இரா.தெ. முத்து கவிதைகள்

ரோபோட் தேவை

அடுப்படி வேலைக்கு
அலுக்காத
அடிக்கடிக் கண்ணைக்
கசக்காத
ரோபோட் வேண்டும்.

தனக்காய் சிரிப்பது
தனக்காய் அழுவது
கூடாது.

உத்தியோகம் பார்க்கணும்
சம்பளக் கவரை
பிரிக்காமல் தரணும்.

இழுக்கிற இழுப்பிற்கு
இசைவாய் இருக்கணும்.
அவசியத் தேவை
சதைப்பிடிப்பு:
இ;ப்படிப்பட்ட
ரோபோட் வேண்டும்

கணக்குகள்

தம்பிப் பாப்பா தேவை
நான்கு வயது மகளுக்கு.
'ஆண் குழந்தை
வேண்டாமா"
இரவின் நிசப்தத்தில்
கிசுகிசுப்பாள் மனைவி.
ஏக்கங்கள்
ஆசைகள்
பிதுங்கி வழியும்
ஆணுறையில்.

நமது சினிமா

நிஜங்களை நிராகரித்து
பொய்களை ஆராதிக்கும்.

ஒருவேளை சோற்றுக்கும்
உத்திரவாதமில்லாதவனிடம்
கோடீஸ்வரன் மகளை
காதலிக்கச் சொல்லும்.

படுக்கையறை முனகல்களை
பாட்டென பறை சாற்றும்.

வாலிப வாசலுக்கு
வந்துவிட்ட இளசுகளின்
மூளைகளில்
மோகவிதை தூவி
காமப்பயிர் வளர்க்கும்.

தமிழன் பார்க்கும்
தமிழ்ப் படங்களுக்கு
ஆங்கிலத்தில் பெயர் வைக்கும்.

நிகழ்காலத் தீயில்
தேசம் தீய்கையில்
விரலுக்கு மருதாணி
பூசிப் பார்க்கும்.

என்றாலும்
சினிமாவில் சில
சூரியப் பொறிகள்
தென்படுகின்றன:
வெளிச்சம்
வராமலா போகும்?

காத்திருக்கும் ஆண்டாள்

அகிலவல்லியோடும்
பத்மாவோடும்
கர்;ப்ப கிரகத்தினுள்
கம்பீரமாய்
பெருமாள்.

திருமண வரம் வேண்டி
வழிபடும் பக்தர்
ஒரு கோடி.

பிரகாரத்தின் வெளியே
பூட்டிய அறையில்
தனியாய் ஆண்டாள்.

அன்போடு
அருள் பாலிக்க
ஆண்டாள் காத்திருக்க
ஆரேனும் வருவாரோ
தாழ் திறக்க