இன்னும் கன்னியாக....

பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

(இந்தச் சிறுகதை அண்மையில் 'ஞானம்' சஞ்சிகை நடாத்திய, அமரர் செம்பியன்செல்வன் ஞாபகார்த்த (2009) சிறுகதைப்போட்டியில் இரண்டாம் பரிசினைப் பெற்றுள்ளது.)

சிங்கப்பூர் விமான நிலையத்தில் மாற்று விமானத்திற்குக் காத்திருக்கும் பயணிகள் தரிப்பிடத்தில் அமர்ந்திருக்கிறாள் மாலதி. மெல்பேணிலிருந்து பயணித்துக்கொண்டிருக்கும் அவளுக்கு சிங்கப்பூரில் மூன்று மணிநேரத் தரிப்பு. கடிகாரத்தில் நேரத்தைப் பார்க்கிறாள். கொழும்புக்கான விமானம் புறப்பட இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கிறது. விமானத்தினுள் பயணிகளை அனுமதிப்பதற்கு இன்னும் குறைந்தது ஒன்றரை மணி நேரம் ஆகும். அதுவரையில் சாய்வுக் கதிரையில் கொஞ்சம் கண்ணயரலாம் என்றால் எண்ண அலைகள் எம்பிக் குதித்து அவளின் இதயத்தில் மோதிக்கொண்டிருந்தன. தன் வாழ்வில் ஏற்பட்டுவிட்ட சோகத்துடன் தொடர்பான நிகழ்ச்சிகள் மாறாத காயங்களாக மனதில் எரிந்துகொண்டிருந்தன.

பதினான்கு மாதங்களுக்கு முன்னர் இதே சிங்கப்பூர் விமான நிலையத்தில் இதே இடத்தில்தான் அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்காக அவள் தரித்திருந்தாள். ஆனால் அன்று, கொள்ளை ஆசைகளோடும், குதூகலிக்கும் உள்ளத்தோடும், இல்லறவாழ்வில் நுழையப்போகும் இன்பக் கனவுகளோடும் காத்திருந்தாள். பூரித்த நினைவுகளும், புதுமையான உணர்வுகளும் அன்றைய பயணத்தில் அவளோடு துணையாக வந்தன.


*************

மாலதி மிகவும் அழகானவள். பார்த்தவர்களை மீண்டும் ஒருமுறை பார்க்கத்தூண்டும் கவர்ச்சிகரமான முகம். சிவந்த நிறம். ஒல்லியென்று சொல்ல முடியாத மெல்லிய உடல். அளவான உயரம். பெற்றோருக்கு ஒரேயொரு பிள்ளை. தந்தை கருணாகரன் இளைப்பாறிய சுங்க அதிகாரி. தாய் ஜானகி ஆசிரியை. இன்னும் இரண்டுவருடங்களில் சேவையிலிருந்து இளைப்பாறக் காத்திருக்கிறார். இருவரும் சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்கள் எத்தனையோ தலைமுறைகளை இருத்தி வைத்துப் பராமரிக்கப் போதுமானவை. வெள்ளவத்தையில் விசாலமான காணியுடன் ஒருவீடு, அதற்கு சற்றுத் தூரத்தில் மூன்றுபடுக்கை அறைகளுடன் ஓர் உயர்தரத் தொடர்மாடி மனை. யாழ்ப்பாணத்தில் வங்கியொன்றிடமிருந்து இன்னமும் கொழுத்த வாடகையை வசூலித்துக் கொண்டிருக்கும் மாடிவீடு இப்படி அசையாச் சொத்துக்கள் ஒருபுறமிருக்க தங்கநகைகளாகவும், பங்கு முதலீடுகளாகவும், வங்கி வைப்புக்களாகவும் ஏராளமான சொத்துக்கள். எல்லாமே மாலதிக்குத்தான்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடிந்ததும் அந்தவருடமே மாலதிக்குப் பட்டதாரி ஆசிரியர் வேலை கிடைத்தது. வேலை பார்க்கவேண்டிய அவசியம் அவளுக்கு இல்லை என்றாலும், படித்த படிப்புக்குக் கிடைத்த வேலைக்குக் கொஞ்சநாள் போய்வரட்டுமே என்பது பெற்றோரின் கருத்து. திருமணத்திற்குப்பிறகு அவளுக்கு வேலை தேவையில்லை என்பது அவர்களது எண்ணம். மாலதிக்கும் அதில் உடன்பாடுதான்.

உள்ளுரில் பல நல்ல இடங்கள் தானாகத் தேடியே வந்தன. ஒரேயொரு பிள்ளை. உள்ளதெல்லாம் அவளுக்குத்தான். எனவே, தெறித்துப்பார்த்து மாப்பிள்ளையைத் தெரிவு செய்வதில் மாலதியின் பெற்றோர் மிகவும் கவனம் எடுத்துக்கொண்டார்கள். மாலதிக்கு இதுவரை யாரிலும் காதல் ஏற்பட்டதில்லை என்பதும், பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையையை விருப்போடு ஏற்றுக்கொள்ளும் தெளிவான மனநிலையில் அவள் இருப்பதும் மாலதியின் பெற்றோருக்கு மாப்பிள்ளையைத் தெரிவு செய்வதில் ஒருவித பூரண சுதந்திரத்தைக் கொடுத்திருந்தன. ஆயினும் தாம் தெரிவுசெய்யும் மாப்பிள்ளையை மாலதிக்குப் பிடித்திருந்தால் மட்டுமே மேற்கொண்டு ஆகவேண்டியவைகளைக் கவனிப்பது என்பதில் இருவருமே மிகவும் தீர்மானமாக இருந்தார்கள். மாலதிக்கு மகிழ்ச்சியான எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க வேண்டுமே என்று அவர்கள் இருவரும் சற்று அதிகமாகவே சிரத்தை எடுத்துக் கொண்டார்கள்.

