மனக்கோலம்

எஸ்.ஸ்ரீரஞ்சினி

''அம்மா யாருடைய கடிதம்?'' எனக் குழந்தை அருண் கேட்டபோது  மிகுந்த பரவசமாகவும், மகிழ்வாகவும், ஹோலில் இருக்கும் அவனுக்குக் கேட்கும் படியும் அவள் சொன்னாள். ''அம்மா எழுதின கதைக்கு பரிசு கிடைத்திருக்கிறது கண்ணா.'' ''கெட்டிக்கார அம்மா'' மழலைப் பாராட்டுடன் அவள் கையில் இருந்த கடிதத்தைப் பறித்துக் கொண்டு அவனிடம் ஓடினான் அருண்.

 ''அப்பா இதைப் பாருங்கோ- அம்மாவுக்குப் பரிசு கிடைத்திருக்கிறது.'' எனக் குதூகலமாகச் சொன்ன மகனுக்கு ''இதென்ன பரிசடா போயும் போயும் ஒரு 250ரூபா இந்தக் காலத்தில் ஒரு ரியூசன் கொடுத்தால் கூட எவ்வளவு அதிகமாக உழைக்கலாம் என உன்னுடைய அம்மாவுக்குத் தெரியவில்லையே.'' என்று அவன் சொன்ன போது அவளுக்கு உள்ளம் ஒரு லட்சம் துண்டுகளாய் உடைந்து சிதறிப் போன மாதிரியிருந்தது.

 இவருக்கு என்னதான் நடந்தது. பணத்தைப் பெரிதாக நினைக்கும் அளவிற்கு மாறித்தான் போய்விட்டார் என்ற நிதர்சனத்தை அவளால் ஜீரணிக்க முடியவில்லை. கண்களில் திரையிட்ட நீர்த்திவலைகளைத் தடுக்கவும் முடியவில்லை.

 ''என்னுடையவளுடைய ஆக்கங்களில், வளர்ச்சியில், புகழில், என்னைத்தவிர, யாருக்கு அதிக உரிமையிருக்க முடியும்? உன்னுடைய மனைவியின் கவிதையில் நெகிழ்ந்தோம். கதையில் நிதர்சனத்தைத் தரிசித்தோம். கட்டுரையில் நம்மை நாமே பார்த்தோம். என மற்றவர்கள் பாராட்டும் பொழுதுகளில் நான் எவ்வளவு தூரம் மகிழ்வில் நிறைந்து போகிறேன் தொரியுமா?'' என ஊக்கம் தந்தவனுக்கு இன்று மன உளைச்சலில் பாராட்டத்தான் முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. குழந்தையிடம் இப்படிச் சொல்லுமளவிற்கு இலக்கியம் கசந்து விட்டதா? அல்லது என்னை வெறுத்து விட்டாதா?- நினைவுகளைத் தொடரமுடியவில்லை.

 அவனுடைய சிநேகிதன் பிரகாஷ் வீட்டிற்குப் போய் வந்த அன்றும் இப்படித்தான். 'காதலித்தவளைக் கைப்பிடித்தாலும் நிறையச் சீதனமும் வாங்கி வளமாக, வசதியாக வாழ்கிறவர்கள் கொடுத்து வைத்தவர்கள்தான். நான்தான் ஏதோ பாவம் செய்திருக்கிறேன்.'' என்று அவன் சொன்னபோது அவளால் மௌனமாகக் கண்ணீரைத்தான் பொலபொலவெனக் கொட்ட முடிந்தது. 'சீ இப்ப நீ என்னத்துக்கு அழுகிறாய், நான் உன்னை அடைந்ததையிட்டு எவ்வளவு சந்தோஷமாய் இருக்கிறேன் என உனக்கே தெரியும் மீனா. ஆனால் மனதுக்குப் பிடித்தவளைத் திருமணம் செய்யும்போது வருகின்ற கஷ்டங்களைத்தான் சொல்ல வந்தேன்' என அவள் கண்ணீரைத் துடைத்துத் தலையை ஆதரவாக வருடிவிட்டபோது தன்னைப் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அவன் அப்படிச் சொல்லவில்லை என்பதில் சமாதானப்பட்டுப் போனாள்.

