பூபாலன் கவிதைகள்

பிரிவு வலி

நெஞ்சக் கனவை
நித்த மெண்ணி
நெஞ்சுக் குள்ளே அழுது வைக்கிறேன்.....

பஞ்சாய் வெடித்த
பிரிவை யெண்ணிப்
பாடல் நூறு பாடிவைக்கிறேன்!

சிறகுகள் இரண்டும்
சிதறிய பின்னும்
சீதையைச் சுமக்க எண்ணுகிறேன்.....

உறவுகள் பிரிந்த
பின்பும் உயிரே
உலகம் நீயென வாழுகிறேன்!

கருவறை யான
காதல் கூட்டில்
கல்லறை யாக நிற்கிறேன்...

தெருவில் யாரையும்
கண்டால் கூடத்
தீபமே நீயெனத் துடிக்கிறேன்!

நிலவே உன்னை
நெஞ்சில் சுமந்து
நீண்ட பயணம் செய்திடுவேன்....

சிலநாள் சிந்திய
செந்தேன் புன்னகை
சேர்த்து வைத்தால் வாழ்ந்திடுவேன்!

கண்ணை இழந்த
பின்பு அன்பே
கண்ட கனவு நினைவிருக்கு....

உன்னை என்னுள்
ஊற்றி வைத்ததால்
உறங்கும் போதும் துணையிருக்கு!

இளமைக் கால
ஈர நினைவே
எந்தன் நினைவு உனக்கிருக்கா.....?

அலைகள் போல் என்
நினைவு உன்னுள்
அத்துமீறி வந்திருக்கா!

கிளியே எந்தன்
கிழக்கு தினமும்
உன்னை எண்ணி விடிகிறதே....

தளிரே உன்னைக்
காணா திருந்து
கனலாய் நெஞ்சம் எரிகிறதே!

அவளுக்காக

கண்கள் இரண்டிலும் காதல் நதியை
நிரப்பி வைக்கிறேன் - அவளைக்
காணா நாளில் கவிழ்ந்த படகாய்
மூழ்கிக் கிடக்கிறேன்!

மண்ணில் நானோ பாறை போல
மறைந்து கிடக்கின்றேன் - அந்த
மங்கை பாதம் தீண்டிய பின்பு
மாலை ஆகின்றேன்!

சந்திரன் சூரியன் இரண்டையும் அவளது
சடையில் முடிக்கிறேன் - பின்பு
சரிபாதி யாகப் பாவையை எந்தன்
உடலில் தரிக்கிறேன்!

இந்த நொடிமுதல் இளையவளே எந்தன்
இதயமாய்ச் சுமக்கிறேன் - அந்த
இளைய ராணியின் இதழ்களில் நானோ
தேனாய்ச் சுரக்கிறேன்!

மழலை அவள்பொன் தேகம் தீண்டும்
மழையாய்ப் பொழிகிறேன் - நான்
மங்கையை நனைத்த சுகத்தில் சிப்பியில்
முத்தாய் வளர்கின்றேன்!

குழலை ஒருமுறை தீண்டிட எண்ணி
மலராய்ப் பிறக்கிறேன் - அந்தக்
குயில்சுவா சிக்க எந்தன் மூச்சைக்
கொடையாய் கொடுக்கிறேன்!

தேவதை பறிக்க இதயச் சோலையைத்
திறந்து வைக்கிறேன் - அவளைத்
தேகம் எங்கும் தேக்கி வைக்கத்
தீவாய் ஆகிறேன்!

பூமலர் நானும் போய்வரப் பாதை
போட்டு வைக்கிறேன் - அந்தப்
பூவையின் பாதம் தீண்டிய இடத்தில்
பூத்துக் குலுங்குகிறேன்!

காதல் நதியில் கவிழ்ந்த படகைத்
தேடிப் பார்க்கிறேன் - காயம்
பட்டஎன் மனத்தில் கன்னியின் நினைவை
மருந்தாய் வைக்கிறேன்!