அந்தநேரத்தில்தான் மாலதியின் குடும்ப நண்பர் கோவிந்தராஜன் அவுஸ்திரேலிய மாப்பிள்ளை ஒருவரின் விபரங்களுடன் வந்தார். பெயர் துஷியந்தன். பொறியியலாளர். நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர். பெற்றோருடன் அவுஸ்திரேலியாவில் வாழ்கிறார். ஒரேயொரு அக்கா. அவவும் திருமணமாகிக் குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவில்தான். நல்ல இடம் என்று சொன்னார். துஷியந்தன் அங்கே சொந்தமாக வீடும் வாங்கியிருக்கிறாராம். பெற்றோர் தங்களுக்கு ஒரு மருமகளையல்ல மகளையே தேடுவதுபோலத் தேடுகிறார்களாம். மாலதியின் அழகுக்கும் அறிவுக்கும் நல்ல குணத்துக்கும் ஏற்ற இடம் என்றெல்லாம் சொன்னார் கோவிந்தராஜன். துஷியந்தனின் படத்தையும் கொடுத்தார். அழகான மாப்பிள்ளைதான். ஜானகி அம்மாவுக்கு மாப்பிள்ளையின் அழகு பிடித்துவிட்டது. கருணாகரன் இரண்டொருநாளில் பதில் சொல்வதாகக்கூறி கோவிந்தராஜனை அனுப்பிவைத்தார்.

அந்த நிமிடத்திலிருந்து ஒவ்வொரு கணமும் கருணாகரனுக்கும், ஜானகி அம்மாவுக்கும் இதே சிந்தனைதான். பல்வேறு விடயங்களைச் கவனத்திற்கு எடுத்துப் பரிசீலித்தார்கள். நாட்டுப்பிரச்சினை முடிவெடுப்பதை விரைவு படுத்தியது. எவ்வளவு சொத்து இருந்தாலும் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை. ஒவ்வொருநாளும் என்ன நடக்குமோ என்று எதிர்பார்க்க முடியாத வாழ்க்கை. நாடு முழுவதுமே இப்படியே என்றால் நாளைக்கு இந்தப் பதற்றமான சூழலில்தானே மாலதி குடும்பம் நடத்த வேண்டும்? மாலதி அவுஸ்திரேலியாவுக்குப் போய்விட்டால் பிறகு ஒன்றிரண்டு வருடங்களில் எல்லாச் சொத்துக்களையும் விற்றுவிட்டுத் தாங்களும் அங்கே போய்விடலாம். மாலதி ஒரே பிள்ளை என்பதால் தங்களுக்கு அந்த வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். சுங்க இலாகாவில் வேலை செய்தவர் என்பதாலா அல்லது இந்தச் சம்பந்தம் வந்தபின்னர் விசாரித்து அறிந்து கொண்டதாலா என்று தெரியவில்லை கருணாகரன் தனக்குத் தெரிந்த அவுஸ்திரேலிய குடியேற்ற விபரங்கள் எல்லாவற்றையும் மனைவியிடம் கூறினார்.

'பிறகென்ன? யோசிக்கிறியள்? பிள்ளையோட அங்க நாங்களும் போய் இருக்கலாம் எண்டால் இந்தச் சனியன் பிடிச்ச நாட்டில கிடந்து ஏன் சீரழிய வேணும்' என்று வெளிப்படையாகவே தன் முடிவைச் சொன்னா ஜானகி அம்மா. கருணாகரனும் தலையசைத்தார். மாலதிக்கும் புகைப்படத்தில் பார்த்த மாப்பிள்ளையின் முகம் மனதில் பதிந்துவிட்டது. விடயங்கள் வேகமாக நகர்த்தப்பட்டன. ஏற்பாடுகள் துரிதமாகச் செய்யப்பட்டன.

அன்றிலிருந்து ஒரு வருடத்திற்குள் மாலதிக்கும் துஷியந்தனுக்கும் அவுஸ்திரேலியாவில் திருமணம் நடைபெற்றது. முருகன் கோயிலில் திருமணமும் அதனைத்தொடர்ந்து ஒரு பெரிய மண்டபத்தில் வரவேற்பு விழாவும் நடைபெற்றன. தேன்நிலவை ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தனது செலவில் வைப்பதற்கு கருணாகரன் எவ்வளவோ முயன்றும் மாப்பிள்ளையின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. இராசியான வீடு, அது இது என்றென்னவோ எல்லாம் சொல்லி வீட்டிலேயே தேன்நிலவுக்கு ஒழுங்கு செய்தார்கள். திருமணத்திற்காக மூன்று மாத விசாவில் சென்றிருந்த கருணாகரனும், ஜானகி அம்மாவும் திருமணம் முடிந்தபின்னர் ஒருமாதகாலம் அவுஸ்திரேலியாவெல்லாம் சுற்றிப்பார்த்துவிட்டுத் திரும்பினார்கள்.