 ஆனாலும் பின் தொடர்ந்த ஒவ்வொரு நிகழ்வுகளிலும் உணர்ந்தோ உணராமலோ சிரித்துப் பேசுவது போலப் பேசினாலும் அவளை மறைமுகமாக அவன் புண்படுத்தி வருவதை அவளால் தாங்க முடியவில்லை.

 ஆனால், இதே இலக்கிய ரசனையும், தமிழ் ஆர்வமும், அவள் கதைகள் பற்றிய அவனது தரமான பண்பட்ட விமர்சனமும்தான் அவர்களை ஆரம்பத்தில் இணைத்து வைத்தது.

 ''எப்படி மீனா உங்களால் இத்தனை பண்பட்ட மனதுடன் சமூகப் பிரச்சினைகளை அணுக முடிகிறது என நான் வியந்து போகிறேன். அத்தனையும் தத்ரூபமான- மனதைத் தொட்டுப் பேசும் வெளிக்காட்டல்கள். கதை என்பது வாசித்து முடிப்பதுடன் முடியக் கூடாது. வாசித்த பின் மனதில் பதிக்கப்பட்ட தாக்கங்கள் மூலம்தான் ஆரம்பமாக வேண்டும் என்பதில் உங்களை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை.'' என்று அவன் பாராட்டியது அவள் உள்ளத்தைத் தொட்டு, அவன் ஆர்வம் அவள் இதயத்தை மீட்டி அவன் பண்பு அவளுள் இனியகீதம் இசைத்து....... பின் அந்த ரசனையும் இந்தச் சிந்தனையும் மொட்டவிழ்ந்து காதலாக மலர்ந்து....... நினைக்க நினைக்க இனிக்கும் நிகழ்வுகள்.

 நேரம் கழிவது தெரியாமல், சுற்றுப்புற சிந்தனையின்றி அணைத்து மகிழ்வது தான் அன்பின் நிரூபணம் என வரைவிலக்கணம் தரும் பல்கலைக்கழகச் சூழலில் அவர்கள் வித்தியாசமான ஜோடியாய் இலக்கிய ஆய்வும், நூல் விமர்சனமும் செய்து கொண்டு மகிழ்ந்த நாட்கள் எதற்கும் இணையற்றவை.

 ஒரு கலைஞனுக்கு, படைப்பாளிக்கு இலக்கிய நாட்டமுள்ள ரசிகன் வாழ்க்கைத் துணையாக அமையாவிட்டால் இலக்கிய தாபத்துக்கு வழிதேடுவது மிகக்கடினம். அவ்வகையில் உனக்கு நல்லதொரு துணை கிடைக்கிறது. உனது இலக்கியப் பயணம் சீரானதாக, சிறப்பான பாதை உடையதாக இருக்கும் எனச் சிநேகிதிகள் வாழ்த்தியபோது மனம், காற்றின் வேகத்தில் உயரப் பறந்த பொழுதுகள் எண்ணற்றவை.

 பழகிய வீணையைத் தொட்டு மீட்ட ஆரம்பிக்கும் முன்பே ''உனக்கு வேற வேலையில்லையோ? பிள்ளையைப் பார் மணலில் விளையாடுகிறது. குசினியைப் பார், குப்பையாகக் கிடக்கு'' எனச் சித்தி மீது சிடுசிடுக்கும் சித்தப்பாவைப் பார்த்து மனம் கசந்தவளுக்கு வீணை உறையைக் கழற்றுவதிலிருந்து ஒவ்வொரு நரம்பாகச் சுருதி கூட்டி இசை எழுப்பும் வரை கலைத்துவத்தைக் காட்டும் கலைஞன் போல் அவனும் ரசிகன் மட்டுமல்ல ஒரு கலைஞனும் தான் என்ற உணர்வைக் கொடுத்து அவள் உள்ளத்தை நிறைத்த முதலிரவை இப்போது நினைத்தாலும் அவளுக்கு சிலிர்ப்பாக இருக்கும்.

