ப.சிரஞ்வி கவிதைகள்
(இந்தியாவில் இருந்து)

என்று தணியும் எங்கள் தாகங்கள்?

(21,000 இலங்கை விதவைகளுக்கு இக்கவிதை நெற்றிப் பொட்டாகின்றது.)

தாய் மண்ணைக் காண
மனசுக்குள் மருகும் -
என் போன்ற
ஈழுத்தாய்கள் எத்தனையோ?

உதிரத்தில் பல்துலக்கும்
தோட்டாக்களை விட - எங்கள்
தெரு வாழ்க்கை கொஞ்சம்
திடமானது தான்...

திருமணத்து நறுமண
தாழம்பூக்கள் உலர்வதற்குள்
தாலி தந்தவனைக் காணவில்லை!

குண்டுமல்லி
வாங்கி வரப் போனவன்
எவர் குண்டுக்கு
இரையாகிப் போனானோ?

தேவதையாய் ஜொலித்தவள்
விதவையாகி வருந்தினேன்:
மணப்பெண்ணாய் மலர்ந்தவள்
கைப்பெண்ணாகிக் கருகினேன்!

பதுங்கு குழிக்குள்
வெதும்பி வாழ
பதுமை இவளால்
முடியவில்லை!

ஈழத்தின் 'செம்" மண்ணெடுத்து
முந்தானைக்குள்
முடிந்து கொண்டேன்.

குழந்தை
தந்தை யாரென்று கேட்டால்
முடிந்து வைத்த கந்தையைத்தான்
பிரித்துக் காட்ட வேண்டும்...

சண்டைக்குப் பயந்து
அண்டை நாட்டுக்கு
அழையா விருந்தினர்களாய் வந்து
வருடங்களாகி விட்டது!

வயிற்றிலும் வாழ்விலும்
வறுமை வெறுமை,
நெஞ்சிலும் நினைவிலும்
துக்கம் ஏக்கம்!

வளங்கள் மிகுந்த இடத்தில்
வாழ வழியில்லை...
வாழுமிடத்தில்
வயதுக்கு வந்த மகளுக்கு
வளையல்கள் கூட இல்லை!

இலங்கையில்
விலங்குகளாய் வாழ்ந்தோம்
அகதிகளாகி
சகதிகளாகி விட்டோம்!

துப்பாக்கி தூக்கிகளின்
தீவாவளி கொண்டாட்டம்
ஓயந்ததா இல்லை?

தீபம் ஏற்றி - நாங்களும்
தீவாவளி கொண்டாடுவது
எக்காலம்?

உதிரமும் உப்புக்கண்ணீரும்
பெருகிப் பெருகியே
இலங்கைத் தீவு -
இந்தியப் பெருங்கடலுக்குள்
மூழ்கிப் போகாமலிருந்தால்
எங்களை
அனுப்பி வையுங்களேன்?

சாவிக்கொத்து கூட
வாங்க முடியாத இவளால்
விசா வாங்குவதென்பது...?.

காதல் வர(ம்) வேண்டும்

காதலின் விதை
கவிதையா?
கவிதையின் விதை
காதலா?

தெரிந்து கொண்டு
புரிந்து கொள்வதற்காகவேனும்
காதல் வர வேண்டும்

சாதிக்கத் துடிப்பவர்கள்
ஒவ்வொருவருக்கும்
மனக்கட்டுபாட்டை உண்டு பண்ணி
புலங்களை பக்குவப்படுத்தி
நரம்புகளை நெறிப்படுத்தும்
காதல் வர வேண்டும்...

சதைகளைத் தாண்டி
பாலுணர்வைக் கடந்து -
தெய்வீக பந்தத்தை
பிரித்துணர வைக்கும்
காதல் வர வேண்டும்...

மனதில் நின்றவரைத் தவிர
மற்றவர் 'அனைவரையும்"
சிந்தனைத் தராசில்
சகோதர சகோதரிகளாய்
நிறுத்திப் பார்க்க வைக்கும்
காதல் வர வேண்டும்...

உள்ளங்கையளவு உள்ளத்தில்
கள்ளமின்றி - கல்லறையில்
மண்ணாகிப் போனாலும்
பிளாஸ்டிக்காய் மட்காத -
சிதையில் வெந்தாலும்
சிதையாத -
காதல் வர வேண்டும்...

கண்களிலும்
எண்ணங்களிலும்
நுனிநாக்கிலும் - இரத்த
நாளங்களிலும்
காமங்கள் களைந்து
காலைப் பனித்துளியாய்
காதல் வர வேண்டும்...

இராவணர்களையும்
கோவலர்களையும்
இராமனாக்கி -
மாதவிகளைக்
கண்ணகியாக்கி -
கற்பை பொதுவுடைமையாக்கும்
காதல் வர வேண்டும்...

வரவழைக்கப்படாமல்
வந்தால் விடமுடியாமல் -
உணாந்த பரிசுத்த காதலுக்காய்
தியாகம் எதையும்
செய்ய வைக்கும்
காதல் வர வேண்டும்...

வரும் வரை காத்திருங்கள்
வந்தால் வெல்லுங்கள்
வென்றால் வாழுங்கள்!
வெல்லாவிட்டாலும் -
வாழ வையுங்கள்
வாழ வைப்பதில்
வாழ்வதைக் காட்டிலும்
சுகங்கள் அதிகம் காணலாம்!

காதல்
வரும் வரை காத்திருங்கள்
வந்தால் வெல்லுங்கள்!.