவிகள் செய்வதறியாது ஒன்றையொன்று பார்த்தன. இதே நேரத்தில், வீட்டுக்காரரின் மனைவி  பெட்டியை வேகமாக ஆட்டினாள்.

ஏழாம் சகோதரரின் ஆவிக்கு திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. "இப்படிச் செய்தால் என்ன? 'குதிரைக் கிறுக்கன்' என்று எனக்கு ஒரு நண்பன் இருந்தான்.

அவன் சமீபத்தில் இறந்து போய் இங்கே தான் எங்கேயோ அருகில் புதைக்கப் பட்டான். பெரிய சூதாடி. குதிரைப் பந்தயத் திடல் தான் அவனின் இரண்டாவது வீடே என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அவனுடைய மரணமே குதிரைச் சூதினால் தான் ஏற்பட்டது. நாம் ஏன் அவனைக் கேட்கக் கூடாது?"

"தயவு செய்து அவர்களுக்கு உதவுங்கள்", என்று மன்றாடியது ஐந்தாம் சகோதரரின் ஆவி.

 "இது மிக எளிது. இதோ", என்று சொல்லிவிட்டு ஒன்றன் பின் ஒன்றாக பத்து இலக்கங்களை எடுத்துக் கொடுத்தது குதிரைக் கிறுக்கனின் ஆவி. வீட்டுக்காரர் ஒவ்வொரு இலக்கமாகக் குறித்துக் கொண்டார் மிகக் கவனமாக. வத்திகளை ஏற்றிவிட்டு, சாராயத்தையும் படைத்து விட்டு தம்பதியர் இடத்தை விட்டகன்றனர்.

 "உதவிக்கு நன்றி குதிரைக் கிறுக்கரே", என்றது நிம்மதிப் பெருமூச்சுடன் ஐந்தாம் சகோதரரின் ஆவி.

 ஏழாம் சகோதரரின் ஆவி, "அடுத்த முறை, நாம் நமது நண்பர்களுக்கும் சொந்தங்களுக்கும் இதே போல ஆருடம் சொல்ல வேண்டும். அவர்களும் வெல்லட்டுமே கொஞ்சம். வாழ்க்கையில் அவர்கள் இவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்கவும் வேண்டாம்.

இல்லையா?", என்றது.

"இந்த புது யோசனையைத் தவிர்த்திடுவது நல்லது", சிரித்த படியே சொன்னது குதிரைக் கிறுக்கின் ஆவி.

 "ஏன்?", என்று கேட்டது ஐந்தாம் சகோதரரின் ஆவி. "மிகவும் ஏழ்மையில் துயருரும் சில நண்பர்கள் எனக்கு உண்டு. வருடம் முழுவதுமே மிகவும் கஷ்டப் பட்டு உழைக்கிறார்கள். இருந்தும், அடிப்படைத் தேவைகளே பூர்த்தியாகாத நிலை. அவர்களும் கொஞ்சம் காசு வென்று சௌகரியமாக வாழட்டுமே. இல்லையா?"

"என் நண்பா, நான் உன் வீட்டுக்காரருக்கு எடுத்துக் கொடுத்த இலக்கங்கள் துல்லியமற்றவை. ஓர் உயிரைக் காத்தல் தான தருமத்தை விடச் சிறந்தது என்பார்கள். நீ அவர்களை நரகத்திற்குத் தான் அனுப்புகிறாய். என்ன நடந்தது என்று நான் உனக்குச் சொல்ல வேண்டும். அதாவது,..", என்று துவங்கியது குதிரைக் கிறுக்கனின் ஆவி. அங்கிருந்து கிளம்பிய ஐந்தாம் சகோதரரின் மற்றும் ஏழாம் சகோதரரின் ஆவிகள் மேலும் கேட்டிடும் ஆர்வத்தில் சட்டென்று நின்றன.

 "உண்மை. வீட்டுக்காரர் பணம் வெல்லா விட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று சொன்னது உண்மை", என்றது ஆறாம் சகோதரரின் ஆவி.

 "செய்து கொள்ளட்டுமே", என்ற குதிரைக் கிறுக்கனின் ஆவி தொடர்ந்து, "இங்க நாம எவ்வளவு தனிமையில இருக்கோம். இன்னும் ஓரிரு சூதாட்ட ஆவிகள் இங்கே இருந்தால் குதிரைப் பந்தயத்தைப் பற்றிப் பேச எனக்கும் கூட்டாளி கிடைக்கும்", என்றது.

 "நீ மிகவும் கொடூரமானவன்", என்றது ஐந்தாம் சகோதரரின் ஆவி.

"சகோதரா, அது என் தவறில்லை. சூதாடிகள் தங்களின் புதைகுழியைத் தானே தான் தோண்டிக் கொள்கிறார்கள். தீவிர சூதாடி எப்போதுமே பேராசை மிகுந்தவன்.