 தாம் வசதியாக இருப்பதைப் பெரிதாகக் காட்டி ''என்னடா கணேஷ் காதல், இலட்சியம் அப்படி இப்படி என்று ஏதோ பெரிதாகச் சொல்வாயே. இப்போ உனது வாழ்க்கை எப்படியிருக்கிறது.'' எனக் கேட்போருக்கு, 'ஒருவர் நன்றாக இருக்கிறாரா இல்லையா என்பது வெளிப்பார்வையில் தெரியும் வசதியிலும் டாம்பீகத்திலும் இல்லையடா. நீ கேட்பது எனக்குப் புரிகிறது. மன நிம்மதியும் நிறைவும்தான் வாழ்க்கை என்று நினைப்பவன் நான். அந்த வகையில் மிகவும் சிறப்பாக வாழ்கின்றேன்.'' என மனதாரச் சொல்பவன் இப்படி மாறிப் போவான் என அவள் கனவுகூடக் காணவில்லை.

 ரசனையும் இலக்கிய ஆர்வமும் வயதுடனும் வசதியுடனும் தொடர்புடையதாய் அதற்கேற்ப மாறிப் போகின்றனவா?

 நான்காம் நாள் மாலை பூஞ்செடிகளுக்கு நீர்பாய்ச்சிக் கொண்டிருந்த போதும், கலை உணர்வு உனக்கு இலக்கியம் படைப்பதில் மட்டுமன்றி சமையலில், வீட்டை ஒழுங்குபடுத்துவதில், பூந்தோட்டம் அமைப்பதில், அழகு பார்ப்பதில், யாவற்றிலும்தான். உள்ளத்தில் உள்ளது மீனா. உன்னிடம் வந்த பின்தான் நேரக்கட்டுப்பாட்டுடன் தொழிற்படுவதையே கற்றுக் கொண்டேன்.'' என்று பாராட்டிப் பரவசம் தரும் கணவனே அவள் நிலைவில் முன் நின்றான். படுக்கையறை யன்னலோரத்தில் சுகந்தம் பரப்பும் முல்லையையும், மல்லிகையையும் நுகரும் பொழுதுகளில் அவளை அணைத்தபடி நான் கொடுத்து வைத்தவன்தான் என எத்தனையோ முறை சொல்லியிருக்கின்றான்.

 அருண் வந்து அவள் முதுகில் தொங்கியவாறு ''அம்மா நேற்று ரீவியில் சிறுவர் நிகழ்ச்சி நல்லாயிருந்ததாம் அம்மா ஏன் எங்கடை வீட்டில் ரீவியில்லை? வாங்குவோமா?'' என்ற போது ''சரி கொஞ்ச நாள் பொறுத்து வாங்குவோம் ராஜா'' என்றதும் விறுவிறு என்று இறங்கி அவள் முகவாயை நிமிர்த்தி ''எப்போ அம்மா'' என ஆவலாகக் கேட்டான். ''சீக்கிரமாகவே'' என்ற அவளது பதிலில் அவன் திருப்தியடையாமல் அப்பாவிடம் ஓடினான்.

 சாய்மனைக் கதிரையில் படுத்திருந்தபடி பத்திரிகை படித்துக் கொண்டிருந்த அவனிடம் 'அப்பாவும் அம்மாவும் பெரிய வேலைபார்க்கிறார்களே, இருந்தும் ஏன் இன்னும் நீங்கள் ரீவி வாங்கவில்லை? என பக்கத்து வீட்டு ரவி கூடக் கேட்டான் அப்பா,' எனக்காரணம் கேட்டான் மகன்.

