நொண்டிக்கிணறு

காவ்யா சண்முகசுந்தரம்


அந்த வேப்ப மரக்காற்று இதமாக இருந்துச்சி. இன்னும் இன்னும்னு கதகேட்க தூண்டிக்கிட்டே இருந்துச்சி. கந்தையா மாமா கதை சொல்லச் சொல்ல ஆறுமுகம் சோகம் கலந்து சுவராஸ்யமாகக் கேட்டான்.

'எங்க தாத்தா சங்கரபாண்டியத் தேவரு இந்த ஊர்லயே சுத்தமான வீரன். அவரு சிலம்பெடுத்தா சுத்துப்பட்டியே ஒதுங்கும். இல்லன்னா ஓடும். அவரால ஆகாத காரியமே இல்லன்னு சொல்லுவாங்க. ஒரு தடவ பாரு. எல்லாரும் இளவட்டக்கல்ல அதுதான் அந்த இசக்கியம்மன் கோவிலுக்குப் பக்கத்துல பூவரசு மரத்தடியில கெடக்குது அத அவரு ஒத்த கையிலேயே தூக்கிவிட்டாராம். தூக்கி தலைக்கு மேலேயே வீசிட்டாராம். அவரு சகல கலாவல்லவரு. அவரு பண்ணாத காரியமே இல்லை. சர்க்கஸ்காரன் வந்தா அவன் பண்ணுறத எல்லாம் அடுத்த வாரமே செஞ்சு காட்டுவாராம். பாவைக் கூத்தாடுவாராம். அவர் கரகம் வச்சு ஆடியிருக்காராம். வில்லுக்கட்டிப் பாடியிருக்காராம். கணியான் போல வேசம் போட்டுக்கிட்டு ஆடுறது பாக்கணுமே, ராமசுப்பு பிச்சை வாங்கணும்'.

கண்கள் செருக அவர் கதை சொல்வதை ஆறுமுகம் நம்பாமலும் நம்ப முடியாமலும் கேட்டுக் கொண்டிருந்தான். 'ஆனா அவங்க அப்பா படுபயங்கரமான ஆளு. இவருக்கு நேர் விரோதம். தானும் தன் ஜாதியும் தன்மானமும் பெருசுன்னு நெனக்கிறவரு. அவங்க குல தெய்வம் எது தெரியுமா?'.

''எது?''

''பாலம்மன்''.

''கன்னியா? எங்க ஊட்டுக்கு வடக்கபக்கம் இருக்கே''.

'ஆமா, அந்த கன்னியேதான். இருக்கத்துறையில நடந்த கதை. அவங்க அம்மாவுக்கு அந்த ஊர்தான். அங்க பால் வண்ணத் தேவராம். அவருக்கு ரொம்ப அழகாக மகா. பேரு பாலம்மா. பாக்க ஆயிரம் கண்ணு வேணும்பாங்க. எல்லாம் பாத்தாங்க. பார்க்கக் கூடாதவனும் பார்த்துட்டான். ஒருநா அவா குளிச்சுட்டு தலையை காயப்போட்டுட்டு மொட்ட மாடியில நிக்குறா? எதுக்கு மேல தெரியுமா?'

'எதுக்கு மேல?'

'ஏணிக்கு மேல'.

'ஏணிக்கு மேலயா? எதுக்கு'.

'கூந்தல் ஆறரை அடி, அவளோ ஐந்தேகால் அடிதான். நின்னா தரையில் படுமே தலைமுடி. அதனாலதான்'.

'ஏ அப்பா? அப்புறம்'.

'அப்பம் பாத்து வெள்ளத்தொரை வர்றான். குதிரை மேலவாரான். அந்த தெருவுல அவன் டக்கு டக்குன்னு வரும்போதே வந்துக்கிட்டே இருந்த குதிரை டக்குன்னு நின்னுட்டுது. என்னடா ஏதுடான்னு இறங்கிப் பார்த்தாரு. பாத்தா குதிரை கால்ல அவதலைமயிரு ஒண்ணு சிக்கி அத அசைக்க முடியாம ஆக்கிடுச்சாம்'.