சாதல் இல்லை காதலுக் கென்று
சாத்திரம் சொல்லுகிறேன் - அவள்
சன்னிதி எந்தன் ஆலயம் என்று
பக்தன் ஆகிறேன்!

பெயர் சொல்ல மாட்டேன்

நெஞ்சை மயக்கிய கொலுசொலியும் - என்
நினைவை உருக்கிய வளையொலியும்
பஞ்சு போன்ற பாதங்களும் - அவை என்
நெஞ்சில் நடந்த வேளைகளும்
இதயத் துள்ளே கிடக்கிறது - அவள்
பிரிவுக்கு ஆறுதல் கொடுக்கிறது!

இரட்டை ஜடையில் உயிராடும் - அந்த
இளமைக் கொலுவில் விழியோடும்
இரவும் பகலும் உறவாடும் - என்
இனியவள் பிரிந்தால் உயிர்வாடும்
தெரிந்தும் பிரிந்து சென்;றாளே - எனைத்
தனியாய் விட்டுப் பறந்தாளே!

மீசை அரும்பிய நேரத்தில் - எனை
மீட்ட வந்த வளைக்கரத்தால்
ஆசை பூத்த நேரத்தில் - நான்
அள்ளிக் குடித்த காரணத்தால்
ஓடி ஒளிந்த பொய்விழியாள் - இன்று
ஒதுங்கி நிற்கும் மைவிழியாள்!

அன்ன நடையில் தேன்தளும்பும் - அவள்
அசைந்தால் மண்ணில் பூமலரும்
சின்ன இடையில் கொடிபடரும் - இதழ்
சிரித்தால் நிலத்தில் முத்துதிரும்
மனத்தில் பதிந்தால் ஓவியமாய் - அவள்
கவியில் மலர்ந்தாள் காவியமாய்!

தடைகள் மீறிய நேரங்களும் - அவள்
தாவணி கண்ட காலங்களும்
படைகள் துரத்திய கொடுமைகளும் - என்னைப்
பாலை யாக்கிய பொழுதுகளும்
அடிக்கடி நினைவில் வருகிறதே - துயர்
அடைமழை யாகப் பொழிகிறதே!

ஞானம்

கருவறை வாசலைக் கடந்து - ஒரு
கன்னியின் வலையில் விழுந்து
காலம் முழுதும் கரைந்து
கல்லறை செல்வதா வாழ்க்கை? - சீச்சீ
சில்லறை புத்தி போதும் - நீ
சிந்தனைச் சிறகை விரிப்பாய் - இந்த
ஜெகத்தில் எதையும் ஜெயிப்பாய்!

கல்லாய் இருந்தது போதும் - சிறு
கடுகாய்க் கிடந்தது போதும்
கரையாய்க் கிடந்தது போதும்
கலக்கம் கொள்வதா வாழ்க்கை? - அட
தரிசென வாழ்ந்தது போதும் - படி
தன்னம் பிக்கை வேதம் - உன்
தலையில் வானம் மோதும்!

பூமி என்னும் தோட்டம் - எங்கும்
பூத்த மலர்கள் கூட்டம் - இதில்
புதைந்த மலர்கள் கோடி
புதிராய்ப் போவதா வாழ்க்கை? - அட
புலம்பல் கவிதை எதற்கு - நீ
போகும் திசைதான் கிழக்கு - இனி
புறப்படும் பூமி உனக்கு!

கற்பனைக் கனியைப் புசித்து - தினம்
கனவின் உலகில் வசித்து
கண்கள் இழந்தது போதும்
கற்சிலை யானதும் போதும்
கானல் நீரா வாழ்க்கை - நீ
களங்களை நோக்கிச் செல்லு - இனி
எதையும் வென்று தள்ளு!

தலைவிதி என்னும் நதியில் - நீ
தரைவரை மூழ்கிய தேனோ?
தரைமட்ட மானதும் ஏனோ?
அஸ்த மனமா வாழ்க்கை? - அட
அவலம் சுமப்பதா யாக்கை? -நீ
நிமிர்ந்து நடக்கும் நேரம் - வரும்
தடையும் படியாய் மாறும்!