 ''பெரிய வேலைதான் ராஜா. ஆனால் ரவியின் அப்பாவுக்கு கொடுத்த சீதனம் மாதிரி உன்னுடைய அப்பாவுக்கு யாரும் கொடுக்கவில்லையே''.

 ''சீதனமா, அது என்ன அப்பா. ஏன் கொடுத்தார்கள்?''

 ''பெண்ணை ஆணுக்குக் கலியாணம் செய்து கொடுக்கும் அப்பாமார், பிள்ளை வசதியாக வாழவென்று காசு கொடுப்பார்கள்''.

 ''அப்பா உங்களுக்கு ஏன் தரவில்லை''.

 ''உங்கடை அம்மாவை எனக்குத் தரவில்லை.'' என மகனுக்குக் குற்றச்சாட்டு சொன்ன போது அவன் அவளைத் திருப்பிக் கேட்டான்.

 ''ஏன் அம்மா நீங்கள் கொடுக்கவில்லை.''

 அவளுக்கு ஆத்திரம் வந்தாலும் ஓரளவு அடக்கிக் கொண்டு சொன்னாள். ''அப்பாவுக்குச் சீதனம் வாங்கிற மூளை அப்ப வரவில்லை. இனிவந்து என்ன செய்வது? ஆனாலும் உனக்கு ஒரு தங்கை பிறந்தால் கட்டாயம் சீதனம் கொடுத்துத்தான் நான் செய்து வைப்பேன்.''

 அவர்களது காதல் மலர்ந்து மணம் பரப்ப முதலேயே அவள் தனக்குள்ள பிரச்சினைகளை கஷ்டங்களை அவனுக்கத் தெரிவித்திருந்தாள். ஆனால் அவளுக்குத் தெம்பு கொடுத்து பதினான்கு வயதில் ஒரு தங்கை மட்டும் தானே இருக்கிறாள். அவளுக்குத் திருமணப் பிரச்சினை என்று வருவதற்கிடையில் இருவடைய உழைப்பிலும் மிச்சம் பிடித்துச் சேர்த்து விடலாம். எனத்தன் பெற்றோருக்கு நம்பிக்கை கொடுத்து திருமணம் நிகழ வழி வகுத்தவனே அவன்தான்.

 ஒரு வருடக் குடித்தனம் வாடகை வீட்டில் கழிந்ததால் ஏற்பட்ட சிரமங்களும், நண்பன் ஒருவன் கொடுத்த அட்வைசும்தான் லோன் எடுத்து வீட்டைக் கட்டுவோம் என அவனை எண்ணவைத்தது. அதனால் எடுக்கும் சம்பளத்தின் பெரும் பகுதி லோனுக்குக்; கழிக்கும் பணமாக, தங்கைக்கும் சேர்க்கும் சீதனமாக, மகனுக்கு இடும் நிரந்தர வைப்பாக மறைந்து போக, சீவியம் நாளாந்தம் கணக்குப் பார்த்துச் செலவழிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் வந்து நின்றபோது சாப்பாடு தவிர்ந்த ஏனைய எந்தச்சிறு செலவும் அநாவசியமானதாக மட்டுமன்றி, தவிர்க்க வேண்டிய சுமையாகவும் மாறிவிட்டது. இந்நிலையில் தொழிலுக்கேற்ற கௌரவமாவது வேண்டாமா என அவன் நினைப்பதை அவள் அசட்டுத் தனமானதாகவே நினைத்தாள். இதனால் ஏற்படும் மனப் போராட்டங்கள் இருவருக்கும் இடையில் பெரிய இடைவெளியை ஏற்படுத்தின. அவள் தான் பிறந்த பாவத்தை எண்ணி அழுதாள். அவன் தன் இலட்சியத்தில் உறுதியாக நிற்கமுடியமல் கலங்கினான்.