தேன்நிலவு மாலதிக்கு இனிக்கவில்லை. தேன்நிலவே இல்லாத போது எப்படி இனிக்கும்? எல்லாப் பெண்களையும் போலத்தான் மாலதியும் அந்தப் புது உறவின் எதிர்பார்ப்பில், வெட்கம் கலந்த மகிழ்வில் உள்ளம் திளைக்க, உடல் சிலிர்க்க அலங்கரிக்கப்பட்ட அந்த அறைக்குள் நுழைந்தாள். துஷியந்தன் கட்டிலில் ஏனோதானோ என்று வீற்றிருந்தான். மாலதி அறைக்குள் நுழையும்போது நிமிர்ந்து அவளைப்பார்த்துவிட்டு எந்தவித சலனமும் இல்லாமல் மீண்டும் குனிந்து கொண்டான். கண்கள் சந்திக்காவிட்டாலும் அவன் முகத்தில் உற்சாகம் இன்மை இருப்பதை மாலதி உணர்ந்தாள். வா என்று ஒரு வார்த்தைகூடப் பேசாவிட்டாலும், ஒரு புன்சிரிப்புக்கூட இல்லாமல் அவன் இருப்பது அவளுக்கு ஒருவித ஏமாற்றத்தைத் தந்தது. இத்தனைக்கும் கடந்த பத்துமாதங்களுக்கு மேலாக வாரம் ஒருதடவையாவது இருவரும் பலதடவைகள் தொலைபேசியில் கதைத்தவர்கள்தான். திருமண நிகழ்ச்சிகளின்போதும்,  வரவேற்பின்போதும் கலகலப்பாகத்தானே இருந்தார். இப்போது ஏன் இப்படி? என்றெல்லாம் மாலதியின் மனம் குழம்பியது.

ஐந்து நிமிடங்களுக்குப் பின்னர் அவன் வாய் திறந்தான்.

'மாலதி! இருங்க. எனக்கு கொஞ்சம் களைப்பாய் இருக்கு. நேற்றிரவு முழுக்க நித்திரையில்லை. நான் கொஞ்சம் படுக்கிறன். நீங்களும் வேணுமெண்டால் படுங்க. உங்களுக்கும் களைப்பாய்த்தான் இருக்கும். இந்த சாறியளையும் கட்டிக்கொண்டு, காலையில இருந்து ஒரே டென்சனாய் இருந்திருப்பியள்...'
அவன் முடிக்கவில்லை, அவள் தொடங்கினாள், ' அப்பிடியொண்டுமில்ல. நீங்கதான் களைச்சிருக்கிறீங்க. நீங்க றெஸ்ற் எடுங்க. நான் இருக்கிறன்..'

கட்டிலின் ஓர் ஓரத்தில் அவன் சரிந்து படுத்துக்கொண்டான். எவ்வளவு நேரம் மாலதி கட்டிலில் அமர்ந்திருந்தாளோ அவளுக்குத் தெரியாது. துக்கம் தொண்டையில் நெருட, தூக்கம் கண்களை வருட அப்படியே கட்டிலின் மறு ஓரத்தில் படுத்தாள். இடையே ஒருமுறை தூக்கம் கலைந்து மாலதி விழித்தபோது அறை இருளாயிருந்தது. துஷியந்தன் விளக்கை அணைத்திருக்கவேண்டும் என்று ஊகித்துக்கொண்டு அவன் படுத்த பக்கம் திரும்பிப் பார்த்தாள். அவன் நன்றாகத் தூங்கிக் கொண்டிருப்பதைக் குறட்டைச்சத்தம் கூறிக்கொண்டிருந்தது. அவள் மீண்டும் கண்களை மூடிக்கொண்டு மறுபக்கம் ஒருக்களித்துப் படுத்துக்கொண்டாள். மறுநாள் காலை கதவு தட்டப்பட்டது. மாலதியின் மாமியார் இரண்டு தேனீர்க் கோப்பைகளுடன் அறைக்குள் நுழைந்தாள். இவ்வளவுதான் மாலதியின் முதல் இரவு.

நாட்கள் நகர்ந்தன. பகலெல்லாம் பலர் முன்னிலையில் மட்டுமன்றித் தனித்திருக்கும் போதும் கூட துஷியந்தன் மாலதியுடன் கலகலப்பாகவே இருந்தான். இரவானதும் அவளிடம் இருந்து ஒதுங்கினான். ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி விலகியேயிருந்தான். ஒரே கட்டிலில் படுத்திருந்தாலும் சிறிது நேரத்தில் எழுந்து தன் படிப்பறையினுள் சென்று கொம்பியூட்டரில் கலந்துவிடுவான். சிலநாட்களில் அங்கேயே மேசையில் தலைசாய்த்துத் தூங்கியும் விடுவான். மாலதிக்கு இனம்புரியாது இழையோடிய துன்பம் நாளாக நாளாக இரணமாகி அணுவணுவாகச் சித்திரவதை செய்யத் தொடங்கியது. திருமணம் முடிந்து ஒருமாதத்தில் பெற்றோர் இலங்கைக்குத் திரும்பியதும் அவளின் வேதனை விம்மி வெடித்தது. உடல் இச்சைக்காக அவள் அலையவில்லை. ஆனால் உள்ளத்து உணர்வுகளுக்குத் தடைபோட அவளால் முடியவில்லை. வாழ்க்கை நியதிகளுக்கு மாறான தனது கணவனின் நடத்தையில் உள்ள புதிரை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை.
அதேவேளை, இதுவரை ஒருதடவைகூட அவர்கள் உடலுறவு வைத்துக்கொள்ளாததால், அதனால் உண்டாகக்கூடிய அன்னியோன்னியம், உரிமை நெருக்கம் எதுவுமே அவர்களுக்குள் ஏற்படவில்லை. சட்டப்படி கணவன் மனைவியாக இருந்தாலும், இன்னும் அவர்களின் உள்ளங்களுக்கும், உடல்களுக்கும் இடையே இருந்த இடைவெளி, நேரடியாக அவனிடம் இதுபற்றிக் கேட்பதற்கான துணிவை எழவிடாமல் அவளைத் தடுத்தது.

