காதல் பௌர்ணமி வாழ்த்து.

வேதா. இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்.


காதல் நிலா, வலம் தினம்.
காதல் பௌர்ணமி காதலர் தினம்.
காதல் இயற்கை அமுதசுரபி இனம்.
ஆதலால் சுழல்கிறது அகிலத்து நடனம்.
காதலற்ற மனிதம் கலையிழைந்த கனம்.
நோதலில் சிதைந்தது காதலற்ற மனம்.
காதல் மது அருந்த அருந்த
நோதல் அழிந்து பாதை மாறும்.

காதல் - பார்வை, பாசம், அழகென
பேதம் விலக்கும் பேரதிசயப் பூவாணம்.
இனிய விளைவை இதமாய்த் தந்து
நனிவாய் உள்ளத்தில் நதியாய்ப் பாயும்.
பார்த்ததும் கண்களில் ஒளி பிரியும்.
வார்த்தையில் மென் இதயப்பூ சிலிர்க்கும்.
தொட்டிட நாளம் விரிந்து பாயும்.
பட்டுக் காதல் தெம்புடை அத்திவாரம்.

மனிதத்தை இயக்கும் மகரந்தத் துகள்
மகத்துவக் கிரியாஊக்கி காதல்.
நினைத்தால் வராது நித்திலக் காதல்
நிலத்தாமரை, மறைக்க முடியாதது.
பூதலமனைத்தும் காதற்பூ பூத்து
காதற் தேன் பொங்கி வழிந்து
நோதல் அழித்து மேன்மை தரட்டும்.
தீதிலாக் காதல் பௌர்ணமி வாழ்த்துகள்.


vetha@stofanet.dk