 காலங்கள் கழிந்துகொண்டிருந்தன. திடீரென ஒருநாள், அவனுடைய தங்கையின் திருமணத்திற்கு ஒருலட்சம் ரூபா ஒரு மாதத்திற்குள் தேவை என அவன் தந்தை வந்து நின்றபோது அவர்களுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. ''தங்கைச்சிக்கு இருபத்தொரு வயது கூட ஆகவில்லை. அதற்குள் திருமணத்திற்கு என்ன அவசரம் அப்பா? அதைவிட நமது தகுதிக்குத் தக்க மாதிரியெல்லோ தேட வேண்டும்?'' என அவன் தனது இயலாமையை நியாயத்துடன் இணைத்து கேட்டபோது ''யோசனையில்லாமல் நான் முடிச்சுப் போட விரும்புகிறேன் என்று நினைக்கிறாயோ! அவள் உன்னுடைய தங்கைச்சி தானே. உன்ரை வழியில் எம்மைக் கேட்காமல் சென்றுவிட்டபோது நான் என்ன செய்ய முடியும்'' என அவனையும் அவர் குற்றம் சாட்டியபோது தான் அவனுக்குப் புரிந்தது. ''காதலா? யார் பெடியன்! எனக்குத் தெரியாதே!'' என்றான்.

 ''கோயிலடிக் கந்தசாமி வாத்தியாற்ரை கடைசிப் பொடியன் தான்'' எனத் தந்தை இனம் காட்டிபோது, அவனுக்கு உள்ளுர மகிழ்ச்சியாகவும் தான் இருந்தது. 'அவன் ஆனந்தன் தானே! நல்ல குணமான பொடியன், சிகரெட், குடி என்று ஒரு கெட்ட பழக்கமும் இல்லை.'' என அவன் சொன்னபோது, 'அவன் தான் காதலில் விழுந்திட்டாலும் தாய் தகப்பன் ஆசியுடன் தான் கட்டுவானாம். அவர்கள் தங்கைமாருக்கு என்று ஒரு லட்சமாவது தரச்சொல்லி நிற்கினம். உண்மையில் அவன்ரை இஞ்சினியர் பட்டத்துக்கு இரண்டுகூடக் கொடுக்க ஆட்கள் இருக்கினமாம். இதிலே காதல் என்று பார்க்க வேண்டியிருக்காம்....... அவன் புத்திசாலிதான். பேய்த்தனமாக சும்மா கூட்டிக்கொண்டு போகிறானோ'' எனத் தந்தை சொன்ன ஒவ்வொரு சொல்லும் அவனை மட்டும் அல்ல அவளையும் தான் உறுத்தியது. ''பொடியன் வருகிற மாதம் வெளியிலை போகப் போகிறானாம். அதற்கிடையில் செய்ய வேணுமாம்.'' என்றபோது எப்படியும் இதைச் செய்து வைக்கத் தானே வேண்டும் என்ற பரிதவிப்பில் ''சரி, ஒரு கிழமைக்குள் வந்து எப்ப நாள் வைக்கிறது என்று நான் சொல்லுகிறேன்'' எனத் தந்தையை அனுப்பி வைத்தான்.

 வங்கியில் சேர்த்து வைத்துள்ள பணம் ஒரு 40,000ரூபா தான் வரும் மிகுதிக்கு எங்கே போவது என யோசித்து யோசித்து அவனுக்கு விசரே வந்துவிடும் போலிருந்தது. காதல் திருமணமாயிருந்த போதும் வீடு, நகை, காசு என டிமான்ட் பண்ணும் இது எங்கே? அவனது லட்சியத் திருமணம் எங்கே! அவனுடைய தந்தை அவருடைய மூன்று தங்கையரைக் கரைசேர்ததுள்ள போது தன்னால் தன்னுடைய ஒரு தங்கையைக் கூடக் கரைசேர்க்க முடியவில்லையே என மனம் நொந்தான். தன்னுடைய திருமணத்திற்குப் பச்சைக்கொடி காட்டிய தந்தையின் பெருந்தன்மைக்காகவேனும் தன்னுடைய தங்கைக்கு நல்லதொரு வாழ்வு அமைத்துக் கொடுக்க வேண்டாமா?

