பிரியன் கவிதைகள்

வேறென்ன வேண்டும்

தளைத்து விட்டது
இன்பம்
இளைத்து விட்டது
கவிதை
முளைத்து விட்டது
கண்கள்
களைத்து விட்டது

இதுதானா காதலின் தொடக்கம்? - என்
இரவுகள் உனக்குள் அடக்கம்.

உறங்கினாலும்
ஆயுள்
சுருங்கினாலும்
இதயம்
கிறங்கினாலும்
ஜீவன்
இறங்கினாலும்

ஆறாது நீதந்த காயம் - ஆறினாலும்
தீராது காதலின் நேயம்.

அகம் பார்த்ததால்
காதல்
சுகம் பார்த்ததால்
உந்தன்
முகம் பார்த்ததால்
விரல்
நகம் பார்த்ததால்

இதயத்தில் இடிஇறங்கக் கண்டேன் - பெண்ணே!
இருந்தாலும் இதமாக்கிக் கொண்டேன்.

பதம் பிடித்து
காதல்
மதம் பிடித்து
கண்ணில்
இதம் கொடுத்து
சிவப்பு
இதழ் கடித்து

உள்ளத்தை உருவின்றி உடைத்தாய் - எனை
உயிருள்ள பிணமாகப் படைத்தாய்

சோகம் என்பதா?
பூவின்
பாகம் என்பதா?
உன்னை
யோகம் என்பதா?
இல்லை
சாபம் என்பதா?

எதுவாக இருந்தாலும்நீ வேண்டும் - எனை
எரித்தாலும் உன்நினைவு தோன்றும்

நோகும் வரை
நான்
சாகும் வரை
உடல்
வேகும் வரை
சாம்பல்
ஆகும் வரை

வெண்ணிலவே உன்நினைவு போதும் எனக்கு
வேண்டாமடி வேறு ஏதும்.

தாய்ப்பாசம்

(மனைவியின் பேச்சைக் கேட்டு தன் தாயை முதியோர் இல்லத்திற்கு அனுப்பிவிடுகிறான் ஒருவன். அந்த இல்லத்தில் மற்ற முதியவர்களிடம் அந்த ஏழைத்தாய் புலம்பும் சோக வரிகள்)

பட்டுசட்ட போட்டுகிட்டு
துட்டுகொஞ்சம் வாங்கிவிட்டு
சிட்டுபோல பொம்பளைய
கட்டிகிட்டு வந்தானே!

பெத்தமனம் படபடக்க
வளத்தமனம் துடிதுடிக்க
கல்யாணம் கட்டிவந்து
கண்கலங்க வச்சானே!

என்னடான்னு கேட்டாக்கா
'நடந்தது நடந்திருச்சு
நடக்குறத பாரு"ன்னு
நாசூக்கா சொன்னானே!

நாவச்ச பூச்செடிதா
நாளபின்ன பூங்குமின்னு
கண்ணுறக்கம் கெட்டுப்போயி
காத்துத்தான் கெடந்தேனே!

நேத்துவந்த புயல்காத்து
பூச்செடிய தின்னுபுட்டு
எம்முன்னே ஏப்பம்விட்டு
போகுறதக் கண்டேனே!

'ஏஆத்தா ஏஆத்தா" ன்னு
தலைமேல வச்சமகே
'போஆத்தா போஆத்தா" ன்னு
சொல்லாம சொன்னானே!

ரெண்டுமூன பெத்திருந்தா
வண்டுபோல வாழ்ந்திருப்பேன்
சாகப்போற காலத்திலாவது
சந்தோசமா இருந்திருப்பேன்!

பொத்திவச்ச பத்திரமா
ஒத்தமகனப் பெத்ததால
போக்கிடமே இல்லாம
புகழுகெட்டு நிக்கிறேனே!

மத்தியான நேரத்துல
காலக்கஞ்சி கேட்டதுக்கு
எப்பவுமே சோறான்னு
எடுத்தெறிஞ்சு சொன்னானே!

பத்துமுழம் மல்லிவாங்கி
பக்குவமா வச்சுவிட்டு
பக்கத்துல வாடின்னு
பொஞ்சாதிய கொஞ்சினானே!

பட்டணப் பொடிவாங்க
பைசான்னு கேட்டாக்கா
வெட்டிச்செலவு எதுக்குன்னு
வெறுங்கைய விரிச்சானே!

அவளோடு பேச்சுக்கேட்டு
அறவெல்லாம் அத்துகிட்டு
ஆத்தான்னு பாக்காம
அனாதிபோல் வச்சானே!

நடக்கவும் தெம்பில்ல
பார்க்கவும் கண்ணில்ல
தலையில மயிரில்ல
ஒடம்புலமுழுசா உயிரில்ல!

அரளிக்கொட்ட அரச்சுவச்சு
கஞ்சிகூட கலந்துவச்சு
வம்படியா சாகவக்கல
வக்கனையான எம்புள்ள!

காசுகொஞ்சம் செலவழிச்சு
ஆசிரம் அனுப்பிவிட்ட
எம்புள்ள ராசாதா!
நாவளத்த ரோசாதா!.