இந்த நிலையில்தான், ஒருநாள் துஷியந்தனின் அக்கா கௌரி, தாயிடம் கதைத்த வார்த்தைகள் மாலதிக்கு அந்தத் துணிவைக் கொடுத்தன. கௌரி அடிக்கடி வெளியில் எங்காவது அலுவல்களுக்கோ அல்லது கணவனுடன் நிகழ்ச்சிகளுக்கோ செல்லும்போது அவர்களின் ஐந்து வயதுப்பிள்ளை லக்சியை துஷியந்தனின் வீட்டில் கொண்டுவந்து விட்டுவிட்டுப் போவது வழக்கம். அன்றும் அப்படித்தான், ஒரு மாலைப்பொழுதில் லக் சியை விட வந்தவளிடம், துஷியந்தனின் தாய், தாங்களும் வெளியில் போக இருப்பதாகக் கூறினாள்.

'பிள்ளை! நாங்களும் கலைவிழாவுக்குப் போக இருக்கிறம். லக்சியை என்னெண்டு இங்க விடுறது? அவளையும் எங்களோடை கூட்டிக்கொண்டு போகட்டே..'

'மாலதியும் வருகுதோ அம்மா?'

'இல்லை பிள்ளை. துஷியும் மாலதியும் வரேல்லை. ஆனால் அவையளோடை என்னெண்டு லக்சியை விடுறது..?'

'ஏனம்மா? அவையளோடை விடுறத்துக்கு என்ன? உங்களோடை லக்சியைக் கூட்டிக்கொண்டு போனால் நீங்கள் விழா பாக்க ஏலாது. அவள் குளப்படி பண்ணுவாள். இரவுக்கு லக்சி இங்கேயே நிக்கட்டும். நாங்க லேற்றாத் தான் வருவம். அந்தநேரம் லக்சியை எடுக்க வரமாட்டம் அவளின்ர நித்திரை குழம்பிப்போகும். நான் நாளைக்கு வந்துகூட்டிப் போவன். அவள் இங்க மாலதியோட படுக்கலாம்தானே! மாலதி என்ன குடும்பம் நடத்தி பிள்ளையா பெறப்போறாள்?.. லக்சியையை எண்டாலும் கொஞ்சட்டுமன்,'

இதைக்கேட்டுக்கொண்டிருந்த மாலதிக்கு நெஞ்சில் இடி விழுந்தது போல இருந்தது.
'மாலதி என்ன குடும்பம் நடத்தி பிள்ளையா பெறப்போறாள்?..' என்ற வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம்? 'தன்னால் பிள்ளை பெறுவதற்கு முடியாதா? தன்னால் குடும்பம் நடத்த முடியாதா? தான் குடும்பம் நடத்த தகுதியற்றவளா? அப்படியென்றால்... அப்படியென்றால்... இந்த வார்த்தைகளுக்கும் தன்கணவன் தன்னிலிருந்து விலகி நடப்பதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா? இருக்கும். இருக்க வேண்டும். இவர்கள் எல்லோருக்கும் இடையில் தனக்குத் தெரியாத பயங்கர இரகசியம் ஏதோ ஒன்று இருக்க வேண்டும்.' மாலதிக்குத் தலை சுற்றியது. வயிற்றில் அமிலம் நிறைந்து எரிவது போல இருந்தது. நெஞ்சில் தாங்கமுடியாத சுமை ஏறிக்கனத்தது.

நேராக துஷியந்தனின் அறைக்குச் சென்றாள். திருமணமான நாள்முதல் நெஞ்சில் புகைந்துகொண்டிருந்த எரிமலை வெடித்தது. எதையும் சுற்றி வளைக்காமல் நேரடியாகவே துஷியந்தனிடம் கேட்க நினைத்தாள்.

' நான் உங்களோட கொஞ்சம் கதைக்க வேணும்'

'வாங்க, மாலதி. என்ன கதைக்கோணும். கதைக்கலாம்.'

'உங்கட அம்மாவும், அக்காவும் நான் பிள்ளை பெறமாட்டன் அது இது எண்டு என்னென்னவோ எல்லாம் கதைக்கிறாங்க...ஏன் அப்பிடி?'

'ஒட்டுக்கேட்டீங்களா?'

