மகா கவி பாரதி
(11.12.2009 பிறந்தநாளுக்கான கவிதை)

வித்யாசாகர், குவைத்

மீசை முறுக்கி
சமூக மாற்றம் கொடுத்த கவி;
கவி பாக்கள் தொடுத்து
நம் வாழ்வை உயர்த்தும் கவி!

காலம் - மூன்றும் இதுவென்று
தன் காலம் முடியும் முன்னே சொன்ன கவி;
நம் பிள்ளைக்கும் பாட்டனுக்கும்
புதுக் கவிதையால் புத்தி சொன்ன கவி!

சுற்றித் திரிந்த விலங்கினங்களை கூட
அவனை சுற்றி - அன்பால் வரழைத்த கவி;
ஒருவன் - பசிக்கு உணவில்லையேல்
ஜகத்தினை அழிக்கவும் துணிந்திட்ட கவி!

யித்தியக் காரனெனக் கல்லெரிந்தவர்களை
ஞானக் கிறுக்கனென மீண்டும் சொல்ல வைத்த கவி;
ஞானம் தெறிக்கும் வார்த்தையால் உலகை
பாட்டு பாடியே பணிய வைத்த கவி!

யானை உதைத்து நோயுற்றும் - எமனை
தன் காலால் உதைத்தே விரட்டிய கவி;
எஞ்சிய கடைசி மணி துளியில் கூட
கவிதை கவிதை கவிதையென்று;
மரணத்தை சற்றே முட்டித் தள்ளிய கவி!

ண்ணன் பாட்டு, குயில் பாட்டு,  காதல் பாட்டு;
ஏன் - பாப்பாவிற்கு கூட பாட்டெழுதிய கவி;
படை திரண்டு வந்து எதிர்த்திட்ட போதும்
'அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் -
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே'
என
உணர்ச்சிக் குரலெழுப்பி எதிரியை பாட்டாலேயே
விரட்டியடித்த கவி!

சுதந்திரம் நெருப்பை ஊற்றி ஊற்றியே
விடுதலை உணர்வை வளர்த்திட்ட கவி;
பட்டி தொட்டி தமிழனை கூட -
கவிஞனாக்க அன்றே கனவு கண்ட கவி!

ஜாதி வெறி தீண்டாமைக்கு
கவிதை தீப்பெந்தம் எறிந்திட்ட கவி;
கிழக்கு மேற்கு வடக்கெல்லாமென -
திசையெட்டும் பேசும் ஒரே கவி; நம் மகா கவி!

 


vidhyasagar1976@gmail.com