அறுகம் புல்லாய்ப் பரந்தவள்...

வேதா. இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்.

புல்லாங்குழலின் இசையில் மயங்கினாய்,
எல்லா இசையும் மகிழ்ந்து கேட்பாய்,
வஞ்சக நெஞ்சம் கொஞ்சமே இல்லா
கொஞ்சிடும் மனமுடை அன்புள்ள அம்மா.

ஆலம் விழுதாய் மனதில் ஊன்றியவள்,
அறுகம் புல்லாய் பரந்து படர்ந்தவள்.
உருகும் நெய்யாய் எனையாக்குகிறாள்.
அவளருமை நினைவால் மகிழ்வைத் தருகிறாள்.

கருவறையில் எனைக் காத்தது போலவே
ஒரு பார்வையால் எனை உருவாக்கினாள்.
பிழையென நானும் அதைக் கருதியே
பிணங்கினேன் அவளுடன் கோபமாகினேன்.

என் அறியாப் பிழையும், அவசரப் பிழையும்
பெரிதாய் எண்ணிப் புலம்பாத அம்மா
நெஞ்சில் நிறைந்து நினைவில் கலந்தவள்.
பஞ்சாய் எனையேந்திக் கொஞ்சிய அம்மா.vetha@stofanet.dk