'ஒரே வீட்டில இருந்துகொண்டு ஒட்டுக் கேட்கவேண்டியதில்லை. அவங்க கதைச்சது எனக்குக் கேட்டது,'

'என்ன கதைச்சவங்கள்..?'

'நான் குடும்பம் நடத்தமாட்டனாம்...லக் ஷியைத்தான் கொஞ்சிக்கொள்ள வேணுமாம்...என்ன கதை இது?'

'ஓ...இவ்வளவுதானா...அக்கா லக் ஷியை விட்டுட்டுப் போக வந்திருப்பா. அதனால அவ என்னவோ சொல்லியிருப்பா.. அத நீங்க பிழையாக விளங்கிக் கொண்டீங்க....'

'எனக்கொண்டும் பைத்தியமில்ல. அவங்கட கதையும் சரியில்ல...உங்கட நடத்தையும் சரியில்ல...'

'என்ர நடத்தையில... என்ன சரியில்ல...?'

மாலதிக்குக் கோபம் தலைக்கேறியது. அவனை உற்றுப் பார்த்தாள். அவளது கண்களில் அனல் தெறித்தது. உடல் நடுங்கியது. அவனது கேள்விக்குப் பதிலாக, ஆயிரமாயிரம் கேள்விகளை அவன்மீது அள்ளி வீசுவதற்கு அவளின் உதடுகள் துடித்தன.


ஆனால், கோபத்தையும் மீறி குமுறிவந்த அழுகை பேச முடியாமல் தடுத்தது. அங்கிருந்து ஓடிச்சென்று தன் அறைக்குள் கட்டிலில் குப்புற விழுந்து விம்மி வெடித்தாள்.

அன்று இரவு முழுவதும் அவளுக்குத் தூக்கம் வரவில்லை. கண்ணீரால் தலையணை முற்றாக நனைந்தது. எதை நினைத்தாலும் கண்ணீர் பெருகியது. தொண்டைப்பகுதி இறுகிக் கனத்து நோவெடுத்தது. விடியவிடிய அவளது சிந்தனை சுழன்றது. எந்தத் திசையும் தெரியாத பாலைவனத்தின் மத்தியிலே தன்னந்தனியே விடப்பட்டது போன்றதொரு வெறுமை உணர்வில் இனம் புரியாத பயம் இதயத்தைக் கவ்வியது. அன்றுவரை பூரணமான ஒரு கணவனாகத் தன்னுடன் நடந்துகொள்ளாத துஷியந்தன் மேல் அதுவரை எழாத ஒரு சந்தேகம் அவளுக்கு மெல்லத் தலைதூக்கியது. அப்படியொரு சந்தேகம் எழுந்த கணத்திலிருந்து அவளது சிந்தனை முழுவதும் அதனைச்சுற்றிச் சுற்றியே வந்துகொண்டிருந்தது.

மறுநாள் துஷியந்தன் வேலைக்குச் சென்றதும் அவனது படிப்பறையினுள் சென்று அங்கிருந்த எல்லாப் பொருட்களையும் ஆராய்ந்தாள். இந்த ஒரு நேரத்திற்காக விடியும்வரை கண்விழித்து அவன் செல்லும்வரை காத்திருந்ததால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் அந்த அறையை துருவிவத்துருவி அசுரத்தனத்தோடு துளாவினாள். அங்கே இருந்த பொருட்கள் அவளுக்கு ஆச்சரியத்தையும், பயத்தையும் கொடுத்தன. எத்தனையோ விதம்விதமான மருந்துக்குளிசைகள், மருத்துவஅறிக்கைகள். சிலவற்றை வாசித்துப்பார்த்தாள். அவளுக்கு எதுவுமே விளங்கவில்லை. தொடர்ந்து தினமும் மருந்தெடுக்கவேண்டிய ஏதோ ஒரு நோய் துஷியந்தனுக்கு இருக்கிறது என்று மட்டும் அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. அது புரிய வந்தபோது அவளின் இதயமே வெடிப்பது போல இருந்தது. ஓவென்று அழவேண்டும்போல இருந்தது. ஆனால் அழுகை வர மறுத்தது. கண்கள் மட்டும் நீரை வடித்தன. நெஞ்சு கனத்தது. சித்தசுவாதீனமற்ற ஒருவரைப்போல அந்த மருந்துகளை வெறித்துப் பார்த்தபடியே இருந்தாள். சில நிமிடங்களில் திடீரென்று எதையோ நினைத்துக் கொண்டவளைப் போல எழுந்தாள். அந்த அறிக்கைகளிலே சிலவற்றை அங்கிருந்த தொலைநகலி மூலம் பிரதி எடுத்தாள். கண்ணில் பட்ட மருந்துகளின் பெயர்களையெல்லாம் ஒரு தாளில் எழுதினாள். தனது அறைக்குள் சென்று கட்டிலில் வீழ்ந்தாள். அன்றே தனது பள்ளித்தோழி இராதாவுக்கு கடிதம் ஒன்றை எழுதி எல்லாவற்றையும் அனுப்பிவிட்டாள்.

மாலதியோடு க.பொ.த. உயர்தர வகுப்பவரை ஒன்றாகப்படித்த இராதா இப்பொழுது ஒரு மருத்துவராக கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றில் கடமையாற்றுகிறாள். மாலதியும் இராதாவும் பள்ளித்தோழிகள் மட்டுமல்ல குடும்ப நண்பர்களும்கூட.