'பெரிய ரீல்தான்'.

'சும்மா இரு. நடந்ததுதான்'.

'பொறகு?'

'பொறகு என்ன அவளத்தான் கல்யாணம் பண்ணணும்னு அவன் முடிவு பண்ணிட்டு, ஆள் ஊட்டுட்டான்'.

'அடப்பாவி'.

'அப்படித்தான். அவன் சொன்ன ஆணைதான். மறுக்க முடியுமா? மறுத்தாலுந்தான் வாழ முடியுமா? பால்வண்ணத் தேவருக்கு ஒண்ணும் பண்ண முடியல'.

'என்ன பண்ணுனாரு?'

'என்ன பண்ணுவாரு. அன்னைக்கு ராத்திரி பெண்ணுக்கு அலங்காரம் பண்ணி நகைநட்டு பூட்டி கையிலயும் எல்லா பொருளையும் குடுத்து ஆழக்குழி தோண்டி அடுப்பாங்கரையிலேயே புதைச்சிட்டாராம்'.

'அய்யய்யோ'.

'ஆமா.... கள்ளப்பசங்க ஜாஸ்தி. இதுவளை பொதையல் வைக்கணும். ஏணியில இறங்கிப் போயி வச்சிட்டுவா'ன்னு சொல்லி பொண்ண எறக்குனாரு. அவா போயி வச்சிட்டு நிமிர்றதுக்கு முன்னாலே ஏணிய தூக்கிட்டு மண்ண தள்ளிட்டாரு. கண்ணுல மண்ணு உழுந்து அவிஞ்சு போச்சு. அப்ப அவா 'அடப்பாவிகளா? என் கண்ணு போன மாதிரி ஒங்க குலத்துல ஏழேழு ஜென்மத்துக்கும் கண் தெரியாம போகட்டும்'னு சாபம் போட்டானாம். அதுனாலத்தான் அந்த வழியில உள்ளவங்களுக்கெல்லாம் வீட்டுல ஒருத்தருக்குக் கண்ணு தெரியாம போயிருது'.

ஆறுமுகத்தால தாங்க முடியலை. தம் முன்னோர்கள் இவ்வளவு கொடியவர்களா? தொரைக்கு பெண் கொடுப்பதான்னு இந்த மாதிரிப் பண்ணியிருக்காங்களே. ஜாதி வெறியா? நெறியா? குழம்பினான்.

மாமா எழுந்து போனார். போகும்போது அவர் தடுமாறிக் கொண்டு செல்வது அவனுக்குக் கஷ;டமாக இருந்தது. ஆறுமுகம் மெதுவாக எழுந்து காலை இழுத்து இழுத்து நடந்தான். அதற்கும் சாபம்தான். நம் குடும்பத்தின் மீதுதான் எத்தனை சாபங்கள் அதையும் இந்த மாமாதான் சொன்னது.

பூட்டன் சங்கார பாண்டித்தேவரு அந்த ஊரு சக்கிலியப்புள்ள ராசாத்திய காதலிச்சாராம். அந்தப்புள்ள ராசாத்தி பேருக்கு ஏத்தாப்புல ராசாத்தின்னா ராசாத்திதான். அவ்வளவு அழகாம். சக்கிலியம்புள்ளன்னு சொல்ல முடியாதாம். அந்தப்பாவி மகளும் அவரு பேர்ல வச்சிருந்தாளாம் அவ்வளவு ஆசை. இது அவரு அப்பாவுக்கு தெரிஞ்சு போச்சு. அவரு என்னென்னவோ செஞ்சு பாத்தாராம். ஊஹூம். எதுவும் நடக்கல. கடைசியில சாப்பாட்டுல விஷம் வச்சு கொல்லப்பாத்திருக்காரு. அதுல சாகாம மயங்கி உழுந்தவர தூக்கி ராத்திரியோட ராத்திரியா கொண்டு போயி ஊர்க்கொணத்துல போட்டுட்டாராம். போடும்போது கரையில பட்டு காலொடிஞ்சி உழுந்தாரு. உழும்போது 'பாவிங்களா... கால ஒடிச்சிட்டீங்களே விளங்குவீங்களா? ஏழேழு ஜென்மத்துக்கு உங்க குடும்பம் நாசமாபோயி நொண்டியாகட்டும்' என்று சாபம் உட்டாராம்.

