தமிழ்ப் புத்தாண்டே மலர்க!

செந்தமிழ்ச் செல்வர், பாடும்மீன் சு. ஸ்ரீகந்தராசா

தைமகளே வருக! தமிழ்ப் புத்தாண்டே மலர்க!
வையமெல்லாம் மகிழ்ந்திடவே வளமெல்லாம் தருக!

எங்கள் தமிழ் இனத்தின் இனிய புதுவருடம்
பொங்கல் திருநாளாய் பூத்து மலர்ந்திடுமே
தங்கும் இளமைமிகு தமிழ்மொழி யின்பெருமை
எங்கும் பரவிடவே ஏற்றம் தந்திடுமே

ஆதிமுதல்தமிழன் அவனின் வழித் தமிழன்
அழகாய் அமைத்து வைத்த புத்தாண்டு
நீதி பல உரைத்து சூரியனைவணங்கும்
நீண்ட வரலாறு அதற்கு உண்டு

பாதிவழியிலந்தப் பண்பாட்டினை மறந்து
பாதை மாறியது பெருங்கேடு
ஓதித் தமிழ் மறையை உலகத் தமிழ ரெல்லாம்
ஒன்றாய் நின்றிடுவோம் உணர்வோடு

தையே முதல்மாதம் தைமுதல் ஆண்டுமுதல்
தவறாமல் அதனைக் கடைப்பிடிப்போம்
பொங்கல் திருநாளே எங்கள் தமிழருக்கு
புத்தாண்டு என்றே போற்றிடுவோம்srisuppiah@hotmail.com