அதனால் இதுபற்றி இராதா மாலதியின் பெற்றோரிடம் சிலவேளை ஏதாவது சொல்லிவிடக்கூடும் என்றெண்ணிய மாலதி அவ்வாறு செய்துவிடவேண்டாம் என்று இராதாவிடம் மன்றாடிக்கேட்டு எழுதினாள்.

ஒருவாரத்தில் இராதா மாலதியைத் தொலைபேசியில் அழைத்தாள். அழுதுகொண்டே அவள்கூறிய விடயம் மாலதிலின் தலையில் இடிபோல் விழுந்தது. மாலதியின் கணவன் குடும்பவாழ்க்கையில் ஈடுபடமுடியாத நோயால் பீடிக்கப்பட்டிருப்பதை அவளிடமே சொல்லும்போது என்னதான் டாக்டராக இருந்தாலும் இராதாவால் எப்படி அழாமல் இருக்கமுடியும்? மாலதிக்குத் தன் வாழ்க்கையில் இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும்
தகர்ந்து விட்டது.

'துஷியந்தனால் குடும்ப வாழ்வில் ஈடுபட முடியாது, அவனைப் பீடித்திருக்கும் நோயை முற்றாகக் குணப்படுத்தவும் முடியாது, பொரும்பாலும் தவறான சிற்றின்பத் தொடர்புகளினால்தான் இந்த நோய் ஒருவருக்குத் தொற்றிக்கொள்ளும்' என்கின்ற விபரங்களையெல்லாம் இராதாவிடமிருந்து அறிந்தபோது மாலதியின் இதயம் நொறுக்கியேவிட்டது. அப்போதே அவளின் உடலில் இருந்த இரத்தமெல்லாம் உறைந்துவிட்டது போல இருந்தது அவளுக்கு.

அன்றிலிருந்து அவள் நடைப்பிணமானாள். தான் ஏமாற்றப்பட்டுவிட்டதை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தன்னைமட்டுமன்றித் தன் பெற்றோரையும் துஷியந்தனும் அவனின் குடும்பத்தினரும் திட்டமிட்டு ஏமாற்றிவிட்டார்களே என்பது அவளது உள்ளத்தை ரணகளமாக்கியது.

அவளால் உண்ண முடியவில்லை. உறங்க முடியவில்லை. எவருடனும் பேசப் பிடிக்கவில்லை. யார் முகத்தையும் பார்க்கப் பிடிக்கவில்லை. தன்னைச் சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் சதிகாரர்கள், மோசக்காரர்கள் என்ற எண்ணம் அவளைப் பயமூட்டி வாட்டி வதைத்தது. எடுத்ததற்கெல்லாம் துஷியந்தன் மீது எரிந்து விழுந்தாள். அவளது மாற்றத்தைக்கண்டு கலவரமடைந்த துஷியந்தனின் தாயும், கௌரியும் அவளிடம் வந்து என்ன ஏது என்று அறிவதற்காகப் பேச்சுக் கொடுத்தார்கள். அப்போது மாலதி அவர்களைப் பார்த்த பார்வையில் அவர்கள் கருகிப் போனார்கள். எதுவுமே பேசாமல், சுட்டெரிக்கும் கண்களால் அவர்களை ஒருநிமிடம் அப்படியே இமை வெட்டாமல் அனல் கக்கப் பார்த்துவிட்டு, விருட்டெனத் தன் அறைக்குள் சென்று படாரெனக் கதவைச் சாத்தினாள். மறுநாள் அவள் தன் தந்தையைப்போல எண்ணி மிகவும் மதித்து நடந்த துஷியந்தனின் அப்பா அவளிடம் ' மகள், மாலதி நான் உங்களோட கொஞ்சம் கதைக்கவேணும் பிள்ளை' என்று சொல்லிக்கொண்டு வந்தார். மாலதி, நிமிர்ந்து ஓர் அருவருப்பான பிராணியைப்பார்ப்பது போல அவரைப்பார்த்து, ' சீ நீயும் ஒரு மனுஷனா..தூ' என்றாள். அதைப் பார்த்துவிட்ட துஷியந்தன் பாய்ந்தோடி வந்து, 'ஏய்! என்னடி செய்த நீ?' என்று கேட்டுக்கொண்டே அவளை அடிக்கக் கையை ஓங்கினான். ஓங்கிய கையை தடுத்துப் பிடித்த மாலதி, அதனை உதறித் தள்ளிய வேகத்தில் அவன் நிலை குலைந்துபோனான்.

'என்ன அடிக்க வாறீங்களா? பெம்பிளைய அடிச்சால் மட்டும் நீங்க ஆம்பிளையாகிடுவீங்களா?' என்று சொல்லிவிட்டு யாருடைய பதிலுக்கும் காத்திராமல் மின்னலென அவ்விடத்தை விட்டகன்று தன் அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டாள். தன் கையை அவள் உதறித்தள்ளிய வேகத்தில் ஓர் ஆணுக்கு இருக்கக்கூடிய பலம் இருப்பதை உணர்ந்துகொண்ட துஷியந்தனுக்கு, 'பெம்பிளையை அடிச்சால் மட்டும் நீங்க ஆம்பிளையாகிடுவீங்களோ?' என்ற கேள்வி பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கணையாக நெஞ்சில் பாய்ந்து, அவனின் உடற்பலத்தையும், மனப்பலத்தையும் ஒரே கணத்தில் உறிஞ்சிக் குடித்தது.