எப்போதும் இன்னும் வேண்டும் என நினைப்பவன். இதனால், எப்போதும் சூதாட்டக் கூடத்திலேயே அவன் தன் வாழ்வைக் கழிக்கிறான். உழைப்பில்லாமல் பணமீட்ட சுலபமான வழி இல்லவேயில்லை. முழுமையாக போண்டியாகும் வரை இதை சூதாடி உணரவே மாட்டான். ஆகவே, இந்த சூதாடிகளுக்கு நாம் பாடம் கற்பிக்க வேண்டும்.

என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். வாழும் போது சூதாடி. குதிரைப் பந்தயத் திடலில் தான் என் வாழ் நாளைக் கழித்தேன். இதனால், என்னிடமிருந்த எல்லாவற்றையுமே தொலைத்தேன். என் மனைவியையும் வாழ்க்கையையும் சேர்த்து.

கடைசியில் இதோ, வருத்தமும் தனிமையும் வாட்டும் இவ்விடத்திற்கு வந்து சேர்ந்தேன். கடந்தகாலத்தை நினைத்தல் மிகச் துயரமானது."

 "நீ சொல்வதும் சரி", என்றது ஐந்தாம் சகோதரரின் ஆவி. "புதை குழிக்குள் விழத் துடிக்கும் அவனைக் காப்பாற்ற நீ ஏன் மறுக்க வேண்டும்?"

 "வேறு வழியில்லை", என்றது குதிரைக் கிறுக்கனின் ஆவி. "அவர்களுக்கு பணப் பைத்தியம் பிடித்திருக்கிறது. அதுவுமில்லாமல், குதிரைப் பந்தயத்தில் யாரும் ஒன்றையும் ஊகிக்க முடியாது. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

குதிரை மீதிருப்பவர்களுக்குக் கூட ஒன்றையும் முன்னுரைக்க முடியாது.

அவ்வளவு ஏன்? குதிரைகளுக்கே கூட தங்களில் யார் முதலாவதாக வரக்கூடுமென்று தெரியாது. பள்ளிக்கூட ஓட்டப் பந்தயத்தைப் போல யாரும் ஊகிக்க முடியாது.

வாழ்க்கையுடனான போர் தான் சூது. அதனுடன் எதற்கு அனாவசிய விளையாட்டு. ஒரு முறை மிகவும் முக்கிய ரகசியமாகவும் 'துப்பு' என்றும் நான் நினைத்து கடைசியில் ஏமார்ந்து எல்லாவற்றையும் இழந்த கதையைத் தான் நினைத்துக் கொள்கிறேன். ஒரு புதிய குதிரை, நான் எதிர்பார்க்கவேயில்லை முதலில் வந்தது."

 "குதிரை சகோதரரே, உங்களின் சொற்கள் எங்களுக்குள் புரிதலைக் கொணர்ந்துள்ளது", ஆறாம் சகோதரரின் ஆவி. "துரதிருஷ்டவசமாக, நாம் உயிருடன் இல்லை. இவ்வுலகிலிருந்து அவ்வுலகிற்குத் தொடர்பும் கொள்ள வழியில்லை.

முடிந்தால், எல்லா சூதாடிகளுக்கும் முக்கிய செய்தியாக நான் இதை கொண்டு சேர்த்து அவர்களை விழிப்புறச் செய்வேன்."

"ஆனால், என் வீட்டுக்காரர் வெல்வாரா?", என்று சோகமாகக் கேட்டது ஐந்தாம் சகோதரரின் ஆவி.

 "சொல்வது கடினம். இப்போதெல்லாம் குதிரை வைத்திருப்பவர்களும் ஓட்டுபவர்களும் சூதாடிகளும் இந்த ஆட்டத்தில் ஈடுபடுவதால், அவரவர் சௌகரியத்துக்கு சூதாடுகிறார்கள்."

 "தோற்றால், என் வீட்டுக்காரர் இங்கு வந்து என்னிடம் நஷ்ட ஈடு கேட்பார்", என்று அலுத்துக் கொண்டது ஐந்தாம் சகோதரரின் ஆவி.

 இரு வாரங்களுக்குப் பிறகு, ஒரு மதிய நேரம்.

 பிரகாசமான தென்றல் வீசியது. ஆறாம் ஏழாம் சகோதரர்களின் ஆவிகள் நிழலில் அமர்ந்து சதுரங்க ஆடிக் கொண்டிருந்தன. ஐந்தாம் சகோதரரின் ஆவி பிடில் இசைத்துக் கொண்டிருந்தது, ", நன்றியற்ற உலகமடா,.."

 "உஷ், ஐந்தாம் சகோதரரே. யாரோ மலை மீது ஏறி வருகிறார்கள்", என்றது ஆறாம் சகோதரரின் ஆவி ரகசிய குரலில். மூன்று ஆவிகளும் கீழே குனிந்து பார்த்தன.

கீழே ஒரே கலவரம். இரு குழுக்கள் தனித்தனியே மேலேறிக் கொண்டிருந்தன.

வலப்புறம் ஒரு சவப் பெட்டியுடன் ஆறேழு பேர். எல்லோரும் அழுது கொண்டிருந்தனர் வழியெல்லாம்.