 நண்பர்களிடம் தெரிந்தவர்களிடம் ஒரு வாரமாக அலைந்து திரிந்தும் பயன் கிடைக்கும் போலத் தெரியவில்லை. அதற்குள் சிலர் ''சீதன ஒழிப்பு என்பது சமுதாயப் பிரச்சினை கணேஷ்ஷ; பார்த்தியா, நீயாகத் தனியொருவன் அதை ஒழிக்கின்றேன் எனப் புறப்படுவது எவ்வளவு கடினமான காரியம் என்று. ஒரு பத்தாயிரம் கூட எப்படியெல்லாமோ சுழன்று எத்தனையோ பேரை வாழவைக்கும்'' எனத் தத்துவம் சொல்லவரும் போது அவனுக்குப் பற்றிக்கொண்டு வரும். இருந்தாலும் தன் இயலாமையின் முன் அவனால் ஒன்றும் செய்ய முடிவதில்லை.

 இதற்குள் அவள் அவனிடம் ''என்னப்பா செய்யப் போகிறீர்கள்?'' என ஒருநாள் கேட்ட போது, தன் ஆத்திரம் எல்லாம் சேர்த்துக் கொட்டித் தீர்த்தான் அவன். 'உன்னைப் பெற்றவர்கள் ஒரு பத்துப் பதினைந்து ஆயிரம் ஆவது தந்திருந்தால் கூட அது எவ்வளவாக இன்று பெருகியிருக்கும் சொல்லு பார்ப்போம். ஒரு வீடோ காசோ இல்லாமல் பொம்பிளைப்பிள்ளையை வைத்துக் கொண்டு என்ன நோக்கத்தில் இருந்தவர்கள்? ஒருத்தன் சும்மா வந்து கொண்டு போவான் எனக் கனாக்கண்டவர்களோ|| என எரிந்து விழுந்தான். ஏமாற்றப்பட்டுவிட்டதாகக் குற்றம் சாட்டினான்.

 அப்படியிருந்தும் அவள் அவனுக்காக இரங்கி பிரச்சனை தீர்க்க வேண்டும் என்ற நல்ல நேக்கத்தில் தனது தாலிக் கொடியையாவது விற்கச் சொன்ன போது ஏன் ஒரு கொடிகூட மனைவிக்கு கட்டிவைக்க வழியில்லாதவன், அந்த வசதிகூட இல்லாதவன் என ஊருக்குத் தம்பட்டம் அடித்து இதுதான் நம்காதலின் சிறப்பு என வரைவிலக்கணப்படுத்தப் போகிறாயோ என்றபோது, அவளுக்குப் பிரபஞ்சமே இருண்ட மாதிரியிருந்தது.

 இருந்தாலும் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு வந்துவிட்டால் போதும், தன்வாழ்வு பின் அமைதியுடன் நகரும் என்ற நம்பிக்கையில் அவள் காத்திருக்கிறாள்.

 ''பாலைவனத்திலுள்ள வெம்மை அங்குள்ள செடி, கொடி, புல், பூண்டு யாவற்றையும் அழித்துவிட்டாலும் அங்குள்ள கழுகுக் குடும்பத்தை ஒன்றும் செய்ய முடிவதில்லையே. அதுபோல் கஷ்டமும், வறுமையும் அழகு, சுகம், செழுமை போன்றவற்றை அழித்துவிட்டாலும் உள்ளன்பை மட்டும் அழிக்க முடிவதில்லை'' என எங்கோ ஒரு நாவலில் டாக்டர்.மு.வ. சொன்னதை ஞாபகப்படுத்தி தன்னைத்தானே சமாதானம் செய்து கொள்கிறாள் அவள்

sri.vije@gmail.com