அடுத்தடுத்த நாட்களில் வீட்டுக்கு முன்னால் வாடகைக் கார் வந்து நிற்பதும், மாலதி ஏறிப் போவதும், பின்னர் வாடகைக் காரிலேயே அவள் வந்து இறங்குவதும் எல்லோருக்கும் பதற்றத்தைக் கொடுத்தது. எங்கே போகிறாய் என்று கேட்பதற்கு யாருக்கும் துணிவில்லை. துஷியந்தன் ஒரு தடவை கேட்டான். 'மாலதி..என்ன நீ உன் பாட்டுக்கு எங்கேயோ போறாய்.. வாறாய்.. அதுவும் டாக்ஷியில...?' அவள் சொன்ன பதில் அவனைத் திக்கமுக்காடச் செய்துவிட்டது. ' பயப்பிடாதீங்க.. உங்கட அக்கா நினைக்கிற மாதிரி நான் ஆம்பிளை தேடிப் போகேல்ல.' துஷியந்தன் மௌனமானான்.

அதற்கு முதல் நாள் துஷியந்தனின் அம்மா. அப்பா, அக்கா கௌரி, கொளரியின் கணவர் எல்லோரும் ஒன்றாகக் கூடியிருந்து மாலதியைக் குறை சொல்லி குற்றம்சாட்டி பேசிக்கொண்டிருந்தது துஷியந்தனுக்குத் தெரியும். தாங்கள் செய்த தவறை மறைத்து, மாலதியைப் பற்றிக் கண்டவிதமாகப் பேசினார்கள்.

'இப்ப என்ன நடந்த போச்சுதெண்டு இப்பிடிக் குதிக்கிறாள்.'

'உலகத்தில நடக்காத ஒண்டா? கலியாணம் நடந்த பிறகு ஒரு விபத்தோ. நோயோ வந்து புருஷனுக்கு ஏலாமல் போனால் என்ன செய்யுறது..எத்தினை குடும்பத்தில அப்பிடியெல்லாம் நடந்திருக்குது?'
 

'அவளுக்குத் திமிர்.'

'போயும் போயும் இப்படி ஒருத்திய எங்கயிருந்து அப்பா கண்டு பிடிச்சீங்க?'

இப்படியெல்லாம் மாலதிக்குக் கேட்கக்கூடியதாக அவர்கள் திட்டிக் கொண்டிருப்பதைத் தனது அறைக்குள் இருந்து மாலதி கேட்டுக்கொண்டுதான் இருந்தாள். தன்னை வம்புக்கு இழுத்து அவமானப்படுத்துவதற்காகத் திட்டமிட்டே இப்படி நடக்கிறது என்பதை மாலதி உணர்ந்து கொண்டாள். கோபத்தை அடக்கி மனதுக்குள் குமுறிக்கொண்டிருந்தாள். அப்போது, கௌரிசொன்ன வார்த்தைகள் அவளைக் கொந்தளித்தெழத் தூண்டின. ஆனாலும் மிகவும் க
ஷ்டப்பட்டுத் தன்னை அடக்கிக்கொண்டாள்.

'அவுஸ்திரேலியா வாழ்க்கை கிடைச்சது அதிஷ்டம் எண்டு நினைக்காமல் ஆம்பிளைச் சுகத்துக்கு அலையுறாள்...இவளெல்லாம் ஒரு பொம்பிளையா...? என்று கௌரி கக்கிய வார்த்தைகள் வெகுநேரத்திற்கு மாலதியின் மனதை எரித்துக்கொண்டிருந்தன. 'அஞ்சு வயதுப் பிள்ளையை தன்ர தாயோட விட்டுப்போட்டு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவிரவா நைற் கிளப்பில கூத்தடிக்கிற கௌரி என்னையா ஆம்பிளைச் சுகத்துக்கு அலைபவள் என்று சொல்கிறாள்' என்று நெஞ்சுக்குள் குமுறிக்கொண்டிருந்தாள். அந்த வார்த்தைகளை அவளால் தாங்க முடியவில்லை. ஆத்திரம், துக்கம் எல்லாம் அழுகையாக வெடித்தது. நீண்டநேரம் அழுது தீர்த்தபின்னர் அவள் நிதானமானாள்.

எல்லோரும் சேர்ந்து தன்வாழ்வைப் பாழாக்கிவிட்டு இப்போது தன்னையே குற்றவாளியாக்கிக் கதைக்கிறார்கள். அவர்களுக்குப் பாடம் படிப்பிப்பதை விடத் தன்வாழ்வை அவர்களிடம் இருந்து மீட்டெடுப்பதுதான் புத்திசாலித்தனமானது என்று தீர்மானித்தாள். அதன் விளைவாகத்தான் அவள் அடிக்கடி வெளியே சென்றாள். யாருக்கும் தெரியாமல் தன் பயண ஒழுங்குகளைச் செய்துகொண்டிருந்தாள். அந்தநேரத்தில்தான் துஷியந்தனின் கேள்விக்கு அப்படியொரு சூடான பதில் அவளிடமிருந்து வெளிப்பட்டது. முதல்நாள் தமக்கை கூறிய வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டு மௌனமாயிருந்த துஷ்யந்தனின் குற்றமுள்ள நெஞ்சுக்கு மாலதியின் பதிலுக்கும் மௌனமாவதைத் தவிர வேறுவழி இருக்கவில்லை.