 "ஆண்டவா!", ஐந்தாம் சகோதரரின் ஆவி கத்தியது. "என் வீட்டுக்காரரின் மனைவி தான் அழுகிறாள்!"

 "அப்படியானால், இது உன் வீட்டுக்காரரின் இறுதி ஊர்வலமாகத் தான் இருக்க வேண்டும்", என்றது ஏழாம் சகோதரரின் ஆவி.

  "குதிரைப் பந்தயத்தில் தோற்றதில் தற்கொலை செய்து கொண்டிருப்பார்", என்றது ஆறாம் சகோதரரின் ஆவி.

"குதிரைப் பந்தயம் தான் இவரின் மரணத்துக் காரணமாக இருக்கும்", என்றது சோகமாக ஐந்தாம் சகோதரரின் ஆவி. "குதிரைப் பந்தயம் மனித குலத்தின் மாபெரும் எதிரி."

 ஆனால், அக்கணத்தில் மற்றொரு குழுவின் ஒரு முப்பது பேர் ஐந்தாம் சகோதரரின் கல்லறைப் பக்கம் போனார்கள்.

 "ஐந்தாம் சகோதரரே, உங்க இடத்துக்கு தான் போகிறார்களோ", என்றது ஆறாம் சகோதரரின் ஆவி.

 "என்னைப் பார்க்கவா?", ஐந்தாம் சகோதரரின் ஆவி நம்பிக்கையில்லாமல்.

 ஐந்தாம் சகோதரரின் கல்லறையை நோக்கி குழு மெதுவாக நடந்தது. முன்னால் ஒல்லியான நாற்பது வயது மதிக்கத்தக்க ஆண் போனான். ஐந்தாம் சகோதரரின் ஆவி அவரை அடையாளம் கண்டு கொண்டது. அவர் நண்பன் 'ஆச்சாய்'! அவரைத் தொடர்ந்து மனைவி மற்றும் குழந்தைகள். சிலர் புதிய அந்நியர்கள். வேறு சிலரோ வீட்டுக்காரரின் நண்பர்கள். மினி ஸ்கர்ட், குட்டை பேண்ட், பெல்பாட்டம், வண்ணச் சட்டை, பேண்ட் என்று அவர்கள் உயர்தர ஆடைகளை புது மோஸ்தரில் முறையில் அணிந்திருந்தார்கள். அந்தக் கூட்டத்தில் நீண்ட முடியுடன் சீனப்பாணியில் உடையணிந்திருந்த ஒரு சிலரும் இருந்தனர்.

 ஆச்சாய் ஐந்தாம் சகோதரரின் ஆவியின் கல்லறையின் முன் முழுந்தாளிட்டு ஒரு வத்தியைக் கொளுத்தினான். "ஐந்தாம் சகோதரரே, நாம் பழைய நண்பர்கள். என்னை நினைவிருக்கா? ஒரு முறை ஐந்து சதத்திற்கு 'சோயாச்சாறு' வாங்கிக் கொடுத்தேனே உனக்கு. உன் உதவி எனக்கு இப்போது தேவை. ஒன்று தெரியுமா உனக்கு? நீ கொடுத்த இலக்கங்களை வைத்து எட்டு பந்தயத்தில் வென்றார் என் கணவர், அதாவது உன் மாஜி வீட்டுக்காரர். ஆயிரக்கணக்கில் வென்று விட்டார்.

துரதிருஷ்டவசமாக அதையெல்லாம் அனுபவிக்க அவர் உயிரோடு இல்லை.

கொள்ளைக்காரர்கள் கொள்ளையடித்துப் போய் விட்டார்கள். ஆகவே, அவர் தற்கொலை செய்து கொண்டார். நாளிதழின் தலைப்பு செய்தியே இது தான். நாங்கள் இன்று இங்கு வந்திருப்பது உன் உதவி வேண்டி. உன் பழைய நண்பர்களுக்கு நீ உதவ வேண்டும். எண்கள் எடுத்துக் கொடுக்க வேண்டும். பெரிய தொகை வெல்ல உதவ வேண்டும். மிக நன்றி உடையவனாயிருப்பேன். ஐந்தாம் சகோதரரே, தயவு செய்து இங்கு வந்து உதவ வேண்டும்."

 ஆச்சாயைத் தொடர்ந்து மற்றவர்களும் முழந்தாளிட்டு ஐந்தாம் சகோதரரின் ஆவியிடம் வேண்டிக் கொண்டார்கள்.

 'ஏதோ தவறு நடந்திருக்கிறது', ஐந்தாம் சகோதரரின் ஆவி பதற்றம் அடைந்தது அந்தக் கூட்டத்தைப் பார்த்து. வெளிறிப் போய் மயங்கி வீழ்ந்தது.

 

 (ஆங்கில மொழிபெயர்ப்பு: Ng Suan Eng, Winnie Ng, Choo Liang Haw, Yan Shunscheng, Tang Lingling, Wong Chow Kend, Lee Ting Hui, Tan Sen Kwei)
 

jeyanthisankar@gmail.com