சாபம் பலித்தது.

முதல் சாட்சிதான் பெரியப்பா.

அடுத்த சாட்சி சித்தப்பா மகன் சிவனு.

அடுத்த சாட்சி சின்ன அத்தை மகள் செல்லம்மா.

இது தொடர் கதை.


அதே கிணறும் ஒரு சாட்சி. சங்கர பாண்டியத்தேவர அடக்கம் செய்த அதே நாளில் ராசாத்தியும் அதிலேய விழுந்து செத்தா. ஊர்க்காரங்க தண்ணி எடுக்குறத உட்டுட்டாங்க. கரை உடைந்து நொண்டியானது. நொண்டிக்கிணறு கொஞ்சம் கொஞ்சமாக தூர்ந்து போக ஆரம்பிச்சுது.

ஆறுமுகம் அன்னைக்கு காலையில வடக்க தோட்டத்துல குளிச்சிட்டு வரும்போது மந்தையில கூட்டமா இருந்துச்சு. ஒரு பெரிய ஆம்புலன்ஸ் வேன். பக்கத்துல மெதுவாக வந்து பாத்தா அது போலியோ கேம்ப். வடக்கன்குளத்து ஆஸ்பத்திரியில இருந்து வந்திருக்கிறாங்க. போலியோ தடுப்புக்கான சொட்டு மருந்து தருகிறார்களாம்.

மைக்கில் ஒருவர், 'உங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் ஊனமற்றவர்களாக நல்ல உடல்பெற்று வளர வாழ கொண்டு வாருங்கள். போலியோ சொட்டு மருந்து உங்கள் வாழ்வை பொலிய வைக்கும். தாய்மார்களே பெரியோர்களே கொண்டு வாருங்கள் குழந்தைகளை'.

ஆறுமுகம் கவனித்துவிட்டு ஈரத்துண்டோடு கிளம்பினான். பெண்கள் பிள்ளைகளை இடுப்பில் இடுக்கிக் கொண்டு சாரிசாரியாக வர ஆரம்பித்தனர். வீடுவீடாக ஆஸ்பத்திரிக்காரர்கள் அலைந்தனர்.

'நாடு முன்னேற்றத்தை நோக்கி நடைபோட வேண்டும். நடைபோட நல்ல கால்கள் வேண்டும். நல்ல உறுதியான கால்களுக்கு போலியோவைத் தடுக்க வேண்டும்' மைக்கில் பேசிக் கொண்டே இருந்தார்கள்.

ஆறுமுகம் கால்கள் இழுத்து நடந்தபோது விழுந்து விடுவது போல் தோன்றியது. நொண்டிக் கிணற்றின் உடையாத கரையைப் பிடித்துக் கொண்டான். அவனது கண்கள் கிணற்றுக்குள் விழுந்தன. செத்த நாய்க்குட்டி வயிறு புடைக்க மல்லாந்து கிடந்தது. அழுகிப் போன கும்பைகள்.

''நாடு முன்னேற உழைக்கும் கரங்கள் வேண்டும். நல்ல கைகளுக்கு நாடுங்கள். சொட்டு மருந்து. நாடு முன்னேற நலமான பார்வை வேண்டும். நல்ல பார்வைக்கு நல்ல கண்கள் வேண்டும். நல்ல கண்களுக்கு போடுங்கள் சொட்டு மருந்து''.

மெதுவாக அதை விட்டு நகர முயன்ற போது தன் தாய் மீது ஒரு வகை எரிச்சல் பிறந்தது. வாயில் ஊறிய எச்சிலை கிணற்றுக்குள் துப்பிவிட்டு இழுத்து இழுத்து நடந்தான். அவனை தள்ளிவிடுவது போல கீழத்தொரு காளியம்மா தன் கைப்பிள்ளையோடு ஓடிக் கொண்டிருந்தாள். அவனோ கன்னிகோயிலைத் தாண்டி நடந்து போனான்.