வெயில்!

வித்யாசாகர

உழைக்கும் வர்கத்தின்
உடல் சுடும் நெருப்பு; வெயில்!
இலையுதிர்ந்த மரங்களின்
பசுமை பூப்பிக்கும் தகிப்பு; வெயில்!

எட்டித் தொட இயலா சூரிய முகத்தை
மண்ணில் பதிக்கும் பதைப்பு; வெயில்!
மனித குல முன்னேற்றத்திற்கு
வெளிச்சம் போர்த்திய எரிப்பு; வெயில்!

பூமி சூழ்ந்த கடலை
உறிஞ்சிக் குடிக்கும் உழைப்பு; வெயில்!
உப்பையும் மழையையும் மண்ணுக்குக் கொடுக்க
இயற்கை விடுத்த அழைப்பு; வெயில்!

அதிகாலை பொழுதின் மஞ்சள் பூசிய
அழகு வெயில்;
அந்தி சாயும் பொழுது வரை ஆட்டிப்படைக்கும்
ஏழ்மை ஜாதியின் கொடுமை வெயில்!

நேரம் அளக்கும் சூரியனின்
ஒற்றை முள் ஆதாரம் வெயில்;
மேல் ஜாதி காரனின் ஏ.சி. காரை
துளைக்க இயலாத வஞ்ச நெருப்பு; வெயில்!


vidhyasagar1976@gmail.com