*******************************

பக்கத்து இருக்கைகளில் அமர்ந்திருந்த சிலர் எழுந்து பரபரப்போடு தமது உடமைகளைத் தூக்கிக்கொண்டு நடந்தார்கள். அறிவித்தல் பலகையில் மாலதி செல்லும் கொழும்பு விமானம் பயணிகளை ஏற்றுவதாக அறிவிக்கும் குறிப்பு வந்து விழுகின்றது. அவர்களும் அதே விமானத்தில் பயணிப்பவர்களாக இருக்க வேண்டும். மாலதி எழுந்து தனது கைப்பையை எடுத்துக்கொண்டு, சுற்றும்முற்றும் ஒருமுறை பார்த்துவிட்டு, அவளது விமானத்தில் பயணிகள் ஏறுவதற்கு உட்புகவேண்டிய நுழைவாயிலை நோக்கி நடக்கிறாள். அங்கே பாதுகாப்புச் சோதனைகள் முடிவடைந்து விமானத்தினுள் சென்றதும் விமானப் பணிப்பெண் அவளுக்குரிய இருக்கை அமைந்துள்ள பகுதியைச் சுட்டிக்காட்டுகிறாள். மாலதி தன் இருக்கையில் அமர்ந்து, தனது கைப்பையினுள் இருந்து ஒருதாளை எடுத்தாள். அது அவள் துஷியந்தனுக்கு முகவரியிட்டு, மெல்பேண் விமான நிலையத்தில் இருந்த தபால்பெட்டிக்குள் போட்டுவிட்டுவந்த கடிதத்தின் பிரதி. அமைதியாக அதை வாசித்துப்பார்க்கிறாள்.



துஷியந்தனுக்கும் குடும்பத்தாருக்கும் வணக்கம்.
துஷியந்தனுக்கு என்ன நோய் என்று தெரிந்திருந்தும் ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் பாழடிக்க நினைத்த உங்களையெல்லாம் கடவுள் என்று ஒருவர் இருந்தால் பார்த்துக்கொள்ளட்டும். எனது வாழ்க்கையை நான் தீர்மானித்துக்கொள்வேன். நான் கொழும்பிற்கு எனது பெற்றோரிடம் செல்கிறேன்.

யாருடனோ ஓடிப்போய்விட்டாள் என்று நீங்கள் ஊரெல்லாம் பறையடிப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். அது உங்கள் பாவச் சுமையை மேலும் கூட்டுமேயன்றி என்னைப் பாதிக்காது.

இறுதியாக துஷியந்தனுக்கு சில வார்த்தைகள். அவுஸ்திரேலியச் சட்டப்படி என்னை விவாகரத்துச் செய்வதற்கான நடவடிக்கைகளை விரைவாக எடுத்து உங்கள் பாவங்களில் சிறுபகுதியையாவது கழுவிக்கொள்ளப் பாருங்கள். நீங்கள் அதைச் செய்தாலும் செய்யாவிட்டாலும் நான் இன்னும் ஒரு திருமணம் செய்யத்தான் போகிறேன். எனக்காக இல்லாவிட்டாலும் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக வாழ்ந்த எனது பெற்றோர் இறுதிக்காலத்திலும் அப்படியே வாழவேண்டும் என்பதற்காக நான் திருமணம் செய்வேன். எவ்வளவோ நல்லவர்கள் உத்தமர்கள் இந்த உலகத்திலே இருக்கிறார்கள். அவர்களில் என் கதை முழுவதையும் கேட்டு என்னைத்திருமணம் செய்துகொள்ளும் ஒருவருடன் நான் சந்தோஷமாக வாழ்வேன். ஒருவகையில், உங்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். அவுஸ்திரேலிவுக்கு நான் வரும்போது இருந்ததுபோலவே என்னைத் திரும்பிச் செல்ல வைத்திருக்கிறீர்கள். இன்னும் கன்னியாகவே நான் இருப்பது உங்களால்தானே. அந்த நன்றிக்கடனுக்காக, உங்களுக்குக் கொடுத்த சீதனப்பணம், வெள்ளவத்தை வீடு எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றை நீங்கள் திருப்பித்தரத் தேவையில்லை. உங்கள் வைத்தியச் செலவுக்குப் பயன்படுத்துங்கள். நீங்களோ உங்கள் குடும்பத்தவரோ இனிமேலும் யாரையும் ஏமாற்றாதீர்கள்.

இப்படிக்கு
மாலதி

வாசித்து முடிந்ததும் மெல்லியதொரு நிம்மதிப் பெருமூச்சு அவளிடம் இருந்து வெளிப்படுகின்றது. கடிதப் பிரதியை மடித்து மீண்டும் தன் கைப்பைக்குள் வைக்கிறாள். இருபது நிமிடங்களில் விமானம் தரையோட்டத்தைத் தொடர்ந்து மெல்ல எழும்பிக் கொழும்பைநோக்கிப் பறக்கின்றது.

(யாவும் கற்பனை)
 


srisuppiah@hotmail.com